ஒரு கோடை விடுமுறை

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 15, 2026
பார்வையிட்டோர்: 37 
 
 

(1981ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7

அத்தியாயம் – 7

பானுமதி தமையனை கெஞ்சியிருந்தாள் கணவனுக்குப்புத்தி சொல்லச் சொல்லி. 

ஹைட்பார்க் வழக்கம் போல் நெருக்கடியாக இருந்தது. பனித்திட்டுக்கள் அங்குமிங்கும் படர்ந்து கிடந்தன. பானுமதி குழந்தை மீராவை அழைத்துக் கொண்டு சென்றாள். தூரத்தில் “பாண்ட்” முழங்கிக் கொண்டிருந்தது. 

அதற்குப் போட்டியாக ஒரு ‘பங்க்’ (Punk) கூட்டம் காதுகளிலும் கழுத்திலும் ஊசிகளைக் கோர்த்துக் கொண்டும் கூயோ மாயோ என்று கத்திக் கொண்டும் போய்க் கொண்டிருந்தார்கள். 

குழந்தை மீரா மாமியைப் பயத்துடன் கட்டிப் பிடித்தாள். குழந்தையின் மிரட்சியில் தெரிந்தது இப்படியான சமுதாயம் எப்படிப் பயங்கரமாக உருவாகப் போகிறது என்று. 

பானுமதி ஹைட்பார்க்கு சபேசனை வரச் சொன்ன அவனுக்குப் பிடிக்கவில்லை. 

அவன் நாடகம் தயாரிப்பதில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தான். இவள் இப்படி இழுத்தடிப்பது சரியில்லை என்று முணு முணுத்து விட்டு வந்திருந்தான். 

‘மார்பிள் ஆர்ச்’ பக்கம் ‘ஸ்பீக்கர்ஸ் கோணர்’ப் பக்கம் நடந்து கொண்டு போனார்கள். 

வழக்கம் போல் “பேச்சாளர்கள்” மரப்பெட்டிகளில் ஏறி நின்று ‘வெளுத்து வாங்கிக்’ கொண்டிருந்தார்கள். ஒருவன் மத்திய கிழக்குப் பிரச்சினை பற்றி மண்டை வெடிக்கக் கத்திக் கொண்டிருந்தான். இன்னொருவன் ‘நியுக்கிளியர்’ யுத்தம் பற்றி ஓலம் வைத்துக் கொண்டிருந்தான். 

சபேசன் முதற் தரம் பார்ப்பதால் இவர்களை ஊன்றிக் கவனித்தான். 

ஏன் நீரும் ஏறி நின்று முழங்கப் போகிறீரோ என்று கேட்க நினைத்தான் பரமநாதன். தனது வேடிக்கை சபேசனைக் கோபப்பட வைத்தாலும் என்று பேசாமல் இருந்தான். 

“என்ன நாடகம் எழுதுகிறீர்” என்று கேட்டான் பரமநாதன். இவன் கேள்வியை அசட்டை செய்வதுபோல் ஒரு தரம் தோள்களைக் குலுக்கிக் கொண்டவன் ஏதோ நினைத்துக் கொண்டவன் போல் திரும்பி மைத்துனரைப் பார்த்தான். 

“என்ன மாதிரி நாடகம் எழுதுவேன் என்று எதிர் பார்க்கிறீர்கள்” என்று கேட்டான் சபேசன். 

பரமநாதனுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அவனுக்கு இலக்கியத்தைப் பற்றி அதிகம் தெரியாது. 

கொழும்பில் யூனிவர்சிற்றியில் இருந்த காலத்தில் ஓர ளவுக்கு வாசித்திருந்தான். இந்திய எழுத்தாளரில் அபிமானமும் இருந்தது ஒன்றிரண்டு பேரில். 

அவர்கள் பெயர்கூட மறந்துவிட்டது. லண்டனுக்கு வந்து மேலைநாட்டு இலக்கியத்திலும் பெரிய நாட்டமில்லை. தெரிந்ததும் செய்ததும் என்ன? 

சபேசன் ஹைட்பார்க் லேக்கில் தவழ்ந்த வாத்துக்களுக்குப் பாணைப் பிய்த்துப் போட்டுக் கொண்டிருந்தான். வாவி நிறைய, குளிர் காலத்தையும் பொருட்படுத்தாத உல்லாசப் பிரயாணிகள் படகு படகுகளாய் ஓட்டிக் கொண்டிருந்தனர். 

தூரத்தில் பானுமதியும் மீராவும் குதிரைகள் ஒடுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். 

இவனுக்குப் புத்தி சொல்லச் சொல்லித் தங்கை கூட் டிக் கொண்டு வந்தாள். 

அதை விட்டு என்ன யோசிக்கிறேன் என்று எண்ணம் படர்ந்தது பரமநாதன் மனதில். என்ன அடிப்படையில் கதையைத் தொடங்குவது? 

என்ன செய்து விட்டேன் இங்கிலாந்தில் காதலித்ததைத் தவிர? காதலித்தும் என்ன பிரயோசனம்? 

(எல்லோருந்தான் ஓடி விட்டார்களே!) பெருமூச்சு தன் பாட்டுக்கு வந்தது. 

ஏதோ கேட்டேன் மறிமொழியில்லை என்பதுபோல் பரமநாதனைத் திரும்பிப் பார்த்தான் சபேசன். 

“நான் எதிர்பார்ப்பதையோ, யாரும் எதிர்பார்ப்பதையா நீர் எழுதவேண்டும்? உமக்கு எது கலையாகப் படுகிறதோ அதை எழுதும். ஆனால் உணர்ச்சி வசப்பட்டு எழுதுவதெல்லாம் கலையாகி விடாது. வெறும் பிதற்றலாகவும் ஆகிவிடும்.” பரமநாதன் சொன்னான். 

“கலை?” குரலில் அலட்சியமோ கேள்விக்குறியோ ஏதோ ஒன்றுடன் சபேசன் இழுத்தான். பரமநாதனுக்குத் தர்ம சங்கடமாக இருந்தது. 

“சபேசன் பானுமதியுடன் லண்டனுக்கு வந்திருக்கிறீர், படிப்பும் வாழ்க்கையும் லண்டனில் இலேசான காரியம் என்று நினைக்காதேயும். உம்மை நம்பி பானுமதி மட்டுமல்ல உமது சகோதரிகளும் இருக்கிறார்கள்.” சபேசன் மைத்துனரை ஏற இறங்கப் பார்த்தான். முகத்தில் சோகமும் விரக்தியும் படர்ந்தன. 

“சகோதரிகள்!” சபேசன் ஒரு வார்த்தையுடன் நின்றான். அவன் குரலிலிருந்த சோகம் பரமநாதனை நெகிழப் பண்ணியது. 

சோகம் கவிழ்ந்த கார்த்திகாவின் முகம் ஞாபகம் வந்தது. தம்பி ஒருத்தன் கார்த்திகாவின் வாழ்க்கை அதிர்ந்து போனதைப் பற்றித் துடிப்பது இயற்கை. ஆனால் அதற்காக….. 

“சபேசன் இங்கிருக்கும் பெரிய மனிதர்கள் எவ்வளவு தூரம் தமிழரின் பிரச்சினைக்கு முழு மனத்துடன் போராடுகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. எந்த விதமான தொடர்பும் இல்லை. இவர்களுக்குப் பின்னால் திரிந்து வாழ்க்கையை அநியாயமாக்கிக் கொள்வாயோ என்று பயமாக இருக்கிறது”. பரமநாதன் உண்மையான வாஞ்சையுடன் சொன்னான். 

“உங்களுக்குத் தெரியாமல் இருப்பது ஒரு விதத்தில் நல்லது. உங்களைப் போல சுயநலவாதிகளுக்கு எங்களைப் போல ஒதுக்கப்பட்ட இளைஞர்களின் துடிப்பு புரியாது. சௌகரியமான வாழ்க்கையில் தமிழர்களுக்கு இலங்கையில் என்ன பிரச்சினை என்று கேட்கிறவர்கள் நீங்கள். உங்களை யார் கேட்டார்கள்? இங்கிருக்கும் தமிழ்த் தலைவர்களை நாங்கள் நம்பியிருக்கவில்லை. இங்கிலாந்து, கேம்பிறிட்ஜ், ஒக்ஸ்போர்ட் சர்வகலாசாலைத் ‘தங்கமூளைகளை’ நம்பி இடது சாரிகள் போயிருக்கும் போக்கு எங்களுக்குத் இலங்கை தெரியும். அப்படியும் இடதுசாரிகள், இன்னும் எங்களை நம்பச் சொல்கிறார்கள். குறிப்பாகத் தமிழ் இடதுசாரிகள் இதுவரை சந்தர்ப்பவாதிகளாயும் திரிபுவாதிகளாயுமிருந்த தங்கள் தென்னிலங்கைத் தலைவர்களுக்கு, இன்றும் வால் பிடித்துத் தமிழர் பிரச்சினை ஒரு தேசிய இனப் பிரச்சினை என்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். 

எடுத்ததெற்கெல்லாம் மார்க்சியமும் லெனினின் மேற்கோளும் காட்டுபவர்கள் ஏன் சில உண்மைகளைத் திரித்தும் மறுத்தும் பேசுகிறார்கள் என்றால் அவர்களால் உண்மையை உணரத் தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன்.” பரமநாதன் ஏதோ கேட்க சபேசன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான் என்று பட்டது பரமநாதனுக்கு. 

“நான் நீர் என்ன எழுதுகிறீர் என்று கேட்டேன்” என்றான் பரமநாதன். 

“என்ன எழுதுகிறேன் என்றால் உண்மைகளைச் சாதாரண மக்களுக்குச் சாதாரண தமிழில் விளங்குமாறு எழுதுகிறேன். இடதுசாரிகள் எங்கள் இளைஞர்களைத் தங்கள் திரிபுவாத இலக்கியத்தால் அவர்களைக் குழப்பாமல் இருப்பதற்கு, என்னாலான வரைக்கும் எழுதப் பார்க்கிறேன்.” சபேசன் வெடித்தான். 

“சபேசன், ஆழம் தெரியாமல் கால் வைக்காதே. அவர்கள் அரசாங்கத்துக்கு வால் பிடிப்பவர்கள்; பிடித்தவர்கள்; அதனால் வசதியாயும் வாழ்பவர்கள். மலையுடன் மோதிய எலிக்குத்தான் நட்டம்.” 

பரமநாதன் இப்படிச் சொல்ல சபேசன் விழுந்து விழுந்து சிரித்தான். விரக்தி, வேதனையான சிரிப்பு. 

“இந்தப் போலிப் புரட்சிவாதிகளின் வேஷம் கன நாளைக்கு நிற்காது. சிலரைச் சிலநாள் ஏமாற்றலாம், பலரைப் பலநாள் ஏமாற்ற முடியாது. இவர்களின் உண்மையான வேஷம் வெளிவராமற் போகாது.எங்கள் இனத் துக்கு இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை என்று வந்து விட்டது. போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை. அந்தப் போராட்டத் தீயில் எரியப் போவது இதுவரை எங்களைத் தங்கள் ஆதிபத்திய வெறியால் இன்னல படுத்திய ஆட்சி அதிகாரம் மட்டுமல்ல ஒடுக்கப்படட மக்களின் பிரச்சினைக்கு அவர்களின் போராட்டத்துக்கு ஏனோ தானோ என்றும் – இது ஒரு இனப் பிரச்சினை – தேசியப் பிரச்சினை இல்லை என்று மூடி மறைத்த இடதுசாரிகள் – தமிழ் இடதுசாரிகள் – அவர்கள் இலக்கியங்களும் தான்!” சபேசனின் குரல் அதிர்ந்தது.

பரமநாதன் மெளனமாக நின்றான். பானுமதிக்காகச் சபேசனிடம் ஒன்றும் சொல்லிப் பிரயோசனமில்லை. அவனின் உணர்ச்சி, துடிப்பு – போராட்டம் உலகத்தில் ஒதுக்கப்பட்ட எந்த வர்க்கத்திலும் இனத்திலும் உண்டாகும் கொதிப்பு என்று தெரிந்தது பரமநாதனுக்கு. 

இந்த சத்திய யுத்தம் ஒரு சிலரைக் கொண்டது. பல்லாயிரம் எதிரிகளை எதிர்க்கப் போவது. 

தர்மரும் சகோதரர்களும் தொகையில் குறைந்தவர். துரியோதனனும் படையும் பல்லாயிரக்கணக்கில் அதுவும் ஒரு சத்திய யுத்தந்தானே. ஏதேதோ பழைய கதைகள் நினைவுக்கு வந்தன. 

இருவரும் ஹைட்பார்க்கிலிருந்து வரும்போது சபேசன் சொன்னான். “ஒரே வீட்டில் இருந்தால் பெரிய கஷ்டங்கள் வந்திருக்கும். எங்களுக்குள் ஒரே தர்க்கங்கள் வந்திருக்கும்.” பரமநாதனுக்கு அது உண்மை என்று பட்டது. 

ஆனால் அடுத்த இரண்டு நாட்கள் பிந்தி பானுமதி அழுத குரலுடன் போன் பண்ணினாள். 

நாடக ஒத்திகை முடிந்து வரும்போது சபேசன் யாரோ இனம் தெரியாத பேர் வழிகளால் தாக்கப்பட்டு மூக்கு முகம் உடைந்துபோய் வீட்டுக்கு வந்திருப்பதாக அழுதாள். லண்டனில் இரவில் வெளிக்கிட்டுத் திரிவது எவ்வளவோ பயங்கரமான காரியமாகி விட்டது என்பது நம்பமுடியாமல் இருந்தது. லிஸா கூட ஒருதரம் சொன்னார் “நியூயோர்க்கை விட மோசமாகி விட்டது லண்டனில் சில பகுதிகளை” உண்மை என்று இப்போது தெரிகிறது. 

அங்கு போன போது சடேசன் மூக்குடைந்து பல் உடைந்து முகமெல்லாம் இரத்தக் காயத்துடன் முனகிக் கொண்டிருந்தான். 

“இலங்கையில் மட்டுந்தான் தமிழனுக்கு அடி என்றால் இங்கிலாந்தில் விட்டு வைக்கிறார்களா” என்றாள் பானுமதி அழுது கொண்டு. 

“இங்கிலாந்தின் வேலையில்லாப் பிரச்சினைக்கு – பொருளாதாரப் பிரச்சினைக்குக் கறுப்பரின் வரவும் ஒரு காரணம் என்று நினைக்கிறார்கள்” என்றான் பரமநாதன். 

சபேசனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் டொக்ரரிடம் காட்டி ‘எக்ஸ்ரே’ எடுத்து முடிய நடுச்சாமத்துக்கு மேலாகி விட்டது. 

சபேசனுக்குச் சுகம் வரும்வரை தன்னுடன் இருக்கச் சொன்னான். இருவரையும் கூட்டிக் கொண்டு வந்தான். மீரா எங்கே என்று கேட்டாள் பானுமதி. 

நத்தார் விடுமுறைக்குத் தாயிடம் போய் விட்டதாகச் சொன்னான் தமையன். 

தான் லண்டனுக்கு வரும்போது கல கலவென்றிருந்த தமையனின் வீடு இப்போது வெறிச் சென்றிருப்பதைப் பார்க்க ஏதோ செய்தது பானுமதிக்கு. 

தான் தகப்பனுக்குச் சுகமில்லை என்று எழுதியதும், தமையன் யாழ்ப்பாணம் வந்ததும் அங்கு நடந்தவையும் அதனால் அவன் மாறிய விதமும் அவனது வாழ்க்கை இப்போது மாறிக் கிடக்கும் விதமும், அவளுக்கு வேதனையைக் கொடுத்தது. 

அவளின் பெருமூச்சை அவன் அடையாளம் கண்டும் காணாதமாதிரிப் போனான். அடுத்த நாள் கெளரியும் மகாதேவனும் சபேசனைப் பார்க்க வந்தார்கள். 

“செத்த வீட்டுக்கும் இந்தக் கோவியனின் கண்ணில் முழிக்க மாட்டேன்” என்று குதித்த மகாதேவன் சபேசனைப் பார்க்க வந்தது பானுமதிக்கு மட்டுமல்ல பரமநாதனுக்கும் ஆச்சரியமாவிருந்தது. ஒருவிதத்தில் பார்த்தால் இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. இங்கிலாந்தில் மகாதேவன் போன்ற எத்தனையோ புல்லுருவிகள் காசு வாங்காத செய்தி நிறுவனமாகச் செயல்படுவதாகக் கேள்வி. பரிதாபத்திலா சபேசனைப் பார்க்க வந்திருப்பான்? பல் உடைபட்டதைப் பார்த்துச் சிரிக்க வந்திருப்பான். 

விண்ணாணம் பார்த்து விஷயம் அறிய வந்திருப்பான். அவனின் நரிக் குணத்தை நினைக்க ஆத்திரம் வந்தது பரமநாதனுக்கு. பானுமதயின் கல்யாணத்தன்று மகாதேவன் போட்ட நாடகமும் அதனால் மரியன் வீட்டை விட்டுப் போனதும் மறக்கவில்லை. 

எப்படி இந்த மனிதர்களால் மற்றவர்களின் வாழ்க்கையைக் குலைத்து விட்டு நிம்மதியாக இருக்க முடிகிறது? 

பரமநாதனுக்கு நினைக்க நினைக்க ஆத்திரம் வந்தது. மகாதேவனை, ‘Son of a bitch’ என மனதில் திட்டிக் கொண்டான். 

பானுமதியும் கௌரியும் இவனுக்குத் தெரியாமல் ஏதோ ரகசியம் கதைத்தார்கள். தன்னைப் பற்றித்தான் ஏதோ கதைக்கிறார்கள் என்று தெரிந்தது. என்ன கதைக்க இருக்கிறது? 

இவனை விட்டு அவள் ஒடி விட்டாள் என்ற கதை தெரிந்தவர்களுக்கெல்லாம் போய் இருக்கும். மகாதேவன் தன் பெருமையான பணியைச் செய்திருப்பான். அம்மா கேட்டெழுதியிருப்பாளா? 

“என்ன காதைக் காதைக் கடிக்கிறீர்கள்?” தங்கைகளை வினவினான் பரமநாதன். 

இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்தனர். கௌரி மெல்லமாகச் சொன்னாள் “பானுமதியின் கல்யாண விடயம் பற்றி அம்மா மிகத் துக்கமாக இருப்பதாகப் பெரிய அக்கா எழுதியிருப்பதாக தன் செத்த வீட்டுக்கும் இவள் வரக் கூடாதாம்!” 

எதிர்பார்த்த கடிதம் தான். அம்மா அப்படித்தான் சொல்வாள். அதற்கென்ன? மாற்றங்கள் இப்படித்தான் வரும். சமுதாய மாற்றம் எல்லோருக்கும் சந்தோஷத்தைத் தராது என்ற தத்துவத்தை அம்மா விளங்கிக் கொள்ளாததால் என்ன குடிமுழுகிப் போய் விட்டது? பானுமதி சந்தோஷமாக இருப்பது போதும். 

அடுத்த சில நாட்கள் சபேசனைப் பார்க்க அவன் சினேகிதர்கள் வந்தபடி இருந்தார்கள். லண்டனுக்கு வந்து ஒரு சில மாதங்களில் இவ்வளவு சினேகிதர்கள் எப்படி இருக்க முடியும் என்று யோசித்தான் பரமநாதன். எல்லோரும் கிட்டத்தட்ட ஒருவிதத்தில் ஒரே மாதிரியானவர்கள் என்று தெரிந்தது. 

எல்லோரும் இலங்கைப் பிரச்சினையில் அக்கறையுள்ளவர்கள். அவர்கள் அரங்கேற்றப் போகும் நாடகம் அடக்குமுறையை எதிர்க்கும் கதை. 

இவனைப்பார்த்துச் சொன்னார்கள் உங்களுக்கு நாங்கள் உணர்ச்சி வசப்பட்டவர்களாய் தெரிவது ஆச்சரியமில்லை. ஏன் என்றால் நாங்கள் நினைக்கவில்லை உங்களால் எங்கள் பிரச்சினையை உணர்ந்து கொள்ள முடியும் என்று, ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட அரசாங்கப் படை நடுவில் ஒரு செயலு மற்ற சிறைக்கைதிகள் போல இருந்த அனுபவம் உங்களுக்கு இருக்காது. எங்களுக்கு எதிர்காலம் மலர் குலுங்கும் பூந்தோட்டமாக இருக்க வேண்டாம். மனம் நிறைந்த குடிசையாகவும் இல்லை. எல்லாம் பறிபோகிறது. அதை எதிர்த்துப் போராடுவது – எம் உரிமைக்குப் போராடுவது எந்தப் பிழையும் இல்லை என்று நினைக்கிறோம்.” 

பரமநாதன் பதில் பேசவில்லை. 

இங்கிலாந்தில் கறுப்பர் இருக்கவே முடியாத நிலை கெதியில் வரலாம் என்று தெரியாமல் இல்லை. ரொடீஷியாவின் வெற்றி தென் ஆபிரிக்காவில் எதிரொலிக்கப் போகிறது. வெள்ளையர்கள் அவ்விடமிருந்தெல்லாம் திரும்பி வரப் போகிறார்கள். இன வெறியுடன் வந்து இங்கிருக்கும் வெறியருடன் சேரப் போகிறார்கள். 

அப்போது கறுப்பர்களுக்குக் கண்ட இடத்தில் – இப்போது இரவில் மட்டும் விழுவதுபோல் இல்லாமல் பகலிலும் விழலாம். உலகத்தில் அடுத்த நாள் என்ன நடக்கிறது என்று நம்ப முடியாமல் அசுரவேகத்தில் மாறிக்கொண்டிருக்கிறது. நாங்கள் திரும்பிப் போகத்தான் வேண்டும். 


லிஸா கிறிஸ்மஸ் கார்ட் போட்டிருந்தாள், வட இந்தியாவில் ஒரு கிராமத்தின் விலாசம், லண்டனில் பனி கொட்டிக் கொண்டிருந்தது. இந்தியாவின் சூடு பற்றி எழுதியிருந்தாள். 

அவள் எழுத்துக்கள் அவளின் நினைவுகளைக் கிண்டிவிட்டன. இந்தக் கடிதம் எழுதும்போது எப்படி அவள் முகம் இருந்திருக்கும். எப்படித் தன்னை நினைத்துப் பார்த்திருப்பாள் என்று அவள் முகபாவத்தை மனதில் படம்பிடிக்கப் பார்த்தான். 

ரஷ்யா போகும் விமானத்தில் தன் தோளில் துவண்டு விழுந்த அவளின் சோர்ந்த முகம் நினைவுக்கு வந்தது, பெருமூச்சுடன் கடிதத்தை மடித்து வைத்தான், போனமுறை கலகலப்பாக இருந்த கிறிஸ்மஸ் இப்போது பானுமதியும் சடேசன் மட்டும் இருப்பதால் அதிகம் கலகலப்பாக இல்லை. 

கௌரியும் மகாதேவனும் வந்தார்கள். புதுவருடத்துடன் மகாதேவன் நைஜீரியாவுக்குப் போவதாகச் சொன்னான். 

“எல்லோரும் ஓடியுழைத்து வசதியாய் வாழ்ந்துவிட்டு ஒரு காலத்தில் இலங்கைக்கு வரத்தானே போகிறீர்கள்? எங்கள் தரவழி அடிபட்டு உதைபட்டு அரைகுறை மரணத்துடன் போராடி உரிமை என்ற பேரில் ஏதோ வாங்கி வைப்போம். உங்கள் தரவழிகள் பெரிய மனிதர் போர்வையில் வருவீர்கள் பங்கு போட, இடதுசாரிகளுக்கு மட்டுமில்லை அடிவிழப் போவது, உங்களைப் போன்ற சுயநலவாதிகள் பலருக்கும்தான்.” சபேசன் முணுமுணுத்தான் உடைந்த பல்லுடன். 

கெளரி பயப்பட்டாள் இன்னொருதரம் பரமநாதன் வீட்டில் கணவன் சண்டை தொடங்காமல் இருக்க வேண்டுமே என்று. 

ஆனால் பரமநாதன் தங்கைகள் இருவரின் மனநிலையையும் அறிந்து மைத்துவர்கள் இருவரையும் பிரித்து விட்டான் கைகலப்புத் தொடங்க முதல். 


லண்டன் திருவிழாக் கோலமாய் இருந்தது நத்தார் அன்று. லண்டனுக்கு வ வந்த முதல் நத்தார் ஞாபகம் வந்தது அவனுக்கு. 

கிறிஸ்மஸ் பார்ட்டி பெண்கள், இனிமையான (?) இரவுகள் அதன்பின் கார்த்திகாவை நினைத்துப்பட்ட துன்பங்ள் ஞாபகம் வந்தன. 

கார்த்திகா! 

அல்ளுக்கு இப்போது தெரியவராமலா இருக்கும் தன் திருமண வாழ்க்கை பற்றி? என்ன சொல்ல மறந்தாலும் இது மாதிரி விடயங்கள் சொல்லவா மறப்பார்கள்? 

என்ன நினைப்பாள்? 

என்னை ஏமாற்றியவன் இப்படித்தான் கடவுளால் ஏமாற்றப் படுவான் என்று நினைத்திருப்பாளா? கார்த்திகா அப்படி உயிர் போனாலும் நினைக்க மாட்டாள். 

எதையும் விதியிலும் தலை எழுத்திலும் பழிபோடுபவள் ‘எனது வாழ்க்கைக்காகத் துக்கப் பட்டிருப்பாளா?’ அவனால் முடிவு கட்டத் தெரியவில்லை. அவளுக்கு எத்தனையோ தரம் எழுத நினைத்தான். 

எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. அல்லது இப்போது எழுதுவது சரியில்லை என்று நினைத்தான். மனம் வேதனையோடு துடித்துக் கொண்டிருக்கும் போது உணர்ச்சிகளைக் கொட்டி அவளைத் துக்கப்படுத்த விரும்பலில்லை. 

அத்துடன் எதையும் ‘மற்றவர்களிடம்’ சொல்லி முறையிடுவதாக லிஸா ஒரு தரம் சொல்லியிருந்தாள். கார்த்திகா அவனுக்கு ‘மற்றவர்களாக’ ஒரு நாளும் இருந்ததாக அவனால் கற்பனை செய்ய முடியாமல் இருந்தது ஆனாலும் அவளுக்கு இதை எழுதி அவளிடம் பிரதிபலனாகப் பரிதாப – அனுதாபக் கடிதத்தை எதிர்பார்க்க அவன் தயாராகவில்லை. 

அதைவிட அவளிடம் என்ன எதிர்பார்க்க முடியும் என்றும் தெரியவில்லை. ஆனால் இலங்கைக்குப் போய் அவளைச் சந்தித்து வந்தவுடன் தன் வாழ்க்கை இப்படிப் போனதை யிட்டு அவள் தெரியக் கூடாதென்றே விரும்பினான். 

ஆனால் அவன் எதிர்பாராத விதமாக அந்தக் கடிதம் வந்தது. நத்தார் முடிந்து விட்டது. லண்டனின் ஆரவாரம் இப்போது புத்தாண்டுக் கொண்டாட்டத்திலும் கடைகளில் நடக்கப் போகும் ‘Saleல்’ ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. 

மலிவு விற்பனைக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஆயிரம் – இலட்சமாகச் சனங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தார்கள். அந்த அமர்க்களம் பிடித்த தெருக்களில் கார் ஒட்டிய களைப்பில் வீட்டை த் திறந்த போது எத்தனையோ புத்தாண்டுக் கடிதங்களுக்கிடையில் அந்த நீல எயார் மெயில் கடிதம் கிடந்தது. 

சத்தியமூர்த்தியின் கடிதம். அவன் அதிகம் எழுதவில்லை. வழக்கம்போல் அரசியல் ஒன்றுமில்லை. தனிப்பட்ட விடயம். அவன் கார்த்திகாவைப் பதிவுத் திருமணம் செய்து கொண்ட விஷயம் பரமநாதனுக்குச் சந்தோஷம் தரும் என்று அவன் நினைப்பதாக எழுதியிருந்தான். பரமநாதனிற்கு ஒரு நிமிடம் சுய உணர்வு இல்லாமல் போனது போல் இருந்தது. 

கார்த்திகாவுக்குக் கல்யாணம். 

என்னுடையவையாய் இருக்க வேண்டியவை என்று இவன் கைகளைப் பிடித்து அழுதவளுக்குக் கல்யாணம். 

கார்த்திகாவுக்கு கல்யாணம் என்ற விடயம் மிகவும் சந்தோஷப்பட வேண்டிய விடயம் (!) என்று தன்னைத் தானே திருப்திப் படுத்திக் கொண்டான். 

அதன் பின்னால் அந்த தவிர்க்க முடியாத, அவனால் தாங்க முடியாத சமாதானத்தின் பின்னால் அவன் இருதயத்தின் ஏதோ ஒரு பாகம் தவிடு பொடியாக உடைவது போல் இருந்தது. 

கார்த்திகா இத்தனை காலமும் இல்லாமல் திடீரென்று சத்தியமூர்த்தியைத் திருமணம் செய்தது தன்னுடைய கதை கேள்விப்பட்டது ஒரு காரணமாக இருக்கலாம் என்று பட்டது. 

ஏன்? 

ஏன் செய்தாள்! 

இந்தக் கேள்விக்கு அவனுக்கு மறுமொழி தெரியவில்லை. 

தெரியத் தேவையில்லை என்று பட்டது. 

ஏதோ எல்லோரும் செய்கிறார்கள். கார்த்திகாவும் கல்யாணம் செய்து விட்டாள். 

அதில் என்ன ஆச்சரியம்? 

சபேசன் தன்னை இழந்தும் தன் இனத்துக்கு பாடுபடுகிறான். லிஸா தன் சொந்த நலன்களைப் பாராமல் உலகத்தில் ஒடுக்கப்படும் பெண்களின் பிரச்சினைகளுக்குப் பின்னால், திரிகிறாள். 

மரியன் நேர்மையுடன், பொய் உறவுகளுடன் வாழப் பிடிக்காமல் போய் விட்டாள். 

நான் என்ன செய்கிறேன்? 

என் உணர்வும் செயல்களும்தான் வாழ்க்கையின் மூலதனம் என்றால் அவை படுமோசமான நிலையில் முதலீடு செய்யப் பட்டு விட்டனவா? 

அவன் குழம்பிப் போனான். தனிமை, டெலிவிஷன் – ரேடியோ, சுபினெட் நிறைந்த குடிவகைகள். 

மீராவைக் கூட்டிக் கொண்டு வர வேண்டும் போல ஒரு வெறி. 

ஏதோ செய்து இந்தத் தனிமையை அழிக்க வேண்டும் என்ற வெறி. எழுந்தான். நடை தள்ளாடியது. 

Ml motor way பனியில் அமிழ்ந்துபோய்க் கிடந்தது. பனி இன்னும் கொட்டிக் கொண்டிருந்தது. 

பாதைகளில் தோன்றி மறையும் வெளிச்சங்கள் தெகி வளையில் கண்ட கண்ணீர் பளிச்சிட்ட கார்த்திகாவின் கண்களை ஞாபகப் படுத்தின. 

கார்த்திகா. நல்லூர்த் திருவிழா, கொழும்பு யூனிவர் சிட்டி, பம்பலப்பிட்டிக் கடற்கரை, கார்த்திகா – கார்த்திகா அவன் நினைவுகள் தடுமாறின. கார் நிலை தடுமாறி ஒடிக் கொண்டிருந்தது. motor way police siron ஊதிக் கொண்டு பறந்தது. 

யார் கண்டார்கள் பானுமதியோ, கௌரியோ, மனைவி மரியனோ அவனின் சிதைந்த உடலை நாளைக்கு அடையாளம் கண்டு பிடிக்கலாம். 

முற்றும்.

– ஒரு கோடை விடுமுறை (நாவல்), முதற் பதிப்பு: ஐப்பசி 1981, அலை வெளியீடு, யாழ்ப்பாணம்.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *