இதயத் துடிதுடிப்பு
கதையாசிரியர்: தொ.மு.சி.ரகுநாதன்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
கிரைம் முல்லை
கதைப்பதிவு: November 7, 2025
பார்வையிட்டோர்: 80
(1946ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சத்தியமாய்-நாடி தளர்ந்து, நான் எவ்வளவு நடுநடுங்கி அதிர்ந்து போனேன், அதிர்ந்து போயிருக்கிறேன்! ஆனால் நீங்கள் என்னை பித்துக்குளி என்று சொல்லிவிட முடியுமா? அந்த ‘நோய்’ என் புலன்களைத் தீட்டிக் கூராக்கியது. அவற்றை அழிக்கவில்லை; மழுக்கவில்லை. ஓசையை உணரும் செவிப்புலன் தான் எவ்வளவு தீக்ஷண்யமாயிருந்தது? மண்ணுலகத்து ஓசைமட்டுமல்ல, வானுலகத்தின் குரலையும் நான் கேட்டேன். நரகலோகத்தின் நாராசக்குரலும் எனக்குக் கேட்டது. பின், எப்படி நான் பைத்தியமாக முடியும்? அந்த முழுக்கதையையும் நான் அமைதியுடனும் அபசுரமின்றியும் உங்களுக்குச் சொல்ல முடிந்தால்-? முடியுமா என்றுதான் பாருங்களேன்!
அந்தத் எண்ணம் என் சித்தத்தில் எப்படி இடம் பெற்றதென்று என்னால் சொல்ல இயலாது. ஆனால், அந்த எண்ணம், மனசில் குடியேறிய நாள் முதலாய், என்னை இரவும் பகலும் வேட்டை தான் ஆடிற்று இவ்வளவுக்கும் காரணமோ, ஒன்றுமில்லை. ஆசை? அதுவுமில்லை. நான் அந்தக் கிழவனை நேசித்தேன். அவன் எனக்கு ஒரு குற்றமும் செய்யவில்லை; மானாபிமானம் தவறிவிடவும் இல்லை. அவனுடைய சொத்துக்கும் நான் ஆசைப்பட்டவன் அல்ல ஆனால், அவனுடைய அந்தக் கண்ணைமட்டும் நினைத்தால்-? அது ஒரு கழுகுக் கண். வெளிறிய நீலத்தின்மேல் பூப்படர்ந்த கண். அந்தக் கண்ணின் பார்வை என் மீது விழும்போதெல்லாம், என் இரத்தம் உள்ளுக்குள்ளேயே உறைவதுபோல் ஜில்லிட்டது. ஆதலால், நாளடைவில், படிப்படியாக நான் அந்தக் கிழவனைத் தீத்துக் கட்டியாவது, அந்தக் கண்ணின் பயங்கரத்திலிருந்து தப்பிவிட நினைத்தேன்; தீர்மானித்தேன்.
விஷயத்துக்கு வாருங்கள். நீங்கள் என்னைப் பைத்தியம் என்று கேலி செய்கிறீர்கள். பைத்தியக்காரனுக்கு சுயாதீனம் உண்டா? நீங்கள் என்னைக் கவனித்திருக்க வேண்டும். எவ்வளவு முன் எச்சரிக்கையோடு, பிரதம ஏற்பாடுகளோடு, சர்வ ஜாக்கிரதையாய் அந்த வேலையில் ஈடுபட்டேன் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள். அந்த வேலையில் எப்படி ஈடுபட்டேன் என்பதையும் நிங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
அந்த மனுஷனைக் கொல்லுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னாலிருந்தே, நான் அவனோடு மனம்விட்டு ஒட்டிப் பழகவில்லை. மேலும், ஒவ்வொரு இரவிலும், நடுநிசிக்கு மேல், அவன் வீட்டுக் கதவு நாதாங்கியைத் தள்ளித் திறந்திருக்கிறேன். அப்பா! எவ்வளவு அரவமின்றி! திறந்து முடிந்ததும், என் தலை நுழையும் அளவுக்கு, கதவை மெதுவாகத் தள்ளி, நன்றாக மூடப்பட்டு, ஒளியே சிதறமுடியாத, அந்த இருளடைந்த விளக்கை, உள்ளே வைத்திருக்கிறேன். நான் பயந்து பயந்து திருட்டுத்தனமாய் நுழைவதை நீங்கள் கண்டிருந்தால், சிரியாய்ச் சிரிப்பீர்கள். அந்த விளக்கை, மெதுவாக, மிகவும் மெதுவாக, அந்த மனிதனின் தூக்கம் கலைந்துவிடாதவாறு, மெதுவாக உள்ளே தள்ளினேன். என் முழுத் தலையையும் உள்ளே நீட்டி, படுக்கையில் அவன் படுத்திருப்பதைப் பார்த்து முடிவதற்கே ஒரு மணி நேரம் செல்லும். ஒரு பித்துக்குளி இவ்வளவு புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்ள முடியுமா? பிறகு, -என் தலை முழுவதும் உள்ளே நுழைந்தவுடன், அந்த விளக்கைப் பதனமாகத் தூண்டினேன். கதவை மேலும் தள்ளினேன்; கதவின் கீல்கள் கிரீச்சிட்டன. விளக்கை லேசாகத் தூண்டி, ஒரே ஒரு மெல்லிய ஒளிக்கோடு மட்டும் அந்த கழுகுக் கண்ணில் விழும்படி திருப்பினேன். இப்படி ஏழு இரவுகள் ஒவ்வொரு இரவின் நடுநிசியிலும்!- ஆனால் நான் பார்த்த போதெல்லாம் கண் மூடியே இருந்தது. அதனால், காரியத்தை முடிக்க முடியவில்லை. காரணம், என்னைப் பதற அடித்தது அவனல்ல; அவனுடைய அந்தப் பாழாய்ப்போன கண்! ஒவ்வொருநாள் காலையிலும், நான் அவனுடைய அறைக்கு தைரியத்துடன் போனேன். அவனோடு தைரியத்துடன் பேசினேன். உள்ளந்தொடும் குரலில் அவனை அழைத்தேன். இரவை எப்படிக் கழித்தான் என்று கேட்டேன் அதனால், இரவு நடப்பதை அவன் அறிந்து சந்தேகிக்கிறானா என்பதையும் தெரிந்து கொண்டேன்.
எட்டாவது நாள் இரவு, வழக்கத்துக்கும் மேலாக அந்தக் கதவைத் திறப்பதில் முழு விழிப்புடன் நடந்து கொண்டேன். ஒரு கைக்கடியாரத்தின் நிமிஷ முள்ளையும்விட நான் மெதுவாக அசைந்தேன். அந்த இரவு வரையிலும் நான் என்னுடைய புத்திக் கூர்மையையும், என்னுடைய சக்தி மகத்துவத்தையும் உணரவில்லை. வெற்றி உணர்ச்சிகூட என்னில் அதிகம் இல்லை. என்னுடைய ரகசிய செயல்களையும், சிந்தனைகளையும் பற்றி, சொப்பனம்கூட காணாத அந்த மனிதனின் அறையை மெல்ல மெல்ல திறந்து நுழைந்து கொண்டிருந்தேன் என்பதை நினைத்தால் அந்த நினைப்பே என்னை நடுக்கியது. நான் வந்ததை அவன் கேட்டுவிட்டானோ? திடுக்கிட்டதுபோல், திடீரென அவன் படுக்கையை விட்டு எழுந்தான். இப்பொழுது நீங்கள், நான் பின் வாங்கினேன் என்று தானே எண்ணுகிறீர்கள். இல்லை, திருடர் பயத்துக்காக எல்லா ஜன்னல்களும் இறுக மூடிக்கிடந்த படியால், அந்த அறை ஒரே மையிருட்டாயிருந்தது. ஆதலால், அவன் என்னைக் கண்டு கொள்ள முடியாது என்ற தைரியத்துடன் கதவை மெதுவாகத் திறந்துகொண்டே இருந்தேன்.
என் தலை நுழைந்துவிட்டது. நுழைந்தவுடன், விளக்கைத் தூண்ட எண்ணினேன். என்னுடைய பெருவிரல் தவறிப்போய், தகரத்தில் பட்டுக் கிரீச்சிட்டது. அந்தக் கிழவன் துள்ளியெழுந்து உட்கார்ந்து கொண்டு சத்தமிட்டான்; ‘யாரங்கே?’
நான் அமைதியுடன் மௌனமானேன். ஒருமணி நேரம் உடம்பை ஒரு சிறிதும் அசைக்காமல் அப்படியே நின்றேன். அவனும் படுக்கையில் மீண்டும் படுத்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு இரவிலும், நான் செய்தது போலவே, மரணபீதியுடன் அவன் அப்படியே உட்கார்ந்து, காது கொடுத்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து, சிறு முனகல். அது சாவின் முனகல்தான் என்று எனக்குத் தெரியும். அது வேதனையின், சோகத்தின் முனகலல்ல. அந்தராத்மாவின் பதைப்பில் எழுந்த சிறு சப்தம். அந்த சப்தம் எனக்கு நன்றாகத் தெரியும். ஒவ்வொரு இரவிலும் நடுநிசியில், லோகமே தூங்கும் அந்த அர்த்த சாமத்தில், என் நெஞ்சைப் பிய்த்துப் பிடுங்கிய பயங்கரம் என் உள்ளத்தின் அடித்தலத்தில் எதிரொலித்து விம்மியதை நானே உணர்ந்திருக்கிறேன். நான் சொல்லுகிறேன், எனக்கு அது தெரியும். அந்த மனிதன் என்ன உணர்கிறான் என்று நான் அறிந்ததேன்; அனுதாபப்பட்டேன். படுக்கையில் புரண்டு படுக்கும்போது சப்தத்தைக் கேட்டதிலிருந்தே, அவன் விழிப்புடன்தான் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டேன். அவன் நெஞ்சாழத்தில் பயமும், பீதியும் பைசாசரூபம் எடுத்திருக்க வேண்டும். காரணமற்ற வெறும் பயம் என்று அவன் சாந்தி செய்யவும் முயன்றிருக்கிறான்; எனினும் முடியவில்லை. “புகைக் கூண்டில் அடிக்கும் காற்றுத்தான்!” “மூஞ்சுறுவா யிருக்கலாம்”, “பறந்து மோதிவிழும் வண்டாயிருக்கலாம்” என்றெல்லாம் அவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். ஆம். இந்த அனுமானங்களாலேயே, தன்னைச் சாந்தப் படுத்திக் கொள்ள முயன்றிருக்கிறான். எல்லாம் பிரயோஜனமற்று விட்டது. எல்லாம் வீண். மரணம் அவன் முன் கரிய நிழலாய் வனைந்து படர்ந்து கொண்டிருந்தது. அவன் உணர்ந்தாலும் உணராவிட்டாலும், சாவின் பயங்கரம் அவனுடைய உள்ளுணர்வைத் தட்டி உணர்வூட்டி யிருக்கவேண்டும்.
இத்தனை நேரமும் அசைவற்று நின்றபிறகு, அந்த மனிதன் இன்னும் படுக்கவில்லை என்று அறிந்தும், நான் அந்த விளக்கை மெதுவாக, மிகவும் மெதுவாகத் தூண்டத் தீர்மானிதேன். தூண்டினேன். சிலந்தியின் நூலிழைபோல ஒரு சிறு ஒளிரேகை மட்டும் அந்தக் கழுகுக் கண்ணில் விழும் அளவுக்கு விளக்கைப் பயந்து பயந்துப் பதனமாகத் தூண்டினேன்.
அந்தக் கண்! – அது அகலத் திறந்திருந்தது. அதைப் பார்த்ததுமே நான் நடுங்கினேன். அந்தக் கண்ணை நான் தீக்ஷண்ய வக்கிரத்துடன் பார்த்தேன். மங்கிய நீலத்தின் மேல் படர்ந்திருந்த அந்தப் பூ விழுந்த கண் என் எலும்புக் குருத்துக்களைச் சில்லிடச் செய்தது. அந்த மனிதனின் உடம்பையோ, முகத்தையோ என்னால் பார்க்க முடியவில்லை காரணம், அந்த ஒளிக்கீற்று அந்தப் பாழாய்போன கண்மீதே நேராகப் பாய்ந்தது!
‘புலனுணர்ச்சிகளின் அதீத தீக்ஷண்யந்தான் பைத்தியம்’ என்று நீங்கள் தப்பாக அர்த்தம் செய்து கொள்கிறீர்கள் என்று ஏற்கெனவே நான் சொல்லி யிருக்கிறேனே. இப்போது-பஞ்சில் பொதிந்துவைத்த கைக்கடிகாரத்தின் மங்கிய, ஆனால், படபடக்கும் துடிப்பைப்போல என் காதுகளில் ஒரு சப்தம் கேட்டது. அந்தச் சப்தம் எது என்றும் எனக்குத் தெரியும். அது அந்தக் கிழட்டு மனுஷனின் இருதயத் துடிப்பு. என்னைப் படபடக்கச் செய்தது. படை வீரனின் தைரியத்தைக் கிளப்பிவிடும் பறை யறையைப்போல.
அப்படியும் நான் அசையாது, நிலைகுலையாது நின்றேன். மூச்சுவிட்டதே அபூர்வந்தான். கையிலேந்திய விளக்கும் அசைய வில்லை. எவ்வளவு அமைதியுடன் அந்த ஒளிக்கீற்றை அந்தக் கண்ணின்மீதே பாய்ச்சிக் கொண்டிருக்க முடியும் என்று முயன்றேன். இந்த வேளையில், அந்த இருதயத்துடிப்பின் நாரச ஓசை மேலே மேலே ஆரோஹணித்துக் கொண்டிருந்தது. கணத்துக்குக்கணம் விரைவாகவும், மேலாகவும் அந்தச் சப்தம் எவ்விக் கொண்டிருந்தது. அந்தக் கிழவனின் பீதி உச்சநிலை அடைந்திருக்கவேண்டும். அந்த சப்தம் உயர்ந்தது. விநாடிக்கு விநாடி உயர்ந்தது! நான் சொல்வதைக் கவனிக்கிறீர்களா? நான் பீதியுற்றுப் போயிருக்கிறேன் என்று சொல்லவில்லையா? சுடுகாட்டு அமைதி குடிகொண்ட அந்த வீட்டில், ஓசையற்ற அந்த அர்த்தராத்திரியின் அந்ததாரத்தில், அந்த அபூர்வமான சப்தம் நெஞ்சில் அமுக்க முடியாத பீதியை கிளப்பி என்னைக் கிடுகிடுக்கச் செய்தது. எனினும் நான் அமைதியுடன் அசையாமல் நின்றேன். அந்தத் துடிப்பு உயர்ந்தது. இன்னும் உயர்ந்தது! நான் நினைத்தேன், அந்த இருதயம் அப்படியே வெடித்துப் போகட்டுமே என்று. அந்த சப்தம் இப்போது வளர்ந்து, அயலான் ஒருவன் கூட தீர்க்கமாகக் கேட்கும் அளவுக்கு மேலே எவ்வியது! அந்தக் கிழவனுக்கு காலன் நெருங்கிவிட்டான்! வந்து விட்டான்! ஓ வென்று அலறிக்கொண்டு, நான் விளக்கை முழுதும் தூண்டிவிட்டுக் கொண்டு அறையினுள் பாய்ந்தேன். அவன் நடுநடுங்கிக் கீச்சிட்டான். ஒரு தடவைதான். ஒரே கணத்தில், அவனைக் கட்டிலைவிட்டு இழுத்துப்போட்டு, கனத்த கட்டிலை அவன்மீது தள்ளினேன் அதுவரையிலும் செய்த செயலைக் கவனிக்க, லோசாகச் சிரித்தேன். ஆனாலும் பல நிமிஷங்கள் வரையிலும், அந்த இருதயத்துடிப்பு மங்கலாகக்கூடக் கேட்டது. எனினும் அது என்னை நிலைகுலையச் செய்யவில்லை. சுவரையும் கடந்து அந்த ஓசை செல்லாது. முடிவில், அது நின்றது நின்றே போயிற்று! அந்தக் கிழவன் இறந்துபோனான் நான் கட்டிலை விலக்கி, சவத்தைப் புரட்டினேன். கல்லைப்போல விறைத்துக் கட்டையாயிருந்தது. அந்த நெஞ்சின்மேல் கைவைத்து மூன்று நிமிஷங்களுக்குமேல் பார்த்தேன். துடிப்பே இல்லை. அவன் கல்லாய்ச் செத்துப்போனான். அவனுடைய கண் இனி என்னை உறுத்தாது; வருத்தாது.
இன்னும் நீங்கள் என்னை ஒரு பைத்தியந்தான் என்று நினைத்தால், அந்தச் சவத்தை மறைப்பதற்கு நான் எடுத்துக்கொண்ட பிரயாசையைத் தெரிந்தாலாவது, உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வீர்கள். இரவு கடந்து கொண்டிருந்தது. நான் அவசர அவசரமாக, எனினும் சந்தடியின்றி வேலைசெய்தேன். முதலில், அந்தப் பிணத்தைக் கண்டம் கண்டமாக வெட்டினேன். தலைவேறு, கைவேறு, கால்வேறாக.
பிறகு அந்த அறையில் கிடந்த மூன்று பலகைகளை எடுத்து அந்த முண்டத்தை உள்ளே போட்டு மூடினேன். எந்த மனிதக் கண்ணுக்கும், அவனுடைய கண்ணுக்கும் படாதவாறு சர்வ ஜாக்கிரதையாக மூடிப்பொதிந்தேன். கழுவுவதற்கு ஒன்றும் இல்லை. ஒரு கறையாவது, ரத்தத் துணியாவது இல்லை. காரணம், எல்லாம் ஒரு தொட்டியில் கொட்டியிருந்தது. அதையும் நானேதான் செய்தேன்.
இந்த வேலையெல்லாம் முடியும்போது மணி நாலு இருக்கும். எனினும் இருள் இருந்தது. நேரத்தைக் குறிப்பிட்ட மணிச் சத்தம் கேட்டது, தெருவாசற் கதவை யாரோ தட்டும் ஓசையும் கேட்டது. பழுவற்ற இதயத்தோடு கதவைத்திறக்க இறங்கினேன்-நான் எதற்கு அஞ்சவேண்டும்? உள்ளே மூவர் நுழைந்தனர். அவர்களாகவே தாங்கள் போலீஸ் உத்யோகஸ்தர்கள் என்று நிதானமாக அறிமுகப் படுத்திக் கொண்டனர். பக்கத்து வீட்டுக்காரனுக்கு நடுநிசியில் ஏதோ ஓசை கேட்டிருக்கிறது; ஏதோ விபரீதம் நடப்பதாக சம்சயம் எழுந்திருக்கிறது; விஷயம் போலீசுக்கு தாக்கலாயிருக்கிறது; அவர்கள் இடத்தைக் சோதித்துப் பார்க்கவேண்டும் என்று கிளம்பி வந்துவிட்டார்கள்- இவ்வளவுதான்.
நான் சிரித்தேன்-நான் எதற்காகப் பயப்படவேண்டும்? அவர்களை நான் வரவேற்றேன். நான் கண்டகெட்ட சொப்பனத்தால், நானே அப்படிச் சத்தமிட்டதாகச் சொன்னேன். அந்தக் கிழவன் ஊரில் இல்லை என்றும் சொன்னேன். சோதித்துப் பாருங்கள், நன்றாகச் சோதியுங்கள் என்று சொன்னேன். அவர்களை அந்தக் கிழவனுடைய அறைக்கே அழைத்துச் சென்றேன். அவனுடைய பொருள்கள் எல்லாம் அசங்காமல், நலுங்காமல் இருந்ததை யெல்லாம் காண்பித்தேன் என்னுடைய நம்பிக்கையினால் எழுந்த உத்ஸாகத்தோடு, அவர்களுக்கு ஆசனம் கொடுத்து களைப்பாரச் சொன்னேன். நானும் வெற்றிப் பெருமிதத்தின் களிப்போடு, அந்தச்சவம் கிடந்த இடத்திலேயே உட்கார்ந்துகொண்டேன்.
போலீஸார் திருப்தி அடைந்தனர். என் நடவடிக்கையால் அவர்களே திருப்தி அடைந்தனர். நானும் சாவகாசமாய் அமர்ந்தேன். நான் உத்ஸாகத்தோடு பதிலளிக்க அவர்கள் சாதாரண விஷயங்களைப் பற்றியே வம்பளந்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் நானோ, அவர்கள் போய் தொலைந்தால் தேவலையே என்று எண்ணினேன், நான் பதைபுறுவதாக உணர்ந்தேன். என் தலை கனத்து வலித்தது காதுக்குள் கிண்ணென்ற மாதிரி இருந்தது. அவர்களே இன்னும் இருந்து பேசினர். காதின் கிண்ணொலி அதிகமாயிருந்தது. அது ஸ்பஷ்டமாகவும் தெளிவாகவும் கேட்டது. என் உணர்ச்சியிலிருந்து தப்புவதற்காக நான் விரைவாகப் பேசினேன். எனினும் அது நிற்கவில்லை தொடர்ந்தது. கடைசியில் அந்தச்சப்தம் என் காதுக்குள்ளாகவே எழும் சத்தமல்ல என்று உணர்ந்தேன்.
நான் பயத்தால் ரொம்பவும் வெளுத்துப் போனேன். ஆனாலும் நான் விரைவாக, உச்சஸ்த்தாய்யில் பேசினேன். எனினும் அந்தச் சத்தமும் உயர்ந்தது. நான் என்ன செய்யட்டும்? அந்த சப்தம் பஞ்சில் பொதிந்து வைத்த கைக்கடியாரத்தைப் போல, மெல்லிய மங்கிய, ஆனால் படபடக்கும், விரைவான துடிப்பு! எனக்கு மூச்சு திணறியது; இன்னும் அந்த உத்தியோகஸ்த்தர்கள் இதைக் கேட்கவில்லை. நான் மிகவும் விரைவாகவும், தீவிரமாகவும் பேசினேன். ஆனால் அந்த ஓசையோ வளர்ந்தது; வளர்ந்து கொண்டே இருந்தது. நான் எழுந்து பேச்சில் அடிபடும் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, ரொம்பவும் உச்சக்குரலில் படபடப்புடன் பேசினேன். சத்தம் உயர்ந்து கொண்டே இருந்தது. அவர்கள் ஏன் போகமாட்டேன் என்கிறார்கள். நான் அறையில் குறுக்கும் நெடுக்குமாக, அந்த மனிதர்களின் பேச்சினால் படபடத்தது போல, நடந்தேன். எனினும் சத்தம் வளர்ந்து கொண்டே வந்தது! கடவுளே! நான் என்ன செய்யட்டும்? நான் புகைந்தேன்; அடித்துப் பேசினேன்; சத்தியம் செய்தேன்! நான் இருந்த நாற்காலியைத் தூக்கி, அந்தப் பலகைகளின் மீதே போட்டு அமர்ந்தேன், சத்தம் நிற்கவில்லை; உயர்ந்தது. மேலே, இன்னும் மேலே உயர்ந்தது! இன்னும் அந்தப்படுபாவி மனிதர்கள் நிதானம் குலையாமல் சிரித்துப் பேசினர். அவர்களும் அந்த சத்தத்தைக் கேட்காமலிருக்க முடியுமா? எல்லாம் வல்ல கடவுளே! – இல்லை இல்லை! அவர்கள் கேட்டார்கள்! அவர்கள் சந்தேகித்தார்கள்! அவர்கள் அறிந்து விட்டார்கள்! என்னுடைய பயப்பிராந்தியைக் கண்டு, ஏளனம்தான் செய்கிறார்கள்!- இதை நினைத்தேன், இப்படிச் சிந்தித்தேன்: இந்தப் பதைப்பைவிட, வேறு எந்த எழவுங்கூட நன்றாயிருக்கும்! இந்தப் படபடப்பைவிட வேறு எதையும்கூடத் தாங்கிக்கொள்ளலாம். ஆனால் இந்த மாய்மாலச் சிரிப்பை என்னால் தாங்கமுடியாது! அலறிச் சத்தமிட வேண்டும், இல்லை, சாகவேண்டும என்று உணர்ந்தேன். ஐயோ! மறுபடியும் அதே சப்தம்! எவ்வளவு பெரியதாய்க் கேட்கிறது? மேலே, மேலே, உயருகிறதே!
நான் கூவினேன்: “பாவிகளா?” என்னை சித்திரவதை செய்யாதீர்கள். நான் கொலையை ஒப்புக் கொள்கிறேன். அந்தப் பலகைக்குக் கடியில்! இங்கே! இங்கே! – அது அந்தப்பாவியின் இதயத்தின் பயங்கரத் துடிதுடிப்புத்தான்!”
– எட்கார் அலன்போ, தமிழில்: ரகுநாதன்.
– முல்லை – 9, முல்லை இலக்கியக் களஞ்சியம், 1946-1947இல் வெளிவந்த முல்லை இதழ்களின் முழுத் தொகுப்பு, பதிப்பும் தொகுப்பும்: முல்லை மு.பழநியப்பன், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, முல்லை பதிப்பகம், சென்னை.
![]() |
தமிழ்ப் படைப்பாளி தொ.மு.சிதம்பர ரகுநாதனின் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: • ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார். • ‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார்.…மேலும் படிக்க... |
