இதில் வியப்பில்லை
கதையாசிரியர்: சி.எம்.ராமச்சந்திர செட்டியார்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 1, 2025
பார்வையிட்டோர்: 39
(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருக்கடுகூர் ஒரு பண்டையத் திவ்வியதேசம். அதில் உள்ள ஞானப்பிரான் கோயில் உலகக் பிரசித்தி பெற்றது. அதில் எழுந்தருளியிருக்கும் அர்ச்சாவதாரமூர்த்தியோ பக்தகோடிகளுக்குப் பண்டைய காலமுதற் கொண்டு, ஞானத்தை அளித்துக்கொண்டு, பரம காருண்யத்துடன் எழுந்தருளியிருக்கின்றார். வராகரூபமாக உள்ள அம்மூர்த்தி மக்களிடை உள்ள அஞ்ஞானமான இருளை அழித்து ஞானமாகிய ஒளியை அருளிச் செய்கிறார். திருமாமகளை ஆகத்தில் ஏந்திய அச்சுந்தரமூர்த்தியின் பிரபாவத்தை நாம் வர்ணிக்க முடியுமா? இத்தகைய பெருமாள் எழுந்தருளியிருக்கும் திவ்விய தேசத்தின் பெருமையை என்ன வென்று எழுதமுடியும்.
இத்திவ்விய தேசத்தில் ஸ்ரீ வைணவப் பெருங்குடிகள் நூற்றுக் கணக்கில் உண்டு என்றால் அது அதிசயோக்தி அல்ல. எல்லா பரம பாகவத சிரோன்மணிகளும் ஆலயக் கைங்கரியத்தில் ஈடுபடுகின்றவர்கள். ஒவ்வொரு வருக்கும் ஆலயத்தில் சுதந்திரம் உண்டு. முதல் தீர்த்தம் முதல் கொண்டு எல்லா வைபவங்களும் அக்குடும்பத்தார்களுக்குச் செவ்வனே நடைபெறும். இருந்தாலும் தீர்த்தப்பிரசாதங்களுக்கு உரிமை பாராட்டிக் கச்சேரி ஏறினது ஒரு தடவை. அல்ல. சென்ற 150 வருடங்களாக கச்சேரிகளில் செய்திருக்கும் தீர்ப்பு முதலிய ரிகார்டுகள் அக்குடும்பங்களில் வண்டிக்கணக்காக உண்டு. அந்த ரிகார்டுகளை ஒருசிறிதும் பழுதுபடாமல் வெகு ஜாக்கிரதையாக பாதுகாத்து வருவார்கள். விவகாரத்துக்குத் தலைமைப் பட்டணம் சென்றால், சென்றது முதல் வீடு திரும்பும் வரை ஒரு துளி தீர்த்தமும் வாயில் விடாமல் வெகு ஆசாரமாக இருக்கும். ஐயங்கார், சுவாமிகள், கிறிஸ்தவன், pகமதியன், ஐரோப்பியன் முதலிய நீதிபதிகள் செய்துள்ள தீர்ப்புக்களைப் பொன்னே போலப் போற்றிப் பாதுக்காப்பார்கள் சில தடவைகளில் அந்த ரிகார்டுகளுக்குக் கொடுக்கும் புனித மதிப்பு திருவாய் மொழிக்கும் ரிக், யஜூர் சாகைகளுக்கும் கொடுக்கப்படுமோ என்பது பலருடைய ஐயப்பாடு. ஆலயத்தில் தமக்கு ஏற்பட்ட ஒவ்வாரு கடமையும் ஒவ்வொரு சுதந்தரம் அல்லது உரிமையாகக் கொண்டு அவைகளில் ஒரு அணு குறையினும் ஐந்து கசசேரிகளும் ஏறத் தயாராக இருப்பார்கள். அர்ச்சாவதாரத்தின் முன்னால் உரிமைகளில் ஒரு சிறிது குறையின் பின்னால் பரமபதத்தில் நித்திய சூரிகளாகத் துலங்கும் காலத்தில் அக்குறை எங்கே ஒட்டிக்கொள்ளுமோ என்பது அவர்கள் ஐயம் போலும். இவ்விதமான ஐயங்களுக்கு எல்லாம் இருப்பிடமாக இருந்ததினால்தான் அன்னார் ஐயங்கார்கள் என்று பெயர் படைத்தார்கள் என்று திருக்கடுகூரில சில குறும்புக்காரப் பேர்வழிகள் கூறுவார்கள். ஆனால் அதனை நாம் ஒப்புக் கொள்ளுவதில்லை ஸ்ரீ வைஷ்ணவத்திற்குச் சேர்ந்த ஐந்து அங்கங்களையும் பூரணமாகப் பெற்றபடியால் அவர்கள் ஐயங்கார் எனப்பட்டார்கள் என்று அவர்கள் அறியவேண்டும்.
