இவளும் பெண்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 28, 2021
பார்வையிட்டோர்: 4,086 
 
 

மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டு கட்டிலில் சலனமின்றிப் படுத்திருக்கும் மகன் கணேசுக்கு அருகில் இடிந்து சிலையாக அமர்ந்திருந்தார் தணிகாசலம்.

இப்போதுதான்…

இவரோடு சம்பந்தம் செய்து கொள்ளப் போகிற சாந்தமூர்த்தி அந்த அறைக்குள் நுழைந்தார்.

கவலையுடன் மகனைக் கவனித்துக்கொண்டிருந்த தணிகாசலம் அவர் வந்ததைக் கவனிக்கவில்லை.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் என்பது தவறு. எவரோ நன்றாக இருக்க, அந்தக் குடும்பம் சந்தோசமாக இருக்க தன் கிட்டினியைத் தானம் செய்தது தவறு. இப்போது தன் பிள்ளைக்கு உதவ முடியவில்லையுயே என்கிற கவலை அவர் மனதுக்குள் ஆழ இருந்து அரித்துக்கொண்டே இருந்தது.

வந்த சாந்தமூர்த்தி இவர் தோளைத் தொட்டபிறகுதான் துணுக்குற்றுத் திரும்பினார்.

ஆளைப் பார்த்த தணிகாசலத்திற்குத் திடீரென்று துக்கம் அணை உடைத்தது.

“சம்பந்தி…!” அப்படியே அவர் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு குலுங்கினார்.

கண்களில் கரகரவென்று கண்ணீர்.

சாந்தமூர்த்திக்குத் தர்மசங்கடமாக இருந்தது. அழுது ஆசுவாசப்படட்டும் என்று சிறிது நேரம் அமைதியாய் இருந்து…பின்

“டாக்டர் என்ன சொல்றார்..?” கேட்டார்.

“ரெண்டும் பழுது. ஒன்னு கிடைச்சாலும் போதும். உயிர் பிழைக்கலாம். சொல்றார்.” சொல்லி தணிகாசலம் கண்களைத் துடைத்தார்.

“ஏற்பாடு செய்தீங்களா..? ”

”என்கிட்டே இருந்ததைக்க குடுத்துட்டுத் தவிக்கிறேன். ஒரு லட்சம் சன்மானம் தர்றேன்னு விளம்பரம் கொடுத்திருக்கேன். நாள் பத்தாச்சு. இன்னும் எவர்கிட்டேயிருந்தும் எந்த தகவலும் வரலை. ”

“வரும் கவலைப்படாதீங்க” என்று தைரியமூட்டிய சாந்தமூர்த்தி…

“அ ….. அப்புறம் ஒரு விசயம்…”மெல்ல ஆரம்பித்தார்.

“சொல்லுங்க…? ”

“நாம கொஞ்சம் வெளியே போய் தனியா பேசலாமா..? ”

தணிகாசலம் தலையாட்ட….

இருவரும் மருத்துவமனையை விட்டு வெளியேறிக் கொஞ்சம் தள்ளி உள்ள மரத்தடி புல்வெளியில் வந்து நின்றார்கள்.

“சம்பந்தி..! நான் சொல்றதைத் தப்பா எடுத்துக்காதீங்க. வீட்டுல மனைவி, பையன்கள் அபிப்பிராயம்…”

“சொல்லுங்க…? ”

“நம்ம சம்பந்தம். பொண்ணு – பிள்ளை நிச்சயத்தாரத்தை முறிச்சிக்கலாம்ன்னு சொல்றாங்க..”

தணிகாசலம் அதிர்ச்சியடையவில்லை. யூகித்தது. சிந்தித்தது. இவரே சொல்லவேண்டுமென்று நினைத்தது.

மௌனமாய் இருந்தார்.

“அப்புறம்…பொண்ணே பயப்படுறாள். ஒரு கிட்னி கிடைச்சு பொழைச்சு திருமணம் முடிச்சாலும் பின்னால என்னாகுமோ ஏதாகுமோ, வாழ்க்கை சரியா இருக்குமான்னு யோசிக்கிறாள். தாம்பத்தியம் சரியா இருக்குமா….?, பிள்ளைக்குட்டி பிறக்குமான்னெல்லாம் குழம்புறாள். நிச்சயம் முறிந்தால் பெண்ணுக்கு மாப்பிள்ளைக் கிடைக்கிறது கஷ்டம், சந்தேகம். அதுக்கும் சொந்தத்துல சொல்லி ஏற்பாடு செய்திருக்கேன். கவலை விட்டாச்சு. நீங்க மனசு வைச்சு சம்மதிச்சா…. எல்லாம் சுமூகம்.” நிறுத்தினார்.

தணிகாசலம் மெளனமாக இருந்தார்.

“என்ன சம்பந்தி யோசனை…? ”

“ஒ… ஒண்ணுமில்லே ! எனக்கு சம்மதம். ஆனா….’’ இழுத்தார்.

“ஆனா என்ன சம்பந்தி..? ”

“ஒரு சேதி சொல்லனும்ன்னு ஆசை. அதைச் சொல்லலாமா வேணாம்டான்னுதான் யோசனை.” மறுபடியும் தணிகாசலம் இழுத்தார்.

“என்ன சேதி…? தயங்காம தைரியமா சொல்லுங்க ? . ”

“என் பையன் நிலை உங்க பொண்ணுக்கு ஏற்பட்டு… நான் உங்களிடம் இப்படி கேட்டால் உங்களிடமிருந்து என்ன பதில் வரும்ன்னு யோசனை…”தனக்குள் உழன்றதைச் சொன்னார்.

“சம்பந்தி..!!” சாந்தமூர்த்தி அதிர்ந்தார், அலறினார்.

ஒரு வினாடி அவருக்கே உடல் ஆடியது. குப்பென்று வியர்த்தது. கைத்துண்டால் முகத்தைத் துடைத்தார். கை நடுங்கியது.

எதிரில் நிற்பவரை நிமிர்ந்து பார்க்கவே என்னவோ போலிருந்தது. தலை கவிழ்ந்தது.

“கவலைப்படாதீங்க. ஒரு பேச்சுக்குச் சொன்னேன். நான் நினைச்சதைத்தான் நீங்க சொல்லி இருக்கீங்க. மற்றப்படி மாற்றமில்லே. எந்த யோசனையுமில்லே.” தணிகாசலம் அவரைத் தேற்றினார்.

சாந்தமூர்த்திக்கு நெக்குருகியது.

“சம்பந்தி..!!” நெகிழ்ந்து அவர் கைகளைப் பற்றினார்.

“சம்பந்தம் முறிஞ்சி, முடிஞ்சி போச்சு. என்னை நண்பன்னு அழைக்கலாம்.” தணிகாசலம் எந்தவித கலக்கமுமின்றி சொன்னார்.

சாந்தமூர்த்தி இன்னும் நெகிழ்ந்தார்.

“வருத்தமில்லையே…?…”பாவமாகப் பார்த்தார்.

“இல்லே…! ”

“என் பொண்ணுக்கும் கடைசியாய் ஒரு முறை உங்க பையனைப் பார்க்க ஆசை. அதனால் மருத்துவமனைக்கு என்னோடு வந்தாள். இரும்மா…. நான் போய் சேதி சொல்லிட்டு அப்புறமா உன்னை வந்து அழைச்சுப் போறேன்னு சொல்லி சாந்தியை மருத்துவமனை வரவேற்பறையில் விட்டு வந்திருக்கேன்.” அடுத்த செய்தியையும் சொன்னார் சாந்தமூர்த்தி.

“அப்படியா..? சந்தோசம் !” என்று தணிகாசலம் சொல்லி முடிக்கவும்… மருத்துவமனை சிப்பந்தி ஒருவன் இவர்கள் அருகில் வரவும் சரியாக இருந்தது.

“சார் ! உங்களை டாக்டர் ஐயா உடனே அவர் அறைக்கு வரச் சொன்னார்.” என்று அவன் தணிகாசலத்தைப் பார்த்துச் சொன்னான்.

“அப்படியா..? இதோ வர்றேன். வாங்க தோழா..!” என்று சாந்தமூர்த்தியையும் அழைத்துக்கொண்டு விரைவாக நடந்தார்.

இருவரும் அழைத்த டாக்டர் அறைக்குள் நுழைந்தார்கள்.

அவர் இவரை எதிர்பார்த்து அமர்ந்திருந்தார்.

“உக்காருங்க…”டாக்டர் அவர்களுக்கு நாற்காலிகளைக் காட்டினார்.

எதிரில் அமர்ந்தார்கள்.

“சொல்லுங்க சார்…?” தணிகாசலம் கண்களில் பீதி. முகத்தில் கலக்கம்.

“கவலைப்படாதீங்க தணிகாசலம். உங்க பையனுக்கு ஆயுசு கெட்டி. ! ”

“என்ன சார் சொல்றீங்க..? !!…”

“அவருக்கு கிட்னி கிடைச்சாச்சு.”

“நிஜமாவா சார்…? ”

“ஆமாம். கொஞ்ச நேரத்துக்குமுன் ஒரு பெண் வலிய வந்து, காசுபணம் தேவை இல்லே, உங்க பையனுக்கு கிட்னி தானமா தாரேன்னு சொல்லி தன்னை மருத்துவ பரிசோதனை செய்யச் சொன்னாள். அதிர்ஷ்டம், ஆச்சரியம் அவள் கிட்னி உங்க பையனுக்கு சாதகமா இருக்கு. நூத்துக்கு நூறு சதவிகிதம் பொருந்தும்.”மகிழ்ச்சியாய்ச் சொன்னார்.

தணிகாசலம் காதுகளில் தேன் பாய்ந்தது.

“யார் சார் அவள்..?” அவசரமாகக் கேட்டார்.

“பேர் சாந்தி. உங்க பையனுக்கு அவள் நிச்சயமானவளாம்! ”

கேட்ட இருவருக்கும் அதிர்ச்சி.

“இப்போ எங்கே சார் அவள்..?” சாந்தமூர்த்தி படபடப்பாகக் கேட்டார்.

“பதட்டப்படாதீங்க. பரிசோதனை முடிஞ்சி…இப்போ அவள் அந்த பையன் அறையில் இருக்காள்” சொன்னார்.

அடுத்த வினாடி…

தணிகாசலம், சாந்தமூர்த்தி இருவரும் கணேஷ் அறைக்கு விரைந்தார்கள்.

அங்கே…..

கணேஷ் கட்டிலின் அருகில் அமர்ந்திருந்த மலர்ச்சியாய் சாந்தி….விழித்திருந்த அவன் கைகளை ஒரு கையால் ஆதரவாய்ப் பற்றி, மறு கையால் அவன் தலை முடிகளை ஆசையாய் கோதியபடி இருந்தாள்.!!

தணிகாசலம், சாந்தமூர்த்தி சிலையானார்கள்.

Karai adalarasan என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *