உழைப்பாளி
கதையாசிரியர்: மஞ்சுளா ரமேஷ் ஆரணி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 141

கோடைவெயில் அமிலம் போல சுட்டெரித்தது. முகத்தில் வழிந்த வியர்வையை புடவை முந்தானையால் அழுந்தத் துடைத்தாள் வடிவு. இப்படி பொளக்குதே வெயிலு, வாய்க்குள் முனங்கினாள்.
இன்னா வடிவம்மா? மொணமொணங்கற…
துண்டால் முகம், கழுத்தைச்சுற்றித் துடைத்தபடி வந்த மேஸ்திரி மயில்சாமி வடிவிடம் வினவினான்.
எல்லாம் காயுதே இந்த வெயில பத்தித்தான். உசிரோடவே நம்பள எரிச்சிடும்போல,
உனக்கின்னா , இந்த வெயில்ல ஒழைக்கணும்னு, தலையெழுத்தா? உம்புள்ளங்ககிட்ட போய் இருந்துகிட்டு ஒக்காந்து திங்கலாமில்ல..
நல்லா சொன்ன போ, ஒக்காந்து திங்கறதா? ஒழைச்சித் தின்னாதான் செரிக்கும்
ஒழைக்கறதுக்கும் வயசு வேணாமா, ஒனக்கு அறுவது தாண்டிடிச்சி இல்ல? இப்ப போய் உன்னய வருத்திக்கணுமா?
ஆற்றாமையில் பேசும் மயில்சாமியை பரிவுடன் ஏறிட்டாள் வடிவு,
ஒழைக்கிறதுக்கு வயச விட மனசு முக்யம், ஒடம்புல கொஞ்சம் தெம்பும் அதோட மனசிலயும் கொஞ்சம் தெம்பும் இருக்கறதால ஏதோ ஒழைக்கிறன், கிடைக்கிற காசுல பேரப்புள்ளங்களுக்கு எதனா வாங்கி கொடுக்கும் போது அதுங்க மூஞ்சில தெரியற சந்தோசமே போதும் எனக்கு…
இப்படி த்தான் கட்டிட வேலைகளுக்கு இடை யே கிடைக்கும் ஓய்வு வேளைகளில் மேஸ்திரி மயில்சாமியும், சித்தாள் வடிவும் பேசிக்கொள்வர்.
அறுபது வயதிலும் உழைக்கும் வடிவின் மேல் தனிப்பட்ட மரியாதை, அதோடு சற்றுப் பரிவும் கலந்த உணர்வு எப்போதுமே மயில்சாமிக்கு உண்டு.
தேனீர் இடைவேளையில் ஆங்காங்கு கிடைத்த இடங்களில் ஆண்மேஸ்திரிகளும், பெண் சித்தாள்களும் உட்கார்ந்தபடியும்,படுத்தபடியும், வம்பளப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அனைவருக்கும் தேனீர், பட்டுவாடா நடைபெற்றுக்கொண்டிருக்கையில் அவர்கள் எதிரே வேன் வந்து, நின்றது, அதிலிருந்து இளைஞர் இருவர் இறங்கினர்.
எல்லோரும் அவர்கள் யார் என புரியாமல் வேடிக்கை பார்க்க, அவர்கள் கைகளில் உணவு பொட்டலங்கள் நிறைந்த பெரிய பை இருந்தது.
பையிலிருந்து ஒவ்வொரு பொட்டலமாய் எடுத்து அங்கிருந்த கட்டிடத் தொழிலாளர்களிடத்தில் கொடுக்க விழைந்தனர்.
அதைப் கண்ணுற்ற மயில்சாமி, எந்த தலைவருக்கு பொறந்தநாளோ பிரியாணி பொட்டலம் கொடுக்கறாங்க,
அவன் சொல்லிமுடிக்கையில் கைகளில் வைத்திருந்த பார்சலோடு அவர்கள் எதிரே வந்த அந்த இளைஞர்கள்.
மயில்சாமியையும், வடிவையும் பொதுவாகப் பார்த்தவாறு பேசினர்.
நாங்க இளைஞர் நற்பணி மன்றத்தில் இருந்து வரோம். ஒவ்வொரு ஆண்டும் உழைப்பாளர் தினத்தன்று உழைப்பாளிகளை சந்தித்து அவங்களுக்கு ஒருவேளை உணவும், நூறு ரூபாய் பணமும் கொடுத்து சிறப்பு செய்யறோம்.
இந்த வருடம் கட்டிடத்தொழிலாளிகளை சந்திக்கணும்னு உத்தேசித்து கிளம்பினோம், வழியில உங்களை பார்த்தோம்.
அதான் கொடுக்கலாம்னு,, சொல்லிக்பொண்டே பார்சல் எடுத்து இருவரிடமும் நீட்ட, இருகைகளாலும் மறுத்து தடுத்தாள் வடிவு.
வேணாம் ராசா, ஒருவேளை கூட எங்கள சோம்பேறியாக்கிடாதீங்க.
நாங்க குடிக்கிற கஞ்சியோ, கூழோ எங்க ஒழைப்புல வந்ததா இருக்கணும், அதான் ஒழைப்பாளிங்களுக்கு சிறப்பேகண்டி, இனாமா வரது எதுமே சிறப்பு சேக்காது, நாங்க படிக்காதவங்கதான். ஆனா வாழ்க்கை ப்பாடம் கத்துக்கிட்டு இருக்கோம். ஒழைக்காம கிடைக்கற எந்த பொருளும் ஒட்டாது, மன்னிச்சிடுங்க தம்பி எனக்கு இது வேணாம்.
இதுபோன்ற பதிலை இதுவரை கேட்டிராத இளைஞர்கள், உண்மையான உழைப்பாளியை கண்ட உணர்வில் பேச்சற்று நின்றனர்.