திருக்கடுகூரில் ஸ்ரீ வைஷ்ணவர்களில் வடகலை, தென்கலை என்ற இருகலையாரும் உண்டு இரண்டு வகுப்பார்களும் ஞானப்பிரானைத் தத்தங்கலையினர் என வாதாடுவர். உண்மையில் மூலத்தானத்தில் இருவகைத் திருநாமமும் இல்லை. திருமண் மேலுக்குப் பூசப்படுமே ஒழிய சிலையில் உள்ளது திலகம்தான். இரு கலையினரையும் ஏமாற்றி கலையைக் கடந்த கடவுளாக அப்புனித மூர்த்தி நிற்கிறார். இதனை அறிந்தும் அறியாதவர்போல் இருகலையார்களும் பல தடவை கச்சேரி ஏறி இலட்சக்கணக்கில் செலவழித்திருக்கிறார்கள். எந்தக் கலையினர் கோயில் அதிகாரம் பெற்றார்களோ, அந்தக் கலைத்திருமண் சுவாமியின் திருமுகத்தில் விளங்கிக்கொண்டிருப்பது வழக்கம். மாறுதல் அடையும் போதெல்லாம் புது வியாச்சியம் தொடங்கும்.
இறுதியில் எதுவும் நிலையாக இல்லாமல் போய்விட்டது. ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ ஆகி விடும். இந்த நிலையில் இருக்கும் இத்திவ்விய தேசத்தில் கதை நடந்த காலத்தில் தென்கலையார் ஆதிக்கத்தில் இருந்தார்கள். அதனால் கலையாருக்கு ஒரே புகைச்சல். கூடிய வரையில் கச்சேரிகள் ஏறியும் அவர்களை விலக்கமுடியாமல் போய்விட்டது. புதிதாக போர்டு ஆதிக்கம் ஏற்பட்டது. அதனாலும் மாறுதல் ஏற்படவில்லை. அவ்வூரில் வடகலை தென்கலைச் சச்சரவுகள் அதிகரித்து வந்த காரணத்தை முன்னிட்டு போர்டார் அவ்வாலயத்திற்கு ஒரு திட்டம் அல்லது ஸ்கீம் ஏற்படுத்தினார்கள். அதன்படி ஒரு நிர்வாக உத்தியோகஸ்தர் நியமிக்கப்பட்டார். அவருக்கே முழு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
முதலாக நியமிக்கப்பட்டவர் ஸ்ரீவைஷ்ணவர். அவராலே இக்கலைவாதம் அடக்க முடியவில்லை. வேலை வேண்டாம் என்று விலகிக்கொண்டார். இரண்டாவது ஒரு சைவர் நியமிக்கப்பட்டார். அவர் ஒருமாதம் கூட தங்க முடியவில்லை. அவர் வீட்டின்பேரில் கற்பூஜை முதலிய பல அபிஷேகங்கள் நடந்தன. அவர் வேறு ஆலயத்துக்கு மாற்றிக்கொண்டு சென்று விட்டார். மூன்றாவதாக ஸ்ரீகிருஷ்ணன் B.A. என்ற சுமார்த்தர் நியமிக்கப்பட்டார். ஸ்ரீகிருஷ்ணன் நன்றாக வாசித்தவர். பக்திமான், B.A ஆக இருந்தும் சாஸ்திரங்களை வாசித்தவர். மிகவும் சீலம், ஆசாரம் இவைகளைக் கொண்டவர். தெய்வத்திற்குப் பயந்து நடப்பவர். இவர்தான் தகுந்த ஆள் என்று எல்லோரும் எண்ணினார்கள். கிருஷ்ணனோ இரு திறத்தார்களுக்கும் பொதுவாகவும் நியாயமாகவும் நடந்து கொண்டார். முதலில் சிலநாள் செம்மையாகக் காரியங்கள் நடந்தன. கிருஷ்ணன் ஆட்சி எப்போதும் வெற்றியாகவே இருக்கும் என்று எல்லோரும் நம்பினார்கள்.
இருதிறத்தாரையும் திருப்தி செய்ய வேண்டும் என்பது கிருஷ்ணன் எண்ணம். அது ஒருக்காலும் நிறைவேறாது அல்லவா? ஒரு விவாதம் வந்தால் தீர்ப்பு ஒரு கட்சிக்குத்தான் இருக்குமே அன்றி இருபுறத்திற்கும் இருக்காது. வெற்றிப்பெற்றவர் புகழ்வார்கள். தோல்வி அடைந்தவர்கள் இகழ்வார்கள். இவ்விதமாக போட்டி விவாதங்கள் சில வந்தன. ஒருமாதத்தில் சேர்ந்தாற்போல் நான்கு விவாதங்கள் வடகலையாருக்கு அனுகூலம் ஆயின உடனே தென்கலையார் கிருஷ்ணன்மீது பழிசுமத்தத் தொடங்கினார்கள் போர்டுக்கும் சர்க்காருக்கும் பல மனுக்கள் அனுப்பப்பட்டன. கிருஷ்ணன் சத்தியவான் என்று அறிந்த அதிகாரிகள் அம்மனுக்களைக் குப்பைத் தொட்டிக்கு அனுப்பிவிட்டார்கள். ஆகவே தென்கலையார் வேறு ஒரு தந்திரம்செய்ய வேண்டும் என்று துணிந்தார்கள். கட்சி வாதம் என்னதான் செய்யக்கூடும் என்று இதனால் தெரியக் கூடும் அல்லவா?
ஒருநாள் போர்டுக்கு வந்த தபால்களில் கிருஷ்ணனுடைய மனு ஒன்று வந்தது. அதில் தனக்கு வேறு வேலை அதிகமாக இருப்பதாகவும் இதனால் தன் வேலையை ராஜிநாமா செய்து விட்டதாகவும் உடனே வேறு ஒருவரை நியமித்துத் தன் வேலையை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அதில் கண்டிருந்தது. இதனை வாசித்துப் பார்த்த கமிஷனருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒருவேளை தவறுதலாக இருக்குமோ என்று எண்ணி ஒரு வாரம் வரை உத்திரவு செய்யாமல் வைத்திருந்தார். உடனே மற்றொரு கடிதம் வந்தது. தான் நீங்கிக்கொள்ள வேண்டியது அவசரம் என்றும் உடனே ஒரு ஆளை நியமித்து வேலையை ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும் என்றும் அதில் கண்டிருந்தது. இரண்டாவது கடிதம் வந்ததும், சந்தேகம் நீங்கி, கமிஷனர் ராஜிநாமாவை ஒத்துக் கொண்டு இராமசாமி B.A. என்ற வேறு ஒருவரை நியமித்து உத்தரவை அனுப்பினார்.
இராமசாமி வெகுநாளாக ஒரு வேலை வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தார். ஆகவே உத்தரவு கிடைத்ததும் தானே அதை நேரில் வாங்கிக்கொண்டு திருக்கடுகூர் புறப்பட்டுவிட்டார்.
திருக்கடுகூர் சென்றதும் ஸ்ரீ இராமசாமி ஆலயத்துக்குச் சென்று கோயில் ஆபீஸூக்குள் நுழைந்தார். ஸ்ரீ கிருஷ்ணன் ஆபீசில் ஏதோ வேலைசெய்து கொண்டிருந்தார்.
“தாங்கள்தானா ஸ்ரீகிருஷ்ணன்?”
“ஆம், என்ன வேண்டும்?”
“தங்களுக்குப் பதிலாக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். இதோ போர்டார் உத்தரவு! சார்ஜ் கொடுத்துவிடும்.”
இவ்வார்த்தைகளைக் கேட்டவுடனே கிருஷ்ணனுக்குத் தூக்கிவாரிப் போட்டதுபோல் இருந்தது. “ஏன் இந்த எதிர்பாரத உத்திரவு. இது எப்படி ஏற்பட்டது’ ‘ என்று சொல்லிக்கொண்டு அவ்வுத்தரவைப் படித்தார். தனது இராஜிநாமாவின் மீது இந்த உத்திரவு ஏற்பட்டது என்று கண்டார்.
“ஏதோ தவறு ஏற்பட்டிருக்கிறது. நான் வேலையை இராஜிநாமா செய்யவில்லை. ஆகவே இதை விவரமாகத் தெரிந்த பிறகு வேண்டியபடி நடந்துகொள்வோம்” என்று கிருஷ்ணன் சொன்னார்.
ஆனால் இந்தச்சமாதானத்திற்கு இராமசாமி ஒத்துக் கொள்ளுவாரா? ஒருக்காலமும் ஒத்துக்கொள்ள மாட்டார். வெகுகாலம்வரை காத்திருந்தவர் இச்சமயம் தப்பினால் இனி வேலை கிடைப்பது எப்போதோ? ஆகவே கண்டிப்பாக வேலையில் அமர வேண்டும் என்று தீர்மானித்து விட்டார்.
“என்ன ஐயா! நீர் சொல்லுவது விசித்திரமாக இருக்கிறது. இராஜிநாமா கொடுத்துவிட்டு அது அங்கீகாரமான பிறகு அது இல்லை என்றால் யார் ஒத்துக் கொள்ளுவார்கள். நீர் சார்ஜ் கொடுத்துவிட்டு வேணுமானால் போர்ட்டுக்கு அப்பீல் செய்துகொள்ளும்” என்றார். இவ்விதம் வாக்குவாதம் ஆவதற்குள் இச் செய்தி தந்திபோல் ஊர் முழுவதும் பரவிவிட்டது. கிருஷ்ணன்மீது சிறிது ஆத்திரம் கொண்ட ஆலயப் பணி விடையாளர்களும் தென்கலைக் குடிகளும் புது உத்தியோகஸ்தர் பக்கமாகப் பேசினார்கள். கிருஷ்ணனுக்கோ யாது செய்வதென்று தோன்றவில்லை.
தப்பாக இருந்தாலும் போர்டு உத்திரவை மீறுதல் சரியல்ல. பின்னால் நேரில் சென்று உத்திரவை மாற்றிக் கொள்ளலாம் என்று தீர்மானித்து சார்ஜ் கொடுத்து விட்டார். இராமசாமி புது நிர்வாகஸ்தார் ஆனார்.
கிருஷ்ணனுக்கோ ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். தான் இராஜிநாமா கொடுக்காதிருந்தும் யார் இவ்விதம் செய்திருப்பார்கள் என்று எண்ணி எண்ணி நெஞ்சு புண்ணாகியதே தவிர வேறில்லை.
தன்னைப்போல் வேறு யாராவது பொய்க் கையெழுத்து இட்டு அனுப்பியிருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.
சார்ஜ் கொடுத்த அன்றே தலைமைப் பட்டணத்துக்குப் புறப்பட்டார்.
திருச்சி சேர்ந்ததும் இரயில் சந்தியில் தன் மைத்துனனைக் கண்டார். மாமனாருக்கு ஆபத்தாக இருக்கிறதென்றும் தன்னை அழைத்து வரும்படி அனுப்பினார் என்றும் கூறி அழைத்தார் உயிருக்கு ஆபத்து என்றால் யார்தான் செல்லச் சம்மதிக்கமாட்டார்கள்? உடனே ஈரோடு புறப்பட்டு மாமனார் வீட்டுக்குச் சென்றார். அவருடைய நோய் சிகிச்சை செய்வதிலே சில நாள் கழிந்தன. சென்னை செல்லமுடியவில்லை. போர்டு ஆபீசுக்கு ஒரு மனு செய்து கொண்டார். அதில் தான், இராஜிநாமா செய்யவில்லை என்றும், அதனைத் தீர விசாரிக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தார். இக்கடிதம் சென்ற போது கமிஷனர் சுற்றுப் பிராயணத்தில் இருந்தார். மனு அப்படியே உத்திரவில்லாமல் நின்று விட்டது. இராமசாமியும் இவ்விதத்தில் சிறிது ‘கவனம் செலுத்தி வந்ததினால் கிருஷ்ணன் கடிதம் சென்றிருந்த இடம் தெரியவில்லை. கிருஷ்ணன் மறுபடியும் மனுசெய்து கொண்டார். இதற்குள் முன் இருந்த கமிஷனர் மாறுதல் அடைந்தார். ஆகவே மனுவைக் கவனிப்பார் இல்லை. இதற்குள் ஆறு மாதம் ஆயிற்று. ‘பட்டகாலிலே படும் கெட்டகுடியே கெடும்’ என்றபடி கிருஷ்ணனுக்குப் பலவிதக் கஷ்டங்கள் ஏற்பட்டன. வேலையில்லா உபத்திரவம் பிரமாதம் ஆயிற்று. பிறகு ஒரு நாள் கடன் வாங்கிக் கொண்டு கிருஷ்ணன் சென்னைக்குப் புறப்பட்டார். கமிஷனர்களைக் கண்டு தன் குறைகளைச் சொல்லிக் கொண்டார். பழைய ரிகார்டுகள் தேடப்பட்டன. இராஜிநாமா பொய் கையெழுத்து என்று நிரூபிக்கப்பட்டது. இவ்விசாரணை நடந்து முடிவதற்கு இரண்டு மாதம் சென்றது. முடிவில் கிருஷ்ணனுக்கு மறுபடியும் வேலை தரப்பட்டது. ஆனால் இராமசாமியை நீக்குவது சரியல்ல. கிருஷ்ணனுக்கு மறுபடியும் திருக்கடுகூர் செல்லத் துணிவில்லை. ஆகவே கிருஷ்ணன் வேறு ஒரு ஆலயத்திற்குச் சென்றார். அது ஒரு சிவாலயம். அங்கு இருவிதக் கலைச் சண்டை இல்லாததனால் மிகுந்த அமைதியுடன் ஆட்சி புரிந்தார்.
திருக்கடுகூர் வைஷ்ணவர்களோ இராமசாமியைத்தான் ஒப்புக்கொண்டார்களா; கிருஷ்ணன் நல்லவன் என்று சொல்லி இராமசாமியைப் பகைக்கத் தொடங்கினார்கள். ஆனால் இராமசாமி இவர்களுக்குப் பயந்தவன் அல்லன். தன் இஷ்டப்படி சுயேச்சை அதிகாரம் நடத்தி வந்தான். ஆனால் அதன் விளைவு பின்னால் நடந்த செய்கைகளால் அறியலாம். அவைகளை இங்கு எழுதவேண்டியது அவசியம் இல்லை. ஆதலினால் நிறுத்தப்பட்டது.
– கோயிற் பூனைகள் (சிறுகதைகள்), முதற் பதிப்பு; 1945, திராவிடர் கழக வெளியீடு, சென்னை.