எது இயற்கை?




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓவியக்காரர் இருவரிடையே ஒரு போட்டி நிகழ்ந்தது. யார் ஓவியம் மிக்க இயற்கை நலம் வாய்ந்ததென்று பார்க்க யாவரும் விரும்பி வந்து கூடியிருந்தனர்.
முதல் ஓவியக்காரன் இரண்டு செந்தாமரை மலர்கள் வரைந்திருந்தான். அவற்றை மெய்யா கவே மலர்கள் என்று எண்ணித் தேனீக்கள் அவற் றின்மீது வந்து உட்கார்ந்தன. எல்லாரும் அவன் ஓவியத்தைப் புகழ்ந்தனர்.
இரண்டாம் ஓவியக்காரன் ஒரு திரையின் ஓவி யம் வரைந்து அங்கே கொண்டுவந்து வைத்தி ருந்தான். அஃது அவன் எழுதிய படத்தை மறைத்த திரைதான் என்று எண்ணிய நடுவர், அவனைப் பார்த்து, “ஓவிய நண்பரே; திரையை அகற்றும்: நான் ஓவியத்தைப் பார்க்க வேண்டும்,” என்றார்.
இரண்டாம் ஓவியக்காரன், “அது திரையன்று ஐயா, திரையின் ஓவியமே !” என்றான். அனை வரும் முன்னிலும் வியப்படைந்தனர்.
குறையறிவு உடைய தேனீயை மயக்கிய முதல் ஓவியத்தைவிட, நிறையறிவு உடைய மக்களாகிய தம்மையே மயக்கிய இரண்டாம் ஓவியமே இயற்கை நலன் மிகுதியுடையது என்று நடுவர் முடிவு கட்டினார்.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.