உணர்வுகள் உயிரினங்களாக ஆகும் அதிசய வனம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி புனைவு
கதைப்பதிவு: July 21, 2025
பார்வையிட்டோர்: 3,335 
 
 

அதிசய வனத்தின் மாய உலகில், மனித உணர்ச்சிகள் உயிரினங்களாக வடிவம் எடுத்தன. அதைக் கேட்டு ஆச்சரியமுற்ற, ஆர்வமும் அசட்டுத் துணிச்சலும் கொண்ட இளைஞியான அனாமிகா, தனது உணர்வுகள் எவ்வாறு வெளிப்படுகின்றன என்பதைக் காணும் ஆவலுடன் அந்த மாந்தரீக வனத்திற்குள் நுழைந்தாள்.

அங்கே அலைந்து திரிந்தபோது, அவளின் மகிழ்ச்சி பிரகாசமான பூக்களாக மலர்ந்தது. துக்கம், புல்வெளி நடுவே பாறையாக முளைத்தெழுந்தது. அன்பு, மரங்களில் தொங்கும் இனிமையான பழங்களாயிற்று. வெறுப்பு, முள் மரமாகியது. கருணை, அமைதியாக மேயும் சாதுவான பசுவாக உருப்பெற்றது. கோபம், பசித்துப் பதுங்கியிருக்கும் புலியாக வெளிப்பட்டது, உற்சாகம், விளையாட்டுத்தனமான முயல்களின் வடிவத்தில் அங்கும் இங்கும் துள்ளிக் குதித்தோடியது. உல்லாசம் கிளிக்கூட்டமாக உருமாற்றம் அடைந்து வானில் பறந்து திளைத்தது.

இறுதியாக அவளது அச்ச உணர்வுகள் யாவும் திரண்டு, ஒரு பயங்கரமான கரிய அரக்கனின் வடிவத்தை எடுத்தன.

அவன் மாயவனத்திலிருந்து கிளம்பி கிராமத்துக்குள் சென்று, தினம் ஒரு மனிதரைப் பிடித்துத் தின்றுவிட்டு வருவதை வழக்கமாக் கொண்டான்.

அனாமிகாவுக்கு அவன் எந்தத் தீங்கும் விளைவிப்பதில்லை. ஆனால், இடி போன்ற குரலுடன், “நான் நர மாமிசம் மட்டுமே புசிப்பேன். தாவர உணவுகளையோ விலங்கு இறைச்சிகளையோ புசிப்பதில்லை” என்று முழங்கி, அனாமிகாவின் இதயத்தில் திகிலை ஏற்படுத்தினான்.

அவளுக்கு அச்சம் கூடும்தோறும் அரக்கனின் உருவம் பெரிதாக வளர்ந்தது.

அவனது மனித வேட்டைகளைத் தடுத்தாக வேண்டும். ஆனால், அது கிராமத்து மக்கள் மொத்தமாக சேர்ந்தாலும் இயலாத காரியம். வேறு என்னதான் செய்வது? வழி தேடி, குகையில் தவமிருக்கும் ஞானியான துறவியைச் சந்தித்தாள்.

“அவன் மாயாசுரன். உனது பயம்தான் அவனாக உருவெடுத்துள்ளது. உன்னால் மட்டுமே அவனை அழிக்க இயலும்” என்றார் அவர்.

“அவன் பனை மர அளவுக்கு உயரமாக உள்ள மகா அசுரனாக இருக்கிறானே…! சாமானிய மனிதப் பெண்ணான நான் எப்படி அவனை அழிக்க இயலும்?” அவள் மருட்சியோடு கேட்டாள்.

“உனது மனதிலிருந்து உருவானவன்தானே அவன்! அவனை உருவாக்கும் சக்தி உன் மனதுக்கு உண்டு எனில், அவனை அழிக்கும் சக்தியும் உன் மனதுக்கு இருக்கும் அல்லவா! அதைப் பயன்படுத்தி அவனை அழி!”

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அனாமிகா கண்களை மூடி, தன் பயங்களைக் கற்பனை செய்து பார்த்தாள். அவை வெறும் நிழல்கள் என்பதை உணர்ந்தாள். ஒவ்வொரு நேர்மறை உணர்ச்சியும் அவள் இதயத்தில் சுடர்விட்டது, பயம் பதுங்கியிருக்கும் இருண்ட மூலைகளை ஒளிரச் செய்தது. தனது அன்பு, இரக்கம் மற்றும் மகிழ்ச்சியிலிருந்து வலிமையைப் பெற்று, ஒரு கதிரியக்கக் கேடயத்தை உருவாக்கிக்கொண்டாள்.

புதிதாகப் பெற்ற உறுதியுடன் கண்களைத் திறந்தாள். “நான் பயப்படவில்லை!” அவள் கத்தினாள். அவளுடைய குரல் காடு முழுவதும் எதிரொலித்தது.

அந்த அரக்கனைத் துணிச்சலோடு எதிர்கொண்டாள். “நீ உண்மையானவன் அல்ல! நீ என் பயங்களின் நிழல் மட்டுமே!”

அதைக் கேட்டதும் அரக்கன் சுருங்கினான். தீப்பொறிகளின் அடுக்காகச் சிதறி, காற்றில் மறைந்தான்.

ஷாராஜ் இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *