எதுவும் பிரிக்க முடியாது






ரெபேக்கா தனது படுக்கையறை சாளரம் வழியே, பனியில் விளையாடும் குழந்தைகளைப் பொறாமையுடன் பார்த்தாள். அவளுக்குள்அவ்வளவு ஆசை, அவர்களுடன் சேர்ந்து விளையாட. அவளது தந்தை அவளிடம் காலையில் சொன்னது நினைவில் புரண்டது.
‘ரெபேக்கா…இன்று நீ அவர்களோடு பனியில் விளையாட முடியாது’
‘ஏன் கூடாது, அப்பா?’ ரெபேக்கா கேட்டாள்.
ஒவ்வொரு நாளும், அண்மையில் உள்ள வீட்டுக் குழந்தைகள், ரெபேக்காவின் வீட்டுக்குப் பின்புறம் அமைந்துள்ள பூங்காவில் கூடிக்களிப்பது வழக்கம்.
‘வேண்டாம் ரெபேக்கா…இன்றைக்கு உனக்கு நல்லதில்லை ‘
அவள் தந்தை பதில் சொன்னார்.
உடனே, ரெபேக்கா, தந்தை சொன்னதைஏற்றுக் கொண்டு, அவர் கன்னத்தில் முத்தமிட்ட பின், உள்ளே இருந்துபடிப்பதாக உறுதியளித்தாள்.
ஆனால், அவளுக்குள் இன்னொரு எண்ணமும் இருந்தது.
வெளியே எவ்வளவு அழகாக இருக்கிறது!…பகலவனின் பேரொளி!
அவள் நினைத்துப் பார்த்தாள். ஏனோ, அவள் தந்தை அவளை விளையாட அனுமதிக்கவில்லை.
வெளியே நடக்கிற கேளிக்கைகள் எல்லாம்…. நான் காண முடியாதா?
அவள் வீட்டு சன்னலுக்கு அப்பால் வெடித்துச் சிதறும் பனித்திரளின் அற்புதமான சாட்சி.
இனிமேலும் ரெபேக்காவால் பொறுத்துக்கொள்ள முடியாது.
மற்றவர்களோடு சேர்ந்து ரசிப்பதைத் தவிர வேறு வழியில்லை. புத்தகத்தை மேசை மீது விசிறிவிட்டு, மெல்ல நழுவினாள்.
‘இது நல்ல நேரம்தான்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
ஆனாலும், அவருக்குள் ஓர் இனம்புரியாத வலி.
அவள் அப்பா பார்த்து விடுவாரே வென்று சுற்றும் முற்றும் கவனித்துக் கொண்டே இருந்தாள்.
சில மணிநேரங்களுக்கு பின், ரெபேக்கா எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற்றாள். அப்பா வருவதற்குள் தன் அறைக்குள் பாதுகாப்பாக நுழைந்துவிட விரும்பினாள்.
விரைந்து தன அறைக்குள் நுழைந்துவிடும் எண்ணத்தில், படிக்கட்டுமேல் கிடந்த சரக்கையுறை மீது இடறிவிழ, கால் நழுவி பலபடிக்கட்டுகளைக் கடந்து விழுந்து விட்டாள். அப்போது, அப்பாவுக்கு பிடித்தமான ஒரு படத்தின் மேல் விழப்போக…அது சேதமடைந்து,படத்தின் மீது வெட்டு போன்ற பிளவு ஏற்பட்டு விட்டது.
பொதுவாக இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும் போது ரெபேக்கா உடனே தன் தந்தையிடம் செல்வது வழக்கம். அவர் உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று, உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்வார். ஆனால்,இப்போது அவள் எப்படி அவரை எதிர்கொள்ள முடியும்? தந்தை சொற்படி கேளாமல், இப்போது அவருக்கு விருப்பமான படத்தையும் சேதப்படுத்திவிட்டாள். அவள் ‘ஓ ‘ வென்று கதறாமல் இருக்க, உதடுகளை கடித்தவாறு, பாழடைந்த படத்துடன் தன் அறைக்கு சென்றாள்.
மீதி நேரத்தில் அவள் வேதனையில் கிடந்தாள். விழுந்ததால் ஏற்பட்ட காயத்தால், அவள் உடல் வலித்தது. அவள் இதயமோ…ஓ ! அதைவிட வலித்தது. இனிமேல், அவள் தந்தை தன்னை நேசிக்கமாட்டார் என்று உறுதியாக நம்பினாள். அவள் கடந்ததை நினைத்து குழம்பினாள். அவள் வெகு தொலைவு சென்று விட்டாள் போலும்! அவர் அவளிடம் பேசவில்லை என்றால், அவர் எப்படி அவளிடம் அன்பு கூற முடியும்?
அழுகையை அடக்க முடியாமல், தலையணையில் கவிழ்ந்து கிடந்தாள்.
எப்பொழுதும், அவள் தந்தையுடன் நெருக்கமாக இருப்பாள். ஒன்றாக விளையாடுவார்கள்; படிப்பார்கள். சிரித்தாலும், அழுதாலும் இணைந்தே இருப்பார்கள். அந்த அற்புதமான காலங்கள் எல்லாம் முடிந்துவிட்டதாகவே உணர்ந்தாள்.
அவளுடைய செவிலித்தாய் அவளைப் பார்க்க வரவில்லை என்றால்,அவள் எவ்வளவு நேரம் படுத்தே கிடப்பாள் என்று யாருக்குத் தெரியும்? இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து நல்லாலோசனை வழங்குவதற்குரிய வழியை அந்த செவிலித்தாய் அறிந்து வைத்திருந்தாள்.
அதற்கு இன்றிரவு பொருத்தமானதுதான்.
‘அன்பே, ரெபேக்கா! என்று விளித்தாள் மென் குரலில்….நீ தவறு செய்துவிட்டாய்…அதற்காக இங்கேயே கிடந்து உன் தவறை மேலும் நீட்டிக்கக் கூடாது. உடைந்துபோன படத்தை எடுத்துக் கொண்டு, உன் தந்தையிடம் போய், நடந்தவற்றை ஒன்றுவிடாமல் சொல்’
‘ஓ…அது என்னால் முடியாது…அவர் என் மேல் கொண்டுள்ள அன்புக்கு நான் தகுதியானவன் இல்லை! ‘ – ரெபேக்கா விம்மினாள்.
அவருடைய செவிலித்தாய் பெருமூச்சு விட்டாள்.
‘நேற்று நீ அதற்கு தகுதியானவள் இல்லை தான். ஆனால், இன்று அப்படியில்லையே. உன் தந்தை உன்னை நேசிக்கிறார், நீ அவருடைய மகள் என்பதால். நீ செய்தவைகளுக்கோ செய்யாதவைகளுக்காக மட்டும் அல்ல. நீ சின்ன வயசா இருந்த போதிலிருந்தே, அவர் ‘உன்னை நேசிக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறாரே…இந்த வார்த்தையில் உனக்கு சந்தேகம் இருக்கா? அவர் உன்னைத் சார்ந்திருக்கிறார் என்று உண்மையிலேயே நினைக்கிறாயா? அவர் வார்த்தையில் ஐயமா?’ இதுவரை ரெபேக்கா இந்தக் கோணத்தில் யோசிக்கவில்லை. ஒருவேளை, அவள் தன் தந்தையை அணுக வேண்டி செல்ல வேண்டும். அப்படி அவள் செய்யவில்லை யென்றால், அவள் மனதுக்கு நிம்மதி கிடைக்காது.
ஆனால், சிறிது அச்ச உணர்வுடன், ரெபேக்கா தன்னறையிலிருந்து வரவேற்பு அறையின் நுழைவு பகுதியில் பம்மினாள். வழக்கம் போல அப்பா தனக்குப் பிடித்தமான நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவள் உள்ளே நுழைந்ததும் அன்பொழுக பார்த்தார். புன்னகை பரவிய அவர் முகம் ஒளிர்ந்தது.
‘ஆகா, வந்துவிட்டாய்….உனக்காகத்தான் காத்துக்கொண்டிருக்கிறேன்…இங்கே வா…என் மடியில் உட்காரு’ என்றவாறுஅவர் தன் கரங்களை விரித்தார்.
அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
‘அப்பா! என்னைப் புரிந்து கொள்ளவில்லையா ? இனியும் உங்களால் என் மீது அன்பு பாராட்ட முடியாது…நான் மிகவும் கெட்டவள்! ‘ என்று உடைந்துபோன படத்தை, தந்தை பார்க்கும்படி உயர்த்திப்பிடித்தாள்.
‘எனக்குத் தெரியும் ரெபேக்கா…நீ என்ன நினைக்கிறாயோ, அதைவிட எனக்குத் தெரியும். நீ வெளியே போனதையும் பார்த்தேன்…நீ அந்தப் படத்தை உடைத்ததும் பார்த்தேன். எல்லாம் எனக்குத் தெரியும்…’
‘அப்படியா? திடுக்கிட்ட ரெபேக்கா,’அப்படின்னா, நீங்க வேற வேலையில இருக்கலியா?’ என்றாள்.
அவர் தலையாட்டினார்.
‘உன்னோடு கொஞ்ச நேரம் செலவழிக்கத்தான் விடுமுறை எடுத்தேன்.அதனால்தான் வெளியே விளையாட போக வேண்டாம்னு சொன்னேன். நீ விழுந்ததைப் பார்த்ததும், உன் காயத்துக்கு உடனே கட்டுப்போட்டு,உதவி செய்ய காத்திருந்தேன். இப்பொழுதாவது வருவாயா?’
அவள் தன் செவிகளை நம்பவில்லை . அவள் தந்தை பிற்பகல் என்னோடு இருக்கவே விரும்பியிருக்கிறார். அந்த சந்தர்ப்பத்தை அவள்இழந்துவிட்டாள். என்ன முட்டாள்தனம்! அவர் யாவற்றையும் தெரிந்தவராயிருக்கிறார்…அப்படியிருந்தும் அவளை நேசித்தார்.
அப்படியிருக்குமா ? ‘தந்தையே! இப்போது நீங்கள் என்னை எப்படி நேசிக்க முடியும்?’
ரெபேக்காவால் எளிதில் மறக்க முடியாத ஒரு புன்முறுவல், அவள் தந்தையிடமிருந்து வெளிப்பட்டது.
‘அன்பே! ரெபேக்கா…நீ பிறப்பதற்கு முன்னே உன்னை நேசித்தேன். நீ என் மகள். உன்னை என்றும் நேசிப்பேன். சில சமயங்களில், நீ தவிர்த்திருக்க கூடிய செயல்களினால் சில விளைவுகள் ஏற்பட்டாலும், நான் உன்மேல் வைத்திருக்கும் அன்பினால் நம்மை வேறு எதுவும் பிரிக்க முடியாது…இப்பொழுதாவது வருவாயா, உன் காயங்களுக்கு மருந்து போடுவதற்கு?’
– ஆங்கிலம்: Katherin (Loop) Hannah, தமிழில்: சந்திரா மனோகரன்
![]() |
சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க... |