ஊரடங்கு
கதையாசிரியர்: மஞ்சுளா ரமேஷ் ஆரணி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 112

கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 50 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. டிவி சேனல்கள் அனைத்தும் அவர்களுக்கே உரிய பாணியில் செய்திகளை ஒளிபரப்ப போச்சுடா என்றபடி லலிதா ஆயாசப்பட, அதே நேரத்தில் சிவா நிம்மதி பெருமூச்சு விட்டான்.
இருவருக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டு கள் கடந்த நிலையில் குழந்தை ப்பேறு இல்லாமல் போனது.ஆரம்ப காலகட்டங்களில் சிவா வேதனைப்பட்டாலும், நாளடைவில் வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ பழகிக் கொண்டான்.
ஆனால் லலிதாவின் வேதனை தான் இன்று வரை தீர்ந்தபாடில்லை. கடந்த ஓராண்டாகவே அவளின் நச்சரிப்பு அதிகரித்து இருந்தது. சிவாவை மறுமணம் செய்து கொள்ளச்சொல்லி பலப்பல விதங்களில் அவனிடம் சொல்லியும்பார்த்து வந்தாள்.அதற்கு மறுப்பு சொல்வதே சிவாவின் பதிலாக இருந்துவந்தது, இதுகுறித்து பத்து நாட்களுக்கு முன்பு இருவருக்கிடையில் பலத்த வாக்குவாதம் வெடித்தது.
லலிதாதான் ஆவேசமாகப் பேசினாள்.
எந்த பொண்ணாவது புருஷனை பங்கு போட விரும்புவாளா? அது எவ்வளவு பெரிய வேதனை, அதையெல்லாம் மீறி உங்களை ஏன் மறுமணம் செய்துக்க சொல்றேன்னு கொஞ்சம் புரிஞ்சுக்குங்க. நான் ஆசை தீர உங்க கூட வாழ்ந்தாச்சு, அது போதும், உங்க மூலமா நமக்கு ஒரு குழந்தை வேணும், எல்லாத்தையும் விட இப்ப எனக்கு அதுதான் முக்கியம்.
பேசிக்கொண்டே போன அவளைத்தடுத்துப் பேசினான் சிவா,
சரி லலிதா, நீ இப்ப சொன்ன எல்லாத்தையும் திருப்பி உனக்கு நான் சொன்னா ஒத்துப்பியா?
கேட்டவனை கோபத்தோடு முறைத்துப்பார்த்தவள், அன்றிலிருந்து அவனோடு பேசுவதையே அறவே நிறுத்தினாள். தினமும் கண்ணீராலேயே கரைந்து கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்து சகிக்க முடியாமல் சிவா ஒரு விதமாக மறுமணத்திற்கு சம்மதம் தந்திருந்தான், அந்த வேளையில்தான் இந்த ஊரங்கு உத்தரவு.
இங்க பாரு லலிதா, இனிமேலயாவது நான் சொல்றதை கொஞ்சம் கேளு, இத்தனை நாளா பிசினஸ், பிசினஸ்ன்னு நிக்க நேரமில்லாம ஓடிகிட்டிருந்தேன், இந்த 50 நாள் நான் நிம்மதியா வீட்டில் இருக்கணும்னு நினைக்கிறேன், அட்லீஸ்ட் இந்த 50நாள் வரைக்குமாவது கல்யாணப்பேச்சை எடுக்காத, ஊரடங்கு முடிஞ்ச பின்னாடி அதைப் பார்த்துக்கலாம். அதுவரைக்கும் நம்மள பத்தி மட்டும் பேசுவோம். நான் உன்ன பொண்ணு பார்க்க வந்த நாளை நினைச்சிப் பார்க்கலாம், நம்ம கல்யாண வீடியோ, போட்டோ எல்லாம் பார்த்துகிட்டு சந்தோஷமா இருக்கலாம்.வேற எந்த பேச்சும் வேண்டாம், சரியா?
கேட்டவனுக்கு புன்னகை யை பதிலாகத்தந்தாள், லலிதா.
அவன் சொல்லியபடியே ஒவ்வொரு நாளையும் மிகவும் இனிமையாக கழித்தனர். ஆனந்தம் அவர்களுக்குள் கரைபுரண்டு ஓடுமளவிற்கு இருவர் மட்டும் நிறைந்த அந்த வீட்டில் குழந்தை இல்லை என்ற ஏக்கம் கூட கொஞ்சம் ஒதுங்கியிருந்ததாகவே தோன்றியது.
ஊரடங்கு முடிவு க்கு வந்தது, ஆனாலும் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற அடையாளங்கள் சட்டமாயின.
சிவா ஆபிஸ் கிளம்ப ஆயத்தமானான்.
லலிதா டிபன் ரெடியா?
உள் நோக்கி குரல் கொடுத்தான், எந்த பதிலும் வராமல் போக அறையினின்று வெளியே வந்தான்.
அங்கு ஸோபாவில் பிரமை பிடித்தாற்போல் லலிதா அமர்ந்திருந்தாள்.
போச்சுடா இவ பழையபடி கல்யாணப் பேச்சை ஆரம்பிக்கப்போறா போல, சுள்ளென்று எரிச்சல் வந்தாலும், அதை அடக்கியபடி லலிதாவின் முன் போய் நின்றான் சிவா.
என்ன லலிதா கூப்பிட கூப்பிட அப்படியே உட்கார்ந்திட்டிருக்க என்னாச்சு?
ஆதுரத்துடன் அவளின் கையைப்பற்ற, லலிதாவின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. அவளின் முகம் உணர்ச்சி களின் பிழம்பாக மாறி, உதடுகள் கேவலுக்கு ரெடியாக.
அனைத்தையும் சமாளித்து லலிதா, சிவாவின் கைகளை இறுகப்பற்றியபடி கூறினாள்,
நான் நான் கன்ஸீவ் ஆயிருக்கேங்க…
அடுத்த நொடி அவளின் அனைத்து உணர்வுகளும் சிவாவிற்குள் இடம்பெயர, கண்மூடி மானசீகமாய் கடவுளுக்கு நன்றி கூறினான்.
முகம் முழுக்க ஆனந்தம் நிறைநதிருந்த லலிதாவை நோக்கி, கண்களில் குறும்பு மின்ன சிவா வினவினான்,
ஊரடங்கு முடிஞ்ச பின்னாடி எனக்கு பொண்ணு பார்க்கலாம்னு சொன்னியே என்னாச்சு, கேட்டவனை அதே குறும்போடு பார்த்த லலிதா.
கண்டிப்பா பொண்ணு பார்க்க போலாம், ஆனா அது இப்ப இல்ல, நமக்கு பிறக்கறது ஆணாயிருந்தா அவன் வளர்ந்து பெரியவன் ஆனதும்.
சொல்லிவிட்டு சிரித்தவளோடு இணைந்து சிரித்தான் சிவா.
ஊரடங்கு அவர்களது வாழ்க்கையில் இனிய கவிதை ஒன்றை எழுதிவிட்டது.