இளைஞர்களுக்கான வெற்றிக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 22, 2025
பார்வையிட்டோர்: 111 
 
 

(முன்னுரைக் குறிப்பு – புகழ்பெற்ற ஆங்கில சுயமுன்னேற்ற எழுத்தாளர் நெப்போலியன் ஹில், டபிள்யு . கிளெமென்ட் ஸ்டோன் என்ற எழுத்தாளருடன் இணைந்து எழுதிய ‘ நேர்முறை எண்ணங்கள் வாயிலாக வெற்றி (Success through a Positive Mental Attitude) என்ற புனைவு அல்லாத சுயமுன்னேற்ற நூலில் இடம் பெற்றுள்ள வெற்றிக் கதைகள் சில இங்கு விவரிக்கப்படுகின்றன. வாசித்ததை, சிறுகதைகள்.காம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவல் உந்தித் தள்ள ஆர்வத்தால் இவை எழுதப்பட்டுள்ளன. ஆதாயம் அல்லது பணப் பயன் கருதி எழுதப்படவில்லை. – எஸ்.மதுரகவி)

  1. உடல் முற்றிலும் இயங்காத நிலையில் கை கொடுக்கும் கையான மனோதிடம்

மிலோ சி .ஜோன்ஸ் என்பவரின் கதை. அவர் கடினமான உழைப்பாளி. சிறிய பண்ணை மூலமாக தமது குடும்பத்தின் அத்தியாவசியத் தேவைக்கும் சற்றே அதிகமாகவே அவர் சம்பாதித்து வந்தார். விதி அவரைப் பார்த்து புன்னகை புரிந்தது. திடுமென அவருக்கு பக்க வாத நோய் வந்து படுக்கையே அவருடைய இடமானது. அதாவது அவரது வாழ்வின் அடுத்த கட்டத்தில் மும்முரமாக இயங்க வேண்டியவர் இப்படி முடங்கிப் போனார். உறவினர்கள் எல்லாம் அவரால் இனிமேல் எதுவும் செய்ய முடியாது என்று பேசத் தொடங்கினர்.

ஜோன்ஸ் , மனம் தளரவில்லை. மனதளவில் தைரியமாக இருந்தார். குடும்ப உறுப்பினர்களுக்கு சுமையாக இல்லாமல் இந்த நிலையிலும் அவர்களுக்கு தாம் எப்படி ஆதரவாக இருக்க முடியும் என்று நேர்மறையாகச் சிந்தித்தார். உடல் தான் பாதிக்கப்பட்டது. மனம் சுறுசுறுப்பாகத் தான் இருந்தது அவரைப் பொறுத்த வரை .

அவர் நமக்கு ஆசிகளாக உள்ளவை என்ன என்ன என்று எண்ணத் தொடங்கினார். அவர் திட்டமிட்டார். இன்னும் சொல்ல வேண்டுமானால் புத்தியைத் தீட்டினார். குடும்ப உறுப்பினர்களை அழைத்தார் – “ நீங்கள் ஒவ்வொருவரும் என்னுடைய கைகால் போன்ற அவயங்களாக, உடலாக இருந்து என்னுடைய திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். நம் கைவசம் உள்ள நிலத்தில் சோளம் பயிர் செய்வோம். நாம் பன்றி வளர்ப்போம் . சோளங்களை அவற்றுக்குக் கொடுப்போம். பன்றிகள் கொழுத்து இருக்கும் போது அவற்றை வெட்டி , ஒரு பிராண்ட் பெயரில் பேக்கேஜ் செய்து அவற்றை விற்பனை செய்வோம் . நாட்டில் உள்ள எல்லா ரீடெய்ல் கடைகளுக்கும் அவற்றை சப்ளை செய்வோம் “

குடும்ப உறுப்பினர்கள் அவருடைய திட்டத்தை வரவேற்றனர். குறுகிய காலத்தில் செயல்படுத்திக் காட்டினர். Jones Little Sausages என்ற பிராண்ட் மூலைமுடுக்கிலும் வீடுகளிலும் இடம் பெற்றது. ஜோன்ஸுக்கு கோடிஸ்வரர் ஆக வேண்டும் என்ற அவருடைய கனவு மெய்ப்பட்டது அவருடைய தளராத மனத்தால் . நேர்மறை எண்ணங்களால்.

2. விடாமுயற்சியால் வெற்றி கண்ட போர்டு

ஹென்றி போர்டு வெற்றியாளராக ஆன பின்னர் , அவரைப் பார்த்து பொறாமைப்படுபவர்கள் அவரது வெற்றிக்கு காரணம் அதிர்ஷ்டம் , வெற்றிக்கு காரணம் அவருடைய கெட்டிக்காரத்தனம் என்றெல்லாம் சொல்லி வந்தார்கள். அவருடைய வெற்றியின் இரகசியத்தை அவரது வாழ்வின் சம்பவம் எடுத்துரைக்கிறது-

பல ஆண்டுகளுக்கு முன்பாக , போர்டு , பின்னர் பிரபலமான V – 8 ஊர்தியை உருவாக்க முடிவு செய்தார். அதாவது முழு எட்டு சிலிண்டர்களும் ஒரே பிளாக்கில் வார்க்கப்பட்டதாக ஒரு எஞ்சினை உருவாக்க வேண்டும் என விரும்பினார். அவருடைய

பொறியாளர்களிடம் அதனை டிசைன் செய்யுங்கள் என்று கட்டளை பிறப்பித்தார். ஆனால் அவருடைய எஞ்சினியர்கள் , ஒரு பீசாக எட்டு சிலிண்டர் கேசோலைன் எஞ்சின் பிளாக்கை உருவாக்குதல் சாத்தியமில்லை என்று கூறினர். போர்டு விடவில்லை. செய்து பாருங்கள் என்றார் அவர்களிடம். ஆனால் அவர்களிடம் காலக் கெடு கூறவில்லை. இப்படியாக ஆறு மாதங்கள் ஓடியது. ஆனால் அந்த டிசைன் உருவாகவில்லை. போர்டு பொறியாளர்களிடம் கை விடாதீர்கள் முயன்று பாருங்கள் என்றார். மேலும் ஆறு மாதங்கள் கழிந்தது. அசாத்தியம் சாத்தியமானது. போர்டு வி 8 என்கிற கனவு மெய்ப்பட்டது. கைகளில் வெற்றி . சாலைகளில் அந்த ஊர்தி வலம் வந்தது. அவருடைய போட்டியாளர்களும் மற்றவர்களும் இந்தப் புதிய ஊர்தியை வெற்றியைக் கண்டு வியந்தனர். ஆம். போர்டின் வெற்றி இரகசியம் நேர்மறைச் சிந்தனை.

3. உருவ மாறுபாட்டைப் பொருட்படுத்தாமல் சாதித்துக் காட்டியவர்

‘ உருவு கண்டு எள்ளாமை வேண்டும் ‘ என்றார் திருவள்ளுவர் . (குறட்பா – 667 ) ஆனால் , உலகத்தினர் அப்படி இருப்பதில்லை . நடிகர் திலகம் நடித்த பாகப்பிரிவினை , கல்யாண்குமார் நடித்த மணி ஓசை ஆகிய பழைய தமிழ்த் திரைப்படங்களின் நாயகனின் உருவத்தை நினைத்துக் கொள்ளுங்கள். அது போன்ற மாறுபாடு கொண்ட முதுகும் வளைந்த கால்களுடனும் பிறந்தவர் – சார்லஸ் ஸ்டீன்மெர்ட்ஸ் ( Charles Steinmetz ) . ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஓர் ஆண்டு வயதை முடிப்பதற்கு முன்பாகவே இவருடைய அன்னை இறந்து விட்டார். தனித்து விடப்பட்டார். தன் வயது ஒத்த சிறுவர்களுடன் விளையாட்டுகளில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. அவருடைய மகிழ்ச்சியும் உற்சாகமும் பறிபோனது. கடவுள் அவருடைய தோற்றத்தில் வஞ்சனை செய்திருந்த போதிலும் அவருக்கு கூர்மதியைக் கொடுத்திருந்தான். அவர் தம்முடைய உடல் சார்ந்த குறைகளை மனதில் கொள்ளாமல் மதியைப் பயன்படுத்தி வாழ்வுப் பயணத்தில் முன்னேறினார். ஆம் . ஐந்து வயதில் லத்தீன் வெர்ப் சொற்களைக் கரைத்துக் குடித்தவர் ஆனார். ஏழு வயதில் கிரேக்க மொழியையும் ஹீப்ரூவும் கற்றுத் தேர்ந்தார். எட்டு வயதில் அல்ஜீப்ரா மற்றும் ஜியோமெட்ரி அவருக்கு நன்றாகப் பிடிபட்டது.

கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அனைத்து படிப்புகளிலும் சிறந்து விளங்கினார். ஹானர்ஸ் பட்டம் பெற்றார் . அவர் , பட்டமளிப்பு விழா உடையை வாடகைக்கு வாங்குவதற்காக பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வந்தார். ஆனால், எதிர்மறை சிந்தனை கொண்ட அந்த கல்லூரி நிர்வாகம் , சார்லஸின் தோற்றம் காரணமாக , அவருக்கு அனைத்து கல்லூரி நிகழ்ச்சிகளிலும் அனுமதி கிடையாது என்று அறிவித்து விட்டனர். நம் அறிவாற்றலைப் பார்க்காமல் உருவத்தைப் பார்க்கிறார்கள். நாம் நம்முடைய புத்திகூர்மையை நிலைநாட்டி முன்னேறிக் காட்ட வேண்டும் என்ற வைராக்கிய மனத்துடன் புதிய வாழ்வைத் தொடங்க முடிவு செய்த சார்லஸ் , கப்பலில் பயணித்து அமெரிக்கா வந்தடைந்தார்.

அங்கும் அவருடைய வெளித் தோற்றத்தால் வேலை எளிதில் கிடைப்பது கஷ்டமாகத்தான் இருந்தது. ஒரு வழியாக , ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் ட்ராப்ட்ஸ்மேன் பணியில் 12 டாலர் வார ஊதியத்தில் சேர்ந்தார். சம்பளத்திற்கான பணிகளைச் செய்து கொண்டே அவர் நீண்ட நேரங்களை எலக்ட்ரிக்கல் சார்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். தம்முடைய ஆய்வின் முடிவுகளை அவருடன் நெருங்கிப் பழகிய உடன் பணியாற்றும் நபர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவருடைய தனித்துவம் அந்த நிறுவனத்தின் சேர்மன் செவிகளுக்கு எட்டியது. சார்லஸ் ஒரு அபூர்வமான ஜீனியஸ் என்பதைப் புரிந்து கொண்ட ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி நிறுவனத்தின் தலைவர் சார்லஸை அழைத்துப் பேசினார் –

“ இதோ எங்களுடைய முழு பிளான்ட் . இங்கு என்ன புதுமை செய்யலாம் என்று நாள் முழுவதும் கனவு கண்டிடு . எப்படி வர வேண்டும் என்று எண்ணமிடு . நீ கனவு காண நாங்கள் ஊதியம் அளிக்கத் தயாராக இருக்கிறோம் . “

சேர்மன் கொடுத்த ஆபரை ஏற்றுக் கொண்ட சார்லஸ் கடினமாக உழைத்தார். அவருடைய வாழ்நாளில் 200 க்கு மேற்பட்ட எலக்ட்ரிக்கல் கண்டுபிடிப்புகளுக்கு பேடன்ட் பெற்றார். எலக்ட்ரிக்கல் கோட்பாடு மற்றும் பொறியியல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் கூறும் புத்தகங்களையும் ஆய்வுத் தாள்களையும் எழுதினார். தம்முடைய பணிகளை மன நிறைவுடன் செய்து வந்தார். தம்முடைய மன நிறைவான பணி , உலகுக்குரிய பங்களிப்பாகவும் மாறியதை அவர் உணர்ந்தார். பொருளாதார ரீதியாக மேம்பட்ட நிலையை அடைந்து சொந்தமான பெரிய மாளிகை உள்ளிட்ட சொத்துக்களையும் சேர்த்தார். அந்த வீட்டில் தமக்குப் பழக்கமான இளம் தம்பதிக்கு வசிக்க இடம் கொடுத்தார். இவ்வாறாக , அவரது வாழ்வு மகிழ்ச்சி மிக்கதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது எனலாம்.

4. நெருக்கடியான சூழலில் தெம்பு கொடுத்த புத்தகம்

இரண்டாம் உலகப் போர் காலகட்டம்.கென்னத் எர்வின் ஹார்மன் என்பவர் மணிலாவில் கடற்படைக்கான சிவிலியன் ஊழியர் . அப்பொழுது ஜப்பானியர் அங்கு வந்து சேர்ந்தனர். அவரைப் பிடித்து சிறைக்கு அனுப்புவதற்கு முன்பாக , ஒரு ஓட்டலில் இரண்டு நாட்களுக்கு அடைக்கப்பட்டார். முதல் நாள் .அவருடன் அறையில் இருந்த மற்றொரு நபருடன் பேசிக் கொண்டிருந்த கென்னத் , அவருடைய தலையணையின் அடியில் இருந்த ஒரு புத்தகத்தைப் பார்த்தார். அந்தப் புத்தகம் – Think and Grow Rich .

இக்கட்டான , கஷ்ட காலத்திலும் அந்தப் புத்தகம் அவரை ஈர்த்தது. அந்தப் புத்தகத்தை அந்த நபரிடம் இரவல் வாங்கிப் படித்தார். பின்னர் , அந்தப் புத்தகத்தை தட்டச்சு செய்து கொண்டார். அவர் கடைசி பக்கத்தை டைப் செய்து முடித்த ஒரு மணி நேரத்தில் அவரைப் பிடித்தவர்கள் அவரை அழைத்துச் செல்ல வந்து விட்டனர். அவர் சான்ட்டோ டோமஸ் என்னும் கொடிய சிறை முகாமில் அடைக்கப்பட்டார். அங்கிருந்த மூன்று ஆண்டுகள் ஒரு மாதம் என்கிற காலகட்டத்தில் அவர் கைவசம் வைத்திருந்த புத்தகத்தின் நகலை மீண்டும் மீண்டும் வாசித்து வந்தார். மற்ற கைதிகள் எல்லாம் உடலாலும் மனத்தாலும் சேதமடைந்து போன நிலையில் ,சிறையிலிருந்து வெளியே வந்த போது கண் எதிரே இருந்த நிகழ்காலத்தை உடல் உறுதியடன் மன உறுதியுடன் எதிர்கொள்ள அந்த நூல் அவருக்குப் போதிய தெம்பை அளித்திருந்தது.

5. பாதம் இல்லாமல் பிறந்து கால் பந்தில் வெற்றிக்கொடி நாட்டியவர்

டாம் டெம்ப்சீ ( Tom Dempsey ) என்பது அவரது பெயர். அவர் பிறந்த போது வலது காலில் பாதம் முழுவதாக இல்லாமல் இருந்தது. அவர் சிறுவனாக இருந்த போது மற்ற சிறுவர்களைப் போல் ஓடியாடி அவுட் டோர் கேம்ஸ் விளையாட வேண்டும் என்று விரும்பினார். குறிப்பாக ,கால் பந்தாட்டம் அவருக்குப் பிடித்திருந்தது. அவருடைய தீராத விளையாட்டு ஆர்வத்தைப் பார்த்த அவரது பெற்றோர் , அவருக்கு மரத்தால் செய்யப்பட்ட ஒரு செயற்கை பாத அவயத்தை பொருத்தினார்கள் . அதற்கு உகந்த ஷூ ஒன்றையும் தேடி வாங்கிக் கொடுத்தார்கள் . மரப் பாதத்தின் துணையுடன் தினந்தோறும் விளையாடி கால் பந்து ஆட்டத்தில் நன்றாகத் தேர்ச்சி பெற்றார். அவர் வாலிபனாக மலர்ந்ததும்

அமெரிக்க நாட்டின் New Orleans Saints இவரை அமர்த்தும் அளவிற்கு கால் பந்தில் சிறந்த ஆட்டக் காரர் ஆக இவர் பரிமாணம் பெற்றார். ஒரு முறை ஆட்டத்தின் கடைசி இரண்டு நொடி நேரத்தில் 63 யார்டு கோல் அடித்து ரிகார்ட் சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாறுபாடாகப் பிறந்தாலும் மனம் தளராமல் தனக்குப் பிடித்த விளையாட்டில் முத்திரை பதித்த வித்தகர் இவர்.

எஸ்.மதுரகவி விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *