உன்னால் முடியும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 19, 2026
பார்வையிட்டோர்: 86 
 
 

அந்த வீட்டின் மாலை நேர அமைதியில் ,கௌதம் எதையோ வரைந்து கொண்டிருந்தான். கௌதமின் தந்தை ஒரு சிறிய மளிகைக் கடை நடத்தி வந்தார். கௌதமிற்கு ஓவியம் வரைவதில் அதீத ஆர்வம், ஆனால் அவன் கைகள் பிறவியிலேயே சற்று நடுக்கம் கொண்டவை.

அடுத்த வாரம் ஊரில் பெரிய ஓவியப் போட்டி. அதில் வெற்றி பெறுபவர்களுக்குப் புகழ் பெற்ற ஓவியக் கல்லூரியில் படிக்க உதவித்தொகை கிடைக்கும். கௌதமிற்கு அதில் சேர ஆசை, ஆனால் பயம் அவனைத் தடுத்தது.

அன்று இரவு கௌதம் சோகமாக அமர்ந்திருப்பதை அவனது அம்மா கவனித்தார். அவர் அவனைக் கூப்பிட்டு, “கௌதம், இதோ இந்த ஜாடியைத் திறந்து கொடு,” என்றார்.

அது ஒரு பழைய ஊறுகாய் ஜாடி, அதன் மூடி மிகவும் இறுகியிருந்தது. கௌதம் முயற்சி செய்தான், ஆனால் அவனது கை நடுக்கத்தால் மூடியைப் பிடிக்கவே சிரமப்பட்டான்.

“அம்மா, இது என்னால் முடியாது, என் கை தான் நடுங்குகிறதே!” என்றான் விரக்தியுடன்.

அம்மா சிரித்துக்கொண்டே, “கௌதம், உன் கை நடுங்குவது உன் பலவீனம் என்று நினைக்காதே. உன் கவனம் மூடியைத் திறப்பதில் இல்லாமல், உன் கை நடுக்கத்தின் மேல் இருப்பதால் தான் உன்னால் முடியவில்லை. உன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு, அதில் கவனம் வைத்துத் திற,” என்றார். கௌதம் மறுபடியும் கவனமாக முயற்சித்து திறந்து விட்டான்.

அம்மா சொன்னது கௌதமின் மனதில் ஆழமாகப் பதிந்தது. அன்று இரவு அவன் தனது ஓவியத் தூரிகையை எடுத்தான். அவன் கை நடுங்கிய போதெல்லாம், அவன் தளர்ச்சி அடையாமல் , தன் மனதை , என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன், அந்த ஓவியத்தை வரைவதில் கவனம் செலுத்தினான்.

நடுக்கத்தை ஒரு குறையாகப் பார்க்காமல், அதையே ஒரு தனித்துவமான ஸ்டைலாக மாற்றினான்.

போட்டி நாள் வந்தது. மற்றவர்கள் மிக நேர்த்தியாகக் கோடுகளை வரைந்து கொண்டிருந்தனர். கௌதமின் கை நடுங்கியது, ஆனால் அவன் அந்த நடுக்கத்தையே கடலின் அலைகளை வரைவதற்குப் பயன்படுத்தினான். அவன் வரைந்த அந்த ‘அலைகள்’ உயிருள்ளவை போலத் தெரிந்தன.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது அரங்கமே அதிர்ந்தது. கௌதமிற்கு முதலிடம் கிடைத்தது; அவன் கண்கள் கலங்கின. “குறையை தடையாகப் பார்க்காமல் கருவியாக மாற்றினான்” என நடுவர்கள் புகழ்ந்தனர்.

வெற்றியுடன் வீடு திரும்பிய கௌதம், அதன் அம்மாவைத் ஆரத்தழுவிக் கொண்டான். நீ கூறியபடி “என்னால் முடியும் என்று நான் ஆழமாக நம்பிய கணமே தன்னம்பிக்கை வந்து விட்டது அம்மா. நான் ஜெயித்துவிட்டேன். நான் அந்த ஓவியக் கல்லூரியில் சேர்ந்து பயின்று ,சிறந்த ஓவியனாக ஆகப் போகிறேன் அம்மா” என்றான்.

அம்மாவின் கண்களிலும் ஆனந்த கண்ணீர். 

இரா.கலைச்செல்வி இவர் வீரமங்கை வேலு நாச்சியார் அரசாட்சி செய்த, சிவகங்கை சீமையில் பிறந்து, வளர்ந்து, கல்லூரி படிப்பை சிவகங்கையில் முடித்து, திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து, தலைமை செயலக அரசு பணியில் அமர்ந்து, பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி. இவரது கணவர் மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர். ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *