ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள்




(1972ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காலைப் பலகாரம் சாப்பிட்டுவிட்டு, கழுவிய கையைத் துடைத்தவாறு கூடத்துக்கு வந்தான் கிருஷ்ணமூர்த்தி. மூலையில் அப்பா சாய்வு நாற்காலியில் புதைந்து கிடந்தார். பல வருஷ காலமாகவே அவர் அப்படித்தான் இருக்கிறார். அப்பாவை நின்று பார்த்தே ஞாபகம் இல்லைபோல் தோன்றியது அவனுக்கு. அம்மா வீட்டில் இல்லை. அடுத்த வீட்டுக்குப் போய் இருப்பாள். மத்தியான சாப்பாட்டுக்கு அரிசியோ, பணமோ கடன் கேட்டு வாங்கப் போய் இருப்பாள். அவன் சட்டையை மாட்டிக் கொண்டு வீதிக்கு வந்தான்.

மெயின் ரோட்டுக்கு ரொம்பவும் உள் தள்ளி இருந்தது அவன் பேட்டை. இதையும் மெயின் ரோட்டையும் இணைக்கும் இடம் வெகு காலம் பொட்டலாய் இருந்தது. குத்துச் செடிகளும் கள்ளிச் சப்பாத்திகளும் முளைத்துக் கிடந்த இடம் அது. அங்கு சினிமா தியேட்டர் ஒன்று எழும்பிக் கொண்டிருந்தது. செங்கற்களும், சிமெண்டு மூட்டைகளும் மண்ணும், தெருவை அடைத்துக் கிடந்தன. அவன் மெயின் ரோட்டுக்கு வந்தான். அங்கும் ஒரு சினிமாக் கொட்டகை ஒன்று கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட இருந்தது. சினிமாக் கொட்டகையை அடுத்து ஓட்டலும், ஓட்டலை அடுத்து வட்டிக் கடைகளுமாகக் கடைத்தெரு காட்சி கொடுத்தது. மெயின் ரோட்டை வந்து சந்தித்த இன்னுமொரு தெரு முனையிலும் சினிமாக் கொட்டகை இருந்தது. இந்த இடத்தில் முன்பு குடிசைகள் இருந்தன. குடிசைகளைக் காலி செய்து விட்டு சினிமா கொட்டகை கட்டினார்கள். அங்குக் குடிசை போட்டுக் கொண்டு ஜீவித்தவர்கள் எல்லாம் எங்கு போயினர் என்று தெரியவில்லை. ஒரு வேளை சினிமாக் கொட்டகைக்குள்ளே குடித்தனம் நடத்துவார்கள் போலும். அந்தக் கொட்டகையின் நிழலில் ஒண்டிக் கொண்டிருந்தது ஒரு பெட்டிக்கடை. அங்கு சார்மினார் சிகரெட் ஒன்றை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டான் கிருஷ்ணமூர்த்தி.
புகைத்தவாறு எங்கு போகலாம் என்று யோசித்ததில், ரங்கசாமி யைப் பார்க்கலாம் என்று கடைப் பக்கமாக நடந்தான்.
நாடார் கடையில் கும்பல் நெறிந்தது. சற்றுத் தள்ளி மதிலோரம் முளைத்த முருங்கை மர நிழலில் ஒதுங்கி நின்றான். காற்றசைத்து கிளை ஒதுங்கும் போதெல்லாம் வெயில் மேல் விழுந்து உறைத்தது. மர நிழலையே ஆதாரமாகக் கொண்டு மையக் கிழங்கு விற்றுக் கொண்டிருந்தாள் கண்ணம்மா கிழவி. போன மாசம் கொய்யாப் பழம் விற்றாள்.
இவனைப் பார்த்ததும், ‘இன்னா அரிசிக் கடைக்காரரே கடையை ஊத்தி மூடிக்கினியாமே – இன்னா ஆளுப்பா நீ.. அரிசிக் கடை வச்சு அவன் அவன் பணத்தை அரிச்சுக் கொட்டறான். நீ உள்ளதையும் ஒழிச்சுப்புட்டு அம்போன்னு நிக்கறே…” என்றாள்.
காற்றசைத்து, மரக்கிளை விலகி, வெயில் உறைத்தது. சட்டைக்குள் வியர்வை புழுங்கியது. தீர்ந்து போன சிகரெட் விரலைச் சுட்டது.
‘அரிசி வாங்கினவளுவ கடனை ஒழுங்காத் திருப்பிக் குடுத்திருந்தா நான் எதுக்குக் கடையை மூடறேன். பெரிய யோக்கிய மயிரு மாதிரிப் பேசறியே… நீ கூடத்தான் பாக்கி தரணும்’ என்றான் கிருஷ்ணமூர்த்தி.
‘இன்னாபா-வார்த்தையை உடறியே! நான் தரக் கூடாதுன்னா நினைக்கிறேன். காசு கையில் நின்னாதானே, இந்த வாரத்துக் குள்ளேயே குடுத்திடறேன் ராசா’ என்றாள் கிழவி.
நாடார் பார்வையில் இவன் விழுந்ததும், ‘என்ன சார்! ரங்காசாமியைப் பார்க்கணுமா?’ என்றார். இவன் தலை அசைக் கிறான். அவர் கடை உள்பக்கம் திரும்பி, ‘அடே… ரங்கசாமி! உன் பழைய முதலாளி அவுக பார்க்கணுமாம்… போய் வா!’ என்றார். மார்பில் வழிந்த வியர்வையைக் கை விசிறி மட்டையால் வழித்து எறிந்தார். துளிகள் துவரம் பருப்பின் மேல் விழுந்தன. கடையின் மூடு பலகையைத் தாண்டிக் குதித்துக் கொண்டு ரங்கசாமி வந்தான்.
‘இன்னா அண்ணே…’
‘கோபாலு இன்னும் பணம் தரலேடா. அதான் அந்த ஆலை வேலைக்காரன்-அஞ்சி பத்துன்னா பரவாயில்லே- நூத்தி – எம்பளது ரூவா. வீட்டுல கொஞ்சம் முடை. அவனை பார்த்தாக் கேளேன்.’
‘நைட் கடை கட்டிக்கிட்டு போறப்ப அவனைப் பார்க்கிறேன்’ என்றான் ரங்கசாமி.
‘டீ சாப்பிடறீங்களா அண்ணே..’
‘வேணாம்.”
ஒரு காகம் வந்து மதிலில் உட்கார்ந்தது. இரண்டு முறை கத்தி விட்டுப் பிறகு பறந்து போனது.
‘வேற ஒன்றும் பிசினஸ் பண்றாப்பில இல்லையா அண்ணே. இந்த நாடார் நமக்கு ஒத்து வரல்லேண்ணே- சின்னப் பையனாட்டம் டீ வாங்கிட்டு வரச் சொல்றான்.’
‘பாப்பம்.’
மறுநாளே கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்துத் தகவல் சொன்னான் ரங்கசாமி.
“கோபாலு வீட்டுல கிடைக்கல்லேண்ணே-நைட் ரெண்டாவது ஆட்டம் சினிமாவுக்குப் போனன்னே – அங்க வாத்தியாரு வசமா மாட்டிக்கிட்டாரு. கூட நாலைஞ்சு பேரோட சினிமாவுக்கு வந்தி ருந்தான். இன்னாய்யா உன் யோக்யதை – கடன் சொல்லி அரிசி வாங்கித் தின்னியே திருப்பிக் குடுத்தியால. இதவிட கூட்டிக் கொடுத்துச் சாப்பிடலாமேடா பேமானி அப்பிடீன்னேன். ஆளு அப்பிடியே பேஸ்த் அடிச்சுப் போயிட்டான் தெரியுமா. சினிமா கூடப்பார்க்கல்லே. இன்ரோலுக்கு முந்தியே எழுந்திருச்சிப் போயிட்டான்.’
ரங்கசாமிக்குச் சந்தோஷம் வந்தால் ஒரு கண் மூடிக் கொள்ளும். வலது கை ஆள் காட்டி விரலால் இடது கை உள்ளங் கையைக் குத்திக் கொள்வான்.
‘நீ இப்பிடி அவனை அசிங்கப்படுத்தி இருக்கக் கூடாது’ என்றான் கிருஷ்ணமூர்த்தி.
‘இதாண்ணே உன்கிட்ட கஷ்டம். உனக்குப் பிழைக்கத் தெரியல்லே. இவனுங்கிட்ட எல்லாம் மரியாதை பார்த்தா பிச்சை எடுக்க விட்டுடுவானுங்க. உனக்குத் தெரியுமா- இந்தப் பேமானி போன வாரந்தான் ஆயிரத்தை நூறு ரூவா போனஸ் வாங்கி இருக்கான். அவனுக்குப் போயி மரியாதை கொடுக்கணும்னு நீ சொல்றே.’
இது நடந்த ரெண்டு நாளைக்கப்புறம், அகஸ்மாத்தாக, கடைப்பக்கம் கோபாலுவை கிருஷ்ணமூர்த்தி பட்டாணிக் பார்த்தான். சேலத்துக்காரர் நடத்தும் பிரியாணிக் கடை வாசலில், வாயில் குச்சியை விட்டுக் குத்திக் கொண்டு நின்றிருந்தான் கோபாலு. அவனும் இவனைக் கவனித்து விட்டான். பார்க்காதது போல சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தான். அது ‘ஒன்வே டிராபிக்’ உள்ள தெருவாகையால் அவனால் ஓட்டிக் கொண்டுபோக முடியவில்லை. கிருஷ்ண மூர்த்தி ஓடிப் போய் அவனைத் தொட்டான்.
‘இன்னாபா கோபாலு-இன்னா மறந்தே போயிட்டியே.’
கோபாலு சிக்னலில் மாறிமாறி வரும் வெளிச்சத்தை முதல் முறையாகப் பார்த்தது போலப் பார்த்தான்.
‘நான் எவ்ளோ கஷ்டப்படறேன் தெரியுமா. நான் உன்னை முழுசுமாக் கேக்கறேன்? கொஞ்சம் கொஞ்சமா கொடுத்து அடையேன். உனக்கும் சௌரியம். எனக்கும் சௌரியம்’ என்று அடைந்த குரலில் சொன்னான் கிருஷ்ண மூர்த்தி.
‘அது இருக்கட்டும்பா. நான் உனக்கு எம்மாந்தரணும் பிசாத்து நூத்தி எம்பது ரூபா காசுதானே. ஆயிரமா இருந்தாகூட என்னால தர முடியும். நான் ஒண்ணும் ‘ஐவேஜி’ இல்லாதவன் இல்லே. நிம்மதியா சினிமாவுக்குப் போன இடத்திலே, உன் கடைப் பையனைவிட்டு நாலு பேருக்கு முன்னால என்னை நீ அவமானப் படுத்தறே. நான் சினிமாவே பார்க்கலை.’
கோபாலுவின் முகம் கோணியது.
‘எனக்கு அழுகையே வந்துடுச்சி. தோ பாரு. நான் கொடுக்கிறப் போதான் கொடுப்பேன். என்னை இம்சை பண்ணிக்கிட்டு இருக்காதே. மரியாதையைக் காப்பாத்திக்கோ’ என்று சொல்லிவிட்டு சைக்கிளை வேகமாகத் தள்ளிக் கொண்டு போனான்.
‘கோபாலு! கோபாலு!’ என்று கூப்பிட்டுக் கொண்டே பின்னால் போனான் கிருஷ்ணமூர்த்தி. அவன் வேகமாகப் போய் விடவே நடுத் தெருவில் நின்று, தன்னை யாராவது கவனிக் கிறார்களா என்று ஓரக்கண்ணால் நோக்கினான். நிம்மதியாக இருந்தது. டிராபிக் போலீஸ்காரன், இவனைப் பார்த்து, ‘பிளாட் பாரத்துல ஏறி நடங்கய்யா. நடு ரோட்டுல நின்னுக்கிட்டு ஏய்யா என் தாலியை அறுக்கறீங்க’ என்று கத்தினான்.
அவன் பிளாட்பாரத்தில் ஏறி நடந்தான். திருப்பத்தில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் ஒரு சார்மினார் சிகரெட் வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டான். மனசு பாரமாக இருந்தது. கிளம்பும் போது அம்மா, ‘பணம் இருந்தா பத்து ரூபா கொடுப்பா’ என்று கேட்டது ஞாபகத்துக்கு வந்தது. அரக்கு நிறத்தில் பொட்டு வைத்துக் கொண்டு, ஸ்டூலில் உட்கார்ந்து பூ விற்றுக் கொண்டிருந்த ஒருத்தி, ‘பூ வேணுமா சார்’ என்றாள். பதில் சொல்லாமல் இவன் நடந்தான்.
ஒரு வாரத்துக்குப் பின், ஐயர் ஓட்டலுக்கு முன் வெற்றிலை போட்டுக் கொண்டு நிற்கும் கோபாலுவைப் பார்த்தான் கிருஷ்ண மூர்த்தி. இருள் காண இருந்த மாலை அது. ‘கோபாலு’ என்று கூப்பிட்டுக் கொண்டு அருகே போனான். கிருஷ்ணமூர்த்தி என்கிற நபரே உலகத்தில் இல்லாதது போல சாவதானமாகச் சுண்ணாம்பு விரலைத் தூணில் துடைத்துவிட்டு, சைக்கிளில் ஏறி உட்கார்ந்து கொண்டு போய்விட்டான். போகும் போது தன் இடப்புறம் திருப்பி, ‘புளிச்’சென்று வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டுப் போனான்.
இடையில் ஒருநாள் எதேச்சையாக ரங்கசாமி எதிர்ப்பட கிருஷ்ணமூர்த்தி தான் கோபாலுவைக் கூப்பிடக் கூப்பிட அவன் கொஞ்சம்கூட மதிக்காமல் போய்விட்டதை ரொம்ப வருத்தத்தோடு சொல்லிக் கொண்டான். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு ரங்கசாமி சொன்னான்.
‘அண்ணே நான் சொல்றேன்னு கோவிச்சுக்கக் கூடாது. நீ இப்படியே இருந்தா, சோறு தண்ணி இல்லாம செத்துத்தான் போவே. கோபாலு மாதிரி அயோக்கியப் பசங்களை மரியாதை பண்ணிப் பேசிக்கிட்டு இருக்கீங்க. சட்டையைப் பிடிச்சு இழுத்து ‘ங்கொக்காலே, இன்னாடா சொல்றே என் பணத்துக்கு அப்பிடீன்னு கேக்கிற வரைக்கும் அவனும் பணம் கொடுக்கப் போறதில்லே. நீயும் வாங்க போறதில்லே!”
அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமையாக வாய்த்தது. காலை முதற்கொண்டு யோசித்து யோசித்து இருட்டிய பிறகு கோபாலுவைப் பார்க்கப் புறப்பட்டான் கிருஷ்ணமூர்த்தி. ராத்திரி கனத்து பேட்டையே இருட்டில் புதைந்து கிடந்த போது கோபாலுவின் வீட்டுக் கதவைத் தட்டினான். கதவு திறந்து ஒரு ஸ்திரி ‘யாரு’ என்றாள். மங்கிய வெளிச்சத்தில் பிள்ளைத் தாய்ச்சியாக அவள் இருப்பது தெரிந்தது.
‘கோபாலு இருக்காரா?”
‘சாப்பிடறார், உக்காருங்க-யார் வந்திருக்காருன்னு சொல்ல.’ ‘கிருஷ்ணமூர்த்தி… அரிசிக்கடை கிருஷ்ணமூர்த்தின்னு சொல்லுங்க – தெரியும்’
அவள் மீண்டும் கதவை சாத்திக் கொண்டு போய்விட்டாள். உள்ளே இருந்த விளக்கு வெளிச்சம் சாத்தியிருந்த கதவு ஊடாக ஒரு நீண்ட கோடாய் வெளிப்பட்டது. இவன் நின்று கொண்டே மூன்று சிகரெட்டுகளைக் குடித்து முடித்து விட்டிருந்தான். கோபாலு கதவைத் திறந்துகொண்டு கையைத் துடைத்துக் கொண்டே வந்து ‘இன்னாபா இந்த நேரத்துல-‘ என்றான்.
கூர்ந்து கவனித்தால் மட்டுமே முகம் தெரிகிற இருட்டாக இருந்தது. கிருஷ்ணமூர்த்திக்கு அது சௌகரியமாக ஆயிற்று. கோபாலுவிடமிருந்து மீன் குழம்பு வாசனை
வாசனை வந்தது. அது அவனுக்குப் பிடிக்காது.
‘ஒன்னுமில்லே, வீட்டுல கொஞ்சம் முடை. பணக்கஷ்டம் ஏதாவது பார்த்து கொடுத்தியேன்னா தேவலை.’
கதவைத் திறந்து கொண்டு அந்த ஸ்திரி எட்டிப் பார்த்தாள். வெளிச்சம் அதிகமாக வெளிப்பட்டது.
‘நான்தான் உனக்கு அப்பவே சொன்னேனே, என் கையில் கெடைக்கும் போது கொண்டாந்து தர்ரேன்னு. சும்மா ஏன் தொந்தரவு பண்றே’ என்று அமுங்கிய குரலில் சொல்லித் திரும்பிப் பார்த்துக் கொண்டான்.
கிருஷ்ணமூர்த்தி அந்த ஸ்திரியைப் பார்த்தான். அவள் இவனைப் பார்ப்பதாக இருந்தது.
‘என் நிலைமையை நீ புரிஞ்சுக்கணும் கோபாலு. என் முதல்ல பெரும் பகுதியக் கடனாகவே கொடுத்துட்டேன். வீட்டுல கொஞ்சம் முடை. அக்கா பிரசவத்துக்கு வந்திருக்கு. என் கைச்செலவுக்குக் கஷ்டமா இருக்கு.’
‘உனக்கு அநேக கஷ்டம் இருக்கலாம். அதுக்காக நான் கழுத்தையா அறுத்துக்க முடியும்?’
‘நீ பேசறதப் பார்த்தா நான் என்னமோ உன் கிட்டப் பணம் கடன் கேட்க வந்த மாதிரி இல்ல இருக்கு?’ என்று சொல்லிவிட்டு ஒரு சிகரட்டைப் பற்ற வைத்துக் கொண்டான் கிருஷ்ணமூர்த்தி. கொஞ்சம் தெம்பாக உற்சாகமாக இருந்தது. மார்பு லேசாகத் துடிப்பது தெரிந்தது.
‘சரி, நான் தூங்கப் போகணும்.’
‘ஒன்னு சொல்றேன் கேளு. நான் உனக்கு அடங்கிப் போறதா நெனைக்கிற. மனுஷனுக்கும் மனுஷனுக்கும் இருக்கிற மரியாதை தவறக் கூடாதுன்னு பார்க்கிறேன். நீ காப்பாத்திக்கப் போறதில் லேன்னு தோணுது-‘
‘ஏங்க. இங்க கொஞ்சம் வாங்களேன்’ என்றாள் அந்த ஸ்திரி.
‘உஸ். நீ உள்ளே போ, இன்னாபா, ஒரு மாதிரியா பேசறே’
‘நீ பேச வச்சுட்டே, உனக்கு இன்னும் ஒரு வாரம் டைம் தரேன். அதுக்குள்ளே நீ பணத்தைத் தந்திடணும்.’
‘தரலேன்னா?’
‘உதைப்பேன். நீ என் வீட்டைத் தாண்டித்தான் மில்லுக்குப் போவணும். உன் காலை, கையை உடைப்பேன். உன் மில் டோக்கனைப் பிடுங்கி வச்சுசுக்குவேன். நீ வேலைக்குப் போவ முடியாது. என்னை உனக்குத் தெரியும். என் குடும்பத்தையே உனக்கும் தெரியும். என்னோட சிநேகிதர்கள் எல்லாம் எப்படின்னும் உனக்குத் தெரியும். சத்தியமா நான் சொன்னதைச் செய்வேன்’
அந்த ஸ்திரி கதவை விட்டு வெளியே வந்துவிட்டாள். கிருஷ்ணமூர்த்தி சிகரெட்டை மிதித்துத் தேய்த்துவிட்டு நிதானமாக நடந்து போய்விட்டான்.
இது நடந்த ரெண்டாம் நாள். சூரியன் கூட தூங்கி விழிக்காத காலைப் பொழுது. குளிரில் முடங்கி, போர்த்திக் கொண்டு படுத்திருந்தான் கிருஷ்ணமூர்த்தி. அம்மா வந்து அவனை எழுப்பினாள்.
‘யாரோ தேடிக்கிட்டு வந்திருக்கான்டா.’
துண்டால் மார்பை மூடிக்கொண்டு வெளியே வந்தான். கழுத்தைச் சுற்றி மப்ளர் சுற்றிக் கொண்டு நின்றிருந்தான் கோபாலு.
‘இன்னா கோபாலு?’
‘இந்தா, இதுல நூறு ரூபா இருக்குப்பா. அவ்ளோதான் என்னால புரட்ட முடிஞ்சுது. இதை வச்சுக்கோ. இன்னும் ரெண்டே நாளில் மீதி எம்பளதையும் கொடுத்துடறேன். கோவிச்சுக்காதே’ என்றான் அவன்.
பணத்தை வாங்கிக் கொண்டான்.
‘போனஸ் வாங்கினியே என்னாச்சு?’
‘வரவைக் காட்டிலும் கடன் ஜாஸ்தியாப் போச்சுப்பா எனக்கு’
பணத்தை எண்ணுவது சிரமமாக இருந்தது கிருஷ்ணமூர்த்திக்கு.
‘பரவாயில்லை. மீதி எவ்வளவு தரணும் நீ – எம்பளது தானே. முப்பத்தைத் தள்ளிடு. ஐம்பது கொடுத்தாப் போதும். இன்னும் ஒரு வாரம் பத்து நாளு சென்னு கொடு.’
‘நான் ஏதாவது தப்பாச் சொல்லியிருந்தா கோவிச்சுக்காதே கோபாலு-‘
‘சேச்சே, தப்பு என்னோடதுதான். நான் ஒழுங்கா கொடுத்திருக்கலாம் — நான் கஷ்டப்பட்ட நேரத்துல நீ கொடுத்து உதவினே. உன் கஷ்டத்துக்கு நான் உதவல்லே-‘
கோபாலு போய்விட்டான். மூன்றாம் நாள் திரும்பி வந்தான். ‘என்னா கோபாலு?’
‘இந்தப்பா, இதுல முப்பது இருக்கு. அவ்ளோதான்- கிடைச்சுது ஒரு இடத்துல கேட்டு வாங்கியாந்தேன். நம்ம வீட்டுல முந்தா நாளு குளிச்சுட்டா உன் கிட்டப் பேசிட்டுப் போனேன் இல்ல. அப்புறம் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பிரசவம் ஆயிட்டுது செலவு மேல செலவு.’
‘இன்னா குழந்தைப்பா-‘
‘இதுவும் பொட்டைதான்-‘
‘அதனால என்ன- குழந்தை குழந்தைதானே!’
‘சரி, நான் வரட்டுமா – மீதி இன்னும் ரெண்டு நாள்லே தர்றேன்.’
‘இரு. இன்னும் எவ்ளோ தரணும்- இருபதுதானே! குழந்தைக்கு அந்தப் பணத்துல என் பேரைச் சொல்லி ஒரு சட்டை வாங்கிப் போடு-‘
‘மனசுல ஒன்னும் வச்சுக்காதே கிருஷ்ணமூர்த்தி.’
‘சேச்சே!’
சாயங்காலம் ஐயர் கிளப்பில் டிபன் சாப்பிட்டுவிட்டு, கிருஷ்ண மூர்த்தியும் ரங்கசாமியும் சினிமாவுக்குப் போனார்கள்.
– 1972
– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.
![]() |
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க... |