எழுத்தாளரின் மகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 16, 2025
பார்வையிட்டோர்: 1,043 
 
 

1979 என்று சிமெண்ட் கலவையில் செதுக்கப்பட்ட முகப்பு.பல வருடங்களாக வர்ணம் காணாத சுற்றுச் சவர். வாசல் தெளித்து கோலமிடாத வெளியில் அரை அடிக்கும் மேல் சருகுகள் மூடிக்கிடக்கிறது. மின்கட்டண கணக்குகளை நேர் செய்யாததால் இருளில் மூழ்கியிருக்கும் அறைகள். பெருமாள்முதலியின் மறைவிற்குப் பின் மூதேவி குடிவந்துவிட்ட அந்த பங்களாவின் மாடியில் கல்நார் ஓடு வேயப்பட்ட சிறு அறையில்தான் கிராமத்து இளைஞன் தன்னந்தனியே தங்கி இருந்தான். கிராமத்தில் நிஜ பேய்களை பார்த்து பழகியவனுக்கு பட்டணத்து பேய்களெல்லாம் பொய்களால் ஜோடிக்கப்பட்ட சட்டவிரோதமானவை என புரிந்து கொண்டான்.

தன் தந்தையின் மறைவிற்குப் பின் கல்லூரியை தொடர முடியாமல் பட்டணம் வந்தவனுக்கு அந்த பாழடைந்த பங்களா அடைக்கலம் தந்தது. சில வருடங்களுக்கு முன்புதான் இதே சாலையில் உள்ள இரு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் காயிலாங்கடைகளில் சேகரம் செய்த பாகங்களை ஒன்று சேர்த்து புத்தம்புதிய வாகனமாக்கியிருந்தான். அந்த வாகனமும் அவனுடன் பஞ்சம் பிழைக்க வந்திருந்தது. தெற்கு கூவம் சாலையில் உள்ள பெருங் கொன்றை மரத்தினடியில் இளநீர் கடை வைத்திருக்கும் பெரியவர்தான் அவனிடம் கரிசனமாக இருந்தார்.அவரின் வழிகாட்டுதல்தான் கல்நார் ஓட்டுவீடு அமைந்தது. கைவிடப்பட்ட சொகுசு கார்கள் சாலையின் ஓரமாக வானம் பார்த்து நிர்வாணமாக நின்றது. சில வாகனங்களை காட்டுக் கொடிகள் படர்ந்து மறைத்திருந்தது. மழைக்காலம் தவிர மற்ற காலங்களில் கருத்து ஓடும் கூவம்,புதுமங்கை போல் மெல்ல அசைந்து செல்லும்.இரவு மின்னொளியில் அழகாக இருக்கும். அதன் அருகில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும் அதன் அழுகிய மணம். ‘பொது இடங்களில் வாகனம் நிறுத்த அனுமதி இல்லை.மீறினால் அபராதம் வசூலிக்கப்படும்’,எனும் வாசக தட்டிகள், ‘மது அருந்த தடை செய்யப்பட்ட பகுதி’எனும் முழக்க பதாகைகள் இருந்தும், மீறல்கள்.மீறல்கள்! ருக்மணிலட்சுமிபதி சாலை தொடங்கி நெடிய செல்லும் கூவம் ஆறு சாலைதான் பழைய வாகனங்களை புதுப்பித்து தரும் புதுப்பேட்டை.

ஓட்டுரிமையே இல்லையென்றால் நெரிசலான சிறுசிறு சந்துக்களும் மிகவும் நெருக்கமான வீடுகளும் அந்த பகுதியில் இருந்திருக்கவே முடியாது. இவர்களுக்கு காலைக் கடன் முடிக்க இலவச ஒப்பனை அறை இருக்கிறது.பாதசாரிகளுக்கென்று போடப்பட்ட சலவைக்கல் மாநகராட்சியின் புன்னியத்தில் துணி துவைக்கவும், கும்பலாக குந்தி தெருக்கடை நடத்தவும் முடிகிறது. அள்ள அள்ள குறையாத மாநகராட்சி குப்பைகளில் எப்போதும் இல்லாமல் இருந்ததில்லை மதுக் குவளைகள். கிராமத்தில் ஆட்டுப்பட்டிகளும், மாட்டுத் தொழுவங்களும்  பார்த்தவனுக்கு பட்டணத்து ஆடுகள் சுவற்று பாசிகளை உண்பது பரிதாபமாக இருந்தது. இந்த உலகில் ஜனிக்கும் ஜீவராசிகளுக்கு மரணம் உண்டு. ஆனால், அந்த மரணம் கூட உணவாகவே இருக்கும் நிலை ஆடுகளுக்குத்தான். ஒரு எழுத்தாளனின் மகனாக பிறந்த அவனுக்கு ‘செகாவ்’ எனும் பெயர் தவிர்த்து வேறொரு சந்தோஷமும் இல்லை.

இளநீர் கடை தாத்தாதான் செகாவை ‘சூடான வற்றல்’, கடையில் விற்பனை ஆளாக வேலைக்கு சேர்த்துவிட்டார்.தந்தையை இளந்த சோகம் அவன் வாழ்க்கை சூழலையே மாற்றிப் போட்டிருந்தது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவன் நிலையை அறிந்து மீதி பணத்தை அவன் ஜோபியில் வைத்துக் கொள்ள பணித்தனர். கடை உரிமையாளன் கல்லா பணங்களை திருடுவதாக குற்றம் சாட்டி வேலையிலிருந்து விரட்டிவிட்டான். மூன்று நாட்களாக உணவின்றி மாடியில் தனி அறையில் படுத்துக்கிடந்தான் செகாவ்.

வைகை அணை அணைத்துக் கொள்ளும் செழிப்பான கிராமம். பழமை மாறாத குக்கிராமம். விளைச்சல் நிலங்களும், மேய்சல் நிலங்களும் அற்றுப் போய் சுமைதாங்கி கல்லின் அடையாளம் தெரியாமல் போன கிராமங்களுக்கு நடுவில்தான் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது சொக்கத் தேவன் பட்டியும், சின்னத் தேவன் பட்டியும். ஆட்டுப் பட்டிகளும், மாட்டுத் தொழுவங்களும் நிறைந்திருக்கும் அந்த கிராமத்தில் அதன் குரல்கள் எப்போதும் எங்கும் கேட்டுக் கொண்டே இருக்கும்.இவர்களின்  பிரதான தொழில் பால்வியாபாரம். ஊர் ஆலமரத் திண்ணையில் எப்போதும் அமர்ந்து எழுதிக் கொண்டிருப்பார் செகாவின் தந்தை. சாலையை கடக்கும் நத்தையின் மீது பரிதாபமும், அதே சாலயை சடுதியில் கடந்துவிடும் பறவையின் மீதான நேசமும்தான் அவர் கதைகளின் அடிநாதமாக இருந்தது. அவருக்கு மிகவும் ஆதர்சனமான எழுத்தாளர், ஆன்டன் செகாவ்.பத்திரிக்கைகள் தரும் சன்மானங்களே அவரின் வரும்படி. அதனால், எப்போதும் ஏழ்மையில்தான் வளர்ந்தான் செகாவ். அவன் அம்மாதான் மாமன்மார்களின் மாட்டுத் தொழுவத்திலும் தகப்பன்மார்களின் தொழுவத்திலும் வேலை செய்து அறைசீவனம் நடத்திக் கொண்டிருந்தாள். அவன் தந்தையின் காலில் இருந்த நாள்பட்ட புண் புற்று நோயாக உருவெடுத்த போது அவன் குடும்பம் துவண்டு போனது. பல மாதங்கள் கானா விலக்கு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று இறந்தும் போனார். தாய்வழி சொத்தும் தந்தை வழி சொத்தும் பொய் செலவினங்கள் காட்டி மறைக்கப்பட்டுவிட்டன. ஒரு வாளோடி குடிசையில் ஜீவனம் செய்யும் நிலை ஏற்பட்டவுடன்தான் சென்னைக்கு வந்தான் செகாவ். 

