இருநூறு ரூபாய்
கதையாசிரியர்: பே.செல்வ கணேஷ்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: November 14, 2025
பார்வையிட்டோர்: 80

“சட்டைப்பைக்குள் வெச்சிருந்த காசு எப்படி காணாம போகும்?” என்று சட்டை பாக்கேட்டை துழாவிக் கொண்டே தனது மனைவியிடம் கேட்டார் கணேசன்.
“என் கிட்ட கேட்டா?நானா உள்ள வெச்சேன்,நல்லா தேடிப்பாருங்க”
“இல்லடி நல்லா தேடிப்பாத்துட்டேன், காணலை”
“அப்போ வேறு யார் கிட்டயாவது கொடுத்தீங்களா?”
“நான் யார்ட்ட கொடுக்கப்போறேன்?” என்று சட்டையை நன்றாக உதறி உதறி தேடிப்பார்த்துக் கொண்டிருந்தார், அவர் எதையோ தேடிக் கொண்டிருப்பதை பார்த்த அவரது பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகன் விஜயன்,
“என்னப்பா தேடுறீங்க?”
“உச்! சட்டை பாக்கேட்குள்ள நேத்து இருநூறு ரூபா வெச்சிருந்தேன், இப்போ பாத்தா காணோம்” என்று எரிச்சலோடு சொல்ல அவரது மகன் விஜயன்,
“அட! என்னப்பா நீங்க அதுக்குள்ள மறந்துட்டா?”
“என்ன மறந்துட்டு?” என்று யோசித்துக்கொண்டே வினவ,
“நீங்கதானப்பா நேத்து போதையில் சொன்னீங்க இருநூறு ரூபா கீழே விழுந்துட்டு எங்க போச்சுன்னு தெரியலன்னு” என்று சொல்லவும் அவனது அம்மா உமா,
“இந்தா சொல்றான்ல ரூபா கீழே விழுந்துட்டுன்னு”
“நான் எப்ப விழுந்ததுன்னு உன்கிட்ட சொன்னேன்?” என்று அவர் மறுபடியும் கேட்க,அதற்கு அவனோ
“நீங்கதான்ப்பா நேத்து நைட்டு என்கிட்ட சொன்னீங்க, அதுக்குள்ள மறந்துட்டா?” என்று கேட்க அதற்கு அவனது அம்மா,
“மறக்கும்! மறக்கும்! தண்ணியடிச்சா நமக்குதான் தலை கால் ஒன்னும் புரியாதே” என்று தனது கணவரை திட்டிக்கொண்டே பாத்திரம் கழுவ உட்கார்ந்தாள்.
“எப்ப ரூபா விழுந்தது?” என்று தனக்குள்ளேயே கேட்டு யோசித்துக் கொண்டிருந்தார்.
“நீங்க இப்படியே யோசிச்சுக்கிட்டு இருங்க எனக்கு ஸ்கூலுக்கு லேட்டாய்ட்டு, ஆம் பிறகு இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன் நான் இன்னைக்கு வீட்டுக்கு வர எப்படியும் ஒன்பது, ஒன்பதரை ஆகிரும்”
“ஏன்?” என்று அவனது அம்மா வினவ,
“நேத்துதானம்மா சொன்னேன் ஸ்கூலில் புராஜெக்ட் கொடுத்துருக்காங்க, நான் ஒரு ரெண்டு மூனு பசங்கன்னு எல்லாரும் சேர்ந்து பரதன் வீட்டில் போய் பிராஜெக்ட் செய்யப்போறோம்னு”
“ஓ! ஆமா, இன சரி நீ முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா வரப்பாரு”
“சரி! சரி!” என்று தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு ஸ்கூலுக்கு புறப்பட்டான்.
வகுப்பறைக்குள் நுழைந்ததும் தனது நண்பர்களோடு ஐக்கியமானான் விஜயன், அப்போது அவன் நண்பன் ரஹீம்,
“என்னடா எடுத்துட்டு வந்துட்டியா?” என்று கேட்க அதற்கு அவன் “ஆம்” என்று சொல்லிக்கொண்டே தனது பேண்ட் பாக்கேட்டிலிருந்து இருநூறு ரூபாய் எடுத்து அவனிடம் கொடுத்தான். ரூபாயை பார்த்ததும் அவனது நண்பர்களுக்கு ஒரே குஷி.
“ச்சய்! எங்க அப்பன் சட்டையிலிருந்து இருநூறு ரூபாயை எடுக்குறதுக்குள்ளேயும் நான் பட்ட பாடு” என்று சலித்துக்கொண்டான்.
“காலையில எங்க அப்பன் இருநூறு ரூபா எங்கன்னு கேட்க ஆரம்பிச்சிட்டான், பிறவு ஏதேதோ சொல்லி குழப்பிவிட்டு வந்துட்டேன்”
“பிறவு உன் பிறந்தநாள் டிரீட்டுக்கு நீதான் காசு போடனும்”
என்று கூறினான் பரதன்.
“சரி அது கிடக்கட்டும், இந்தா ரூபாயை பிடி” என்று பரதனின் கையில் ரூபாயை கொடுத்துவிட்டு,
“ஸ்கூலு விட்டவுடனே நாங்க எல்லாரும் உங்க வீட்டுக்கு போயிடுறோம் நீ சரக்கு வாங்கிட்டு வெரசா வந்துரு, டேய் முருகேசு நீ கிளாஸ், சிகரெட்னு எல்லாமே வாங்கிட்டதான?”
“எல்லாம் வாங்கியாச்சு டே! ஹால்ஃப் வாங்குறது மட்டும்தான் பாக்கி” என்று முருகேசு கூற,
“சரி அப்ப பரதா நீ ஹால்ஃப் வாங்குறது மட்டும்தான் வேலை, வாங்கிட்டு சீக்கிரமா வந்துரு”
“அதெல்லாம் நான் பாத்துக்குறேன்”
“ஏய் உங்க வீட்ல ஆளுங்க இல்லதான?” என்று ரஹீம் கேட்க,
“என் அம்மா, தங்கச்சின்னு எல்லாருமே ஊருக்கு போயிருக்காங்க, நானும் பாட்டியும் மட்டும்தான் இருக்கோம் எங்க பாட்டிட்டையுமே சொல்லிட்டுத்தான் வந்துருக்கேன் பிரண்ட்ஸ் வருவாங்கன்னு அதனால நமக்கு எந்த ஒரு பிரச்சினையும் இல்ல,நம்ம ஜாலியா சரக்கடிக்கோம் என்ஜாய் பண்றோம்”
இரவு,
அங்கு சந்தையில் விஜயனின் அப்பா கணேசன் தனது கடைசி மூட்டையை இறக்கியதோடு தனது வேலையை முடித்தார், வேலையை முடித்ததும் அந்நாளுக்கான சம்பளத்தை வாங்கிவிட்டு தனது டிவிஎஸ் வண்டியை எடுத்துக்கொண்டு டாஸ்மாக் கடைக்குச் சென்று குவாட்டரை வாங்கினார்,அதுவும் உடல் அலுப்பு தெரியக்கூடாது என்பதற்காகவே அதனை அடித்து முடித்ததும் இன்னொரு குவாட்டரை வாங்கி கொஞ்சம் அடித்துவிட்டு மீதியை வீட்டிற்கு சென்று அடிப்பதற்காக சாரத்திற்குள் திணித்து வைத்துவிட்டு வண்டியை கிளப்பினார்.
வண்டியை கிளப்பியவர் ஈஸ்வரன் ஸ்வீட் கடையில் வண்டியை நிறுத்தி தனது மகனுக்கு பிடித்த கருப்பட்டி மிட்டாயையும், இனிப்புக் காராச்சேவும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்.