உஜ்வலினி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 9, 2025
பார்வையிட்டோர்: 63 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1 

“கண்ணாமூச்சியாரே காட்டுமூச்சியாரே ஒனக்கொரு பழம், எனக்கொரு பழம் கொண்டோடி வா என்று சொல்லி லக்ஷ்மி உஜ்வலினியைத் தன் பிடியினின்றும் விடுவித்தாள். 

உஜ்வலினி தெரு மத்தியில் போய் நின்றுகொண்டு நாலு பக்கமும் சுற்றிப் பார்த்தாள். சிறுமிகளும் சிறுவர்களும் அநேகர் லக்ஷ்மியைப் போய்த் தொட்டார்கள். அவர்களை எல்லாம் அவள் கவனிக்கவே இல்லை. ‘ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி யிருக்குமாம் கொக்கு’ என்பதைப்போல் அவள் வேறு யாரையோ எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். பால் நிலவில் அச்சமயம் ஒரு சிறுயலுடைய உருவம் தெருக் கோடியில் தோன்றியது. உடனே ஒரே பாய்ச்சலாய் அவனை நோக்கி ஓடினாள். அவனும் அவளிடத்தில் அகப்படாமலிருப்பதற்கு ஏதேதோ பிரயத்தனம் செய்து பார்த்தான். ஆனால் முடியவில்லை. சிறுமி அவனைப் பிடித்துவிட்டாள். அவளுக்குச் சந்தோஷம் பொறுக்க முடியவில்லை. “என்னிடமிருந்து தப்பிக்க உன்னால் முடியுமோ?” என்று சொல்லிச் சிரித்தாள். மற்றச் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்குங்கூட இதைக் கண்டு சந்தோஷந்தான். ஜயராஜைப் பிடிக்கும் வல்லமை வாய்ந்தவள் தங்கள் கூட்டத்தில் உஜ்வலினி ஒருத்தி தான் என்பது அவர்களுடைய அபிப்பிராயம். சிறையீ னின்றும் தப்பி ஓடிய கைதியை மீண்டும் பிடித்து வரும் போலீஸ் அதிகாரிபோல, முகத்தில் கர்வக்குறிகள் தோன்ற ஐயராஜைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தாள் உஜ்வலினி. திண்ணைமீது நின்று ஒருவர் இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண் டிருந்தார். அவருடைய முகத்தில் உவகைக் கிரணங்கள் மெதுவாய் ஒளி வீசின. 

இம்மாதிரி உஜ்வலினியும் ஜயராஜும் ஒருவரை ஒருவர் பிடித்துக்கொண்டு வெகு நேரம் வரை விளையாடிக் கொண்டிருப்பார்கள். 

இதனால் மற்றச் சிறுவர் சிறுமிகளுக்கு விளையாட்டில் சுவாரஸ்யம் குறைகிறது என்று தெரிந்தால், வேறு யாரையாவது பிடித்துக் கொடுத்து விட்டு, அவர்கள் இருவரும் ஏதாவது ஓரிடத்தில் போய் ஒளிந்துகொள்வார்கள். அநேக ஆட்டங்கள்வரை வெளி வராமல் ஏதேதோ பேசிக்கொண்டு இருப்பார்கள். சில சமயங்களில் ஆட்டம் முடியும்வரை அவர்கள் வெளி யேறுவதே இல்லை. 

உஜ்வலினி தன் பெயருக்கு ஏற்ற வெண்மை நிறம் வாய்ந்தவள். கலெக்டர் ஆபீஸ் ஹெட் கிளார்க் ஸ்ரீ வேங்கடேசரின் புதல்வி என்று அவளை ஒருவரும் மதிக்கமாட்டார்கள். அவருடைய நிறத்திற்கும் அவ்வளவு பேதம். 

ஜயராஜும் உஜ்வலினியும் சேர்ந்தே பள்ளிக்கூடம் போவார்கள். படித்தால் இருவரும் ஒன்றாய்ப் படிப்பார்கள்; விளையாடினால் இருவரும் ஒன்றாய் விளையாடுவார்கள். உஜ்வலினி தனக்குக் கிடைக்கும் தின்பண்டங்களை ஜயராஜுக்கும் பங்கிட்டுக் கொடுத்துத்தான் சாப்பிடுவாள். இருவரும் உண்பதும் ஒரே சமயம்; உறங்குவதும் ஒரே சமயம்; எழுந் திருப்பதும் ஒரே சமயம்! 

2 

“ஐயோ ! அம்மா ! என்று தலையை ஒரு கையினால் அழுத்திப் பிடித்துக்கொண்டு ஓடிவந்தான், ஜயராஜ். அவன் சிரசினின்றும் உதிரம் ஒழுகி வடிந்துகொண் டிருந்தது. அவனுடைய அழுகைக் குரலைக் கேட்டதும், உஜ்வலினி திடுக்கிட்டு ஓடிவந்து, கைத்தாங்கலாக அவனைத் தன் தாயிடம் அழைத்துக்கொண்டு சென்றாள். ஜயராஜின் தலையினின்றும் ரத்தம் வடிவதைக் கண்ட பங்கஜம்மாளுக்கு ஆத்திரம் பொறுக்க முடியவில்லை. “அடி! பாதகி ! பிள்ளையை இப்படித் தானாடி அடிப்பது? ஆணைப் பெண்ணைப் பெற்றிருந்தால் தெரியும், பிள்ளையருமை! மலடிக் கழுதை, உனக்கு என்னடீ தெரியும்?” என்று சொல்லிப் பங்கஜம்மாள் ஜயராஜின் தாயை ஆத்திரம் தீரத் திட்டினாள். உஜ்வலினியின் சின்ன உள்ளம் கொதித்தது. ஜயராஜை அடித்த அதே தடியினால், அவளை ஒரு போடு போடலாமா என்று துடித்துக்கொண்டிருந்தாள். பின்பு பங்கஜம்மாள் ஜயராஜின் காயத்தைக் கழுவி மருந்து போட்டாள். 

ஜயராஜின் தாய் அவன் இரண்டு வயசாக ருக்கும்பொழுதே இறந்துவிட்டாள். அவனுடைய சிற்றன்னை அன்று விளக்கேற்றும்படி அவனைக் கட்டளை யிட்டாள். சிம்னியைத் துடைத்துக்கொண் இருக்கும்போது, அது தவறிக் கீழே விழுந்து டைந்துவிட்டது. உடனே அவனுடைய சிற்றன்னை பத்திரகாளி அவதாரம் எடுத்துவிட்டாள்! “நாலு நாளைக்கு முன்னால் வாங்கிய சிம்னியை அதற்குள் உடைத்துவிட்டாயா? அவருக்கு நான் என்ன பதில் சொல்வேன்?” என்று பக்கத்தில் கிடந்த ஒரு தடியை எடுத்து அவன் தலையில் பலமாக ஓரடி அடித்தாள். 

அன்றிரவு ஐயராஜ் தன் வீட்டிற்குப் போகவில்லை. ஜ்வலினியின் வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டுப் படுத்துக் கொண்டான். வேங்கடேசர் ஜாதி நியமங்களை அநுஷ்டிப்பவரல்ல. இயற்கையிலேயே மிக்க தயாள குணமுள்ளவர். அவருடைய மனைவியும் அங்ஙனமே. உஜ்வலினியைத் தவிர அவர்களுக்குச் சங்கரன் என்ற ஒரு மகனும் இருந்தான். 

ஜயராஜும் உஜ்வலினியும் ஒரே பாயில் படுத்துக் கொண்டு தங்கள் சுக துக்கங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். தன் சிற்றன்னை தனக்குச் செய்யும் கொடுமைகளைப்பற்றி ஜயராஜ் சொல்லிக் கொண்டிருந்தான் : “ஒரு நாள் நான் விளையாடிவிட்டு, வீட்டிற்குப் போக வெகு நேரமாகிவிட்டது. போய்க் கதவைத் தட்டினேன். வைத்த வேலைக்காரியா இருக்கிறாள்; நினைத்த நேரமெல்லாம் கதவைத் திறப்பதற்கு?’ என்று சொல்லி என்னைத் துரத்தி விட்டாள். அன்று மேகம் குமுறிக்கொண்டு இருந்தது, எங்கே பார்த்தாலும் கும்மிருள்.கோடை இடி சடசடா எனத் தகர்த்துக்கொண்டிருந்தது எங்கும் சுற்றிப் பார்த்தேன். படுப்பதற்கு இடம் கிடைக்கவில்லை: கடைசியில் ஓர் ஆலமரத்தின் அடியில் ஒதுங்கினேன். பேய்மழை பெருவாரியாகக் கொட்டியது.” 

“எங்கள் வீட்டிற்கு வந்திருக்கக் கூடாதா, ஜயராஜ்?” என்றாள் உஜ்வலினி. 

கடைசியில் காலையில் எழுந்தபோது நன்றாய் ஜலதோஷம் பிடித்துக்கொண்டது. உடம்பு நெருப்பாய்க் காய்ந்தது. பேசாமல் போய்ப் படுத்துக்கொண்டேன். நீ நாசமாய்ப் போக, எங்கிருந்து காய்ச்சலைக் கொண்டு வந்தாய்? உனக்கு யார் இனி வைத்தியம் செய்வது?” என்றாள் சின்னம்மா. 

உஜ்வலினி வடித்த கண்ணீர் என்னவோ ஜயராஜுக்கு இருளில் தெரியவில்லை. ஆனால் அவள் விட்ட பெருமூச்சு அவனுக்குக் கேட்கத்தான் செய்தது! 

3 

சங்கரனும் உஜ்வலினியும் தூங்கிவிட்டார்கள். பங்கஜம்மாள் தன் கணவனுடன் பேசிக்கொண்டு இருந்தாள். 

” உஜ்வலினிக்குப் பதினாலு வயசாகிவிட்டது. இன்னும் அவளுடைய கல்யாணத்தைப்பற்றி ஒரு ஏற்பாடும் பண்ணாமல் இருக்கிறீர்களே?” 

“நாம் ஏற்பாடு பண்ணவேண்டியது என்ன இருக்கிறது? எல்லாம் தானே ஏற்பாடாகிவிட்டதே!”

“நீங்கள் சொல்லுவதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை.” 

“ஏன் புரியவில்லை? உஜ்வலினிக்கும் ஐயராஜுக்கும் ஏற்பட்டிருக்கும் சம்பந்தத்தை நோக்கினால், அவனுக்கே அவளைக் கல்யாணம் செய்துகொடுத்துவிடுவது உசித மென்று நான் நினைக்கிறேன்.” 

”உஜ்வலினியைத் தாங்கள் இன்னும் நன்றாய் அறியவில்லை. அவள் ஜயராஜைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சம்மதிப்பாள் என்று நினைக்கிறீர்களா?” 

“அதில் உனக்கு என்ன சந்தேகம்?” 

“சொல்லுகிறேன் கேளுங்கள். ஒரு நாள் ஐயராஜின் சிறிய தாயார் அவர்கள் வீட்டில் செய்த மைசூர்ப்பாகைக் கொண்டுவந்து கொடுத்தாள். நான் வாங்க மறுத்தேன். ‘நீங்கள் சாப்பிடாவிட்டால் குழந்தை களுக்காவது கொடுக்கக் கூடாதா?’ என்று சொன்னாள். அதன்மேல் நான் நம் சங்கரனுக்குக் கொடுக்கா விட்டாலும், உஜ்வலினிக்காவது கொடுக்கலாம் என்று நினைத்து அதை வாங்கி வைத்தேன். ஆனால் உஜ்வலினி அதைத் தொடவும் மறுத்துவிட்டாள்!” 

வேங்கடேசர் சிந்தனையில் ஆழ்ந்தார். அவருக்கு ஒரு வழியும் தென்படவில்லை. இவ்வளவு தூரம் விஷயம் முற்றிவிடும் என்று அவர் நினைக்கவில்லை. ஜில்லா கலெக்டர் மாக்டொனால்ட் துரைக்குத் தன் ஆருயிர் மனைவி இறந்த துக்கத்தில் பைத்தியம் பிடித்துவிட்டது. அவன் எங்குச் சென்றான் என்று எவருக்குமே தெரியாது. பொழுது உஜ்வலினி ஒருவாரக் குழந்தை. அதிகாரிகள் வளைப்பற்றி ஏனோ ஒன்றும் கவனிக்கவில்லை. குழந்தை ஆதரவற்றுக் கிடந்தது. அதன் பரிதாபகரமான அருகைக் குரல் வேங்கடேசர் உள்ளத்தை உருக்கியது. பின்னால் கேட்கும்போது கொடுத்துவிடலாம் என நினைத்து, குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்து தம் மனைவியிடம் கொடுத்தார். குழந்தையைப் பாதுகாத்த தற்காகப் பின்னால் தனக்கு வெகுமானம் கிடைக்குமென்ற நம்பிக்கையும் அவருக்கு உண்டு. இவ்விஷயம் எவருக்குமே தெரியாது. உஜ்வலினியின் வெள்ளை நிறத்தைக் கண்டவர்கள் சிறிது ஆச்சர்யமுற்ற போதிலும், எல்லோரும் அவள் வேங்கடேசரின் குழந்தை என்றே நினைத்தார்கள். 

வெகு நேரம் வரை யோசித்துவிட்டு, “பின் என்ன செய்யலாம்?” என்றார் வேங்கடேசர் 

“இத்தனை நாளும் நம் பிள்ளையாக வளர்த்து விட்டோம். கடைசி வரைக்கும் அவள் நம் பிள்ளை யாகவே இருக்கட்டும். நம் ஜாதியிலேயே யாராவது ஒரு நல்ல பையனைப் பார்த்துக் கல்யாணம் செய்து கொடுங்கள்.”

வேங்கடேசர் பின்னும் யோசனையில் ஆழ்ந்தார். கடைசியில், “எதற்கும் நீ அவளை ஒரு வார்த்தை கேட்டுப் பாரேன்?” என்றார். 

“அதற்கென்ன, நான் மாட்டேன் என்றா சொல்கிறேன்?” 

மறு நாள் காலை பங்கஜம்மாள் உஜ்வலினியிடம் சொன்னாள்: ‘உஜ்ஜீ! உனக்கு வயசு பதினாலு ஆகி விட்டது. இனியும் உன்னை ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்காமலிருந்தால், ஊரார் சிரிப்பார்கள். எதிர்த்த வீட்டு ஜயராஜ் நல்ல பையன். நல்ல படிப்பு; நல்ல குணம். தங்கமான பையன்.நீயும் அவனை…… என்று சொல்லி முடிப்பதற்குள், உஜ்வலினி படபடப்புடன் சொல்லலுற்றாள் அம்மா! நான் ஏதோ சிறு வயசில் அவனோடு விளையாடிக்கொண்டு இருந்தேன் என்று நீங்கள் …….. அதற்குமேல் அவள் தாண்டை அடைத்துக்கொண்டது. ஒன்றும் பேச முடியவில்லை. அவள் கண்களில் கண்ணீர் ததும்பியது. சற்று நேரத்திற்குப் பின் விம்மல்களுக்கும் பெருமூச்சுகளுக்கு மிடையே, அம்மா! ஹிந்துப் பெண் எங்காவது கிறிஸ்தவனைக் கல்யாணம் பண்ணிக்கொள்வதுண்டா!” என்றாள். 


கல்யாணமான ஒரு மாதத்தில் உஜ்வலினி விதவை. யாகிவிட்டாள்! அவளுடைய பரிதாப நிலையை நோக்கிக் கண்ணீர் விடாதவர் அவ்வூரில் எவருமே இல்லை. மாப்பிள்ளையின் தாய்தந்தையருங்கூட உஜ்வலினியின் குற்றமற்ற குழந்தை முகத்தைப் பார்த்ததும் அவளுடைய கொடிய விதியை நினைந்து அழுத அழுகைக்கு அளவே இல்லை.மாப்பிள்ளையின் தந்தை வேங்கடேசரிடம் வந்து, அவளை யாருக்காவது மறு விவாகம் செய்து கொடுத்து விடும்படி வேண்டினார்.அவரும் அவளைப் பால்ய விதவைப் புனர் விவாக சங்க த்தில் சேர்த்து, அவளுக்கு இஷ்டமான கணவனுக்குக் கல்யாணம் செய்துகொடுத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் உஜ்வலினி அதற்கு இணங்கவில்லை. ஆரிய சமாஜிகளும் பிரம்ம சமாஜிகளும் விதவா விவாகம் சாஸ்திரோக்த மென்று நிரூபித்திருப்பதாகவும், இன்னும் சாஸ்திரங்களி லிருந்து அதற்கு அநேக ஆதரவுகளையும் எடுத்துக் காட்டினார். அதற்கு அவள்,ஆரிய சமாஜிகளும் பிரம்ம சமாஜிகளும் சொல்லுகிறார்களென்று, வாழையடி வாழை யாக, வம்ச பரம்பரையாக வரும் ஒரு புராதன் வழக்கத்தை விட்டுவிடுவதா ? என்று கேட்டாள். இதற்கு அவர் என்ன பதில் சொல்வார்? 


உஜ்வலினி சாதம் பரிமாறிக்கொண்டு இருந்தாள். சங்கரன் சர்க்கார் உத்தியோகக் கொடுமைகளைப்பற்றிப் பிரலாபித்துக்கொண்டிருந்தான். 

“நான் அன்று ஒரு நாள் ஆபீஸிற்குப் போவதற்கு இரண்டு நிமிஷம் தாமதமாகிவிட்டது. சிரஸ்தேதார் காரணம் விசாரித்தான். இதற்கு என்ன காரணம் சொல்வது? ‘ஏதோ தாமதமா விட்டது’ என்று சொன்னேன். அதற்கு என்னுடைய ‘ரஜா நாட்களில் ஒரு நாள் குறைக்கப்படும்’. என்று உத்தரவு போட்டு விட்டான்.” 

“நான்தான் உனக்கு அன்றே சொன்னேனே. அண்ணா. இந்த அடிமை உத்தியோகத்தில், ஒருவன் மானங்கெட்டு, மரியாதை கெட்டுப் போகும்; இது நமக்கு வேண்டாம் என்று எத்தனையோ சொல்லியும் நீ கேட்க வில்லை!” 

“பட்டா மாறுதலில் நான் அன்று ஒரு நாள் ஒரு சிறு தப்பிதம் செய்துவிட்டேன். அதற்குத் தாசில்தார், முட்டாள் பி.ஏ. படித்திருக்கிறேன் என்கிறாய். இது தெரியவில்லையே!’ என்று ஏசினான். பி.ஏ. வகுப்பில், பட்டா மாற்றுதலும்,பி. மெமோவுந்தான் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டான் அந்த முடன்! { ” 

“ஏன் அண்ணா! இந்த முப்பது பிச்சைக் காசு வாங்குவதற்காகவா அவனிடத்தில் ‘முட்டாள்’ என்றும் மூடன் என்றும் பட்டம் வாங்கவேண்டும்? ஒரு கால் காகிதத்தில், இரண்டு வரியை எழுதிக் கொடுத்துவிட்டு ஒரேயடியாய் அதற்குத் தலை முழுகிவிடேன்!” என்றாள் உஜ்வலினி. 

அப்பொழுதுதான் சமையலறைக்குள் நுழைந்த வேங்கடேசர், “இன்றைக்கு முப்பது ரூபாய் உத்தியோக மாக இருப்பதுதான் அம்மா, நாளைக்கு முன்னூறு ரூபாய் ஆவது. ஐந்து ரூபாய்ச் சேவகமானாலும், அரண்மனைச் சேவகத்திற்குத் தனி மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. நாலு வருஷத்திற்குப் பேசாமல் பல்லைக் கடித்துக் கொண்டிருந்தால், அப்புறம் இருக்கிறவனை எல்லாம் நாம் அதிகாரம் பண்ணலாம். பொறுத்தார் பூமி ஆள்வார்” என்றார். 

“இந்த வேதாந்தந்தான் எனக்குக் கொஞ்சமேனும் விளங்கவில்லை” என்றாள் உஜ்வலினி. 

சங்கரன் மீண்டும் சொன்னான்: ”இது இன்றைக்குத் தான் நடந்தது.கலெக்டருடைய சொந்தக் கடிதம் ஒன்று டைப் அடிப்பதில், புது ரிப்பன் போட்டிருந்ததால், மை கெட்டியாக விழுந்துவிட்டது. உடனே மேஜைமீ திருந்த மைப் புட்டியை என்மேல் வீசி எறிந்து, இப்பொழுது உன் சட்டை எவ்வளவு அழகாக இரு தென்று பார்’ என்று சிரிக்கிறான் கலெக்டர். 

”அவன் உன்மீது மைப்புட்டியை வீசி எறிய நீ பேசாமலா இருந்தாய்? ஏன்,அந்த மேஜையில் ஒரு ரூல் தடி இல்லாமலா போய்விட்டது, அவன் மண்டையில் நாலு போடு போடுவதற்கு? வா அண்ணா, அந்தப் பயலை என்னிடத்தில் காட்டு. நான் அவனுக்குத் தகுந்த மரியாதை செய்கிறேன்” என்றாள் உஜ்வலினி. 

நாடெங்கும் தேசீயப் புயல் கிளம்பியது. அப் புயலில் உஜ்வலினியும் அடித்துக்கொண்டு போகப் பட்டாள். உப்பு சத்தியாக்கிரகத்தில் சேர்ந்ததன் பயனாய் அவளுக்கு ஒரு வருஷம் வெறுங் காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 

தன் வீட்டையே முதலில் சீர்திருத்த வேண்டும் என்று நினைத்து; உஜ்வலினி தன்னுடைய சகோதரன் சங்கரனைத் தன் வசமாக்க முயன்றாள். அப்பொழுது சங்கரன் ஆபீஸ் ஹெட் கிளார்க் ஆகியிருந்தான். அவனுக்குச் சம்பளமும் அதிகரித்துவிட்டது. இரண்டொரு வருஷங்களில் மாஜிஸ்திரேட் ஆகிவிடலா மென்று நம்பினான். ரெவென்யூ, கிரிமினல், அக்கவுண்ட் மூன்று பரீக்ஷைகளிலும் அவன் தேர்ச்சி பெற்றிருந்தான். மாஜிஸ்திரேட் ஜாபிதாவிலும் அவன் பெயரைச் சேர்த்து விட்டார்கள். ‘வேலை ஏதாவது காலி விழ வேண்டியது தான் தாமதம்; அவன் மாஜிஸ்திரேட் ஆகிவிடுவான். இத்தகைய அரிய சந்தர்ப்பத்தில் சத்தியாக்கிரக இயக்கத்தில் சேர்வது சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்பது அவனுடைய அபிப்பிராயம். உஜ்வலினியின் சொற்கள் ஒன்றும் அவன் காதில் ஏறவில்லை. 

அவள் சிறை சென்ற இரண்டு மாதங்களுக்குப்பின் வேங்கடேசரிடமிருந்து அவளுக்கு ஒரு கடி தம் கிடைத்தது அதில் எழுதியிருந்த விஷயத்தைக் கண்டதும் அவள் திடுக்கிட்டாள். 

பிரிய உஜ்ஜீ ! 

கடவுளுடைய லீலாவிநோ தங்கள் ஒன்றும் எனக்கு விளங்கவில்லை. இவ்விஷயத்தைக் கேட்டதும் நீ பிரமித்துப் போவாய்! இதை உனக்கு எழுதும்போது என் மனம் என்ன பாடு படுகிறது என்பது ஈசுவரனுக்குத்தான் தெரியும். அம்மா அழும் அழுகைக்கு அளவே இல்லை. சங்கரன் இறந்துவிட்டான்! ஆம், அப்படித்தான் சொல்லவேண்டும். நம்மைப் பொறுத்த மட்டிலும், ஹிந்து தர்மத்தைப் பொறுத்தமட்டிலும், அவன் இறந்தவனே! இப்பொழுது அவன் சங்கரன் அல்ல. ஜான் சங்கரன் ஆகிவிட்டான்! ஒரு மாஜிஸ்திரேட் உத்தியோகம் காலி விழுந்தது. அது கிறிஸ்தவர் களுக்கு உரியதாம். கிறிஸ்தவர்கள் எவருமே மூன்று பரீக்ஷைகள் தேறியவர்கள் இல்லாத தால், அது காலியாகவே இருந்தது. உன் அண்ணன் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து, இப்பொழுது மாஜிஸ்திரேட் உத்தியோகம் வகிக்கிறான்.நாங்கள் என்ன சொல்லியும் அவன் கேட்கவில்லை. 

இங்ஙனம், 
உன் அன்புமிக்க தந்தை, 

தன் சகோ தரனின் தன்மையை நன்கறிந்திருந்த உஜ்வலினிக்கு அதில் ஆச்சரியம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. 

அன்று கைதிகள் எல்லாரும் குளிக்கப் போகும் பொழுது, புதுக் கைதி ஒருவன் செல்வதை உஜ்வலினி தன் கொட்டடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவனுடைய முகத்தை அவளால் பார்க்க முடியவில்லை. ஆயினும் அவனுடைய நடையிலிருந்தும் பின் தோற்றத்தி லிருந்துமே அவனை அவள் எங்கோ முன்னால் பார்த் திருப்பதாக நினைத்தாள். எங்கே பார்த்திருக்கிறாள், எப்பொழுது பார்த்திருக்கிறாள் என்பது மட்டும் அவளுக்குச் சீக்கிரம் ஞாபகம் வரவில்லை. ஆகையால் குளிக்கப்போன கைதிகள் திரும்பி வரும் வரைக்கும், கொட்டடிக் கதவண்டையே நின்று அவள் காத்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் கைதிகளும் திரும்பி வந்தார்கள். அக்கூட்டத்தில் அந்தப் புதுக் கைதி எங்கு இருக்கிறான் என்று தேடினாள். ஆம், அவன்தான். சந்தேகம் இல்லை, ஜயராஜ்தான்! அவளுடைய இதழ் களில் புன்னகை பூத்தது. அதே சமயம் ஜயராஜின் பார்வையும் அவள்மீது விழுந்தது. முதலில் அவன் சற்றுத் திடுக்கிட்டுப் பின்னடைந்தான். பின்னர், அவளை அங்குப் பார்ப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை என்பது போல் புன்முறுவல் செய்துகொண்டு போய்விட்டான். 

அநேக வருஷங்களுக்கு அப்புறம், பால்ய சிநேகிதர் கள் இருவரும் அன்று மீண்டும் சந்தித்தார்கள். உஜ்வலினியின் கல்யாணத்திற்குச் சற்று முன்பே, ஜயராஜ் அவளை விட்டுப் பிரிய நேர்ந்தது. அவனுடைய தகப்பனார் தம் சொந்த ஜில்லாவாகிய திருச்சிராப் பள்ளிக்கே தமது. உத்தியோகத்தை மாற்றிக்கொண்டு போய்விட்டார். உஜ்வலினிக்குக் கல்யாணம் ஆனது ஜயராஜுக்குத் தெரியும். ஆனால் அவள் விதவையான சமாசாரம் அவனுக்குத் தெரியாது. அவன் உஜ்வலினிக்கு ஒன்றிரண்டு கடிதங்கள் எழுதினான். ஆனால் அவள் அவைகளுக்குப் பதில் ஒன்றுமே எழுதவில்லை. 

உஜ்வலினியும் ஜயராஜும் சிறையில் அநேக முறை சந்தித்தார்கள். ராஜீயக் கைதிகளிடையே கண்டிப்பான கட்டுப்பாடு இல்லாததால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் சம்பாஷணை செய்யவும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஜய ராஜைக் காணும்போதெல்லாம், உஜ்வலினி சற்று நாணித் தலை குனிவாள். ஆனால் ஐயராஜ் பழைய சகஜ பாவத்துடனேயே அவளுடன் பேச ஆரம்பித்தான். அவள் வைதவ்யமடைந்த பரிதாப வரலாற்றைக் கட்டுக் கண்ணீர் உகுத்தான். 

அவர்களுடைய நட்பு வளரலாயிற்று. சிற்சில சமயங்களில் அவளை அறியாமலே அவளுடைய கண்கள் ஜயராஜின் கண்களைச் சந்தித்தன. உஜ்வலினி வாசிப்பூ தற்காக ஜயராஜ் அநேக புத்தகங்கள் கொடுத்து உதவினான். அவை பெரும்பாலும் அரசியலைப்பற்றியே இருக்கும். மதத்தைப்பற்றி அவன் அதிகக் கவலை எடுத்துக்கொள்வதில்லை. அது சம்பந்தமான-நூல்களையும் அவன் வாசிப்பதில்லை. என்றாலும் ஒரு நாள் அவன் உஜ்வலினிக்குக் கொடுத்த புத்தகங்களில் சுவாமி தயானந்தர் எழுதிய சத்தியார்த்தப் பிரகாசமும், ஈசுவர சந்திர வித்யாசாகரருடைய புத்தகம் ஒன்றும் இருந்தன. அப்புத்தகங்களில் ஜயராஜின் சொந்தக் கையெழுத்தில், “ஆழ்ந்த கருத்துக்கள் அடங்கியது ; ஊன்றிப் படித்தல் அவசியம் என்று எழுதப்பட்டிருந்தது. அதைக் கண்டதும் உஜ்வலினியின் செவ்விதழ்களில் லேசாக ஒரு புன்முறுவல் தோன்றி மறைந்தது. 

ராஜீயக் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப் பட்டனர். தான் வெகு நாளாய்ப் பார்க்க முடியாத தன் தாய்தந்தையரைப் பார்க்கவேண்டுமென்று உஜ்வலினி விரும்பினாள்.ஆனால் அப்பொழுது வடநாட்டிலிருந்து ஒரு காங்கிரஸ் தலைவர் சென்னைக்கு வந்திருந்தார். அவரைத் தரிசித்துவிட்டு வரலாமென்று ஜயராஜ் சொன்னான். இருவரும் சென்னைக்குப் புறப்பட்டார்கள். அங்கு ஒரு ஹோட்டலில் இருவரும் ஒரே அறை எடுத்துக் கொண்டு தங்கலாமென்று ஜயராஜ் கூறினான். அதற்கு உஜ்வலினி ஆக்ஷேபம் சொல்லவில்லை. 

காங்கிரஸ் தலைவர் சென்னையை விட்டுச் சென்று இரண்டு தினங்கள் ஆயின. ஆனால் உஜ்வலினியும் ஜய ராஜும் இன்னும் சென்னையை விட்டுப் புறப்படவில்லை. அதில் அசம்பாவிதம் ஏதும் இருப்பதாக உஜ்வலினிக்குத் தோன்றவில்லை. 

அன்று போஜனம் முடிந்ததும், “உஜ்ஜீ! கடற் கரைக்குப் போகலாம்,  வருகிறாயா? என்றான் ஜயராஜ். 

“நானும் அப்படித்தான் நினைத்தேன்” என்றாள் உஜ்வலினி. 

பங்குனி மாத இரவு. பூமியில் கடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆகாயத்தில் மதி இளநங்கை மேகங்க ளிடையே ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தாள். ஒரு மேகம் வெகு விரைவாக ஓடி அவளைப் பிடித்துத் தன்னுள் அடக்க முயற்சி செய்யும். அதற்குள் நிலாப்பெண்,  “என்னைப் பிடிக்க உன்னால் முடியுமோ?” என்று சொல்லி மேகத்திரையைக் கிழித்துக்கொண்டு வெளி யீேறுவாள். சிறிது தூரம் நிர்மலமான நீலவானில் செல்வாள். அச்சமயங்களில் கடல் ‘தங்கத்தை உருக்கி தழல் குறைத்து நீராக்கி எங்கும் சிந்தியதோர் இங்கித மாய்’த் தோற்றியது. 

“ஆஹா! கடல் நீர் எத்தகைய அழகாய்த் தோன்று கிறது உஜ்ஜீ!” என்றான் ஐயராஜ். 

மீண்டும் ஒரு கரிய மேகம் பிறைப்பெணணைச் சிறை செய்தது. கொஞ்ச நேரத்தில், ன்தான் இதோ தப்பித்துவிட்டேனே!” என்று கொண்டல் கதவை உடைத்துக்கொண்டு கிளம்பினாள் நிலாமங்கை. இந்தக் காட்சியைக் கண்டபோது ஐயராஜுக்கும் உஜ்வலினிக் கும் அவர்கள் சிறு வயசில் விளையாடிய விளையாட்டுக்கள் ஞாபகம் வந்தன. “உஜ்ஜீ ! சந்திரன் செல்கிறதா, மேகம் செல்கிறதா?” என்றான் ஐயராஜ். 

“நான் செல்லுகிறேனோ, நீ செல்கிறாயா. என்று கேட்பதுபோல் இருக்கிறது.” 

பிறகு வெகு நேரம்வரை இருவரும் மௌனமாய்ச் சென்றுகொண்டிருந்தார்கள். ஆகாயம் இருண்டது. பின்னால் வரப்போகும் இடியையோ மழையையோ எச்சரிப்பதுபோல், ஆகாயத்தில் மின்னற் ற் கொடி துவண்டது. 

”உஜ்ஜீ!” என்று உயிரை உருக்கும் குரல். 

“ஏன்?” 

“நான் நாளை ஆரிய சமாஜத்தில் சேர்ந்து ‘சுத்தி செய்துகொள்ள நினைத்திருக்கிறேன்; உஜ்வீகாந்தன் என்று பெயர் வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.” ஜயராஜின் குரல் தடுமாறிற்று. 

உஜ்வலினி ஒன்றும் பதில் செல்லவில்லை 

“விதவா விவாகத்தைப்பற்றி உன் அபிப்பிராயம் என்ன?” என்றான் ஐயராஜ். 

“அது அவரவர் இஷ்டத்தைப் பொறுத்தது.”

“சாஸ்திர விரோதம் என்று நீ நினைக்கிறாயா?” 

“இப்பொழுது நான் அப்படி நினைக்கவில்லை.”

“பின்?” 

உஜ்வலினிக்கு இக்கேள்வியின் அர்த்தம் விளங்க வில்லையா? அவள் பேசாமல் இருந்தாள். ஐயராஜ் மீண்டும் கேட்டான்: ”உன் இஷ்டம் என்ன? 

உஜ்வலினியின் கண்களில் கண்ணீர் ததும்பியது. மிகுந்த மனவேதனையுடன், “நான் விதவையாகவே இறப்பேன்” என்றாள், 

ஜயராஜின் உள்ளத்தில் இடி விழுந்தது போல் இருந்தது.ஆகாயத்தில் சந்திரனை ஒரு கார்மேகம் கவ்விக் கொண்டது. எங்கும் இருள் சூழ்ந்தது. அகத்திலும் இருள்; புறத்திலும் இருள். 

மறுநாள் காலை உஜ்வலினி சென்னையை விட்டுப் புறப்பட்டாள். ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் இரவு 9-30 மணிக்கு மதுரை வந்து சேர்ந்தது.உஜ்வலினி வீட்டுக்குப் போனபொழுது மணி 10-30 ஆகிவிட்டது. வேங்கடேசரும் பங்கஜம்மாளும் பேசிக்கொண்டிருந்தார்கள். “ஈசனின் திருவிளையாடல்கள் இருந்தவாறு என்னே! ஆங்கிலத் தாய் தந்தையருக்குப் பிறந்த உஜ்வலினி, நம் பாரத நாட்டிற்காக உழைக்கிறாள், சிறை செல்கிறாள்; மறுமணம் செய்துகொள்ள மறுக்கிறாள். ஆனால் நம் சொந்தப் பிள்ளை சங்கரனோ, கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து, கிறிஸ்தவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறான்” என்றார் வேங்கடேசர். 

“ராஜீயக் கைதிகளை எல்லாந்தான் விடுதலை செய்து விட்டார்களே. உஜ்ஜீ இன்னும் ஏன் வரவில்லை? அவள் முகத்தைக் கண்டாவது நான் ஆறுதல் அடைவேனே!” என்று ஏங்கினாள் பங்கஜம்மாள். 

உஜ்வலினி சித்தப்பிரமை கொண்டவள் போல் ‘தட தட வென்று கதவைத் தட்டினாள். 

“அப்பா! நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தாள். 

 “நான் என்னம்மா சொன்னேன்? ஒன்றும் சொல்ல வில்லையே!” என்று பேச்சை மறைக்க யத்தனித்தார். வேங்கடேசர். 

ஆனால் உஜ்வலினி பிடிவாதம் செய்தாள். தன் கதை முழுவதையும் அறிந்தவுடன், அவளால் ஒரு கணமும் அங்கு இருக்க முடியவில்லை. சென்னைக்குச் சென்று ஊர் முழுவதும் ஜயராஜைத் தேடிப் பார்த்தாள்.. எங்கும் அகப்படவில்லை. கடைசியில் என்ன நினைத்தாளோ அவனைப் பிரிந்த இடத்திற்குப் போய், “ஜயராஜ்! திரும்பி வரமாட்டாயா? ஜயராஜ்!” என்று கத்த ஆரம்பித்தாள். அவன் சொல்லும் பதில் அவளுக்கு எங்ஙனம் கேட்கும்? 

வானக் கடலில் மின்னும் விண்மீன்கள் உஜ்வலினியைக் கண் சிமிட்டிப் பரிகசிப்பதுபோல பிரகாசித்தன! 

– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *