கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: தேவி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 18, 2025
பார்வையிட்டோர்: 10,479 
 
 

(2007ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் – 1

வந்து நின்ற அவளை வித்தியாசமாய் பார்த்தார். அந்த பள்ளியின் வாட்ச் மேன். 

அந்த சூழ்நிலைக்கும், இடத்துக்கும் ஒட்டாத பெண். 

கசங்கியிருந்த, சாயம் போன பருத்தி சேலை. எண்ணை வழிய இறுக்கமாய் போடப்பட்டிருந்த பின்னல். வியர்த்துக் கொட்டியதால் நிறத்தை மட்டமாக்கி காட்டிய மாநிறம். முகம் நிறைய பதற்றம். 

யாரிவள்… புதிதாய் தெரிகிறாளே?” 

வாட்ச் மேன் தணிகாசலம். இன்னும் ஐந்தே நிமிடத்தில் பள்ளி விடப்போகும் நேரம் நெருங்குவதால் தன் பணிகளில் கவனமாய் இருந்தாலும் அவள் மீதும் ஒரு கண் பதித்திருந்தார். 

அது… சென்னையில் பிரபலமான பள்ளி. சுத்தம், சுகாதாரம், படித்த திறமையான ஆசிரியர்கள், தரமான கல்வி, மாணவர்களின் திறனறிந்து… அந்தத்துறையில் ஊக்குவித்து உபதிறமையை வளர்ப்பது என்று நல்ல பெயர் வாங்கியிருந்ததால் அங்கு அட்மிஷன் கிடைப்பதே அரிதாய் இருந்தது. 

“பீஸெல்லாம் நடுத்தர வர்க்கம் நினைத்தே பார்க்க முடியாத உயரத்தில் இருந்தது. அதனால் அங்கு படிக்கும் மாணவர்களின் தொண்ணூறு சதவீதம் பேர் காரில் தான் வருவார்கள்”.

கேட்டுக்கு வெளியே, பரந்து விரிந்திருந்த மைதானத்தில் கார்களும், பைக்குகளும் ஆட்டோக்களும் காத்திருந்தன. 

அவள் புடவைத் தலைப்பின் நுனியை அவ்வப்போது தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் விழிகள் உன்னிப்பாய் பிள்ளைகள் வரும் வாசலையேப் பார்த்துக் கொண்டிருந்தன, 

தணிகாசலத்தின் மனதில் சந்தேகம் எழுந்தது. 

பள்ளியை பெருக்கி சுத்தம் செய்யும் பார்வதி காலி பக்கெட்டுடன் அவரைக் கடந்துச் சென்றாள். 

“பார்வதி… 

”என்னண்ணா?” 

“இங்கே வாயேன்!” 

வந்தாள். 

“அதோ… அவளைப் பாரேன்!” 

“யாரு அந்த பச்சைப் புடவை கட்டியிருக்கிறப் பொண்ணையா?” 

“ஆமாம்!” 

“என்ன அவளுக்கு?” 

“அவளை இதுக்கு முன்னே இங்கே பார்த்திருக்கியா?”

“இல்லையே… ஏன் கேக்கிறே?” 

“அவ முகமே சரியில்லே பார்வதி, கண்ல திருட்டுத்தனம் தெரியுது. அடிக்கடி முந்தானையைத் தொட்டு பார்த்துக்கறா. போய் பீட்டரையும், வடிவேலுவையும் வரச் சொல்லேன். இவளை கவனிக்கணும். பெல் அடிச்சதும் என் பார்வையிலிருந்து விலக வாய்ப்பிருக்கு”. 

“பார்த்தா… ஒரு மாதிரியா தான் தெரியுது. இரு. நான் போய். கூட்டியாறேன்”. 


பிற்பகலின் வெயில் மூர்க்கமாகவே இருந்தது. வியர்வை வழிய சைக்கிளில் கொரியர் கொண்டு செல்லும் இளைஞர்கள். பைக்கில் பயணித்த வாலிபர்கள், முதுகில் புத்தக மூட்டையைச் சுமந்த மாணவர்கள் என அந்த நேரத்திற்கே உரிய பரபரப்பு மந்தமான மதிய தூக்கத்தை கடந்து வந்திருந்தது. 

ஹேமா பதற்றத்துடன் வாட்ச்சில் நேரம் பார்த்தான். பதறினாள்.

“பெல் அடித்து விட்டிருப்பார்களே… அபிலாஷ் காத்திருப்பானே” 

“சீக்கிரம் போ மேன். எவ்ளோ லேட் தெரியுமா? பிள்ளை தான் இன்னும் வரலையேன்னு தவிச்சுக் கிட்டிருக்கப் போறான்.” 

அம்பது வயது மூர்த்தி வேகத்தை அதிகப்படுத்தினார்.

”இன்னும்… இன்னும் வேகமாப் போ!” 

எதிர்ப்பட்ட லாரிகளின் இடையே முதலாளியம்மாவை வைத்துக் கொண்டு படுவேகமாக காரோட்ட மனசு இடம் தரவில்லை. 

“இன்னும் பத்து நிமிஷத்துல போய்டலாம்மா. ரொம்ப வேகமாப் போகக் கூடாதுன்னு ஐயா சொல்லியிருக்கார்.” 

“அதை நீ சொல்லாதே… அடிக்கடி லீவுப் போட்டு உயிரை வாங்கறே. என் பிள்ளை காத்துட்டிருக்கப் போகிறாள்.” 

அவள் சொல்லி முடிக்கும் முன் கார் நின்றது. 

“என் நிறுத்தினே…?” 

“தெரியலேம்மா. அதுவா நின்னுடுச்சு. இதோ பார்த்துடறேன்”. இறங்கி பானெட்டை நோக்கிப் போக… “நாசமாப்போச்சு” என்று பொறுமையிழந்தாள். 

மூர்த்தி சங்கடத்துடன் அவள் முன் வந்து நின்றார். 

“என்ன?” 

“பெட்ரோல் காலிம்மா!” 

“யோவ்… அறிவில்லே உனக்கு? கார்ல பெட்ரோல் இருக்கா, இல்லையான்னு சரி பார்க்கிற வேலைக் கூட உன்னாலப் பார்க்க முடியாதா? நான் ஆட்டோ பிடிச்சுப் போய்க்கறேன். நீ வீட்டுக்கு வந்து கணக்கை முடிச்சுக்கிட்டுக் கிளம்பு. நீ சரிப்பட்டு வரமாட்டே” 

“அம்மா… அம்மா” மூர்த்தி கெஞ்ச, கெஞ்ச சாலையோரம் நின்றிருந்த ஆட்டோவில் ஏறிப் பறந்தார். 

அவளையே பரிதாபமாய் பார்த்த டிரைவர் பெருமூச்சு விட்டார்.

மூர்த்தி ஒரு வாரம் லீவுக் கேட்டிருந்தார். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தவருக்கு உடல் வலியால் களைத்துப் போயிருந்தார். 

இன்று இன்னொரு டிரைவர் முத்துவேல் தன் தங்கைக்கு திருமணம் என்று லீவு போட்டு விட, வந்தே ஆகணும்னு வீட்டிற்கு ஆள் அனுப்பி வரச்செய்து விட்டாள். அவர் வரும் போதே பள்ளிக்குச் செல்ல தயார் நிலையில் இருந்தாள் ஹேமா. 

ஏற்கனவே லேட்டு என்று குதித்தவள். உடனே காரில் ஏறி அமரபுறப்பட்டாச்சு. 

இதில் மூர்த்தி தவறு எங்கே? 

“ஐயா வந்தால் சொல்லிக் கொள்ளலாம். அவர் புரிந்துக் கொள்வார்.” 


ஒரே வகை பட்டாம்பூச்சிகள் குபுக்கென ஒட்டு மொத்தமாய் பறந்து வருவதுப் போலிருந்தது. யூனிஃபார்மில் குழந்தைகளைப் பார்க்கும் போது. 

அவள் ஆவலோடுத் தேடினாள். 

“எங்கே… எங்கே அவன்?” 

கண்கள் இப்படியும், அப்படியுமாய் ஆவலாய்த் தேட… சட்டென விழிகள் விரிந்தன. 

“அதோ… அவன் தானே?” 

துருதுரு விழிகளுடன், சுருட்டை கேசத்துடன், அவன் அப்பாவின் சாயலை கொஞ்சமும் விட்டு வைக்காமல் பிரம்மனிடம் கேட்டு வாங்கி வந்திருந்த சிறுவன் தன் அம்மாவைத் தேடினான். 

“அபிலாஷ்” 

கிசுகிசுப்பான குரல் கேட்டுத் திரும்பிய அபிலாஷ் அந்த புதியவளை தலை சாய்த்துப் பார்த்தான். 

“நீங்களா ஆன்ட்டி கூப்பீட்டீங்க!” 

“ம்…”

“என் பேர் உங்களுக்கு எப்படித் தெரியும். யார் நீங்க?” 

“உன்னை எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். இந்தா.. இந்த சாக்லேட்டை சாப்பிடு!” 

“ம்ஹூம் வேணாம்!” 

“சாப்பிடு கண்ணா!” ஊட்டி விட முயல… 

கையால் உதறினான். 

“எங்க மம்மி யார் எதைக் குடுத்தாலும் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க!” 

“ஏய்… யாரு நீ?” 

அவளின் தோளில் பார்வதியின் கரம் வந்து விழுந்தது. 

திடுக்கிட்டாள். 

அத்தியாயம் – 2

அழுதழுது முகம் சிவந்து போயிருந்தாள் ஹேமா, இன்னும் அவளிடம் பதட்டமும், பயமும், கோபமும் அப்படியே இருந்தது. 

அவளை மட்டும் வாட்ச்மேல் கவனிக்காமல் விட்டிருந்தால்.. என் பிள்ளை இந்நேரம்…? ஐயோ…! 

ரைட்டர் சொன்ன இடத்தில் தணிகாசலமும், பார்வதியும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தனர். 

“எப்ப கூப்பிட்டாலும் விசாரணைக்கு வரணும்!”

“கண்டிப்பாங்க… அவளை விட்றாதீங்க!” 

அபிலாஷை தன்னோடு சேர்த்து இறுக்கி அனைத்திருந்த ஹேமாவிடம் வந்தனர். 

“கம்ப்ளைண்ட் எழுதிக் கொடுத்துட்டோம்மா. நாங்க வர்றோம்!”

“போங்க…ஆனா உங்களையும் நாள் சும்மா விடப்போறதில்லே. என் ஹஸ்பண்ட் வரட்டும். என்னய்யா ஸ்கூல் நடத்திறீங்க? பிள்ளைப் பிடிக்கறவல்லாம் ஈஸியா உள்ளே வர்ற அளவுக்கு இருக்கு உங்க லட்சணம். விடமாட்டேன்… கேஸ் போட்டு என்னப் பண்றேன் பார்!” வெடித்தாள். 

அபிலாஷ் அம்மாவையே மிரட்சியுடன் பார்த்தாள். தணிகாசலம் பார்வதியிடம் கண்களால், ‘போய் விடலாம்’ என்று சைகை காட்ட.. 

நகர்ந்தனர். 

“என்ன சார்… ஏதாவது சொள்ளாளா?” 

“இல்லே மேடம்… எவ்வளவு அடிச்சும் வாயேத் திறக்க மாட்டேங்கறா. அட்லீஸ்ட் பேரையாவது சொல்லலாமில்லே?” 

“இவளை விட்றாதீங்க… பார்க்க பார்க்க ஆத்திரமா இருக்கு. கடத்துறதுக்கு இவளுக்கு என் பிள்ளை தான் கிடைச்சானா? நினைச்சுப் பார்க்கவே நடுங்குது சார்!” 

புடவை கிழிந்திருக்கு, கன்னத்தில் ரத்தம் கட்டி கறுப்பாய் உறைத்திருக்க, உதடு கிழிந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது… அவளுக்கு. 

லாக்கப்பில் இருந்தவள் மெல்லத் திரும்பி பெஞ்சில் அமர்ந்திருந்த ஹேமாவை கசப்பாய் பார்த்தாள். 

நல்ல சிவந்த நிறம், பார்லரின் உதவியோடு பட்டைத் தீட்டப்பட்ட அழகு, அவ்வளவு அழுதும் லிப்ஸ்டிக் அழியவில்லை. ளிப்பில் அடைப் பட்டிருந்த கவரிங் செய்யப்பட்ட முடி, கையில்லா கருநீல நிறச் சுடிதார் அவள் கலரை மேம்படுத்திக் காட்டியது. முப்பது வயது என்று மாரியம்மன் கோவிலில் சத்தியம் பண்ணினால் கூட நம்ப முடியாத இளமை. 

கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள். 

 “சார் எப்ப வருவார் மேடம்? அவர் கிட்டே பேசிட்டு ஸ்ட்ராங்கா எஃப்ஐஆர் போட்றலாம்”. 

“பெங்களூர்ல இருக்கார். அவருக்கு தான் ட்ரை பண்றேன்… லைனே கிடைக்க மாட்டேங்குது” 

“ரொம்பு நேரம் நீங்க இங்கே இருக்க வேணாம். புறப்படுங்க மேடம்… சார் வந்ததும் அனுப்பி வையுங்க!” 

“தாங்க்யூ இன்ஸ்பெக்டர்… எப்படியாவது அவகிட்டேர்ந்து உண்மையை வரவழைச்சிடுங்க!” 

“அது என் பொறுப்பு” 

அவள்… அபிலாஷையே பார்த்தாள், 

எதேச்சையாக அவளைப் பார்த்த அபிலாஷ் அம்மாவை இறுகக்கட்டிக் கொண்டான். 

“மம்மி… போய்டலாம் மம்மி… அந்த பூச்சிக்காரி என்னையேப் பார்க்கிறா!” 

அடுத்த கணவே இன்ஸ்பெக்டர் அவள் கன்னத்தில் பளாரென அறைந்தார். விட்ட இடத்திலிருந்து விசாரணையைத் தொடங்கினார். 


ஹேமா குழந்தையை வாரி அணைத்த படி வெளியே வந்தாள்.

பிரிட்ஜில் வைத்த ஆப்பிளாய் சில்லென்றிருந்தது பெங்களூர்.

நகரின் பிரதான ஸ்டார் ஹோட்டலின் கான்ஃபரன்ஸ் ஹாலில் பிஸினஸ் மீட்டிங்கில் இருந்தான் ஹரி. மிக முக்கியமான மீட்டிங் என்பதால் எந்த போன்காலும் தன்னை இடையூறு செய்து விடக்கூடாது என்று ஸ்ட்ரிக்ட்டாக ஆர்டர் போட்டிருந்தான் தன் பர்சனல் அஸிஸ்டன்ட் தாரிகாவிடம். அவனுடைய பர்சனல் செல்போன் உட்பட மூன்று செல்போன்களையும் அவளிடமே கொடுத்து, ‘போன் வந்தால் நீயே சொல்லிவிடு… எக்காரணத்தைக் கொண்டும் என்னிடம் தராதே’ என்று அறைக்கு வெளியில் நிறுத்தியிருந்தான். 

ஆங்கில நாவலில் மூழ்கியிருந்த தாரிகா, எம்.டி.யின் பர்சனல் செல்போன் அலறி கவனத்தை திசைத் திருப்ப வைத்தது. 

‘பர்சனல் லைன்… பேசலாமா, வேணாமா?’ தயங்கினாள்.

வெகு நேரமாய் ரீங்கரித்துக் கொண்டேயிருக்க, எடுத்துப் பேசினாள்.

“ஹலோ” 

“ஹலோ… யார் பேசறது?” 

குரலின் அதிகாரம் வைத்தே புரிந்துக் கொள்ள முடிந்தது மேடம் என்று. 

“மேடம்… நான் பி.ஏ. தாரிகா பேசறேன்!?” 

“நீ ஏன் இந்த போனை அட்டெண்ட் பண்றே?” 

சொன்னாள். 

“சரி… உங்க எம்.டி. கிட்டேக் கொடு!” 

“ஸாரி மேடம்… எந்த போன்கால் வந்தாலும் தரக்கூடாதுன்னு சார் சொல்லிட்டார்”. 

“எவ்வளவு தைரியம் உனக்கு? மத்தவங்களும் நானும் ஒண்ணா? குடு முதல்ல…” 

“ஸாரி மேடம்.. மீட்டிங் முடிஞ்சதும் நானே பேசச் சொல்றேன். என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா நானே சொல்லிடறேன்” 

“திமிர் தானே உனக்கு? வச்சுக்கறேன் உனக்கு…” பட்டென எதிர்முனை துண்டிக்கப்பட உதடைப் பிதுக்கி தோள்கனைக் குலுக்கிக்கொண்டாள் தாரிகா. 

சரியாய் ஒரு மணி நேரம் கழிந்து மீட்டிங் முடிய, டையை சரிபண்ணிக் கொண்டே வந்த ஹரி தமிழ்ப்பட நாயகனைப் போல் கம்பீரமாய், வசீகரமாய் இருந்தான். 

“எனி கால்ஸ் பார் மீ?”

“எஸ் சார்…” என்று தொழில் சம்பந்தப்பட்ட போன் அழைப்புகளைச் சொன்னவள் கடைசியாக, “உங்க மிஸஸும் போன் பண்ணினாங்க சார். அர்ஜன்ட் மேட்டராம். நான் உங்ககிட்டே போன் தரலேன்னு கோபப்பட்டாங்க சார்” 

“நியாயமான கோபம் தானே? எப்படி சமாளிக்கப் போறேனோ தெரியலையே…” பொய்யான பதைப்புடன் போனில் நம்பரைப் போட்டபடி நகர்ந்து ஜன்னலோரமாய் சென்றவரை சிரிப்புடன் பார்த்து விட்டு நாசூக்காய் நகர்ந்தாள். 

“ஹலோ…” 

“….?”

“கோபப்படாதே ஹேமா… முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன்!” 

“….”

“அவங்க மேல கோபப்படாதே! நான் தான் எந்த போன்காலும் தரக் கூடாதுன்னு சொல்லியிருந்தேன்” 

“….”

”சின்னக்குழந்தை மாதிரி திரும்பத் திரும்ப அதையே சொல்லிட்டிருக்காதே… என்ன விஷயம் சொல்லு!” 

“….”

”எனக்கு இங்கே இன்னும் ஒரு வாரத்துக்கு வேலை இருக்கு. உடனே சென்னைக்கு வாங்கன்னு கூப்பிட்டா எப்படி?”. 

“….”

“அபிலாஷ்க்கா… என்ன ஆச்சு?” துணுக்குற்றான். 

“….”

“யாரு? எப்ப?”

“அபிலாஷ் ஸேப்ட்டியா இருக்கானில்லையா? தேங்க் காட் நான் வரவரைக்கும் அவனை ஸ்கூலுக்கு அனுப்பாதே!”

“….” 

“ஒருஅக்ரிமெண்ட் கையெழுத்தாகணும் ஹேமா. உடனே வருவது சாத்தியமில்லை. எப்படியாவது ரெண்டு நாள்ல வரப்பார்க்கிறேன். அந்த போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நான் இப்ப போன் பண்ணிடறேன். பயப்படாதே ஹேமா… எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். சரியா? ஓகே!” 

போனை கட் பண்ணியவன் மனசு பதறியது. 

‘என் பிள்ளையை கடத்த முயன்றார்களா? அதுவும் பெண்ணா? யாரவள், எதற்காக?’ 

உடனே ஏரியா இன்ஸ்பெக்டருக்கு போன் போட்டான். 

அத்தியாயம் – 3

இரண்டு நாட்கள் கழித்து பெங்களூரிலிருந்து திரும்பி வந்த கணவனை அணைத்துக் கொண்டு அழுதாள் ஹேமா. 

“என்ன ஹேமா?” 

“பயமாயிருக்குங்க… என் பிள்ளைய வெளியே அனுப்பவே பயமாயிருக்குங்க. கொஞ்சம் ஏமாத்திருந்தாலும் என் பிள்ளைய நான் மிஸ் பண்ணியிருப்பேன். அவளோட… அதாங்க நம்ம பிள்ளைய கடத்தினாளே.. அவளோட முகம் என் கண்ணிலேயே நிக்குதுங்க? முகத்துல ஒரு ராட்சஷத்தனம். எப்படிப் பார்க்கிறாத் தெரியுமா? அவளை சும்மா விடக் கூடாது. வெளியே வர முடியாத அளவுக்கு பெரிய கேஸாப் போட்டு உள்ளே தள்ளச் சொல்லுங்க.” 

“இன்ஸ்பெக்டர் கிட்டேயும், ஏசிக்கிட்டேயும் போன்ல பேசிட்டேன். அவளை நல்லா கவனிக்கச் சொல்லியிருக்கேன். கவலைப்படாதே…அபிலாஷ் எங்கே?” 

“உள்ளே தான் இருக்கான்!” 

ஹரி அறைக்குள் சென்றான். வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்த அபிலாஷ் காலரவம் கேட்டு திரும்பியவன். “டாடி” என்று ஓடி வந்து அவன் கால்களை கட்டிப்பிடித்துக் கொண்டான். 

தூக்கி அணைத்துக் கொண்டன் முகமெங்கும் முத்தமிட்டான். 

“அபிக்கண்ணா, என் செல்லக்குட்டி” 

“டாடி என்னை விட்டு எங்கேயும் போய்டாதீங்க டாடி!”

“ஏம்ப்பா?” 

“பயமாயிருக்கு டாடி! என்னை யாராவது துக்கிட்டுப் போயிடுவாங்க டாடி!” 

“அப்படியெல்லாம் எதுவும் நடக்காது கண்ணா டாடி இருக்கேன்ல?” 

“ஸ்கூலுக்கு ஒரு பூச்சிக்காரி வந்து எனக்கு சாக்லேட் குடுத்து தூக்கிட்டு போகப் பார்த்தா டாடி!” 

“அதைப்பற்றி நினைக்காதே அபி! டாடி பார்த்துக்கறேன்… நீ போய் கேம்ஸ் விளையாடு!” 

“பார்த்தீங்களா… அபி ரொம்ப பயந்துப் போயிருக்கிறான். அவ எதுக்காக நம்மக் குழந்தைய கடத்த திட்டம் போட்டான்னு தெரியவே. அபின்னு பேர் சொல்லி கூப்பிட்டிருக்கா. அப்ப… நம்மக் குழந்தைய ரொம்ப நாளா வாட்ச் பண்ணி, டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணிட்டு தான் காரியத்துல இறங்கியிருக்கா. 

அவதனியாள் கிடையாது. பெரிய கூட்டமே பின்னாடி இருக்கணும். வாயத் திறந்து இதுவரைக்கும் ஒரு வார்த்தைக்கூட பேசலே…!” 

“அபியைப் பார்த்துக்க ஹேமா! முதல்ல நீ தைரியமாயிரு. நான் இதை சும்மா விடப்போறதில்லே. குளிச்சிட்டு ஸ்டேஷன் வரை போய்ட்டு வர்றேன். டிபன் எடுத்து வை!” குளியலறை நோக்கி நடந்தான். 

”நானும் வர்றேங்க…” 

“வேணாம் ஹேமா. அப்புறம் கூடவே அபியையும் கூட்டிட்டுப் போகணும். அந்த லேடி, அந்த சூழல், அவனுக்கு பயத்தை இன்னும் அதிகப்படுத்தும்” 

“நீங்க சொல்றதும் சரி தான். ஆனா, அவளை என் கையால அடிக்கணும் போலிருக்குங்க… ஆத்திரமா வருது!” 

“என்ன இப்ப… உனக்கு பதிலா நான் அடிச்சிடறேன்.” குளித்து முடித்து சாப்பிட்டு விட்டுக் கிளம்பினான். 

யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் வாசலில் இவன் கார் வந்து நின்றதைப் பார்த்ததும், “அப்புறம் பேசறேன், வச்சிடு” என்று கட் பண்ணி விட்டு எழுந்து வந்தார். 

“வாங்க மிஸ்டர் ஹரி… பெங்களூர்ல இருந்து எப்ப வந்தீங்க?”

“இன்னைக்கு தான். வந்ததும் கிளம்பி வந்துட்டேன்.”

“பிஸினஸ் எல்லாம் எப்படியிருக்கு சார்!” 

“புதுசா ஒரு பிராஞ்ச் ஓபன் பண்றோம். அதுக்கான வேலையிலே தான் மும்முரமா இருக்கோம். அந்த சமயத்திலே தான் இப்படியொரு பிரச்னை. அதான் கிளம்பி வந்துட்டேன். அந்த லேடியப்பத்தி விஷயம் தெரிஞ்சதா?” 

”இல்லே சார். நீங்க சொன்ன மாதிரியே பலமா கவனிச்சேன். அப்பக்கூட வாயேத் திறக்க மாட்டேங்கறா.” 

“ஐ ஸீ!”

“ஸ்ட்ராங்கா ஒரு கேஸ் போட்ரலாம் சார். பிராஸ்ட்டிடியூஷன் போடலாம்னு நினைச்சேன். அதுக்கூட ஈஸியா வெளியே வந்துடலாம். அதனால் ப்ரவுன் சுகர் கடத்தினதா எஃப் ஐ.ஆர் போட்ரலாம் சார். இருபது வருஷம் உள்ளேத் தள்ளிடலாம்”. 

“செய்யலாம் சார்… சும்மாவிடக்கூடாது. எங்கே அவ… நான் பார்க்கலாமா?”  

“ஷ்யூர்… யோவ் தங்கவேலு… லாக்கப்பை திற…” 

தங்கவேலு என்கிற அந்த போலீஸ்காரருக்கு அதிசயமாய் தொப்பையே இல்லாமல் போலீஸ்காரராய் இருக்க வேண்டிய லட்சணமான உடற்பயிற்சி தேகத்துடன் கம்பீரமாய் இருந்தார். 

லாக்கப் பூட்டைத் திறந்ததும் உள்ளே நுழைய போன ஹரியைத் தடுத்தார்.  

“அவளை வெளியே கூப்பிடலாம் சார்!”

“பரவாயில்லை இன்ஸ்பெக்டர்… நான் அவகிட்டே பேசிப் பார்க்கிறேன்.” 

“அவகிட்டேயா… வாயை தைச்சி வச்சிருக்கா!”

“முயற்சிப் பண்ணுவோமே…!” 

“சரி” என்றார் இன்ஸ்பெக்டர். 

லாக்கப்பில் நுழைந்த ஹரி கெட்ட வாடைக்கு மூக்கை சுருக்கினான்.

பராமரிப்பில்லாத சிதிலமடைந்த சிமெண்ட் தரை சுவற்றோரம் குவளையில் தண்ணீர், அந்த அறைக்குள்ளேயே ஒரு ஓரமாய் கழிப்பிடம். அதற்கு மூன்றடி தள்ளி அவள்! 

கிழிந்த துணியாய் முதுகுக்காட்டிப் படுத்திருந்தாள். துணி விலகிய இடைவெளியில் பட்டைப் பட்டையாய் சிவந்திருந்தது. தரையில் ரத்தத் துளிகள் காய்ந்து… அருவறுப்பை தந்தது. 

“தங்கவேலு அவளை எழுப்புய்யா?” 

தங்கவேலு பூட்ஸ் காலால் அவளை எத்தினார். 

“ஏய்..ஏய் எந்திரி!” 

“…..”

“எந்திரிங்கறேன்லா நீ கடத்த நினைச்சியே… அந்தப் பையனோட அப்பா வந்திருக்கார். எத்தனை லட்சம் வேணுமோ கேளு….” என்றார் கிண்டலாய், 

அவளிடம் முனகலுடன் கூடிய அசைவு! 

இடது கை மணிக்கட்டு புஸ்ஸென்று வீங்கிப் போயிருந்தது.

வாசலில் சலசலப்பு கேட்டது. நான்கு போலீஸ்காரர்கள் மூன்று இளைஞர்களை அடித்து துவைத்தபடி இழுத்துக் கொண்டு வந்தனர். 

“தங்கவேலு… இங்கே வாய்யா!” என்ற இன்ஸ்பெக்டரின் குரலுக்கு வெளியேறினார். 

மெல்ல எழுந்தமர்ந்து திரும்பியவளை நெற்றி சுருங்கப் பார்த்தான். 

முகத்தில் ஏசுப்பட்டகாயம். வலதுப்பக்க புருவம் எட்டணாசைஸில் வீங்கிப் போயிருக்க.. கண்களை உயர்த்தி அவனைப் பார்த்தாள். 

அவனுக்காகவே எதிர்பார்த்து காத்திருந்தப் பார்வை. 

ஆனாள், அவனைத்தான் புரட்டிப் போட்டது அவளின் முகம்.

“இ…வ…ளா?” அதிர்ச்சி என்றால், அப்படியொரு அதிர்ச்சி. அவளிடம் எந்த சலனமும் இல்லை.

“நீ.. நீ… எப்படி இங்கே?” 

“நா…. நான் யாருன்னு யார்கிட்டேயும் சொல்லலே…. சொல்லவும் மாட்டேன்!” என்றாள் நைந்த சன்னமானக் குரலில். 

அவளை அந்தக்கோலத்தில் பார்க்க பார்க்க பதறியது வேதனை குரல் வளையை இறுக்கியது. 

அங்கே அதற்கு மேல் நிற்க திராணியற்று இன்ஸ்பெக்டரிடம் வந்தான். 

“என்ன சார்… ஏதாவது சொன்னாளா?” 

“கேஸ் எதுவும் போட வேண்டாம். கம்ப்ளைண்டை வாபஸ் வாங்கிக்கறேன்… அவளை விட்ருங்க” என்றான் ஹரி. 

“என்ன சொல்றீங்க?” என்றார் நம்ப முடியாமல். 

“அவளை விட்ருங்கன்னு சொல்றேன்” என்றான் அழுத்தமாய்.

– தொடரும்…

– என் பிரியசகி (நாவல்), முதற் பதிப்பு: ஜனவரி 2007, தேவியின் கண்மணி, சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *