ஆம்பள சிங்கம்
பால்காரரை அந்தக் கணத்திலேயே கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டிருக்க வேண்டும் என்கிற வெறி செல்லத்துரைக்கு இன்னமும் இருந்தது.
பால் சொஸைட்டி வந்ததிலிருந்து களங்காடுகளில் கறவை வைத்திருக்கிற விவசாயிகளும் சரி, வீடுகளில் வளர்த்துகிறவர்களும் சரி, பெரும்பாலானவர்களும் சொஸைட்டியில்தான் பாலூற்றிக் கொண்டிருக்கிறார்கள். பால்காரர்களுக்குக் கொடுப்பதைக் காட்டிலும் சொஸைட்டிக்குக் கொடுத்தால் பாலின் அடர்த்தி மற்றும் கொழுப்புச் சத்துக்குத் தகுந்தாற் போல கூடுதல் விலை கிடைக்கும். தவிர மாட்டு லோன், மானியத்தில் தீவனம், ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட பலாபலன்களும் உண்டு. அதனால் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்து உறுப்பினர்கள் அனைவரும் காலை, மாலை இரு வேளையும் பால் கறந்து, இரு சக்கர வாகனங்களிலோ, நடந்தோ வந்து சொஸைட்டியில் பால் ஊற்றிப் போவார்கள். வாகன வசதி இல்லாமல், இரண்டு – மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ளவர்கள் மட்டுமே இன்னமும் பழையபடி பால்காரர்களுக்கு பாலூற்றிக்கொண்டிருப்பார்கள். பால்காரர்கள் அப்படி தோட்டம் தோட்டமாக சேகரிப்பதில் குறிப்பிட்ட அளவு சொஸைட்டியில் ஊற்றிவிட்டு, தங்களின் வாடிக்கை வீடுகள் மற்றும் டீக்கடைகளுக்கும் விநியோகித்து கூடுதல் லாபமடைவார்கள்.

செல்லத்துரை தோட்டத்திலிருந்து அவனே சொஸைட்டிக்குப் பால் கொண்டு போகலாம்தான். அவனுக்கு பைக்கும் இருக்கிறது. பொளுதோட போவதில் சிரமம் ஒன்றும் இல்லை. வெடியால ஆறு மணிக்குள் போக வேண்டும் என்பதில்தான் சிக்கல். ஏழு மணிக்கு முன்னால் எக்காரணம் கொண்டும் எழாதவன் அவன். அதனால்தான் எவ்வளவு லாபம் குறைந்தாலும் சரி, இதர பலாபலன்கள் கிடைக்காமல் போனாலும் சரி, பால்காரருக்கே ஊற்றுவது இவர்களின் வழக்கமாக இருந்தது.
பால்காரர் வேலுச்சாமி வைகறைப் பொழுதில் ஐந்து – ஐந்தே கால் மணிக்கு வருவார். அதனால் அம்மா நாலரைக்கே எழுந்து கறவைகளைக் கறந்து வைத்திருப்பாள். அவள் எழுவதோ, பால் கறப்பதோ, பாலூற்றிவிட்டு வந்த பிறகு வாசல் கூட்டி சாணி தெளித்து அடுப்படிக் காரியங்கள் பார்ப்பதோ இவனுக்குத் தெரியாது. பால்காரரின் எக்ஸெல் வருகையோ, நாய்க் குரைப்போ, எக்ஸெல் திரும்பிச் செல்வதோ கேட்கவும் செய்யாது. இரவில் படுத்தால் காலை ஏழு மணி வரை பிணம் மாதிரி தூங்குவான். வானமே இடிந்து விழுகிறாற் போல இடி இடித்து, விடிய விடிய அடை மழை கொட்டியிருந்தாலும், வெடிஞ்செந்திரிச்ச பிறப்பாடுதான் வெளியே ஈரம் பார்த்து, ராத்திரி மழை பெய்ததா என்று ஆச்சரியத்துடன் அம்மாவிடம் கேட்பான். அந்த அளவுக்கு கும்பகர்ணன் அவதாரம்.
திருப்பள்ளியெழுச்சியும் அவ்வளவு சுலபத்தில் நடவாது. ஏழு மணி முதல் அம்மா அலாரமடித்துக்கொண்டேயிருப்பாள். “மணி ஏளாச்சு சாமீ,…எந்திரீடா தங்கோம்…” எனத் தொடங்கும் அவளின் சுப்ரபாதம், “மணி ஏள்ரையாச்சு. அரை மணிக்கூரா எளுப்பீட்டே இரக்கறன்,… எந்திரிக்கற பாட்டக் காணம். வலசப் பையன் இப்புடி பொச்சுல வெயிலடிக்க முட்டும் தூங்குனா பொளப்பு என்னத்துக்காகறது? குடியானவப் பையன் கும்பகருணனாட்டத் தூங்குனா பண்ணையத்துக்குப் படல் சாத்தீர வேண்டீதுதேன்” என எகனை மொகனையோடு ‘ராமயாணம்’ படிப்பதாக நீளும். ஒல்லு (உரல்) வைத்து இடிக்காத குறையாக உருட்டிப் புரட்டி உலுக்கினால்தான் அவனிடமிருந்து முனகலும் சலனங்களும் வெளிப்படும். அப்பவும், “காப்பி கொண்டுட்டு வா முத்துலச்சுமி” என்றுவிட்டு புரண்டுகொள்வான். அம்மாவிடம் பாசம் மிகும்போது அவளைப் பேர் சொல்லி அழைப்பது அவனது வழக்கம். அவளுக்கும் அதில் ஒரு பூரிப்பு. இருந்தாலும், “ம்க் – க்ம்! என்னுமோ இவன்தான் எனக்கு சோறூட்டிப் பேரு வெச்சவனாட்ட” என நொடித்துக்கொண்டு, “எந்திரிச்சு இந்தக் காப்பியக் குடி” என்று தலைமாட்டில் வைத்துவிட்டுப் போவாள். அவனோ புரண்டு குப்புறப் படுத்துக்கொண்டு தலைகாணிக்கப்பால் டம்ளரைக் கவ்விக் குடித்துவிட்டுத்தான் எழுவான்.
செல்லத்துரைக்கு தோட்டத்து வேலைகளோடு வெளி வேலைகளும் இருக்கும். அம்மா வீட்டு வேலைகள் தவிர்த்து முழு நேரமும் தோட்டத்துப் பணிகளிலேயே ஈடுபட்டிருப்பாள். காலையில் நாலரை மணிக்கு பால் கறக்க எழுந்தால் இரவு பத்து மணிக்கு உறங்கும் வரை அவளுக்கு ஓய்வு ஒழிச்சல் இல்லை. ராத்திரி சீரியல் பார்க்கிற நேரங்களில் கூட விதைக் கள்ளக்காய் தொலிப்பது, கொப்பரைத் தேங்காய் தோண்டுவது, மறுநாள் மண்டிக் கெடுவுக்கு, அன்று எடுத்த தத்தாளிக்கா – கத்திரிக்கா, வெண்டிக்கா – தண்டம்பயிறுகளில் அழுகல், சொத்தை, முற்றல் நீக்கி கூடை, பெட்டிகளில் அடுக்குவது என்று ஏதேனும் கை வேலையாகவே இருப்பாள்.
பண்ணைய நிர்வாகம், வரவு செலவு முழுக்க அவள் பொறுப்பே. அதனால் பால் கணக்கும் அவளிடமே.
பால்காரர் வேலுச்சாமி சரிவர பணம் கொடுக்காமல் இழுத்தடிப்பவர். ஆறேழு மாதம் பாக்கியாகிவிட்டது என்று நேற்று சாயங்காலம் பாலூற்றும்போது கூட அம்மா விசாரித்திருந்தாள்.
“ஏனுங் கவுண்ட்ச்சி,… பால் பணத்த வாங்கித்தான் நீங்க கூப்பனரிசி (ரேஷனரிசி) வாங்கப் போறீங்களாக்கு?” என்றார் பால்காரர்.
“இதே,… இந்த விண்ணாடமெல்லாம் என்றகட்ட வேண்டாம். கூப்பனரிசி வாங்கறதா இருந்தாத்தான் ஊத்துன பாலுக்கு பணம் குடுப்பீங்களாக்கு? அதைய உட்டா எங்குளுக்கு வேற செலவே இல்லியா? கடை கண்ணீகொ, சொஸைட்டீலயெல்லாம் சும்மாவா சாமானஞ் சட்டு குடக்கறாங்கொ? பண்ணையத்தாளுகொ, கூலியாளுகல்லாம் சும்மாவா வந்து வேலை செஸ்ஸராங்கொ? வெசாளக் கௌமையோட ஆறு மாசக் கணக்காச்சு. அன்னையோட பாக்கியெல்லாத்தையும் செட்டில் பண்ணீருங், ஆம்மா…”
அம்மா கறாராகச் சொன்னபோதும், “பாக்கி நின்னாத்தானுங் கவுண்ட்ச்சி நம்மளைய மறக்காம இருப்பீங்கொ. அந்தக் கடங்காரன் பாரு உன்னீம் பணம் குடுக்குல, உன்னீம் பணங் குடுக்குலீன்னு எந்நேரமும் நெனைச்சுட்டே இருப்பீங்கல்லொ” என்றே சொல்லியிருந்தார்.
அவர் போன பிறகு, “ஏம்மா பாலையுங் குடுத்துட்டு எப்பப் பாத்தாலும் அந்தாளுகட்ட பணத்துக்கு ஓரியாடீட்டு? பேசாம பால்காரன மாத்திக்க வேண்டீதுதானொ?” என்று கேட்டான் இவன்.
“ம்க் – க்ம்! எல்லாப் பால்காரனுகளும் இந்த மாறத்தான் இரப்பானுகொ. நாமதான் நச்சரிச்சு வாங்கிக்கோணும். வேற என்னத்தப் பண்றது?” என்றிருந்தாள் அம்மா.
பொதுவாக தூங்கும் முன்பு சிறுநீர் கழித்துவிட்டுப் படுத்தாலும் பலருக்கு நள்ளிரவிலோ வைகறைப் பொழுதிலோ அதற்கு உந்துதல் ஏற்பட்டு உறக்கம் கலையும். சாதாரணமாக செல்லத்துரைக்கு இந்த இயற்கை உந்துதலும் கிடையாது. மிக அரிதாக எப்போதாவது மட்டும்தான்.
இன்றைக்கும் வைகறையில் அப்படி எழுந்து வெளிவந்தபோது வாசலில் பால்காரரின் எக்ஸெல் நின்றுகொண்டிருந்தது. அவரைக் காணோம். அம்மா இன்னும் பால் கறந்து முடியவில்லை போலும். பால்காரர் நேரமே வந்துவிட்டாலும், அம்மா கறவைகளைக் கறந்து முடித்திருக்கவில்லை என்றாலும், அவரும் அவளுக்கு பால் கறப்பில் ஒத்தாசை செய்வார். இப்போதும் அப்படித்தான் இருக்கும் என எண்ணியவாறே தட்டுப்போருக்கு அருகே சிறுநீர் கழித்துவிட்டுத் திரும்புகையில் மாட்டுச்சாளையிலிருந்து அம்மாவின் அனத்தல்கள் கேட்டன. அம்மாவுக்கு என்னாயிற்று? பாய்ச்சல் காளை கீது கட்டறுத்துக்கொண்டு அவளை முட்டித் தள்ளிவிட்டதோ என வெம்பறத்து விரைந்தான்.
மின் விளக்கு எரிந்துகொண்டிருக்கும் மாட்டுச்சாளையின் முன் பகுதியிலேயே, அலுமினியக் கேனில் கறந்த பால், நுரை பொங்க வைக்கப்பட்டிருந்தது. கட்டுத்தாரையில் கறவைகளும் காளை கன்றுகளும் அமைதியாக தீவனத் துணுக்குகளைக் கரம்பிக்கொண்டிருந்தன. உபயோகமற்ற பழைய சவாரி வண்டிக்கும் இவனது பைக்குக்கும் இடையே கண்ட காட்சியால் மின்னதிர்ச்சிக்குள்ளானவனாக உறைந்து நின்றுவிட்டான்.
உரச் சாக்கு விரிப்பில் அம்மாவும் பால்காரரும்…
ஒரு கணம் என்ன செய்வது, ஏது செய்வது என்று புரியாமல் தடுமாறிப் பின்னகர்ந்தபோது அவனது காலிடறி பால் கேன் சரிந்து மண் தரையில் கொட்டியது. அதன் சத்தத்தில் துணுக்குற்றுத் திரும்பிப் பார்த்த பால்காரரும் அம்மாவும் இவனைக் கண்டு பதறி விடுவித்துக்கொள்ள, சட்டென்று முகம் திருப்பி வீட்டுக்குள் விரைந்தான்.
எப்போது எக்ஸெல் கிளம்பியது என்று செல்லத்துரைக்குத் தெரியாது. அம்மா எங்கு போனாள், என்ன செய்தாள் என்பதிலும் அவன் கவனம் கொள்ளவில்லை. படுக்கையில் அமர்ந்தபடி பிரமத்தி பிடித்தவனாக இருளை வெறித்துக்கொண்டிருந்தான்.
வெளியே விடிந்து, விடியலின் இளநீல வெளிச்சம் அறைக்குள்ளும் ஊடுருவியது. அடுப்படியில் அரவங்கள் கேட்டன. அவன் அனங்கவில்லை. ஏழு மணி வாக்கில் எப்போதும் போல வந்த அம்மா காப்பி டம்ளரை மௌனமாக அவனருகே வைத்தாள். தலைக்குத் தண்ணி வாத்திருப்பது தெரிந்தது.
“தொண்டுக் …….. முண்டை! உன்ற காப்பியும் வேண்டாம், மயிரும் வேண்டாம். மூடீட்டு அதைய எடுத்துட்டுப் போயிரு.” அவனுக்குள்ளிருந்து ஆவேசமாகப் பாய்ந்த குரல் அவனுக்கே அந்நியமாகவும், அச்சுறுத்துவதாகவும் இருந்தது.
அம்மா கூனிக் குறுகியபடி டம்ளரை எடுத்துக்கொண்டு மறைந்தாள்.
எட்டு மணி வாக்கில் கதவுக்கு வெளியேயிருந்து அவளது குரல், “புட்டு (இட்லி) ரெண்டு அடசல் உனக்கு மட்லும் சுட்டு வெச்சிருக்கறன். வேண்ணா எடுத்துப் போட்டு உண்டுக்கொ. நாம் பாரு பொம்பளையாளுக கூட வெண்டிக்கா பொறிக்கறக்குப் போறன்” எனத் தீனமாக ஒலித்து நகர்ந்தது.
அவளைப் போலவே அவனும் சாப்பிடவில்லை. அவள் தோட்டத்தில் இருப்பதால் அங்கும் போகவில்லை. பிற்பகல் வரை வீட்டிலேயே முடங்கிக் கிடந்தவனுக்கு மண்டைக் கொதிப்பில் பைத்தியமே பிடித்துவிடுகிற மாதிரி இருந்தது. நான்கு மணி வாக்கில் பைக்கை எடுத்துக்கொண்டு அங்குராசுவைப் பார்க்கக் கிளம்பினான்.
சுற்றி வளைத்த சொந்தம் என்றாலும் நெருங்கிய பழக்கமுள்ளவர் அவர். இறந்துபோன இவனது ஐயன் மீது மிகுந்த அபிமானம் கொண்டவரும் கூட. இவனைப் போலவே ஒல்லிப்பிச்சானாக இருந்தாலும் நெஞ்சூக்கமுள்ள முரடர். ஊருக்குள் அவ்வப்போது அடிதடி, ரகளைகளிலும் ஈடுபடுகிறவர்.
நேந்தரம் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்த அவருக்கு இவனது கருவளிந்த முகமே ஏதோ அசம்பாவிதம் என்பதை உணர்த்திவிட்டது. “என்றா மாப்ள,… ஏதாவது பிரச்சனையா?” என்று விசாரித்தார். சொல்லவும் முடியாத, சொல்லாதிருக்கவும் முடியாத அவஸ்தையோடு நடந்த சம்பவத்தைத் தெரிவித்தவன், “அந்தத் ……..ய அப்பவே கண்டந்துண்டமா வெட்டிக் கொன்னிருக்கோணுங் மாம்சு. செய்யாம உட்டுட்டேன்” என்றான் குற்ற உணர்ச்சியோடு.
“இப்பச் சொல்லி என்றா மாப்ள பிரயோசனம். அப்பவே நீயி அதையப் பண்ணியிருக்கோணும்” என்ற அங்குராசு, “ங்கொய்யன் இருந்திருந்தாருன்னா உன்னையாட்ட கண்ணுல பாத்திருக்கக் கூட வேண்டாம்; காதுல கேட்டிருந்தாலே வேலான மட்டுமல்லொ, ங்கொம்மாளையும் அந்த எடத்துலயே வெட்டிக் கொன்னுபோட்டு, ரெண்டு தலைகளையும் அருவாளையும் கொண்டுட்டு, வெடியறக்கு மிந்தி கொளிஞ்சாம்பாற டேசன்ல போயி சரண்டராயிருப்பாரு” என்றும் சொன்னார்.
ஐயன் அதைச் செய்யக் கூடியவர்தான். பங்காளி சண்டையில் இவனது பெரியப்பாவின் மண்டையை மும்முட்டிப் புடியால் அடித்து உடைத்து, மம்முட்டிக் கவுண்டர் என்று பேரானவர். “அந்த வழக்கில் ஜெயிலும் கோர்ட்டும் அனுபவப்பட்டவர். ஆனால், அவர் இருந்திருந்தால் அம்மாவுக்கு இந்த கள்ளத் தொடர்பு ஏற்பட்டிராது. அதற்கான சந்தர்ப்பங்களும் வாய்த்திராது. ஐயன் இருந்தவரை அவரே பால் கறந்து, அவரே ட்டீவீயெஸ்ஸில் சொஸைட்டிக்குக் கொண்டுபோய் ஊற்றிக்கொண்டுமிருந்தார். அவர் இறந்த பிறகுதான் அம்மா பால் கறப்பதும், பால்காரருக்குப் பாலூற்றுவதும் வழக்கத்துக்கு வந்தது.
ஐயன் இருந்திருந்து, இது போல் நிகழ்ந்திருந்தால், கணவரென்ற முறையில் தன் ஆண்மைக்கு நேர்ந்த இழுக்கை அவளையும் கொல்வதின் மூலம் துடைத்துக்கொண்டிருந்திருப்பார் என்பது நிச்சயம். அது நியாயமும் கூட. ஆனால், செல்லத்துரைக்கு பால்காரரைக் கொல்ல வேண்டுமென்று தோன்றியதேயல்லாமல் அம்மாவைக் கொல்ல வேண்டும் என்று தோன்றியிருக்கவில்லை.
அங்குராசு மடையை மாற்றிவிட்டு, “செரி, உட்றா மாப்ள. நீ அதையச் செய்யோணும்னு நாஞ் சொல்லுல. ங்கொய்யனிருந்தா அதையப் பண்ணியிருப்பாருன்னுதான் சொல்றன். அவுரு வேற, நீ வேற. அவுரு முன்னயும் பின்னியும் யோசிக்காம மசை வாக்குல மம்முட்டிப் புடியத் தூக்கறவரு. நீ அப்புடியில்ல. எதையும் நெதானமா யோசிச்சு செய்யறவன். அந்நேரத்துல ஆத்தரப்பட்டு பால்காரனை வெட்டாம இருந்தயே,… அதே பெரிய காரியம். அப்புடிக் கீது பண்ணியிருந்தா, வாள வேண்டிய வயிசுல நீ ஜெயிலுக்குப் போறது ஒரு பக்கமிருக்கொ,… ‘அம்மாவின் கள்ளக் காதலன் வெட்டிக் கொலை; விவசாயி மகன் கைது’ன்னு நாளைக்குப் பேப்பர்ல வந்து, குடும்ப மானம் ஸ்டேட்டே சிரிக்கும். அதுக்கப்புறம் ங்கொம்மாவும் வெளிய தலை காட்ட முடியாம, தென்னை மரத்து மாத்தரைய முளுங்கியோ, பூச்சி மருந்து குடிச்சோ சாகத்தான் வேணும். நீயும் அனாதையா ஆயிருவெ. ஜெயில்லிருந்து வந்தவிட்டு, சோரம் போயிச் செத்தவளோட மகனங்கற அவமானத்தோட வாளவும் முடியாது. ஊருல ஆரும் உனக்கு பொண்ணும் குடக்க மாண்டாங்கொ. அஞ்சு காசுக்குப் போன மானம் அம்பது பவுன் குடத்தாலும் வராது மாப்ள…” என்றார்.
மத்தியானம் முடிய அதையெல்லாம் யோசித்து யோசித்துத்தான் இவனுக்கு மண்டைக் கொதிப்பே ஏற்பட்டிருந்தது. இப்போது அங்குராசுவே இப்படிச் சொல்லவும், பால்காரரை வெட்டிக் கொல்லத் தவறிய குற்ற உணர்ச்சியிலிருந்து சற்றே ஆசுவாசம். “ஆனாட்டியும் அவன கையுங் காலயுமாச்சு ஒடிச்சுடோணுங் மாம்சு. அப்பத்தான் என்ற ஆத்தரம் அடங்கும்” என்று பல்லைக் கடித்து முஷ்டியை முறுக்கினான்.
“அது வேண்ணா செஞ்சு போடலான்டா மாப்ள. நாலு தட்டு தட்டியுட்டாத்தான் நாளையும் பின்னியும் அவன் அந்தப் பக்கம் தலை வெச்சுப் படுக்க மாண்டான். அதுங்கூடப் பண்ணுலீன்னா அப்பறம் நாமெல்லாம் ஆம்பளைக, கவண்டனுகன்னு சொல்லீட்டு மீசைய வெச்சுட்டுத் திரியறக்கு என்ன அருத்தம்?”
இரணிய வேளை. பால்காரர் வேலுச்சாமி சொஸைட்டியில் பாலூற்றிவிட்டுத் திரும்பும் இட்டேறி முக்கில் தமது பைக்குகளை நிறுத்தியபடி செல்லத்துரையும் அங்குராசுவும் காத்திருந்தனர். ஹெட் லைட்டைப் போட்டுக்கொண்டு வந்த பால்காரர், இவர்கள் கை காட்டியதுமே நிறுத்திவிட்டார்.
“ஏன்டா, ……..த் …….! உனக்கென்றா ………. அத்தனை நீளமா? கவுண்ரு ஊட்லயே கை வெக்கறயா?” என்றபடி அங்குராசு நரசிம்மாவேசமாகப் பாய்ந்து முகம், நெஞ்சு, வயிறு என கண்ணு மண்ணு பாராமல் சரமாரியாகத் தாக்கினார். பால்காரர் நிலைகுலைந்து பிடியை விட, எக்ஸெல் விழுந்து பக்கவாட்டில் கட்டியிருந்த காலிக் கேன்கள் நசுங்கின. இடது கை மடக்கித் தற்காத்துக்கொண்டிருந்தவர், வலது கை சுட்டு விரல் உயர்த்தி, “இதப் பாரு ராசு,… இது உனக்கு சம்மந்தமில்லாத சமாச்சாரம். உம் பொண்டாட்டி கூடவோ, உங்கம்மா கூடவோ நாம் படுக்குல. அதனால நீ இதுல தலையுடாத. இன்னி மேலு ஒரு அடி உளுந்துதுன்னா நடக்கறதே வேற” என்று எச்சரித்தார். அங்குராசுவும் ஓங்கிய கையை இறக்கி விலகிவிட்டார்.
அதற்குப் பிறகே செல்லத்துரை களத்தில் இறங்கினான். பால்காரரை அந்த வைகறைக் கணத்திலேயே கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டிருக்க வேண்டும் என்கிற வெறி அவனுக்குள் இன்னமும் இருந்தது. அந்த வெறியனைத்தையும் திரட்டி, ஆங்காரத்தோடும் ஆற்றாமையோடும் பாய்ந்து, அவரது பகுட்டிலும் மூக்கிலுமாக மாறி மாறிக் குத்தினான். பால்காரருக்கு சிறுமூக்கு உடைந்து இடது நாசித் துவாரத்திலிருந்து ரத்தம் வடிந்தது. எனினும் அவர் சலனமற்று கையைக் கட்டிக்கொண்டு நின்றார்.
அவரது அமைதியும் உறுதியும் எதிர்ப்பின்மையும் அவனை வெகுவாகத் தளர்த்தின. பலவீனமாக முஷ்டியை மடக்கி மீண்டும் அவரது முகத்தில் குத்தப் போனவன் இமைக்காமல் அவனது கண்களையே துளைத்துக்கொண்டிருக்கும் அவரது கூரிய பார்வையால் நிலைகுலைந்து கையை இறக்கிக்கொண்டான்.
கட்டியிருந்த கைகளை விடுவித்துக்கொண்ட பால்காரர், மூக்கில் ஒழுகியிருந்த குருதித் தாரையைத் துடைத்துக்கொண்டு, “எம் மேலயும் தப்பிருக்குதுங்கறதுனால நீ அடிச்சத வாங்கீட்டன் செல்லத்தொரை. ஆனாட்டி நான் உன்னைய ஒரே ஒரு கேள்வி கேட்டாப் போதும்; நீ தாங்க மாட்ட. ஊட்டுக்குப் போயி உங்கொம்மாளக் கேளு” என்றுவிட்டு, விழுந்துகிடந்த எக்ஸெல்லை நிமிர்த்தி, நசுங்கிய காலிக் கேன்களுடன் கிளம்பிவிட்டார்.
“…….. மகன் என்ன பேச்சுப் பேசீட்டுப் போறான் பாருங் மாம்சு. எல்லாம் அந்தத் தொண்டு முண்டைனால வந்தது. நீங்க சொன்னாப்புடி மொதல்ல அவள வெட்டியிருக்கோணும். வெச்சிருக்கறன் அவளுக்கு” என்றபடி கோபாவேசத்தோடு கிக்கரை உதைத்து, மூன்றாவது கியரை முடுக்கி, எக்ஸலேட்டரை முறுக்கினான்.
“டேய்,… மாப்ள…! இர்றா…! அப்புடிக் கிப்புடி ஏதும் அவசரப்பட்டு பண்ணீராதறா…” என்றபடியே அங்குராசுவும் அவரது பைக்கில் பின்தொடர்ந்தார்.
இரு சக்கர வாகனங்கள் எத்தனை வந்தாலும் இவனது பைக்கின் சத்தத்தைத் தனித்துத் தெரிந்துவிடுகிற நாய், களத்தை நெருங்கும் முன்பே மண் பாதைக்கு வந்து நின்று வரவேற்று, கூடவே பாய்ந்தோடி வந்து, வாசலில் கொனிந்து நின்று, வண்டியை நிறுத்தியதும் இவன் மீது தொத்துக்கால் போட்டது. “போ நாயே அக்கட்டால” என்று அதை ஓங்கி உதைத்தான். அது ‘கை… கை…’ என்று கத்திக்கொண்டே அப்பால் விலகியோடி, எஜமானன் ஏன் தன்னை உதைத்தான் என்பது புரியாமல் முழித்துக்கொண்டு நின்றது. அங்குராசுவும் பைக்கை நிறுத்திவிட்டு அவனைத் தொடர்ந்து வீட்டுக்குள் வந்தார்.
அம்மா சமையல் செய்யாமல், ட்டீவியும் பார்க்காமல், வருத்த முகத்தோடு அன்று எடுத்த வெண்டிக்காயை ஆய்ந்து தரம் பிரித்துக்கொண்டிருந்தாள். இவர்களை ஏறிட்டுப் பார்த்தவள், “வா,… ராசு” என்று அவரிடம் ஒரு வார்த்தை சொன்னதோடு மீண்டும் தலை கவிழ்ந்து வேலையைத் தொடரலானாள். வரும் வழியில் அங்குராசு அம்மாவிடம் நான் பேசிக் கொள்கிறேன், நீ எதுவும் பேசவோ செய்யவோ வேண்டாம் என்று சொல்லியிருந்ததால் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு செல்லத்துரை நாற்காலியில் அமர்ந்தான். அருகிலேயே அங்குராசுவும்.
“பால்கார்ரு பொளுதோட பாலு எடுத்துட்டு அதுக்குஞ் சேத்தி பாக்கிப் பணம் மொத்தத்தையும் குடுத்துட்டாரு. இன்னிமேலு அவுரு வர மாண்டாரு. ‘வேற பால்காரனுகளயும் வெக்க வேண்டாமுங் கவுண்ட்சீ…! செல்லத்தொரைக்கு மறுக்காவும் சம்சியமாவே இருக்கும். பேசாம இன்ன மேலு அவனையே சிரமம் பாக்காம எந்திரிச்சு சொஸைட்டிக்குப் பாலு கொண்டுட்டு வரச் சொல்லுங்கோ’ன்னுட்டுப் போனாரு” என்றாள் அம்மா, இவனது முகம் பார்க்காமல்.
“அந்த்த் தெல்லவாரி நாயி என்ன எனக்கு ஆடரு போடறது? இல்லாட்டியும் நானு அதையத்தான் பண்ணப் போறன். அது வேற விசியம். இப்ப அவன இட்டேறில மடக்கி, மூக்குல நத்தம் கொட்ட முதிச்சுட்டுத்தான் வாறம். அவன் என்ன கேள்வி கேக்கறான் தெரியுமா…? நீ எடங்குடக்கங்காட்டித்தானொ அவன் வர்றான்? தொண்டுக் …….. முண்டை! உனக்கென்னுடீ அப்புடியொரு ………… மோளம்?” என்றபடியே வெகுண்டெழுந்து, லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு, காலைத் தூக்கி அவளை மிதிக்கப் போனான். அங்குராசு இழுத்துப் பிடித்து நிறுத்திவிட்டார்.
“முதீடா… முதி. ஆம்பள சிங்கங்க அதத்தான பண்ணுவீங்கொ. இல்லாட்டி வெட்டுவீங்கொ, கொல்லுவீங்கொ. வேற என்ன தெரியும்
உங்குளுக்கு? நானென்னொ புருசனிருக்கீலயே மோளமெடுத்து கண்டவனுக கூடயும் போனனா? அவுரு செத்து இத்தனை வருசமாச்சு. எத்தனை காலத்திக்குத்தான் நடு ராத்திரீல எந்திரிச்சுப் போயி தலைக்குத் தண்ணியூத்தீட்டு வந்து படுக்கறது? நானும்மு ஒரு மனுசிதானொ. எனக்குன்னா உணர்ச்சி இரகாதா? இதுக்கு வேண்டி, கலியாண வயிசுல உன்னையும் வெச்சுட்டு, இந்த வயிசுல நானு ரெண்டாங் கலியாணமா மூய்க்க முடியும்?” என்றாள் அம்மா.
செல்லத்துரை துவண்டு பின்வாங்கினான். அம்மா கேட்க வேண்டிய கேள்விகள் இன்னமும் எவ்வளவோ பாக்கியிருக்கின்றன என்று பட்டது அவனுக்கு.
குறிப்பு:
இக்கதை, ‘வேலந்தாவளம் உங்களை வரவேற்கிறது’ என்ற தலைப்பிலான எனது சிறுகதைத் தொகுப்பில் (2016, பழனியப்பா ப்ரதர்ஸ் வெளியீடு) வெளியானது. இங்கு இடம்பெற்றிருப்பது, அந்த மூலப் பிரதியின் செப்பனிடப்பட்ட (2022 ஜனவரி) வடிவம். வாசகர்கள் இதையே இறுதிப் பாடமாகக் கொள்ளவும்.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |