உனக்குப் புரியாது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 23, 2025
பார்வையிட்டோர்: 3,263 
 
 

மல்லிகா எரிச்சலுடன் தூக்கிப் போட்ட தொலைபேசி ‘சொத்’தென்று, புல்தரையில் உயிரற்று விழுந்தது.

அது, அவளுடைய சிநேகிதி கவிதா சில நாட்களுக்குமுன் மல்லிகாவிற்கு மனமுவந்து அளித்தது. ‘நம்ம கிளாஸில, ஒன் ஒருத்திகிட்டதான் ஸ்மார்ட் ஃபோன் இல்ல. இத நீ வச்சுக்க. நேத்து எங்கப்பா எனக்குப் புது மாடல் வாங்கிக் கொடுத்துட்டாரு,’ என்று கவிதா பீத்தலாகப் பேசி, தன் புத்தம்புது தொலைபேசியை மின்னல்போல் காட்டிவிட்டு, பழைய தொலைபேசியை மல்லிகாவிடம் நீட்டியபோது, அவளுள் கொதித்தெழுந்த சீற்றம், சிதைக்கப்பட்ட தன்மானம், எல்லாமாய் சேர்ந்து, ஒரு கணம் அவள் கையைப் பின்னுக்கிழுத்தது. எல்லாம் ஒரு கணம்தான். ஸ்மார்ட் தொலைபேசி வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாதது? இந்த தொலைபேசிக்காக, பாட்டியை எவ்வளவு நாளாக அரித்துக் கொண்டிருக்கிறாள்? ‘தேங்க்ஸ்டீ’ என்று வாய் தானாக முனக, கைகள் தாமாகத் தொலைபேசியைக் கவ்விக் கொண்டன.

இரண்டு வாரங்களாக, மல்லிகா இந்தப் பிரபஞ்சத்தின் அகண்ட விரிவில் தன்னிச்சையாக சஞ்சரித்தாள். ஐந்து ‘வாட்ஸ்ஆப்’ குழுக்களில், தன் வருகையைப் பதிவு செய்துகொண்டாள்..ஒரே நாளில் ‘படையப்பா’வையும் ‘மெர்சலை’யும், காலையும் மாலையுமாகப் பார்த்துத் தீர்த்தாள். தயங்கித் தயங்கி, சில பிரச்சினைக்குரிய வலைதளங்களைப் பயத்துடன் ஸ்பரிசித்து மீண்டாள்.

இரண்டு நாட்களாக, அந்தத் தொலைபேசி, ஆங்காரமான தொழிலாளியைப் போல்,அடிக்கடி வேலைநிறுத்தம் செய்யத் தொடங்கி, இன்று ஒரேயடியாய் உயிரைவிட்டுத் தொலைத்தது. புல்லில் கிடந்த தொலைபேசியின் சவத்தைப் பார்த்து, மல்லிகா ‘தூ!’ என்று ஆக்ரோஷமாய் துப்பி, சில வாரங்களே நீடித்த நிலையற்ற ஆனந்தத்தை உதறி எறிந்தாள்.

அந்த கோபம் இப்போது பாட்டியின்மேல் திரும்பியது.

‘என்ன ஏன் அப்பாட்டேருந்து பிரிச்சுக் கூட்டியாந்தே?’ என்று மல்லிகா பாட்டியைப் பலமுறை சாடியிருக்கிறாள். சிலமுறை கோபம் எல்லை மீற, பாட்டியை அடித்துக்கூட இருக்கிறாள்.

‘ஆங்! உங்கம்மா செத்தப்போ உனிக்கு நாலே வயசு! அந்த குடிகாரன்ட உன்ன உட்டிரிந்தேன்னா, இன்னேரம் சீரழிஞ்சிப் போயிருப்பே!’ என்று பாட்டி சொல்லி பேச்சைத் துண்டிக்க யத்தனிப்பாள்..

‘இப்ப என்ன பெரிய அரண்மனையில வாழறேன்! நீ பூ வித்து சம்பாரிக்கிற காசுல, ரெண்டு வேள சாப்பாட்டுக்கே லாட்டரி அடிக்குது!’ ’என்று மல்லிகா வாதாட, பாட்டி மௌனமாகி விடுவாள்.


மல்லிகா தன்னெதிரே இருந்த பூக்கடையை அசுவாரசியமாய் பார்த்தாள். அதை பூக்கடை என்று பாட்டி ஒருத்திதான் சொல்லுவாள்.

கடை என்று மிகுந்த மரியாதையுடன் பாட்டி குறிப்பிடுவது வெறும் இரண்டு கள்ளிப் பெட்டிகள். செங்குத்தாக நிற்க வைக்கப்பட்டிருக்கும் பெரிய கள்ளிப் பட்டி மேல் நீல வர்ண ப்ளாஸ்டிக் ஷீட் போட்டு விற்பனைக்காக பரப்பியிருக்கும், காலையில் விற்காமல் போன, குறைவான மலர்கள். அதற்கு பின்புறம் கவிழத்துப் போட்டிருக்கும் கள்ளிப் பெட்டி, பாட்டி உட்கார்ந்து, வியாபாரம் செய்வதற்காக.


பாட்டி முப்பது வருடங்களாக அந்தப் பூக்கடையை நடத்தி வருகிறாள். சென்னை மயிலாப்பூரின் ஒரு சந்தில், இருநூறு வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட ராமர் கோவிலின் வாயிலில் அமைந்துள்ள கடை. இருநூறு வருடங்கள் என்று பொதுவாகப் பலர் சொல்லிக் கொண்டிருந்தபோதே, வேறு சிலர், இந்தக் கோயில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பாகவே இருந்தது என்று ஆதாரம் திரட்ட, இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகையில் இந்த விவாதம் சூடு பிடித்ததின் பயனாக, கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மடமடவென்று அதிகரித்துவிட்டது. கடையை உடனடியாக விரிவு படுத்த யாரிடம் கடன் வாங்கலாம் என்று பாட்டி யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ஒருநாள் காலை, தெருவின் எதிர் சாரியில், பாட்டியின் கடைக்கு நேர் எதிரே, ஒரு மர பெஞ்சு, இரண்டு ப்ளாஸ்டிக் நாற்காலிகள், இதர சாமான்கள் அனைத்தும் ஒரு சைக்கிள் வண்டியில் வந்து இறங்கின. தொடர்ந்து, ஒரு பெண்மணி கூடை மலர்களோடு ஆட்டோவில் வந்து இறங்கினாள்.

பாட்டி அதிர்ந்து போனாள்.

கோயில் அதிகாரியிடம் பாட்டி முறையிடப் போனபோது,. அதிகாரி, தொலைபேசியில் யாரிடமோ நெடுநேரம் பேரம் பேசியும் வெற்றி காணாததால் மிக கடுப்பாகி இருந்தார்.

‘கூட்டம் அதிகமாயிடுச்சு! இன்னொரு கடை வேண்டியதுதானே? தெருவில கட போட உங்கிட்ட ஏன் பர்மிசன் வாங்கணும்?’ என்று பாட்டியைச் சாடினார், புதிய கடைக்கு அனுமதி தர, தான் வாங்கிக் கொண்ட கணிசமான தொகையைப் பற்றி அவர் சொல்லாவிட்டாலும், பாட்டி ஊகித்துக் கொண்டாள்.

அடுத்த இரண்டு நாட்கள், எதிர் கடை பெண்மணி முழம் இருபது ரூபாய்க்கு விற்றால், பாட்டி பதினைந்துக்கு விற்றாள். பதினைந்துக்கு எதிர்கடை இறங்கினால், பாட்டி பத்துக்கு இறங்கினாள். நஷ்டம்தான் என்றாலும் பாட்டி உறுதியாக இருந்தாள். மூன்றாம் நாள் பாட்டியை மிரட்ட சினிமா வில்லனைப் போல் ஒருவனை எதிர்கடை பெண்மணி அழைத்து வந்தாள்.

‘இன்னா பாட்டி? ரொம்ப ஆட்டங்காட்டிறியாம்?’ என்று லுங்கியைத் தூக்கி மடித்தவாறு, போலி வில்லன் வந்து பாட்டி எதிரே நின்றான்.

‘இத பாரு! நீயும் கட போட அந்த கோயில் ஆளுக்கு நெறிய பணம் கொடுத்திருக்கே! உனக்கும் லாபமா வியாவாரம் செய்யணும். எனக்கும் பொழப்ப நடத்த நாலு காசு சம்பாரிக்கணும். ரெண்டுபேரும் இருவத்து ஐந்து ரூபா ஒரே வெலக்கி விக்கலாம். சண்ட போட்டு என்னா கெடக்கிது?’ என்று பாட்டி சமரசம் பேசினாள்.

அதற்குப் பிறகு, தினம் இரு தரப்பினரும் விலையை நிர்ணயித்துக் கொள்ள, வியாபாரம் இருவருக்கும் லாபகரமாகத் தொடர்ந்தது.


பாட்டியை இன்னமும் காணோம்.

மல்லிகா பொறுமையிழந்து, மனதுக்குள் திட்டிக்கொண்டிருந்த நிலையைத் தாண்டி, பாட்டியை முணுமுணுப்பாய் திட்டத் தொடங்கினாள்.

பாட்டி, மல்லிகா கல்லூரி சேர்வதற்கான ஃபீஸ் பணம் புரட்ட, யாரையோ கடன் கேட்பதற்காகச் சென்றிருந்தாள்.. அப்படியே பாரீஸ்போய் பூ வாங்கிக் கொண்டு, நான்கு மணிக்கே வந்துவிடுவதாகச் சொல்லிப் போனவள் இன்னும் வரக்காணோம். தொலைபேசிக்கு உயிர் பிரிந்தபோது மணி 5.52.

‘நா வரும்வர கொஞ்சம் பாத்துக்க கண்ணு! காலைல தங்கிட்ட அந்த உதிரி மல்லில, வாடிப்போன பூவ எடுத்துட்டு, மூணு மொயமா கொஞ்சம் அகலமா கட்டிடு. நம்ம வாடிக்க சாவித்திரி அம்மா வந்தா, ஒரு மொயம் வாங்குவாங்க. அத்தோட, கொஞ்சம் காலைல பறிச்ச தொளசியக் கொடு. அதுக்கு காசு வாங்காத. சனிக்கெழம இல்ல?’ பாட்டியின் பட்டியல் அப்படி ஒன்றும் நீளமானது இல்லை. சில வருடங்களுக்கு முன்புவரை, தினம் பள்ளியிலிருந்து திரும்பியதும் பாட்டிக்கு உதவியாய் ‘கடை’யில் உட்கார்ந்து இதையெல்லாம் செய்துவந்தவள்தான் மல்லிகா. இப்போது, அந்தக் கள்ளிப் பெட்டி மீது உட்காருவது மிகக் கௌரவக் குறைவாகத் தோன்றியது. தனக்கும் கடைக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்பதுபோல், சற்றுத் தள்ளி கோவில் மதில் சுவற்றில, உள்வாங்கியிருந்த ஒரு பகுதியில் மல்லிகா அசௌகரியமாய் உட்கார்ந்திருந்தாள்.

மல்லிகா பத்தாவது வந்ததும்தான் எல்லாம் மாறத் தொடங்கியது..

‘படிப்புதான் முக்கியம். கடையில உக்காந்தா படிக்க முடியாது. பத்தாவது எவ்ளோ பெரிய படிப்பு? பதிலா அந்த நேரத்துல நல்லா படி. நெறியா மார்க் வாங்கினாத்தானே கவமண்ட் காலேஜில சேரலாம்? என்று மல்லிகா கடைக்கு வருவதை பாட்டியேதான் நிறுத்தினாள். பாட்டிக்கு மல்லிகா பள்ளி ஆசிரியையாக வரவேண்டும் என்று ஆசை.

நாளடைவில் மல்லிகாவிற்கே கடையில் உட்காருவது, சுத்தமாகப் பிடிக்காமல் போய்விட்டது.

அதற்கு கவிதா ஒரு முக்கிய காரணம்.

அரசாங்கப் பள்ளியில், மாணவ, மாணவிகளின் குடும்ப சூழ்நிலை ஏறக்குறைய ஒரே மாதிரிதான். ஏற்றமே இல்லாத தாழ்வு. சிலருக்கு மட்டும் அதிகத் தாழ்வு. கவிதா எல்லோரையும் போல, ரப்பர் செருப்பு அணிந்து, பழைய தேங்காய் எண்ணெய் நாற்றமுடைய தலைமுடியுடனும், கவரிங் தேய்ந்து, உண்மை சொரூபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் கம்மலுடனும்தான் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தாள். ஆறாம் வகுப்பு முதலாக மல்லிகாவும் கவிதாவும் வகுப்பில் அருகருகே உட்கார்ந்து பழகியவர்கள். இருவருக்கும் கையெழுத்துகூட ஏறக்குறைய ஒரே மாதிரி. பல நாட்கள் கவிதாவுடைய ஹோம் வொர்க்கை மல்லிகா செய்து கொடுத்திருக்கிறாள். டீச்சரிடம் பிடிபட்டதே இல்லை.

திடீரென்று, இரண்டு ஆண்டுகளாக, கவிதாவின் தோற்றத்துடன், குணமும் மாற ஆரம்பித்தது. செருப்பிலேதான் முதல் மாற்றம் தோன்றியது. விரைவிலேயே, அவளிடம் இரண்டு செருப்பு ஜோடிகள் இருப்பதை, மாற்றி மாற்றி போட்டு தெரியப்படுத்தினாள். புதிய கம்மல். கழுத்திலே மெலிதாகச் செயின் வேறு. ‘தங்கமாடீ?’என்று நண்பிகள் சந்தேகமாய் கேட்டதற்கு, கர்வத்துடன் தலையாட்டினாள். மதிய சோறு வீட்டிலிருந்து கொண்டு வரத் தொடங்கினாள். ‘ஸ்கூல் சாப்பாடு அவளுக்கு ஒத்துக்கல,’ என்று அவளுடைய அம்மா வந்து டீச்சரிடம் சொல்லிவிட்டுப் போனாள்.

எல்லா முக்கிய படங்களையும், ரிலீஸ் ஆன முதல்வாரமே பார்த்துவிட்டு வந்து, விரிவாக விமர்சனம் செய்தாள். கொஞ்சம் இங்கிலீஷ் கலந்து பேசினாள். கூடவே ரெஸ்டாரண்டில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டதையும் அலட்சியமாய் தெரிவித்தாள்.

‘அவ அப்பா பெரிய பிஸினஸ் செய்யராராம்டீ’ என்று மாணவிகள் ஒருவர்க்கொருவர் பேசிக் கொண்டார்கள். அதோடு, ஒரு அரசியல் கட்சியில் மாவட்ட பதவி கிடைத்திருப்பதாகவும் வதந்தி நிலவியது.

‘ப்ளஸ் டூ’ நடுவில ப்ரைவேட் ஸ்கூல் அட்மிஷன் கொடுக்கமாட்டாங்களே! இல்லைன்னா எப்பவோ ப்ரைவேட் போயிருக்கலாம்’ என்று கவிதா அலுத்துக் கொண்டாள்.

ரொம்ப நெருக்கமான சிநேகிதியாக இருந்த கவிதா, இப்போது சிறிது சிறிதாக அவளிடமிருந்து விலக ஆரம்பித்தது, மல்லிகாவிற்கு மட்டுமல்ல, மற்ற மாணவிகளுக்கும் தெளிவாகிக் கொண்டிருந்தது.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில், மல்லிகா 600க்கு 427 மதிப்பெண்கள் எடுத்து, பாஸ் செய்துவிட்டாள். கவிதா அவளைவிட நாற்பத்தி இரண்டு மார்க் குறைவு.

‘எங்கப்பா பீ.பீ.ஏ. எடுத்துக்கச் சொல்லிட்டாரு. முடிஞ்சதுக்கப்புறம் அவர் பிஸினஸிலியே சேர்ந்துடுவேன்,’ என்று எல்லோரிடமும் கவிதா பெருமையாகத் தெரிவித்துக் கொண்டாள்.

‘இந்த மார்க்குக்கு கெடக்குமாடீ?’ என்று சந்தேகமாக கேட்டனர் சில தோழிகள்.

‘எங்கப்பா அதெல்லாம் பாத்துக்குவாரு,’ என்று அடித்துச் சொன்னாள் கவிதா.

‘நீ காலேஜ் சேர உங்க பாட்டி ஒத்துக்கிட்டாங்களா?’ என்று கவிதா மல்லிகாவைச் சீண்டினாள்.

‘நிச்சயம் படிக்கப் போறேன்,’ என்று உஷ்ணமாக மல்லிகா பதிலளித்தாள்.

பழைய நட்புணர்வு திடீரென்று மேலிட, ‘உனக்கு வேணுமானா சொல்லு. அப்பாகிட்ட சொல்லி ஒனக்கும் சீட் வாங்கித் தரேன்’ என்று கவிதா மல்லிகாவிற்கு ஆசை காட்டினாள். ‘ஆனா, ஒனக்கு பாவம் ப்ரைவேட் காலேஜ்ல எப்படி ஃபீஸ் கட்ட முடியும்?’ என்று இரங்கினாள். அது ஒரு வித தற்பெருமையாகக்கூட இருக்கலாம்.

மல்லிகா பாட்டியை உலுப்பினாள்.

‘நானும் ப்ரைவேட் காலேஜில சேர்ந்து பீ.பீ.ஏ. படிக்கணும். கவிதாவ விட நாப்பத்திரண்டு மார்க் அதிகம். எனக்கு ஸீட் கண்டிப்பா கெடக்கணும்,’ என்று அடம் பிடித்தாள்.

‘அது என்னாது பீ பீ ? டீச்சர் படிப்பு இல்லையா?’ என்று குழப்பத்துடன் பாட்டி கேட்டாள்.

‘அதெல்லாம் உனக்குப் புரியாது. நீ பணத்துக்கு ஏற்பாடு செய்’ என்றாள் மல்லிகா.

பாட்டிக்கு, அவ்வளவு பணம் புரட்டுவது சாத்தியமாகத் தோன்றவில்லை. பல காலமாக மல்லிகாவின் கல்யாணத்திற்காக சேர்த்து வைத்த பணம் வங்கியில் இருந்தது. ஆனால், ப்ரைவேட் காலேஜில் மூன்று வருடம் படிக்கவைக்க அது போதாது.

எதிர் பக்கத்து பூக்காரப் பெண்மணியிடம் பாட்டி யோசனை கேட்டாள்.

‘கவமண்ட் காலேஜில அவ்ளோ பணம் கெடயாது. எம்பொண்ணுகூட கவமெண்ட் காலேஜுலதான் பீ. ஏ. படிக்குது. எது படிச்சா என்ன? எவங்கையிலயோ புடிச்சுக் கொடுக்கப்போறோம். நம்மளயா இதுங்க காப்பாத்தபோவுதுங்க?’ என்று யதார்த்தம் பேசினாள் அந்தப் பெண்மணி.

பாட்டி இதுபற்றிய பேச்சு எடுத்தாலே, மல்லிகா வெகுண்டெழுந்தாள். பன்னிரண்டு வருடங்களாக பார்த்திராத அப்பாவிடம் ஓடிப் போவதாக பயமுறுத்தினாள்.


பாட்டி ஓட்டமும் நடையுமாகக் கடையை அடைந்தாள்.

பெட்டிமேல் மலர்களும் துளசியும் விட்டுச் சென்ற நிலையிலேயே கிடப்பதையும், தனக்கும், கடைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்ற மௌன பிரகடனத்தோடு கடைக்கு அப்பால் உட்கார்ந்திருக்கும் மல்லிகாவையும் பார்த்ததுமே, பாட்டிக்கு எல்லாம் புரிந்து போயிற்று. எதிர் சாரிக் கடை மும்முரமாய் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

‘சாவித்திரி அம்மா கூட வரல்லியா?’ ஏமாற்றத்தோடு பாட்டி கேட்டாள்.

தனக்குத் தெரியாது என்பதுபோல் தலையசைத்தாள் மல்லிகா. ‘பணம் கெடச்சிடுச்சா?’

‘கெடச்சிடும் கண்ணு, கெடச்சிடும்,’ என்றாள் பாட்டி. போன இடத்தில், கேட்டதில் பாதிதான் கிடைத்தது என்ற ஏமாற்றத்தையும், வேறு வழி தெரியவில்லையே என்று மனதிலிருந்த தவிப்பையும் பாட்டி உள்ளேயே அடைத்துக் கொண்டு,. ‘நீ போ கண்ணு, இனிமே நான் பாத்துக்கறேன்’ என்றாள்.

மல்லிகா எழுந்து, திரும்பிப் பார்க்காமல் போனாள்.

பாட்டிக்கு பாரீஸுக்குப் போய் பூ வாங்க நேரமில்லை. இன்றைக்குப் பூ விற்பனைக்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில், பளிச்சென்று ஒரு யோசனை தோன்ற, மாட வீதியில் இரண்டு கவுளி வெற்றிலையும் ஒரு டப்பா சிந்தூரப் பொடியும் வாங்கி வந்திருந்தாள்.

எதிர் கடை பெண்மணியிடம் அர்ச்சனை தட்டிலிருந்த வெற்றிலையைத் தவிர தனியாக வெற்றிலை சரக்கு இல்லை என்பதைத் திருப்தியுடன் பாட்டி கவனித்துக் கொண்டாள்.

அடுத்த சிலநிமிடங்களில், ஒரு வெற்றிலை மாலை தயாரானது. அவசரமாக கோயிலுக்குள் சென்று, உள் பிராகரத்துத் தூணில் இருந்த அனுமார் சிற்பத்திற்கு சிந்தூரம் தடவினாள். தூண் செதுக்கங்களில் லாகவமாக வெற்றிலை மாலையை சாற்றினாள். ‘இன்னிக்கு உன்னதான் நம்பியாவணும்.. எதுவானா வழிகாட்டு’, என்று, அனுமார் கேட்கிறார்போல் உரக்கச் சொல்லி, தூணை மூன்று முறை வலம் வந்தாள்.

அதுநாள் வரை எங்கோ தூண் மறைவில் யார் கண்ணிலேயும் அகப்படாமல் இருந்த அனுமார், அந்த கணமே பாட்டியின் பிரார்த்தனையை ஏற்று, பக்தர்களுக்கருள தயாரானார்.

பாட்டி கடை திரும்பியபோது, சாவித்திரி அம்மாள் வந்து கொண்டிருந்தார்.

‘அம்மா, இன்னிக்கு சனிக்கிழம இல்ல? உள்ள தூண் அனுமாருக்கு வெத்தலமால சாத்தினா மனசுல நெனெக்கற காரியம் எல்லாம் நடந்துடும்னு ஐயரு சொன்னாராமில்ல? வாங்கிட்டுப் போங்க! அதான் இன்னைக்கு வேற பூகூட கட்டல, ‘ என்றாள் பாட்டி.

‘என்ன வெல?’ என்று கேட்டாள் சாவித்திரி.

‘உங்களுக்குன்னா அறுவது, மத்தவங்களுக்கு எழுவது!’

‘அடேயப்பா ! ஏகப்பட்ட வெல சொல்றியே?’ என்றாள் சாவித்திரி.

‘அனுமாரு நீங்க வேண்டிக்கிறத கொடுக்கறப்போ கணக்கு பாத்தா செய்யப் போறாரு?’என்றாள் பாட்டி.

சாவித்திரி அறுவதைக் கொடுத்து, மாலையை வாங்கிச் சென்றாள்.

அடுத்து வந்தவர்களிடம், ‘இந்தக் கோயில் தூணில இருக்கற அனுமாரு ரொம்ப சக்தினு யாரோ பெரிய சாமியார் சொல்லியிருக்காராமில்ல? அது யாரு சாமி?’ என்று கபடமில்லாமல் கேட்டாள்.

‘வெத்தல மால சாத்திட்டு, மூணு பிரதட்சிணம் செய்யணும். அப்பால, அனுமாரு கால்ல இருக்கற சிந்தூரத்த ஒரு பொட்டு வச்சிக்கணும்,’ என்று கோயிலுக்குப் புதிதாக வந்தவர்களுக்கு, ஒரு புதிதான வழிபாட்டுமுறையைச் சொல்லிக் கொடுத்தாள்.

இரவுக்குள் எல்லா வெற்றிலை மாலைகளும் விற்றுப் போயின. இரண்டு பேரிடம் நூறு ரூபாய்க்குக் கூட விற்க முடிந்தது.

கடையை மூடும்போது, எதிர்கடை பெண்மணி கேட்டாள்: ‘இன்னிக்கு என்னா மாயாஜாலம் காட்டிட்ட? எனக்கு எதுவுமே புரியல!’

பாட்டி சிறிது நேரம் மௌனமாய் இருந்தாள்.

பின்பு சொன்னாள்: ‘தண்ணில விழுந்துட்டா, தானே நீச்சல் கத்துகிட்டாதானே பொழெக்க முடியும்? சரி, இன்னொரு விசயம் சொல்றேன். கவனமா கேட்டுக்க. எனக்கு ரொக்கமா பணம் தேவப்படுது. கடைய விக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன். இன்னொருத்தருக்கு விக்கறதகாட்லும், உங்கிட்டயே விக்கலாமான்னு தோணிச்சு. எனக்கு மாசம் சம்பளமா கொடுத்திடு. நா கடைய பாத்துக்கறேன். உனக்கும் போட்டி இருக்காது. நா துட்டு கணக்கு சரியா சொல்றேனான்னு நேரிடையா பாத்துக்கலாம். நாளக்கி யோசிச்சு சொல்லு. இல்லைன்னா, வேற ஆளு ரெடியா இருக்காங்க..’


மல்லிகா சோறு ஆக்கி வைத்திருந்தாள்.

‘பீஸ் கட்ட இன்னும் எவ்ளோ நாள் டயம் இருக்கு?’ என்று கேட்டாள் பாட்டி.

‘இன்னும் கரெக்டா ஒரு வாரம்’

‘அதுக்கு முன்னாடியே கட்டிடலாம்.’

‘பணம் ஏற்பாடு பண்ணிட்டியா?’

‘உம்’ என்று தலையாட்டினாள் பாட்டி. ‘கவிதா அப்பாரு நிச்சயம் சீட் வாங்கிக் கொடுத்துடுவாரில்ல?

மல்லிகா உற்சாகமாய் தலையாட்டினாள்.

‘சரி, அதென்ன படிப்புன்னு சொன்ன?’

‘பீ.பீ.ஏ.’

‘அப்படீன்னா ?’

‘பிஸினஸ் எப்படி மேனேஜ் செய்யறதுங்கறத பத்தி. அதெல்லாம் ஒனக்கு புரியாது பாட்டி,’ என்றாள் மல்லிகா.

‘எனக்கு ஒண்ணும் புரியல,’ என்றாள் பாட்டி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *