ஆப்பிள் பசி





(1988ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27
அத்தியாயம்-22
“அவன் கண்ணிலே நன்னா பட்டயோ இல்லையோ?” என்று கவலையோடு கேட்டாள் கோமளம்.
“என்னை நல்லாப் பார்த்துட்டார். கையை ஆட்டினாரே!”
“கையை ஆட்டினானா?”
”ம். சன்னலுக்கு வெளியே கை நீட்டி ரொம்ப நேரம் ஆட்டினார்.”
“போடி அசடு ! நீ கொஞ்சம் சீக்கிரம் போயிருக்க வேண்டாமோ!”
பாப்பா கவலை தோய்ந்த முகத்துடன் சாமண்ணாவின் நினைவில் லயித்தவளாய் ஊஞ்சலில் உட்கார்ந்தாள்.
“நான் என்ன செய்வேன் மாமி! அப்பாவுக்குத் தெரியாமல் இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டியிருந்தது.”
“அவர் கோபம் தணியலையா?”

“இன்னும் இல்லை! நாடகக்காரன் சகவாசமே வச்சுக்காதேன்னு தீர்மானமாச் சொல்லிட்டார். அப்படியிருக்கும் போது, அப்பா முன்னாலே எப்படி நான் வெளியே புறப்பட முடியும்? அதனால் அவர் வெளியில் போற வரை காத்திருந்தேன். அப்புறம்தான் குதிரை வண்டியைப் பிடிச்சு…. ஒரே வேகமா ஸ்டேஷனுக்குப் போனேன். இறங்கி டிக்கெட்வாங்கிட்டுப் போய்ப் பார்க்கிறேன். ரயில் நகர்ந்துக்கிட்டிருக்கு! மனசெல்லாம் கிடந்து தவிச்சுது. அடடா! ஏமாந்துட்டேனேன்னு நினைச்சேன்.”
“அவனை வழி அனுப்ப யாராவது வந்தாங்களா?”
“யாரும் வந்ததாத் தெரியலை.”
“சிங்காரப் பொட்டு..?”
“அவர் வீட்டுக்கே போய் வழி அனுப்பிச்சுட்டார்னு அப் புறம்தான் தெரிஞ்சுது. ஸ்டேஷனுக்கு யாருமே. வரல்லே.”
“தெரியும் பாப்பா. அப்படித்தான் நடக்கும்னு எனக்குத் தெரியும். யாருக்கும் அவன் கல்கத்தா போறதில் இஷ்டமில்லை.”
“அது என்னவோ! நான் முதல் வகுப்பைத் தேடிக் கண்டு பிடிச்சு, கையைத் தூக்கிக் காண்பிச்சு அதை நோக்கி ஓடறதுக்குள்ளே. ரயில் ரொம்ப தூரம் போயிருச்சு, அது அவர்தான்னு புரிஞ்சுக்கிட்டேன். ஏன்னா பெட்டி வாசல்லையே நின்னார். அந்தச் சால்வையைப் போர்த்திக் கொண்டு.”
கோமளம் துணுக்குற்றாள்.
“சகுந்தலா போர்த்தின சால்வையா?”
“ஆமாம்! அதேதான். அந்த நீலக் கலர் சால்வையேதான். நல்லாத் தெரிஞ்சுதே!” என்று துக்கம் தொண்டையை அடைக்கக் கூறினாள் பாப்பா!
“அதனாலென்ன! அவன்கிட்டே வேறே சால்வை இருந்திருக்காது. இப்போதானே அவனும் நாலு பேர் பார்க்கும் படியா மனுஷனாயிருக்கான். பாப்பா! எனக்கு என்னவோ ஒரே சந்தோஷமா இருக்கு! உன்னைப் பார்த்துட்டுக் கையை ஆட்டினான் பாரு!”
“அது சரிதான் மாமி! எனக்கு இப்போ வருத்தம் என்னன்னா அவர் போய் ஒரு வாரம் ஆச்சு. இதுவரைக்கும் ஒரு லெட்டர் போடல்லை. இப்படி இருக்கலாமா?” என்றாள் பாப்பா தாபத்தோடு.
“ஒரு வாரந்தானே ஆச்சு? ஒரு மாசம் ஆகல்லையே! போன இடத்திலே என்ன அசந்தர்ப்பமோ! அதுக்குள்ள லெட்டர் வரலைன்னு குறைப்படலாமோ! அப்புறம் பாரு பாப்பா! என்னதான் இருந்தாலும் அவன் ஒரு இள வயசுப் பிள்ளை. உனக்கு நேராக் கடிதம் எழுதுவானோ? எங்களுக்கு எழுதுவான். அதிலே, பாப்பா செளக்கியமா, பாப்பாவை விசாரித்ததாகச் சொல்லுங்கோன்னு போடுவான். உனக்கு நேரா எழுதக் கூச்சப்படுவான்” என்றாள் கோமளம்.
மாமி அப்படிச் சொன்னது பாப்பாவுக்கு நியாயமாகப் பட்டது. கொஞ்சம் ஆறுதலாகவும் இருந்தது.
அவளை மீறி ஒரு புன்னகை அவளது உதட்டில் அரும்பியது.
“அன்புமிக்க சகுந்தலாவுக்கு வணக்கம்,
கல்கத்தா போய்ச் சேர்ந்ததும் உங்களுக்குத்தான் முதல் கடிதம் எழுதுகிறேன். ஊர் இங்கே இந்திரலோகம் போல இருக்கிறது. தெருக்களில் கார்கள், சாரட்டுகள் ஏராளம். நிறைய வெள்ளைக்காரர்கள் இருக்கிறார்கள். ‘லேக் ஏரியா’ பக்கம் நான் தங்கியிருக்கிறேன். பெரிய வீடு எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். வேளா வேளைக்குச் சாப்பாடு. ஷூட்டிங் இன்னும் இரண்டு தினங்களில் ஆரம்பமாகிறது. ஸ்டூடியோ வில் எல்லாம் வெள்ளைக்காரர்களாம். ‘ஆஷூன் போஷூன்’ என்று வங்காளிகள் எனக்கு ரொம்ப மரியாதை கொடுக்கிறார்கள் இங்கே.
ஊரெல்லாம் சுற்றிப் பார்த்தேன்.
வாழ்க்கையில் என் அம்மாவுக்கு அடுத்தபடி உங்கள் அப்பா வைத்தான் நினைக்கிறேன். எனக்கு அவ்வளவு ஒத்தாசை செய்திருக்கிறார்.
இன்று கல்கத்தாவில் பயாஸ்கோப்பில் நடிக்கும் அளவுக்கு நான் வளர்ந்திருப்பது உங்கள் அப்பாவால்தான்.
அப்புறம் உங்களைப் பற்றிச் சொல்ல வேண்டாமா? ஆத்மாவுக்கு எது ரொம்ப அருகில் இருக்கிறது என்று உபன்யாசகர்கள் கேட்பார்கள். பகவான் என்று பதில் சொல்லுங்கள் என்பார்கள். நான் சகுந்தலா என்று சொல்லுவேன். நம் இருவரும் அவ்வளவு நெருக்கமாகி இருக்கிறோம்.
இங்கே கல்கத்தாவந்தபிறகு என்ன நினைக்கிறேன்தெரியுமா? நீங்கள் இங்கே வந்தால் இங்குள்ள புதுமைகளை எப்படி எப்படிப் பார்ப்பீர்கள், எப்படி எப்படி ரசிப்பீர்கள் என்று யோசித்துப் பார்க்கிறேன். உங்கள் ரசிப்பையே நான் அனுபவிக்க விரும்புகிறேன்.
இப்படி நினைப்பதற்கு ஆதாரம் மல்லிகை ஓடைப் பக்கம் அன்று நாம் நடந்து சென்றபோது ஏற்பட்ட நெருக்கம்தான்.
இங்கே வேலை எல்லாம் முடிந்ததும் உடனே ஊருக்குத் திரும்பி வந்துவிடுவேன்.
ஒருவேளை, நீங்கள் கல்கத்தா வர சந்தர்ப்பம் கிடைத்தால், அதை எண்ணிப் பார்க்கும்போதே மனம் சிலிர்க்கிறது.
தங்கள் அன்பார்ந்த
சாமண்ணா”
அந்தக் கடிதத்தை சகுந்தலா ஆறு தடவை படித்துவிட்டாள். முதலில் படித்தபோது ஒரு அசுவாரசியமான புன்னகை ஏற்பட்டது.
சாமண்ணா கையெழுத்து கோணல்மாணலாக இருந்தது. அதிகம் படித்திருக்க மாட்டான். ஆனாலும் இவ்வளவு அழகான வார்த்தைகளை எப்படி எழுதியிருக்கிறான்? உண்மையிலேயே என்னிடம் ஏற்பட்டுள்ள அன்பின் சக்திதான் அழகான வார்த்தைகளாக வந்திருக்கின்றன!
அப்புறம் இரண்டாம் முறை. மூன்றாம் முறை என்று படித்த போது மனம் அங்கங்கு ஆதங்கமுடன் நின்று முறுவல் பொழிந்தது. பின்னும் வாசித்தபோது உள் உணர்வில்மென்மையாக ஒரு புதுமை உணர்ச்சி கலந்ததுபோல் இருந்தது. மேனி எங்கும் ஒரு அரும்பு நடுக்கம் பரவியது.
பார்வை அடிக்கடி கடிதத்தை விட்டு வெளியேறி சூன்யத்தை அன்போடு பார்த்தது.
ஒரு துஷ்யந்த கம்பீரத்தில் சாமண்ணாவின் முகம் ஒரு வசீகர வடிவில் தோன்றி மறைந்தது.
“கடிதம் எழுதிவிட்டார் பார்த்தியா?” மெதுவான குரலில் அவள் உள் மனம் குதூகலித்தது.
கல்கத்தா போய் பத்து நாட்களுக்குப் பிறகுதான் ஷூட்டிங் தொடங்கியது.
தளவாடங்களையும் மனிதர்களையும் ஒரு அரும்பாடுபட்டுத் தயாரிப்பாளர்கள் குறித்த இடத்தில் கொண்டு குவிப்பதற்கு அத்தனை நாட்களாகிவிட்டன.
காலையில் எட்டு மணிக்கே சாமண்ணாவை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்றார்கள்.
கேட்டுக்குள் நுழைந்ததும், அருமையான பாதைகள், நிழல் தரும் வயதான மரங்கள்.
மேக் – அப் அறையில் எத்தனை கண்ணாடிகள்! எத்தனை வர்ண புட்டிகள்!
மேக்-அப்காரர் ஒரு வங்காளிக்காரர். ஆங்கிலம் கலந்த வங்காளியில் பேசினார். அவர் இரண்டு தரம் முகத்தில் பூசியதுமே, அதில் ஜொலிப்பு வந்துவிட்டது.
அரிதாரம் பூசினால் விறுவிறு என்று இருக்குமே, அது மாதிரி இல்லை.
அரைமணி நேரத்தில் தலையில் டோபா வைத்து, கிரீடம் வைத்து, ஆடையணிகள் பூட்டி சாமண்ணாவை துஷ்யந்தனாக்கி விட்டார்கள்.
சாமண்ணா பெரிய நிலைக் கண்ணாடியில் முழு உருவத்தைப் பார்த்ததும் கண் துள்ளியது. ஒரு அடி பின்னால் நகர்ந்து, ‘உண்மைதானா’ என்று பார்த்தான். உண்மைதான்!
‘எனக்கு இவ்வளவு முகவெட்டா? இப்படி ஒரு மன்மதத் தோற்றமா? அம்மா! நீ இருந்து இதைப் பாராமல் போய் விட்டாயே’ என்று உள் மனம் சிலும்பியது.
“துஷ்யந்தன் ரெடியா?” என்று ஒரு குரல் கேட்க, ஒருவர் உள்ளே ஓடிவந்து, “வாங்க, வாங்க” என்று அவனை உபசரித்து அழைத்துச் சென்றார்.
அந்த கேட்டில் நுழைந்ததும் சாமண்ணாவின் கண்கள் பரபரத்தன. அந்தப் படப்பிடிப்பு வகையறாக்களை அப்போதுதான் வாழ்வில் முதல்முறையாகப் பார்க்கிறான். கீழே தரை எங்கும் பாம்புகள் போல ரப்பர் ஓயர்கள் ஓடின. ஆச்சர்யமாக எதிரே ஒரு அரண்யக் காட்சியை அட்டையினாலும் துணிகளாலும் உண்டாக்கியிருந்தார்கள்.
கொளுத்துகிற பகல் போல் அங்கே வெளிச்சம் சாடியிருந்தது.
சாமண்ணாவை அங்கே நிறுத்திவைத்ததும், ஒருதண்டவாளத்தில் காமிரா மிஷின் நகர்ந்து வந்தது. இரண்டு பேர் அந்தக் காமிரா வண்டியைத் தள்ளி வந்தார்கள்.
நெடிதான ஒரு வெள்ளைக்காரர் சாமண்ணா அருகில் வந்து, “யூ ஆர் த ஹீரோ?” என்று குழைவாகக் கேட்டார்.
அந்த வெள்ளைக்காரர்தான் டைரக்டர் என்று தயாரிப்பாளர் சேட் சாமண்ணாவிடம் தெரிவித்தார்.
அவனிடம் குழைந்து பேசிய அந்த டைரக்டர் அடுத்தகணம் மற்ற சிப்பந்திகளிடம் பேசும்போது மிகவும் கெடுபிடியாக இருந்தார்.
ஸவுண்ட் இஞ்சினியர் ஓடி வந்து, நீண்ட கழி போன்ற மைக் பகுதியை சாமண்ணாவின் தலைக்குமேலே நிறுத்தி வைத்தார்.
பக்கவாட்டத்தில் மிருதங்க, வயலின், ஹார்மோனியப் பாடகர்கள் தயாராக இருந்தார்கள்.
எல்லாம் தயாரான நிலையில் டைரக்டர், ‘ரெடி’ என்று கூறியதும்,
சேட், ஒரு தேங்காய் மீது கற்பூரத்தைக் கொளுத்தி வந்து திருஷ்டி சுத்தினார்.
அவசரமாக டைரக்டர், வசனத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் சொல்லிக் காதால் கேட்டுக் கொண்டார்.
“ரைட்! இந்த ஷாட்லே ஆரம்பிக்கலாம். ஹீரோயினை உடனே அழைச்சுட்டு வா!” என்றார் டைரக்டர்
இரண்டே நிமிடத்தில் சாமண்ணா அருகில் சகுந்தலை வேடம் தரித்த ஒரு பெண் மின்னல் போல் வந்து நின்றாள்.
“இவங்கதான் சகுந்தலையா நடிக்கிறாங்க! வங்காள நாடகத் லே பிரபலமானவங்க! சுபத்ரா முகர்ஜின்னு பேரு!” என்று சேட் அறிமுகப்படுத்த சாமண்ணா அவளைப் பார்த்தான்.
அழகான மீன் விழிகள் கொஞ்சிக் கொண்டு பார்க்க, முகம் பட்டுச் சிவப்பில் மினுமினுக்க, சுபத்ராவின் அழகில் பிரமித்து மயங்கி நின்றான் அவன்.
அத்தியாயம்-23
அந்த வட இந்திய அழகியின் கடல் போன்ற விழிகளும், நிறமும், வித்தியாச அமைப்பும் சாமண்ணாவை பிரமிக்க வைத்தன.
‘இப்படி எல்லாம் அழகிகள் இருக்கிறார்களா உலகில்?’
“நொமஷ்கார்” என்றாள்.
முறுவலை விரித்தபோது அரும்பிய பல் வரிசை முத்துக் களாய்ப் பளிச்சிட்டன. இளம் குருத்து போன்ற வயிற்றின் சருமம் அவனை சொர்க்கத்துக்கு இழுத்தது. இடுப்பில் இறுக்கி யிருந்த ஸாரியும், அதை அடுத்த விஸ்தீரணமான இடுப்புப் பகுதியும் போதையை ஏற்படுத்தின.
முதல் ஒத்திகை நடந்தது. ‘சைலன்ஸ்’ என்ற இரைச்சலுக் குப் பின் நிசப்தம் நிலவ, டைரக்டர் ‘ஆக்ஷன்” என்றார்.
சுபத்ரா முகர்ஜி கையில் குடத்துடன் நடந்து வந்தாள். ஆசிரமப் பெண் போன்ற அசல் சாயலில் மென்மையாகக் குலுங்கி, ஒரு பூங்கொடி அசைந்து வருவது போல் வந்தாள்.
ஸெட்டில் நிற்பதுபோல் தெரியவில்லை. ஒரு ஆசிரமத்துக்கு அருகே அசல் சகுந்தலையைப் பார்த்து நிற்பதுபோல் தோன்றியது. அந்தக் கணத்தில் ஒரு பழங்காலத்துள் போன மாதிரி இருந்தது
‘ஆ!’
அந்த முள் குத்திய முகபாவம் பிரமாதமாக வந்தது.நெற்றியில் படிந்த சுருக்கமும், முகித்தில் ஓடிய வலியும் அப்படியே தத்ரூபம். முகத்தில் தோன்றிய அந்த பாவத்தில் அவள் வலி அவனுக்கே ஏற்பட்டது போன்ற பிரமை தோன்றியது.
‘குட்’ என்றார் டைரக்டர். ஒத்திகை நின்றது. சுபத்ரா முகத்தில் வியர்வை அரும்ப, உதவிப் பெண் அவள் அருகே ஓடினாள்.
‘பிரமாதம், உங்கள் நடிப்பு!” என்று அவளிடம் சாமண்ணா சொன்னபோது, அவள் மலர்ச்சியாகச் சிரித்து, “தாங்க்ஸ்” என்றாள்.
அடுத்த ‘ஷாட்’டில் சாமண்ணா ‘ஆ’ என்ற குரல் கேட்டு சகுந்தலாவைத் திரும்பிப் பார்க்கிறான். பிரமிப்பும், திகைப்பும் காட்டுகிறான். முள்ளை எடுக்கத் துடிக்கிறான்.
அடேயப்பா! சாமண்ணாவுக்கு அந்த நடிப்பு உச்சம் எப்படி வந்தது? திரும்பிய முகத்தில் அத்தனை உணர்ச்சியும் பின்னல் போட்டதோடு ஒரு துளிக் காத்ல் உணர்வும் தனித்துத் தெரிந்தது.
அசந்து போனார் டைரக்டர்.
சாமண்ணா அருகில் வந்து, “எக்ஸெலண்ட்” என்றாள் சுபத்ரா.
“தாங்க்ஸ்” என்றான் அவன்.

அடுத்து ஆரம்பக் காதல் வைபவங்கள் ஒவ்வொன்றாகச் சுடப்பட்டன. எல்லாம் கண்களின் நடிப்பாகப் போய்விட, இருவரும் அத்தனை உணர்ச்சிகளையும் முகத்தில் கொண்டு வந்து காட்ட, ஸெட்டில் பார்த்தவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் உள்ளங்களில் ‘காதல்’ அரும்புவதை உணர்ந்தார்கள். டைரக்டர் ‘குட், வெரிகுட்’ என்றெல்லாம் பாராட்ட, சேட் ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தார்.
அந்தக் காட்சிகள் இரண்டு நாள் தொடர்ந்து நடந்தன. ஒவ்வொரு நாளும் ஷூட்டிங் பார்க்கும் கூட்டம் அதிகம் கூடியது.
சாமண்ணா சுபத்ரா நடிப்பு பார்ப்பவர் மனதில் ஓர் ஆழமான முத்திரையை ஏற்படுத்தி மறக்க முடியாத காட்சியாக மனத்தில் பதிந்துவிட்டது.
மூன்றாம் நாள் சுபத்ரா சாமண்ணாவை இரவுச் சாப்பாட்டுக்குத் தன் வீட்டுக்கு அழைத்தாள்.
ஹூக்ளிக் கரையில் பெரிய நந்தவனத்துடன் மாளிகையாக இருந்தது சுபத்ராவின் வீடு. இளநீலத்தில் பட்டு உடுத்தி, நகை ஏதும் இல்லாமல், தலையை அருவியாக அவிழ்த்து விட் டிருந்தாள். அவளுடைய இயற்கை வடிவம் செயற்கையோடு கைகோத்துக் கொண்டு ஒரு மாற்று அழகு காண்பித்தது.
சொப்பனத்தில் புகுந்தது போன்ற உணர்வில் சாமண்ணா மயங்கினான். சில மாதங்கள் முன் வரை வறுமையில் வாடியவனுக்கு, அழுக்கு வேட்டியும், ரெடிமேட் கதர்ச்சட்டையும் போட்டு அலைந்த அவனுக்கு, இப்படி ஓர் அரண்மனை யோகம் கிடைக்கும் என்று நினைக்கவே இல்லை! அவளோடு அரைகுறை ஆங்கிலத்தில் பேசினான். அதை அவள் ரசித்தாள்! அவளுடைய சிரிப்பு காரணத்தோடும் வந்தது. காரணம் இல்லாமலும் வந்தது. ஒரு கோப்பையில் மதுவும், தாம்பாள வெள்ளித் தட்டில் சைவ உணவும் பரிமாறினாள் அவள். விருந்து முடிந்து பத்து மணிக்குமேல் சுபத்ராவிடம் விடை பெற்று, காரில் ஏறச் சென்றபோது உடம்பு காற்றில் மிதந்தது. எதை நினைத்தாலும் ‘கிளுகிளு’த்தது. வாழ்க்கையில் இவ்வளவு உல்லாசங்கள் இருக்கின்றனவா?
பத்து நாள் போனதே தெரியவில்லை. பொழுது எப்போது முடிந்தது எப்போது ஆரம்பமாகியது என்பதே புரியவில்லை. ஆனந்தமயமான நினைவுத் தொடரில் சஞ்சரித்தான்! சுபத்ரா பேசினாள், சிரித்தாள். காதலோடு பார்த்தாள். ஆலிங்கனம் செய்து கொண்டாள். அத்தனை உணர்வுகளும் அவனைப் புதுமை யாக்கிக் கொண்டிருந்தன.
பதினோராம் நாள்தான் டூயட் எடுக்க ஆரம்பித்தார்கள். கிட்டத்தட்ட முக்கால் இந்தி ட்யூனில் பாட்டு. அவனுக்கு சுலபமாக முடிந்தது. சுபத்ரா தமிழ் வார்த்தையில் கஷ்டப்பட்டாள்.
இருவரும் ஒரே ஒரு அடியைப் பாட, பக்கத்தில் அனைத்து வாத்தியக்காரர்களும் நின்று கொண்டே வாசிக்க, பாடல் பதிவு நடந்து கொண்டிருந்தது.
சின்ன இடைவேளை வந்தபோதுதான் நாற்காலியில் அமர்ந்திருந்த அவனை, ‘ஸார்’ என்று ஒரு சிப்பந்தி அழைத்தான். திரும்பிப் பார்த்தபோது ஸெட்டில் யாரோ வந்திருப்பது தெரிந்தது. யார் அது?
சகுந்தலா வந்து கொண்டிருந்தாள்.
“வாங்க!” என்று ஒரு அலட்சியத்தோடு நாற்காலியைக் காட்டினான் சாமண்ணா.
“எப்ப வந்தீங்க? எங்க இப்படி திடுதிப்புன்னு?” என்று காற்றை நோக்கிக் கேட்டான்.
“அப்பா ஒரு மெடிகல் கான்பரன்ஸுக்காக வந்தார். நானும் வந்துட்டேன்!’ என்று கூறிய சகுந்தலா, “நான் இங்கே ஏன் வந்தேன் தெரியுமா?” என்று குழந்தைத்தனமாகப் புதிர் போட்டு நிறுத்தினாள்.
“கல்கத்தா பார்க்கத்தானே?” என்றான் அவன்.
“இல்லை! கல்கத்தா பார்க்கிற சாக்கில்….” என்று இழுத்தாள்.
“சாக்கில்?” என்று கேள்வியைத் தூக்கி நிறுத்தினான் சாமண்ணா
அவள் பொய்க் கோபமாகச் சிணுங்கி, “புரியலையா? சொல்லட்டுமா?” என்று கேட்டாள்.
“ம்…” என்றான்.
“இலுப்புச் சட்டியும், வாளியும் வாங்க வந்திருக்கேன்!” என்று கூறிக் கலகலவென்று சிரித்தாள்.
“அதற்கு இவ்வளவு பணத்தைச் செலவழித்துக்கொண்டா?” என்றான்.
சகுந்தலா பேசவில்லை.
ஸெட்டை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்த சாமண்ணா, வந்திருந்த உதவியாளரிடமிருந்து அடுத்த உரையாடலைக் கேட்டுக் கொள்ள ஆரம்பித்தான்.
இரண்டு மூன்று முறை நெட்டுருச் செய்துவிட்டு, அவன் சகுந்தலாவைப் பார்த்தபோது தலைகுனிந்து நின்றிருந்த அவள் முகத்தில் நிழலிட்டிருந்தது.
“அப்புறம் எத்தனை நாள் இருப்பீங்க?” என்றான் ஒரு பொதுக் கேள்வியாக.
“இரண்டு நான் இருப்போம்” என்றாள்.
“முடிஞ்சா வந்து பார்க்கிறேன். இங்கே ரொம்ப பிஸி! நேரம் கிடைக்கிறதில்லை. இன்னொரு படம் உடனே இங்கே ‘புக்’ ஆகும் போல இருக்கு” என்றான்.
காரியதரிசியை அழைத்தான். “இவர்தான் என் ஸெக்ரிடரி’ என்று அறிமுகப்படுத்தினான்.
“இவங்க அட்ரஸ் வாங்கி வச்சுக்க, இவங்களுக்கு நம்ப ஷூட்டிங் தேதி, ஸெட், ஃப்ளோர் எல்லாம் எழுதிக் கொடு” என்று அவனிடம் கூறிவிட்டு எழுந்து, அடுத்த காட்சிக்காக ஸெட்டுக்குள் சென்றான்.
அத்தியாயம்-24
ஷூட்டிங் முடிந்ததும் சாமண்ணா சோர்வுடன் ஸெட்டுக்கு வெளியே வந்தபோது, அங்கே இன்னும் சகுந்தலா காத்திருப்பதைப் பார்த்தான். கண்கள் சற்று இடுங்கின.
“இங்கேயா இருக்கீங்க?” என்றான்.
“ஆமாம் சாமு! உங்களுக்காகக் காத்துக்கிட்டு” என்றாள்.
“எனக்கா! எனக்கு எங்கேஜ்மெண்ட் இருக்கே!”
சகுந்தலா முகம் சுண்டியது.
“இன்னிக்குத் தவிர்க்க முடியாத வேலை இருக்கு. இன்னொரு நாள் பார்ப்போமே!”
“ஊஹூம், இன்னிக்கு இப்போ என் கூடத்தான் வரணும்.”
அவள் கண்கள் கொஞ்சுதலாய்க் கெஞ்சி நின்றன்.
“இல்லை, சகுந்தலா! இப்போ நான் நிச்சயம் ஒரு முக்கியஸ்தர் வீட்டுக்குப் போகணும். ரொம்ப எதிர்பார்த்துக்கிட்டிருக்காங்க. இன்னொரு சினிமா பற்றிப் பேசப் போறோம். நான் வரேன்! அப்புறம் சந்திக்கலாம்.”
கையை இரண்டு ஆட்டு ஆட்டிவிட்டு அடுத்த வாசலை நோக்கி விரைந்தான்.
சகுந்தலா வெளியேறினாள். வாசலில் முன் இரவுக் காற்று குளுமையாக அவளைக் கோதியது. சற்று நேரம் காற்று வாங்கி நின்றாள். பிறகு சற்று நடந்து டாக்ஸி தேடினாள்.
பின்னால் ஒரு கார் வந்து கொண்டிருப்பதை வெளிச்சம் அறிவித்தது. சகுந்தலா ஒதுங்கி நின்றாள்.
கார் அவள் அருகே சற்று மெதுவாகிப் போக, சாமண்ணா அதில் உட்கார்ந்திருப்பதை அரைக் கண்ணால் கவனித்துக் கொண்டாள்.
சகுந்தலாவின் கண்கள் சாமண்ணா அருகில் இருந்த இரண்டாவது நபரையும் கவனிக்கத் தவறவில்லை. அது சுபத்ரா முகர்ஜி என்று தெரிந்ததும் மனத்தில் சுருக்கென்று முள் தைத்தது. குனிந்து கொண்டே நடந்தாள்.
காலையில் டாக்டர் ராமமூர்த்தி தங்கியிருந்த பார்க் ஹோட்டலுக்கு சேட் வந்து சேர்ந்தார்.
“நாளை ராத்திரி ஒரு டின்னர் அரேஞ்ச் பண்ணியிருக்கேன். நீங்க அவசியம் வரணும்!” என்றார்.
ராமமூர்த்தி, “எதுக்கு இதெல்லாம்? வேணாம்!” என்று மறுக்க, சேட் வற்புறுத்த, ராமமூர்த்தி கடைசியில் ஒத்துக் கொண்டார்.
நகர்ப்புறத்தில் ‘டோவர் காஸில்’ என்ற பெரிய பங்களாவில் அந்த விருந்து நடந்தது.
தோட்டம் சூழ்ந்த மாளிகை, அன்றிரவு அதில் மின்சாரப் பூக்களாகச் சொரிந்தன.
காஸ் விளக்குகள் மின்ன, தோட்டத்துப் புல் வெளியில் துணி போர்த்திய மேஜைகளில் விருந்து.
இரு வரிசைகளில் பிரமுகர்கள் உட்கார்ந்து அறிமுகம் எல்லாம் ஆகிவிட்ட நிலையில் சற்று உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
சாமண்ணாவுக்குப் பக்கத்தில் டாக்டர் ராமமூர்த்தி டைகட்டி அசல் ஐரோப்பிய நாகரிகத்தில் உட்கார்ந்திருந்தார்.
அவரை அடுத்து சகுந்தலா, அழகான மெஜன்டா நிறத் துகிலில் அப்சரஸ் போல மின்னிக் கொண்டிருந்தாள்.
டாக்டர் ராமமூர்த்தி, “என்ன சாமண்ணா, பேசாமல் இருக்கே?” என்று கேட்டதும், “அன்னிக்குப் பார்த்தீங்களே ஷூட்டிங், எப்படி இருந்தது? அப்பாகிட்டே சொல்லுங்க” என்றான் சகுந்தலாவைப் பார்த்து ஒப்புக்காக.
“பிரமாதம் அந்த ஸெட் அப்படியே தத்ரூபமா காடு போல இருந்தது.”
சகுந்தலா ஓரமாகக் கண்ணை ஒதுக்கி அவனைப் பார்க்க, அவன் புன்னகை மாறாமல் அவளைப் பார்ப்பது இன்னும் கொஞ்சம் ஆச்சரியத்தை விளைவித்தது.
சுபத்ரா முகர்ஜி ஒரு ஸீட் தள்ளி அமர்ந்திருந்தாள். பாஷை தெரியாததால் இடைஇடையே செயற்கையாய்ச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
“டாக்டர் ஸார், உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும். நீங்க மட்டும் சாமண்ணாவை எங்களுக்கு அனுப்பி வைக்கலேன்னா இவ்வளவு பெரிய நடிகர் எங்களுக்கு வேறே யார் கிடைச்சிருக்கப் போறாங்க? அவர் நடிப்பைக் கண்டு எல்லோரும் மலைச்சுப் போறாங்க” என்று பரவசமாகக் கூறினார் சேட்.
“ஸெட்டுலே வந்து நின்னார்னா எல்லார் பார்வையும் அவர். பேரிலேதான்” என்றார் துணை டைரக்டர்.
சாமண்ணா எல்லோரையும் பார்த்துவிட்டு சகுந்தலா பக்கம் திரும்பினான்.
“சாமண்ணா பற்றி ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு! ஊரிலே போய் சொல்றேன்” என்றார் ராமமூர்த்தி.
“நிச்சயம் சொல்லணும். அதுக்கு முன்னாடி நீங்க ஒருமுறை ஸெட்டுக்கு வரணும். ராஜ தர்பார் போட்டிருக்கோம். அதை அவசியம் வந்து பார்க்கணும். காலையிலே கார் அனுப்பறேன்” என்றார் சேட்.
சாமண்ணா அன்று படுக்கைக்குச் செல்லும்போது மணி பதினொன்று. உறக்கம் வரவில்லை. அந்த பாண்டு இசையும், சிரிப்பும், பாட்டும், பேச்சும், பார்ட்டியின் அத்தனை ஜொலிப்புகளுமே அவன் உணர்வில் ஊடுருவியிருந்தன.
இத்தனை களிப்புகளுக்கும் மூல புருஷன் தான்தான் என்று எண்ணும்போது சாமண்ணாவின் மனம் சிறகடித்தது.
சில மாதங்களுக்குமுன் தனது வாழ்க்கை எப்படி இருந்தது என்று எண்ணிப் பார்த்தாள். துவைத்த சட்டை மீது அழுக்குத் துண்டைப் போர்த்திக் கொண்டு தெருக்களில் அலைந்தது, மிளகாய்க் காரத்துடன் ஓட்டலில் சாப்பிட்டது. எல்லாரும் ‘டா’ போட்டுப் பேசியது, குழைந்து பதில் சொன்னது, ராத்திரி வெறும் கட்டையைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துறங்கியது…
‘அந்த சாமண்ணாவா நான்? இப்போது எப்படி மாறிவிட்டேன்! என்னை வாட்டிய வறுமையும் அதை ஒட்டிய துன்பங்களும் இப்போது எங்கே போயின?
இன்று இந்த கல்கத்தாவின் பிரபுக்களும் பிரமுகர்களும் என் நட்பைத் தேடி வருகிறார்கள்! என்னோடு சிநேகமாயிருப்பதை ஒரு சமூக அந்தஸ்தாகக் கருதுகிறார்கள்.
அவனது மற்றொரு மனம் அப்போது குறுக்கிட்டுப் பேசியது. ‘சாமு! இதெல்லாம் உனக்கு என்ன சும்மா கிடைக்கின்றனவா! உன்னிடம் திறமை இருக்கிறது. வித்தை இருக்கிறது. அதை ரசித்துத்தான் உன்னிடம் எல்லோரும் பணத்தைக் கொண்டு வந்து கொட்டுகிறார்கள்!
இதோ இந்த டாக்டர் ராமமூர்த்தியே உனக்கு எவ்வளவு எட்டாத உயரத்தில் தெரிந்தார்!
இந்த சகுந்தலாவே… ஆமாம், இவளே எத்தகைய தேவலோக அந்தஸ்தில் தெரிந்தாள்!
ஸெட்டில் ராஜ தர்பார் ஜொலித்துக் கொண்டிருந்தது. உள்ளே நுழைந்த ராமமூர்த்தி பிரமிப்பில் மூழ்கினார். உயரமும் விசாலமும் நிறைந்த தர்பார். தங்க முலாம் பூசிய விதானங்கள், சாமண்ணாவும் சபா பிரமுகர்களும் அசல் சரித்திர கால புருஷர்களாகத் தெரிந்தார்கள்.
‘ஜய வி ஜயீ பவ’ கோஷங்களுக்கு இடையே சாமண்ணா தர்பாருக்குள் நடந்து வந்தான்.
‘அடே சாமண்ணா! உன்னிடம் இவ்வளவு திறமை இருக்கா?’ என்று நினைத்தார் ராமமூர்த்தி.
சகுந்தலாவுக்குக் கண்களில் ஈரம் பனித்தது.
தாள வரிசைகள் முழங்க, இரு மின்னல் பெண்கள் நீள சடையும், சலங்கையுமாய் ராஜசபை நடுவில் பளீர் பளீர் என்று ஒளிப் பின்னலாக ஆடி வர அதைப் படமாக்கினார்கள்.
குறுநகை, உவகை, பரவசம், ஆனந்தம், புன்சிரிப்பு, முறுவல், மந்தகாசம் இதெல்லாம் ஒரே உணர்ச்சி அல்ல. அவற்றுக்குத் தனித் தனித் துல்யங்கள் உண்டு என்று காட்டியது அவன் நடிப்பு.
“பிச்சு உதர்றான்” என்றார் ராமமூர்த்தி பரவசமாகி.
“ஆமாப்பா! இவ்வளவு பிரமாதமா நடிப்பார்னு யாருமே எதிர்பார்க்கலை” என்றாள் சகுந்தலா ஆச்சரியக் குரலில்.
“பெண்ணே, நீ யார்?” என்று துஷ்யந்த சாமண்ணா எதிரில் நின்ற பெண்ணைக் கேட்க,
சுபத்ரா முகர்ஜி திடுக்கிடுகிறாள்.
“மகாராஜா என்னைத் தெரியவில்லை? நான்தான் சகுந்தலை” என்று பதில் சொல்லுகிறாள்.
“யாரம்மா நீ? புதிர் போடுகிறாயே!” என்று துஷ்யந்தன் வினவுகிறான்
“முன்பு ஒருநாள் தங்கள் அரண்யத்தில் வேட்டையாட வந்தபோது கண்வரிஷி ஆசிரமத்தில் என்னைச் சந்திக்கவில்லையா?”
சுபத்ராவின் கண்களும் வார்த்தைகளும் கவலையைத் தெரிவிக்கின்றன.
“கண்வ ரிஷி ஆசிரமமா? ஆமாம், வந்தேன். ஆனால் உன்னைப் பார்த்த நினைவு இல்லையே!”
“நான் அவரது வளர்ப்புப் பெண்!”
“சரி, அதனால் என்ன?”
மிகச் சாதாரணமாகக் கேட்டான் துஷ்யந்தன்.
“தாங்கள் என் காலிலிருந்து முள்ளை எடுக்கவில்லை?”
“முள் எடுத்தேனா!”
“கண்வரிஷி ஆசிரமத்தில் தங்கி என்னோடு பழகினீர்களே. அதைக் கூடவா மறந்துவிட்டீர்கள்?”
சாமண்ணாவின் பார்வையே சந்தேகம் காட்டியது.
“பழக மட்டும் செய்யவில்லை. என் மீது நேசம் வைத்தீர்கள். ‘உன்னை விரும்புகிறேன். உன் மீது பிரேமை கொண்டிருக்கிறேன்’ என்றெல்லாம் சொன்னீர்கள்.”
”என்ன?” சாமண்ணாவின் முகத்தில் ஒரு பழியை ஏற்க மறுக்கும் துடிப்பு தெறித்து வந்தது.
“நான் உன்னை நேசித்தேனா? ஏதாவது கனவு கண்டாயா, பெண்ணே?”
“இல்லை. என் மீது பிரேமை வைத்தீர்கள். என்னுடன் உல்லாசமாகத் திரிந்தீர்கள். சல்லாபம் செய்தீர்கள்.”
“என்ன!” என்று சாமண்ணா கேட்டபோது முகத்தில் ஒரு கோபக் கீற்று ஜ்வாலையிடுவது தெரிந்தது.
‘ஆ! அற்புதம்’ என்கிற பாவனையில் பலர் கையைத் தூக்கினார்கள். ராமமூர்த்தி சகுந்தலா கையை அழுத்தினார்.
“பெண்ணே! உனக்கு புத்தி பேதலித்துவிட்டதா? பார்! என்னைச் சரியாகப் பார்! கவனித்துப் பார்! வீணாக என் மீது பழி போடாதே!”
டக்கென்று ஆத்திர மிகுதியில் சாமண்ணா எழுந்தபோது குலுங்கிய அவனது அணிமணிகளில் கூடப் பதற்றம் தெரிந்தது.
“இல்லை மகாராஜா! நிஜம்! நிஜம்!”
“நிஜம் என்பதற்கு சாட்சி?”
“என் தோழி அனுசூயா! இதோ இருக்கிறாள்.”
“மன்னர் மன்னா ! தாங்கள் என்னையும் மறந்துவிட்டீர்களா! என்னைத் தூது அனுப்பித்தானே சகுந்தலையைத் தங்கள் பக்கம் வரவழைத்தீர்கள்!”
“பொய், பொய். எல்லாம் பொய்! வீணாக ஒரு மன்னன் மீது பழி சுமத்துகிறீர்கள். நான் நம்பமாட்டேன்.”
“மகாராஜா! தாங்கள் என்னை காந்தர்வ விவாகம் செய்து கொண்டபோது அடியாளுக்குப் போட்ட மோதிரம் என்னிடம் உள்ளது!”
“நான் மோதிரம் போட்டேனா? ஹாஹா! எங்கே அதைக் காட்டுங்கள்.”
சுபத்ரா, தன் விரலிலிருந்து மோதிரத்தைக் கழற்றப் பார்க்கிறாள். விரலில் மோதிரம் இல்லை!
“ஐயோ! அனுசூயா! மோதிரம் எங்கே? எங்கே அந்த மோதிரம்?”
“ஹூம்! கொடுத்திருந்தால்தானே இருக்கும்!”
“ஆஹ்ஹாஹ்ஹா….” துஷ்யந்தன் சிரிப்பு ஏளனத்தோடு மிதந்தது.
சகுந்தலை மூர்ச்சையாகிக் கீழே விழுகிறாள்.
சுற்றி நின்றவர்கள் வெறும் நடிப்பென்று எண்ணினர். மூர்ச்சை கலைந்து இதோ எழுந்திருப்பாள் என்று எதிர்பார்த்தனர். வெகு நேரமாகியும் சகுந்தலையாக நடித்த சுபத்ரா முகர்ஜி எழுந்திருக்கவில்லை. திடுக்கிட்ட டைரக்டர் அவளை நோக்கி விரைந்தார்.
– தொடரும்…
– ஆப்பிள் பசி (நாவல்), முதற் பதிப்பு: 1988, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.