ஒத்தக்கொலுசுக்காரி!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2026
பார்வையிட்டோர்: 1,371
புதிதாக வாங்கி கால்களில் அணிந்திருந்த கொலுசுக்களில் ஒன்றைக்காணாமல் பதறிப்போனாள் சுமங்கி. விடிந்தால் யாராவது கண்களில் பட்டால் எடுத்துக்கொள்வார்கள், தவிர நாளை தன்னைப்பெண் பார்க்க நகரத்திலிருந்து மாப்பிள்ளை வரப்போவதாக பெண் தரகர் வந்து சொல்லி விட்டுப்போனதை நினைத்தவள் உடனே டார்ச்சை எடுத்துக்கொண்டு ஆடு மேய்க்கும் காடு முழுவதும் தேடியும் கிடைக்காமல் வருத்தத்துடன் வீட்டிற்கு வந்தவளுக்கு இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை.“உன்ற ராசியோ என்னமோ தெரியல. கொழந்தையா இருக்கும் போதிருந்து இப்ப கொமுரியா இருபது வருசத்த முழுசா முழுங்குன பின்னாலயும் ரெண்டு கொழுசு போட்டா ஒன்னு காணாம போயிருது. நீ ஒன்னு பண்ணு ஒத்தக்கொலுசோடையே ஒன்னி மேலு உன்ற ஆயுசுக்கும் இருந்திரு. அந்தக்காலத்துல காட்ல மேயற ஆட்ட ஒன்னப்புடிச்சிட்டு சந்தைக்கு போனா நூறு ரூபாய்க்கு வித்துப்போகும். அந்தப்பணத்துக்கு ஒரு செட்டு கொலுசு நம்மூரு ராமாசாரிகிட்ட வாங்கீட்டு வந்திருவேன். இப்ப காட்டையே வித்துத்தான் ஒரு வெள்ளிக்கொலுசு நகைக்கடைல போயி வாங்கற நெலமைக்கு வெலை இமயமலையளவுக்கு ஏறிப்போச்சு….” தாய் சுமதி பேசுவதைக்கேட்டு கண்ணீர் சிந்தினாள்.
“என்னங்க பொண்ணப்பாத்தீங்களா? கால்ல ஒத்தக்கொலுசுதாம் போட்டிருக்கறா…. வெள்ளி வெலை ஏறிப்போச்சுங்கிறதுக்காக ஒத்தக்கொலுசையா பொண்ணுக்கு போட்டு உடுவாங்க? சுத்தப்பிசினாறி குடும்பம் போலிருக்குது. இந்த பிச்சக்காரக்குடும்பத்துல நானென்ற பையனுக்கு பொண்ணு எடுக்க மாட்டேன். வாங்க போகலாம்” பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையின் தாய் சாரங்கி, தான் கொடுத்த காபியைக்கூட குடிக்காமல் எழுந்து சென்றது சுமங்கியையும், அவளது குடும்பத்தினரையும் அதிர்ச்சியடையச்செய்தது.
“எனக்கு கண்ணாலமே வேண்டாம். இப்பவே இப்படி பண்ணறவங்க கண்ணாலத்துக்கப்புறம் கொடுமைப்படுத்துவாங்க. கழுத்துல போட்டிருந்த நகையையும், கால்ல போட்டிருந்த கொலுசையும் உன்னிப்பா பாத்தாங்களே தவுத்து பொண்ணு எப்படி இருக்கான்னு பாத்தாங்களா? ஒரு கால்ல கொலுசு இல்லேங்கிறதுக்காக இந்தப்பொண்ணே வேண்டாம்னு சொல்லறவங்க குடும்பத்துக்கு வாக்கப்பட நானுந்தயாரா இல்லை” கண்ணீர் வடித்தபடி மகள் பேசியதைக்கேட்டு பெற்றோரும் கண்ணீர் சிந்தினர்.
தான் பெண்ணைப்பார்த்த பின் தனக்குப்பிடித்துப்போனால் மட்டுமே மகன் பார்க்க வேண்டும் எனும் நிபர்ந்தனையுடன் மகனை அழைத்து வந்து காரிலேயே இருக்கச்செய்து விட்டு தானும், கணவனும் பார்க்க வந்ததில் பிடிக்கவில்லை என சொன்னதற்கான காரணத்தைக்கேட்டு கோபத்தின் உச்சத்திற்கே சென்றான் மாப்பிள்ளை பையன் சுகன்.
“ஏம்மா உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? பொண்ணு பார்க்கப்போனீங்களா? அவ போட்டிருந்த கொலுசப்பார்க்கப்போனீங்களா? நீயுந்தா அடிக்கடி தொலைச்சிட்டு ஒரு கொலுசக்காணம்னு பதறுவே. அப்பாவும் கோபப்படாம எத்தன தடவ வாங்கிக்கொடுத்திருக்காரு. அப்படி அந்தப்பொண்ணும் தொலைச்சிருப்பா. அவளக்கட்டிக்கப்போற நானும் கோபப்படாம வாங்கிக்கொடுத்திட்டு போறேன். எனக்கு கொலுசுப்புள்ள வேண்டாம். வலுசப்புள்ளதான் வேணும். கிராமத்துல பொண்ணு கட்டனம்ங்கிற என்னோட ஆசைல மண்ண அள்ளிப்போட்டிட்டியேம்மா….” என மகன் சுகன் உறுதியாக பேசுவதைக்கேட்ட தாய் சாரங்கி வாயடைத்து நின்றாள்.
தனது வீட்டு ஜன்னல் வழியாக மாப்பிள்ளை பையன் தனது தாயிடம் பேசுவதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்த சுமங்கி, தனது வீட்டிலிருந்து அவர்களது கார் நிற்குமிடத்துக்கு அவளது ஒத்தை கொலுசில் இருந்த சலங்கைகள் ஒலிக்க ஓடிச்சென்றவள் தன்னை மறந்து மாப்பிள்ளைப்பையனை கட்டியணைத்துக்கொண்டது அங்கிருந்த அனைவருக்கும் மனதில் மகிழ்ச்சியைப்பெருக்கியது.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
