உயிர் துடிப்பு!






இதயம் துடிப்பது இயல்பென்றாலும் அதற்குள் இன்னொன்று துடிப்பதை முதலாக உணர்ந்தான் கந்தன். அது மனமா? இன்னொரு இதயமா? என்பது புரியவில்லை யென்றாலும் அது பிறரின் துக்கத்துக்காகத்துடிக்கிறது என்பதை மட்டும் புரிந்து கொண்டான்.
பக்கத்து வீட்டிலிருந்த ஒருவருக்கு திடீரென உடல் நிலை சரியில்லையென்றதும் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது தானும் உதவிக்காகச்சென்றிருந்தான்.
எமர்ஜென்சி பகுதியில் அனுமதிக்கச்சென்ற போது அவ்விடத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என கூட்டமாக இருந்ததோடு துக்கம் தாங்காமல் அழுது கொண்டிருந்தனர். மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் இறந்து விட்டதாகக் கூறினர்.
அங்கே நின்று அவர்களின் நிலையைப்பார்த்த கந்தனுக்குள் உயிர் வாழ இரத்த ஓட்டத்தை சீராக்க உதவிக்கொண்டிருக்கும் இதயத்தைக் கடந்து ஆத்ம இதயம் துடிக்க ஆரம்பித்தது. உடல் துடிப்பு எனும் இதயத்துடிப்பைத் தாண்டி உயிர் துடிப்பால் ஒரு நிமிடம் துவண்டு போனான். நெஞ்சைப்பிசைவது போல், நெஞ்சே நொறுங்குவது போல் தன் அறிவுக்கட்டளைகளை ஏற்காத நிலையில் மனம் தவித்ததை உணர்ந்தான்.
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. பக்கத்து வீட்டுக்காரர் கூட பல வருடம் பழகியவர். சிரமங்களில் உதவியவர். அவருக்காக உதவி செய்ய வந்திருப்பது நட்பிற்காக. யாரோ முகம் அறியாத ஒருவருக்காக அவரது உறவுகள் கதறுவதை கண்டதும் உயிரே ஏன் துடிக்க வேண்டும்? இதுதான் மனித நேயம். இவன் தான் மனிதன். இது தான் மனிதம். இத்துடிப்பு மற்ற உயிரினங்கள் துன்புறும் போதும் துடித்தால் அவன் புனிதன்.
இறந்தவன் நல்லவனா? கெட்டவனா? என்பது தெரியாது. ஊர் பேர் தெரியாது. ஆனால் அவனுக்கென சிலர் அழுது கொண்டிருந்தனர். அவர்கள் கூட கந்தனைப்போல உயிர் துடிக்க துக்கத்தை வெளியிட்டிருக்க முடியாது.
சுவற்றைப்பார்த்து தன்னையாரும் பார்க்காதவாறு தேம்பி அழுது துக்கம் தீர்த்துக்கொண்டிருந்தவனின் தோலில் ஒரு கை பட்டது.
“அண்ணா அவருக்கு ஒரு பிரச்சினையுமில்லை. கேஸ் டிரபிள் னு டாக்டர் சொல்லிட்டாரு. நீங்க அழாதீங்க” பக்கத்து வீட்டிலிருந்து மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்டவரின் மனைவி சொன்ன பின்னும் கந்தனது தேம்பல் நிற்கவில்லை. உயிர் துடிப்பும் நிற்க வில்லை. அதை மனதாலும், அறிவாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. தானாகவே துடித்து, கண்களில் கண்ணீரை வரவழைத்து சாந்தமானது.
அடுத்த நாள் ஊரில் உள்ளவர்கள் பேசிக்கொண்டனர். ‘பக்கத்து வீட்டுக்காரருக்கு உடல் நிலை சரியில்லாததை நினைத்து அவர் மனைவி கூட பெரிதாக அழாத போது கந்தன் மட்டும் அழுது கொண்டே இருந்தானாம். பக்கத்து வீட்டுக்காரர் அவனுக்கு பல உதவிகளை செய்திருப்பார். இல்லையென்றால் அப்படி தேம்பித்தேம்பி அழுதிருப்பானா?’ என்று.
கந்தனுக்கு மட்டுமே தெரிந்திருந்தது. ஆதாயத்தின் அடிப்படையிலான மன நடிப்பின் வெளிப்பாடாக தனது அழுகை இல்லாமல், தனது உயிரின் துடிப்பு பொதுவாக சக மனிதர்களின் இழப்பைத்தாங்க முடியாமல் துக்கம் கொண்டவர்களைக்கண்டதால் ஏற்பட்டதென்று!
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |