உழைப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 3, 2025
பார்வையிட்டோர்: 341 
 
 

(1964ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1

அவன் உயிர் வாழ்ந்த காலத்தில்… 

உலகை மறந்த, சுயத்தை மறந்த, நீண்டநேர உழைப்பு. 

கைகள் ஓய்ந்தன; தூரிகை நின்றது.  

ஓவியம் பூர்த்தியாயிற்று. 

அற்புதமான சிருஷ்டி. கலையின் நிறைவு. போதின் புன்னகையில் மலர்ந்த ரோஜா மலரை இரண்டு இலைகளுடன் கிள்ளியெடுத்து, அப் படுதாவிலே செருகி வைத்ததைப் போல… அவ்வளவு அசல். 

‘கலையென்பது பிரதியெடுக்கும் விவகாரந்தான். இயற்கை அன்னை தந்துள்ள ரோஜா அநித்தியமானது. இன்று மலர்ந்து, நாளை வாடி, மறுநாள் அது வாழ்ந்த சுவடுந் தூர்ந்து நான் இப்படுதாவிலே படைத்துள்ள ரோஜா, கலா சிருஷ்டியாக நித்தியத்துவமெய்தி வாழப் போகின்றது…’

நிறைவிலே துளிர்த்த எண்ண அலைகளைப் பசியுணர்வு விழுங்கத் தொடங்கிற்று. மூன்று நாட்கள் முழுப் பட்டினி. அதன் உக்கிரத்தின் நீள்கரம் அடிவயிற்றைத் துழாவிற்று. 

‘எனது ஆற்றலைப் பிழிந்து உருவாக்கிய ஓவியங்கள். ஓரிரண்டை விற்றால், ஒரு மாதத்திற்குப் பணக் கவலையே இருக்க மாட்டாது. அற்புதமா ஓவியங்கள். நல்ல விலைக்குப் போகும்…’ 

முதன் முதலாகத் தனது படங்களை விற்கப் புறப்பட்டான். தன்னம்பிக்கை நிழல் விரிக்க நீள்நடை. 

கலாரசனை மிக்க தனவந்தர்க ளென்று மக்களால் ஏத்தப்பட்டோர் ஒவ்வொருவருடைய வீட்டுப் படியாக ஏறி இறங்கியாகிவிட்டது. ஒவ்வொரு படியாக இறங்கிய பொழு தெல்லாம், நிதர்சனத்தின் வெயிற் காங்கை அவனைச் சுட்டது. 

“பைத்தியக்காரா! இந்த இயற்கைக் காட்சிகளைச் சித்திரிக்கும் ஓவியங்களை யார் விரும்பப் போகின்றார்கள்?…. உனது ரோஜாப் பூ ஓவியத்தை மாட்டி வைப்பதிலும் பார்க்க, தினந் தினம் நூறு அசல் ரோஜாப் பள்ளியறையை அலங்கரிக்கலாமே! வாலைக் குமரிகளின் நிர்வாணக் கோலங்களைப் பல கோணங்களிலே வரைந்து கொண்டு வா. நமது பள்ளியறைகளை அலங்கரிக்க அவைதான் பொருத்தமானவையாக இருக்கும்.” 

தனவந்தர் சிந்திய ஒவ்வொரு வார்த்தையும் அவனது பிடரியை உந்தித் தள்ளியது. 

‘என் கலையும். கற்பனையும்!… தனவந்தர்களுடைய பாலுணர்ச்சியைக் கிளறவல்ல போதைப் பொருளாகக் கலையை அமைக்கவல்ல கலைஞனே உயிர் வாழ்கின்றான்…’ 

வீட்டிற்கு வந்தும் மனம் அமைதி கொள்ளவில்லை. அம்மண உண்மையின் சுமை மனதை அமுக்கத் தொடங்கிற்று. 

பசியை மறந்த ஓர் ஆவேசம். பசி 

தூரிகையை எடுத்தான். கைகள் சுறுசுறுப்புப் பெற்றன. 

ரோஜா மலரின் பின்னணியாக இருந்த வெற்றிடத்தில், வாலைக் குமரி ஒருத்தியின் நிர்வாணக் கோலத்தை வரைந்து பார்த்தான். 

‘ரோஜாவைக் கொத்துக் கொத்தாகப் பள்ளியறையிலே அடுக்கி வைக்கக்கூடிய தனவந்தர்கள் இந்த மாமிசக் கூடுகளையும் உயிருள்ளவையாக அமர்த்தி வைக்கலாமே! இதில் மட்டும் ஏன் அசலற்ற நகல் தேவைப்படுகின்றது?’ 

பசிக்களையிலே தலை சுற்றியது. ஓவியத்தின் மீது மயங்கி வீழ்ந்தான். வண்ணங்களைக் கலப்பதற்காகப் பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்த நீர், கைகளால் தட்டுப்பட்டுக் கவிழ்ந் தது. நீர் ஓவியத்தின் ஒரு பகுதியிற் சிதறியது. படுதாவின் சில பகுதிகளி லிருந்த நூற் பிரிவுகளில் நீர் உப்பி, ஓவியனின் கற்பிதத்தின் பிரகாரம் இடம் பெற்றிருந்த நிறங்களுடைய இடங்களையும் அமைப்பையும் மாற்றிச் சிதைத்தது. 

ஓவியத்தில், அழிவு கற்பிக்கும் புதுக்கோலம்! 

அதனை அழிக்கவோ, திருத்தி எழுதவோ அவன் வாழவில்லை. 

அவன் செத்துப்போனான். 

2

இன்று, அவன் புகழுடம்பெய்தி வாழ்கின்றான். 

அன்று விலைபோகாத படங்களுக் கெல்லாம் இப்பொழுது புதிய மதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. தனவந்தரின் கைக்கு மட்டும் எட்டக்கூடிய உச்ச விலை. 

படத்தின் மதிப்போ? சாவின் விலையோ? 

இறுதி ஓவியம் உலகின் சிறந்த ஓவியமென்று பலராலும் பாராட்டப் படுகின்றது. ஒரு தனவந்தர், அதனை கோடி ரூபாவுக்கு வாங்கித் தனது அறையை அலங்கரித்திருக்கின்றார். 

“இத்தகைய ஓவியத்தை வரை யத் தக்க ஓவியன் ஒரு யுகத்திற்கு ஒரு தடவைதான் தோன்றுகின்றான்.. ரோஜாவின் அழகுப் பொலிவு அப்படியே தெரிகின்றது. அதன் பின்னணி யில், ஒரு பெண்ணின் நிர்வாண ஓவியம். அது, கால ஓட்டம் என்னும் வெள்ளத்தில் அழிந்து போவதாக எவ்வளவு நேர்த்தியாக அமைந்துள்ளது…” 

புதிய விளக்கங்களும், பாராட்டுரைகளும்! 

விளக்கமோ? சிந்திய தண்ணீர் கற்பிக்கும் மயக்கமோ? 

ஓவியன் செத்துப்போனான். 

– மரபு (உருவகக் கதைகள்), முதற் பதிப்பு: தைப் பொங்கல் 1964, அரசு வெளியீடு, கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *