இதுவோ ஜிமிக்கி?
கதையாசிரியர்: சி.எம்.ராமச்சந்திர செட்டியார்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: November 11, 2025
பார்வையிட்டோர்: 64
(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோவிந்தபட்டர் ஒரு பழைய பேர்வழி. சிறு குழந்தை முதல் பெருமாள் கைங்கரியம் ஒன்றைத் தவிர வேறொன்றும் அறியார். பிறந்ததுமுதல் 60-ஆண்டுவரையில் ஆலய வழிபாடு ஒன்றிலே ஈடுபட்டு அவ்வூர் எல்லையும் கடந்து செல்லாத விரதம் கொண்டவர். “படிப்பு என்னத்திற்கு, அனுபவம் இருந்தால் போதாதா?” என்பார். பெருமாள் கைங்கரியம். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உபசரணை, இவ்விரண்டிலேயே முழுக் கவனம் செலுத்தி ஆலயத்திலிருந்து கிடைக்கும் ததியாராதனம் முதலிய உபயங்களிலிருந்தே 60 ஆண்டுகளும் கழித்து விட்டார். தங்கள் அகத்தில் அடுப்பங்கரையே இல்லை என்றும், தம் அம்மங்காருக்காக ஒரு பரிசாரகனை நியமிக்க வேண்டிய தொல்லையே ஏற்பட்டதில்லை என்றும் பெருமையுடன் பேசிக்கொள்வார். தமது அத்தியந்த அன்பர்கள் வந்துவிட்டால், ‘தொண்டர்களுக்குள் பெருமாள் அடக்கம், ஆகையால் தொண்டுபுரியுங் கைங்கரியங்களுக்குத் தனியான மடைப்பள்ளி வேண்டியதில்லை, பெருமாள் மடைப்பள்ளியே தொண்டர்களுடைய மடைப்பள்ளி. என்றும், ‘ஆதியிலேயே பெருமாள் திருவுள்ளம் அதுவாகக் கொண்டிருக்கிறார்’ என்றும் வெகு அமைதியாக உரைப்பார். அன்பர்கள் ஏதாவது வாசிக்கச் சொன்னால் கண் சாலேசரம் என்று சொல்லித் தப்பிவிடுவார். ஆனால் ஒரு பாசுரம் அவருக்கு நன்றாகத் தெரியும். கோயில் வழிபாட்டுக்கு வரும் பக்த சிரோமணிகளுக்குப் பிரசாதம், தீர்த்தம் திருத்துழாய் வழங்கும்போது, ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி’ என்று உரக்கச் சொல்லி ஓங்கி ஒரு அடி அடிப்பார். கேட்பவர்கள், ‘இவருக்கு அத்யாபகம் முழுதும் வரும்’ என்றே எண்ணினால் தப்பு உண்டோ? ஆனால் அப்பாசுரம் ஒன்றைத் தவிர்த்து வேறு தெரியுமோ?’ என்று ஒருவரும் கேட்கத் துணியார். அவருடைய தொனியை ஒரு முறை கேட்டவர்கள் அக்கேள்வி கேட்கவும் துணிவார்களோ? அவர் செய்யும் உபசாரம் ஒன்றே போதும்; பட்டருக்கு மாதம்தோறும் பக்தர் செலுத்தும் காணிக்கைகள் வேண்டியமட்டும் கிடைத்தன. அம்மங்கார் மனம் கோணாமல் கொரநாட்டுச்சேலை, வைரநகை முதலியவைகளை வாங்கிச் சமாதானப்படுத்தி வைக்கும் கைங்கரியத்தில் மிகச் சிறப்புடன் விளங்குவார். அந்த வகையிலே 60 ஆண்டுகள் கழிந்தும், வீட்டில் பெரும் பொருளோ ஐவேஜியோ பூமி காணியோ இருக்கவில்லை. ஆனால் வெளி மனிதர்களுக்குப் பட்டர் மிகுந்த பணக்காரர் என்ற ஒரு பேர் இருந்தது. இந்த வகையில் பட்டர் விளங்கி வந்தார். ‘உடையது விளம்பேல்’ என்ற ஒளவைப் பிராட்டியார் வாக்கை அனுபவத்தில் கடைப்பிடித்தவர் இந்தப் பட்டாசாரியார். அந்தரங்க நிலை மெளனம் சாதித்தவரையில் உலகில் சீருடனும் சிறப்புடனும் விளங்கி ஓங்கும் என்று நன்றாக அறிந்தவர்.
இந்தப் பாவனை ஒரே மகனின் திருமணத்திற்கு அனுகூலமாக நின்றது. வயது அதிகரித்த பிறகு ஒரு திருக்குமாரன் அவருக்குத் தோன்றினான். என்ன காரணமோ தெரியவில்லை. எட்டேகால் லட்சணங்களிலே கால் பங்கும் குறையாமல் எல்லாம் படைத்தவன். தகப்பனுக்கே படிப்பு வரவில்லை என்றால் மகனுக்குச் சொல்ல வேண்டுமா? பாடசாலைக்கு அனுப்பியதில், அங்கு உபாத்தியாயருக்கும் அவனுக்கும் நடந்த யுத்தத்தில் உபாத்தியாயர் தோற்றுப்போக, படிப்புப் போதும் என்று தகப்பனார் அவனைத் தம் தொழிலுக்கு வைத்துக் கொண்டார். ஆனால் தகப்பனுக்குத் தெரிந்த அந்த ஒரு பாசுரமும் பையன் வைகுந்தநாதன் திருவாயிலே நுழையவில்லை. வயது பன்னிரண்டு ஆகிவிட்டது. ஆனால் பையனோ தினந்தோறும் வெண்பொங்கல், அக்காரவடிசில், திருக்கண்ணமுது, திருவடை, தேன்குழல், காஞ்சி இட்டலி, இவைகளெல்லாம் நன்றாகச் சீரணப்படுத்தி வந்ததினால் பதினாறு வயதுள்ளவனைப்போல ஆனான். ஆகவே திருமணம் ஏற்படுத்தும் கைங்கரியத்தில் பட்டாச்சாரியார் இறங்கினார். பட்டுச்சேலை, வைரக்கம்மல் இவைகளுக்கு மயங்காத பேர்வழியும் உண்டோ? பல காதங்களுக்கப்பால் வேறொரு கோயிலில் இருந்த ஒரு பட்டாச்சாரியார் தம் அருமைத் திருமகளைக் கன்னிகாதானம் செய்து கொடுக்க முன் வந்தார். பெண்ணோ கிளிபோல் இருப்பாள். படிப்பும் சங்கீதமும் உண்டு. புருஷன் எப்படி இருந்தாலும் என்ன? கண்ணன் கறுப்பாக இல்லையா? கறுப்பு என்றா சொல்லுகிறோம்? நீலமேக சியாமளன் என்று பெருமையுடன் சொல்லுகிறோம். ‘இக்காலத்தில் பொருள் இருந்தால் போதாதா?’ என்று மாமியார் கூறிவிட்டார். திருமணம் நடந்தது. சீதனமும் வந்தது. சாந்தி முகூர்த்தமும் ஆயிற்று. நாட்டுப்பெண்ணும் வீடு வந்து சேர்ந்தாள். வைகுந்தன் கமலவல்லியைக் கண்டதுமுதல் ஒரே மோகத்தில் ஆழ்ந்துவிட்டான். பில்வமங்களன் சிந்தாமணியிடம் வைத்திருந்த காதல் பெரிதோ? வைகுந்தன் கமலவல்லியிடம் வைத்த காதல் பெரிதோ?’ என்று கேட்டுவிட்டால் விடை சொல்லத் திண்டாடவேண்டியது தான். பல வண்ணங்கள் அமைந்த வனமல்லிகை மீது ஒரு வண்டு மொய்க்கிற முறையில் வைகுந்தன் இல்லற வாழ்க்கையை நடத்தினான். வனமல்லிகையில் அமர்ந்த தேனுக்கு இத்தனை மதுரமும் வசீகரமும் எப்படி ஏற்பட்டது? வைகுந்தத்தில் அமர்ந்த நாதனுக்கே திருமகள்பால் ஒப்புயர்வில்லா அன்பு ஏற்படும்போது நமது வைகுந்தத்திற்குக் கமலவல்லியிடம் ஏன் ஏற்படாது? வைகுந்தநாதனுக்குக் கமலத்தின் மனம் கோனாதபடி நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், அதிகம். அவளுக்கோ புருஷனுடைய உருவமும் கோலமும் ‘காரும்’ ‘ஆலமும்’ அடைமொழிகளாகக் கூடியிருந்தாலும் என்ன? தனக்கு உண்பன, உடுப்பன, பூண்பன, பூசுவன நன்றாக அமைந்தால் போதும் என்றிருப்பாள். ‘திருமால்’ முன் தோன்ற எண்ணும் சூடிக்கொடுத்த பாவையும் அவ்வாறு அலங்கரித்துக்கொண்டாளோ?’ என்பது சந்தேகந்தான். இவ்வாறு தம்பதிகள் இருவரும் இன்ப சாகரத்தில் மூழ்கி இருந்தார்கள்.
காக்கைக்குத் தன்குஞ்சு பொன்குஞ்சன்றோ? அம்மங்கார் தன் அருமைத் திருமகனுக்கு வேண்டியவை வேண்டியாங்கு தருவாள். நாட்டுப்பெண்ணுக்குப் புது நாகரிக நகை வேண்டுமானால் வைகுந்தன் தன் தாயாரைக் கேட்க வேண்டியதுதான். உடனே அம்மங்கார் பட்டாச்சாரியரின் செவியில் ஏற்றிவிடுவார். அவரோ எங்கேயோ சென்று சாம தான பேத தண்டங்களைப் பிரயோகித்து அன்று மாலைக்குள்ளாக வேண்டிய பொருள்களைச் சமர்ப்பித்து விடுவார். ஆகவே, கமலவல்லியின் நாட்டத்தைத் தன் அருகிலிருந்து விலகிச் செல்லமுடியாமல் பாதுகாத்து வந்தான் வைகுந்தன். இப்படியிருக்க ஒரு அதிசய சம்பவம் ஏற்பட்டது. கமலவல்லி சில தடவைகளில் மாறுதல் வேண்டி ஆலயம் செல்வதுண்டு. ஒரு திருவிழாக் காலத்தில் அவள் ஆலய தரிசனத்திற்குச் சென்றிருந்தாள் அங்கு வெளியூரிலிருந்து பல நாகரிகப் பெண்களும் வந்திருந்தார்கள். அவர்களில் சிலபேர் புதுமாதிரி லோலாக்குகளையும், சில மெல்லிய ஜிமிக்கிகளையும் காதில் அணிந்திருந்தார்கள். ஜிமிக்கிகளைக் கண்டவுடன் அவைகளின்பேரில் கமலவல்லியின் நாட்டம் பாவிற்று. அவள் திருமாளிகைக்குத் திரும்பியவுடன் வைகுந்தன் வெகு ஆர்வத்துடன் அவளை எதிர்கொள்ளப் போனான். அவளோ அவனை ஏறிட்டுப் பார்க்காமல் திரஸ்கரித்துச் சிடுமூஞ்சியுடன் உதறிச் சென்றாள். வைகுந்தனக்குத் துக்கம் பொறுக்க முடியவில்லை. தன் அருமை நாயகியை யார் கெடுத்து விட்டாரோ என்று நடுநடுங்கி விட்டான். ஆலயத்திற்குச் செல்வதோ அவனுக்குப் பிடிக்கவில்லை. எந்தத் துஷ்டையோ அந்த அருமைக் கண்மணியின் மனத்தைப் பேதித்திருக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். உடனே அவ்வூடலைத் தணிக்க வேண்டிப் பலவித ஆலோசனைகளைச் செய்தான். கடைசியாக மிக்க விலைக் கொடுத்துத்தான் வாங்கி வைத்திருந்த ஒரு அழகிய லோலாக்கை அவள் திருமுன் காட்டினான். அவளோ ஒரே கோபத்துடன் சீறி அதனைத் தன் திருக்கையால் வீசித் தள்ளினாள். லோலாக்கு பட்ட பாட்டைச் சொல்லவேண்டுமா? அறுந்து முறிந்து சிதறிப் பதறி வெகு தூரத்தில் நிலத்தில் அலங்கோலமாகக் கிடந்தது. தசரதனிடம் இரண்டு வரம் கேட்க எண்ணி நிலத்தில் அழுதுஉழுது மருண்டு புரண்ட கைகேசியின் ஆ ஆபரணங்களும் இந்த கீர்த்தி பெறவில்லை! ஏழை நெஞ்சு படைத்த வைகுந்தன் என்ன செய்தான்? கமலத்தின் திருமலரடி தொழுது கண்ணீர் விடவும் தயாராக இருந்தான். அவனுடைய பரிதாப நிலையைக் கண்டு சிறிது கருணைகூர்ந்து கமலம் ஒருவாறு சினம் ஆறினாள். ”உலகத்தில் ஏழைப்பெண்களும் ஜிமிக்கி அணிந்து திருவிழாவிற்கு வருகிறார்கள். நான் மட்டும் என்ன பாவம் செய்தேன்? எங்கப்பன் என்னை ஒரு அறிவாளிக்குக் கொடுத்திருந்தால் இந்த அவமானம் எனக்கு வருமா?” என்று புலம்பினாள் ”கண்மணி ! நீ எப்போது ஜிமிக்கியைக் கேட்டாய்? நான் இல்லை என்றேனா? ஒரு வினாடியில் கொண்டு வருகிறேன்’ என்று சொல்லிப் புறப்பட்டான் வைகுந்தன்.
உடனே செய்தி அம்மங்கார் செவி சேர்ந்தது. மறுவிநாடி பட்டாசாரியார் சந்நிதியை விட்டு அவசர அவசரமாகத் திருமாளிகை சேரவேண்டி வந்தது. ‘பெருமாள் கைங்கரியம் பெரிதா, அம்மங்கார் கைங்கரியம் பெரிதா?’ என்ற கேள்வி இங்கே எழும்பக் காரணம் இல்லை. ஆராதனை நடுவிலே செய்தி வரம் அங்கேயே நிறுத்தி விட்டு ஓடி வந்தார் பட்டர்.திருவள்ளுவர் சொல்லுக்கு மீறாத வாசுகிதேவி, கிணற்றின் மத்தியில் குடம் இருக்கவும் அவ்விதமே விட்டுக் கணவனிடம் வரவில்லையா? அம்மங்கார் அழைக்கவும் ஐயங்கார் வரமாட்டாரா? ஆராதனை நின்று விட்டால் என்ன குறைவு? பட்டர் திருமாளிகை சேர்ந்ததும் ஜிமிக்கி ஜதைக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. பட்டரும் திடுக்கிட்டுப் போனார். ” என்ன சங்கடம்? நேற்றுதானே பெட்டியிலிருந்த பண முழுதும் கொடுத்து லோலாக்கு வாங்கிக் கொடுத்தேன்! இன்று ஜிமிக்கிக்கு எங்கே போவது? எந்தக் கொழுத்த பெத்தி செட்டி இத்தனை நேரமான பிறகு கிடைப்பான்?” என்று ஆலோசித்தார். என்றாலும் தன் கவலையை வெளியில் காட்டாதபடி, மறைத்துக்கொண்டு புன்முறுவலுடன். உடனே கொண்டு வருகிறேன். என்று சொல்லிப் புறப்பட்டார். ஆலயம் சென்றார் பட்டாசாரியார். அன்றைய புறப்பாடு முடிந்து பெருமாள் ஆலயம் சென்று அமரும் சமயம். பெருமாள் பிராட்டியார் திருவாபரணங்களைக் கழற்றிக் கருவூலத்திற்குச் சென்று வைக்கும் சமயம் வந்தது. பட்டரிடமும் ஒரு கருவூலச் சாவி உண்டு. அவரும் அங்கே செல்ல வேண்டியதல்லவா? ஜிமிக்கி என்றாளே, ஜிமிக்கி அம்மன் ஆபரணங்களில் ஒன்றல்லவா? அதைத் தெரியாமல் எடுத்துக் கொண்டு தம் தேவியிடம் சேர்த்துவிடலாம். இதுதான் சரியான ஆலோசனை, ‘கஷ்ட காலத்தில் புத்தி தானே தோன்றும். என்று சிலர் சொல்வதில்லையா? அதுபோலச் சமயத்தில் பட்டருக்கு இந்த ஆலோசனை தோன்றிற்று. ஆனால் ஒரு பெருந்தடை உண்டு. கருவூலச் சாவி ஆறுபேரிடம் இருக்கும். அவ் ஆறுபேரும் ஒருங்கே. இருந்து கருவூலக் கதவைத் திறக்கவும் மூடவும் வேண்டும். அவ் ஆறுபேர்களிலே இராமானுஜ பட்டர் ஒரு பெரும் பேர்வழி. அவர் பெருமாளிடம் ஆழ்ந்த பக்தி உடையவர். நகைகளை வெகு கூர்மையுடன் பார்த்துத்தான் வெளியே எடுத்தும் உள்ளே வைத்தும் தம் பணியை ஆற்றுவார். அவருக்கோ கருடனைப் போலக் கூர்மையான கண் உண்டு. அவரைத் தப்புவித்து எவ்வாறு ஜிமிக்கிகளை எடுத்துச் செல்வது என்ற விசாரம் ஏற்பட்டது பட்டருக்கு, ஆகவே ஒரு பெருத்த ஆலோசனை செய்தார். முடிவாக அலங்கார மண்டபத்தில் வைத்துள்ள வர்ணப்பாவைப் பொம்மைகள் அணிந்திருக்கும் கிலிட்டு ஜிமிக்கிகளைப் பிடுங்கி நல்ல ஜிமிக்கிகளுக்காக மாறுபாடு செய்யலாம் என்று அனுபவசாலியான பட்டருக்குத் தோன்றிற்று. உடனே காரியத்தில் இறங்கினார். நல்ல வேளையாக அலங்கார மண்டபத்தில் யாரும் இருக்கவில்லை. பொம்மைகளின் ஜிமிக்கிகளை மெல்ல அறுத்து எடுத்துக் கொண்டார். தெற்கறைக்கு வந்தார். மற்ற ஐந்து பட்டர்களும் வந்தார்கள். நகைகளைக் கறுப்பு விரிப்பின் மீது வைத்தார்கள். இராமானுஜ பட்டர் அவைகளைச் சோதித்துச் சரியாக இருப்பதாய்ச் சொல்லிவிட்டார். கோவிந்த பட்டர் அவைகளை எண்ணுவதைப் போல் பாசாங்கு செய்தார். நல்ல வேளையாக விளக்கு அப்போது சிறிது மங்கிற்று. சமயம் பார்த்துப் போலி ஜிமிக்கிகளை பரப்பின்மீது வைத்துவிட்டு நல்ல ஜிமிக்கிகளை எடுத்துத் தம் மடியில் சொருகிக் கொண்டார். காரியம் வெற்றியாக முடிந்தது. மிகுந்த மகிழ்ச்சியோடு வெளிவந்தார் பட்டர். திருமாளிகை சென்றதும் அம்மங்காரிடம் ஜிமிக்கிகளை முடித்த ஒரு முடிச்சைத் தந்தார்.
அம்மங்காரும் திருமகனாரிடம் சேர்ப்பித்தாள். வைகுந்தனுக்கோ அளவில்லாத கொண்டாட்டம். கமலவல்லியை அழியாத வலையில் பிடித்துவிட்டோம் என்று குதூகலத்துடன் வேகமாகச் சென்றான். சயனகிருகத்தில் கமலவல்லி கணவன் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். காயோ, பழமோ? என்று விளித்தாள். ‘வைகுந்தன் மனது வைத்தால் காயாகுமா? காயாகியதும் பழமாகி விடாதா?’ என்று சொல்லி ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தான். இறுதியில் ஜிமிக்கிப் பொட்டணத்தை அவள் திருக்கையில் சமர்ப்பித்தான். உடனே மிகுந்த ஆர்வத்துடன் கமலம் அப்பொட்டணத்தை அவிழ்த்து நகைகளை நோக்கினாள். முகம் விகாரப் பட்டது. ‘கர்நாடகப் பேர்வழிகள்! நாகரிகம் அறியாக் குருட்டு மனிதர்கள்! ஏன் இந்த ஜன்மம் எடுத்தீர்களோ? பெண்கள் அணியும் நகைகளையும் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையா நீங்கள் ? என்னை என்ன, பட்டிக் காட்டுப் பெண் என்றா நினைத்தீர்கள்?” என்று கர்ஜித்து விட்டு ஜிமிக்கிகளைச் சுவரின்மீது எறிந்தாள். நாச்சியாரின் திருவாபரணத்திலிருந்து பல கெம்புகள் சிதறி விழுந்தன. என்ன பாவம்! நாச்சியாருக்கு உபயமாகத் தந்த பக்தர்களின் மனம் இதைக் கேட்டால் என்ன ஆகுமோ அறியோம்!
வைகுந்தனுக்கு இந்த விபரீதச் செய்கையின் பொருள் விளங்கவில்லை. தன் காதலியின் திருக்கரம் பிடித்துக் கெஞ்சினான். இறுதியில் சிறிது கோபம் தணிந்து அவனுக்கு உண்மை சொன்னாள். தற்கால ஜிமிக்கி மெல்லிய தாய்ச் சிறிதாக இருக்க வேண்டும். அது தங்கச் சங்கிலியில் பிணை பட்டிருக்க வேண்டும். அழகாகத் தொங்க வேண்டும். பழையகாலத்து நாயக்க மன்னரின் ஜிமிக்கி நாச்சியாருக்கு உதவுமே ஒழியத் தற்காலப் பெண்களுக்கு உதவாது என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. மிகுந்த வியாகுலத்துடன் வைகுந்தன் விழுந்து சிதறின ஜிமிக்கிகளை எடுத்துக் கொண்டு அம்மங்காரிடம் சமர்ப்பித்தான். பட்டரும் அறிந்தார். தற்கால நாகரிகம் அறியாத பட்டருக்கு இந்த விபரீதச் செயலின் பொருள் இன்னமும் விளங்கவில்லை. நாச்சியாரின் திருவாபரணத்தைச் சிதைத்ததினால் ஏற்படும் பாவம் நம் குடும்பத்தை நசுக்கி விடுமே என்று நடுங்கத் தொடங்கினார்.
– கோயிற் பூனைகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு; 1945, திராவிடர் கழக வெளியீடு, சென்னை.