ஒரு பாலத்தின் கதை





(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்போது தான் அது நடந்தது. அம்மா கறையான் தின்னும் சுவரோரம் சுருண்டு படுத்திருந்தாள். வழக்கம் போல கனவு- கள் தான். அந்தக் கனவுகளில் தப்பா- மல் இயமனின் காலாட்படைகளுடன் சண்டை பிடித்துக் கொண்டு மூத்த அண்ணாவை காப்பாற்ற முனைந்து கொண்டு இருப்பாள்.
பாவம் நிஜத்தில் அவளால் மூத்த அண்- ணாவைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.
சற்றே நரையோடிய கூந்தலுடன் மூத்- தக்கா குசினிச் சாம்பல் குடித்துக் கொண்டிருந்தாள். பெரியண்ணா எதிர் வீட்டு ரீவியில் கடைவாய் வழிய படம் பார்த்தபடி ரீவியில் “சுதந்திரம்” படம் ஓடிக் கொண்- டிருந்ததாகக் கேள்வி. அந்தச் சுதந்திரம் மாத்திரம் அவனுக்குப் போதும்.
இரண்டாம் வகுப்புப் படிக்கும் மாமாவின் மகள் பள்ளிக் கூடத்தில் கொடுத்த சமயப் பாடப் புத்தகத்துடன் அல்லாடிக் கொண்டி- ருந்தாள். புத்தகத்தின் ஒரே பக்கத்தில் இரண்டு வெவ்வேறு வகையான ஔவையார்கள். அதில் எந்த ஒளவையார் சரி என்று அவள் முடிவு கட்ட வேண்டும்.
எங்கள் குச்சொழுங்கையின் கடைக்கோடி ஓட்டு வீட்டுக்கு வந்து விட்ட ரெலிபோனை சின்னக்கா கொஞ்சியபடி இருந்தாள்.
ஐந்தாகப் பத்தாக அம்மாவுக்கும் பெரிய அக்காவுக்கும் தெரியா மல் பொத்திப் பொத்திச் சேர்த்த காசில் சினிமாப்பாட்டுக் கேட்பது அவளுக்கு பெருவிருப்பு.
அப்போது காலை பத்துமணி இருக்கும். காலைச் சாப்பாட்டை கற்பனையில் சாப்பிட்டு விட்டுச் சோம்பியிருந்தோம். கூலி வேலைக்குப் போயிருந்த ஐயா சந்தித் தவறணையில் முடங்கி- யிருப்பார். சந்தியைத் தப்ப விட்டிருந்தால் பள்ளிக் கூடச் சந்தியில் வீடியோக் கடை பாருக்குள் தடக்கி விழுந்திருப்பார்.
அந்த வீடியோக் கடை பிரசித்தமானது. பெரியண்ணாவின் செற் அங்கு தான் நீலப் படங்களை எடுத்து பச்சை பச்சையாகப் பார்த்து பெருமைப்பட்டிருந்தார்கள்.
காக்கி உடுப்புப் போட்டு சந்தியின் சமச்சீர் குறையாமல் மண் மூட்டைகளை அடுக்கி அந்த் மண் மூட்டைகளைப் பாதுகாக்க ஆயுதங்களை வைத்திருக்கும் சமாதானத்திற்காக யுத்தம் செய்பவர்களும் வேறொரு நீலப்படம் தருவதாக சொன்னதாக பெரியண்ணா பீற்றிக் கொண்டு திரிந்ததும் உண்டு.
காலம் எப்போது கிளர்ந்தெழுந்து இந்த நீலத்தையும் பச்சை- யையும் காவு கொள்ளப் போகின்றதோ என ஊரில் உள்ள முற்பிறப்புடன் தொடர்புடைய எக்காலமும் உணர்ந்த பெரியவர்கள் சிலர் சொல்லிக் கொண்டிருந்தனர்.
தாங்கள் சொல்லும் விடயங்களுக்கு சான்றாதாரங்களாக அவர்கள் கிழக்குப் பக்கத்திலும் தென்பகுதியிலும் தெரிவதாகவும் வெள்ளி காலிக்கத் தொடங்கியிருப்பதாகவும் சொல்லியிருந் தார்கள்.
அம்மா திடுக்குற்று விழித்தாள். ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்தாள். அந்தச் சமயத்தில் சமாதான தூதுவர்கள் ஆயுதங்- களை நீட்டியபடி உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். படரும் கொடியாக அவர்கள் அணி நீண்டு வளைந்து படர்ந்தது. தாச்சி மறிக்காமலே எல்லோரும் ஒரு பக்கம் போய்ச் சேர்ந்தோம். வீடியோ பார்த்துக் கொண்டிருந்த பெரியண்ணா கும்பல் ரெலிபோன் ஊடாக நாங்கள் நலம் சந்தோஷமாய் வாழுறம்” என்று சொல்லிக் கொண்டிருந்த சின்னக்கா உட்பட எல்லோரும் சங்கக் கடைக்கு முன்னால் இருந்த பெரும் வெளிக்குள் தள்ளப்பட்டோம்.
முந்தியொரு காலத்தில் நெருஞ்சி முள்ளும் நாயுருவிப் பற்றையும் என்று பூரித்துக் கிடந்த அந்த வெளி நாங்கள் அடிக்கடி வந்து போனதால் முட்களும் மாசுக்களும் நீக்கப் பட்டு முத்தியடைந் திருந்தது.
எங்கள் பெரிய ஒழுங்கையின் சந்து பொந்துகளில் உள்ளவர்கள் நேற்று முன்தினம் பிறந்தவர்கள். எல்லோரும் அங்கு குப்பையாகக் கூட்டித் தள்ளப்பட்டு இருந்தனர்.
வெளியின் மண்ணில் உடல் புதைந்து தலையை மட்டும் வெளியில் காட்டி கைகளை நீட்டி வானத்து தேவதைகளை அழைத்துக் கொண்டு எனக்குப் பக்கத்தில் நந்தன், கோவிந்தன், சுரேசன், கணேசன், அவர்களின் ஹீரோ ஹொண்டா மோட்டார் சைக்கிள்கள் இல்லாமல்.
இந்த முறை நல்லூர் திருவிழா மூட்டம் கணேசன் அன் கோ செய்த அட்டகாசங்கள் கின்னஸ் புத்தகத்தில் பதியலாம் போல.
இரவு ஏழரை மணிக்குப் பிறகு நல்லூர் கோயிலடியில் ஹீரோ ஹொண்டாவில் மீதேறி கோகுலத்து கிருஷ்ணர்களாக இரைந்து சப்த மெழுப்பி தேவ கன்னிகைகள் மத்தியில் அவர்களின் தோள்களின் வழியே ஏறி விழுந்து விழிகளைப் பந்தாடி விரல்களால் கீச்சு கீச்சு மூட்டி ஆகா அற்புதம்.
அத்தோடு விட்டார்களா. தீர்த்தத்தன்று கேணியடியில் சுவாமி தீர்த்தம் ஆட் இவர்களும் தீர்த்தம் ஆடி சேற்றுத் தண்ணீரை பக்த கோடிகளுக்கு அள்ளி விசிறி பக்தியில் திளைத்து ஐயகோ அதை என்ன வென்று சொல்வது.
இப்போது இந்தக் கணத்தில் எலிகளை விழுங்கிய சாரைப் பாம்புகளாக என் பக்கங்களில் கிடந்தார்கள்.
“ஏன்டாப்பா என்ன நடந்தது. பிரச்சினையாய் ஒண்டும் நடக் கேல்லை. பிறகேன் றவுண்ட் அப்” என்று கணேசன் கேட்க.
இரவில் படம் பார்த்த நித்திரை மயக்கத்தில் கிடந்த பெரிய அண்ணை மண்ணைச் சுவாசித்தபடி நித்திரையாகிப் போயிருந்- தான்.
இரவோ அதிகாலையோ இடி இடிக்கவில்லை. மின்னவில்லை. அதனால் சத்தம் ஒன்றும் கேட்கவில்லை. கடைசி யாருடைய சயிக்கிள் ரியூப்பாவது வெடித்துச் சத்தம் எழும்பவில்லை. பிறகேன் சுற்றிவளைப்பு என்று புரியவில்லை.
காரணம் சொல்லியா பா இங்கு எல்லாம் நடக்கிறது என்று யாரும் யோசிக்காமல் இருக்க வெளியைச் சுற்றி ஊராட்கள் திரண்டு கொண்டிருந்தனர்.
அது விடுப்புப் பார்க்கும் கூட்டம் மாத்திரம் அல்ல. அம்மாவைப் போல பிள்ளைகளுக்காக கணவர்களுக்காக சகோதரர்களுக்- காக கலங்கிய படி இருந்தனர்.
சங்கக்கடை முன்னால் வாகனங்கள் வந்து நின்றன. கோல உடை அணிந்த அதிகாரிகள் இறங்கி புழுதி கிளம்ப நடந்து சங்கக் கடையின் முன் தாழ்வாரத்துக் கதிரைகளில் அமர்ந்தார்கள்.
வெளியில் முடங்கிப் போயிருந்த எல்லோரையும் எழுந்து நிற்கச் செய்து அணி வகுக்க வைத்தார்கள்.
ஒருவர் பின் ஒருவராக ஒருவர் பிடரிப் பகுதியை மற்றவர் முகர்ந்து கொண்டு பவ்வியமாய் நடந்து அமர்ந்து இருந்தவர்கள் முன்னால் போய் நின்றோம். அதிகாரிகள் மூன்று பேர் எழுந்து வந்தார்கள். ஒவ்வொருவராகப் பார்த்தனர்.
சுயம்வர மாலையா? யாருடைய கழுத்தில் விழப்போகின்றதோ என்ன செய்யப் போகின்றார்களோ…
“முதுகில் முதுகெலும்பு இருக்கின்றதா?” பின்னால் இருந்த சுரேசிடம் கேட்டேன்.
“மச்சான் என்ரை முதுகெலும்பு இருக்கடா
“எட மடையா, என்ன விசர்கதை கதைக்கிறாய் அது எங்கையடா இருக்கு”
சட்டென்று உண்மை சுட்டது. என்றைக்கு இவர்களிடம் அகப்பட்- டோமோ அன்றைக்கே அதனை கழற்றி வைத்தது ஞாபகம் வந்தது. என்றாலும், “அது தெரியும் மச்சான். சிலவேளை அது திரும்பி வந்திட்டுதோ என்று பார்க்கிறதுக்குத்தான் இந்த செக்கிங்கோ?”
வெய்யில் சரிந்த போது எங்களில் பதினைந்து பேருக்கு கிட்டத் தட்ட ஒரு புறமாக்கிவிட்டு மிகுதிப்பேர்களை திருப்பி அனுப்பி விட்டார்கள்.
“சரி சரி, மிச்ச ஆளும் போகலாம். இவ்வளவு நேரமும் கரைச்சல் தந்ததுக்கு மன்னிக் வேணும்” என்று சொல்லி ஆட்களை அனுப்பி- னான் ஒரு அதிகாரி.
வேள்விக்கு நேர்ந்து விட்ட கிடாய்களைப் பார்ப்பது போல திரும்பிப் போகும் ஆட்கள் எங்களைப் பார்த்தபடி போனார்கள்.
பதினைந்து பேர்களில் ஐந்து பேர்கள் பெண்கள் மலங்க மலங்க விழித்தபடி கண்ணீர் பொங்க துவண்டு போய் இருந்தனர்.
ஆண்கள் பத்துப் பேருக்கும் தலை விறைத்து இருந்தது. எனக்கு நடுக்கம் ஏற்பட்டது. என்ன நடந்தது. என்ன செய்யப் போகிறார்கள் என்ர அம்மாளே.
எனக்கு அம்மாவைப் போல பதினைந்து பேர்களின் உறவினர்களும் விம்மி வெடித்துக் கொண்டு வெய்யில் சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்க பசி அடி வயிற்றைப் பிடுங்கியது. சிறுநீர் கழித்தால் சிறிது நிம்மதியாய் இருக்கும். யார் தருவார் இதற்கு அனுமதி. சங்கக் கடை தாழ்வாரத்தின் மறைவில் இருந்து கொண்டு ஒரு மொட்டைத்தலைப் பேர்வழி என்னை சைகை காட்டி அழைத்தான். ஏனைய அதிகாரிகள் தங்கள் தங்கள் கதிரைகளில் இருந்து எதையோ குடிக்க ஆரம்பித்திருந்தனர்.
மொட்டைத் தலையன் கண்களில் முதலில் பட்டது நானாகத்தான் இருக்க வேண்டும்.
போனேன். அவன் பார்வை வெய்யிலைவிட வெக்கை குறைவாகத்- தான் இருந்தது.
சகல விபரங்களையும் கேட்டான். அடையாள அட்டைகளைப் பார்த்தான். பயந்து வெளிறிய முகத்துடன் நான்.
“இது நேற்று – இது முந்தநாள், இது அதற்கு முதல் நாள் என்று படங்களைக் காட்டத் தொடங்கினேன். அவன் அதுகளை ஓரங் கட்டினான்.
“குறி சுட்டதா?” என்றான்.
“ஓம்……”
இடுப்பு எலும்பை முறிப்பது போல என்னைத் திருப்பி முதுகைப் பார்த்தான். முதுகில் இருந்த இலக்கத்தைக் குறித்துக் கொண்டான்.
“முதுகு எலும்பு இல்லைத்தானே. மிச்சம் நல்லது” என்றான்.
என் படபடப்பு குறைந்தது.
“சரி போய் அங்கே நில்லு…” என்று சொல்ல நான் வெளியே வந்தேன்.
ஓரமாக நின்ற அம்மா விரைந்து கதிரைகள் இருந்த இடத்தை நோக்கி நடந்தாள். நடையில் அவசரம் தெரிந்தது.
“பொறு பாக்கியம்” என்று குஞ்சியாச்சி சொன்னது கேட்டது.
கதிரைகளில் இருந்தவர்களுக்கு அம்மாவின் அவசரம் புரிந்திருக்க வேண்டும்.
பயம் வேண்டாம் பொறுங்கோ அம்மா” என்றான் ஒரு இளநிலை அதிகாரி.
அதிகாரி எல்லோரையும் ஒன்றாக இருக்கச் சொன்னான். அம்மா ஏனையவர்களின் உறவினர்கள் எல்லோரும் எங்களோடு வந்து அமர்ந்தார்கள். வெள்ளை நீளக்கை சேட் போட்டு ரை கட்டிய மனிதர் ஒருவர் கதைக்கத் தொடங்கினார்.
“உங்களுக்குப் பாலம் தெரியுமா?” அம்மாவைப் பார்த்துக் கேட்டார். அம்மா சற்று தயங்கிக் கொண்டு “நாவற்குழி பாலம் மாத்திரம் தெரியும்” என்றாள்.
யாரும் சிரிக்கவில்லை. எனக்குப் பயமாகிப் போய் விட்டது.
“நாங்கள் பாலம் கட்டத்தான் இவன்களைப் பிடிச்சது. அதுதான் தெரிவு செய்தது. இவன்கள் எல்லாம் பிரச்சினை இல்லாத ஆட்கள். இவன்கள் எல்லாம் இஞ்சை இருந்து அங்கை போறது. நாங்கள் பிளேனில் கூட்டிப் போறது. யாராவது பிளேனில போயிருக்கிறீங்- களா? இல்லைத்தானே. நாங்க பிளேனில கூட்டிப் போய் எங்கடை தெற்கில் எங்கடை ஆட்களோட பழக விடுறது. தங்க வைக்கிறது. சாப்பாடு தாறது. விளையாட விடுறது. அப்ப அவன்களும் இவங்- களும் ஒண்டாப் பழகி சந்தோஷமாய் இருக்கலாம்.இன ஒற்- றுமையை வளர்க்கலாம். அதுதான் நாங்கள் நட்புறவுப் பாலம் அமைக்கப் போறது. இதெல்லாம் நல்லது தானே. உங்களுக்கும் சந்தோஷம் தானே. இப்ப பயப்படாமல் இருங்க”
– ஈழநாதம், 19-02-2000.
– மணல்வெளி அரங்கு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: மாசி 2002, தேசிய காலை இலக்கிய பேரவை, கொழும்பு.