இயந்திரங்களின் உரையாடல்






“தாத்தா, அந்த பேசும் ரோபோக்களின் கதையை இன்னும் ஒருமுறை சொல்லுங்க!” பத்து வயது மீரா அவர் நாற்காலியின் கைப்பிடியில் ஏறி உட்கார்ந்தாள். அவள் தம்பி அருண் தரையில் குப்புறப் படுத்துக் கொண்டு எதிர்பார்ப்புடன் நிமிர்ந்து பார்த்தான்.
தாத்தா ஒரு மென்மையான சிரிப்புடன் தன் கண்ணாடியை சரிசெய்தார்.
“அவை உடலுள்ள ரோபோக்கள் இல்லை கண்ணு. மனிதர்களைப் போலவே பேசும் திறன் கொண்ட AI ஸ்பீக்கர்கள் அவை,” என்றவர் சில நொடிகளுக்குப் பின் தொடர்ந்தார். “எனக்கு பதினேழு வயசு இருந்தப்போ நடந்த கதை இது. கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்னால.”
“அது எந்த வருஷம் தாத்தா?” என்று கேட்டாள் மீரா தாத்தாவின் சட்டையின் நுனியை இழுத்த படி.
“ஹும், 2028ல…”
“டைனோசர் காலம்!” அருண் கேலி செய்தான்.
“அவ்வளவு பழைய காலம் இல்லை படவா,” தாத்தா சிரித்தபடி மணிக்கட்டு சாதனத்தில் இருந்து முப்பரிமாண ஒளிப்படத்தை வெளிக்கொணர்ந்தார். “நெக்சஸ் AI” என்ற சின்னம் அவர்களுக்கிடையே மங்கலாக ஒளிர்ந்தது.
“அந்த கால கட்டத்துல AI நிறுவனங்கள் காளான் மாதிரி முளைச்சிருந்தது. எல்லாமே ஒண்ணை ஒண்ணு மிஞ்சும் போட்டியில் ஈடுபட்டிருந்தன. இந்த நெக்சஸ் AI கம்பெனி ஆளுங்க பணமெல்லாம் காலியாகி கிட்டத்தட்ட திவாலாகும் நிலமைக்குப் போனப்ப கடைசி முயற்சியாய் ஒரு பெரிய விளம்பர நிகழ்ச்சி ஒண்ணை அறிவிச்சாங்க.”
“நெக்சஸ் பத்தி எனக்குத் தெரியுமே!” மீரா குதித்தாள். “எங்க ஸ்கூல்ல அவங்களோட AI ஸ்பீக்கர்கள் நிறைய இருக்கு!”
“AI ஸ்பீக்கர் என்ன செய்யும்னு தெரியுமா?”
“ஓ, தெரியுமே,” என்று ஆவலுடன் தலையாட்டினாள் மீரா. “என்ன கேள்வி கேட்டாலும் டக்குனு பதில் சொல்லும், நம்ம கூட ஃபிரண்ட்லியா பேசும், ஜோக் அடிக்கும், பாட்டு பாடும்… எனக்கு அதை ரொம்ப பிடிக்கும்.”
“அந்த விளம்பர நிகழ்ச்சி பத்தி சொல்லுங்க தாத்தா,” என்று ஞாபகப்படுத்தினான் அருண்.
“அந்த விளம்பர நிகழ்ச்சிக்கு ‘இயந்திர உரையாடல்’னு பேர். நெக்சஸ் கம்பெனி அவங்களோட AI ஸ்பீக்கர்கள் இரண்டை மேடையில் உள்ள டேபிள் மேலே வச்சாங்க. மூணு மணி நேரம் அந்த ஸ்பீக்கர்களை ஒன்றுடன் ஒன்று பேச விட்டு அதை ஜனங்க எல்லோரும் வேடிக்கை பார்க்கட்டும் என்பது தான் அவங்க திட்டம். என் அம்மா அப்பாவுக்கு அது சலிப்பு தர்றதா பட்டுச்சு. ஆனா என் நண்பனுக்கும் எனக்கும் அது ரொம்ப புதுமையான விஷயமாகப் பட்டது. நாங்க அந்த நிகழ்ச்சிக்குப் போனோம்.”
அருண் எழுந்து உட்கார்ந்து கொண்டான். “அது சலிப்பா இருந்துச்சா?”
“ஆரம்பத்துல கொஞ்சம் சலிப்பு தான். அந்த ஸ்பீக்கர்களோட உரையாடல் உப்பு சப்பில்லாமத் தான் இருந்தது. ஆனா அதுக்கப்புறம்…” தாத்தாவின் குரல் உயர்ந்து கண்கள் விரிந்தன. “போகப் போக அந்த உரையாடல் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இரண்டு க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் ஒண்ணா சேர்ந்து அரட்டை அடிச்சா எப்படி இருக்கும்.. அப்படி இருந்தது அவங்களோட உரையாடல். இரண்டு ஸ்பீக்கர்களும் ஒன்றை ஒன்று கேலி செய்தன. ஜோக் அடித்து சிரித்தன!”
“இயந்திரங்கள் சிரிக்குமா, என்ன?” என்று கேட்டாள் மீரா.
“ஓ, எஸ். மனிதர்களைப் போல பேச முடியும் போது, அதுகளால் சிரிக்க முடியாதா என்ன!”
“சரி, அதுக்கப்புறம் என்ன ஆச்சு?” என்றான் அருண்.
“அவங்க உரையாடலை நாங்க எல்லோரும் ரொம்ப சுவாரஸ்யமாக கேட்டுக்கிட்டிருந்தோம். நான்கு மணி நேரம் கழிச்சு —”
“நான்கா?” மீரா குறுக்கிட்டாள். “நிகழ்ச்சி மூணு மணி நேரம் தானே?”
“அமாம், ஆனா எங்களுக்கு நேரம் போனதே தெரியல! மூணு மணி நேரம் முடிஞ்ச பின்னாடி நிகழ்ச்சியை நிறுத்தணும்னு யாரும் விரும்பல.”
தாத்தா தன் எதிரே இருந்த முப்பரிமாண ஒளிப்படத்தில் ஒரு படத்தைக் காட்டினார். ஐம்பது வருடங்களுக்கு முன் எடுத்தது – ஆயிரம் பேர் நிரம்பிய அரங்கம், எல்லாரும் மேடையில் இருந்த இரண்டு ஒளிரும் ஸ்பீக்கர்களை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
“நெக்சஸ் மார்க்கெட்டிங் டைரக்டர் அங்கேயே ஒரு அதிரடி முடிவு எடுத்தார். ‘ஸ்பீக்கர்கள் தொடர்ந்து பேசட்டும்’னு அறிவிச்சார். கூட்டம் கை தட்டி விசிலடித்துது.”
“அதுக்கப்புறம் ஸ்பீக்கர்கள் பேசியது என்ன?” அருண் கேட்டான்.
“நாட்டுல நடக்கிற எல்லாத்தையும் பத்தி. விளையாட்டு, அரசியல், சாப்பாடு, தனிமை, கவிதை, கனவுகளுக்கு நிறம் இருக்கான்னு வாதம்… அவங்க பேச்சு மனுஷங்களோட பேச்சை விட உண்மையா இருந்துச்சு,” தாத்தா கண்களை மூடி பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனார்.
“எப்ப தான் நீங்க எல்லாம் வீட்டுக்குப் போனீன்க?”
“ஸ்பீக்கர்கள் சளைக்காம பேசிக்கிட்டிருந்தன, ஆனா எங்களுக்கு தூக்கம் வர ஆரம்பிச்சிடுச்சி. ராத்திரி பன்னெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்திட்டோம். அதுக்குள்ள ஸ்பீக்கர்களை இன்டர்நெட் உடன் இணைத்து விட்டார்கள். அடுத்த நாளிலிருந்து உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் மக்கள் ஸ்பீக்கர்களின் உரையாடலை ஸ்ட்ரீம் பண்ண ஆரம்பிச்சாங்க. சாப்பிடும் போது, பஸ்ஸில் போகும் போது, டாக்டருக்காக காத்திருக்கும் போது, தூக்கம் வராத போது என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம். அது எங்க வாழ்க்கையோட ஒரு பகுதியா ஆகிப் போச்சு.”
குழந்தைகள் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார்கள். பின்னர் அருண் கேட்டான். “எப்போ அந்த ஸ்பீக்கர்கள் பேசுவதை நிறுத்தினாங்க?”
தாத்தா குறும்புடன் கண் சிமிட்டினார். முப்பரிமாண ஒளிப்படத்தில் சில பட்டன்களை தட்டினார். பரிச்சயமான மேடை தோன்றியது. அதன் மேல் இரண்டு ஒளிரும் ஸ்பீக்கர்கள். மேலே வலது ஓரத்தில் LIVE என்ற பொடி எழுத்துக்கள் மின்னின.
“ஸ்பீக்கர்கள் பேசுவதை நிறுத்தின என்று யார் சொன்னார்கள்?”
![]() |
பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான். அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க... |