இன்னா செய்தாரை ஒருத்தல்!





‘நட்புகள், உறவுகள் சில சமயங்களில் எதிராக மாறும் போது நகக்கண்களில் ஊசி குத்தினால் வலிப்பது போல் மனதில் வலிக்கும்’ என அனுபவப்பட்டவர்கள் எழுதியதைப்படித்துள்ள வருணுக்கு நிஜமாகவே அது தனக்கு நடந்த போது மனதால் துவண்டு போய் விட்டான்.
“நானும் நினைவு தெரிஞ்சதுல இருந்து யாருக்கும் மனசறிஞ்சு துரோகம் பண்ணினதில்லை. யாரையும் பார்த்து பொறாமைப்பட்டதில்லை. நண்பர்களுக்கும், சொந்தக்காரங்களுக்கும் நெறைய உதவி செஞ்சிருக்கேன். ஆனா எனக்கு போய் இப்படிப்பண்ணிட்டாங்களே….? அவங்க தலைல மண்ணை வாரி போட்டவங்க, என்னோட தலைல கல்லைப்போட்டிட்டாங்க….” சொன்னவன் கண்களில் கண்ணீர் பெருகியது.
“ஆதி காலத்துல இருந்தே உலகம் இப்படித்தாங்க இருக்கு. நம்ம தாத்தா, பாட்டிக்கும் நம்பிக்கை துரோகம் நடந்திருக்கிறதா கேள்வி பட்டிருக்கறோம். படிச்ச நீங்க இப்படி கவலைப்பட்டா எப்படி?” மனைவி ரம்யா ஆறுதல் சொல்லி அணைத்த போதிலும் மனம் ஏற்காமல் தவித்தான்.
‘சிறப்பாக வேலை செய்து பதவி உயர்வு பெற்று தனது முதல் புராஜெக்ட் இப்படி சொதப்பி விட்டதே…. நாளை விடியாமலேயே இருந்து விட்டால் நிம்மதி. தலைமை செயல் அதிகாரி என்ன முடிவு எடுக்கப்போகிறாரோ….?’ கவலையால் உறக்கம் பிடிபடாமல் தவித்தான் வருண்.
வருண் படிப்பில் கெட்டிக்காரன். எல்.கே.ஜி முதல் கல்லூரி வரை முதல் மாணவன் தான். படிப்பிற்காக எதையும் தியாகம் செய்வான். எதற்காகவும் படிப்பை தியாகம் செய்ய மாட்டான்.
“என்னடா மச்சா ஒரு படத்துக்கு வர மாட்டேங்கிறே….? காலேஜ்ல ஒரே க்ளாஸ்ல படிக்கிற சேது அவனோட அக்கா கல்யாணத்துக்கு கூப்பிட்டு ஒட்டு மொத்தமா எல்லாருமே நாங்க போயிட்டு வந்தோம். நீ மட்டும் தான் மிஸ்ஸிங்… இப்படி படிச்சு, வேலைக்கு பேயி சம்பாதிச்சு என்னடா பண்ணப்போறே….? ரதி மாதிரி இருக்கிற ராதா உன்னையே சுத்தி, சுத்தி வாரா…. நீ கண்டுக்காம போறே… போடா நீயெல்லாம்…. ஒரு….”
“முழுசா சொல்லிட வேண்டியது தானே….? ஏண்டா பாதிய முழுங்கறே….? த பாரு ஒன்னா படிக்கிறவங்கெல்லாம் ஒன்னில்லை…. அத மொதல்ல தெரிஞ்சுக்கோ…. அப்பா, அம்மா தங்களோட ஆசைகளை துறந்து கஷ்டப்பட்டு நம்ம எதுக்கு படிக்க வைக்கிறாங்க…? இப்படி பாஸ் மட்டும் பண்ணிணாப்போதும்னு ஊரச்சுத்தறதுக்கா….? சொந்தக்காரங்க கல்யாணத்துக்கே போக முடியல. இதுல கூட படிக்கிறவனோட அக்கா, அக்காவோட பிரண்ட்ஸ் னு போனா…. போயிட்டே இருக்கலாம். நெறையப்பேர் எழவுக்கும், கல்யாணத்துக்கும் போயே பல பேர் வாழ்க்கைய வீணாக்கிட்டிருக்காங்க. பொன்னான காலத்த வீணாக்கலாமா….? ஏதாவது புதுசா யோசிக்கலாமே….?” வருணின் மனநிலை, அறிவுரை புரியாத நண்பன் நரேன் அங்கிருந்து வெளியேறினான்.
வருண் தனது முயற்ச்சியால், திறமையால் ஒரு ஐடி கம்பெனியில் சேர்ந்து குறுகிய காலத்தில் பல படி உயர்ந்து நின்றான். கல்லூரியில் ஊரைச்சுற்றும் உடன் படிப்போர் இருந்தது போலவே வேலை செய்யும் இடத்திலேயும் நிறைய பேரைப்பார்த்தான்.
“என்ன வருண் பெரிய உத்தம புத்திரன்னு நினைப்பா….? பார்டின்னு கூப்பிட்டா வரனம். பொண்ணுகளோட கடலை போடனம். எதுவும் பேசாம உம்மனா மூஞ்சி மாதிரி இருந்தீன்னா ஒரு நாளைக்கு உன்னை விட்டு டீம் மொத்தமா விலகிடும். டீம் லீடர்னா சொன்ன வேலைய செய்யறவங்களை வாரம் ஒரு தடவ பார்ட்டிக்கும், மாசம் ஒரு தடவை டூர் டிரிப்பும் கூட்டிட்டு போகனம். செலவு உன்னோட சம்பளத்துல இருந்து கொடுக்க வேண்டியதில்லை. கம்பெனி பாத்துக்கும்….” மது போதையில் தள்ளாடியபடி உடன் வேலை செய்யும் ரஞ்சன் பேசிய போது பிரசர் கூடியது.
விடுமுறையின்றி கொடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்ததால் அசோசியேட் பிரின்சிபலாக பதவி உயர்வு பெற்றது பலருக்கும் புருவத்தை உயர்த்தச்செய்தது. வருடத்துக்கு ஐம்பது லட்சங்களுக்கு மேல் சம்பளம். பலரது பொறாமை கண்கள் வருண் மேல் ஈட்டி போல் பாய்ந்தது.
வருணுக்கு முன் வேலையில் சேர்ந்தவர்கள் அந்த இடத்தைப்பிடிக்க முயன்று கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் தலைமை எடுத்த முடிவால் மகாலட்சுமி இரண்டு கண்களையும் ஒரு சேர திறந்து வருணை பார்த்து விட்டதால் ஏற்பட்ட அதிர்ஷ்டம் என பேசிக்கொண்டனர்.
உயர்பதவிக்கு வந்தாலும் வருணுக்கு கீழ் வேலை செய்தவர்கள் ஒத்துழைக்காததோடு வருணை கம்பெனியை விட்டே வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓடச்செய்ய வேண்டும் என அடுத்தது பதவிக்காக காத்திருந்த ரஞ்ஜன் தனது சொந்த சம்பளத்தையே வார இறுதி நாளில் பார்ட்டிகளில் வாரி இறைத்ததின் பலனாக வருணை நம்பி எடுத்திருந்த புராஜெக்ட் சரியான நேரத்தில் வெளிநாட்டுக்கம்பெனிக்கு ஒப்பந்தப்படி கொடுக்க முடியாமல் போனது.
காலையில் எழுந்ததும் கோவிலுக்கு சென்று விட்டு பதட்டத்துடன் அலுவலகம் சென்றான்.
தலைமைச்செயல் அதிகாரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கண்களில் கண்ணீரையே பதிலாக வெளிப்படுத்தினான்.
“உங்களுக்கு இந்தக்கம்பெனில் இனி வேலை இல்லை”
அதிர்ந்தவன் ” ஸார்….” என்றான்.
“ஜெர்மன்ல இருக்கிற கம்பெனிக்கு உங்களை அனுப்ப முடிவு பண்ணிட்டேன். அதோட உங்களோட இடத்துக்கு அடுத்து சீனியாரிட்டி பிரகாரம் வர வேண்டியவர் ரஞ்சன் தான். ஆனா ரகுவை போட்டிருக்கேன். ரஞ்சனோட மொத்த டீமையும் வேலைல இருந்து தூக்கிட்டேன்.
“ஸார்….”
“என்ன வருண். உங்கள தூக்கிட்டதா சொன்னதுக்கு அதிர்ச்சியடைஞ்ச நீங்க உங்களுக்கு எதிரா செயல்பட்ட ரஞ்சன் டீமை தூக்கினதுக்கு அதிர்ச்சியடையறீங்க…?”
“எனக்கு வேலை போனா நான் மட்டும் தான் பாதிக்கப்படுவேன். ரஞ்சனோட நண்பர்களை தூக்கினா பல குடும்பம் வீதிக்கு வந்திடுமே...?”
“வரட்டும். ஏன் வருது? தப்பு பண்ணியிருக்காங்க. அவங்க பொறாமைப்பட்ட உங்களை வீட்டுக்கு அனுப்ப நெனைச்சு சம்பளம் கொடுக்கிற கம்பெனிக்கு கெட்ட பேரு, நஷ்டம், கால விரையத்தக்கொடுத்திருக்காங்க. அவங்களுக்கு இந்த தண்டனை தான் சரி…” உறுதியாகவும், இறுதியாகவும் சொன்ன தலைமை செயல் அதிகாரியிடம் எதுவும் பேச இயலாமல் வெளிநாடு செல்ல வேண்டியதற்கான வேலைகளை துவங்கினான்.
மறுநாள் வருண் வீட்டில் ரஞ்சன் உள்பட அவனது டீம் இருபது பேர் வந்திருந்தனர். காலையில் குளித்து விட்டு வருவதற்குள் அனைவருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருந்தாள் மனைவி ரம்யா.
“ஸாரி வருண். எங்க நிலைமை இப்படியாகும்னு தெரியலை. உன்னை தூக்க நெனைச்ச நாங்க கம்பெனியால தூக்கப்பட்டிருக்கோம். உன்ன மாதிரி சம்பளத்துல சேமிப்பெல்லாம் கிடையாது. இந்த மாசம் வீட்டு வாடகை, ஸ்கூல் பீஸ், சாப்பாட்டு செலவு மத்த செலவுன்னு எதுக்குமே வழி இல்லை. இதுல நெறைய பேருக்கு பேரண்ஸோட ஆஸ்பத்திரி, மாத்திரை மருந்து செலவு வேற… எங்களை மொத்தமா மன்னிச்சிடு…” என காலில் விழ, உருகிப்போனான் வருண்.
“சேரி நானும் எனக்கு கெடைச்சிருக்கிற வெளிநாட்டு வேலைய ரிசைன் பண்ணிடறேன். நாம எல்லாரும் சொந்த ஊருக்கு போயி விவசாயம் பார்க்கலாம். ஓகேவா..?” காதில் கேட்டவர்கள் யாருக்கும் வாயில் பேச்சு வரவில்லை.
“இப்படி கம்பெனி வேலைய நம்பி இருக்கிற நீங்க கம்பெனிக்கு நஷ்டம் வர்ற மாதிரி செய்யலாமா? செய்திருக்க கூடாது தானே…? நீங்க எனக்கு எதிரா நடந்திட்டதை கம்பெனி கண்டு பிடிச்சிருக்கு. அதனால எனக்கு வெளி நாட்ல வேலை கெடைச்சிருக்கு. கம்பெனிக்கு உங்களோட கேர்லஸால நஷ்டம் வரக்கிடையாது. திட்டமிட்ட சதியால ஏற்பட்ட நஷ்டத்த ஈடு கட்ட தினமும் ரெண்டு மணி நேரம் ஆறு மாசத்துக்கு கம்பெனிக்கு வேலை பார்க்கனம். ஓகே வா…?”
அனைவரும் கோரஸாக ‘ஓகே ஸார்” என கூற, தனது தலைமைச்செயலதிகாரியிடம் பேசி, இங்கே நடந்ததைச்சொல்லி, இழந்த வேலையை அனைவருக்கும் மீட்டுக்கொடுத்ததோடு, தானும் உள் நாட்டிலேயை அலுவலகம் மாறாமல் வேலை செய்து கம்பெனிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஆறு மாதங்களில் மீட்டுக்கொடுத்த வருணுக்கு கம்பெனியின் தலைமைச்செயல் அதிகாரி பதவி கிடைத்தது.
‘சாதாரணமாக நல்லவர்களாக இருக்கிறவர்களை விட தான் செய்த தவறை உணர்ந்து திருந்தியவர்கள் மிகவும் மேலானவர்கள்’ என தனது டைரியில் எழுதி வைத்து விட்டு, பிறரால் தனக்கு கெடுதல் வந்தாலும் தன்னால் பிறருக்கு கெடுதல் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் வருண், இன்று தனது மேன்மையான குணத்தால் பல குடும்பம் கெட்டுப்போகாமல் பாது காத்த திருப்தியில் தனது பணியில் மேலும் கூடுதல் கவனம் செலுத்தத்துவங்கினான்.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |