கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 11, 2026
பார்வையிட்டோர்: 381 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அமரன் காரியாலயத்திலிருந்து வீட்டுக்கு வரும் போது தன் மகள் வவியனுக்கு மிட்டாஸ் வாங்கி வருவது வழக்கம். அமரன் எப்பொழுதாவது மிட்டாஸ் வாங்கிவராவிட்டால் அன்று முழுவதும் வவியன் அழுதுகொண்டே இருப்பாள். சின்னஞ்சிறு பிள்ளை களுக்கு இப்படியானவற்றை வாங்கிக் கொடுக்கக் கூடாது. வாங்கிக் கொடுத்துப் பழக்கிவிட்டால் பின் னர் அதிலிருந்து தப்பவே முடியாது.

அமரனின் வருகையை எதிர்பார்த்துக் கொண் டிருந்தாள் வவியன். வவியன் வீட்டுப்படலையில் காத்துக்கொண்டு நிற்பதைத் தூரத்தில் இருந்துவந்த அமரன் கண்டு அவளின் கண்ணுக்கு எத்துப்படாமல் வீட்டுக்குள் போய்விட வேண்டுமென எண்ணினான். எப் படி மறைந்து மறைந்து போனாலும் வவியனிடமிருந்து தப்ப முடியாதென்பது அமரனுக்கு நன்றாகத் தெரியும். அதனால் நேராகவே வீட்டுப்படலையை நோக்கி நடந்தான்.

“டடீ! டடீ ! மிட்டாஸ் கொண்டுவந்தனீங்களா டடீ?” என்று கூறிக்கொண்டே அமரனின் காலில் பிடித்துத் துள்ளினாள் வவியன்.

“இல்லை. வாங்கிக்கொண்டு வர மறந்து போனன். பிள்ளைக்கு நாளைக்கு வாங்கிக் கொண்டுவந்து தாரனே.”

“இம்!….. ” கண்களை கசக்கிக்கொண்டு அழுதாள் வவியன்.

“என்ரை குட்டியல்லோ. பிள்ளைக்கு மிட்டாஸ் வாங்கிக்கொண்டு வராமல் வீட்டுக்கு வருவேனோ?” என்று சொல்லி மகள் வவியனைத் தூக்கிக் கொஞ்சிக் கொண்டு போனான் அமரன்.

”வவியன்! இண்டைக்குப் பள்ளிக்கூடத்துக்குப் போனியா?”

“ஓம், போனனான்.”

“பள்ளிக்கூடத்திலை என்ன படிச்சனி?”

“பள்ளியிலை என்ன படிக்கிறது? ஆனா, ஆவன்னாத் தான் படிக்கிறது. அதுதான் படிச்சனான்.”

“ஆர் வவியன் படிச்சுக் கொடுத்தாங்கள்?”

“எங்கடை ரீச்சர்தான்.”

“அவ உங்களுக்கு அடிக்கிறதில்லையோ?”

”ஊம்…… ஊம் எங்கண்டை ரீச்சர் சோக்கான ரீச்சர். எங்களுக்கு அடிக்கிறதேயில்லை.. மணியண்ணை யின்ரை மாஸ்டர் எண்டால் மணியண்ணையவைக்கு மாடு மாதிரி வெளுவெளென்று வெளுக்கிறவர்.”

“நீங்கள் பின்னை க் குழப்படி செய்யிறதில்லை யாக்கும்.”

”குழப்படி செய்தாலும் எங்கடை ரீச்சர் அடிக்க மாட்டா” என்று வவியன் சொல்வதற்கும் வவியனின் தாய் பகவதி தேனீர் கொண்டு வருவதற்கும் சரியாக இருந்தது.

“அத்தான்! உங்களை ரீச்சர் நாளைக்கு வரச் சொல்லிச் சொன்னதாம்.’

“ஆர் சொன்னது?”

“வவியன்தான் சொன்னது. நாளைக்கொருக்காப் போவிட்டு வாருங்கோவன்.”

“நாளைக்கு எனக்கு நேரமில்லை. நீதான் போவிட்டு வா.”

“சரி சரி. நேரமாச்சு சாப்பிடுங்கோ.”

2

அடுத்த நாள் –

பகவதி வவியனைக் கூட்டிக்கொண்டு பாடசாலைக்குப் போனாள்.

“பகவதி! பாடசாலைக்குப் போனனீங்களா? ரீச்சர் என்ன சொன்னா?”

“ரீச்சர் என்னத்தைச் சொல்லுறது. உங்கண்டை மேளைப்பற்றித்தான் அடிச்சுப் புளுகிறா.”

“என்னத்தைப் பற்றிப் புளுகினவ.”

“படிப்பிலை வலு கெட்டிக்காரியாம். வீட்டிலை கவனமாகப் படிப்பிக்கட்டாம்.”

“ரீச்சர் எப்பிடி? நல்ல குணமான மனுஷியோ?”

“ரீச்சர்மாரெண்டால் உப்பிடித்தான் இருக்க வேணும். எவ்வளவு அன்பாகப் பேசினா. அவவின்ரை பண்பைப் பற்றி வந்தவை எல்லாம்தானே புகழ்ந்து கொண்டு போகினம்.”

“கலியாணம் செய்த மனுஷியோ?”

“இல்லை”

“அதுதான் பிள்ளைகளிலே கவனமெடுக்கிறா. கலியாணம் செய்த பிறகு பாரேன். புரியனைப் பற்றியும் பிள்ளையைப் பற்றியும்தான் பள்ளிக்கூடத்திலை கதைச் சுக்கொண்டு இருப்பினம்.”

“சும்மா போங்கோ, எல்லா ரீச்சர்மாரும் வீட்டுக் கதைதானே கதைச்சுக்கொண்டு இருக்கிறவை. சில ரீச்சர்மார் கதைக்கிறதுக்காக எல்லா ரீச்சர்மாரிலேயும் பழிசுமத்துகிறதோ……? அந்த ரீச்சர் பாவம்,கலியா ணம் செய்யாமையெல்லோ சேவை செய்யுது.”

“ஏதோ காதலிலே தோல்வியாக்கும். அதுதான்…”

“உதுகுமொரு கண்டறியாத கதைதான். உங்க… ளுக்கு உந்தக் குறட்டைக் கதை விட்டுப் போகாது. நீங்கள் என்ன சொன்னாலும் எனக்கந்த ரீச்சரைப் பிடிச்சுப் போச்சு.”

“பிடிச்சா என்ன செய்யப் போகிறாய்?”

“தீபாவளிக்கு ஒரு சாரி வாங்கிக் கொடுக்கலா மெண்டு நினைக்கிறன்.”

“அதுக்கென்ன, வவியனுடைய தீபாவளிப் பரிசாக வாங்கிக் கொடுப்பம்.”

3

அமரன், வவியனுடைய தீபாவளிப் பரிசாகச் சாரி ஒன்றை வாங்கிக்கொண்டு பாடசாலைக்குப் போனான். அவன் பாடசாலைக்கு உள்ளே சென்றதும் பாடசாலை நடைபெறுகிறதோ இல்லையோ என்ற சந்தேகம் அவ னுக்குத் தோன்றியது. ஊசி விழுந்தால் சத்தம் கேட்கும். அவ்வளவுக்கு அந்தப் பாடசாலை மாணவர்கள் அமைதியாக இருந்தனர்.

அமரன் ஒரு வழியாக வவியனின் வகுப்பைக் கண்டு பிடித்துக்கொண்டு வகுப்பு வாசலில் போய் நிற்கிறான். அமரா மேஜை மீது சாய்ந்து கொண்டு ஆற அமர மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

“ரீச்சர்! ரீச்சர்!! ஆரோ வந்து நிற்கினம் ரீச்சர்” என்று ஒரு மாணவி சொன்னதைக் கேட்டதும்.

”உள்ளே வாருங்கள்” என்று அமரா குரல் கொடுத் ததும் வகுப்புக்குள்ளே போனான் அமரன்.

“என்ன நீங்களா?”

“யார் அமராவா?” ஆச்சரியத்துடன் கேட்டான் .அமரன். அமரனின் குரல் கரகரத்தது. அமராவைக் கண்டதும் அமரனுக்குப் பழைய சம்பவங்கள் யாவும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வந்தன.

4

அமரன் பருத்தித்துறை ஆசிரிய கலாசாலையிலும் அமரா திருநெல்வேலி ஆசிரிய கலாசாலையிலும் ஆசிரியப் பயிற்சி பெற்றனர்.

அமரன் வெள்ளிக்கிழமைகள் தோறும் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலுக்குப் போவது வழக்கம். அதே போல அமராவும் போய் வந்தாள். இவர்கள் இருவரும் மாத்திரம் போகவில்லை. பருத்தித்துறை ஆசிரிய கலாசாலையைச் சேர்ந்த இந்து மாணவர்களும் திரு நெல்வேலி ஆசிரிய கலாசாலையைச் சேர்ந்த இந்து மாணவிகளும் வெள்ளிக்கிழமைகளில் தவறாது போய் வந்தனர்.

ஒருநாள்=

நல்லூர்க் கந்தசுவாமியார் கோவிலிலே நீக்குப் போக்கில்லாத அளவுக்கு அதிகப்படியான சனம். அந்தச் சன நெருக்கடியைப் பாராது அமரன் நிலத்தில் விழுந்து கும்பிட்டுக் கொண்டிருந்தான். அப்போது சனநெருக்கத்தால் தள்ளுப்பட்டுக் கொண்டு வந்த அமரா அமரனின் காலில் மிதித்துவிட்டாள். உடனே அமரன் எழுந்துவிட்டான்.

”மன்னிக்கவும்” மொட்டவிழ்ந்த முல்லை மலரி லிருந்து தேன் சொட்டுவதுபோல் கூறினாள் அமரா.

“பரவாயில்லை.”

அன்று தொட்டு அமரன் அமராவைக் கண்டதும் சிரிப்பான். அமராவும் அமரனைக் கண்டதும் சிரிப்பாள். இருவரும் ஒருவரை ஒருவர் காணும்போது சிரித்தனர். சிரிப்பு வளர்ந்துகொண்டே சென்றது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அமரனும் அமராவும் சந்தித்தனர். தொடர்ச்சியாகச் சந்தித்த சந்திப்புக் காதலாக மாறியது.

ஒருநாள்-

அமரா கும்பிட்டுக்கொண்டு நின்றாள். அமரனும் அவளுக்கு அருகில் நின்று கும்பிட்டான். அவளுடன் எப்படிக் கதைப்பதென்றே அவனுக்குத் தெரியவில்லை. தானாகக் கதைத்தால் அவள் தன்னைக் குறைவாக நினைப்பாளே என்ற எண்ணம் அவனைக் கதைக்க விடாது தடுத்தது. அவளுக்கும் அப்படியே. இருவரும் ஒரு கருத்துடனேதான் பேசாமல் நின்றனர்.

ஆண்களின் மனம் அந்தரம் பிடித்தது என்பார்கள். அதேபோல அமரனும் அமராவுடன் கதைக்க அந்தரப் பட்டான். கதைத்தும் விட்டான்.

”உங்களோடே ஒன்று கதைக்கவேணும்; கதைக்கலாமோ?”

“ஓ தாராளமாகக் கதைக்கலாம்.”

“உங்கள் பெயர்?….”

“என் பெயர் அமரா. உங்கள் பெயர்……?”

“என் பெயர் அமரன். இருவரின் பெயர்களும் பொருத்தமாகவே இருக்கின்றன” சிரித்துக்கொண்டே சொன்னான் அமரன்.

அமராவின் மாம்பழக் கன்னங்கள் மகிழ்ச்சியால் சிவந்தன. அவளின் முகத்தில் புன்னகை தோன்றியது. காலின் பெருவிரல் நிலத்தைத் தோண்டியது. அமரா, அமரனை மயக்கும் அழகு மிகு எழிலரசியாகத் தோன் றினாள். இவற்றையெல்லாம் கடைக்கண்ணால் கவனித் துக் கொண்டு நின்ற அமரன், அமராவைப் பின் வீதிக்கு வரும்படி கேட்டான். அமராவும் அமரனின் அழைப்புக் கிணங்கப் பின் வீதியில் ஓங்கி வளர்ந்து நிழலைப் பரப்பி நிற்கும் ஆலமரத்தடிக்குச் சென்றாள்.

அமரனும் அமராவும் கோவிலின் பின் வீதியில் நிற்கும் ஆலமரத்தடியில் இருந்தனர். தங்களை மற்றைய மாணவர்கள் கவனிக்கிறார்களா என்பதையும் கவனிக் கத் தவறவில்லை.

“அமரா! நான் ஒன்று கேட்கவேண்டும்; கேட்கட்டுமா?”

”ஒன்றென்ன ஒன்பதும் கேளுங்கள்.”

“நீங்கள் விரும்பினால் உங் களைக் கல்யாணம் செய்ய…….”

“என்ன! என்னைக் கல்யாணம் செய்யப் போகிறீர் களா? உண்மையாகவா?”

“உண்மையாகத்தான் கேட்கிறேன். நீங்கள் விரும்பினால், கல்யாணம் செய்யத் தீர்மானித்துவிட்டேன்.”

“உங்கள் தீர்மானம் மாறாதா? அது நிறை வேறுமா?”

“நீங்கள் எனக்கு உறுதியளித்தால் அது நிறைவேறும்.”

“என்ன உறுதி?”

“என்ன கஷ்டம் ஏற்பட்டாலும் நான் உங்களைக் கல்யாணம் செய்வேன் என்று.”

”ஓ! அதுவா? அலைகடல் வற்றினாலும், மேகம் இடிந்து வீழ்ந்தாலும், கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் நான் உங்களைக் கல்யாணம் செய்வேன். இது சத்தியம்” என்று அமரா, அமரனின் கையைப் பிடித்துச் சத்தியம் செய்தாள். அமரனும் அமராவின் கையைப் பிடித்து அன்புடன் அணைத்தான்.

காதல் வளர வளர அவர்களது சந்திப்பும் கூடிக் கொண்டே வந்தது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அமரனையும் அமராவையும் நல்லூர்க் கந்தசுவாமியார் கோவிலிலே காணலாம்.

நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடங்களாகி இரு வருடங்களை விழுங்கிக் கொண்டதும் அவர்கள் இருவரும் பயிற்சியை முடித்துக்கொண்டு அமரன் பதுளை மகா வித்தியாலயத்துக்கும் அமரா கொழும்பு இந்துக் கல்லூரிக்கும் சென்றனர்.

காதலர்கள் இருவரும் கண்ணுக்கெட்டாத தூரத் துக்கு மாறிப் போவதென்றால் அவர்களுக்கு எப்படி இருக்கும்? கடைசியாக இருவரும் நல்லூர்க் கந்தசுவாமி கோவிலிலே சந்தித்தனர். என்ன கஷ்டம் ஏற்பட்டா லும் இருவரும் கல்யாணம் செய்வதெனச் சத்தியம் செய்தனர்.

அவர்கள் இருவரும் சத்தியம் செய்துவிட்டு ஒரு வரை ஒருவர் பார்த்தனர். இருவர் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகியது. மற்றவர்கள் தங்களைக் கண்டு விடுவார்களே என்ற பயத்தினால் அமரன் அமராவின் கண்ணீரைத் துடைத்தான். அவ்வளவுதான்,

“என்னை மறந்துவிடாதீர்கள்; நான் வருகிறேன்” என்று சொல்லிவிட்டுச் சேலைத்தலைப்பினால் பெருகி வரும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டே நின்றதும், நிற்காமல் விறு விறு என்று நடந்தாள் அமரா. அமரனும் தன் கண்களிலுள்ள கண்ணீரைத் துடைத் துக்கொண்டு நகர்ந்தான்.

5

இரண்டு ஆண்டுகளுக்குப் பின், அமரனுக்கும் அமராவுக்குமிடையே வளர்ந்துவரும் காதலைப்பற்றி அமரனின் பெற்றோர் அறிந்து கொண்டனர். வெகு விரைவில் அமரனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினர். ஆனால் அமரன் மறுத்துவிடுவானோ என்ற பயமும் அவனது பெற்றோருக்கு இல்லாமலில்லை.

“அமரன்! நீ இவ்வளவு வயது வந்தும் கல்யாணம் செய்யாமல் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. உனக்குக்
கல்யாணம்……”

“என்ன! எனக்கா கலியாணம் செய்யப் போகி றீர்கள்? ஏன் இவ்வளவு அவசரம்?”

“உன்ரை மாமியின்ரை பெட்டைக்கும் வயது வந்து விட்டுது. அதுதான்……”

“யாரை? மாமியினுடைய மகளையா?”

“ஓமப்பா அவள்தானே உன்ரை சொந்த மச்சாள்” என்றார் தகப்பன்.

“எந்த மச்சாளாக இருந்தாலும் எனக்கிப்ப அவசரமில்லை” என்று தட்டிக் கழித்தான் அமரன். அமரன் எதற்காகத் தட்டிக்கழிக்கிறான் என்பது அமரனின் மனத்தை பெற்றோருக்கும் மாமன் மாமிக்கும் பரிபூரணமாகத் தெரியும். எப்படியும் அமரனின் மனத்தை மாற்றிவிட வேண்டுமென்பது அவர்களது திட்டம்.

***

”அண்ணை! நான் சொல்வது போலச் செய்தால் நிச்சயமாக அமரனின் மனம் மாறும்” என்றாள் செல்லமுத்து.

“செல்லம்! நீ என்னத்தைச் சொல்லப் போகிறாய்? எங்கே சொல்லன் பார்ப்போம்?”

“அமரன் காதலித்திருக்கும் பெட்டைக்குத் திரு மணம் நடைபெறுவதுபோல் திருமண அழைப்பிதழ் ஒன்று அடித்து அமரனுக்கு அனுப்பினால் என்ன?”

“ஓமடி தங்கச்சி. நீ சொன்னதுபோலை செய்தால் நிச்சயமாக அமரனின் மனம் மாறும்.”

திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது. அமரா அனுப்புவதுபோல் அமரனுக்குத் திருமண அழைப் பிதழ் அனுப்பப்பட்டது.

திருமண அழைப்பிதழைக் கண்டதும் அமரனின் கண்கள் குளமாயின. “மேகம் இடிந்து விழுந்தாலும்- அலைகடல் வற்றினாலும் – கிழக்கே உதிக்கும் சூரியன் இது சத் மேற்கே உதித்தாலும் உங்களை மறவேன். இது சத்தியம்” என்று அமரா சத்தியம் செய்துகொடுத்த காட்சி அமரனின் நினைவுக்கு வந்தது. “சீ, அமரா ஒரு ஏமாற்றக்காரி. பெண்களை  என்றுமே நம்பக் கூடாது” என்று அவன் வாய் முணுமுணுத்தது. அமரனின் மனமும் மாறிவிட்டது.

அமரனுக்கும் அவனது சொந்த மச்சாள் பகவதிக் கும் வெகு கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது.

6

”அமரன்! என்ன ஒரேயடியாக எதையோ சிந்தித் துக்கொண்டு நிற்கிறீர்கள்? எதிர்பாராத விதமாக என்னைச் சந்தித்து விட்டர்களென்றா? அல்லது எனக் குச் செய்த துரோகத்தைப் பற்றியா? எதைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள்?”

“அமரா! நான் உனக்குத் துரோகம் செய்தேனா? யார் சொன்னது?”

“ஏன் மற்றவர்கள் சொல்லவேண்டும்? என்னை நம்புங்கள். என் உயிர் போனாலும் உங்களைக் கல்யா ணம் செய்வேன் என்று நான் சத்தியம் செய்திருந்தும் என்னை விட்டுவிட்டு நீங்கள்……..”

“அமரா! நீ நினைப்பது தவறு”

“ஏன்?”

“நீதானே உனக்குத் திருமணமென்று அழைப்பிதழ் அனுப்பினாய்”

“ஏன் பொய் சொல்கிறீர்கள்?”

“அமரா! நானாக உன்னை வெறுக்கவில்லை. உனக் குத் திருமணமென்று அச்சடித்த திருமண அழைப்பிதழ் ஒன்று எனது விலாசத்திற்கு வந்தது. அதில் அமரா- அகிலன் இருவருக்கும் திருமணம் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. அதைக் கண்டதும் மிக்க வேதனைப் பட்ட நான், என் சொந்த மச்சாளைத் திருமணம் செய்து கொண்டேன். இது எனது தப்பா?”

“நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள்.”

“அப்படியாயின் எனக்கு நீங்கள் திருமண அழைப் பிதழ் அனுப்பவில்லையா?”

“இல்லை”

“அப்படியானால் அதை அனுப்பியது யார்?”

“யார் அனுப்பியதென்று யாருக்குத் தெரியும். அப்படியானால் அந்தத் திருமண அழைப்பிதழைக் காட்ட முடியுமா?”

”ஓ!…….நீங்கள் தீபாவளிக்கு எங்கள் வீட்டுக்கு வாருங்கள். அதை நான் காட்டுகிறேன்.”

அவள் கண்களில் மின்னிய உண்மையின் ஒளியைப் பார்க்கவே கூசினான் அமரன்.

“சரி. அப்படியே செய்கிறேன்.”

“இந்தாருங்கள், இது என் மகள் வவியனின் தீபா வளிப் பரிசு. இதை ஏற்றுக் கொள்ளுங்கள்.”

”என்ன! வவியன் உங்களுடைய மகளா?” ஆச்சரியத்துடன் கேட்டாள் அமரா.

”ஆம் அமரா” என்று சொல்லிப் பரிசைக் கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தான் அமரன்.

– 01-11-1964, ஈழநாடு.

– கன்னிப்பெண் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1965, நகுலன் வெளியீடு, கலையகம், கலைநகர், சித்தன்கேணி.

நா.க.தங்கரத்தினம் சித்தன்கேணி கலைநகரைச் கேர்ந்த திரு. நா. க. தங்கரத்தினம் அவர்கள் அராலி வடக்குச் செட்டியார் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு நாகர் கந்தையாவுக்கும் திருமதி மனோன்மணி கந்தையாவுக்கும் 8-6-35ல் பிறந்தார். 'நகுலன்', 'அராலியூரான்', 'கலை நகரான்', 'கொழும்பு மாமா', 'இராசாக்குட்டி' என்னும் புனை பெயர்களுள் மறைந்திருந்து சிறுகதை, கட்டுரை, கவிதைகள் எழுதும் இவர், சமூகத்தொண்டனில் முதன் முதலாகக் கட்டுரை எழுதத் தொடங்கி, தினகரன், வீரகேசரி, ஈழநாடு. ஸ்ரீலங்கா, சுதந்திரன், விவேகி, கலைவாணி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *