எண்ணிப் பார்
கதையாசிரியர்: மு.தங்கராசன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2024
பார்வையிட்டோர்: 1,510
(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ஒரூ செடியில் பூத்துக் குலுங்கிய இரு மலர்கள்…! ஒன்று இறைவனின் திருவடிக்குச் செல்கின்றது..j மற்றொன்று சாக்கடைச் சேற்றுக்கு இலக்காகின்றது! கருவிலே திரு காலத்தால் மாறுகின்ற மாற்றப்படுகின்ற விசித்திரமா…? இறைவனின் திருவிளையாடலா…? இம்மையில் விளையும் மும்மையின் பயனா…?

இரவு மணி பத்து ஆகியிருக்கக் கூடும்…! அந்தப் பெரிய “பங்களா” வீட்டில் மகேந்திரனார் தனித்து அமர்ந்து பிரபல நாவலாசிரியர் ஒருவர் எழுதிய, “வாழ்க்கை அழைக்கிறது” என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். “டிரிங்… டிரிங்!” தொலைபேசி அலறியது.
“வாழ்க்கையின் அழைப்பில்” சுவையான தொடரில் இருந்து கொண்டிருக்கின்றபோது தொலைபேசி அலறவே, இது ஒரு தொலைபேசியா? அல்லது தொல்லை பேசியா…? என்று மனத்துக்குள் அலுத்துக் கொண்டே எழுந்து சென்று “ரிசீவரைக்”கையில் எடுத்து “ஹலோ” என்றார். எதிர்தரப்பில் இருந்து பதில் இல்லை; பதிலே இல்லை…!
தொலைபேசியின் மணி ஒலிக்கும். விரைந்து சென்று எடுத்தால் “வெடுக்” என முறிந்து வெறும் “எங்கேஜ்’ சத்தம் கேட்கும். பொறுப்போடு திரும்பிக் கொண்டிருக்கும்போது மறுபடியும் மணி ஒலிக்கும்; அல்ல அலறும்! எழுந்து சென்று எடுத்தால், “சாரி… பிளீஸ்… ராங் நம்பர்…!” என்று பதில் வரும். சகிப்புத் தன்மையோடு “இட்ஸ் ஆல்ரைட்” என்று பதில் சொல்லத்தான் வேண்டும்; ஆம். அதுதானே பணிவன்பு! அப்புறமும் “டெலிபோன்” அலறும். அப்போது சுடுபால் குடித்த பூனையாகி விடாமல் மிகவும் பொறுமையோடு “அட்டெண்ட்” ஆகும்போது, அது நமக்கு வேண்டிய-இன்றியமையாத ஒருவராக; செய்தியும் அவசரமும் அத்தியாவசியமும் ஆனதாக இருக்கும்…! தொலைபேசியின் தார்மீக நிலை இது…!
மகேந்திரனார் பழுத்த அனுபவசாலி…! ஓய்வு பெற்ற உளவிலாகா உயர் அதிகாரி…! அவருக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம். வெகுளிக்கு இடமளிக்காமல் மென்மையாகச் சிரித்துக் கொண்டே வந்து இருக்கையில் அமர்ந்து புத்தகத்தை எடுத்தார். இப்போது அவர் வாசிக்கவில்லை…!
கதைப் புத்தகத்தில் படித்து முடித்திருந்த பக்கங்களில் விரல் நீட்டி மடக்கி வைத்துக் கொண்டு வேறொரு சிந்தனையில் ஆழ்ந்தார். ஆமாம்; அது என்ன? அவருடைய மென்மைச் சிரிப்பின் எதிரொலி அது!
பொதுவாகத் தொலை பேசியில் “நியூசென்ஸ்கால்” வருகிறது என்றால், அது இளம் வயதுப் பெண் பிள்ளைகள் இருக்கின்ற வீடாக இருக்க வேண்டும்…! அறிவழகன்—அன்பானந்தன் என்ற ஆண் மக்கள் மட்டுமே இருக்கின்ற இந்த வீட்டுக்குப் பதில் கூறாத் தொலை பேசித் தொடர்பு ஏன்…? ஒருவேளை அவர்களது “காதலியர்” தொடர்பு கொள்ள நினைந்து, குரல் மாற்றம் கண்டு தொடர்புக்கு முற்று வைத்து விட்டனரோ…? அப்படியும் இருக்கலாம்…! தொழில்துறை அனுபவச் சிந்தனையில் தோய்ந்து விட்டார்.
மகேந்திரனார் கதைப் புத்தகத்தை இன்னும் திறக்கவில்லை, தொலைபேசி அலறியது. புத்தகத்தை இருபுறம் திறந்த நிலையில் குப்புறக் கவிழ்த்து வைத்து விட்டு சாவதானமாக எழுந்து சென்று “ஹலோ” என்றார். அவருடைய மகன் அறிவழகன்தான் பேசினான்…
“அப்பா…இன்றைக்கு எதிர்பாராத விதமாக நாளைக் காலை வரை எனக்கு ‘டியூட்டி’ ஆகி விட்டது. நான் வீட்டுக்கு வர முடியாத நிலை…ஆமாம்… தம்பி ‘ஆனந்த்’ வந்துட்டானா…? இன்னும் வரலியா…! என்னங்கப்பா…மணி பத்தரைக்கு மேல் ஆயிடிச்சி…! அவன் எங்கப்பா போயிருக்கான்…? ம்…சரி… எனக் காகவோ அவனுக்காகவோ அப்பா காத்திருக்கா தீங்க…! உடனடியாச் சாப்பிட்டுட்டு காலா காலத்துல படுத்துத் தூங்குங்கப்பா…! ஓகே… பை…!” என்று, அக்கறையோடு அறிவழகன் தொலைபேசியில் பேசிய போது தனக்குள் தானே மகிழ்ந்து கொண்டதோடு தொலைபேசி தொல்லை பேசி அல்ல; அது இன்றியமையாதது என்ற தொரு தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்ட நிலையில் சாப்பிடச் சென்றார்…!
மூத்த மகன் அறிவழகனின் தொலைபேசித்தொடர்பு அன்புக் கட்டளைக் கிணங்கி மகேந்திரனார் “டைனிங் ஹால்” பக்கம் சென்று கொண்டிருக்கும்போது தொலை பேசியின் அலறல்…! இப்போது அன்பானந்தன் பேசினான்! “அப்பா…நான் இப்ப ஜொகூர்பாருவில் இருக்கிறேன்…! வியாபாரம் சம்பந்தமாகச் சில நண்பர்களோடு வந்து தங்கிட்டேன். நாளைக்குக் காலையில் வந்துடறேன்…! அப்பா எனக்காகக் காத்திருக்காம சாப்பி டுங்க… ஓகே…பை…!” என்று சொல்லி முடித்த போது தொலைபேசித் தொடர்பும் முறிந்தது.
“அவரவர்களின் தொழில் நிமித்தம் வயது வந்த பிள்ளைகள் அலைந்து கொண்டிருக்கின்றார்கள். இரு வரையும் மாலையும் கழுத்துமாகப் பார்த்து விட்டால் என் கடமை முடிந்து விடும்..! அதற்கப்புறம் அவர்களுக் காக நான் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது அல்லவா…?” இப்படியாகச் சிந்தித்துக் கொண்டே ஆகாராதிகளுடன் போராடத் தொடங்கினார்…!
எப்போதும் சாப்பிட்டவுடன் சிகரெட் புகைத்துக் கொண்டு நடப்பது மகேந்திரனாரின் பழக்கம்..! இப்போதும் நடைபயிலத் தொடங்கி விட்டார்; அவரது சிந்தனைக் குதிரையும் மெல்ல மெல்ல அடியெடுத்து உலா வந்தது…!
ஏறக்குறைய இன்றைக்கு முப்பது ஆண்டுகளுக்குமுன், ஒரு நாள் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. அந்த்க் காலக் கட்டத்தின் எல்லைக்குப் போய்விட்டு, அங்கிருந்து மீண்டு கொண்டிருந்தார்கள்…!
அப்போது மகேந்திரனார் இருபத்தேழு வயது நிரம்பிய இளங்காளை…! அவரது தந்தையாரின் தங்கை மகளை அதாவது அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொண்டார். அப்போது மகேந்திரனாரின் தந்தையார் இராஜாங்கம் சிங்கப்பூர் “ஹாங்காங் ஷாங்காய்” பேங்கில் ஓர் உயர்தரமான அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார். சிங்கப்பூரில் வாழ்ந்து வந்த இராஜாங்கம் வாழையடி வாழையாக வம்சாவழி இரத்தபாசத் தொடர்பு அறுந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து கோலாலம்
பூரில் வசித்து வந்த தன் தங்கையின் மகளைத் தன்னு டைய ஒரே வாரிசான மகேந்திரனாருக்குத் திருமணம் செய்து வைத்தார்…! பிள்ளைகளின் அபிலாசைகளைப் பெரிது படுத்தாமல் பெற்றோர்கள் முடிவு செய்வார் கள்…! பெண் மக்கள் தங்கள் கழுத்தைக்காட்டுவார்கள். ஆண்பிள்ளைகள் மும்முடிச்சும் போட்டு விடுவார்கள். அப்படிப்பட்டதொரு காலக் கட்டம்…!
நல்ல வேளை…! மகேந்திரனாரும் மங்களாம்பிகை யும் கூடப் பெற்றோர்களுக்கு அடங்கிய பிள்ளை களாகவே, மனத்தைப் பறிகொடுக்காத நிலையில் இருந்ததனால் பிரச்சினைகள் எதுவும் தோன்றவில்லை. மகேந்திரனாரும் மங்களாம்பிகையும் மனமொத்த ஏறக்குறைய பத்து ஆண்டுகள் தெய்வீகத்தம்பதிகளாக வாழ்ந்து வந்தார்கள். அந்தப் பத்தாண்டு கால ஆத்மார்த்தமான வாழ்க்கைக் காலத்தில் [பிறந்தவர்கள் தாம் அறிவழகனும் அன்பானந்தனும்…!
தெய்வீகத் தம்பதிகளுக்குத் திருமணமாகி மூன்றாண்டுகளுக்குப் பின்னர் பிறந்தான் அறிவழகன்…! அதற்குப் பின் ஆறாண்டுகள் கழித்துத்தான் அன்பானந் தன் பிறந்தான்…! அன்பானந்தன் இரண்டு வயதுக் குழந்தையாக இருந்தபோது, மங்களாம்பிகை அம்மை யார் என்புருக்கு நோய்க்கு இலக்காகி உயிர் நீத்தார்கள்!
மகேந்திரனார் தன்னுடைய இரண்டு செல்வங்களுடன் வாழத் தலைப்பட்டார்…! அவருடைய தாய் தந்தையர் வலுயுறுத்தியபோதுகூட, ‘அவர் மங்களாம்பி கையின் வெற்றிடத்தை நிறைவு செய்யும் எண்ணம் தனக்கில்லை; பிறப்பின் பயன் பத்தாண்டு கால வாழ்க்கை என்பதுதான் இறைவனின் தீர்ப்பென்றால் அது அப்படியே ஆகட்டும்…’என்று தீர்க்கமாகவே மறுத்துவிட்டார்.
காலத்தின் கரைசலில் பெற்றோர்கள் கலந்து விட்ட போதும், வீட்டு வேலைகளைச் சமாளிக்க “ஆயா’ அமர்த்திக் கொண்டு, பிள்ளைகளை வளர்த்து ஆளர்க்கு வதில் கவனம் செலுத்தினார்…! இயந்திரமயமானதோர் இயக்கமாக இயங்கித் தன் பிள்ளைகளை வளர்த்து வந்தார்…!
அன்பும் அரவணைப்பும் கனிவும் கண்டிப்பும் இரண்டறக் கலந்தே இரண்டு செல்வங்களையும் கண்ணின் கருமணி போலக் காத்து வளர்த்தார்…!
உலகத்தில் எந்த இரண்டு கெடிகாரங்களும் ஒரே நேரத்தைக் காட்டுவதில்லை. (தேரிஸ் நோ டூ வாட்சஸ் ஷோவ் த சேய்ம் டைம்…!) மனித மனங்களும் அப்படித் தான்…! இதனைக் குறிப்பாக வெளிப்படுத்தத்தான் இறைவன், மனிதனுக்கு ஒரு கையில் ஐந்து விரல்களையும் அதனில் ஏற்றத் தாழ்வையும் படைத்து வைத்திருக்கின்றானோ…?
அன்பு மயமாக வளர்க்கப்பட்ட இரண்டு பின்ளை கள்…! ஒருவன் கற்றுத் தேர்ந்து உயர் பதவி வகிக்கின்றான். மற்றொருவன் “மட்டம்” என்று சொல்ல முடியா விட்டாலும் மதிப்பெண்கள் அதிகம் பெறாமலாகி, நல்ல “பேப்பர் குவாலிபிகேஷன்” இல்லாததால் உத்தி- யோகம் வாய்க்காத நிலையில் உழன்று கொண்டிருக்கின்றான்….! –
சேரும் கூட்டமும் சாரும் நண்பர்களும் சால்பானது என்று சொல்ல முடியாத நிலை…! “பாலில் நஞ்சு கலந்தாலும், நஞ்சில் பால் கலந்தாலும் மொத்தத்தில் அது நஞ்சுதானே…?” ஒரு தீயவனோடு நாலு நல்லவர்கள் சேர்ந்தாலும், நான்கு தீயவர்களோடு ஒரு நல்லவன் சேர்ந்தாலும் தீயதுதான் தலையோங்கி வெல்லும்…!
உளவிலாகாவில் ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டு கள் பணியாற்றி முதிர்ந்த அனுபவம் பெற்றிருந்த மகேந்திரனாரின் கண்ணோட்டத்தில், அன்பானந்தனின் நண்பர்கன் அவ்வளவு ‘நல்ல சேர்க்கைகளாகப் படவில்லை….’
மழை முகம் காணாப் பயிர்போல் வாடிய மழலை யாகியிருந்த ஆனந்தனைத் தன் மடியிலும் நெஞ்சிலும் போட்டுத்தான் வளர்த்து ஆளாக்கினார். அறிவழக னுக்குக் காட்டிலும் “ஆனந்தனுக்கு” அதிக நேரத்தைச் செலவிட்டு அடைகாக்கும் தாய்ப் பறவை போல, அரவணைத்து வளர்க்க வேண்டியதொரு இன்றியமையாமை இறைவனால் ஏற்படுத்தப்பட்டபோது அந்தத் தீர்ப்புக்கு அடிபணிந்து அவர்தம் கடமையைச் செவ்வனே செய்து முடித்தார்…!
ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்தொன்பதாம் ஆண்டில் தன்னாட்சி பெற்ற சிங்கப்பூர், படிப்படியாகச் சுதந்திரத் திருநாடாய் – மக்களாட்சி மலர் குலுங்கும் பொன்னாடாய் மறுமலர்ச்சி பெற்று ஆரவாரமில்லாது அபிவிருத்தியடைந்து, உலகத்தின் வரலாற்றுப் பொன்னேடுகளில் முத்திரை பதித்ததொரு நாடாக முன்னேற்றம் கண்டது போல, மகேந்திரனாரின் பிள்ளைகள் இருவரும் வளர்ந்தார்கள்-வாலிபப் பருவம் எய்தி விட்டார்கள்…!
மூத்தவன் அறிவழகன் நாட்டின் நலங்காக்கும் ஊக் காவல் படையில் ஓர் உயர் அதிகாரி . இளையவன் அன்பானந்தன் என்ன தொழில் செய்கின்றான் என்பது மகேந்திரனாருக்குப் புரியாத புதிர்…!
பிள்ளைகளின் சம்பாத்தியத்தை எதிர்பார்க்காமல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்ற மகேந்திரனார், பிள்ளைகளின் “சாமர்த்தியத்தை” வரவுவைப்பதில் மிகுந்த கவனத்தோடு இருந்தார். தான் ஒரு ‘கல்ப கோடி காலம்’ வாழப் போவதில்லை என்றாலும், தனக்குப் பின் ஏற்படும் “பங்கீட்டில்” தராதர முரண் பாட்டுக்கு இடமளிக்கக் கூடாதல்லவா…?
ஊர்க்காவல் படையில் அதிகாரியாகப் பணி புரிந்து வரும் அறிவழகனின் மாதாந்திர வருவாய் “காசோலையாக” வந்து அப்படியே வங்கிக்கணக்கில் சேர்ந்துவிடும். எங்கோ எப்படியோ என்னவோ வியாபாரத் தொடர்பு என்று சொல்லிக் கொண்டு, இரண்டு அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை, “எண்ணிப் பாருங்கள் அப்பா…!” என்று கற்றையாகக் “கரன்சி” நோட்டுகளை அன்பானந்தன் கொண்டு வந்து கொடுப்பான். அதையும் தான் அமைதியாகப் பெற்று அஞ்சலகச் சேமிப்பு வங்கிக் கணக்கில் சேர்த்துவிட்டுக் கணக்கு எழுதிக் கொள்வார்!
அறிவழகனின் வருவாயில் அப்பழுக்கு இல்லை…! அரசாங்கத்தின் காசோலையல்லவா…? அன்பானந்தனின் வரவு அவ்வளவும் கரன்சி ஆயிற்றே! சிங்கப்பூரில் பதிவு பெற்ற தனியார் அல்லது கூட்டுறவு வர்த்தக நிறுவனத்தின் “கொள் நிறைவாய்” வந்த இலாபக் கணக்கும் அல்ல…!
இளைய மகன் வரவில் ஏதோ ஓர் “அப்பழுக்கு” இருப்பதாகவே மகேந்திரனாரின் உள்ளத்தில் ஓர் ‘அழுத்தம்’ இருந்து கொண்டே இருந்தது. உள்ளூரச் சிந்திக்கவும் சந்தேகிக்கவும் ஆன நிலையிருப்பதை உணர்ந்து கொண்ட மகேந்திரனார் தன் மகன் அன்பானந்தனிடம் “எண்ணிப்பார்” என்று சொல்லி என்னிடம் ஒரே சமயத்தில் நீ பெருந்தொகையை சேர்ப்பிக்கும் போதெல்லாம் “எண்ணிப் பார்…!” என்று உனக்கு அறிவுரை சொல்ல வேண்டும் போல் எனக்குத் தோன்றும்…! அப்படிப்பட்ட உள்ளுணர்வுகள் எனக்கு ஏன் ஏற்படுகின்றன…? என்று கேட்டு விட்டு, சற்று நேர அமைதிக்குப் பின்……!
எப்படியும் வாழலாம் என்பது ஒரு சாரார் வாழ்க்கை…! எப்படியோ வாழ்திடுவோம் என்பது இன்னொரு தரப்பார் வாழ்க்கை…! “இப்படித்தான் வாழ வேண்டும்” என்று, குறியமைத்து நெறியோடு தான் வாழ வேண்டும் என்பது என் போன்றார் கொள்கை…!
“பழி மலைந்து நீ பணக்காரனாய்-பகட்டாய்— படாடோபமாய் வாழ்வதைவிட ஏழ்மையின் வறுமையை இனிதுவந்து ஏற்றுச் செத்துப் போ…!”
“உன் தாய் பசித்திருந்தாலும் பழி பாவங்களைச் செய்து வந்து அவள் பசியைப் போக்க நினைக்காதே…! திங்களாய் அங்கமெலாம் அதை விட, ஐயிரண்டு நொந்து சுமந்து உன்னைப் பெற்றாளே அந்தத் தாய் அந்தக் கோரப் பசியினாலேயே செத்துத் தொலையட்டும்…!”
என் போன்றார் கொள்கைக்கு ஏற்புடையதாக, இவ்வுலகம் போற்றும் உலகப் பொதுமறை தந்த வள்ளுவனார் இவ்வாறு கூறுகின்றார். குறுக்கு வழி நாடாமல் குறள் வழி பின்பற்றி வாழ்க்கை நடத்திய பட்டறிவு பெற்றதனால் நிலைக்களன் இல்லாத உன்னுடைய வருவாயைப் பற்றிச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது…!
ஆர்ப்பரிப்புக்கோ ஆத்திரத்துக்கோ இடமளிக்காமல் மிகவும் நிதானத்தோடு அமைதியோடு மென்மையாகக் கருத்துகளைச் சொல்லுவார்…! என் மனோ நிலை உனக்குப் புரியாததல்ல…! இருந்தாலும் எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது…! என்று கூறுவார் மகேந்திரனார்…!
பெருங்காயம் இருந்த டப்பா மணக்கத்தான் செய்யும்…! உளவிலாகாத் துறையில் பணியாற்றிய காரணத்தால் எதையும் சந்தேகக் கண்கொண்டே பார்க்கிறீர்கள்…! இதைத் தவிர நான் வேறு என்ன சொல்லிச் சாதிப்பது…? மீன்விற்ற காசாக இருந்தாலும் அது மணக்காதுங்கப்பா…! ஆனந்தன் மிகவும் சாதுரிய மாகப் பதில் சொல்லிவிட்டு நழுவி விடுவான்…!
இவ்வாறு பல நாட்கள் தன் இளைய மகனுக்கும் தனக்கும் இடையே நடைபெற்ற தர்க்க வாதங்களை மகேந்திரனார் இப்போது அசை போட்டுக் கொண்டிருந்தார்…!
சுவர்க் கெடிகாரம் பன்னிரண்டு முறை ஒலித்து ஓய்ந்தது…! சிந்தனைக் குதிரையின் துணை மெல்ல மெல்ல நீங்கியது…! எப்போதும் படுக்கப் போவதற்கு முன் அன்றாடச் செலவினங்கள் – நடப்புகள் நடப்புகள் ஆகிய வற்றைக் குறித்து நாட்குறிப்பு எழுதும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்த மகேந்திரனார், இப்போது அந்தத் தன் இன்றைய இறுதிக் கடமையைச் செய்து கொண்டிருந்தார்.
தலைகுப்புறக் கவிழ்த்து வைத்திருந்த ‘வாழ்க்கை அழைக்கிறது’ என்ற கதைப் புத்தகத்தின் படித்து முடித்த பக்கங்களுக்கு “மயில் இறகு” அடையாளம் வைத்துவிட்டு, இருக்கையிலிருந்து, “டார்ச் லைட் சகிதம் வீட்டின் வெளிப் புறத்துக்கு வந்து, வேலியோடி யைந்த இரும்பு “கேட்டுக்கு’ இரும்பால் ஆகிய சங்கிலி யைப் போட்டு இறுகக் கட்டி, பூட்டும் போட்டு, பூட்டி யிருக்கிறதா என்று இழுத்துப் பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டு, அமைதியாக வீட்டின் தலைவாசலுக்கு நேராக நடந்து சென்றார்.. ! தலைவாசற் கதவையும் இழுத்துச் சாத்திக் கொண்டு விட்டு, உள் தாழ்ப்பா ளிடாமல் பூட்டி விட்டுச் சென்று மீண்டும் ‘சோபாவில்’ அமர்ந்து வெண் சுருட்டுப் புகைக்கலானார்…! ஏன்…?
மகேந்திரானாரை நித்திரா தேவி அரவணைத்துக் கொள்ள மறுத்துக் கொண்டிருந்தாள்…[ மூப்படைந்து விட்டது ஒரு காரணமாக இருக்கலாமோ…? நித்திரா தேவியும் இளமையைத்தான் விரும்புகின்றாளா…?
இரவில் நிசப்தமான வேளையில் இனிதமர்ந்து நீண்ட நெடிய நேரம் தான்மேற்கொண்ட “வழக்குகள்” அடிப்படையிலான ஆய்வு பற்றிச் சிந்தித்துக் கொண் டிருப்பது பணி புரியும் காலந்தொட்டே அவருக்கு இருந்து வரும் பழக்கம். இரவு நேரம்-தனிமை- சிந்தனை என்பதெல்லாம் அவருக்குக் கசப்பானதொரு அனுபவங்களல்ல…! இரவுக் கண்விழிப்பு எப்போதுமே அவருக்கு வெல்லம்…!
மீண்டும் “வாழ்க்கை அழைக்கின்றது…!” மகேந்திர னார் படிக்கத் தொடங்கி விட்டார்…! எத்தகைய ஆழ்ந்த சிந்தனையோடு படித்தாலும் எழுதினாலும் ஊசி விழும் ஓசைகூட அவர் செவிகளுக்கு எட்டிவிடும் அத்தகையதொரு நுட்பச் செவியுணர்வு…!
மகேந்திரனாருடைய பங்களா வீட்டின் தரைப் பகுதியில் ஓர் அறை தனியறை…! – பூசையறை-மற்றும் சாப்பாட்டு அறை…பரந்ததொரு கூடம்…முதலியன. ஓரடுக்கு மேற்படியில் மூன்று அறைகள்…இரண்டு பிள்ளைகளுக்கும் தனித்தனி அறைகள்…! மற்றொன்று நூல்கள் அடுக்கப்பட்ட அலமாரிகளும், தஸ்தாவேஜுகள்-பெட்டகங்கள் இருப்பாகி இருக்கும் இரும்பால் ஆகிய நிலைப் பேழைகளும் அமைந்துள்ள முக்கியமானதோர் அறை…!
மகேந்திரனார் “வாழ்க்கையின் அழைப்பில்” மூழ்கி யிருந்தார்…! “சும்மா” இருந்தால் அவருக்கு எதுவும் தேவையில்லை… ‘படிக்கவும்- எழுதவும்- சிந்திக்கவும் தொடங்கி விட்டால் அவருக்கு “ராஜ குரு’ சிகரெட் தான்… இறைவனுக்கு ஊதுவத்தி புகைவது போல, இவருக்கு “ஊதும் வத்தியின்” புகை துணையாக இருக்கும்…! மகேந்திரனார் தனக்குள் தானே வருந்தும் ஒரே தீய பழக்கம்!
அரவங்கள் ஓய்ந்து விட்டனவா…? சிறிதுநேர இடை வெளியைச் சிந்தனையிலும் சிகரெட் புகைப்பதிலும் செலவிட்டார்…! “வாழ்க்கையின் அழைப்பும்’ முத் தாய்ப்பு பெற்று விட்டதா…? மகேந்திரனார் மாடிக்குச் சென்றார்; ஏன்…?
அமைதியாக அடி பிறழாமல் மாடிப்படி ஏறிச் சென்ற மகேந்திரனார் ‘பொக்கிஷ” அறையைத் திறந்து புகுந்து-பின் வெளிவந்து பூட்டிக் கொண்டு விட்டு ஏன் மற்ற அறைக் கதவுகளைக் கண்ணோட்டமிடுகின்றார்? பிள்ளைகள் வீட்டில் இல்லாதபோது அறைக் கதவுகள் அனைத்தையும் ஒருமுறை இழுத்துப் பார்த்துக்கொண்டு “பூட்டியிருக்கின்றன” என்று உறுதிப் படுத்திக்கொண்டு தான் படுக்கைக்குச் செல்லும் பழக்கம் அவருக்குண்டு…! இப்போதும் அதைத்தான் செய்தார்…!
இப்போதைய சோதனையில் அன்பானந்தனின் அறைக் கதவு பூட்டப்படாமல் இருந்தது: திடுக்கீடோ அதிர்ச்சியோ அடையாத நிலையில் சிந்தித்தார்…! அமைதியாக- நிதானமாகச் சிந்தித்துப் பார்த்துக் கொண்டார்…!
இரவு ஏழு மணியளவில் இறைவழிபாட்டை முடித் துக் கொண்ட பின்னர், பொழுது போக்க வேண்டுமே என்பதற்காகப் புத்தகம் எடுக்க மாடிக்கு வந்தவர் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, உடன் பூட்டிக்கொண்ட தோடு நில்லாமல் மற்றிரண்டு மக்களின் அறைகளையும் மறுபரிசீலனை செய்து கொண்டுதான் சென்றார்…!
அமைதியாகச் சிந்தித்து அதை உறுதிப்படுத்திக் கொண்டு விட்ட மகேந்திரனாருக்கு, இப்போது அன்பா னந்தனின் அறைக் கதவு பூட்டப்படாமல் இருந்தது ஒரு பயங்கரமான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்க வேண் டும்…! ஆயின், மகேந்திரனார் எந்தவிதமான உணர்ச் சிப் பிரதிபலிப்புகளுக்கும் ஆளாகாமல் ஆடாமல் அசை யாமல் தன் பரந்த நெற்றியைச் சொரிந்து கொண்டு சிந்தனையில் மூழ்கிக் கொண்டிருந்தார்…! அது ஒரு பெரிய ஆச்சரியந்தான்…!
போலீஸ்காரர்களுக்கு “நுகர்வுச்” சக்தியையும், கட்செவிப் புலன் “உணர்வு” ஆற்றலையும் அரசு பயிற்று விக்கின்றதா…? அல்லது இறைவனே பிறப்பருளாய் அவர்களுக்குத் தந்திருக்கின்றானா…? புரிந்து கொள்ள முடியாத புதிராக “இயற்கைத் திறனாக” போலீஸ்காரர்கள் பெற்றிருக்கின்றார்கள்…!
“வாழ்க்கையின் அழைப்பில்” மூழ்கியிருந்த போது, பூனைகளின் நடமாட்டம் போல் ஒலித்துக் கொண்டிருந்த மெல்லிய பாதக் குறடுகளின் ஒலியை “ஜீரணித்துக்’ கொண்டிருந்த மகேந்திரனார்க்கு ஏற்பட்டிருந்த சுந்தேகம் இப்போது இப்போது ”ஊர்ஜிதம் ஆகிக் கொண்டிருந்தது…!
பெருங்காயம் இருந்த டப்பா மணக்கத்தான் செய் யும்……! என்று அன்பானந்தன் கூறிய தத்துவார்த்தம்… இப்போது செயல் பெறத் தொடங்கியிருந்தது. அறிவின் முதிர்ச்சியும், வயதின் பட்டறிவும், தொழில் நுட்பமும் துலங்கிக் கொண்டிருந்தது!
அன்பானந்தனின் அறைக் கதவைத் தன்னிடமிருந்த “சாவிக் கொத்தைப்’ பயன்படுத்திப் பூட்டி விட்டு, மாடியிலுள்ள மின்விளக்குகளை “சுவிட்ச் ஆப்’ செய்து விட்டு, அமைதியாக -மிகவும் அமைதியாக மாடிப் படியில் அடி வைத்து இறங்கி வந்து மகேந்திரனார் கூடத்தை வந்தடைந்தார்…!
பிள்ளைகள் உடன் இல்லாத நிலையில் பேருக்குச் சாப்பிட்டதால் வயிறு நிறைந்த உணவு இல்லை…! பெரி தாகச் சுமந்து விட்ட நெஞ்சு நிறைந்த சிந்தனைகள்…! மூப்பின் காரணமாய் அரவணைத்துக் கொள்ள மறுத்துக் கொண்டிருந்த நித்திராதேவி இப்போது ‘சுமையின்” காரணத்தால் அணைக்க மறுத்துக் கொண்டிருந்தாள்…! அமைதியாக அடுக்களைக்குச் சென்று, ஆர. அமர “கோப்பி ஓ” தயாரித்து, சுடுநீர்ப் பாட்டிலில் நிறைத் துக் கொண்டு கண்ணாடி டம்ளருடன் “ஹாலுக்கு» வந்து விட்டார்…!
சிந்திக்கத் தொடங்கி விட்டால் இருப்புக் கொள் ளளது அந்த பரந்த கூடத்துக்குள் குறுக்கும் நெடுக்கு மாகக் ‘குடுகுடு ” நடைபயிலத் தொடங்கி விடுவார்..!
நீதி மன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்-வாதித் தரப்புக்குரிய வழக்குரைஞர் காரசாரமான வழக்குரைத் தலில் ஈடுபட்டிருப்பது போல, இப்போது மகேந்திர னாரின் நெஞ்சத்து நீதிமன்றத்தில் இரண்டு வேறு மனங்களின் வாதப் பிரதிவாதங்கள் உச்சக் உச்சக் கட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தன…!
மன நிழல்களின் வாதப் பிரதிவாதங்களுக்கு ஒரு முத்தாய்ப்பு ஏற்பட்டு விட்டதா…? மகேந்திரனார் தெளிந்ததோர் முடிவுக்கு வந்து விட்டாரா? சிகரெட் புகையின் நெடியமணம் கூடம் முழுமையும் கமழ்ந்து கொண்டிருந்தது.
விடிகாலைப் பொழுது…! பங்களா வீடுகளில் வளர்க் கப்படும் சேவல்களின் கூட்டுக் குரல்கள் சேர்ந்து “கோரஸ்” போல் ஒலித்துக் கொண்டிருந்தன…! ஓய்வு பெற்ற முன்னாள் உயர் அதிகாரியாக இருந்தாலும் “பழக்கத் தோஷம்”-அந்த விடிகாலைப் பொழுதுக்குப் பின் படுத்திருக்க முடிவதில்லை! இன்றுதான் “ஏகாதசி விரதம் போல்” உறக்கமே இல்லை; எழுந்திருக்கும் தேவையும் இல்லாமல் இருந்தது.
அதிகாலைக் கடன்கள் எல்லாவற்றையும் அடிப்படை மாறாமல் வழக்கமாக முடித்துக் கொண்டு, அமைதியாகவே சென்று காலைப் பொழுதுக்கு உரிய காப்பியையும் கலந்து கொண்டு வந்து, ஹாலில் இருக்கின்ற “சோபாசெட்” மேசையில் வைத்து அருந்திக் கொண்டிருந்தார்…!
அதிகாலை ஆறுமணி ஆகியிருக்கக் கூடும்..! மகேந் நிரனார் தொலைபேசித் தொடர்பில் பேசிக் கொண்டிருந்தார்..! அத்தனை அதிகாலையில் யாருக்கு அத்துணை அவசரமாக “போன்” செய்து கொண்டிருந்தார்…?
மகேந்திரனார் “போன் பேசி முடிப்பதற்கும், வீட்டின் தலைவாசலைத் திறந்து கொண்டு அன்பானந்தன் வருவதற்கும் சரியாக இருந்தது…! அன்பானந்தன் வழக்கம் போல் தன் தந்தைக்கு “குட் மார்னிங்” சொன்னான்…! ‘மகேந்திரனாரின் பேதில் “மார்னிங்” வரவில்லை…! அன்பானந்தன் மாடிப்படி ஏறிச் சென்றான்…! அன்பானந்தனின் அறைக் கதவுக் குரிய இரண்டு திறவு கோல்களுமே மகேந்திரனாரிடம் இருந்தன…! அதெப்படி…?
கேடுவரும் பின்னே… மதிகெட்டு வரும் முன்னே.. ! அனுபவ முத்திரை வாய்ந்த பொன்மொழி…! சுவர் ஏறிக் குதித்த அவசரத்தில் என்றும் தவறாத “சாவி” இன்று கைநழுவி விட்டிருந்தது…! “விதியை மதியால் வெல்லலாம்; ஆனால், விதியை மதியால் கொல்ல முடியாது”- என்பது ஆன்றவிந்தடங்கிய சான்றோரின் அமுதவாக்கு…!
ஆன்றோர்களின் அமுதமொழி அன்பானந்தனின் வாழ்க்கைப் பாதையில் உலா வந்து கொண்டிருந்தது. அறைக் கதவைத் திறப்பதற்குக் காற்சட்டைப் பைக்குள் கையை விட்டுத் துழாவிக் கொண்டிருந்தான்.
போலீசார் வந்து விட்டனர். மகேந்திரனார் அன்பா னந்தனின் அறைக் கதவின் திறவு கோலைக் கொடுத் தார். அன்பானந்தன் “அரஸ்ட்” செய்யப்பட்டான்…!
தந்தையும் பிள்ளையும் “தார்மீகம்” நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளாத நிலையில் தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தனர். இரவு முழுவதும் “டியூட்டி” செய்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த அறிவழகன் வீட்டின் தலைவாசற்படியைக் கடந்து வருவதற்கும், அன்பானந்தன் விலங்கிடப்பட்ட நிலையில் வெளியே அழைத்துச் சொல்லப்படுவதற்கும் சரியாக – நேர்முகக் காட்சியாக அமைந்தொளிர்ந்தது. நடந்தவை நடந்தவைதானே…!
அறிவழகனும் மகேந்திரனாரும் ஒருவரோடொரு வர் பேசிக் கொள்ளாத நிலையில் ஒரு சில மணித்துளி கள் கடந்து விட்டன. மகேந்திரனாருக்கு மயக்கம் வந்து விட்டது. சமாளித்துக் கொண்டே சென்று சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டார். அறிவழகன் “தொப்பியை” மட்டும் எடுத்து மேசைமீது வைத்து விட்டுச் சென்று, மகேந்திரனாரின் நெற்றியை இதமாக வருடிக் கொண்டே… “என்னங்கப்பா இதெல்லாம்…”? – குரல்வளை காய்ந்து விட்டிருந்த நிலையில் துக்கம் தொண்டையை அடைத்துக் கொள்ள ‘ஈனஸ்தாயில்” கேட்டான். மகேந்திரனார் பதில் எதுவும் சொல்ல வில்லை…! அவர்தம் கண்ணின் கருமணிகள் நிலை குத்தி நின்ற நிலையில் சரம் சரமாகக் கன்னங்களின் வழி கரைந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீர் முத்துகளே பதிலாகி வந்தன…!
“போதைப் பொருள் புழங்குதலும் வழங்குதலும் ஆகிய நிலை கண்டு பிடிக்கப்பட்டால் உச்சவரம்புத் தீர்ப்பு தூக்குத் தண்டனையாகும் . !” என்பது சிங்கப்பூர் நாட்டின் அரசியல் சட்டம்.
கள்ளத் தோணிகளின் மூலம் கடத்தல் கடத்தல் செய்து “கரன்சிகளைக்” கொண்டு வந்து குவித்துக் கொண்டிருந்த தன் அன்பு மைந்தன் அன்பானந்தன் தன்னாலேயே கண்டு பிடிக்கப்பட்டுக் காட்டிக் கொடுக்கப்படு வான் என்பது கனவில் கூட நினைத்துப் பார்க்காத ஒரு நிகழ்ச்சியாகும்…!
விதி வலிது…! இது இப்படித்தான் நடக்க வேண்டும் என்றிருந்தால், அது அப்படியேதான் நடந்து தீரும்; அதை மாற்றியமைக்க யாராலும் முடியாது..!
மகேந்திரனாரின் வேண்டுகோளுக்கிணங்க பேரும், பேரைச் சார்ந்த “ஃபேமிலியின்” விபரமும் இல்லாத அமைப்பில், நீதி மன்றத்தின் தீர்ப்பு “நியூஸ் பேப்பர் களில்” வெளியாகி விட்டன. அன்பானந்தன் இறுதி வரை ஊமையாகித் தான் மட்டுமே பலியாகத் தயாராகி நின்றான்.
விடி காலைப் பொழுதில் தண்டனை நிறைவேற்றப் பட்டது…! இறுதியாகப் பார்த்துவிட்டு, “அஸ்தியையும்” வாங்கிக் கொண்டு வீடு திரும்பி வந்து “விளக்கு’ பார்க்கும் போது கூட, விதிர்ந்து போகாத நிலையில் மகேந்திரனார் மிகவும் சாவதானமாகவே இருந்தார். அத்தனைப் பெரிய கல் நெஞ்சமா?…
தானாடா விட்டாலும் தன் சதையாடும் என்பார் களே… அறிவழகன் துன்பத்தால் துவண்டு போயிருந் தான். மகேந்திரனார், அறிவழகனைத் தேற்றி, “டேக்கிட் ஈஸி…! என்று சொல்லுகின்ற அளவுக்கு நிலைகுலையாத மனோபலத்தை எங்கிருந்து எப்படிப் பெற்றார்…?
ஒற்றைக்கொரு மனிதனின்-ஒரு குடும்பத்தின் உறுநலம் கருதாமல், நாட்டின் நலம் எண்ணி ஒளிவு மறைவு இல்லாமல் வாழ்பவனே உண்மையான குடி மகன்…! நாசங்கள் ஒழிய -ஒழிக்க உதவுபவனே உண்மைக் குடிமகன் ..!
பெற்ற பாசத்துக்காகவோ பெரிதுவந்த நேசத்துக் காகவோ நாட்டின் சட்டத்தை மதிக்காமல் இருப்பது- மறைத்து வாழ்வது “குடிமை” அல்ல ..
ஒரு மகனைப் பறிகொடுப்பதால் ஓரிலக்கம் இளைய தலைமுறையினரைத் தீய வழியினின்றும் திருத்தக் கூடு மென்றால் உண்மைக் குடிமகனே… உன் மகனைக் கூற்று வனுக்குத் தாரை வார்க்கத் தயங்காதே.. !
மகேந்திரனாரின் நெஞ்ச நீதிமன்றத்தின் கண் நிழலாடிய மனநிழல்களின் வழக்காடலில் வெற்றி பெற்ற -மகேந்திரத் தீர்ப்பு..!
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து சுமந்து பெற்றெடுத்து, பாலூட்டி-சீராட்டி அல்லும் பகலும் அயராது கண் விழிப்போடு காத்து வளர்த்து காளைப் பருவத்தில் தன் மகனைக் கண்டு மகிழ்ந்து கொண் டிருந்த ஒரு தாய்… தன்னுடைய மகன் ஒரு ‘போதைப் பொருள் புழங்கியாக -வழங்கியாக இருக்கின்றான்” என்று தெரிந்தவுடன் சற்றும் தயங்காது போலீசுக்கு அறிவித்து அவனைக் கழுவிலேற்றும் காட்சியைக் கலங்கா மல் பெருமிதத்தோடு பார்த்து மீண்டாள்…!
அத்தகைய “தியாகத் தாயர்” வாழும் பெருமைக் குரிய சிங்கைத் திருநாட்டில் என்னுடைய இந்தச் செயல் மிகவும் சாதாரணம்…என்று, ஒரு சிறிதும் துன்ப நெகிழ்வே இல்லாமல் மனோதிடத்துடன் அரசு தரப்பினரின் கேள்விகளுக்குப் பதிலளித்திருந்தார்…!
மகேந்திரனாருடைய பங்களா வீட்டின் மாடிப் பகுதியில் அமைந்திருந்த மூன்று அறைகளுள் அன்பானந் தனின் அறை இப்போது மூடியே கிடக்கின்றது. அவருடைய உள்ளத்திலும் அன்பானந்தன் நிலை பெற்றிருந்த இடம் இப்போது வெற்றிடமாக வறிதே கிடக்கின்றது.
தன்னுடைய மறைவுக்குப் பின் சொத்துப் பங்கீட்டில் “தாரதம்மியம்” வந்துவிடக் கூடாது என்பதற்காகத் தனிக் கணக்கு வரவு வைத்துக் கொண்டிருந்த மகேந்திர னார், பழி மலைந்து எய்தியதாகக் கருதப்பட்ட தன் இளைய மகன் அன்பானந்தனின் வருவாய் முழுமையை யும் அற நிறுவனங்களுக்குப் பங்கிட்டு அர்ப்பணித்து விட்டார்…!
அந்தியேட்டிக் கிரியைக்குரிய அந்தப் பதினாறாம் நாள் இன்னும் பூர்த்தியடையவில்லை…! அணையா விளக்கின் முன் பிரகாசித்துக் கொண்டிருந்த-மாலையிடப்பட்ட தன் அன்பு மகன் அன்பானந்தனின் திருவுருவப்படத்தையே கூர்ந்து பார்த்துக் கொண் டிருந்த மகேந்திரனார், நான் உன்னை, “மாலையும் கழுத்துமாகப்” பார்த்து விட்டேனா… என்று தனக்குள் தானே கேட்டுக் கொண்டார்.
வெறிச்சோடிக் கிடந்த வானில் ஒரே நிலா” i மகேந்திரனார் உள்ளத்திலும் “ஒரே நிலா…!
– சிந்தனைப் பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற்பதிப்பு: 1988, விஜயா சபரி பதிப்பகம், சென்னை.
![]() |
மு.தங்கராசன் தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்திலுள்ள தளுகை பாதர்பேட்டை என்ற ஊரில் 1934ல் பிறந்தார். இரண்டாவது வயதிலேயே தனது தாயை இழந்தவர், தந்தையோடு மலாயாவுக்கு வந்தார். ஜோஹூர் மாநிலத்திலுள்ள ‘நியூஸ்கூடாய்’ தோட்டத் தமிழ்ப் பள்ளியியில் ஆசிரியராக இருந்த தனது தந்தையிடம் தமிழ்க் கல்வியைக் கற்றார். 1955ல் ஆசிரியர் பட்டயம் பெற்ற இவர் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1955ல் தமிழ்முரசில் பிரசுரமான…மேலும் படிக்க... |
