எதிர்பாராதது
(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று சனிக்கிழமை..! பிற்பகல் மணி ஒன்றரை ஆகியிருக்கும். அலுவலகத்திலிருந்து திரும்பிய அன்பழகன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தான். சனிக்கிழமைகளில் காலை முதல் ஏறத்தாழ இரவு பத்துமணி வரை பேருந்துகளில் பெரும்பாலும் இருக்கைகள் முழுமையும் நிறைந்து இருக்கும். சிற்சில சமயங்களில் நெரிசலாக இருப்பதும் உண்டு.
அதிகாலை நேரம் முழுமையும் அலுவலகங்களுக்குச் செல்லும் ஒரு கூட்டம். எதிர்வரும் ஒரு வாரத்துக்குரிய காய்கறிகள் உட்பட சனி, ஞாயிறு “விசேசங்களுக்கும்” சேர்த்து வாங்கிவரச் சந்தைக்குப் படையெடுக்கும் குடும்பத் தலைவியர்களின் “குழுக்கள்” என்னும் ஒரு கூட்டம். மற்றும் வார நாட்களைப் போல் பள்ளிக்குப் புறப்பாடச் செயல்களின் நிமித்தம் அணிவகுத்துச் செல்லும் மாணவர் படையெடுப்பு என்னும் ஒரு கூட்டம். மாலைநேரத்தில் தேசிய நூலகத்திற்குப் புத்தகங்கள் பெறவும் திருப்பி ஒப்படைக்கவும் ஆன நிலையில் அமைந்திடும் ஒரு கூட்டம். இந்தச் “சாக்கில்” இன்ப எதிர்வுகளோடு பயணம் செய்துகொண்டிருக்கும் “இளவட்டங்கள்” என்னும் ஒரு கூட்டம். இவ்வாறு நகர்ப்புற வாரியங்களின் பேருந்துகளில் கூட்டம் வழிந்து நிரம்பும்.
அன்பழகன் வந்து கொண்டிருந்த பேருந்து, ஒரு நிறுத்தத்தில் நின்று “ஏற்றுமதி இறக்குமதி” செய்தது. அப்போது ஓர் இளம்பெண் அந்தப் பேருந்தில் ஏறி, எங்கும் இடம் இல்லாக் காரணத்தால் அன்பழகன் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்த அமர் இடத்தை முந்திக் கொண்டு பிடித்து அமர்ந்து கொண்டாள். பேரூந்தில் நெரிசல் இல்லை. ஆயினும் ஓரிருவர் நின்று கொண்டிருந்தனர். பயணிகளில் ஒரு சிலர் தாங்கள் சுமந்து வந்து பொருட்களின் பெரும் பெரும் பைகளுக்கும் சேர்த்துக் கட்டணம் செலுத்தியிருப்பது போலத் தங்கள் இருக்கையின் அருகில் வைத்துக் கொண்டு அரவணைத்த நிலையில் அமர்ந்திருந்தனர். யார் கேட்பது; யாரைக் கேட்பது…?
பேருந்துப் பயணத்தில் பெரும்பாலும் பெண்கள் ஓர் ஆடவர் அமர்ந்திருக்கும் மற்றோர் அமர் இடம் காலியாக இருந்தால் அவ்வளவு சுலபத்தில் அமர்ந்துவிட மாட்டார்கள். இனம் – நிறம் – இன்னோரன்ன “எடையும்” பார்த்துத்தான் அமர்வார்கள். இந்த நியதிக்கு மாறுபட்ட நிலையில் ஒரு “சோசியல் மூவ்மெண்ட்” என்னும் அமைப்பில் விரைந்து வந்து, அந்த அழகு மடந்தை அன்பழகன் அருகில் அமர்ந்து கொண்டாள்.
அந்த அழகுப் பதுமையாள் அமர்ந்து கொண்ட வேகத்தில் “ரெட்ன கால்” என்று சொல்வார்களே அந்த அமைப்பில் கால்மேல் கால் போட்டு அமர்ந்துகொண்டு “டிஷ்சு ” பேப்பரில் தன் முகத்தை ஒற்றிக் கொண்டிருந்தாள். பேருந்து சாலைப் பாதுகாப்பு மின் விளக்குகளின் நிறுத்தத்தில் நிற்கும்போதும், சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணத்தால் அமையும் திடீர் நிறுத்தத்தின் போதும் அதிர்ச்சிக் குலுங்களில் அசைந்த நிலையில் அந்த அழகு மோகினியின் ரெட்ன கால் அன்பழகனின் கால் பகுதியில் மோதிக் கொண்டிருந்தது.
இயல்பாகவே ஓர் ஆடவரின் முன்னால் ஒரு பெண் கால்மேல் கால் போட்டு அமர்ந்து இருப்பதைக் காணச் சகிக்காத உள்ளம் பெற்றவன் அன்பழகன். அடக்கத்தோடு அமர்ந்திருக்கும் தன் மீது அந்தப் பெண்ணின் பாதங்கள் அவ்வப்போது தீண்டுவதை அன்பழகன் வெறுப்புடன் ஓரிரு முறை வெறித்துப் பார்த்தான். அந்த இளம் பெண்ணாள் அதைப் பொருட்படுத்தாமல் வெப்பத்தின் விளைவை ஒற்றிக் கொண்டிருந்தாள்.
அன்பழகன் அமைதியிழந்தான். “தயவு செய்து தாங்கள் தங்கள் கால்களைச் சமநிலையில் வைத்து அமர்ந்து கொள்ளுங்கள்” என்று சொல்லத் துணிந்து விட்டான். தமிழ் மொழியில் தன்மையாகத்தான் சொன்னான்… அன்பழகன்…!
ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? என் கால் மீது என் கால்… இதில் உங்களுக்கு என்ன வந்தது? இது என் விருப்பம்…!” என்று அன்பழகனின் ஆதங்கத்துக்குப் பதில் ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளினாள் அந்த அழகுப் பெண்ணாள்….!
அன்பழகன் சற்று அமைதியாகச் சிந்தித்துக் கொண்டான். அவளுக்குப் பதில் ஆங்கிலத்தில் சொல்லலாமா? தமிழ்மொழியில் சொல்லலாமா? என்று ஆலோசித்துக் கொண்டிருந்தான். இந்தச் சிந்தனையின் ஊடே பண்பாட்டுத் தொடர்பான வெறியுணர்ச்சியும் தோன்றிவிடக் குமுறி விட்டான். “நீங்கள் கற்றவர்தானே..? இதுதான் பணிவன்பா…? என்று தமிழ் மொழியில்தான் கேட்டான். அன்பழகனின் அந்தப் பணிவார்ந்த கேள்விக்கு அவள் தந்த ஆணவப் பதில்; இது எனது உரிமை..! என்னுடைய வசதி..!” என்பதாகும். இளங்காளை அன்பழகன் பொறுமையிழந்தான; அப்படியா? வெரிகுட்…! வெரிகுட்…! என்று சொல்லிக் கொண்டான்..!
சிறிது நேர அமைதிக்குப் பின்னர் அன்பழகன் வேண்டுமென்றே அந்தப் பெண்ணின் தோள் பக்கத்தில் வலக் கையைப் போட்டு அரவணைத்துக்கொண்டு. இடக் கையை அவளது தளிர்க் கரங்களோடு இணைத்துக் கொண்டான். எதிர்பாராதது நிகழ்ந்து விட்ட அதிர்ச்சியில் விக்கித்துப் போயிருந்தாள் அவள்..! அன்பழகன் இப்போது ஆங்கிலத்தில் *மௌன கீதமாக” இந்த வகையான என்னுடைய வசதியையும், உரிமையையும் நீங்கள் புறக்கணித்து விட முடியாதுதானே? என்று, எடை மிகுந்த சொற்களைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் பேசியபோது அவள் அவள் திக்குமுக்காடிப் போனாள். அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தன.
அந்த இளம்பெண் தனக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையை எண்ணித் தனக்குள் வருந்தி, உள்ளுக்குள் ஆத்திரம் அடைந்து கொண்டிருந்தாள். கூச்சலிட்டுக் கூட்டத்தைக் கூட்டி விட்டால் தானும் அவமானத்துக்குள்ளாக நேரும்; நியாயவாதிகள் தன்னைக் குறை கூறக்கூடும் என்றொரு பயமும் உள்ளுற உறுத்தியதால் அவள் பேசா மடந்தையாகிப் பேசாமல் இருந்து விட்டாள்.
அன்பழகனைப் பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற அவசர வஞ்சின நோக்கத்தோடு அவன் முகத்தையும், தோற்றத்தையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்துத் தன் நெஞ்சுக்குள் அவனைப் பதித்துக் கொண்டிருந்தாள்.
அவள் இறங்கினாள்; அன்பழகன் உள்ளபடியே இறங்கித் தீரவேண்டிய பேருந்து நிறுத்தமும் அதுதான்; ஆகவே அவனும் இறங்கினான். தன்னைத் தொடர்ந்து வந்து. தொல்லை கொடுக்கப் போகின்றான் என்றதோர் அச்சம் அந்த இளம் பெண்ணின் மனத்தில் இயல்பாகவே தோன்றியது.அந்த ஒரு நிமிடம் அவள் மனம் துணுக்குற்று ஆடிப் போனாள்.
அந்தப் பேருந்து நிறுத்தத்தில் அன்பழகன் முன் பின்னாக இறங்கினான். அன்பழகன் இறங்கிய அவசரத்தோடு அந்த அவளிடம் தன்னுடைய தார்மீகமற்ற செய்கைக்காக வருத்தம் தெரிவித்துக் கொண்டான். இளமைத் துடிப்பின் முன்கோப உணர்ச்சிக்காட்பட்டுத் தான் செய்த தகாத செய்கைக்கு வருந்திக் கொண்ட நிலையில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். ஆனால் அவள் அந்த மன்னிப்பு வேண்டுதலின் பண்பினை அங்கீகரித்துக் கொள்ளும் அமைதியைப் பெறவில்லை. ஆத்திரத்தில் வெப்பத்தில் அலைக்கழிந்து கொண்டிருந்தாள்.’
அன்பழகன் பேருந்து நிலையத்தை அடுத்துள்ள உணவகத்துக்குச் சென்று வழக்கம்போல் காப்பி அருந்திக் கொண்டிருந்தான். அன்பழகனின் கண்கள் மட்டும் அந்த இளம் பெண்ணின் ‘காத்திருப்பைக்” கண்காணித்துக் கொண்டிருந்தன. சற்று நேரத்திற்கெல்லாம் இரண்டு தோழிகள் வந்து சேர, அவர்கள் மூவரும் “அறிவாலயம்” சென்று சேர்ந்தனர். ஆம்; அவர்கள் இருவரும் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் எதிரே அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்தில்தான் இறங்கினார்கள். அன்பழகன் தன்னுடைய ஆய்வு நோக்காம் “மைக்ரோ பிலிம் பார்த்துக் குறிப்பு எடுக்க ‘ரெப்ரன்ஸ் செக்சனுக்கு” விரைந்து கொண்டிருந்தான். என்ன ஆச்சரியம்; அந்த அவர்களும் அந்த ஆய்வு நுகர்ச்சியில் இருந்து கொண்டிருந்தனர். ஆய்வுகள் வேறு வேறாயினும் அமைந்திருக்கும் இடம் ஒன்றாயிற்றே…!
உறுத்தலுக்கு இலக்காகியிருந்த அன்பழகனும், அந்த அழகுப் பெண்ணும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் “ஜாடை மாடையாகப் ” பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த அழகுப் பெண்ணாள் தன் தோழிகளிடம் ஏதோ சொல்லியிருக்க வேண்டும்; அன்பழகன் “ஜாடையில்” பார்த்தபோது, அவர்கள் மூவருமே இவனை வெறித்துக் கொண்டிருந்த காட்சியினைப் பார்த்துவிட்டு, அதைக் கண்டும் காணாதவன் போல் நடந்து கொண்டான். அவர்களின் பார்வையும், அந்தப் பார்வையின் நோக்கும் தன்னைப் பற்றிக் கீழ்த்தரமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று புலப்படுவதை அன்பழகன் ஓரளவுக்கு; ஏன் மிகத் தெளிவாகவே புரிந்து கொண்டான்.
அவர்கள் மூவரும் சிறிது நேரத்திற்குள் திரும்பி விட்டார்கள். அன்பழகன் குற்ற உணர்வோடு குன்றிப் போய் இருந்தமையால் ஆய்வில் நாட்டம் கொள்ள இயலவில்லை. அலவலர் கழுத்தைப் பிடித்துத் தள்ளும் அமைப்பில் “மிஸ்டர்… நேரமாகி விட்டது” என்று கூறும் வரை நூலகத்தில் இருப்பவன் இன்று வழக்கத்திற்கு மாறாக மனத்துள் அமைதியில்லாக் காரணத்தால் நேரத்தோடு வெளியேறி வந்தான். அதுமட்டும்தான் காரணமா…? இல்லை; வேறு ஒன்றும் ஒட்டிக் கொண்டிருந்தது.
எப்போதோ வெளியே வந்த அந்த மூன்று பெண்கள் இன்னமும் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். அவர்களின் பார்க்கெட்டாத தொலைவில் அமைதியற்ற நெஞ்சத்தோடு அன்பழகன் அலைந்து கொண்டிருந்தான்.. தோழிகள் இருவரும் பேருந்து வந்ததும் “பை பை” சொல்லிக்கொண்டு புறப்பட்டு விட்டனர்.
அன்பழகன் இப்போது வரை தலைமறைவு என்பது போல் தலையை மட்டும் மறைத்துக் கொண்டு தூரத்தே நின்று கொண்டிருந்தான். அந்த அவள் கால் கடுக்க நின்று கொண்டிருந்தாள். வந்து கொண்டிருக்கின்ற பேருந்துகளைக் கணக்கெடுப்பவள் போல் சாலையிலேயே கவனம் செலுத்தி எட்டி எட்டி, எக்கி எக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் யாருக்காக-எதற்காகக் காத்து நிற்கின்றாள்…?
‘அடே புனிதவானே…! சனிக்கிழமைகளனைத்தும் காதலர்கள் தினம்…! ?ஆல் சாட்டர் டேய்ஸ் இஸ் லவ்வர்ஸ் டேய்… என்று தன் நண்பர்கள் தன்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டும், சிரித்துக் கொண்டும் அவ்வப்போது வழியனுப்பி வைக்கும் காட்சி ஒன்றை அன்பழகனின் மனத்திரையில் பதிந்து நிழலாடி மறைந்தது. காதலர்கள் தினத்தின் கொண்டாட்டத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கலாம்; இதனில் நான் இடைப்படுவானேன் என்று அன்பழகன் சிந்தித்துக் கொண்டு புறப்படத் தயாரானான்.
அணிஅணியாக வந்து நின்ற பேருந்துகள் ஏதோ ஒன்றிலிருந்து இரண்டு பேர் இறங்கி வந்தார்கள். அந்த இருவரும் இறங்கிய வேகத்தில் அந்தப் பெண்ணின் அருகில் சென்று எவரும் சந்தேகிக்காத நிலையில் நின்று கொண்டு சிரித்துப் பேசினார்கள். அவள் ஏதோ ஓர் அசம்பாவிதத்துக்கு ஆட்பட்டு விட்டதுபோல் அலைக்கழிந்து கொண்டிருந்த நிலையை உய்த்துணர்ந்து கொண்ட அன்பழகன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அவள் நின்று கொண்டிருந்த இடத்துக்குச் சென்றான். அந்தச் சமயத்தில் அந்த இருவரும் அவளைக் கேலி மொழிகளால் “கில்லாடி செய்து கொண்டிருந்தார்கள். அன்பழகனின் ஐயப்பாடு ஊர்ஜிதமாயிற்று.
இப்போது அன்பழகன் மிகவும் சாதுரியமாக; அந்த இளம்பெண் ஏதோ தனக்காகக் காத்துக் கொண்டிருந்த ஒரு காதலிபோல் கற்பனையை வருவித்துக்கொண்டு அவள்தன் கரத்தைப் பற்றிக்கொண்டு பேசலானான். “ஐயாம் சாரி…. ரொம்ப நேரம் காக்க வச்சிட்டேனா…? சரி; வா…. போகலாம்…! என்று அழைத்தான்.
இரண்டு கெடுமதியாளர்களின் “துர் நாற்றத்திலிருந்து” ஒதுங்கிக் கொள்ள ஒரு வழி கிடைத்துவிட்டது என்று அவள் கருதினாள். அதே சமயத்தில் இவனும் ஒரு “தீ வழிச் சிந்தனையாளன்” என்றாகி விட்டால், என்ற ஓர் ஐயப்பாடும் அவள் உள் மனத்தில் உறுத்தாமல் இருக்கவில்லை.
தர்மசங்கடத்தோடு தைரியத்தை வரவழைத்துக் கொண்ட அன்பழகன் கரம் பற்றியதைத் தட்டிக் கழிக்காத சிந்தனைச் சாமர்த்தியத்தோடு,,, பொய்மையாக புன்னகையையும் தன் இதழ்களில் இழைய விட்டுக் கொண்டாள். அந்த முரடர்கள் இருவரும் இந்த இவர்களை ஏதோ ஒரு மாதிரியாக முறைத்துப் பார்த்துக் கொண்டு விலகிச் சென்றார்கள்.
முரடர்களுக்கும் புத்திசாலித்தனம் – மனிதாபிமானம் இருக்கும் என்பதை அவர்கள் இருவரும் நிரூபித்துக் கொண்ட நிலையில்தான் நீங்கிச் சென்றார்கள். தகராறு என்று வந்துவிட்டால் “ஜனரஞ்சகத்துக்குப்” பதில் சொல்ல வேண்டுமே…! ஊமையன் கனவுபோல அவர்கள் ஒதுங்கலானார்கள். ஆனால் அவர்கள் உடனே இடத்தைக் காலி செய்து விடவில்லை; சற்றே நகர்ந்துபோய் நின்றுகொண்டு இவர்களின் நடவடிக்கைகளைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
சமயோசிதப் புத்தி சாதுரியம் சாதுரியம் கற்றவர்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டு விடும் என்பதற்கு. இவர்கள் சாட்சியாக விளங்கினார்கள். கரங்களின் இணைப்பு மட்டும் காதலாகி விடுமா…? முக பாவங்களின் மௌன கீதம் முரண்பட்டு ஒலிக்கின்றதே…! நாலாந்திர வரிசையர்க்குத்தான் நாலும் புரியுமே.
அந்த ‘ஐந்தாந் தர’ அறிவிலிகள் நோட்டம் தங்கள்மீது இருந்துகொண்டு இருப்பதை அமைதியிழந்து சுழலும் அவளது விழிகள் அவளுக்குப் புலப்படுத்தின. இதனையே ஓர் இனிய வாய்ப்பாகக் கருதிக்கொண்டு, அந்த முரடர்கள் இருவருக்கும் கேட்க வேண்டும் என்ற அமைப்பில்; “ஏன் தான் இப்படி அவசரப்படுறீங்க..? என் அக்காவுக்காகக் காத்துக்கிட்டிருக்கேன்..! அவள் வந்து போன பிற்கு ..” அவள் வார்த்தையை முடிக்கவில்லை; அதோ அந்தப் பேரூந்தில் இருந்து மகாலெட்சுமி போன்ற அலங்காரப் பொலிவுடன் ஒரு பெண் இறங்கி வந்து இவர்களைச் சங்கமிக்கின்றாள்.
ஆனந்தி..! மன்னிச்சுக்கம்மா…! கொஞ்சம் காலதாமதம் ஆயிடிச்சி..! என்று கூறிப் பணிவன்பின் எதிரொலியாய்ப் பரிணமித்தாள். அன்பழகனின் விழிகள் அந்தப் பொலிவை விழுங்கிக் கொள்ளத் தவறவில்லை…!
அறிவானந்தி தன் தங்கை ஓர் இணையோடு இருப்பதை விற்புருவ நெகிழ்ச்சியோடு வியந்து பார்த்துக் கொண்டாள். அக்காளின் அந்தப் பார்வையை அனுமானித்துக் கொண்ட ஆனந்தி, அவள் அந்த எண்ணத்தைத் தன்னுடைய மனத்தில் அங்கீகரித்துக் கொள்வற்குள் “அது ஒரு நாடகம்” என்பதைப் புலப்படுத்தியாக வேண்டும் என்றதோர் அவசரத்தில்; ஏதோ காது கேளாதவர்க்குச் சொல்வது போலக் கத்திக்கொண்டு, து “சரி… வாங்க போகலாம்” என்றாள்.
விசித்திரப் பிறவியொன்றை வியந்து பார்ப்பது போல் அறிவானந்தியின் அன்பு நோக்கு அமைந்தது. ஆனந்தியின் கயல் விழிகளில் ஒன்று இமைத்து மலர்ந்தது. ‘கண்ணடித்தல்’ என்பார்களே…. அது கனிந்து ஒளிர்ந்தது. அறிவானந்தியும் படித்தவள் தானே…! அசம்பாவிதக் கூறுகளின் எதிரொலியாக அமைந்த அந்தக் கண்ணடிப்பைப் புரிந்து கொண்டாள். மூவரும் புறப்பட்டுச் சென்றார்கள். “பின்னழகைப் பார்ப்பதுபோல் வெறித்து விட்டு, பாகவதர் முடிபோல் வளர்த்து விட்டிருந்த ‘பாப்’ தலையழகைத் தடவி விட்டுக்கொண்டு “போர்ட் கேர்னிங் பார்க்” நோக்கி நடந்தார்கள்.
அந்த முரடர்களுக்கு ஒரு போக்கு காட்டுவதற்காக நூலகத்திற்குள் நுழைந்து கொஞ்ச நேரத்திற்குள் மூவரும் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அன்பழகனை ஆனந்தி முறைத்துப் பார்த்தாள்…! அன்பழகன் கரங்கூப்பி வணக்கம் கூறி விடைபெற்றான். அறிவானந்தியும் கரங்கூப்பி விடை பகர்ந்தாள். ஆனால் ஆனந்தி… அவள் அணிந்திருந்த ‘ஜீன்ஸ்’ உடையின் மிடுக்கோடு நிமிர்ந்து நின்றாள்.
அன்பழகன் மாயமாய் மறைந்து விட்டான். ஆம்; அந்தப் பெண்களிடம் விடைபெற்றுக் கொண்ட நேரத்தில் சொல்லி வைத்தாற்போல அவன் காத்திருக்க வேண்டிய பேருந்தும் வந்து சேர்ந்தது. அன்பழகன் அந்தப் பேருந்தில் ஏறிக் கூட்டத்தில் கலந்து விட்டிருந்தான்.
ஆனந்தி. அறிவானந்தியிடம் அன்றைய நடப்பு முழுவதையும் ஒன்று விடாமல் சொல்லிக் கொண்டிருந்தாள். ஒரே நாளில் தொடர்ந்து வந்த சம்பவங்களைத் தொடர்ச்சியாக நினைவு கூர்ந்தபோது அன்பழகனை எவ்வாறு எடையிடுவது என்று உள்ளுக்குள் போராடிக் கொண்டிருந்தாள். அறிவானந்தி அனபழகனின் தோற்றத்தையும், ஆனந்தியால் கூறப்பட்ட நிகழ்ச்சிகளையும் கோர்வையாகக் கொண்டு மனக் கண்ணில் “வீடியோ” திரைப்படமாக விரிய விட்டுக் கொண்டிருந்தாள்.
பின்னமைந்த விளைவுகளைப் பெரிதாக எண்ணாமல் பேருந்தில் அன்பழகன் தன்னிடம் நடந்து கொண்ட விதம் பற்றிச் சிந்தித்துக் கொண்டு அன்பழகனை என்றாவது ஒருநாள் “மூக்கறுத்து” விடவேண்டும் என்றதோர் முனைப்பில் ஆனந்தி பேசிக் கொண்டிருந்தாள். ஆனந்தியின் முன்கோபத்திற்கு ஓர் அளவே இல்லையா…? அவளை எப்படித்தான் சமாதானப்படுத்துவது; எப்படித்தான் திருத்துவது?- அறிவானந்தியின் அடுத்த சிந்தனை அது..!
அன்புச் சகோதரிகள் இருவரும் அவர்கள் தம் அரிய பணிகளையெல்லாம் முடித்துக்கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தார்கள். ஆனந்தி வெளிப்படையாக அன்பழகன் சம்பந்தப்பட்ட அனைத்து நிக்ச்சிகளையும் தொகுத்துக் கூறி, அவனைப் பழி வாங்குவதற்கு அவள் அவளுடைய தந்தையின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் வேண்டி நின்றாள். அறிவானந்தியின் வக்காலத்தையும் அந்தப் பெண்களின் தந்தை அனுசரித்துக் கேட்கத் தவறவில்லை. அதுவரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர்களின் தாயார்; “அந்தப் பையன் நல்லவன்; இல்லையெனறால் அந்த முரடர்களின் கெடுபிடியிலிருந்து உன்னைப் பாதுகாப்பதற்கு வந்திருப்பானா? இந்தப் பிரச்சினையை இத்தோடு விட்டு விடுவதுதான் நல்லது…!” என்று கருத்துரைத்து, தன் மூத்த மகள் அறிவானந்தியை ஆதரித்துப் பேசினார்கள். விவாதங்களின் முதிர்ச்சிக் கட்டம்…! அந்தப் பெண்களின் தந்தை அம்மையப்பர் முடித்து வைத்துப் பேசும் முடிவுக் கட்டம்..!
அன்பழகனின் நடவடிக்கைகளில் குற்றச் செயல்கள் எதுவும் எனக்குப் புலப்படவில்லை…! பேருந்தில் பணிவன்போடு அமர்ந்து பயணம் செய்யத் தெரியாத உன் போன்றோர்க்கு அத்தகையதொரு அறிவுப் புகட்டல் தேவைதான்…! நீ இப்போது ‘வஞ்சினம்’ உரைப்பதுபோல் அவனும் தன் உள்ளத்துக்குள் உன்னைப் பழி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வன்மம் கொண்டிருந்தானானால் உன்னிடம் தன் இளமை வேக ஆத்திரத்துக்கு மன்னிப்பு கேட்டிருக்கவே மாட்டான். இந்த ஒன்றை மட்டுமே ஆழ்ந்து சிந்தித்தால் அவன் நல்லவன் என்று நமக்குப் புலனாகும்….! அடுத்து, முரடர்கள் உன்னை நெருங்கி வந்து கிண்டல் செய்தபோது அவன் ஒரு தீயவனாக இருந்திருந்தால் அந்த அரிய சந்தர்ப்பத்தைக கண்டு ஆனந்தித்து அவனும் தூரத்தே நினறு ‘விசில்’ அடித்திருப்பான். அதற்கு நேர்மாறாக அறிவுடைமையோடு உன்னை அந்த நெருக்கடியிலிருந்து நீக்குவதற்குக் காதலன்போல் நடித்து உன்னுடைய மானாபிமானத்தைக் “காபந்து” செய்திருக்கின்றான். அடுத்து உன்னுடைய அலட்சியத்தையும் பொருட்படுத்தாமல அறிவானத்தி வந்து சேரும் வரை உனக்குப் பாதுகாப்பு அளித்திருக்கின்றான். இத்தனைக்கும் பொறுமையாக இருந்து உன்னைப்பாதுகாத்து அறிவானந்தியிடம் சேர்ப்பித்த பிறகு, நீ நடந்துகொண்ட “முறைப்புக்கு” ஈடு கட்டாமல் கை கூப்பி வணக்கம் சொல்லிப் பிரிந்து சென்றிருக்கின்றான்…. ஆக, எந்வொரு கோணத்தில் நின்று எண்ணிப் பார்த்தாலும் அவன் சத்திய சீலனாகத்தான் காட்சியளிக்கின்றான். அவன் மீது நீ ஆத்திரம் கொள்வதென்றால் அது உன் பணிவன்பில்லாத பாங்கையே வலியுறுத்தும்..! என்று தன் நியாயபூர்வமான கருத்துகளை எடுத்துரைத்தார் போலீஸ் சூப்பிரண்டெண்ட் பொன்னம்பலம்.
அடிப்படை பூர்வமாகக் குற்றச் செயல்களின் பரிமாணங்களைச் சட்டப்படி எண்ணிப்பார்த்து, அலசி ஆராய்ந்த பின்னரே தண்டனை வழங்கப்படுகின்றது. நாட்டில் விளையும் குற்றச் செயல்களுக்கு ஆண்கள் மட்டும் காரணம் அல்லர்; உணர்ச்சிக்கு ஆட்படச் செய்யும் பெண்மணிகளின் ஆடம்பர மோகத்தின் அநாகரிகத் தன்மையில் அமைந்த ஆடையணிகலன்களும் தோற்றப் பொலிவுகளும் காரணமாகி நிற்கின்றன.
ஆனந்தியின் உடையமைப்பும், ஒருங்கு சேர்ந்த பணிவன்பு இல்லாத நிலையில் கால்மேல் கால்போட்டு அமர்ந்து கொண்ட நவநாகரிகப் போக்கும்தான் அன்பழகனைக் குற்றம் செய்யத் தூண்டியிருக்கின்றது. அவன் ஒரு சந்தர்ப்பவசக் குற்றவாளி…! அவன்மீது சட்டபூர்வமாக எந்த வகையிலான குற்றப்பதிவும், எதிர்ச் சாடலும் செய்ய முடியாத நிலை…! என்று சட்டம் தெரிந்த பொன்னம்பலனார் விளக்கம் கூறினார்.
ஆனந்தி அதிர்ந்து போய்க் காட்சியளித்தாள். இன்றுவரை தன்னை இடித்துரைத்துப் பேசியறியாத தன் தந்தையே தன்னைக் குற்றம் சாட்டி-குத்திக் காட்டிப் பேசியபோது இடித்துரையை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை..! ஆனந்தி அழத் தொடங்கி விட்டாள்; அதுதானே கடைசி ஆயுதம்….!
ஆனந்தி தன் தவற்றினை உணர்ந்து வேதனைப்பட்டு அழுகின்றாளா…? அவள் தரப்பில் ஆதரவாக யாருமே பேசவில்லை என்பதற்காக அழுகின்றாளா….? என்று பிரித்துணர முடியாத நிலையில் அவளது அழுகைக் கோலம் அமைந்தது.
பொன்னம்பலனார் தன் இரண்டாவது மகள் ஆனந்தியின் அருகில் வந்து “ஆனந்தி…!” சம்பவங்கள் கலைந்திடும் கனவுகளுக்கொப்பானது; சாதாரணமாகக் கருதிக் கொள்; பொருட்படுத்திக்கொண்டு புலம்பிக் கொண்டிருக்காதே…” என்று கூறி, ஆறுதல் படுத்தினார். இந்த நேரத்தில் “காலிங் பெல்” ஒலித்தது. குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் வீட்டில் இருக்கின் றபோது வந்திருப்பது யாராக இருக்கக்கூடும் என்ற கேள்விக் குறியோடு ஒரே சமயத்தில் ஒருவரையொருவர் வியந்து பார்த்துக் கொண்டார்கள்.
பொன்னம்பலனார் கதவைத் திறக்கச் சென்றார். பெண்கள் மூவரும் திரைமறைவில் நின்று கவனிக்கலானார்கள். பொன்னம்பலம் அவர்களின் நண்பர் புண்ணியகோடி அவர்கள் புன்முறுவலித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தபோதுதான் பொன்னம்பலத்துக்கும், அவர்தம் துணைவியாருக்கும் அந்த நினைப்பே வந்தது…! நல்லவேளை….! நண்பர் முன்கூட்டியே வந்தது ஞாபகப்படுத்துவதற்கு அனுகூலமாயிற்று என்று பொன்னம்பலம் மனத்துக்குள் எண்ணி மகிழ்ந்து கொண்டார்.
பொன்னம்பலம் புண்ணியகோடியை வரவேற்று அமரச் செய்துவிட்ட அந்த வேகத்தோடு தன் மனைவியை உசார்ப்டுத்துவதற்காக அடுக்களைப் பக்கம் சென்றார். அதற்கு அவசியமே இல்லாத நிலையில் நினைவு மீட்புகள் செயல்பட்டுக் கொண்டிருந்தன.
புண்ணியகோடி…! இப்போது ஐந்தரைதான் ஆகிறது; இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறதே…! அதற்குள் எல்லாம் தயாராகிவிடும்…! என்று பொன்னம்பலனார் ஓர் அசட்டுச் சிரிப்பு கிரித்துக்கொண்டே புண்ணியகோடியுடன் பேச்சு கொடுக்கத் தொடங்கியபோது, பொன்னம்பலத்தின் மனைவி அமராவதி அம்மையார் காப்பி ஓமப்பொடி சகிதம் கூடத்துக்கு வந்து, “சாப்பிடுங்கண்ணா…” என்று உபசரித்து மகிழ்ந்தார்..
“உன்னைப் பற்றி எனக்குத் தெரியும்; அதனால்தான் எச்சரிப்பதற்காக முன்கூட்டியே வந்தேன்…’ என்று. பொன்னம்பலத்தை உரிமையோடு திட்டிக்கொண்டே காப்பியை ஒருமுறை உறிஞ்சி வைத்துவிட்டு ஓமப்பொடியை நாசுக்காக எடுத்துப் போட்டு மென்று கொண்டிருந்தார் புண்ணியகோடி. பொன்னம்பலமும் புண்ணியகோடியை வழக்கமான “அர்ச்சனை” வார்த்தைகளால் அபிசேகித்துக் கொண்டு ஓமப்பொடியை நொறுக்கத் தொடங்கினார். அமராவதி இந்த அபூர்வ நண்பர்களின் வழக்கமான ஊடல்களை வசீகரித்துக் கொண்டு சிரித்து மகிழ்ந்தார்.
இரவு மணி ஏழரை…! “காலிங் பெல்” அலறியது. இப்போதோ எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் புண்ணிகோடிதான் போய்க் கதவைத் திறந்து வரவேற்றார்…! புண்ணியகோடியின் நிழல்போலப் பொன்னம்பலமும் நின்றுகொண்டிருந்தார். புண்ணியகோடியின் ஏற்பாட்டில் அறிவானந்தியைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார் கூடத்தில் அமர்ந்து விட்டனர். பெண்கள் மூவரும் திரைமறைவில் நின்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தனர்.
அமராவதி அம்மையார் தன் மூத்த அறிவானந்தியிடம் காப்பி-பலகாரத் தட்டுகளைக் கொடுத்து, எடுத்துச் சென்று ஒவ்வொருவருக்கும் எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று எச்சரித்து அனுப்பினார். அறிவானந்தி பரிமாறிவிட்டுப் பதுமைபோல் நின்றாள். அறிவானந்தியும், ஆனந்தியும் தொலைநோக்கில் பார்வையைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.
புண்ணியகோடியின் தலைமையில் பெண் பேசும் படலம் தொடங்கியது. அறிவானந்தியிடம் அபிப்பிராயம் கேட்டபோது, “ஆட்சேபணையில்லை” என்ற மௌன வாசிப்பின் இங்கிதம் வெளிப்பட்டது. “அட்வகேட் ஜெனரல்” அருணாசலம் அவர்களின் ஏக புதல்வன் வழக்கறிஞராகப் பணிபுரியும் அன்பழகனிடம் அபிப்பிராயம் கேட்டபோது பெற்றோர்கள் விருப்பப்படியே ஆகட்டும் என்று அடக்கத்தோடு பதில் வந்தது. இருதரப்பாருக்கும் பரிபூரண திருப்தி என்ற முடிவை புண்ணியகோடியே முன்மொழிந்து வழிமொழிந்தார்.
பெரியவர்கள் கூடத்தில் அமர்ந்து “சம்பந்தம்” பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனந்தி அறிவானந்தியைக் கட்டிப் பிடித்து முத்தம் ஈந்து, “அக்கா… நீ கொடுத்து வச்சவதான். பெரிய அதிர்ஸ்டக்காரி….” என்று சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனந்தி பண்பட்டு விட்டாள் என்றறிந்த அறிவானந்தி இரட்டை மகிழ்வு எய்தினாள்.
– மனங்கமழும் பூக்கள், முதல் பதிப்பு: நவம்பர் 1997, மலர்மாமணி பதிப்பகம், சென்னை.
![]() |
மு.தங்கராசன் தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்திலுள்ள தளுகை பாதர்பேட்டை என்ற ஊரில் 1934ல் பிறந்தார். இரண்டாவது வயதிலேயே தனது தாயை இழந்தவர், தந்தையோடு மலாயாவுக்கு வந்தார். ஜோஹூர் மாநிலத்திலுள்ள ‘நியூஸ்கூடாய்’ தோட்டத் தமிழ்ப் பள்ளியியில் ஆசிரியராக இருந்த தனது தந்தையிடம் தமிழ்க் கல்வியைக் கற்றார். 1955ல் ஆசிரியர் பட்டயம் பெற்ற இவர் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1955ல் தமிழ்முரசில் பிரசுரமான…மேலும் படிக்க... |