பாந்தியன் சாலையும் மான்டித் சாலையும் சந்திக்கும் முச்சந்தியில்தான் செந்தூர் உணவகம் உள்ளது.வியாபார பரபரப்பில் அஷ்டவதானியாக இயங்கிக் கொண்டிருந்தார் உரிமையாளர். வட்டவட்டமாக போடப்பட்ட மேசையில் நின்றுதான் சாப்பிட வேண்டும். சர்வர் என்று எவரும் கிடையாது. உணவுக்கான கட்டணம் பெறும் இடத்தில் ‘செல்பு சர்வீஸ்’,என்றும், ‘மாற்றுத் திறனாளிகளுக்கும்,மூத்த விவசாயிகளுக்கும் ஐம்பது விழுக்காடு கட்டண சலுகை’, என்றும் அறிவிப்புகள் உள்ளன. அன்று முகூர்த நாள் என்பதால் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. வஸ்தாது போல் தன்னை காட்டிக் கொண்ட ஒருவர், மனைவி,குழந்தையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் தோள்வரை தலைமுடி வளர்ந்திருந்தது. பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க மனநிலை பாதித்த பையனுடன் ஒரு பெரியவர் மசால் தோசை வாங்கிக் கொண்டிருந்தார். அவர் பணம்படைத்தவர் என்பது அவர் தோற்றத்தில் தெரிந்தது. அந்த பையன் தன் கையிலிருந்த விலை உயர்ந்த அலைபேசியிலிருந்து படம் எடுத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் கடை அல்லோலகல்லோலபட்டது. அந்த மனநலன் பாதித்த பையனிடமிருந்து அலைபேசியை பிடுங்கிக் கொண்டார் வஸ்தாது. அவர் மனைவி தந்த புகார். கடை உரிமையாளர் சமாதானப்படுத்தினார். பையன் அலைபேசியை கேட்டு அழுது கொண்டிருந்தான். பெரியவர், மிகவும் பவ்யமாக “சார், பாவம் அறியாத பையன் தெரியாம செஞ்சிட்டான் “-என்றார்.

அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுத்தது தவறுதான். ஆனால், எடுத்த நபர் சிறுபிள்ளைதனம் கொண்டவன். அவனை மன்னிப்பது நல்லது என்று கடையில் நின்று சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும் வஸ்தாதை சமாதானபடுத்த முயன்றார்கள். “மூடிக்கிட்டு போங்கையா!”-என்று ஆவேசமாக கத்தினார் வஸ்தாது. பையனின் தந்தை பெரியவருக்கு எப்படி சொல்லி சமாதானம் செய்வது என்றும்,அலைபேசியை வாங்கும் லாவகமும் தெரியாமல் தவித்தார்.மனநலன் பாதித்த பையனோ வஸ்தாதிடமிருந்து அலைபேசியை வாங்குவதற்காக அடம்பிடித்து அழுது கொண்டிருந்தான். “கோத்தா, கொம்மாவ படம்பிடிடா.திருட்டுக் கயித”-என்றெல்லாம் தடித்த வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டிருந்தது வஸ்தாதிடம். சாலையில் செல்பவர்கள் எல்லாம் திரும்பி பார்க்க, கூட்டம் கூடிவிட்டது.கையறு நிலையில் கடை உரிமையாளர் நின்றார். தன் பையனுக்காக வஸ்தாதிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார் பெரியவர். கையிலிருந்த அலைபேசியை தூக்கி பக்கத்து மேசையில் ஓங்கி அடித்தார் வஸ்தாது. அலைபேசியை எடுத்துக் கொண்டு பையனை கையில் பிடித்துக் கொண்டும் சிறிதும் சலனமற்ற முகத்துடன் கடையைவிட்டு வெளியேறினார் பெரியவர்.இதைவிட மோசமான அனுபவங்களையும் அவர் பெற்றிருக்க வேண்டும் என்பதே அவர் முகம் சொன்னது.

சிறிது நேர மௌன இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு அலரல் சப்தம் கேட்டதும் அனைவரும் திரும்பி பார்த்தனர். வஸ்தாதின் மனைவிதான் கத்தினாள். கடை உரிமையாளர் “என்னம்மா!”-என பரிதாபமாக கேட்டார். வஸ்தாதும் அதை எதிர் பார்க்கவில்லை. இப்போது வேறொரு பிரட்சனை. அவர்கள் தங்கள் நெருங்கிய உறவுக்கார பெண்ணின் திருமணத்திற்கு செல்கிறார்கள். அந்த திருமணத்திற்கான நகைகள் இருபது பவுனும், ரொக்கம் ரூபாய் ஐம்பதினாயிரமும் களவு போய்விட்டிருந்தது. அருகிலேயே வைத்திருந்த பையை களேபரத்தில் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள். வஸ்தாது பதட்டத்தில் இருந்தார். “கடையில் கேமரா இல்லையா?”-என்றார் . “இல்லை!”-என்றார் கடை உரிமையாளர். நகையும் பணமும் பறிபோன சோகத்தில் அழுது கொண்டிருந்தாள் வஸ்தாதின் மனைவி. சற்று நேரத்திற்கு முன் சிறுவனை அழ வைத்தது உறுத்தலாக இருந்தது அவளுக்கு. கடவுள் தந்த தண்டனையா இது. அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவர் சொன்னார்,”அந்த பையன் போட்டோ எடுத்திச்சே அதுல பாருங்க யாரு எடுத்ததுனு தெரிஞ்சிரும்…”-என்றார். பெரியவர் பையனை அழைத்துக் கொண்டு அடிக்கடி வரும் வாடிக்கையாளர் என்பதால் கடை உரிமையாளருக்கு அவரை நன்றாக தெரியும். அவர் முகவரியை சொல்லி போய் பார்க்கும்படி விரட்டினார். மான்டித் பிரதான சாலையிலிருந்து பிரியும் குறுக்கு நிழற் சாலையில் இருக்கும் மிகப் பெரிய அடுக்குமாடி குடியிருப்பின் வாட்ச்மேனிடம் எல்லா விபரத்தையும் சொன்னார் வஸ்தாது. வாட்ச்மேன் தன் அலைபேசி மூலம் பெரியவரை தொடர்பு கொண்டு நடந்ததை சொன்னார். சிறிது நேரத்திற்கெல்லாம் தானியங்கி படியின் மூலம் கீழே வந்தார் பெரியவர். வஸ்தாதின் கண்கள் குளமாகியிருந்தது. சமீபத்தில் எடுத்த புகைப்படங்கள், நிகழ்படங்கள் எல்லாம் ஆய்வு செய்து பார்த்ததில் நன்றாக தெரிந்தது களவு நடப்பது. சில மணித் துளிகள் ஓடும் நிகழ்படத்தில் ஒரு இளைஞன் அந்த பையை எடுப்பது துல்லியமாக தெரிந்தது. “நான் உங்களுக்கு உதவலாமா?”-என மென்மையான வார்த்தை பெரியவரிடமிருந்து வந்ததும், வஸ்தாதும்,அவர் மனைவியும்,குழந்தையும் கதியற்றவர்கள் போல் அவர் காரில் ஏறி அமர்ந்தார்கள். வாகனம் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு விரைந்தது.விபரங்களை கேட்டுக் கொண்ட காவல் நிலைய துணை ஆய்வாளர் சிறிதும் தாமதிக்காமல் சீரோகிரைம் பிரிவுக்கு தகவல் தந்து, களவு போன நேரம், இடம் ,நாள் என்று அனைத்து விபரங்களையும் தந்து காத்திருந்த சில மணி நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையிலிருந்து அது சம்பந்தமான நிகழ்படங்கள் ஆய்வாளர் அலைபேசிக்கு வந்தது. இளைஞன் பையை எடுத்துக் கொண்டு கடையின் வெளியே உள்ள இரு சக்கிர வாகனத்தில் புறப்பட்டு ,மான்டித் சாலையில் பயணிப்பது, ருக்மணிலட்சுமிபதி ரவுண்டானாவை கடந்து எதிர்புறம் செல்லும் தெற்கு கூவம் ஆறு சாலையில் பயணிப்பது, சிறிது தூர பயணத்திற்குப்பின் வாகனத்தை சாலையின் இடதுபுறம் நிறுத்திவிட்டு சாலையை கடப்பது வரை பல்வேறு மூன்றாம் கண் வழியாக காட்சிகள் தெளிவாக பதிவாகியிருந்தது.

பெரியவருக்கு வஸ்தாது கும்பிடு போட்டார். ஆய்வாளருடன் வஸ்தாதும் அவரின் மனைவியும் நிகழ்படம் சொல்லும் வழியில் பயணித்து இளைஞன் நிறுத்திவிட்டுச் சென்ற இரு சக்கிர வாகனம் வரை வந்து சாலையை கடந்தார்கள்.

1979-என்று சிமிட்டி கலவையில் பொறிக்கப்பட்ட முகப்பு உள்ள பங்களாவின் முன் வந்தவர்கள் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு இரும்பு கேட்டை திறந்து கொண்டு உள்ளே போனார்கள்.வஸ்தாதின் மனைவியும் குழந்தையும் வெளியே நின்று கொண்டார்கள். மாடியில் உள்ள கல்நார் ஓடு வேய்ந்த அறையின் கதவை தட்டிய போது இளைஞன் திறந்து பார்த்தான்.செகாவ். மூன்று நாட்கள் உணவில்லாத கண்கள் பஞ்சடைத்திருந்தது. அவன் புரிந்து கொண்டான். காவல் ஆய்வாளர் உள்ளே வந்து, “பையை திருடிக்கிட்டு வந்தியா”-என்றார்.

“ஆமா ஐயா!”-

“எங்கே?” – திரும்பி பையை காட்டினான். அதை எடுத்து வஸ்தாதிடம் தந்து, “எல்லாம் சரியா இருக்கானு பாருங்க”-என்றார்.

பை எப்படி எடுக்கப்பட்டு வந்ததோ அப்படியே இருந்தது. அது பெண்கள் தோளில் மாட்டிக் கொள்ளும் பை. எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு, “சரியா இருக்கு சார்”-என்றார் வஸ்தாது.

“தம்பி, பாத்தா நல்ல பையனா தெரியுற ஏன் திருடுன?”-

“பசி மூணு நாளா சாப்படல”

“எந்த ஊரு?”

“தேனி”

 “தேனியில எங்க?”

 “சின்னத் தேவன் பட்டி”

 “அப்பா என்ன பண்றாரு?”

“அப்பா இறந்து பத்து நாள் ஆகுது” 

“என்ன வேல அப்பாக்கு”

“எழுத்தாளர்”

“பேரு?” 

“பாரதி மைந்தன்”-காவல் ஆய்வாளர் முகம் பிரகாசம்மடைந்தது.

“இவ்வளவு நல்ல எழுத்தாளருடைய மகனா இப்படி இருக்க!”

“பத்து ரூவாக்கு சுட்டிதான் பைய எடுத்தேன்.ரூம்ல வந்து பாத்தா பணம் நெறைய இருந்திச்சு.அப்படியே வச்சிட்டு இளநி தாத்தாகிட்ட சொன்னேன்.போலிசுல ஒப்படைச்சிடலாமுனு”-அவன் சொல்லி முடிக்கும்முன் இளநீர் தாத்தாவும் அங்கே வந்துவிட்டார்.தாத்தாவின் முகம் கலவரமடைந்திருந்தது.

“பெரியவரே, இவன தெரியுமா?”-ஆய்வாளர்.

“பத்து நாளா தெரியும் சார்”

“அவன் சொல்றது உண்மையா?”

“ஆமா சார் ஸ்டேஷன் போகனும் வான்னு சொன்னான்”-பெரியவர்.

“என்ன படிச்சிருக்கிற?”-ஆய்வாளர்.

“டிப்ளோமோ மூணாம் வருஷம்,.. நின்னு போச்சு சார்”-கண்களில் கண்ணீர் மல்க சொன்னான் செகாவ்.கள்ளம் கபடம் இல்லாத தூய முகம் அவனுடையது.வஸ்தாதை பார்த்து ஆய்வாளர் கேட்டார், “என்ன செய்யலாம் இந்த பையன?”

“சார் எங்களுக்கு பொருள் கிடைச்சிருச்சு பையன மன்னிச்சு விட்டுடுங்க.கம்ளைண்ட வாபஸ் வாங்கிக்கிறேன்”-வஸ்தாது.

ஆய்வாளர் தன் சட்டை ஜோபிலிருந்து நூறு ரூபாய் எடுத்து அவனிடம் தந்தார். வாங்க மறுத்துவிட்டான்.தேம்பி தேம்பி அழுதான்.

“ஸ்டேஷன் வந்து பொருள வாங்கிக்கிறது மாதிரி போட்டோ எடுத்துட்டு போயிடுங்க சார்”-வஸ்தாதை பார்த்து சொன்னார் ஆய்வாளர். அது போல நடந்தது.

இருபது பவுன் நகையும் ரொக்கம் ஐம்பதாயிரமும் தராததால் மாப்பிள்ளை வீட்டார் எல்லோரும் கோபித்துக் கொண்டு கிளம்பி போய்விட்டார்கள்.கல்யாணம் நின்று போன சோகத்தில் பெண் வீட்டார் இருந்தனர்.வஸ்தாதும் அவர் மனைவியும் பெண்ணின் தந்தையிடம் நகையையும் பணத்தையும் தந்துவிட்டு மன்னிப்பு கேட்டார்கள்.

“எங்ககீரான் அந்த பையன்?”

“முதலி வீட்டு மாடியில கீரான் அண்ணாத்தே” 

“நல்ல பையனா கீரானே”-பெண்ணின் தந்தை.

“அவன இட்டா”-பெண்ணின் தந்தை.

சிறிது நேரத்திற்கெல்லாம் செகாவ் அவர் முன் நிறுத்தப்பட்டான்.

“இன்னா ஊரு தம்பி?”

“தேனி”

“அது எங்கடா கீது”

“சபரிமல போற ரூட்ல கீது அண்ணாத்தே”

“ரொம்ப செப்பளிபான ஊரு இல்ல!”

“நைனா, உங்க அப்பாரு இன்னா பண்றாரு”

“எழுத்தாளர்”

“இன்னா பட்சிக்கீர”

“டிப்ளமோ…!”

“உனக்கு இன்னா வேல தெரியும்?”

“பைக்கு அசெம்பிளி!”

“இன்னா?, தெரியுமா!”-பெண்ணின் தந்தை ஆச்சரியமாக கேட்டார்.

“டேய் ஸ்பேர் பாட்ச எடுத்தாந்து இங்க போடுங்கடா”

-ஒரு அட்டை பெட்டியில் இருந்த இரு சக்கிர வாகன பாகங்களை எல்லாம் எடுத்து வந்து வெளியே வைத்தார்கள். “இத்த நீ அசெம்ளி பண்ணிட்டா எம் பொண்ண உனக்கு கல்லாணம் பண்ணி வக்கறேன். இன்னா சொல்ற?”-போட்டிக்கு தயாரகிவிட்டது போல் தலையாட்டினான் செகாவ்.

“எப்போவ், கல்லாணம் வேணாம்னு சொன்ன கஸ்மாலத்தவா எனக்கு கல்லாணம் பண்ணிவக்க போற?”-கேட்டுக் கொண்டே அருகில் வந்தாள் பெண்.

“அத்த முயிஞ்சி போச்சுமே. இத்த வேற”-என்று மகளைப் பார்த்து சொன்னார் அண்ணாத்த.செகாவும் கல்யாண பொண்ணும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டார்கள்.இணக்கமான பார்வையாக இருந்தது அது. செகாவ், போயலையை நசுக்கி வாயில் அதக்கிக் கொண்டு ஒவ்வொரு பாகங்களாக பொருத்தும் பணியில் தீவிரமாக இருந்தான். சில மணி நேரத்தில் பைக் கட்டமைப்பு முடிந்துவிட்டது.அதை இயக்கி ஒரு வட்டமடித்து நிறுத்தினான்.கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் மணிமண்டபத்திலிருந்து பாங்கொலி கேட்டது.அவனுக்காக வாங்கிய துளசி மாலையை அவன் கழுத்தில் போட்டு, போடுங்கடா வெடிய என்றார் பெண்ணின் தந்தை.

பாடிகாட் முனியீஸ்வரன் கோயிலை நோக்கி கல்யாண ஊர்வலம் புறப்பட்டது!

– ஜூலை 2025, ‘தளம்’ காலாண்டிதழில் பிரசுரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *