உள்ளே வெளியே…






நுழையும் போதே பியூன் ரங்கசாமி அப்படி வந்து நின்றது இவனுக்குள் சற்று எரிச்சலைத் தான் ஏற்படுத்தியது. ஆனால் அந்த ‘ஐயா’ என்ற வார்த்தை இவனை சாந்தப்படுத்தியது. ரங்கசாமிக்கே உள்ள தனிப் பாணி அது. இரண்டு தலைமுறைக்கு முந்தியவர். ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர். ஆனாலும், நேற்று சர்வீஸுக்கு வந்த சிறு பையன்களைக் கூட அப்படிக் கூப்பிட்டுத்தான் வழக்கம் அவருக்கு. “ஏன் ரங்கசாமி! ‘ஏ’ அஸிஸ்டென்ட் வரல்லியா?” என்றான் இவன்.
“இன்னிக்கு எங்கய்யா வரப் போறாங்க.. பஸ்ஸு தான் ஓடலையே!
அலுவலகத்துக்குள் நுழைந்தான் சுந்தரம். யாருமே வந்திருக்கவில்லை . நகரில் ‘பந்த்’ அறிவித்திருந்ததால் பஸ்கள் எதுவும் ஓடவில்லை. முன் மாலையே ஆறுமணியோடு நின்று போயின எல்லாம்.
இது தான் சாக்கென்று ஆபீஸ் வருவதைப் பலரும் தவிர்த்து விடுகிறார்கள்.
அத்தனை பேரும் இல்லாமல் போய், தான் மட்டும் வந்திருப்பதில் ஒரு சலிப்பு வந்தது சுந்தரத்துக்கு. தொடர்ந்து தொலைபேசி மணி அடிப்பதும், எழுந்து எழுந்து போய் அதற்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதும்……
“உங்க ஏரியாவெல்லாமும் மோசம் தானங்கய்யா.. நீங்க மட்டும் ஏன் ஆபீஸ் வந்தீங்க…..? பேசாம வீட்ல இருக்கலாமில்ல?” ஏதோ உணர்ந்து கொண்டது போல் கேட்டே விட்டார் ரங்கசாமி.
“அதை விட ஆபீஸ் வேலையை நினைச்சா ஆளைத் தள்ளுதே… வீட்ல உட்கார விடமாட்டேங்குதே!”
“அது கிடக்குங்கய்யா.. கடலலை ஓயுமா? ஊர்ல இம்புட்டு களேபரமா இருக்கைல, கிளம்பி வர்றது ரிஸ்க் தானே?”
“பரவால்ல. அதனாலென்ன.. இன்னிக்கு ஆபீஸ் வந்ததுனால, உங்களுக்கு உதவ முடியுதே!”
“ஆமாங்கய்யா… இன்னிக்கு மட்டும் நீங்க வரல்லைனா எம்பாடு திண்டாட்டந்தான் பில் போட்டுக் கொடுத்தீங்கன்னா, டிரஷரி போய் கேஷ் பண்ணிட்டு வந்துடுவேன்…”
“சீஃப் வர வேண்டாமா? கையெழுத்துப் போடணுமே?” “வீட்டுக்குப் போயி வாங்கிக்கிட்டு, அப்டியே டிரஷரிக்கும் போயிட்டு வந்துடறேன்…”
ஆபீஸர்கள் கூட இம்மாதிரி சமயங்களில் மிகவும் பாதுகாப்பாக வீட்டில் உட்கார்ந்துகொள்வதும், ஸ்டாஃப் எல்லோரும் வந்திருக்கிறார்களா என்று ஃபோன் பண்ணிக் கேட்டுக் கொள்வதும்…
தான் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, அலுவலகப் பணியாளர்கள் மட்டும் கரெக்டாக வந்து சேர வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?
‘சரி, வந்ததுக்கு ரங்கசாமிக்காவது உதவுவோம்’ என்று பில் பாரத்தை எடுத்தான். தொலைபேசி மணி அடித்தது. சீஃப் தான் பேசினார்.
“என்ன சுந்தரம்… வந்துட்டீங்களா? உங்களைத் தான் நினைச்சேன்.. ஆனுவல் எக்ஸ்பென்டிசர் ஸ்டேட்மெண்ட் இன்னிக்கு ஸ்பீடு போஸ்ட்ல அனுப்பியாகணும். போனவுடனே அனுப்பறேன்னு மெட்ராஸ்ல சொல்லிட்டு வந்துட்டேன். ப்ரிபேர் பண்ணி வீட்டுக்கு அனுப்பி வைங்க… ஓகே… வெச்சுரட்டுமா?” லைன் துண்டிக்கப்பட்டது. இவனுக்குப் பேச இடைவெளி இல்லை.
“பார்த்தீங்களா ரங்கசாமி, அனுவல் ஸ்டேட்மெண்ட் வேணுமாம்…. அதை ‘ஏ’ல்ல தயார் பண்ணணும்? எங்கிட்டே சொன்னா….? அவர் வந்திருக்காரா இல்லியான்னு கூடக் கேட்டுக்காம ஆர்டரா சொல்றதைப் பாருங்க! முதல்ல உங்க பில்லு… அப்புறம் தான் மற்றது…” ரங்கசாமியின் முகத்தில் நிறைவு. பிற்பகல் தனது பிராவிடண்ட் ஃபன்ட் பில்லைக் கேஷ் பண்ணிய சந்தோஷத்தில், கையில் மாலை நாளிதழுடன் வந்து நின்றார் ரங்கசாமி.
“ஐயா, பீபிகுளம் பக்கமெல்லாம் ரொம்ப மோசமா இருக்காம்… நீங்க கிளம்புங்க.. காலா காலத்துல வீடு போய்ச் சேருங்க…” |
“இல்லல்ல… சீஃப் வருவார் போலிருக்கு. இப்ப தான் திரும்பவும் போன் வந்தது…”
“அப்படித் தான் சொல்வாங்கய்யா… நாம் இருக்கமாங்கிறதைச் செக் பண்ற தந்திரம் அது… ஆனா, வரமாட்டாரு..” “இந்த ஸ்டேட்மெண்ட்ல கையெழுத்துப் போடணுமே….?” “அதை ரெடி பண்ணி எங்கிட்டக் கொடுங்க. கவரும் எழுதிக் கொடுத்திடுங்க… ஸ்டாம்ப்பெல்லாம் கையோட எடுத்துட்டுப் போயி, கையெழுத்தும் வாங்கி, நானே அனுப்பிடறேன்…” எல்லாம் முடிந்த போது மணி ஆறாயிருந்தது. “ஏழு மணி வரைக்கும் ஹெட்போஸ்டாபீஸுல ஸ்பீடு போஸ்ட் உண்டு. அங்க போய் அனுப்பிடுங்க” சொல்லி விட்டுக் கிளம்பினான் சுந்தரம்.
“பார்த்துப் பத்திரமாப் போங்க சார்.. உங்க வீடு போற வழியெல்லாம் ஒரே கலாட்டா தான். எதிர்த்தாப் போல போறவன் வர்றவங்களையெல்லாம் அடிக்கிறானுங்க… போலீஸு பேசாமப் பார்த்துக்கிட்டு நிக்குது….”
-படியிறங்கும் போது வாட்ச்மேன் சரவணனின் எச்சரிக்கை இவனுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது.
“நான் வேணும்னா வீடுவரைக்கும் கூடவரட்டுங்களா?” ரங்கசாமி கேட்க
“வேண்டாம்” என்று மறுத்தான் இவன்.
எங்கெங்கோ புகுந்து, எப்படியெப்படியோ நுழைந்து வீடு வந்து சேர்ந்தான் இவன். குழந்தைகளையும் மனைவியையும் பார்த்த போது மனம் ஆறுதலடைந்தது.
மறுநாள் வழக்கம் போல், புறப்பட்டு ஆபீஸ் வந்து சேர, சீஃப் வந்திருப்பது தெரிந்தது. ஏதோ பெரிய அளவில் உள்ளே பேச்சு நடந்து கொண்டிருப்பது புரிந்தது.
மாடிப்படியேறி வந்தவன், சற்றே நிதானித்து உற்றுக் கேட்டான் அதை.
“இங்க பாருங்க பிஏ. நமக்கு யாரு வந்திருக்கா, வரலைங்கிறது முக்கியமில்லை. காரியம் ஆகுதா, இல்லையாங்கிறதைத் தான் கவனிக்கணும். பாருங்க, செக்ரெட்டரி மீட்டிங்குக்காக அனுவல் ஸ்டேட்மெண்ட்டை ஊர் போனதும் அனுப்பி வெச்சுடறேன்னு டைரக்டர் கிட்டச்சொல்லிட்டு வந்துட்டேன். என்ன பண்றது? நேத்து சுந்தரத்துக்கிட்டே சொல்லிப் போடச் சொன்னேன். அவரே தயார் பண்ணி, அவரே டைப் பண்ணி, ஸ்பீடு போஸ்ட்லயும் அனுப்பி வெச்சுட்டாரு. யாருகிட்டே சொன்னா வேலை ஆகும்னு கவனிக்கணும். வராதவங்களைப் பத்தி கேட்டு பேசி நேரத்தை வீணாக்கறதை விட இது பெட்டர் இல்லையா? இதைத்தான் சுருக்கமா சொல்லியிருக்காங்க.. ‘வேலை செய்றவனுக்கு வேலையைக் கொடு.. அல்லாதவனுக்கு சம்பளத்தைக் கொடுன்னு. என்ன நான் சொல்றது புரியுதா?
கேட்டுக் கொண்டே வந்து இருக்கையில் அமர்ந்தான். அதற்கு மேல் அவர்கள் பேச்சைக் கவனிக்க மனமில்லை இவனுக்கு. நன்றாக யோசித்த போது, எல்லோருமே ஒரு பொறுப்பற்ற, விட்டேற்றியான மனநிலைக்குப் போய் விட்டது போல தோன்றியது இவனுக்கு. இன்னமும் கடமையுணர்ச்சியோடும் கஷ்டப்பட்டும் செயலாற்றுபவர்களை இது பாதிக்கக் கூடும் என்று நினைத்தபோது, தன்னிடமே அம்மாதிரியான ஒரு சலிப்புநிலை இருப்பதை உணர்ந்தான் இவன். நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது இவனிடமிருந்து.
‘நம்ம கடமையை நாம செய்தோம். அவ்வளவு தான்… அதுக்குமேலே இதில ஒண்ணுமில்லை…. சமாதானப்படுத்திக் கொள்ள முயன்றான்.
தலை லேசாக வலிப்பதுபோல் இருந்தது. ஒரு டீ அருந்தி வருவோம் என்று கிளம்பினான். படியிறங்கி வெளியே வந்த போது.
“அய்யா, என் சம்சாரத்தை ஆஸ்பத்திரியில் சேர்த்துட்டேன். பணமும் கட்டிட்டேன் ஆபரேஷனுக்கு… எல்லாம் உங்க உபகாரம் தான் ரொம்ப நன்றிங்கய்யா..”
சொல்லிக் கொண்டே ரங்கசாமி எதிரே வர, மனம் சற்றே ஆறுதல் பட்டது சுந்தரத்துக்கு.
– ஆனந்தவிகடன், 1998.
![]() |
1987 முதல் உஷாதீபன் என்கிற புனை பெயரில் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. அச்சு மற்றும்இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1951 ல் பிறந்த இவர், தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப்…மேலும் படிக்க... |