எழுவாய், பயனிலை





மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வாழ்ந்த காலத்தில், அவர்களிடம் புலவர் பெருமக்கள் மேலும் கல்வி கற்க அடிக்கடி சென்றுவருவதுண்டு. பலரும் கவிபாடிப் பெருமையடைவதை அறிந்த பள்ளி மாணவன் ஒருவன் தானும் கவிபாட விரும்பினான். பிள்ளையவர்களை நெருங்கிக் கவிபாடச் சொல்லிக் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டான். அவர்கள் அவனது தமிழறிவை அறிய விரும்பி ஒரு சொற்றொடரைக் கூறி, இதன் (வாக்கிய உறுப்புகள்) எழுவாய், பயனிலை, செயப்படு பொருள் என்ன என்று கேட்டார். பையனும் சொன்னான். தவறுதலாக, உடனே மகாவித்துவான் அவர்கள் –
“தம்பி, நீ எழுவாய்
உன்னால் ஏதும் பயனிலை,
நீ எழுந்து நடப்பதே இப்போது செயப்படுபொருள்.”
என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
கவிதைபாட எழுவாய் பயனிலையாவது தெரிந்திருக்க வேண்டும் என்பது அவர் கருத்து.எதுகை மோனை கூட இல்லாமல் இக்காலத்தில் கவிதை பாடுபவர்களைக் கண்டால் அவர் என்ன செய்வார்?
என்ன சொல்லுவார்?
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க... |