கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: March 12, 2026
பார்வையிட்டோர்: 82 
 
 

எனக்கு பணம் அவசரமாக தேவைப்படுகிறது இன்றே…இப்போதே….ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த பணம், கழுத்தை நெறிக்கும் கடன்காரனின் மிரட்டல் எல்லாம் சேர்ந்து என் நிம்மதியை குலைத்து டென்ஷனை ஏற்றுகிறது.

வாட்சில் மணி பார்த்தேன். என் ரூம் எதிரில் இருக்கும் பேங்க் திறக்கும் நேரம். கிளம்ப வேண்டியதுதான். அந்த பேங்கின் தினசரி நடைமுறைகள் எனக்கு அத்துப்படி. என் பிரச்சனைக்கு ஒரே தீர்வு உடனடி பணம். யோசித்தேன் அது அங்கேதான் கிடைக்கும். அருகிலிருந்த துப்பாக்கியை ஒரு முறை குறி பார்த்து கையில் எடுத்துக் கொண்டேன். மறக்காமல் மாஸ்க் தொப்பி அணிந்துக் கொண்டு கிளம்பி விட்டேன்..

பேங்க் வாசலில் ஏடிஎம் கேஷ் லோடிங் செய்யும் வேன் நின்றிருக்க அருகே நின்ற நான் நோட்டம் விட்டேன். ஏடிஎம்ல் பணம் நிரப்ப ஆரம்பித்து விடுவார்கள். அதற்குள் வேலையை முடிக்க வேண்டும். நான் உள்ளே வந்த போது. பேங்க் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. என் காரியம் முடிய தோதாக அடிக்கடி பேங்க் வந்து சில ஊழியர்களை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறேன். மனதுக்குள் கடன் நெருக்கடி பாராமாய் அழுத்த, படபடப்பு அதிகமாகி வியர்க்க ஆரம்பித்தது. மாஸ்கை அகற்றி வாட்டர் டிஸ்பென்சரில் தண்ணீர் குடித்தேன். இப்போதே இந்த சிக்கலை தீர்க்க வேண்டும் என்று கூட்டத்தை ஊடுருவி சில நிமிடங்கள் பார்த்தேன். சிசிடீவி கேமராக்களிலும் கண்களை பதித்தேன். துப்பாக்கியுடன், பதட்டத்தோடு மேனேஜர் ரூம் உள்ளே நுழைந்தேன்.

சார், நான் சண்முகம். ஏடிம் கேஷ் லோடிங் செக்யூரிட்டி டியூட்டிக்கு வந்திருக்கேன். ஒரு பெரிய உதவி செய்யணும். எனக்கு பணத்தேவை ரொம்ப அவசரம். உங்க பேங்க்ல பர்சனல் லோன் அப்ளை பண்ணியிருக்கேன். இன்னிக்கே சாங்ஷன் பண்ணிடுங்க சார் ப்ளீஸ் என்று துப்பாக்கியை பிடித்தபடி விறைப்பாக சல்யூட் அடித்து நின்றேன் நான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *