இன்னொரு வெண்ணிரவு






(1988 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இரவு ஏழரை மணி வெய்யிலில் எங்கள் நிழல்கள் நீண்டு விழுந்தன. அது வெண்ணிரவுகளின் காலம். லெனின்கிராத் நகரின் நெவ்ஸ்கி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்த ஒரு தெருவில் நாங்கள் நடந்து கொண்டிருந்தோம். நான், அமிதாக்கா, துளசி, மொஹம்மட்.

நான். நான்தான். அமிதாக்கா கொழும்புப் பக்கம். சிங்களம் தாய்மொழி. உண்மையில் எனக்கும் துளசிக்கும் ஒரு அக்கா மாதிரியே இருந்தா. துளசிக்கு தமிழ் நாடு. சென்னை. ஆரம்பத்தில் துளசிக்கும் அமிதாக்காவுக்கும் இடையில் ஒரு இணைப்புக் கண்ணியாக நான் இருந்தேன். ஆனால், என்னையும் மேவி வலு கெதியில் ஒரு உறவு அவர்களைப் பிணைத்தது. எனக்கு ஆச்சரியமாய்ப் போயிற்று. எனக்கு அதிகம் உற்றவர் எவர் என்று தெரியாதிருந்தது. அடுத்து மொஹமட். ரோசாப்பூ நிறமும், கறுத்த சுருள் முடியும், பூனைக் கண்ணும், சிவப்பு உதடுகளும் கொண்ட டுனீஷியன். துளசியின் நண்பன். இந்தக் கதைக்கு சம்பந்தமில்லை. என்றாலும் அன்று கூட இருந்தான்.
ஐஸ்கிறீமாகக் குடித்து அலுத்து. தேனீர் தவண்டையில் ‘புலோசனயா’ ஒன்றுக்குள் நுழைந்து, மொறுமொறுக்கிற புதுப்பாண் வாசனையை ரசித்தபடி வரிசையில் நின்று கறுப்புத் தேநீரும் பாணுமாய் மேசையடிக்கு வந்து. வேலையை முடிக்கு மட்டும் ஒருவரும் பெரிதாக ஒன்றும் பேசவில்லை.
பிறகு வெளியே வந்தபின் துளசி சொன்னாள்:
“என்னதானிருந்தாலும் இந்த ஜோர்ஜியத் தேயிலை எல்லாம் எங்கள் தேயிலைக்குக் கிட்ட வர முடியாது….”
”உண்மை…” என்றா அமிதாக்கா.
“உலகிலேயே இந்தியத் தேயிலைதானே திறந்தேயிலை…”
“என்ன சொல்கிறாய், துளசி?”
நானும் அமிதாக்காவும் ஏககாலத்தில் கேட்டோம்.
– கணையாழி, 1988.
– இன்னொரு வெண்ணிரவு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: அக்டோபர் 1988, வெண்புறா வெளியீடு, யாழ்ப்பாணம்.
– எழுதப்பட்ட அத்தியாயங்கள், முதற் பதிப்பு: மே 2001, மல்லிகை பந்தல் வெளியீடு, கொழும்பு.