வால்மீகி ராமாயணச் சுருக்கம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: October 6, 2024
பார்வையிட்டோர்: 7,002 
 
 

(1900ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அயோத்தியா காண்டம் | ஆரணிய காண்டம் | கிஷ்கிந்தா காண்டம்

19. இராமர் தண்டகாரணியத்தில் முனிவர்களை சந்தித்தல்

இராமர் மகாரணியமாகிய தண்டகாரணியத்தில் பிரவேசித்து, நாலுபக்கத்திலும், தருப்பைகளும் மரவுரி களும் பரவியுள்ளதும், பிரமதேஜஸால் சூழப்பட்டதும், ஆகாயத்தில் ஜ்வலித்துக்கொண்டிருக்கிற சூரியமண்டலம் போல் பார்க்க முடியாததும், பல மூலங்களை அருந்துபவர் களும் இந்திரிய நிக்கிரகம் செய்தவர்களும் மரவுரி மான் றோலைத் தரித்தவர்களும் சூரியாக்கினிகளுக்குச் சமான மான காந்தியை யுடையவர்களுமான புராதன முனிவர் கள் வசிப்பதும், பரிசுத்தமானவர்களும் நியாயமான ஆகா ரத்தை யுடையவர்களுமான பரமரிஷிகளால் விளங்குவது மான முனிவர்களுடைய ஆச்சிரம மண்டலத்தைக் கண்டார். அங்கிருந்த திவ்யக்ஞானிகளாகிய மகரிஷிகள் இராமரையும் வைதேகியையும் லக்ஷ்மணரையும் கண்டு அன்போடு எதிர்கொண்டு அங்குள்ள பர்ணசாலைக்குள் உட்காரவைத்து உபசரித்து, கைகூப்பிக்கொண்டு பின் வருமாறு கூறினார்கள்: 

“வருணாச்சிரமங்களைப் பாதுகாத்து எல்லாரையும் ரக்ஷிப்பவராய், வெகு புகழ் பெற்றவராய், வெகு மரி யாதைபொருந்தியவராய், எல்லாராலும் வணங்கப்பெற்ற வராய், துஷ்டர்களை அடக்கிச் சிஷ்டர்களைப் பரிபாலனம் பண்ணுபவராய்த் தாங்கள் உள்ளீர்கள். தாங்களே எங்களெல்லாருக்கும் யஜமானர். இந்திரனுடைய நான்கி லொரு அம்சமாகிய இராஜா குடிகளை ரக்ஷிப்பது வழக்க மாகையால், அவர் எல்லாராலும் வணங்கப்பட்டுச் சகல சௌக்கியத்தையும் அனுபவிக்கிறார் என்பது கோட்பாடு. நாங்களெல்லாரும் தங்களுடைய நாட்டில் வசிக்குங் குடி களாயிருக்கிறோமாகையால், தாங்களே எங்களெல்லாரையும் ரக்ஷித்தருளவேண்டும்.காட்டிலிருப்பினுஞ்சரி நகரத் தில் வசிப்பினுஞ்சரி,தாங்களே எங்களுக்கு இறைவர். ஐயா, தாங்கள் இக்ஷ்வாகு குலத்திற்கும் இவ்வுலகத்திற் கும் முதல்வராயும் யஜமானராயும் இருக்கிறீர்கள். தேவர் களுக்கெல்லாம் எவ்வாறு இந்திரன் யஜமானனோ அது போல் எங்களுக்கெல்லாம் யஜமானன் தாங்களே. நாங்கள் யாசகர்களாக தங்களை அடைந்து சொல்லப்போகிறதைக் கேட்டு தாங்கள் எங்களை மன்னிக்கவேண்டும். இப் பொழுது தங்கள்முன் வந்துள்ள வானப்பிரஸ்த நிலையில் நின்றொழுகும் அந்தணர்களெல்லாம் அநாதைகள்போல ராக்ஷசர்களுபத்திரவத்தால் இக்காட்டில் வருத்தப்பட் டுக் கொண்டிருக்கிறார்கள். ஐயா, எங்களுடன் கூட வந்து வெகு கொடியவர்களான இவ்வரக்கர்களால் பல வாறு கொல்லப்பட்ட பரிசுத்தர்களாகிய அளவிறந்த அருந்தவர்களுடைய சரீரங்களைப் பாருங்கள். நாங்க ளெல்லாரும் தங்களை இப்பொழுது சரணமாக அடைந் திருக்கிறோம். இராஜகுமாரரே, எங்களெல்லாரையும் இவ்வரக்கர்களுடைய உபத்திரவத்திலிருந்து ரக்ஷிக்க வேண்டும்.”என்று ஒருங்கே முறையிட்டார்கள். 

தருமாத்துமாவாகிய இராமர் அதனைக்கேட்டு அவ் வருந்தபசிகளை நோக்கி “முனிவர்களே, இவ்வாறு என்னை நீங்கள் வருந்திக்கேட்டுக் கொள்ளுவது நியாயமன்று. நானோ உங்களால் கட்டளையிடப்படவேண்டியவன். நான் இக்காட்டுக்கு வந்தது என் தந்தை வாக்கை நிறைவேற்ற என் வனவாசமும் இதனால் வெகு பயனுள்ளதாகமுடியும். அருந்தவர்களுடைய சத்துருக்களாகிய அரக்கர்கள் எல் லாரையும் யுத்தத்தில் மடியச் செய்கிறேன்.” என்றனர். 

தண்டகாரணியத்து ஆசிரம சமூகங்களில் இராமர் சுகமாக ஆங்காங்கு வசித்து அங்கிருந்த அருந்தவர்களால் பூசிக்கப்பட்டு, மறுபடியும் அவர்களுடைய ஆசிரமங் களில் ஒவ்வொன்றிற்கும் போகலானார். இராகவர் முதலில் தாம் கொஞ்சநாள் வசித்த ஆசிரமங்களுக்கு மறுபடியும் சென்று, சில ஆசிரமங்களில் பத்து மாதம், சிலவற்றில் ஒருவருஷம், சிலவிடங்களில் நான்கு. மாதம், சில தபோவனங்களில் ஐந்து அல்லது ஆறுமாதம், சிற் சில ஆசிரமங்களில் ஒன்றரைமாதம், சிலவாசிரமங் களில் அதற் கதிகமானகாலம், சிலவிடங்களில் மூன்று மாதம், சிலவற்றில் எட்டுமாதம் சுகமாக வசித்தனர். இவ்விதமாக முனிவர்களாச்சிரமங்கள்தோறும் ஒருவித குறையும் உபத்திரவமுமில்லாமல் இராமர் பத்து வருஷ காலம் வசித்தார். 

பிறகு, அங்கிருந்து லக்ஷ்மணரோடும் சீதையோடும் அகஸ்தியமாமுனிவருடைய ஆச்சிரமத்துக்குப் புறப்பட் டார். குறிக்கப்பட்ட வழியே நடந்து காட்டுமரங்கள் யானைத்துதிக்கைகளால் கசக்கப்பட்டும், வானரக்கூட்டங் களால் விளக்கமுற்றும் மதர்த்த பறவைக்கூட்டங்கள் உல்லாசமாக உட்கார்ந்து கூவப் பெற்று நிற்கவும் இராமர் கண்டார். பின்பு லக்ஷ்மணரைப்பார்த்து இராமர் “லக்ஷ்மணா, இவ்விடத்தில் விருக்ஷங்கள் அடர்ந்து பசே லென்று தழைத்திருக்கின்றன. மிருகங்களும் பறவைகளும் பழகினவைகள் போல வெகுசாதுவாக  இருக்கின்றன. ஆகையால்  பரிசுத்தமான ஆத்துமாவாகிய அகஸ்தியரது ஆச்சிரமம் சமீபத்தில் உளது போலும். இப்புண்ணியாசிரமம் கீர்த்திபெற்ற தீர்க்காயுளையுடைய அகஸ்தியமாமுனிவருடையது. அவர் எப்பொழுதும் சாதுக்கள் க்ஷேமத்தையே  கருதுபவர்; உலகத்தா ரெல்லாராலும் ஆராதிக்கப்படுபவர். நாம் அவரைக் கண்டால் நமக்கும் அவர் நன்மையையே பண்ணி வைப்பார். நாம் இவ்விடத்தில் அகஸ்தியமாமுனிவரை வணங்குவோம். என்று கூறினர். 

இராமர் சீதா லக்ஷ்மணர்களோடு மிக்க சாந்தமான மான் கூட்டங்கள் நிரம்பியுள்ள அவ்வாச்சிரமத்தின் அழகைப்பார்த்துக்கொண்டு மூவரும் முனிவரைப் பணிந்து எழுந்து கைகூப்பி வணங்கி நின்றார்கள். முனிவர் இராமரைப்பார்த்து ” ஓ காகுத்த, எவ்வுலகத்துக்கும் அரசராய், தருமவானாய், மஹாரதராய், எல்லாராலும் வணங்கவும் சம்மானிக்கவும் தக்கவராய் உள்ள தாங்கள் எனக்குப் பிரியமான அதிதியல்லவா” என்றுசொல்லி, தன்னன்பிற் கிசைய பழங்களாலும் கிழங்குகளாலும் புஷ்பங்களாலும் இன்னும் மற்றவை களாலும் இராகவரை உபசரித்து மறுபடியும் அவரை நோக்கி சொல்லுவாராயினார். ஒ புருஷ சிரேஷ்டரே, இதோ வெகு பெரிதாகப் பொன்னும் மணியும் இழைக்கப் பட்டு காணப்படுகிற இந்தத்திவ்ய தனுசு விஷ்ணு வினுடையது; விசுவகர்மாவால் இயற்றப்பட்டது. ஒரு பொழுதும் தவறுதலில்லாத சூரியன்போல் பிரகாசிக்கும் இந்தப் பாணம் அஸ்திரங்களுக்குள் உத்தமமானது; பிரமதேவரால் கொடுக்கப்பட்டது. இவைகளை யன்றி என்றும் குன்றாத கொழுந்துவிட்டெரியும் அக்கினி போல் விளங்கிக்கொண்டிருக்கும் பாணங்களால் நிரம்பிய இரண்டு அம்பறாத்தூணிகளும் என்னிடம் இருக்கின்றன். இவைகள் எனக்கு இந்திரனால் கொடுக்கப்பட்டன. இந்தத் தனுசைக்கொண்டுதான் விஷ்ணுபகவான் அசுரர் களை யெல்லாம் போரில் வெற்றி கொண்டு களுடைய பெரும்பாக்கியம் என்றென்றைக்கும் கேடின்றி விளங்கும்படி வைத்தார். இந்த வில், இந்த அம்பறாத் தூணி, இந்த அஸ்திரம், இந்த வாள், இவைகளைத் தாங்கள், இந்திரன் வச்சிராயுதத்தைக்கைப்பற்றுவது போல் வெற்றியடையும்பொருட்டுக் கைப்பற்றுங்கள்.” இவ்வண்ணஞ்சொல்லி. அகஸ்தியமுனிவர் அவ்வுத்தம மான ஆயுதங்களெல்லாவற்றையும் இராமருக்களித்து மறுபடியும் அவரைப்பார்த்துப் பின்வருமாறு மொழிந்தார். 

“ஓ இராமா, தங்களைக்கண்டு நான் மிக்க சந்தோஷ மடைந்தேன். தங்களுக்கு க்ஷேம முண்டாகக்கடவது. லக்ஷ்மணா, உங்கள் வரவாலும் நான் மிகக் களித்தேன். என்னை வணங்கவேண்டுமென்றே நீங்கள் சீதையுடன் இவ்விடத்துக்கு எவ்வளவு சிரமப்பட்டு வந்தீர்கள்.” இவ் வண்ணம் அகஸ்தியமாமுனிவர் சொல்ல இராகவர் அஞ்சலி செய்து அம்முனிவரைப் பார்த்து ஐயா, முனிபுங்கவ ராகிய தாங்களே என்னிடத்தும், என் தம்பி,என் மனைவி. இவர்களிடத்தும் இருக்குங் குணங்களைக் கண்டு வியந்த தனால் நானின்றுமுதல் வெகு பாக்கியமும் அனுக்கிரகமும் பெற்றவனானேன். தாங்கள் இப்பொழுது நான் பர்ண சாலை கட்டிக்கொண்டு சுகமாக வசிக்கத்தக்கதான நல்ல நீர்வளமுள்ளதும் அழகான காடடர்ந்ததும் ஆகிய ஓரிடத்தை அருளிச்செய்யவேண்டும்” என்றனர். 

இவ்விதமாக இராமர் சொன்னதைக்கேட்ட அகஸ் தியர் கொஞ்சநேரம் யோசித்து, வெகு பிரியமாக “இங் கிருந்து இரண்டுயோசனை தூரத்தில், அநேக பல மூலங் கள் நிரம்பி, பற்பல மான்கள் கொஞ்சிவிளையாடும் பஞ்ச வடி என்று பெயர்போன ஒரு அழகான பிரதேசம் இருக் கின்றது. அங்கே போய் அவ்விடத்தில் ஓர் ஆசிரம பதத்தை ஏற்பாடுசெய்து கொண்டு லக்ஷ்மணரோடு வெகு சுகமாக பிதிர்வாக்கிய பரிபாலனம் பண்ணிக்கொண்டு வாசஞ்செய்க. அது வெகு சிலாக்கியமானது. அது இங் இருந்து வெகுதூரமுமன்று; கோதாவரி நதிக்கு அருகி ‘லுள்ளது. அதைக்கண்டும் வைதேகி சந்தோஷமடைவாள்.” என்று சொல்லினர். 

பஞ்சவடிக்கேகும்பொழுது இராமர் அதி பராக்கிர மம் பொருந்தியதும் பருத்த உடலையுடையதுமான கழு கொன்றைக்கண்டார். ஒரு பெரும் ஆலமரத்தில் உட்கார்ந் திருந்த அக்கழுகைக் கண்டு இராமலக்ஷ்மணர்கள் அதனை ஒரரக்கனென்று தங்களுக்குள்ளே எண்ணிக்கொண்டு அதைப்பார்த்து “நீ யார்?” என்று கேட்டார்கள்.அக் கழுகு அவர்களைப் பார்த்து வெகு மதுரமாகவும் பிரியமாக வும் “என் குழந்தைளே, நான் உங்கள் தந்தையின் தோழ னென்று அறிந்துக்கொள்ளுங்கள்” என்றது. தமது தந் தையின் தோழனென்று கேட்ட மாத்திரத்தில் இராமர் அக்கழுகினுக்கு மரியாதை பண்ணி, அதன்மேல் அப்பக்ஷி ராஜனுடைய குலத்தையும் பெயரையும்பற்றிக் கேட்டார். இராமர் சொன்னதைக்கேட்டு அப்புள்ளரசு எல்லாப் பிராணிகளுடைய உற்பத்தியையும் தனது பெயரையும் சொல்லி “என்னை சேனி புத்திரன் ஜடாயு என்று அறிந் துக் கொள்ளுங்கள். தங்களுக்கு மனமிருக்கும் பக்ஷத்தில் நான் தாங்கள் வசிக்குமிடத்திலிருந்துகொண்டு தங்களுக்கு என்னால் செய்யக்கூடுமுதவிகளைச் செய்வேன். இக்காடு மிக அடர்ந்து மிருகங்களும் ராக்ஷசர்களும் சஞ்சாரம் பண்ணு மிடமாக விருக்கிறது. தாங்களும் லக்ஷ்மணரும் பர்ண சாலையைவிட்டு எப்பொழுதாவது வெளியிற்போகும்படி நேர்ந்தால் நான் அக்காலத்தில் சீதையைப் பாதுகாப் பேன்” என்றது. 

பிறகு, இராமர் அநேக மான்களும் கொடிய சர்ப்பங் களும் மிருகங்களுஞ் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் பஞ்ச வடி சேர்ந்து, வெகு பராக்கிரமசாலியாகிய தமது தம்பி லக்ஷ்மணரைப்பார்த்து “இவ்விடம் சமமாயும் வெகு அழ காயும் மலர் மரங்களால் சூழப்பட்டும் இருக்கிறது. ஆகை யால், இவ்விடத்திலேயே நாம் வசிக்க ஓர் ஆச்சிரமத்தை நீ செய்” என்றார். 

இராமர் அம்மொழி புகலலும் வலிமிகுந்த லக்ஷ்மணர் வெகு சீக்கிரமாக தமது தமையனார் வசிப்பதற்காக ஓர் ஆச்சிரமத்தை அவ்விடத்தில் அமைத்தனர். 

இராமர் அங்கே சுகமாக வசித்துக்கொண்டிருக்கும் பொழுது சரத்காலங்கழிந்து ஹேமந்தருது தொடங்கிற்று. அக்காலத்தில் ஒருநாள் இரவு கழிந்து பொழுதுவிடியும் வேளையில் பிராதக்கால ஸ்நானத்திற்காக இரகுநந்தனர் அழகான கோதாவரிக்கு தம்பியோடும் சீதையோடும் போயினார். பிறகு அவர்கள் தங்கள் பிதிர்களுக்கும் தேவ தைகளுக்கும் செய்யவேண்டிய தர்ப்பணங்களைச் செய்து முடித்து உதயஞ்செய்த சூரியனையும் மற்ற தேவதைகளை யும் விதிப்பிரகாரம் ஸ்தோத்திரம் பண்ணினார்கள்.சீதா தேவியுடன் இராமர் தமது ஆச்சிரமத்தில் வீற்றிருந்தது சித்திரையோடு. சந்திரன் கூடியிருந்ததுபோல் விளங் கிற்று. 

20. பஞ்சவடிக்கு சூர்ப்பணகையின் வரவு 

இராமர் தம் ஆச்சிரமத்தில் மகரிஷிகள் ஆராதிக்கத் தமது தம்பி லக்ஷ்மணரோடு அனேக விஷயங்களைப்பற் றிப் பேசிக்கொண்டிருந்தார். இவ்விதமாக அவர் பேசிக் கொண்டிருந்த காலத்தில் தசக்கிரீவன் தங்கையாகிய அரக்கி சூர்ப்பணகை தற்செயலாக அவ்விடம் வந்தாள், தேவர்க்கொப்பான இராமரைக் கண்டாள். அவரது சுமுகமெங்கே? இவளது துர்முகமெங்கே? அவரது குறுகிய வயிறெங்கே? இவளது சரிந்த பெருத்த வயி றெங்கே? அவரது நீண்ட பெரிய கண்களெங்கே? இவ ளது விகாரமான கண்களெங்கே? அவருடைய அழகிய குஞ்சியெங்கே? இவளது சிவந்த விரிந்த கூந்தலெங்கே? கண்டோர் மனதைக்கவரும் அவரது வனப்பெங்கே? எல் லாரும் நடுங்கத்தக்க இவளது கோரமான உருவெங்கே? அவரது இனிய குரல் எங்கே? இவளது பயங்கரமான குர லெங்கே? அவரது இளமையெங்கே? இவளது மூப் பெங்கே? அவரது இனிய பிரிய வசனமெங்கே? இவளது வன்சொல்லெங்கே? அவரது அறநெறியெங்கே? இவளது மறநெறியெங்கே? இராமரோ அழகுள்ள சுந்தரபுருஷர். சூர்ப்பணகையோ, வெகு விகாரமான அரக்கி. இவ்வளவு வித்தியாசங்கள் காமத்தால் கட்டுண்டவர்களுக்குத் தோற்றுமா? ஆகையால், சூர்ப்பணகை இராமரைக் கண்டு மயங்கி அவரை நோக்கிச் “சடைமுடிதரித்துத் தவ வேடம் பூண்டு வில்லேந்திக்கொண்டு மனைவியுடன் ராக்ஷ சர்கள் சஞ்சரிக்கும் இந்த இடத்துக்கு ஏன் வந்திருக் கிறீர்? நீர் வந்த காரணமென்ன? அதின் உண்மையை எனக்குச் சொல்லவேண்டும்” என்று வினாவினள். இவ் வாறு சூர்ப்பணகை தம்மைக் கேட்கவே, எல்லா விஷயங் களையும் இராமர் கூறினர். 

இதைக்கேட்டுக் காமத்தால் வருத்தப்பட்டுக் கொண் டிருந்த சூர்ப்பணகை இராமரைப்பார்த்து ‘கேளும் இரா மரே, நானுண்மையைச் சொல்லுகிறேன். நான் சூர்ப்ப ணகை என்னும் அரக்கி. இஷ்டப்படி உருவங்கொள்ளுஞ் சக்தி எனக்குண்டு. பார்ப்பவர்கள் உள்ளத்தை நடுங்கச் செய்துகொண்டு நானிந்தக்காட்டில் தனிமையாக எப் பொழுதும் சஞ்சரிப்பவள். இராவணன் என் தழையன். அவன் வெகு பலசாலி; அரக்கர்களுக்கெல்லாம் இறைவன். அவ்வீரன் விசிரவசுவுடைய குமாரன். அவனைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். எப்பொழுதுந் தூங் கிக்கொண்டே யிருக்கும் மகாபலம்பொருந்திய கும்பகர்ண னும், ராக்ஷசகுலத்தில் பிறந்தும் வெகு தர்மாத்துமாவாய் ராக்ஷச குணமேயில்லாத விபீஷணனும், போரில் கீர்த்தி பெற்ற கரனும், தூஷணனுமாகிய இவர்களெல்லாரும் என் சகோதரர்கள். நான் இவர்கள் எல்லாரையும் விட்டு விட்டு என்னிஷ்டப்படி சஞ்சரிக்க வல்லவள். இராமரே, நான் தங்களைக் கண்டமாத்திரத்தில் தாங்கள் எனக்குப் புருஷனாகவேண்டுமென்று எண்ணங்கொண்டு தங்களிடம் வந்திருக்கிறேன். என்றென்றைக்கும் என் கணவராகத் தாங்கள் ஆகவேண்டும். சீதை உங்களுக்கு என்ன செய் யப்போகிறாள்” என்றனள். 

இவ்வண்ணம் காமவலையில் கட்டுண்டு பேசின சூர்ப் பணகையைப் பார்த்து இராமர் சிறிது முறுவலித்து பரிகாசமாகக் கூறலுற்றார்:-“மெல்லியலே, நான் கல்யாண மானவன். இவள் என் மனைவி. உன்னைப்போன்ற மங்கை யர்கள் மாற்றவளைக் கண்டால் சகியார்கள். என் தம்பி லக்ஷ்மணன் மிக நல்லவன்; அழகுள்ளவன்; ஆகையால் நீ அவனைப் புருஷனாக அடை.” இவ்வாறு இராமர் சொல் ல்வே, காமத்தால் மோகித்திருந்த சூர்ப்பணகை உடனே அவரை விட்டுவிட்டு விரைவாக லக்ஷ்மணரிடமோடி அவ ரைப் பார்த்து “வெகு அழகான உருவம் படைத்த தங்க ளுக்குத் தகுந்த மனைவி நானொருத்தியே. தாங்களும் என் னுடன் சுகமாகத் தண்டகையின் இடமெங்கும் சஞ்சரிக்க லாம்” என்று சொன்னாள். இவ்விதமாகத் தம்மைப் பார்த்து சூர்ப்பணகை சொல்ல, பேசுவதில் சமர்த்தராகிய லக்ஷ்மணர் புன்னகை செய்து அவளை நோக்கி “தாமரை போன்ற அழகான நிறமுள்ள மாதே, நான் சுவதந்தரம் உள்ளவனல்லன். என் தமையனாருடைய தாஸன். தாஸ பூதனான எனக்கு நீ மனைவியாகுவது நன்றாகவிருக்கவில்லை. மிக்க சிறு பெண்ணாகிய நீ உன் மனோரத்தங்களை நிறை வேற்றிக் கொள்ள விரும்பின் வெகு பாக்கியசாலியான என் தமையனாருடைய மனைவியாகி விடு” என்று கூறினர். 

இது பரிகாசம் என்றறியும் புத்தியில்லாத, சரிந்த வயிறுடைய அக்கொடிய ராக்ஷசி அவர் சொன்ன சொல்லை உண்மையென்றெண்ணிக் காதலால் மயங்கி சீதாதேவி யுடன் பர்ணசாலையில் உட்கார்ந்திருந்த இராமரை நாடிச் சென்று அவரை நோக்கி “இந்த அழகற்ற, கெட்ட நடக்கையுள்ள, சரிந்த வயிறுள்ள கிழவியை மனைவியாக அடைந்திருக்கிறபடியால் தாங்கள் என்னிடம் அன்பற் றிருக்கிறீர்கள். மனுஷியாகிய இப்பேதையை நானிதோ தாங்கள் பார்த்துக் கொண்டிருக்க புசித்து விடுகிறேன். அதன் பிறகு சக்களத்திப் பயமின்றி நான் தங்களுடன் கூட சுகமாக வசிக்கிறேன்’ என்று சொல்லி, அவ்வரக்கி வெகு கோபத்துடன் உரோகிணி நக்ஷத்திரத்தை ஒரு தூமகேது சீறிச்செல்வதுபோல மான் போன்ற பார்வை யுடைய சீதையை நோக்கி ஓடினாள். காலபாசத்துக் கொப்பாக அவ்வாறு ஓடி வரும் அரக்கியை வலி மிகுந்த இராமர் தடுத்து வெகு கோபங் கொண்டு லக்ஷ்மணரைப் பார்த்து “லக்ஷ்மணா, கொடிய குணமுள்ள துஷ்டர்க ளுடன் விளையாடல் ஒரு பொழுதும் கூடாது. சீதையி னுடைய உயிருக்கு நாசம் வரப் பார்த்தது. குரூபியும், கொடியவளுமான இந்த ராசியை உருவங்குலைத்துவிடு” என்றார். இராமர் அவ்வாறு சொல்ல, லக்ஷ்மணர் சூர்ப்ப ணகையைப் பார்த்து வெகு கோபங்கொண்டு தமது கத்தியை எடுத்து அவளுடைய காதுகளையும் மூக்கையும் அறுத்து விட்டார். தனது மூக்கும் காதும் வெட்டுண்ட வுடன் சூர்ப்பணகை வெகுபயங்கரமாகக் கதறிக்கொண்டு தான் வந்த வழியாகவே காட்டுக்குள் ஓடினாள். அதன் பிறகு அவள் கரன் என்ற தமது தமையனிருந்த ஜன ஸ்தானத்துக்குச் சென்று ராக்ஷசர்கள் சூழ சபையில் பயங்கரமாக விளங்கிக் கொண்டிருந்த அவன் முன்பாக ஆகாசத்திலிருந்து இடிவிழுவதுபோலப் போய்விழுந்தாள். 

உருவங்குலைந்து, இரத்தம் பெருகிக்கொண்டு, தன் முன் கதறிக்கொண்டு வந்துவிழுந்த சூர்ப்பணகையை கரன்பார்த்து மனங் கொதித்து ‘எழுந்திரு; உனது பயத் தையும் கலக்கத்தையும் விட்டுவிடு; இவ்விதமாக நீ யாரால் உருக்குலைக்கப்பட்டாய் என்பதைத் தெளிவாகச் சொல்லு” என்றான். இவ்விதமாக வெகு கோபத்தோடு தனது தமையன் மொழிந்ததைச் சூர்ப்பணகை கேட்டு, கண்ணுங்கண்ணீருமாக அவனைப் பார்த்துச் சொன்னாள்:- “யௌவனமான மிக அழகிய உருவமுள்ளவர்களாய், மகா பலசாலிகளாய், தாமரைபோல விசாலமான கண்க ளுடையவர்களாய், மரவுரியும் மான்தோலும் உடுத்து, பழங்களையும் கிழங்குகளையும் புசித்து, வெகு பரிசுத்தர் களாய். ஐம்புலன்களையுமடக்கித் தருமத்தை நடத்தும் தபசிகளாய், கந்தர்வ மன்னவருக்கொப்பானவர்களாய், ராஜ லக்ஷணங்கள் அமைந்த தசரதருடைய குமாரர்களான இராம லக்ஷ்மணர்களென்ற இரண்டு சகோ தரர்கள் இப்பொழுது இக்காட்டில் வந்திருக்கிறார்கள். எல்லாவித லக்ஷணமுமமைந்து எல்லாவித நகைகளும் பூண்டிருக்கும் ஒரு அழகான சிறுபெண் அவர்களுடனிருக் கிறாள். அந்தப் பெண்ணின் நிமித்தம் அவர்களால் நான் அநாதையாய் நெறிநீங்கி அலையும் ஒருபெண்போல அவ மானம் அடைந்தேன். தீயநெறியில் ஒழுகும் அந்தப் பெண்ணையும் அவர்களையும் சண்டையில் கொன்று அவர்க ளுடைய இரத்தத்தை நான் நுரையுடன் குடிக்க விரும்பு கிறேன்.” இவ்விதமாக அவள் சொல்லக் கேட்ட கரன், வெகு கோபங்கொண்டு, யமனுக்கொப்பான மகாபலம் பொருந்திய பதினான்கு ராக்ஷஸர்களைப் பார்த்து “ஆயுத பாணிகளாய் மரவுரி மான்றோல் உடுத்து இரண்டு மனிதர்கள் ஒரு பெண்ணுடன் இந்தப் பயங்கரமான தண்டகாரணியத்துக்கு வந்திருக்கிறார்களாம். அவர் களையும் அக்கொடிய பெண்ணையும் நீங்கள் கொன்று விட்டு வரவேண்டும். அம்மூவர்களுடைய இரத்தத்தை என் தங்கை குடிக்கட்டும்” என்று கட்டளை யிட்டான். இவ்வாறு கட்டளை இடப்பட்ட பதினான்கு ராக்ஷசர்களும் காற்றினால் ஒட்டப்பட்ட மேகங்கள்போல இராமரிருந்த இடத்தை நாடிச் சூர்ப்பணகையுடன் சென்றார்கள். 

சூர்ப்பணகை இராமருடைய ஆசிரமஞ் சேர்ந்து அவ்விடத்தில் சீதையுடன் உட்கார்ந்திருந்த அவ்விரு சகோதரர்களையும் அவர்களுக்குக் காண்பித்தாள். அவ் வாறு வந்த ராக்ஷசர்களையும் சூர்ப்பணகையையும் இராமர் கண்டு லக்ஷ்மணரைப் பார்த்து, “லக்ஷ்மணா, கொஞ்ச நேரம் சீதையைக் காத்துக்கொண்டிரு. இவ்விடம் வந் திருக்கும் அரக்கர்களை நான் வதஞ்செய்கிறேன்” என்றார். எல்லாமறிந்த இராமர் சொன்னதைக் கேட்டு லக்ஷ்மணர் “அப்படியே யாகட்டும்” என்று சொல்லி அவ்வாறே செய்தார்.உடனே இராமர் தமது பெரிய வில்லை நாணேற் றிக்கையிற் பிடித்துக்கொண்டு அங்கு வந்திருந்த அரக்கர் களைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார்:-“நாங்களிரு வரும் தசரத மன்னவரின் குமாரர்கள். எங்கள் பெயர் இராம லக்ஷ்மணர்கள். எளிதில் கடக்க முடியாத இத் தண்டகாரணியத்துக்கு சீதையுடன் நாங்கள் வந்திருக் கிறோம். இருஷிகள் நடத்தும் பெரிய யாகங்களுக்கு எப் பொழுதும் இடையூறியற்றும் பாபிகளாகிய உங்களை வதைக்க வேண்டுமென்று, அவர்களுடைய வேண்டு கோளின்படி, நான் எனது பாணங்களையும் மற்ற ஆயுதங் களையும் எடுத்துக்கொண்டு இங்கு வந்திருக்கிறேன்.என் னுடன் போர்புரிய வேண்டுமென்ற எண்ணமிருந்தால் இவ்விடமே பின் வாங்காமல் நில்லுங்கள். 

அப்பதினான்கு ராக்ஷசர்களும் இராமர் சொன்ன சொல்லைக் கேட்டு அவர்மேல் தாங்கள் கையில் பிடித் திருந்த சூலங்களை விசை கொண்டு எறிந்தார்கள். அவ் விதமாகத் தம் மீது விடப்பட்ட பதினான்கு சூலங்களையும் இராமர் பொன்னிழைத்த பாணங்களைச் செலுத்தித் துணித்தெறிந்தார். பிறகு கல்லையுந் துளைக்குங் கூர்மை யுள்ள பதினான்கு பாணங்களைக் கையிலெடுத்து, தமது வில்லை நேராக நிறுத்தி அதில் பூட்டி, அவ்வரக்கர்களைச் சரியாகக் குறிப்பிட்டு, இந்திரன் தனது வச்சிராயுதத்தை விடுவதுபோல விடுத்தனர். அரக்கர்கள் தங்கள் மார்புகள் பிளவுண்டு தேக முழுதும் இரத்தமோடப் பாணத்தால் உடம்புகள் துளைக்கப்பட்டு பிராணனை இழந்து வேர் வெட்டுண்ட விருக்ஷங்கள்போல பூமியிற் சாய்ந்தார்கள். 

அவர்கள் அவ்வாறு பூமியில் விழுந்ததைக் கண்ட சூர்ப்பணகை வெகு கோபமடைந்து கரன் முன் சென்று “பதினான்கு ராக்ஷசவீரர்களையும் என்பொருட்டு அனுப்பினீர்கள். என் மனதைக் களிப்பிக்க அவர்களை இராமனை யும் லக்ஷ்மணனையும் வதைக்கக் கட்டளை யிட்டீர்கள். கையில் தரித்த சூலங்களையும் கத்திகளையும் உடைய கோபிளான அவ்வரக்கர்கள் மார்பைப் பிளந்து சென்ற பாணங்களால் யுத்தத்தில் கொல்லப்பட்டார்கள். மகா பலம் பொருந்திய அவர்கள் ஒரு நொடியில் மாண்டு பூமியில் விழுந்ததையும், இராமனது ஆச்சரியமான செய் கையையும் கண்டு எனக்குப் பெரும் பயமுண்டாயிருக் கிறது. நான்கு பக்கங்களிலும் பயம் வரக் கண்டு நான் உன்னைச் சரணமடைந்தேன். என் மீதும் அவ்வரக்கர்கள் மேலும் உனக்குக் கருணை இருப்பதும் இராமர் முன் நின்று போர் புரிய உனக்கு சக்தி இருப்பதும் உண்மையானால், இப்பொழுது தண்டகாரணியத்தில் குடிவந்த இவ்வரக்கர் குல கோடரியை நீ நாசம் பண்ண வேண்டும். எனக்குச் சத்துருவாகிய இராமனை நீ இன்று கொல்லாவிடில், நான் வெட்கம் மானம் என்பவைகளை விட்டு நின் கண் முன்பாக என் உயிரை விட்டுவிடுவேன்” என்றாள். பெரிய வயிற்றை யுடைய அந்த அரக்கி இவ்வாறு நெடுநேரம் புலம்பித் தனது கைகளால் மார்ப்பிலடித்துக் கொண்டு வெகு துக்கத்துடன் கதறினாள். 

அரக்கர்கள் மத்தியிலிருந்த மகாசூரனாகிய கரன், சூர்ப்பணகை இவ்வாறு இடித்திடித்துச் சொல்லிய வார்த்தைகளைக் கேட்டு சகிக்க முடியாதவனாகி, அவளைப் பார்த்து “அம்மா, நீ சொன்ன அவமானச் சொற்களால் எனக்குண்டாயிருக்குங் கோபத்துக்கு அளவேயில்லை. பொங்கிவரும் சமுத்திரத்தைத் தாங்க முடியாத கரை போல் அதனை என்னால் சகிக்க முடியவில்லை. என் வீரத் துக்கு மானுடனாகிய இராமனை நானொரு பொருளாக எண்ணவேயில்லை. தான் செய்த குற்றத்திற்காக அவன் இன்று என்னால் வதைக்கப்பட்டு தன் பிராணனை இழக் கப் போகிறான். ஆகையால் நீ கண்ணீர் சொரிவதை அடக்கு; உன் பயத்தை விட்டுவிடு. நானின்று இராமனை அவன் தம்பியுடன் யமன் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறேன்’ என்றனன். 

பிறகு கரன் தனது சேனாபதியான தூஷணனைப் பார்த்து, ”அன்பனே, எனது சொற்றவறாமல் நடப்பவர் களும், அஞ்சத்தக்க வேகத்தை உடையவர்களும், போர் முகத்தில் பின் வாங்காமல் நிற்கும் திறனுள்ளவர்களும், பராக்கிரமமுள்ளவர்களுமான பதினாலாயிரம் ராக்ஷசர் களைத் தண்டுசேர். எனது இரதத்தையும் எனது வில்லை யும் பாணங்களையும் கொண்டுவா. செருக்குற்ற இந்த இராமனை வதைக்க நானே போகிறேன்” என்றனன். இவ்வாறு கரன் சொல்ல தூஷணன் அநேக வித வர்ண முடைய குதிரைகளைப் பூட்டி சூரியனுக்கொப்பாகிய காந்தியையுடைய இரதீத்தைக் கொண்டு வந்தனன். மேருமலையின் சிகரம்போல விளங்குவதும், மாற்றுயர்ந்த தங்கத்தால் இழைக்கப்பட்டதும், மிக்க அழகான குதிரை கள் பூட்டப்பட்டதுமான அந்த இரதத்தின்மேல் கரன் வெகு கோபத்தோடு ஏறினான்.தேரிலேறி இரதங்களும் ஆயுதங்களும் கொடிகளும் நெருங்கிய பெரிய சேனையி லுள்ள ராக்ஷசக் கூட்டங்களைப் பார்த்துக் கரனும் தூஷணனும் “நடவுங்கள்” என்று சொன்னார்கள். 

பராக்கிரமமுள்ள கொடிய கரன் இராமரது ஆசிரமத் துக்குச் சமீபத்தில் வரும்பொழுது, இராமர் தமது தம்பி லக்ஷ்மணரைப் பார்த்து’ மகாபலம் பொருந்தியவனே, எல்லாப் பிராணிகளையும் ஒழித்துவிடக்கூடிய இப்பெரிய நிமித்தங்களைப் பார்! இவைகளெல்லாம் இப்பொழுது ராக்ஷசர்கள் நாசத்துக்காகவே தோன்றுகின்றன. கொடிய செயல்களைப் புரியும் ராக்ஷசர்களுடைய கர்ச்சனையோடு கூட அவர்களது பேரிடியின் முழக்கமும் கேட்கின்றது. புத்திமானாயிருக்கப்பட்டவன் தனக்கு ஆபத்து வரப் போகிறதென்று எப்பொழுது சந்தேகிக்கிறானோ அப்பொழுதே அதை வருமுன்னரே தடுக்க வேண்டிய பிரயத் தனங்கள் பண்ண வேண்டுமன்றோ? அப்பொழுது தான் அவனுக்கு நன்மையுண்டு. ஆகையால் நீ உன் கையிற் பாணங்களையும் விற்களையும் சித்தமாக எடுத்துக்கொண்டு வைதேஹியோடு நான்கு பக்கங்களிலும் மரமடர்ந்த ஒருவரும் எளிதில் அணுகக்கூடாத அம்மலையின் குகையில் போயிரு” என்றார். இவ்விதமாக இராமர் சொல்லியதைக் கேட்டு லக்ஷ்மணர் வில்லையும் அம்பையும் கையிலெடுத்துக் கொண்டு சீதையுடன் ஒருவராலும் அணுகக்கூடாத குகையொன்றைச் சேர்ந்தார். லக்ஷ்மணர் அவ்வண்ணம் சீதையை அழைத்துக்கொண்டு குகைசேர, இராமர் “நாம் சொன்னபடி நமது தம்பி நடத்தினான்” என்று சந்தோஷ மடைந்து தமது கவசத்தையெடுத்து அணிந்துகொண்டார். அக்கினிக்குச் சமமான கவசத்தை பூண்ட இராமர் இருட் டறையில் விளங்கும் புகையில்லாத நெருப்புப்போல் பிரகாசித்தார். அவர் கையில் வில்லை ஏந்திப் பாணங்களைத் தெரித்து கொண்டு எத்திசையிலும் நாண் சத்தத்தைக் கேட்பித்து நின்றார். 

கரன் தன்முன்னே போன சைநியத்துடன் இராம ருடைய ஆச்சிரமத்துக்குச் சென்று, அவ்விடத்தில் பகை வரை யடக்கும் பமராக்கிரமுள்ள இராமர் கையில் வில் லேந்தி வெகு கோபமாக நிற்பதைக்கண்டான். அவரைப் பார்த்தவுடன் கரன் வில்லையும், பாணங்களையும் கையில் எடுத்து உயர்த்திக்கொண்டு, அவருக்கு நேர்முகமாக இர தத்தை நடத்தும்படி “ஒட்டு,ஓட்டு” என்று சாரதியை நோக்கி பெருஞ்சத்தமாகக் கட்டளையிட்டான். கரனு டைய உத்தரவுப்படி இராமர் வில்லைப்பிடித்துக்கொண்டு தனிமையாக நின்ற இடத்திற்குக் குதிரைகளைச் சார்தி நடத்தினான். இராமருக்கும் அவ்வரக்கர்களுக்கும் பார்ப் பவர்கள் மயிர்க்கூச்செறியும்படியாக ஆச்சரியமும் பயங் கரமுமான யுத்தம் அன்று நேர்ந்தது. கரன் தனது பலமான வில்லை நாணேற்றி இரத்தத்தில் தோய்ந்து கோபங் கொண்ட விஷசர்ப்பங்கள் போல் விளங்கும் பாணங்களை இராமர்மேல் விடுத்தான். சூரியனுக்கொப்பான பிரகாச முடைய இராமருடைய கவசம் அப்பாணங்களால் வெட் டுண்டு கீழே விழுந்தது. அப்பாணங்களால் தேகம் முழு தும் அடியுண்டு வெகு கோபங்கொண்டு போர்க்களத்தில் நின்ற இராமர் கரனை உடனே முடித்துவிடக் கருதி வெகு கம்பீரமாக ஒலிக்கும் மற்றொருவில்லை எடுத்து நாணேற்றி னார். அது விஷ்ணுவின் வில் : அகஸ்தியரால் இராமருக் குக் கொடுக்கப்பட்டது. புகழ்பெற்ற அந்த வில்லை இராமர் கையிலெடுத்துக்கொண்டு கரனை எதிர்த்தார்.கொஞ்சம் வளைந்த முனைகளும் பொன் இறகுகளுமுள்ள பாணங்களை இராமர் வெகு கோபத்துடன் விடுத்துக் கரனுடைய வில்லை வெட்டினார். 

பிறகு கரனைப்பார்த்து இராமர் வெகு மிருதுவாக அவன் கொடிய செயல்களையெடுத்துக் காட்டினார். “எவ னொருவன் உலோபத்தன்மையால் பாபங்களைப் பண்ணிக் கொண்டு அதிக இலாபத்தின் இச்சையால்தான் செய்வது பாபமென்றறியாமல் இருக்கிறானோ அவன் ஐஸ்வரியத் திலிருந்து விலக்கப்பட்டவனாய், ஆலங்கட்டியைப் புசித்து அறணை மாண்டுவிடுவது போல, சீக்கிரம் மாள்வான். தருமத்தை நடத்திக்கொண்டு தண்டகாரணியத்தில் வசித்து வரும் தபசிகளைக் கொன்றதனால் உனக்கு என்ன இலாபம்? உலகத்தார் வெறுக்கும் கொடிய செய்கை களைச் செய்யும் பாவிகள் ஒருபொழும் க்ஷேமமாக இருக்க மாட்டார்கள்; வேரற்ற விருக்ஷம்போல் அழிந்துவிடு வார்கள். விருக்ஷங்கள் பருவத்தில் புஷ்பிப்பதுபோல, பாவத்தொழிலைச் செய்வன் ஒவ்வொருவனும் அத்தொழி லின் பலனை தக்கநேரத்தில் தப்பாமல் அடைவான். கத்துக்கு தீமையைச்செய்யும் கொடிய பாவிகளுடைய பிராணனை வாங்க அரசனால் நான் கட்டளையிடப்பட்டிருக்கிறேன். இப்பொழுது என்னால் விடுவிக்கப்படும் தங்கமிழைக்கப்பட்ட பாணங்கள் உனது உடலை ஊடு ருவி, பாம்புகள் புற்றில் நுழைவதுபோல, பூமியைப் போய்ந்து புக்கொளிக்கும்.” 

இவ்வாறு இராமர் சொன்ன சொற்களைக் கேட்டுக் கோபமடைந்து கண்கள் சிவந்து கோபத்தால் ஒன்றுந் தெரியாதவனாகிக் கரன் சொல்லலுற்றான். “இவ்விடத் தில் நான் கதையைப் பிடித்துக்கொண்டு, அசைக்கக் கூடாத பெரும்பருவதம் தாதுராகத்தால் விளக்கமுற்று நிற்பது போல் நிற்பது உனது கண்ணிற்குப் புலப்பட வில்லை. நான் கையில் கதையைப் பிடித்துக்கொண்டு உனது பிராணனை மட்டுமன்று, இம்மூவுலகத்திலும் உள் ளாருடைய பிராணன்களையும், கையில் பாசும் பிடித்த யமன்போல் தனியே வாங்கிவிடவல்லேன். நீபதினாலாயிரம் ராக்ஷசரைக் கொன்றதனால் அவர்கள் பந்துக்கள் விடும் துக்கக்கண்ணீரை இன்று நான் உன்னை வதைத்து துடைத்துவிடுகிறேன் இவ்வண்ணஞ் சொல்லிக் கரன் வெகு கோபத்துடன் அழகான கேயூரமணிந்த தனது கைகளால் எரிகின்ற இடிபோன்ற கதையைத் தூக்கி இராமர்மேல் எரிந்தான். அவ்விதமாக தம்மைநோக்கி அக்கினிபோல் விளங்கி காலனுடைய பாசத்துக்கொப்பாக வந்துகொண்டிருந்த கதையை இராமர் தமது பாணங் களால் ஆகாயத்திலேயே துகளாக்கி மாற்றினார். 

பிறகு கரனை வதை செய்வதற்காக அக்கினிக்கொப் பாய்மற்றொரு பிரமதண்டம்போல் விளங்கும் பாணமொ ன்றைக்கையிலெடுத்தார். அது தேவேந்திரனால் கொடுக்கப் பட்ட பாணம். அப்பாணம் இராமருடைய வில்லிலிருந்து விடுக்கப்பட்டு, இடிபோல முழங்கிக்கொண்டு, கரன் மார்பில் பாய்ந்தது. கரன் திருவெண்காட்டில் ருத்திர னால் தஹிக்கப்பட்டு அந்தகாசுரன் மாய்ந்ததுபோல இரா மருடைய சராக்கினியால் தஹிக்கப்பட்டு பூமியில் விழுந்தான். 

பிறகு ராஜரிஷிகளும் மற்ற ரிஷிகளும் சேர்ந்து ராமரைக்கண்டு களித்து “கொடிய செயல்புரியும் இவ் விராக்ஷசர்களை வதைக்கும் பொருட்டே மகரிஷிகளும் தங்களை அநேக உபாயங்களால் இக்காட்டுக்குக் கொண்டு வந்தார்கள். ஆகா! எவ்வளவு பெருங்காரியம் இராமர் செய்தார்! என்ன சாமர்த்தியம்! என்ன பராக்கிரமம்! இது விஷ்ணுவின் பராக்கிரமம் போலல்லவா காண் கிறது’ என்று இவ்விதமாகச் சொல்லிக்கொண்டு தங் கள் தங்கள் இருப்பிடம் சென்றார்கள். 

அச்சமயத்தில் வீரராகிய லக்ஷ்மணர் சீதையுடன் மலைக் குகையைவிட்டு வந்து சந்தோஷமாக ஆச்சிரமத் துள் புகுந்தார். சத்துருக்களைக் கொன்று, பெரிய ரிஷி களுக்கெல்லாம் சுகத்தை உண்டு பண்ணின தனது கண் வரான இராமரை சீதை கண்டு களிகூர்ந்து ஆனந்தத்தால் தழுவினாள். ராக்ஷசக்கூட்டங்கள் மாண்டதையும் இரா மர் காயமின்றி இருந்ததையும் சீதை பார்த்து சந்தோஷ மடைந்து ஆனந்தக் கடலில் மூழ்கினாள். 

21. இராவணனுக்கு அகம்பனன் உபதேசம் 

பின்பு அகம்பனன் என்னும் அரக்கன் ஜனஸ்தா னத்தை விட்டு வெகு வேகத்துடன் சென்று இராவணனைப் பார்த்து “அரசனே, ஜனஸ்தானத்திலிருந்த அரக்கர்கள் எல்லாரும் வதைக்கப்பட்டார்கள். கரனும் போரில் மாண் டான். நான் மாத்திரம் வெகு கஷ்டப்பட்டு பிழைத்து வந்தேன்” என்று சொன்னான். இவ்வாறு அகம்பனன் சொன்ன சொல்லை இராவணன் கேட்டு கோபத்தால் கண்கள் சிவந்து அவனைக் கொளுத்திவிடுவதுபோலப் பார்த்து தனது ஆயுண் முடிந்து எனது அழகான ஜனஸ்தானத்தை அழித்தவன் யாவன்? இப்பொழுது இவ்வுலகத்தில் ஒரு நாளும் வாழ முடியாத வழியைத் தேடிக்கொண்டவன் யாவன்? எனக்கு கெடுதல் செய்த பின்பு அவன் இந்திரனாக இருப்பினும், அல்லது குபேரன், யமன், விஷ்ணு இவர்களில் ஒருவனாக இருப்பினும் ஒரு பொழுதும் சுகமென்பதை அடையான். நான் காலனுக் கும் காலன்; நெருப்பையும் கொளுத்துவேன்; சாவுக்கும் சாவுவரச் செய்வேன். கோபம் கொண்டால் நான் சூரி யனையும் நெருப்பையுங்கூட எரித்துவிடுவேன். எனது பலத்தால் காற்றின் வேகத்தைக்கூட நான் தடுக்க மாட்டுவேன் என்று சொன்னான். 

அகம்பனன் பயத்தால் நடுங்கிக் கைகூப்பி “சிரேஷ்டமான அங்கமுள்ளவனும், யௌவனமுள்ளவனும் ரிஷ பத்தின் பிடர்போன்ற பிட்ரை உடையவனும், உருண்டு நீண்டு அழகாயுள்ள கரங்களை உடையவனும்,நிகரற்ற பலபராக்கிரம முடையவனும்,வீரனும்,கீர்த்தியுள்ளவ னும், ஸ்ரீமானும், தசரத மன்னவனுடைய குமாரனுமான இராமனென்பவன் ஒருவனிருக்கிறான். அவன் பெரும் புகழ் படைத்தவன்: பலவிதகான சம்பத்தடைந்தவன். அவன் தான் ஜனஸ்தானத்தை நாசம்பண்ணினவன்; கரனையும் தூஷணனையும் வதைத்தவன். அவனுக்குச் சரியான பலமுள்ள அவன் தம்பி லக்ஷ்மணன் சிவந்த கண் களுடையவன்; பேரிபோல ஒலிக்கும் குரலுமுள்ளவன் சந்திரன்போன்ற முகமுடையவன் என்றான். அகம் பனன் சொன்ன சொல்லை இராவணன் கேட்டு “இதோ நான் இராமலக்ஷ்மணர்களைக் கொல்ல ஜனஸ்தானம் செல்லுகிறேன்” என்றான். 

அதைக் கேட்ட அகம்பனன் சொல்லலுற்றான் :- “அரச, இராமனுடைய பலத்தையும் பராக்கிரமத்தையும் பற்றி நான் உண்மையாய்ச் சொல்வதைக் கேள். ஓ தசக் கிரீவ், இராமனை நீயாவது, அல்லது அரக்கர்கணமாவது ஜெயிப்பது, சுவர்க்கலோகம் பாபிகளுக்குக் கிட்டாதவாறு போல் சிறிதும் கூடாது. எல்லாத் தேவர்களும் அசுரர் களும் ஒன்றுகூடினும் இராமனைக் கொல்லமுடியாதென்பது என் எண்ணம். ஆனால் அவனைக்கொல்ல உபாய மொன்றுண்டு. அதை நான் சொல்லுகிறேன்; சற் றுக்கவனமாகக் கேள். சீதை என்ற மெல்லியலாள் அவனுடைய மனைவி. அவள் இவ்வுலகத்திலே உத்தம மான பெண். அவள் நல்ல யௌவன பருவமுள்ளவள். அவளது அவயவங்கள் ஒவ்வொன்றும் சரியாக அமைக்கப் பட்டுள்ளன. பெண்களுக்குள் ஓரிரத்தினம்போலுமவள் மணிகளிழைக்கப்பட்ட ஆபரணங்கள் பூண்டு விளங்கு கிறாள். தேவப்பெண், கந்தர்வப்பெண், அப்சரஸ் பெண் அசுரப்பெண் ஒருவரும் அவளுக்குச் சமானம் இல்லை. பின்னர் மர்னிடப்பெண் எப்படி அவளுக்கொப்பாவாள்?’ ஆகையால் நீ எப்படியாவது முயன்று இராமனை வஞ் சித்து அவனுக்குத் தெரியாமல் அவன் மனைவியை காட்டி லிருந்து தூக்கிக்கொண்டு போய்விடவேண்டும். அவளிடம் அவனுக்குக் காதல் கரையில்லையாதலால் அவள் போன பின்பு தன்னுயிரை விட்டுவிடுவான்’ இவ்வண்ணம் அகம் பனன் சொன்ன சொல் அரக்கர் மன்னவனாகிய இராவணன் மனத்திற்கு ஒத்திருந்தது. அவன் சிறிதுநேரம் சிந்தித்து அகம்பனனை நோக்கி “ஆம்; நீ . சொன்னது நன்றாகவிருக்கிறது. நான் எனது சாரதியுடன் புறப்பட் டுக் காலையில் தனிமையாய் இராமனிருக்குமிடம் போகி றேன். இவ்வழகிய மாநகருக்கு சீதையைக் கொண்டு வந்துவிடுகிறேன்’ என்று சொன்னான். 

அதன்பின் இராவணன் இரதத்தின்மேல் ஏறி எண் டிசைகளையும் பிரகாசிக்க செய்துகொண்டு புறப்பட்டான். நெடுந்தூரம் போய்த் தாடகையின் குமாரனாகிய மாரீசன் வசித்து கொண்டிருந்த ஆச்சிரமத்தை அடைந்தான். மாரீ சன் தன்னை நாடிவந்த மன்னவனுக்கு திவ்வியமான உணவுகளையும் பானங்களையும் கொடுத்து உபசாரம்பண் ணினான். இராவணன் “ஐயா, வெகு புகழ்பெற்ற இரா மன் ஜனஸ்தானத்தில் இருந்த காவலாளர்களை எல்லாம் கொன்றுவிட்டான். அழித்தற்கரிய ஜனஸ்தானம் முழு வதும் யுத்தத்தில் அழிந்துவிட்டது. நான் இப்பொழுது அவன் மனைவியைக் கவர்ந்துகொண்டு வரப்போகிறேன். அதற்கு நீ சகாயம் பண்ணவேண்டும் என்று கூறினான். 

ராக்ஷசேந்திரன் சொன்னசொல்லை மாரீசன் கேட்டு அவனைப்பார்த்து ‘சீதையைத் தூக்கிவந்து விடு என்று நின்னிடம் சொன்னவன் எவன்? அரக்கர் குலத்தினு டைய சிகரத்தைச் சிதைக்கக்கருதினவன் எவன்? இந்தத் தொழிற்கு நின்னை ஏவினவன் நினக்கு சத்துருவேயன்றி வேறல்லன். அதற்குச் சந்தேகமில்லை. அவன் நின்னைக் கொண்டு பாம்பின் வாயிலிருக்கும் விஷப்பல்லைப் பிடுங்க எண்ணுகிறான். நின்னை இந்தக் கெட்ட வழியில் செலுத்த நினைத்தவன் எவன்? இலங்கை நாயக,கோபங்கொள் ளற்க சௌக்கியமாக வந்தவழியே திரும்பி இலங்கைக் குச்செல்.நீ நின் மனைவிமார்களோடு எப்போதும் இன் புற்று வாழ்ந்திரு. இராமன் தன் மனைவியோடு வனத்தில் வசிக்கட்டும்” என்றான். மாரீசன் அவ்வாறு சொல்ல,தசக் கிரீவன் இலங்கை திரும்பி சென்றனன். 

இராமர் ஒருவரே கொடிய செயல்கள் செய்துவந்த பதினாலாயிரம் அரக்கர்களையும், திரிசிரனுடன் தூஷண னையும், கரனையும் வதைத்ததைக் கண்ட சூர்ப்பணகை இலங்கையை நோக்கி ஓடினாள். அவ்விடத்தில் தனது விமானத்தில், தேவர்கள் மத்தியில் இந்திரன் வீற்றிருப் பதுபோல, மந்திரிமார்கள் சூழ மிக்க பொலிவோடு இரா வணன் வீற்றிருக்கக் கண்டாள். இருபது தோளும், ஒருபது முகமும், அழகான ஆடைகளும், விசாலமான மார்புள்ளவனும், எல்லா ராஜலக்ஷணங்களும் அமைந்த வனும் எவ்வுலகத்துக்கும் பயமுண்டாக்குகிறவனுமான இராவணனை சூர்ப்பணகை கண்டாள். 

பின்னர், வெகு பரிதாபமான நிலையிலிருந்த சூர்ப்ப ண்கை இராவணனைப் பார்த்து, வெகு கோபத்துடன் பின் வருமாறு சொன்னாள் :- “நீ இஷ்டப்படி எல்லாம் நடந்து, சுகங்களில் ஆழ்ந்து மயக்குற்று கேட்பவர்கள் ஒருவரு மில்லாமல், நினக்குப் பெருங்கேடு வந்துவிட்டதைக்கூட அறிந்துகொள்ளாமல் இருக்கிறாய். ஒற்றர்களாகின்ற கண்களால் வெகுதூரத்தில் நடக்கும் விஷயங்களை அறி கின்றதனால் அரசர்கள் தீர்க்கதரிசிகளென்று சொல்லப் படுகிறார்கள். நமது சுற்றத்தார் ஜனஸ்தானத்தில் மாண் டதை நீ இன்னும் தெரிந்துகொள்ளாதபடியால் உனக்கு சாரணர்கள் இல்லையென்றும், உன்னைச் சுற்றி உட்கார்ந் திருக்கும் மந்திரிகள் சாமான்யர்களென்றும் நான் எண்ணுகிறேன். இராமனொருவனால் வெகு கொடிய செயல்கள் புரிந்துவந்த பதினாலாயிரம் ராக்ஷஸர்களும் கரனும் தூஷணனும் கொல்லப்பட்டார்கள். அன்றியும் அவன் ரிஷிகளுக்கு அபயம் கொடுத்து தண்டகாரணி யத்திற்கு க்ஷேமத்தை உண்டாக்கி ஜனஸ்தானத்தை அலைத்துவிட்டான் 

இவ்வாறு சூர்ப்பணகை சபை நடுவே கொடுஞ்சொற் களைச் சொல்ல, இராவணன் கோபங்கொண்டு அவளை நோக்கி இராமன் என்பவன் யார்? அவன் பராக் கிரமம் என்ன? அவன் உருவம் எப்படிப்பட்டது. அவன் வீரியம் எத்தன்மையது? என்ன காரணத்தால் ஒருவ ராலும் நெருங்கமுடியாத தண்டகாரணியத்துக்கு அவன் வந்திருக்கிறான்? என்று கேட்க சூர்ப்பணகை வெகு கோபத்துடன் தான் கண்டபடி இராமருடைய பராக்கிர மத்தைப் பற்றி சொல்லத்தொடங்கினாள்:- 

“தசரத குமாரனான இராமன் நீண்ட கைகளும் விசாலமான கண்களுமுடையவன்: மரவுரிமான்றோலு முடுத்தவன் ; மன்மதன்போல் உருவமமைந்தவன். அவன் பொற்பூண் பூண்ட இந்திரதனுசுபோன்ற தனது வில்லை. நாணேற்றி மகாவிஷமுள்ள சர்ப்பங்களுக்கொப்பான கூர்மையான பாணங்களைத் தொடுக்கிறான். அவன் யுத் தத்தில் வில்லை வளைப்பதை நான் காணவில்லை: சரமாரி யால் அரக்கர் சேனை மாண்டுவிழுவதையே கண்டேன். அவன் தம்பி வெகு பராக்கிரமும் அவனுக்கொப்பான சவுரியமுமுள்ளவன்; அவனை இராமனுடைய வலக்கை யென்றும் புறத்திற் சஞ்சரிக்கும் உயிர் என்றும் சொல்ல லாம். இராமனுடைய அரிய மனைவி அவனுடைய நன் மையையே எப்பொழுதும் நாடுபவள். அழகிய கூந்தலும், அழகிய மூக்கும், அழகிய துடையும் உடைய அந்தத் தையல் தண்டகாரணியத்திற்கு ஒரு தேவதை போலவும், மற்றொரு லக்ஷ்மிபோலவும் விளங்கிக்கொண்டிருக்கிறாள். பொன்போன்ற மேனியும் சிவந்து உயர்ந்த நகங்களும் உடைய அந்த அழகுடையாள் பெயர் சீதை. அம்மெல் லிய இடையையுடையாள் விதேகராஜனுடைய குமாரி. அவ்வளவு நல்நடக்கையும், தேகத்தின் வனப்பும், நிகரற் றொளிரும் காந்தியுமுள்ள அவள் தான் நினக்குச் சரியான மனைவி. நீ தான் அவளுக்குச் சரியான கணவன். உன்னுடைய கூரிய பாணங்களால் இராமனையும் லக்ஷ்மணனையுங் கொன்று கணவனையிழந்த சீதையை மணஞ் செய்துக்கொள். அரக்கர் வேந்தே, நான் சொல்லுவது நின் மனத்திற்கொத்திருந்தால் உடனே நான் சொல்லும் வண்ணம் நட” 

சூர்ப்பணகை கூறிய மயிர்க்கூச்செறியும்படியான மொழியைக் கேட்டுத்தான் செய்யவேண்டிய காரியத்தை மந்திரிகளுடன் ஆராய்ந்து இராவணன் புறப்பட்டான். இஷ்டப்படி செல்லும் இரதமேறி, இராவணன் சமுத்திர கரையோரமாகவிருந்த மலைகளையும் சமுத்திரத்தையும் தாண்டி அக்கரை சேர்ந்து அங்கு ஜனசஞ்சாரமில்லாத அழகான அரணியத்தின் ஒரு பக்கத்தில் ஓர்ஆச்சிரமத்தை அடைந்தான். அவ்விடத்தில் மாரீசன் என்ற ராக்ஷஸனை அவன் கண்டான். மாரீசன் மனிதர்களால் செய்யமுடி யாத உபசாரங்களைச் செய்து அரக்கராஜனை ஏற்றுக் கொண்டான். பொருள் பொருந்திய சொற்களால் ராக்ஷசேந்திரா, இலங்கையில் எல்லாம் க்ஷேமமா? யாது நிமித்தம் நீ இவ்வளவு சீக்கிரமாக மறுபடியும் இங்கே திரும்பிவந்தனை?” என்று வினாவினான். 

22. மாயை மான் 

இவ்வாறு மாரீசன் வினவ, அவனைப் பார்த்து இரா வணன் சொல்லலுற்றான்:- “ஓ மாரீசா, நான் சொல்லு வதைக் கேள். எனக்கு மிகுந்த துக்கமொன்று நேர்ந்திருக் கிறது. துக்கமடைந்தவனை அத்துக்கத்திலிருந்து நீக்கி வைக்க நீதான் வல்லவன். ஜனஸ்தானத்தில் வெகுபலம் பொருந்திய பதினாலாயிரம் அரக்கர்களும் பாதசாரியாய் யுத்தம் செய்த மனுஷனாகிய இராமன் ஒருவனால் கொல் லப்பட்டார்கள். போரில் கரனும் மாண்டான்.தண்ட காரணியமும் பயம் நீங்கியது. இராமன் தன் பலத்தின் செருக்கால் கொஞ்சமேனும் பகையில்லாத எனது தங்கை யின் காதுகளையும் மூக்கையும் அறுத்து அவளுடைய உரு வத்தைக் குலைத்தான். தேவப்பெண்ணுக் கொப்பான அவன் மனைவி சீதையை நான் ஜனஸ்தானத்திலிருந்து எடுத்துவரப்போகிறேன். அவ்விஷயத்தில் நீ எனக்கு உதவி செய்யவேண்டும். நீ எனக்குச் செய்ய வேண்டிய உதவி இன்னதென்பதை நான் சொல்லுகிறேன் கேள். நீ அழகான வெள்ளிப் புள்ளிகள் அமைந்த ஒரு பொன் மானாக உருவமெடுக்க வேண்டும். அவ்வுருவுடன் இராம னாச்சிரமம் சென்று, நீ சீதையின் முன்னர் உலாவவேண் டும். உன்னை சீதை உண்மையாகவே ஒரு மானாக எண் ணித் தனது கணவனையும் அவன் தம்பி லக்ஷ்மணனையும் பார்த்து உன்னைப் பிடித்துக்கொடுக்கும்படி வேண்டுவாள். அவ்விருவர்களும் உன்னைப் பிடிக்க ஆச்சிரமத்தை விட்டு புறப்பட்டபின்பு, ஒருவித இடையூறுமின்றி சந்திரனது காந்தியை இராகு விழுங்குவதுபோல் நான் சீதையை எடுத்துச் செல்வேன்.”

இவ்வண்ணம் இராவணன் சொன்ன சொல்லைக் கேட்டு மாரீசன் முகம் சோர்ந்து பயத்தால் நடுங்கினான். உலர்ந்துபோன தனது உதடுகளை நாவினால் நக்கிக்கொண்டு கண்களை இமை கொட்டாமல் விழித்து, இறந்தவன் போலாகி, மிக்க துயரமடைந்து, இராவணனை உற்றுப் பார்த்தான். விஷயங்களை நன்றாக அறிந்தவனான மாரீசன் இராவணனைப் பார்த்து, 

“வேந்தே, இனிமையாகப்பேசுகின்றவர்கள் எங்கும் உளர் ; கேட்கும்பொழுது அப்பிரியமாய்த் தோன்றின போதிலும் பிறகு மிகுந்த நன்மையைப் பயக்கும்படியான வார்த்தைகளைப்பேசுகிறவர்களும் கேட்பவர்களும் அரியர். ஒற்றர்களில்லாமையாலும், சாபல்லியத்தாலும், இந்திர னுக்கும் வருணனுக்கும் ஒப்பான மகாவீரியமும் மகா குணமும் பொருந்திய இராமனை நீ உண்மையாக அறிந்து கொள்ளவில்லை. ஐயனே, இராமன் கோபங்கொண்டு இவ் வுலகத்தில் அரக்கர்கள் இல்லையாம்படி செய்யாமலிருந் தால், சீதை பிறந்தது உனது நாசத்திற்கு அல்லாமலிருந் தால், சீதையின் காரணத்தால் எனக்கும் ஒருவித கேடும் உண்டாகாமலிருந்தால், அதுபோதும். இராமன் தருமத் தின் அவதாரம். அவன் வெகு சாது; உண்மையான பராக்கிரமமுள்ளவன். இந்திரன் தேவர்களுக்கு இறை வனாமாறுபோல அவன் இவ்வுலகத்திற்கெல்லாம் இறை வன். பதிவிரதா தருமத்தால் பாதுகாக்கப்பட்டு விளங் கும் சீதையை அக்கினியிடமிருந்து அதன் ஒளியை அப் கரிக்க எண்ணுகிறவன்போல் எண்ணுகிறாய். அவனது பராக்கிரமம் ஒப்பிட முடியாதது. அவன் மனைவி சீதை அவனுடைய வில்லால் பாதுகாக்கப்பட்டு வருகிறாள். அவளைக் காட்டிலிருந்து எடுத்துவர உன்னால் ஒருபொழுதும் முடியாது. அப்பெண்மணி சிங் கத்தின் பிடர் போன்ற பிடரையுடைய மானிட சிங்க மாகிய இராமனுடைய உயிருக்குயிரான மனைவி; எப் பொழுதும் அவனிடம் நீங்காத அன்புடையவள். வெகு பராக்கிரமசாலியாகிய இராமனுடைய மனைவியை, கொழுந்துவிட்டெரியும் தீயின் ஒளியை எடுத்தோடக் கருதுபவன்போல்,நீ எடுத்தோட எண்ணுவது ஒரு பொழுதும் முடியாத காரியம். நீ உன்னுடைய பிராணன் மேலும், சுகங்களின்மேலும், எய்தற்கரிய இராச்சியத்தின் மேலும் ஆசை உள்ளவனாய் அவைகளை வெகு காலம் அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டிருந்தால், இராமருடைய பகையை ஒருகாலும் தேடாதே. 

“நான் முன்னொருகாலத்தில் ஆயிரம் யானைகளின் பலமுடைய மலைக்கொப்பான உருவுடன் இவ்வுலகமெங் கும் சஞ்சரித்தேன். அப்பொழுது நான் முகில்போல் கரிய நிறமுடையவனாய், காதில் தங்கக்குண்டலங்கள் அணிந்து தலையில் கிரீடம் புனைந்து, கையில் பரிகையாயுதம் ஏந்தி உலகத்துக்கெல்லாம் பெரும் பயத்தை உண்டுபண்ணிக் கொண்டு, ரிஷிகளின் மாமிசத்தைப் புசித்து, தண்ட காரணியத்தில் திரிந்து கொண்டிருந்தேன். அப்படி நானிருந்த காலத்தில் என்னைக் கண்டு விசுவாமித்திர முனிவர் பயந்து தசரதரிடம் சென்று அவரைப் பார்த்து வேந்தே, மாரீசனுக்கு நான் மிகவும் அஞ்சுகிறேன். ஆகையால் நான் யக்ஞம் பண்ணுங்காலத்தில் இராமன் வந்து என்னைப் பாதுகாக்க வேண்டும்” என்றார். இராமரை அழைத்துக்கொண்டு சந்தோஷமாக தமது ஆச்சிரமம் சென்றார். அவர் அதன்மேல் தீக்ஷைசெய்து கொண்டு தண்டகாரணியத்தில் யக்ஞம்பண்ண உட்கார்ந் தார். அவருக்கு அருகில் இராமன் தனது வில்லைக் கையிற் பிடித்து நின்றான். நான் அவனைச் சிறுபிள்ளை என்று எனது புத்தியின்மையால் அலக்ஷ்யமாய் எண்ணி வெகுவேகமாக விசுவாமித்திர முனிவருடைய வேதிகையை நோக்கிச் சென்றேன். அப்போது இராமன் கூரிய பாண மொன்றை எய்து, என்னைத் தூக்கி நூறுயோசனை தூரத் துக்கப்பால் சமுத்திரத்தில் எறிந்தனன். உன்மனைவிக ளோடு நீ சந்தோஷமாக இருந்து வெகுகாலம் வாழவேண்டு மென்று விரும்பினால் இராமனுடைய பகையைத் தேடாதே. 

“இவ்வாறு வெகு கஷ்டப்பட்டு அப்போரில் நான் இராமனிடமிருந்து தப்பிப்பிழைத்தேன். பின்பு நடந்த தைச் சொல்லுகிறேன் ; பதிலுத்தரம் சொல்லாமல் கேள். முன்பு இராமனால் அலக்ஷ்யமாய் விடப்பட்டபடியால், பின்னர் நான் செருக்குக் கொண்டு, வேறு இரண்டு அரக் கர்களுடன் உருமாறித் தண்டகாரணியம் புகுந்தேன். தீக்கொப்பான நாவும், கூர்மையான உடைய பெரிய மான் வடிவமெடுத்து, முனிவர்களுடைய கோரப்பல்லும் மாமிசத்தைப் புசித்துக்கொண்டு, நான் அக்காட்டில் திரிந்தேன். முனிவர்களைக் கொன்று இரத்தத்தைக் குடித்து மாமிசத்தைப் புசித்து திரியும் அவர்களுடைய காலத்தில் ஒருநாள் தவவேடம் பூண்டு தருமத்தை வளர்த்துக்கொண்டு வந்த இராமனையும், வெகு பாக்கியசாலியான சீதையையும், மகாரதனான லக்ஷ்மணனையும் கண் டேன். உண்டியைக் குறைத்துக்கொண்டு, எல்லாப் பிராணிகளுக்கும் நன்மை புரிந்துவந்த இராமனுடைய பலத்தை நான் முன்போலிருக்கும் என்று கருதாமல், என் புத்தியின்மையால் அவனைத் தபசி என்று அலக்ஷியம் செய்து, அவனிடம் முன்பு நான் வைத்திருந்த பகைமை யால் கோபங்கொண்டு, எனது அவனைக் கொன்று விடவேண்டுமென்று மானுருவத்தோடு கூரான கொம்பினால் போய் எதிர்த்தேன். அவன் தனது வில்லை வளைத்து மூன்று பாணங்களை விடுத்தான். அவை அவனுடைய வில்லிலிருந்து கருடனுக்கொப்பான வேகத்துடன் கிளம்பின. இரத்தத்தைத் தங்களுக்கு உணவாகக் கொண்ட அப்பாணங்கள் வச்சிராயுதத்துக்கொப்பாக எங்கள் மூவர்களையும் நாடி வெகு வேகமாக வந்தன. முன்னரே இராமனுடைய பாணத்தின் பலத்தை அறிந் தவனாகையால் நான் ஓடித் தப்பினேன். மற்ற இருவர் களும் அப்பாணத்தால் மாண்டார்கள். 

“இராமனுடைய பாணத்தால் மாளாமல் நான் எவ் வாறோ உயிர்தப்பி, கெட்டசெய்கைகளைவிட்டு, தவவேடம் பூண்டு. அன்று முதல் இவ்விடத்தில் தவஞ்செய்து கொண்டு வசிக்கிறேன். மரங்களைப் பார்க்கும்பொழு தெல்லாம் ஒவ்வொரு மரத்திலும் கையில் பாசமேந்திய யமனைப்போல மரவுரியும் மான்றோலுமுடுத்த இராமனை நான் காண்கிறேன். அதிக பயமுடைமையால் என்னைச் சுற்றி எப்போதும் ஆயிரம் இராமர்கள் நிற்க நான் காண் கிறேன். இக்காடு முழுதும் இராமன் ஒருவனே இருக்கிற தாக எனக்குத் தோற்றுகிறது. இராமன் இல்லாத இடங் களிலும் அவனை நான் காண்கிறேன். தூக்கத்திலுங்கூட நான் இராமனைப்பற்றிக் கனவுகண்டு உளறிக்கொண்டு பிரக்ஞையற்றவனாகிறேன். இராமனுக்கு நான் மிகவும் பயந்திருக்கிறபடியால் ரகாரத்தில் தொடங்கும் ரத்தினம், ரதம் என்ற பெயர்கள்கூட எனக்குப் பெரும்பயத்தை. உண்டாக்குகின்றன. இராகவனுடைய வீரியத்தை நான் நன்றாக அறிவேன். நீ அவனுடன் யுத்தம் செய்வது சரியன்று. நான் பிழைத்திருக்க வேண்டுமென்ற எண் ணம் உனக்கிருந்தால் அவன் பெயரை என் முன் சொல் லாதே. இவ்வுலகத்தில் தருமத்தைச் செய்துவந்த சாதுக் கள் அநேகர் பிறர் குற்றங்களுக்காக மாண்டிருக்கிறார் கள். நீ என் நண்பன் ஆகையால் நான் உன் நன்மையை நாடி இந்த உண்மையைச் சொன்னேன். நீ என் சொல் லைக் கேளாவிடில் உன்னுடைய பந்துக்களுடன் இராமனால் போரில் மாண்டுவிடுவாய்.’ 

வெகு நியாயமாக மாரீசன் சொன்ன நன்மை பயக்கும் சொற்களை, இறந்துபோக எண்ணினவன் மருந்தை உட் கொள்ளாதவாறு இராவணன் ஒத்துக்கொள்ளவில்லை. அன்றியும் வெகு அனுகூலமாகப் பேசின மாரீசனை நோக்கி, இராவணன், தனக்கு முடிவுகாலம் கிட்டிவிட்டபடியால், பின்வரும் கடுஞ்சொற்களைச் சொன்னான்:”ஓ மாரீசா,நான் உன்னிடம் இந்த விஷயத்தின் நன்மை தீமைகளைப் பற்றி பாவது தகுதியைப்பற்றியாவது கேட்கவரவில்லை. உன் னுடைய உதவியை மட்டும் கேட்டேன். ஓ ராக்ஷசா, இது செய்து விட்டு, நீ உன்னிஷ்டப்படி எவ்விடம் போக வேண்டுமோ அவ்விடம் போ.நானிந்த உபகாரத்துக்காக உனக்கு என்னுடைய இராச்சியத்தில் பாதி கொடுக்கி றேன். என் கட்டளைப்படி நீ செய்யாதபக்ஷத்தில் நான் உன்னை இப்பொழுதே கொன்றுவிடுவேன். அரசனுடைய விருப்பத்திற்கு மாறாக நடப்பவன் ஒருகாலும் சுகத்தை அடையமாட்டான்” 

இது ராஜாக்கினையாக கட்டளை யிடப்பட்ட மாரீசன் அவனைப்பார்த்து சற்றும் அஞ்சாது கோபத்தோடு கூறு வானாயினான் ;- ” நிசாசர, எந்தப்பாவி நீயும், உனது பிள்ளைகளும், தேசமும், மந்திமார்களும், எல்லாரும் ஒருங்கே அழிய இவ்விதமான போதனையை உனக்குச் செய்தான்? இராவணா,கெட்ட வழியில் புகும் உன்னைத் தடுக்காத அமைச்சர்கள் கொல்லப்படத் தக்கவர்களாயி னும் நீ அவர்களைக் கொல்லுகின்றிலை. துர்ப்புத்தியுள்ள வனும் ஐம்புலன்களை அடக்காதவனுமான நின்னை அரச னாகவுடைய அரக்கர்கள் அனைவர்களும் அவசியமாக நாச மடையப் போகிறார்கள். இராமன் என்னைக்கொன்று சீக்கிரமாக உன்னையும் கொன்றுவிடப் போகிறான்.நீ சீதையை என்னுடைய உதவியால் ஆச்சிரமத்திலிருந்து எடுத்துவந்துவிட்டபோது நீ யென்ன நானென்ன இலங் கையென இராக்கதர்களென்ன உய்வதில்லை.” 

பின்னர் இராவணனும் மாரீசனும் தேவவிமானம் போன்ற அந்தத் தேர்மீதேறி அவ்வாச்சிரமத்தை விட்டு வேகமாகப் புறப்பட்டார்கள். தண்டகாரணியம் சேர்ந்து இராமருடைய ஆச்சிரமத்தை அடைந்தார்கள். தேரினின்றும் இறங்கி இராவணன் மாரீசனுடன் அவ்வாச்சிரமத்தைப் பார்த்தான். பின்பு அவன் மாரீசன் கையைப் பற்றிக்கொண்டு “அதோ வாழைகளால் சூழப்பட்டுத் தோன்றுகிறதே அதுதான் ராமனுடைய ஆச்சிரமம். இனி நீ நாம் இங்கு வந்த காரியத்தைச் செய்யக்கடவாய்” என்றான். அதைக் கேட்ட மாரீசன் சீதையினுடைய மனத்தைக் கவர்வதற் காக ஒரு கணப்பொழுதிற்குள் அநேகவிதமான அழகிய இரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டாற்போன்ற புள்ளி களையுடைய பொன்மான் உருவங்கொண்டு அவ்வழகான காட்டையும் இராமருடைய ஆச்சிரமத்தையும் பொலி வுறச்செய்து பசும்புற்றரைகளில் புல்மேய்ந்து திரிந்தனன். அம்மான் சிலநேரம் ஓரிடம் மேய்ந்துவிட்டு மற்றோரிடத் துக்கோடும்; மறுபடி அங்கிருந்து திரும்பும்; சிறிதுகாலம் வேகமாக ஓடித் திரும்பும்; சிறிதுநேரம் துள்ளி விளையா டும்; சிறிதுவேளை தரையில் படுக்கும். அந்த மானைக்கண்டு அக்காட்டிலுள்ள மற்றை மான்கள் அதனருகிற் சென்று அதை மோந்து, பின் பலதிசைகளிலும் ஓடின. 

அத்தருணத்தில் அழகிய கண்களையுடைய சீதை மலர் கொய்யும்பொருட்டு அக்காட்டுக்கு வந்தாள். சீதை முத்தும் மாணிக்கமும் போன்ற புள்ளிகளையுடையதும் ஒருபொழுதும் காணாததுமான அம்மானை கண்டு வெகு ஆச்சரியமும் சந்தோஷமுமடைந்து ஆயுதபாணிகளாகிய தனது கணவனையும் லக்ஷ்மணரையும் அவ்விடத்துக்கு வரும்படி கூப்பிட்டாள்.அவர்கள் அவ்விடம்சென்று நான்கு புறத்தும் பார்த்து அம்மானைக் கண்டார்கள். அதைக்கண்டதும் லக்ஷ்மணர் சந்தேகப்பட்டு இராமரை நோக்கி “இந்தமானை ராக்ஷச மாரீசன் என்று நான் எண் ணுகிறேன்.ஓ புருஷசிரேஷ்ட, உலகத்தில் இப்படி இரத் தினமிழைத்த மான் உண்மையாக இல்லை. ஆனபடியால் இது மாயை என்பதற்குச் சந்தேகமில்லை” என்று சொன்னார். 

லக்ஷ்மணர் அப்படிச் சொன்னதைச் சீதை தடுத்து, மாரீசனுடையமாயை மனத்தைக் கவர புன்னகைசெய்து, சந்தோஷங்கொண்டு, கணவனைப்பார்த்து “என் நாதா, இவ்வழகான மான் என்மனத்தைக் கவருகின்றது. தாங்கள் இதை எனக்குப் பிடித்துத் தரவேண்டும். நமது விளையாட்டுக்கு இது உபயோகப்படும். உயிருடனே இம் மானைத் தாங்கள் பிடிக்கக்கூடுமானால் மிக ஆச்சரியமாக இருக்கும். எல்லாரும் இதைக்கண்டு வியப்படைவார்கள். வனவாசம் முடிந்து’ நாம் நமது இராச்சியத்தை அடைந்தபோது இம்மான் நமது அந்தப்புரத்திற்கு ஒரு அலங்காரமாக இருக்கும். இம்மானை உயிருடன் பிடிக்க முடியாதாயின் இதனுடைய தோல்கூட அழகாகவிருக்கும்” என்று வேண்டினள். இராமரும் வியப்புற்றார். வெகு சந்தோஷத்துடன் தமது தம்பியைப்பார்த்து ‘லக்ஷ் மணா, சீதை இம்மானிடத்தில் மிக ஆசைப்பட்டிருக்கிறாள். தங்கநிறமானதும் அநேகவித இரத்தினங்களின் வண் ணத்தை உடையதுமான இதன்ரூபத்தைக் கண்டு யார் தான் ஆச்சரியமடையார் ? நீ சொல்லுகிறபடி இது அரக் கன் மாயையாகவிருந்தாலும் நான் அவசியம் இதை வதை செய்யவேண்டியவன். மாரீசன் என்ற அக்கொடிய பாவி இக்காட்டில் அநேக முனிவர்களை வதை செய்திருக்கிறான். நீ ஆயுதபாணியாகச் சீதையைச் சாக்கிரதையாய் இவ் விடத்தில் பாதுகாத்துக்கொண்டிரு. நான் இதைப்பிடிக் கப்போகிறேன்” என்று கூறினர். 

இவ்வாறு தன் தம்பிக்குக் கட்டளையிட்டுவிட்டு வெகு பராக்கிரமத்தையுடைய இராமர் பொற்பிடியுள்ள தமது வாளை இடையில் கட்டினார். பின்பு இரண்டு அம்பறாத் தூணிகளை முதுகில் வீக்கி தமக்கு ஓராபரணம்போல விளங்குவதான மூவிடங்களில் விளைந்துள்ள தமது வில் லைக் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டார். அவ்வாறு புறப்பட்டுவந்த அம்மன்னர் மன்னனைக்கண்டு மாரீச னாகிய மான் நடுநடுங்கி ஓடி யொளிந்தது; மறுபடி அவர் கண்ணிற்குப் புலனாயிற்று. ஒருகால் பாணம் பாயும் தூரத்துக்கப்பால் ஓடிச் செல்லும்; ஒருகால் கிட்டி வந்து ஆசைகாட்டும்; ஒருகால் தன் உயிருக்கு அபாயம் வந்ததா கப் பயந்து வெகுகலக்கமெய்தி ஆகாயத்தில் எழும்பிக் குதித்தோடும்; ஒருகால் காட்டில் வந்து கண்ணுக்குப் புலனாகும்; ஒருகால் புலனாகாது மறைந்துவிடும். இவ்வாறு மாரீசன் இராமர் கண்களுக்கு எதிர்ப்பட்டும் எதிர்ப் படாது ஓடிமறைந்தும் அவரை ஆச்சிரமத்திலிருந்து வெகு தூரம் கொண்டுசென்றான். 

இராமர் தம்மை அவ்வளவு தூரம் அம்மான் இழுத்து வந்ததற்காக வெகு கோபங்கொண்டு அதனைக் கொல்ல உறுதி செய்து, சூரியனுடைய கிரணங்களுக் கொப்பாக ஜ்வலிக்கும் ஒரு பாணத்தை எடுத்துத் தமது பலமான வில்லில் பூட்டி அம் மானைக்குறிப்பிட்டு எய்தார். இடிக் கொப்பான அந்த உத்தம பாணம் மாரீசன் தேகத்தைக் கிழித்து அவனுடைய இருதயத்தையும் பிளந்தது. ஆயுள் முடிந்த அவ்வரக்கன் ஒரு பனையுயரம் ஆகாயத்தில் எழும்பி வெகு பயங்கரமாக ” சீதா ஓ லக்ஷ்மணா!’ என்று கதறிக்கொண்டு பூமியில் விழுந்தான். 

அப்பொழுது அவன் அரக்கர்களுக்குரிய பயங்கரமான உருவத்தை அடைந்து, மாண்டுபூமியில் விழுந்து, தேகமெல்லாம் இரத்தமொழுக வெறுந் தரையில் புரண்டு கொண்டிருந்ததை இராமர் கண்டு, லக்ஷ்மணன் சொன்னது நிச்சயமாய் விட்டதென்று தெரிந்து மனதில் சீதையைக் குறித்து நினைத்தார். ‘இது மாரீசனுடைய மாயை. லக்ஷ்மணன் இதை முன்னரே அறிந்து சொன்னான். ‘ஓ சீதா, லக்ஷ்மணா என்று பெருஞ் சத்த மாய்க் கூச்சலிட்டு மாண்டான்! இதைக்கேட்டுச் சீதை என்ன செய்வாளோ தெரியவில்லை! வெகு பராக்கிரம சாலியாகிய லக்ஷ்மணன் யாது செய்வான்?’ என்று சிந்தித் துக்கொண்டிருக்கையில் தர்மாத்துமாவான இராமருக்குத் தேகம் மயிர்க்கூச்செறிந்தது. அவர் உடனே உடனே ஆச்சிரமத்தை நோக்கி வெகு வேகமாகச் சென்றார். 

தனது நாயகனுடைய குரல்போன்ற அந்தப் பரிதாப மான கூச்சலைக்கேட்டு சீதை லக்ஷ்மணரைப்பார்த்து “இராகவருக்கு என்ன நேர்ந்தது என்று போய்ப்பாரும். அவர் கதறினதைக்கேட்டு எனது இருதயமும் உயிரும் தம்முடைய நிலையில் நிற்கவில்லை. காட்டில் கதறும் உமது தமையனாரைக் காப்பாற்றுவது உமது கடமை. செல்லும். இடபம் சிங்கத்தினிடத்தில் சிக்கிக்கொண் டதுபோல் அவர் அரக்கர்கள் வசம் அகப்பட்டுக் கொண் டார்” என்றாள்.அவளைப் பார்த்து லக்ஷ்மணர் “வைதேகி, பன்னகர், அசுரர், கந்தருவர், தேவர், மானிடர், ராக்ஷசர் ஆகிய இவர்களில் ஒருவரும் உம்முடைய கணவரைவெல்ல முடியாது. இந்திரனுக்கொப்பான இராமர் முன் நின்று போர்புரிய வல்லவர்கள் ராக்ஷசர்கள், பிசாசர்கள், கின் னரர்கள், மிருகங்கள், பயங்கரமான தான வர்கள் முதலியவர்களுள் ஒருவருமில்லை. அம்மா, இரா மரைப் போரில் கொல்ல வல்லவர்கள் ஆகையால் உமது உள்ளத்தில் துயரம் வேண்டாம்; எவ்வித வேண்டாம். அந்தப் பொன் மானைக் கொன்றுவிட்டு உமது கணவர் விரைவில் திரும்பிவருவார். அக்கூச்சல் அவர் குரலன்று; வேறு யாரோ மாயையால் இட்ட சத்தம். இராமர் தாம் திரும்பி வருகிறவரையில் பாதுகாக்கும்படி உம்மை என்னிடம் ஒப்பித்தார். ஆகை யால் நான் உம்மை விட்டுச் செல்லமாட்டேன்” என்றார். 

இவ்விதமாக லக்ஷ்மணர் சொல்ல சீதை வெகு கோபம் கொண்டு கண்கள் சிவந்து அவரைப் பார்த்துக் கடுஞ் சொல்லால் “கெட்டவரே! கருணையற்றவரே! கொடிய வரே! குடிகேடரே! இராமருக்கு இப்போது நேரிட்ட பெருந்தீங்கு உமக்குச் சம்மதம் போலும். ஆகையாற்றான் அவருக்குத் தீங்கு வந்துவிட்டதென்பதைத் தெரிந்தும் நீர் இவ்வாறு பேசுகிறீர். குரூரமனமும் கெட்ட எண்ணமு முடைய சத்துருவாகிய உம்மிடத்தில் இவ்விதமான கொடிய செய்கை காணப்படுவது ஆச்சரியமன்று” என் றாள். இவ்வண்ணம் மயிர்சிலிர்க்கும்படியான கொடிய வசனங்களை சீதை சொல்ல ஐம்புலன்களையும் அடக்கின லக்ஷ்மணர் கைகுவித்து அவளைப்பார்த்து “அம்மா, நீர் எனக்கு ஒரு தெய்வமாகையால் நான் உமக்கு ஒரு மறு மொழியும் சொல்லக் கூடாதவனாக இருக்கின்றேன்.நான் இராகவர் இருக்கிற இடம் போகிறேன்.நீர் க்ஷேமமாக. இரும். உம்மை இவ்வனதேவதைகள் பாதுகாக்கட்டும். பல அபசகுணங்கள் தோன்றுகின்றன!மறுபடி நான் இராமரோடு திரும்பி வரும்பொழுது உம்மைப் பார்ப் பேனாக என்றார். 

23. இராவணன் சீதையை எடுத்துச் செல்லல் 

இவ்விதமாகக் கடுஞ் சொல் கூறப்பெற்ற லக்ஷ்மணர் கோபங்கொண்டு இராமரைத் தேடிப் புறப்பட்டுச் சென்றார். சமயம்பார்த்து ஒளித்திருந்த தசக்கிரிவன் உடனே சந்நியாசி வேஷம்கொண்டு சீதைமுன் வந்தான். அழகான காவித்துணி உடுத்து, தலையிலொரு சிறு குடுமி வைத்து, கையிற் குடைபிடித்து, பாதங்களில் செருப் பணிந்து, இடத்தோளில் தண்டமும் கமண்டலுவுந் தாங்கி சீதையிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். சந்திரசூரியர்கள் இருவரும் இல்லாமலிருக்கும் சந்தியாகாலத்தை நள்ளிருள் நணுகினதுபோலத் தோன்றிற்று. ராசேந்திரன் வேதமோதிக்கொண்டு சீதையை அணுகி புகழத் தொடங்கினான். 

“பொன் போன்ற மேனியை உடையராகி மஞ்சள் பட்டுடுத்து தாமரை ஓடைபோல அழகான தாமரை மலர் மாலையை அணிந்திருக்கும் நீங்கள் யாரம்மா? அழகான முகம் படைத்த மாதே நீங்கள் யார்? கீர்த்தியோ? அழகோ? லக்ஷ்மியோ? அப்சரசோ? ஐசுவரியத்தின் உருவமோ? அல்லது தனது இஷ்டப்படி சஞ்சரிக்கும் ரதி தேவியோ? உங்களுடைய பற்கள் ஒன்றுபோல் எல்லாம் அழகாகவும் கூரிய முனைகளை யுடையனவாகவும் வெண்மையாகவும் இருக்கின்றன. உங்கள் கண்கள் விசாலமாகவும் நிஷ்களங்கமாகவும் செவ்வரிபடர்ந்தனவாகவும் கருவிழிகளுடையனவாகவும் விளங்குகின்றன. கடிபாகம் விசாலமும் பெருமனுமா யிருக்கின்றது: துடைகள் யானைத் துதிக்கைபோலத் திரண்டு பருத்திருக்கின்றன.தனங்கள் விம்மிப் புடைத்து இறுமாந்து மணிவடங்களணிந்து பனம்பழத்துக் கொப் பாக விளங்குகின்றன. அம்மணி, உங்கள் புன்னகையும், பற்களின் அழகும், கண்களின் ஒளியும், உங்கள் மேனியும் ஆற்று நீர் கரையைக் கரைத்துக்கொண்டோடுவது போல என் உள்ளத்தை முழுதும் கவர்ந்துவிட்டன. பிடிக் கடங்கின இடையையும் அழகிய கூந்தலையும் உடையவரே, உம்மைப்போல் இவ்வளவு அழகான பெண்ணை தேவப் பெண்களுள்ளும், கந்தர்வ யக்ஷ கின்னரப் பெண் களுள்ளும் நான் பார்த்ததில்லை. இவ்வுலகத்தில் மிக உத்தமமான உங்கள் அழகும், இளமையும், சாயலும், நீங்கள் காட்டில் வசிப்பதும் எல்லாம் என் மனத்தை மயக்குகின்றன. தங்களிஷ்டப்படி உருவம் மாறும் கொடிய அரக்கர்கள் வசிக்கும் காடு இது. நீர் எவ்வாறு இங்கு வந்தீர்?” என்றான். 

துஷ்டனாகிய இராவணனால் இவ்வாறு வினவப்பட்ட சீதை அவனுடைய அந்தண வேஷத்தைக்கண்டு அவ னுக்கு அதிதிகளுக்குச் செய்யவேண்டிய மரியாதைகளில் ஒன்றுங் குறையாமல் செய்தாள். பின்னர் தனக்குள்ளே “இவரோ நமது அதிதி. மேலும் பிராமணர். கேட்ட தைச் சொல்லாவிடில் இவர் நம்மைச் சபிப்பார்’ என்று கொஞ்சநேரம் யோசித்து அவனைப்பார்த்து சீதை சொல்லலுற்றாள் :-“உங்களுக்கு நன்மையுண்டாகுக. நான் மிதிலைக்கரசனான மகாத்துமாவாகிய ஜனக மகாராஜாவின் குமாரி இராமருடைய அன்பான மனைவி. என்பெயர் சீதை. இக்ஷ்வாகு வம்சத்தரசர்கள் மாளிகை யில் பன்னிரண்டு வருஷகாலம் வசித்துப் பலவித போகங் களையும் அனுபவித்து என்னுடைய இச்சைகள் எல்லாம் நிறைவேறப் பெற்றேன். பதின்மூன்றாம் வருஷத்தில் தசரதமன்னர் தமது மந்திரிமார்களுடன் யோசித்து இரா மருக்குப் பட்டாபிஷேகம் செய்துவைக்கத் தீர்மானித்தார். பட்டாபிஷேக நிமித்தமாக தந்தையிடம் சென்ற என் பர்த்தாவாகிய இராமரைப் பார்த்துக் கைகேயி “இராகவா, உனது தந்தை என்னிடம் செய்திருக்கும் கட்டளையைக் கேள். ஒருவித இடைஞ்சலின்றி இந்த இராச்சியம் பரதனுக்காகவும் நீ ஏழிரண்டாண்டு காட்டி லுரையவும் வேண்டுமாம். ஆகையால் நீ அவ்வாறு சென்று உனது தந்தையினுடைய வார்த்தையை காப் பாற்றி வைப்பாயாக என்று இக் கொடுஞ் சொற்களைச் சொன்னாள். என் கணவராகிய இராமர் அவ்வாறே ஆகுக வென்று அவளுடைய வார்த்தையை அங்கீகரித்து விரதம் பூண்டு இவ்விடம் வந்தார். இராமருடைய இளையதாயார் வயிற்றிற் பிறந்த தம்பி லக்ஷ்மணர். அவர் இராமருக்கு உதவியாயுள்ளவர்; சத்துருக்களை வதைக்கும் வல்லமை பெற்றவர். ஐம்புலன்களையும் அடக்கித் தருமத்தை இடைவிடாது நடத்தும் இராமர் சடைபுனைந்து தவவேடம் பூண்டு தமது தம்பியோடும் இந்தத் தண்டகாரணி யத்துக்கு வந்து சேர்ந்தார். ஐயா பிராமணோத்தமரே. தாங்கள் இங்கே சற்றுத்தங்கி இளைப்பாறுங்கள்.எனது கணவர் காட்டில் உள்ள கந்தமூல பலங்களையும் மான் பன்றி முதலானவைகளைக் கொன்று போதுமான இறைச் சியையும் எடுத்துக்கொண்டு இதோ திரும்பிவந்து விடுவார். 

இவ்வாறு இராமருடைய மனைவியாகிய சீதை சொல்ல அரக்கர் வேந்தன் விரைந்து கூறலுற்றான்:- சீதாய், நான் இராவணன்; அரக்கர் மன்னன். தேவர் கள், அசுரர்கள், மானுடர்கள் யாவரும் அஞ்சுபவன். பொன்போலும் மேனியுடையவளும் பட்டுடுத்துள்ளவளு மாகிய உன்னைக் கண்டது முதல் நான் எனது மனைவிமார் கள் மேல் ஆசையை முழுதும் ஒழித்து விட்டேன். நான் பல இடங்களிலிருந்து அநேக அழகான பெண்களைக் கொண்டுவந்து வைத்திருக்கிறேன். அவர்களெல்லாருக் கும் நீ தலைவி ஆகுவாயாக. சமுத்திரத்தின் நடுவில் நாலு புறமும் கடலால் சூழப்பட்டு மலையின் சிகரத்தில் அமைக் கப்பட்ட இலங்கை எனது இராஜதானி” இவ்வாறு இரா வணன் சொல்ல, உத்தமியான ஜானகி கோபமடைந்து அவ்வரக்கனை அகன்று நின்று சொல்லலுற்றாள்:” பெரிய மலைபோல அசைக்க முடியாதவரும், மஹேந்திரனுக் கொப்பானவரும், பெருங்கடல் போலக் கலக்க முடியாத வருமான இராமருடைய மனைவி நான். சகல லக்ஷணங் களும் பொருந்தினவரும், ஆலவிஷம் போல்வரும், சத்திய வந்தரும், மகாத்துமாவாகிய இராமருடைய மனைவி நான். நீண்டகரங்களும், அகன்ற மார்பும், மதத்த சிங்கத்தின் நடையுமுடைய புருஷ சிங்கமாகிய இராமருடைய மனைவி நான். பூரண சந்திரனுக் கொப்பான முகமுடையவரும், ராஜ குமாரரும், ஐம்புலன்களை அடக்கினவரும், பெரும் புகழ்பெற்றவருமாகிய இராமருடைய மனைவி நான். மந்தரமலையை நின்கையால் தழுவவும் விஷத்தை உண்டு விட்டு உயிருடனிருக்கவும் நீ நினைக்கின்றாய்! கூரிய ஊசி யால் கண்களைத் துடைக்கவும் கத்தியின் கூரை நாவால் பரிசிக்கவும் நீ நினைக்கின்றாய்! கழுத்தில் ஒரு பெருங் கல்லைக் கட்டிக்கொண்டு சமுத்திரத்தைக் கடக்க நீ விரும் புகிறாய்! இராமருடைய உத்தமமான பத்தினியை விரும் பும் நீ சூரியசந்திரர்களைக் கையால்பற்றவும், கொழுந்து விட்டெரியும் தீயை துணியில் முடிந்துகொள்ளவும், கூரிய இருப்புச் சூலங்களின்மேல் நடக்கவும் கருதுகிறாய் ! சிங்கத் துக்கும் நரிக்கும் போலவும், கால்வாய்க்கும் சமுத்திரத் துக்கும் போலவும், அமுதத்துக்கும் கஞ்சிக்கும் போலவும், தங்கத்துக்கும் இரும்புக்கும்போலவும், சந்தனத்துக்கும் சேற்றுக்கும் போலவும், யானைக்கும் பூனைக்கும் போலவும். காக்கைக்கும் கருடனுக்கும் போலவும், மயிலுக்கும் நீர்க் கோழிக்கும் போலவும், சாரசப்பக்ஷிக்கும் கழுகுக்கும் போலவும், இராமருக்கும் உனக்கும் உள்ள வேற்றுமை பெரிது.” இந்தச் சொற்களைச் சொல்லி உத்தமியான சீதை பெருங்காற்றால் அசைக்கப்படும் வாழைபோல நடுங்கி நின்றாள். 

சீதை இவ்வாறு சொல்ல இராவணன் அதிக கோபங் கொண்டு, தனது புருவங்களை நெரித்துக் கூறலுற்றான்: “ஓ சுந்தரி, நான் குபேரனுடைய தம்பி. என்பெயர் பத்துத்தலைகளைப் படைத்த இராவணன். நீ வாழ்வா யாக. நான் வெகு பிரதாபமுள்ளவன். சமுத்திரத்துக்கு அக்கரையில் எனது அழகிய பட்டணமாகிய இலங்கை உளது. விரும்பிய பழங்களைக் கொடுக்கும் பல்வகை மரங் கள் நிறைந்து சிங்கார வனங்கள் செறிந்தது. ஜனகராஜ புத்திரி, சீதே, நீ அவ்விடத்தில் என்னுடன் வாழ வேண்டும். அவ்விடத்தில் நீ மானிடர்களுக் கெட்டாத போகங்களை அனுபவித்துக்கொண்டு சுகமாயிருக்கும் போது அற்ப ஆயுளுடைய மானிடனாகிய இராமனை நினைக்கவே மாட்டாய். தனது இராச்சியத்தை இழந்து துன்புறும் விரதியாகிய இராமனோடு இனி உனக்கு உறவு என்ன? நீ அலக்ஷ்யம் செய்வாயேயானால் பரிதாபப் படுவாய்”. 

இராவணன் இவ்வண்ணம் சொன்னதை சீதை கேட்டு வெகு கோபமடைந்து கண்கள் சிவந்து அவ்வரக்கர் மன்னவனை நோக்கி இவ்வித கடினமான சொற்களைச் சொல்வாளாயினாள். அடா இராவணா, புலன்களை அடக்காத புத்தியற்ற கொடியவனாகிய உன்னை அரசனாக அடைந்ததால் அரக்கர்கள் எல்லாரும் மாண்டுபோகப் போகிறார்கள். இந்திரன் மனைவியாகிய சசிதேவியைக் கவர்ந்து சென்றவன் ஒருகால் பிழைத்தாலும் பிழைக்க லாம்; இராமருடைய மனைவியாகிய என்னைக் கவர்ந்தவன் ஒரு நாளும் உயிருடன் இருக்கமாட்டான்.” 

சீதை சொன்னதைக் கேட்டு தசக்கிரீவன் கையொடு கையைத் தட்டிகொண்டு தான்கொண்ட சந்நியாசி வேஷத் தை நீக்கிவிட்டு யமனுக்கொப்பான தனது நிஜ உருவங் கொண்டு பத்துத் தலைகளும், பாணங்களும், வில்லுகளும் உடையவனாய் வெகு கோபங்கொண்டு நின்றான். பின்பு அவன் சீதையை அவளுடைய கூந்தலை இடக்கையாலும் துடைகளை வலக்கையாலும் பிடித்துத் தூக்கினான்.பன்ன கேந்திரன் மனைவிபோலத் துவளும் சீதையை இராவணன் மோகத்தால் மயங்கித் தூக்கிக்கொண்டு உயரக் கிளம் பினான். அவள் அவன்மேல் சிறிதும் அன்பில்லாதவளாது லால் தன்னை அவன் கையில் நின்று விடுவிக்கப் பெரிதும் முயன்றாள். அரக்கர் மன்னவனால் ஆகாசமார்க்கமாகக் கொண்டுபோகப்படாநிற்கையில் அவள் பைத்தியம் பிடித் தவள் போலவும், பிராந்தி கொண்டவள்போலவும், பிணி கொண்டவள்போலவும் அதிகமாகக் கதறத் தலைப்பட் டாள் ; ஆ ! லக்ஷ்மணரே, பெரும் பராக்கிரமம் பொருந்தியவரே, பெரியவர்கள் சொற்படி நடப்பவரே, நம்மிடம் அசூயைக்கொண்ட அரக்கன் என்னைத் தூக் கிப்போவதை நீர் அறியீரோ? தருமத்தின் பொருட்டு வாழ்வையும் சுகத்தையும் பொருளையும் துறந்து காட்டுக்கு வந்த இராகவரே, வெகு பாவியாகிய இராவணன் என்னை. எடுத்துப்போவதை நீர் காணிலீரோ? நன்றாகப் புஷ்பித்த பல சிகரங்களையுடைய பிரசரவணபருவதமே, உனக்கு நமஸ்காரம்; நீ ராமரிடம் இராவணன் சீதையைத் தூக்கிப் போகிறான் என்று விரைவில் கூறு. அன்னம் காரண்டவம் முதலிய பறவைகள் நிரம்பிய கோதாவரி நதியே, உனக்கு நமஸ்காரம் செய்கிறேன்; அம்மா நீயும் இராமரிடம் இராவணன் சீதையைத் தூக்கிப்போகிறான் என்று சொல்லு. விருக்ஷங்கள் அடர்ந்த இக்காட்டி லுள்ள தெய்வங்களே, உங்களுக் கெல்லாம் நமஸ்காரம்: நீங்கள் எல்லாரும் என் கணவரிடம் இராவணன் என்னைத் தூக்கிப்போனான் என்று தெரிவியுங்கள். “ஐயா ஜடாயுவே, ஓ பெரியவரே, என்னைப் பாருங்கள்! என்னை அநாதைபோலக் கொடிய அரக்கன் இரக்கமின்றி தூக்கிக்கொண்டு போகிறானே! வெகு பலமுடையவனும் ஆயுதந்தரித்தவனுமாகிய இக்கொடிய அரக்கனைத் தடுக்க தங்களால் முடியாது. என்னை இவன் தூக்கிக்கொண்டு போகும் சமாசாரத்தை ஒன்றும் விடால் தாங்கள் கண்ட தைக் கண்டபடி இராமரிடத்திலும் லக்ஷ்மணரிடத்திலும் சொல்லவேண்டும்” என்று வேண்டினாள். 

அந்தச் சத்தத்தைச் சிறிது தூங்கிக்கொண்டிருந்த ஜடாயு கேட்டு எழுந்து இராவணனையும் சீதையையும் கண்டார். அதன்பிறகு மலையின் சிகரம்போன்ற கூரிய மூக்குடைய அப்புள்ளரசர் மரத்தில் இருந்தபடியே இரா வணனைப்பார்த்து ‘தம்பி தசக்கிரீவ, நான் பழமையான தருமங்களை அநுஷ்டித்து உண்மையைக் கைப்பற்றினவன். என் பெயர் ஜடாயு : பலம் பொருந்திய கழுகுகளுக் கர சன். தசரத குமாரராகிய இராமர் எல்லாப் பிராணிகளுக்கும் எப்பொழுதும் நன்மையே செய்பவர்.நீ இப் பொழுது தூக்கிக்கொண்டுபோகும் இந்த மிக அழகிய பெரும் புகழ்பெற்ற சீதை அவ்வுலோக நாதருடைய தரும் பத்தினி. நீ சீதையை உடனே விட்டுவீடு; இல்லாவிடில், இந்திரனுடைய வச்சிராயுதம் விருத்திராசுரனை எரித்தது போல, அக்கினிக்கொப்பான இராமருடைய கண்கள் உன்னை எரித்துவிடும். ஓ இராவணா, எனக்கு வயது அறு பதினாயிரமாகின்றது. நான் இதுவரையில் எனது மூதா தைகளிடமிருந்து எனக்குக்கிடைத்த இராச்சியத்தை நன் றாகப் பாதுகாத்து வருகிறேன். நான் வயதுசென்றவனா யினும் என்முன் சிறுவயதுள்ளவனும் கையில் விற்பிடித்து தேகத்தில் கவசமணிந்து இரதத்திலேறிச் செல்பவனு மாகிய நீ சீதையை எளிதில் தூக்கிக்கொண்டு போகமாட் டாய். நீ சூரனானால் கொஞ்சநேரம் காத்திருந்து இராமர் முன் நின்று போர்புரி. அப்போது கரனைப்போல் நீயும் மாண்டுவிழுந்து பூமியைத் தழுவுவாய். என்னால் கூடிய வரையில் நான் உனக்குப்போர் விருந்தளிக்கின்றேன். காம்பினின்று பழத்தைப் பறித்தெறிவதுபோல இவ்விர தத்திலிருந்து உன்னைக் கீழே தள்ளுகிறேன்” என்று சொன்னார். 

ஜடாயு இவ்வாறு உரைக்க இராவணன் கோப மடைந்து, அக்கினிபோலக் கண்கள் சிவந்து, தானணிந் திருந்த தங்கக்குண்டலங்களாட, அவரை எதிர்த்து ஓடி னான். அப்பொழுது அவ்விடத்தில் அரக்கர் மன்னவனுக் கும் கழுகரசனுக்கும் இடையில் காற்றினால் துரத்தப்பட்ட மேகங்கள் ஒன்றோடொன்று மோதினாற்போல பெரும் போர் நிகழ்ந்தது. இராவணன் தீக்ஷணமான நாளீகம், நாராசம், விகர்ணம் என்கிற பாணங்களை மழைபொழி வதுபோல அக்கழுகரசன் மேல் செலுத்தினான். ஜடாயு அவைகளைப் பொறுத்துக்கொண்டு கூரிய நகங்களுள்ள தனது கால்களால் வெகுபலசாலியாகிய இராவணனுடைய தேகத்தில் பலவிடங்களில் காயம் பண்ணினார். அதன்மேல் இராவணன் வெகு கோபங்கொண்டு சீதை யைப் பூமியில் விட்டுவிட்டு ஜடாயுவின் இரு சிறகுகளை யும் கால்களையும் விலாக்களையும் வாளால் வெட்டினான். கொடிய அரக்கனால் அவ்வாறு சிறகுகள் வெட்டுண்ட புள்ளரசர் குற்றுயிராகப் பூமியில் விழுந்தார். 

சீதை இராவணனால் வெட்டுண்டு புள்ளரசர் மாண்டு விழுந்ததைக் கண்டு வெகுவாகப் புலம்பினாள்.”ஓ இராமா, ஓ லக்ஷ்மணா, என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று சொல்லி அவ்வுத்தமியானவள் பயத்தால் நடுங்கிக்கொண்டு தனக் குச். சமீபத்திலிருப்பவர்களைக் கூப்பிடுவதுபோல கதறி னாள். இராமா, இராமா, என்று கதறும் சீதையை இரா வணன் தூக்கிக்கொண்டு ஆகாயமார்க்கமாகச் சென்றான். 

சீதை தன்னைத் தூக்கிக்கொண்டு ஆகாய மார்க்க மாகப்போகிற இராவணனைப் பார்த்துத் துயருற்று மிக வும் மனங்கலங்கிப் பெரும் பயமடைந்தாள். அவ்வாறு கொண்டுபோகப்படும்போது சீதை மிகவும் பரிதாபமாக அழுது, தனது கண்களில் கோபமும்,அழுகையும், அச்ச மும் புலப்பட தறுகண்ணனாகிய இராவணனைப் பார்த் துப் பின்வருமாறு சொல்லத்தொடங்கினாள் :-“அடா இராவணா, அற்பனே, நான் தனியாக இருப்பதை அறிந்து என்னைத் தூக்கிக்கொண்டு போகிறாயே! உனக்கு வெட் கம் இல்லையா? இந்த நிந்தனையான காரியத்தைச் செய்து விட்டு வெட்கம் இல்லாதிருக்கின்றாயே! ஒருவனுடைய மனைவியை அவனில்லாத சமயத்தில் அபகரிப்பதாகிய இந்தக் கொடிய இழிவான செய்கையை உலகமெங்கும் பெரியோர்கள் தூற்றுவார்கள். அவ்விரு ராஜகுமாரர் களுடைய கண்களுக்கு நீ எதிர்ப்படுவாயானால் உனது சைநியங்கள் சூழ இருந்தபோதிலும் நீ ஒரு நாழிகைகூட உயிரோடிருக்கமாட்டாய். விஷத்தைக் குடித்தவன் பிழைத்திருப்பது எவ்வாறு சிறிதும் முடியாதோ அது போல மகாத்துமாவாகிய இராமருக்கு இந்தக் குற்றம் செய்து நீ பிழைக்கவே மாட்டாய்” என்றும் இன்னுமநேக விதமாகவும் இராவணன் மடியிற் கிடந்துகொண்டு சீதை வெகு பரிதாபமாகப் பிரலாபித்தாள். 

இராவணன் இவ்வாறு அவளைத் தூக்கிக்கொண்டு போகும்பொழுது சீதை ஒரு மலையின் சிகரத்தின்மேல் ஐந்து வானர வீரர்கள் நிற்கக்கண்டாள். அவர்கள் தன் விருத்தாந்தத்தை இராமருக்குச் சொல்லக்கூடும் என்று எண்ணி அவள் அவர்கள் மத்தியில் பொன்னிறம் பொருந் திய தனது மஞ்சள்பட்டு மேல்வஸ்திரத்தில் சில நகை களை முடிந்து எறிந்தாள். அவ்வானர வீரர்கள் அவ் வாறு அழுதுக்கொண்டு போகும் சீதையைக் கண் இமை யாது நன்றாகப் பார்த்தார்கள். அரக்கர் குலாதிபன் பம்பா சரசைத்தாண்டி இலங்கை நோக்கி அழுதுகொண் டிருந்த தனது நாசத்துக்குக் காரணமான சீதையை எடுத் துக்கொண்டு இலங்கையை அடைந்தான். 

துயரத்தால் தீனமாய் தலைகுனிந்திருக்கும் சீதைக்கு தேவர்கள் மாளிகைக் கொப்பான தனது மாளிகையை இராவணன் பலாத்காரமாகக் காட்டினான். அன் அவளுடன் தங்கத்தாலியற்றப்பட்டு வெகு அழகாக விளங் ன்றியும் கும் தனது மாடிப்படியில் ஏறினான். அம்மாளிகையிலுள்ள பலகணிகள் தந்தத்தாலும் வெள்ளியாலும் செய்யப்பட் டுப் பொன்புனைந்த வலைகளால் மூடப்பட்டிருந்தன. தரை மாணிக்கக்கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரா வணன் இப்படிப்பட்ட தனது மாளிகை முழுதையும் சீதைக்குக் காண்பித்தான். பிறகு அவளுடைய மனத்தை வசப்படுத்தும் பொருட்டு சொல்லலுற்றான். 

சீதாய், முப்பத்திரண்டுகோடி கோரமான அரக்கர் களுக்கு நான் தலைவன். என்னுயிரினும் நீ எனக்கு அரியை. இங்குள்ள உத்தமிகளாகிய என் மனைவியர்கள் எல்லா ருக்கும் நீ தலைவியாகு. காதலி, நீ என்மனைவியாகு. இது உனக்கு அழகு. வேறுவித யோசனை வேண்டாம். நான் சொல்லும் பேச்சைக்கேள். நான் உன்னாசையால் தவிக் கிறேன். என்மீது கருணைவைத்து என்னைச் சேர். நூறு யோசனை விஸ்தாரமுள்ள இந்த இலங்கை நான்கு பக்கங் களிலும் கடலால் சூழப்பட்டிருக்கிறது; இந்திரனோடு கூடிய தேவர்களாலும் எதிர்க்க முடியாதது. தேவர்கள், யக்ஷர்கள், கந்தர்வர்கள், பன்னகர்கள் முதலியவர்களுள் எனக்கொப்பான பராக்கிரமமுள்ளவன் ஒருவனுமில்லை. தனது இராச்சியத்தை இழந்து தீனனாகித் தவசு செய்து கொண்டிருக்கும் அற்ப ஆயுளுடைய மானிடனாகிய இரா மனால் உனக்கென்ன பயன்? ஆகையால், சீதாய், என் னிடத்து உன் மனத்தை வை. நான் உனக்கேற்ற நாயகன். மெல்லியலே, இளமை நிலையாது, ஆதலால் என்னை அணை வாய். இலங்கையிலிருந்துகொண்டு இந்தப் பெரிய இராச் சியத்தை நீயே பரிபாலனம் பண்ணு. நீ முன் செய்திருந்த பாவங்கள் எல்லாம் உனது வனவாசத்துடன் தொலைந்து விட்டன. இனி நீ செய்துள்ள புண்ணியத்தின் பலனை இவ்விடத்தில் அனுபவி. இதோ, உனது அழகான இரு தாள்களையும் என் தலையால் வணங்குகிறேன். சீக்கிரமாக என்மேல் கருணைவை. நான் உனது அடிமை. இராவணன் இதுவரையில் ஒரு பெண்ணையும் தலை வணங்கினதில்லை” என்று கூறினான். இவ்வாறு கூறித் தசமுகன் மாளுங் காலம் கிட்டிவிட்டபடியால் மைதிலியைத் தனக்குரிய வளாகவே எண்ணினான். 

இராவணன் சீதையைப்பார்த்து இவ்வாறு சொல்ல அவள் துயரத்தால் தபித்துக் கொண்டிருந்தபோதிலும் அச்சமின்றி அவனுக்கும் தனக்கும் இடையில் ஒரு துரும் பைப் போட்டு அவனுக்கு மறுமொழி கூறுவாளாயினாள். “தருமாத்துமாவாகிய இராகவருடைய பெயர் இம் மூவுல கங்களிலேயும் பரவியிருக்கிறது. அவர் நீண்ட கைகளை யுடையவர்: விசாலமான கண்களையுடையவர்; தெய்வம் போல்பவர். அவன்தான் என் கணவர். அவர் இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவர்; சிங்கத்தின் தோள்போன்ற தோள் களையுடையவர்; மிக்க புகழை உடையவர். அவரே தமது தம்பியாகிய லக்ஷ்மணருடன் உனது உயிரை வாங்கப் போகிறார். கோபத்தால் கொழுந்து விட்டெரியும் கண் களால் இராமர் உன்னைப் பார்ப்பாராயின் நீ மன்மதனைப் போல உடனே எரிந்து நீறாவாய். உனது ஆயுள் மாய்ந்து விட்டது.உனது லக்ஷ்மி உன்னை விட்டு நீங்கிவிட்டாள்; உனது பலம் போய்விட்டது; உனது புலன்களும் குன்றி விட்டன. உன் நிமித்தம் இலங்கை கைம்மைத் தன்மை அடையப்போகின்றது. இராமருடைய தரும பத்தினி யும் பதிவிரதையுமான என்னை நீ தொட முடியாது. உணர்ச்சியற்ற இந்தச் சரீரத்தை நீ கட்டினாலென்! அழித்தாலென்! அடா இராவணா; இந்த சரீரத்தையாவது உயிரையாவது காப்பாற்ற முயலேன்” 

இவ் வன்மொழியை இராவணன் கேட்டு சீதையை நோக்கி “அடியே சீதே, நான் சொல்லுவதைக் கேள். இன்னும் பன்னிரண்டு மாதங்களுக்குள் நீ என் கருத்துக் கிசையாவிடில் என் சமையற்காரர்கள் என் காலை யுண் வுக்காக உன்னைத் துண்டம் செய்வார்கள்” என்று அச்சந் தரும் சொற்களைச் சொன்னான். இவ்விதமாக சொல்லி அங்கிருந்த ராக்ஷசிகளைப்பார்த்து ‘பயங்கரமான தோற்ற முள்ள ராக்ஷசிகளே, மாம்சத்தையும் இரத்தத்தையும் உணவாகக் கொண்டவர்களே, நீங்கள் தானே இவள் செருக்கை அடக்குங்கள். சீதையை அசோகவனத்திற்குக் கொண்டுபோங்கள். அங்கே அவளைச் சூழ்ந்து பாதுகாத்துக்கொண்டு காட்டு யானையை வசமாக்குவது போல ஒருகால் வெருட்டியும் ஒருகால் இன்சொற்சொல்லி யும் அவளை மெதுவாக வசமாக்குங்கள்” என்றான். இவ் விதமாகக் கட்டளையிடப்பட்ட ராக்ஷசிகள் சீதையை அழைத்துக்கொண்டு, அசோகவனம் சென்றார்கள். 

24. ஜடாயுவின் தகனம் 

ராக்ஷச மாரீசனைக் கொன்றுவிட்டு இராமர் விரைந்து திரும்பிவந்தார். சீதையைப் பார்க்கவேண்டுமென்று அதி வேகமாக அவர் சென்றுகொண்டிருக்கையில், அவருக்குப் பின்புறத்தில் நரிகள் வெகு கோரமாக ஊளையிட்டன. மயிர்க்கூச் செறியும்படியான அந்தப் பயங்கரமான சத் தத்தை கேட்டு யோசித்துக்கொண்டு இராமர் தமது ஆச் சிரமத்துக்கு விரைந்து திரும்பினார். ஒளிகுன்றிய முகத் துடன் லக்ஷ்மணர் வருவதைக் கண்டார். இராமர் மிகுந்த துக்கத்துடன் லக்ஷ்மணருடைய இடக்கையைப் பிடித்துக் கொண்டு மிக மெதுவாக “ஐயோ ! லக்ஷ்மணா, நீ செய்தது பெருங்குற்றம். சீதையைத் தனியாக விட்டுவிட்டு நீ வந் தாயே! அவள் க்ஷேமமாக இருக்கிறாளா? அவளை அரக்கர் கள் கொன்றிருப்பார்கள் அல்லது புசித்திருப்பார்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை. வெகுவித அபசகுனங்கள் காணப்படுகின்றன. ஓ லக்ஷ்மணா! ஜனகருடைய புத்திரியாகிய சீதை பிழைத்து உயிருடனிருக்க நாம் காண் போமா? ஆச்சிரமத்தில் நீ அவளைத் தனியே விட்டுச் சென்ற தென்ன?” என்றார். 

இவ்வாறு இராமர் கேட்க லக்ஷ்மணர் அதிக துக்க மடைந்தவராய், இராமரைப் பார்ந்து “நான் என்னிஷ் டப்படி சீதையைத் தனியாக விட்டிட்டு வரவில்லை.”ஓ லக்ஷ்மணா, என்னைக் காப்பாற்று” என்று தாங்கள் கூவி னாற் போன்ற சத்தம் அவள் காதில் விழுந்தது. அந்தப் பரிதாபமான சத்தத்தை மைதிலி கேட்டு தங்கண்மாட்டு வைத்த அன்பால் அழுது, பயத்தால் மீதூரப்பட்டு, என் னைப் பார்த்து “போ போ” என்று கட்டளையிட்டாள். இப்படியாக அவள் என்னைப் போ, போ, என்று பலதரம் ஏவ நான் அவளை நோக்கி, அவளை ஆற்றும் வண்ணம் “இராமர் மனத்தில் பயத்தை உண்டுபண்ணத்தக்க அரக்கனை நான் பார்க்கவில்லை. இம்மூவுலகத்திலும் இராமரை போர்முகத்தில் வெல்லத்தகுந்தவர் ஒருவரும். இல்லை; இனிப் பிறக்கப்போகிறதுமில்லை” என்றேன். இப்படி நான் சொல்லியும் சீதை புத்திமயங்கி கண்ணீர் விட்டுக் கொண்டு என்னை நோக்கி “நீ என் தமையனார் இறந்து போக என்னை அடையலாம் என்ற கெட்ட எண்ணம் கொண்டிருக்கின்றாய். நீ மாறுவேஷம் பூண்ட சத்துரு. எனக்காக இராமரைப் பின்றொடர்ந்தாய். ஆகையாற் றான். நீ அவருக்கு உதவி செய்யப்போகின்றாயில்லை என்று இக்கொடிய மொழிகளைச் சொன்னாள். இவ்வாறு சீதைசொல்ல நான் ஆச்சிரமத்தை விட்டு ஓடிவந்தேன்” என்றார். இவ்வாறு லக்ஷ்மணர் சொல்ல, இராமர் அதிக துக்கத்தால் அறிவுமயங்கி அவரைப்பார்த்து “தம்பி, நீ அவளை விட்டிட்டு வந்தது குற்றம். அரக்கர்களால் என்னை வெல்ல முடியாது என்பதை நன்றாக அறிந்திருந் தும் சீதை கோபமாகச் சொன்னதைக்கேட்டு நீ ஆச்சிர மத்தை விட்டு புறப்பட்டுவந்தாய். கோபத்தினால் அவள் சொன்னதைக்கேட்டு அவளைத் தனியாகவிட்டு நானிட்ட கட்டளையைக் காப்பாற்றாதது எவ்வகையானுங் குற்றம். மான் உருவங்கொண்டு என்னை ஆச்சிரமத்திலிருந்து வெகு தூரம் இழுத்துச் சென்ற அரக்கன் இப்பொழுது என் அம்பால் அடியுண்டு மாண்டு கிடக்கிறான்’ என்று சொன்னார். 

இராமர் ஆச்சிரமத்தை நோக்கிச் செல்லும்போது அவருக்கு இடக்கண் துடித்தது. கால் தடுமாறிற்று: தேகம் முழுதும் நடுங்கிற்று. இவ்வாறு அடிக்கடி உண் டாகும் அபசகுனங்களைப் பார்த்து அவர் லக்ஷ்மணரை நோக்கிச் “சீதை க்ஷேமமா” என்று பன்முறை கேட்டார். வெகு வேகமாகச் சென்று ஆசிரமம் வெறிதாக இருக்கக் கண்டு மனம் கலங்கினார். பர்ணசாலை சீதை இன்றி பனிக் காலத்தில் தாமரைப் பூக்களில்லாத தடாகம்போல அழகற்றிருந்தது. தமது ஆசிரமம் அலங்கோலமாக இருக்கக் கண்டு இராமர் அடிக்கடி புலம்பினார். 

“சீதாய், நீ எங்கே போனாய்” என்று புலம்பிக் கொண்டு இராமர் ஒரு காட்டினின்று மற்றொரு காட்டுக் குச் சென்றும், ஒரு வேளை வேகமாய் ஓடியும், ஒரு வேளை விரைவாய் நடந்தும், பைத்தியம் கொண்டவர்போல் பலவாறலைந்து ஒரு நிமிஷம் நின்றவிடத்தில் மற்றொரு நிமிஷம் நிற்காமல் வனங்கள், ஆறுகள், மலைகள், அருவி கள் முதலிய விடங்களெல்லாம் சென்று சீதையை எங் கும் காணாராகிக் கையைத் தூக்கிக்கொண்டு புலம்பத் தொடங்கினார்:-“ஓ லக்ஷ்மணா, சீதை எங்கே? அவளிவ் விடம் விட்டு எங்கே போய்விட்டாள்? என் காதலியை யார் தூக்கிப்போயினார்? அன்றி யார் புசித்துவிட்டார்? ஒ சீதாய், நீ மரங்களில் மறைந்துகொண்டு என்னைப் பரி காசம்பண்ணக் கருதுவது போதும்; துக்கத்தினால் வருந் தும் என்னைவந்து தேற்றுதல் செய். ஒ சீதாய், உன்னு டைய அன்புள்ள இந்தச் சிறுமான்கள் உன்னைக் காணா மல் கண்ணீர்விட்டு விசாரங் கொண்டிருக்கின்றன. லக்ஷ்மணா,சீதையின்றி நான் பிழைத்திருக்கமாட்டேன்” 

லக்ஷ்மணர் இராமரைப்பார்த்து ‘ஐயா, மிக்க பராக் கிரமம் பொருந்தியவரே, துக்கப்படவேண்டாம். நாமிரு வரும் இன்னும் தேடிப்பார்ப்போம். அந்தப் பெரியமலை அநேக குகைகளை உடையது. சீதை காட்டில் உலாவுகி தில் ஆவல்கொண்டவள்; புஷ்பித்த மரங்களைக்கண்டு களிப்பவள். அவள் இக்காட்டில் எங்கேயாவது சென் றிருக்கலாம்; அல்லது பூக்கள் நிறைந்த தாமரையோடைக் குப் போய் இருக்கலாம். அவள் மீன்களும் நீர் நொச்சி களும் நிறைந்த ஆற்றண்டை சென்றிருப்பாள். அல்லது நமக்கு அச்சமுண்டாக்கி நாம் எவ்வாறு அவளைத் தேடிப் பிடிப்போ மென்பதைக் காண காட்டில் ஒளித்திருப்பாள், ஆகையால் நாம் விரைந்து அவளைத் தேடுவோம்” என்று சொன்னார். இவ்விதமாக லக்ஷ்மணர் சொன்னவுடன் இரா மர் மனந்தேறி தம்பியுடன் சீதையைத் தேடத் தொடங்கி னார். வனங்கள், மலைகள், மலைகளின் உச்சிகள் தாழ் வரைகள், ஆறுகள், ஓடைகள் முதலிய எல்லாவிடங்களி லும் தேடியும் அவர்கள் சீதையைக் காணவில்லை. 

பின்னர் இராமர் லக்ஷ்மணரைப்பார்த்து “லக்ஷ்மணா, இந்தப் பிரஸ்ரவணமலையிலும் தேடுவோம். வீரனே, பார்; இந்த மான்கள் அடிக்கடி என்னை உற்றுப்பார்க் கின்றன. அவைகளின் தோற்றத்தை நோக்குமிடத்து அவைகள் என்னிடம் ஏதோ சொல்லவிரும்புவன போலத் தோன்றுகின்றன” என்று உரைத்து இராமர் அம்மான் களைப்பார்த்து, தமது கண்களில் நீர் ததும்ப “சீதை எங்கே” என்று கேட்டனர். அப்படி அவர் கேட்ட வுடனே அம்மான்கள் எழுந்து தென்முகமாக ஆகாசத்தை நோக்கிக்கொண்டு சீதையைத் தூக்கிக்கொண்டு போன வழியே நடக்கலாயின. அப்படிப்போகும் மான்கள் இராமரைத் திரும்பித் திரும்பிப் பார்த்து அந்த வழியை யும் பூமியையும் அடிக்கடி உற்றுநோக்கிச் சென்றன. இவை களை யெல்லாம் லக்ஷ்மணர் நன்றாகப்பார்த்து யோசித்து தமையனாரைப்பார்த்து “ஐய, சீதை எங்கே என்று தாங் கள் கேட்டவுடன் இம்மான்கள் எழுந்து பூமியைக்காட்டி தென் திசையை நோக்கிக்கொண்டு செல்லுகின்றன. ஆகையால் நாம் தென் திசையை நோக்கிச் செல்லு வோம். அப்படிச் செல்வதால் நாம் சீதையை அல்லது அவளைப்பற்றிய அடையாளங்களைக் காணலாம்” என் றார். இராமர் “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி லக்ஷ்மணருடன் தென்திசையை நோக்கி போகும் வழியெல் லாம் சீதையைத் தேடிக்கொண்டே போயினார். 

அவ்வாறு அவ்விரு சகோதரர்களும் ஒருவருடன் ஒரு வர் பேசிக்கொண்டு போகையில் அரக்கர்கோனுடைய அடிச்சுவடுகளையும் அவனாற் பற்றப்பட்டபோது பயந்து இராமரைக், காணவேண்டி அங்குமிங்கும் ஓடித் தத்த ளித்த சீதையினுடைய அடிச்சுவடுகளையும் கண்டார். இந்த அடிச்சுவடுகளையும் முறிந்த வில்லையும், தூணியை யும், அழிந்த தேரையும் கண்டு இராமர் மனம் கலங்கி தமது தம்பியைப் பார்த்து “லக்ஷ்மணா, இதோ பார்! சீதையினுடைய பொன்னாபரணத் துண்டங்களும் அவள் அணிந்திருந்த மாலைகளும் அங்குமிங்கும் சிதறுண்டிருக்கின்றன. மாயாவிகளான அரக்கர்கள் சீதையைப் பல துண்டங்கள் செய்து புசித்துவிட்டார்கள் போலத்தோன்றுகிறது. சீதையின் பொருட்டு ராக்ஷசர்கள் இங்கு ஒருவ ரோடொருவர் எதிர்த்து பெரும்போர் செய்திருக்கவேண் டும். முத்துக்களும் வயிரக்கற்களும் இழைக்கப்பட்டு இங்கு முறிந்து கிடக்கின்ற இந்த வில் யாருடையது? இது தேவர்களது. அல்லது ராக்ஷசர்களது ஆகவேண்டும். இதோ உடைந்து கிடக்கின்ற இளஞ்சூரியன் போன்ற வைடூரிய மணிகளிழைக்கப்பட்ட பொற்கவசம் யாரு டையது? இதோ முரிந்து கிடக்கின்ற திவ்வியமாலைகள் கட்டப்பட்டதும் நூறுகம்பிகள் போடப்பட்டதுமான குடை யாருடையது? பேய்முக முடையனவும் மார்பிற் கவசம் பூண்டனவுமான இந்தப் பெரிய பயங்கரமான கோவேறு கழுதைகள் யாருடைய போரில் கொல்லப்பட் டன ? இதோ உடைந்து, தரையில் கவிழ்ந்து, கொழுந்து விட்டெரியும் செழுந்தீக்கொப்பான கொடிகளையுடைய தாய்க் கிடக்கின்ற இந்தப் போர்த்தேர் யாருடையது? இதோ கையிற் பிடித்த குதிரைச் சம்மட்டியோடுங் கடி வாளத்தோடும் மாண்டு கிடக்கின்ற தேர்ப்பாகன் யாரு டைய சாரதி? தலைப்பாகையும், குண்டலங்களும் தரித்து கையிற்பிடித்த சாமரங்களுடன் இறந்து கிடக்கின்றவர் களாகிய இந்தச் சாமரம் போடுகிறவர்கள் யாருடைய ஆட்கள்? இந்த அடிச்சுவடுகள் அரக்கர்களுடையவைகளே. மாயங்கள் வல்ல கொடிய மனமுள்ள அரக்கர் களை யான் எனக்குப் பகைவர்களாக்கிக்கொண்டேன். ஏழையாகிய சீதை இறந்திருக்கவேண்டும்; அல்லது அவளை அரக்கர்கள் விழுங்கியிருக்கவேண்டும்; அல்லது தூக்கிக் கொண்டு போயிருக்கவேண்டும்” என்றார். 

சீதையின் பிரிவால் மிகவுந் துன்புற்று, பெருமூச் செறிந்துகொண்டு இராமர் நிற்க, லக்ஷ்மணர் முன் ஒரு பொழுதும் காணாத இராமருடைய பெருங்கோபத்தைக் கண்டு முகம்வாடி அஞ்சலி செய்து “ஐயா, தாங்கள் இப் பொழுது வில்லைக் கையில் பற்றி என்னையும் முனிவர்களை யுந் துணையாகக்கொண்டு சீதையைக் கவர்ந்துபோனவனை கடல் மலை காடுகளிலும் பயங்கரமான குகைகளிலும், நீர் நிலைகளிலும் தேடுவீர்ஓ காகுத்த, தாங்களே இந்தத் துன்பத்தை சகிக்கீராயின் அறிவிலிகள் வேறு யார் சகிக்க வல்லார்? தாங்களே எனக்கு எத்தனையோதரம் சொல்லி யிருக்கின்றீர்கள். பிருகஸ்பதிக் கொப்பான அறிவுள்ள தங்களுக்கு யாரால் புத்திசொல்ல முடியும்? தங்களுடைய புத்தியைத் தேவர்களாலும் அளவிட முடியாது. அவ்வித மான புத்தி இப்பொழுது துக்கத்தால் சோர்ந்து தூங்கு கின்றது; நான் அதைத் துயிலுணர்த்துகின்றேன்’ என்று கூறினார். 

லக்ஷ்மணர் இவ்வாறு நல்ல தகுதியான இனிய வார்த் தைகளைச் சொல்ல இராமர் அவைகளை ஒப்புக்கொண்டார். உடனே இராமர் தமது அழகான’ வில்லை ஊன்றிக் கொண்டு நின்று லக்ஷ்மணரை நோக்கி “தம்பீ, நாமிப் பொழுது எங்கே போகவேண்டும், என்னசெய்யவேண்டும், என்ன உபாயத்தினால் சீதையை அடையலாம் என்பவை களைப்பற்றி யோசனைசெய்” என்றார். அதற்கு உத்தர மாக லக்ஷ்மணர் துயருறும் இராமரைப்பார்த்து “ஐய, இந்த ஜனஸ்தானத்தில் சீதையைத் தேடவேண்டும்” என்றனர். இந்தச் சொற்களைக் கேட்டு இராமர் லக்ஷ்மண ரோடு காடெங்குந் தேடினார். 

அப்போது அவர் எருவைக்கரசனாகிய ஜடாயு மலை போலப் பூமியில் விழுந்து தேகமெல்லாம் இரத்தந் தோய்ந்து கிடப்பதைக் காண ஜடாயு ராமரைப் பார்த்து நுரையுடன் இரத்தத்தைக் கக்கிக்கொண்டு ‘சிரஞ்சீவி,இப்பெருங்காட்டில் அரிய மூலிகையைப் போல நீர் தேடித்திரியும் அப்பெண்ணணங்கையையும் என் பிராணனையும் இராவணன் கவர்ந்துகொண்டு போய் விட்டான். ஓ ராகவா, நீரும் லக்ஷ்மணரு மில்லாத சம யத்தில் வெகு பலசாலியாகிய இராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டோடுவதை நான் பார்த்து, அவளை மீட் பதற்காக அவனை எதிர்த்துப் போர்புரிந்து அவன் இர தத்தை அழித்துக் குடையை முறித்து அவனைப் பூமியில் வீழ்த்தினேன். அவனுடைய முரிந்த வில் இது. அவனு டைய ஒடிந்த பாணங்கள் இவை. நான் சிறிது சோர்ந்த சமயம் பார்த்து இராவணன் என் சிறகுகளை வாளால் வெட்டி சீதையைத் தூக்கிக்கொண்டு ஆகாசமார்க்கமாகச் சென்றுவிட்டான்.” என்றார். இராமர் இவ்விதமாகச் சீதையின் வரலாற்றைக் கேட்டு புள்ளரசனைக் கட்டித் தழுவி லக்ஷ்மணருடன் கதறத் தலைப்பட்டார். 

பிறகு இராமர் ஐடாயுவைப்பார்த்து, “ஒ ஜடாயு, உமக்கு நன்மையுண்டாகுக. கூடுமாயிருந்தால் இரா வணன் சீதையை எவ்வாறு கவர்ந்துகொண்டு போயினா னென்றும், உம்மை எவ்வாறு கொன்றானென்றும் சொல் லும். இராவணன் சீதையை ஏன் களவாக எடுத்துக் கொண்டு போனான்? நான் அவனுக்கு என்ன குற்றஞ் செய்தேன்! அவன் அவ்வாறு அவளைக் கொண்டுபோகும் பொழுது சந்திரனுக் கொப்பான அவளுடைய அழகிய முகம் எவ்வாறிருந்தது? ஒ பறவை வேந்த, அவள் அப் போது என்ன சொன்னாள்? அவ்வரக்கனுடைய பலம் என்ன? அவனுடைய உருவம் எவ்வாறிருக்கும்? அவன் செயல் யாது? அவன் வசிப்பது எங்கு? பெரியோய், சொல்லும்” என்று கேட்டார். இவ்வாறு எளியோர் போலப் புலம்பும் இராமரை நோக்கித் தருமாத்துமா வாகிய ஜடாயு மிக நுணுகிய குரலால் “ராக்ஷசேஸ்வரனா கிய இராவணன் சீதையைத் தூக்கிக்கொண்டு போனான். அவன் சீதையை எடுத்துக்கொண்டு தென்திசைக் கேகி னான். ஓ ராகவ, எனது பிராணன் போகப்போகிறது. எனது கண்கள் சுழன்றுகொண்டிருக்கின்றன. இராவ ணன் தூண்டிலைக் கவ்வின மீன்போல் விரைவில் மாண்டு போவான். ஆகையால் சீதையை மீட்டுக்கொள்வதைப் பற்றி சிறிதும் சந்தேகம் வேண்டாம். இராவணனைப் போரில் வதைத்து நீர் சீக்கிரம் சீதையைக் கூடிச் சந் தோஷமடைவீர்” என்று சொல்லி அவர் தமது பிராணனை விட்டார். மலைபோன்ற பெரிய உடலையும் சிவந்த கண் களையுமுடைய புள்ளரசர் மாண்டு விழுந்ததைக் கண்டு இராமர் துக்கமடைந்து, லக்ஷ்மணரைப் பார்த்து “பார் லக்ஷ்மணா, எனக்கு உபகாரமாகச் சீதையை மீட்கமுயன்ற ஜடாயு கொல்லப்பட்டார். மிக்க புகழ்படைத்த தசரத ரைப்போல இந்தப் புள்ளரசர் என்னால் பணிந்துபோற் றப்படத்தக்கவர். ஓலக்ஷ்மணா, நீ விறகுகொண்டு வா. நான் தீமூட்டி அதனால் எனக்காக மாண்ட இப்புள்ளரச் ரின் உடலைத் தகனம் செய்கிறேன்” என்றார். இவ்வாறு சொல்லித் தர்மாத்துமாவாகிய இராமர் துக்கமடைந்தவ ராய் ஈமத்தின்மேல் ஜடாயுவினுடலை வைத்து அவரைத் தமது உறவினனைப்போலத் தகனம் பண்ணினார். பிறகு அவ்விரு இராஜகுமாரர்களும் கோதாவரி நதிக்குச்சென்று ஸ்நானம் பண்ணி அவ்விடத்தில் சாஸ்திரப் பிரகாரம் கழுகரசனுக்குத் தர்ப்பணம் செய்தார்கள். 

25. இராமலக்ஷ்மணர்கள் கவந்தனைக் காணுதல் 

அவ்வாறு ஜடாயுவுக்கு நீர்க்கடன் செய்துவிட்டு இராம லக்ஷ்மணர்கள் இருவரும் வில்பிடித்த கையர்களாய் சீதையைத் தேடிக்கொண்டு அக்காட்டில் தென்மேற்குத் திசையாகச் சென்றார்கள்; பின்பு தெற்கே திரும்பி ஜனங் கள் நடக்கப் பெறாத அரிய வழியொன்றை அடைந்தார் கள். அவர்கள் சென்ற காடு பெருஞ் சூழல்களும், மரங் களும், கொடிகளும் நெருங்கி நுழைதற்கரியதாய் பார்ப்ப தற்கு வெகு பயங்கரமாக விருந்தது. தென்புறமாகச் சென்று அந்தக் கொடிய பாழ்ங்காட்டை இராம லக்ஷ் மணர்களிருவரும் விரைந்து கடந்து ஜனஸ்தானத்தி லிருந்து மூன்று குரோச தூரத்திலுள்ள அடர்ந்த கிரௌஞ்சாரண்ணியத்தைக் கிட்டினார்கள். பலவித மரங் களும் அடர்ந்த சூழல்களும் நெருங்கி, அநேக மிருகங்களும் பறவைகளும் மலிந்துள்ள அப்பயங்கரமான காட்டைத் தேடியபின் ஒரு மலையின்மேல் பாதாளம்போல ஆழ்ந்து எப்போதும் இருள் செறிந்திருந்த குகை யொன்றை அவ் விரு ராஜ குமாரர்கள் கண்டார்கள். 

அப்பால் அவர்கள் அந்தக்காடு முழுதையும் தேடும் பொழுது காட்டை ஒடிப்பது போன்ற ஒரு பெரும் சத்த முண்டாயது. அச்சத்தம் எங்கிருந்து வந்ததென்று உற்று நோக்கின இராமலக்ஷ்மணர்கள் மிக்க பெரிய உருவத்தை யும் பெரிய துடையையுமுடைய அரக்கனொருவனைக் கண்டார்கள். அவர்களுக்கு முன்தோன்றிய அவ்விராக்ஷ சனுடைய ரூபம் தலையற்ற கபந்தமாய் வயிற்றில் வாயுடையதாயிருந்தது. அவ்வரக்கன் யோசனை தூரம் தனது இரண்டு கைகளையும் நீட்டி அவற்றிற்குள் அகப் பட்ட மான் கரடி சிங்கங்களைப் பிடித்துப் புசித்தான். மற்ற மிருகங்கள் பக்ஷிகளை யெல்லாம் கையாற் பிடித் தெறிந்து கொண்டிருந்தான். அவன் வழியை மறித்து வரவை. எதிர்பார்த்திருந்தான். அவர்கள் ஒரு குரோசதூரஞ் சென்று கைகளினால் மிருகங் களை எல்லாம் வழிமறித்துத் தடுத்துக்கொண்டிருக்கிற பயங்கரமான கோரரூபமுள்ள கவந்தனைக் கண்ணுற்றார்கள். அப்போது கவந்தன் தனது பெரிய கைகளை நீட்டி இராமலக்ஷ்மணர்களைப் பிடித்துத் தனது பலத்தினால் நெரித்தான். உடனே இராமலக்ஷ்மணர்கள் காலத்தை யும் இடத்தையும் நோக்கி வெகு சந்தோஷமாகி தங்க ளுடைய வாளினால் கவந்தன் தோள்களிலிருந்து அவடைய கைகளை வெட்டித் தள்ளினார்கள். கைகள் வெட்டுண்ட கவந்தன் மேக முழக்கம்போலப் பெருங் கூச்சலிட்டு ஆகாசம் பூமி எண்டிசைகளாகிய எவ்விடத்துங் கேட்கக் கதறிக்கொண்டு பூமியில் விழுந்தான். 

கைகள் வெட்டுண்டு தனது தேகமெல்லாம் இரத்த வெள்ளம்பெருக நின்ற அரக்கன் அவர்களைப் பார்த்து “நீங்கள் யார்?” என்று பரிந்துகேட்டான். இவ்வாறு கவந்தன் கேட்க லக்ஷ்ணமர் அவனுக்கு ராகவரைப்பற்றிச் சொல்லலுற்று “இவர் இக்ஷ்வாகு வம்சத்தில் தோன்றி இராமர் என்று பெயருடையவர். நான் அவருடைய தம்பி லக்ஷ்மணன். அடர்ந்த காட்டில் வசித்துக் கொண் டிருக்கும்பொழுது தெய்வப் பெண்போன்ற இவருடைய மனைவியை ஒரு அரக்கன் தூக்கிக்கொண்டு போய் விட்டான். அவளைத் தேடிக்கொண்டு நாங்கள் இங்கு வந்தோம்.நீயார் ; துடைகள் முரிந்து வாய் மார்பில் அமைக்கப்பட்டு இக்கவந்த உருவத்துடன் நீ. ஏன் இக் காட்டில் வசித்துக்கொண்டிருக்கிறாய்?’ என்று கேட் டார். இவ்வாறு லக்ஷ்மணர் நல்லவார்த்தையால் கேட்க, கவந்தன் சந்தோஷமடைந்து இந்திரன் சொற்களை நினைத் துக்கொண்டு அவர்களைப்பார்த்து “புருஷோத்தமர்களே, உங்களுடைய வரவு நல்வரவாகுக. என்னுடைய பாக்கி யத்தினால் நான் உங்களைக் கண்டேன். நான் சொல்லுகிறேன் கேளுங்கள். பெருந்தோள்களையும் பேராற்றலையு முடைய இராம, இந்திரனையும் சந்திராதித்தியர்களையும் போன்ற சொல்லமுடியாத என் அழகினால் நான் முன் மூவுலகங்களிலும் கீர்த்தி பெற்றிருந்தேன். நான் அந்த அழகிய ரூபத்தை யொழித்துக் கோரரூபங்கொண்டு எத் திசைகளிலும் காட்டில் வசிக்கும் ரிஷிகளை பயமுறுத் திக்கொண்டு வந்தேன். அப்படிச் செய்து வரும்பொழுது ஒருநாள் நான் இந்தக் கோரரூபத்தைத் தரித்துக் காட்டில் பழம் பறித்துக்கொண்டிருந்த ஸ்தூலசிரசென்ற பெரிய முனிவரைப் பயமுறுத்தினேன். அவர் கோபங் கொண்டு “மனிதர் எல்லாராலும் வெறுக்கப்படும் இக்கோர ரூபத்தை நீ அடையக்கடவாய்” என்று என்னைச் சபித் தார். நான் அவரை வணங்கி என் சாப விமோசனத்திற்காகப் பிரார்த்திக்க, அவர் “இராமர் உன் கைகளை வெட்டி உன்னை ஒரு பெரிய காட்டில் தகனஞ் செய்யும் போது நீ உன் அழகான உருவத்தை அடையக் கடவாய்’ என்றார். அந்த இராமர் நீரே.ஒ ராகவ, உமக்கு நன்மை யுண்டாகுக. இராமர் அன்றி வேறெவராலும் என்னைக் கொல்ல முடியாதென்று அம்மாமுனி உண்மையாகச்சொன் னார். சூரியன் மறையுமுன் என்னைக் குழியில் தள்ளி சாஸ் திரப்பிரகராம் தகனம் செய்யும். உம்மால் தகனம் செய்யப் பட்டதன்பின் அந்த ராக்ஷசனை அறிந்தவ் னொருவனை நான் உமக்குச் சொல்லுவேன். அவனோடு நீர் நட்பு செய்து கொள்ளும். அவன் உமக்குத் தகுந்த உதவி செய்வான். இந்த மூவுலகங்களிலும் அவனுக்குத் தெரியாத தொன் றில்லை. அவன் முன்னொருகாலத்தில் ஒரு காரணத்தால் மூவுலகங்களையும் சுற்றிவந்துளான்” என்றான். 

கவந்தன் இவ்வாறு கூறியபின் இராமலக்ஷ்மணர்கள் அவனை ஒரு மலைக்குகைக்குக் கொண்டுபோய் தகனம் செய்தார்கள். லக்ஷ்மணர் ஈமத்திற்கு நெருப்புவைத்தார். அது நாலுபக்கமும் நன்றாகப்பற்றி எரிந்தது. நெய்போல் வதாகிய கவந்தனுடைய பெரிய தசை செறிந்த சரீரத்தை அந்தத் தீ மெதுவாக தகனம் செய்தது. அதன்பின் அப் பெரிய ராக்ஷசன் ஈமத்தினின்றும் புகையற்ற அக்கினிப் பிழம்புபோல் எழுந்து சுத்தவஸ்திரம் தரித்து திவ்விய மாலை யணிந்து,விளங்கினான். அவன் வானில் நின்று இரா மரை நோக்கி ” ஓ இராகவ, யாது காரியம் செய்தால் நீர் உண்மையாய்ச் சீதையை அடையலாமென்பதைக் கேளும். பம்பாசரசின் கரையிலுள்ள மலைகளுட் சிறந்த ரிசியமூக பர்வதத்தில் கோபங்கொண்ட இந்திரன் குமானாரன வீர மும் அடக்கமுமுள்ள சுக்கிரீவன் என்னும் வானரத் தலை வன் தன் தமையன் வாலியால் துரத்தப்பட்டு, நான்கு வானரர்களோடு வசிக்கின்றான். அவன் உம்மோடு நட் பாகி சீதையைத் தேடுவதற்கு உதவி செய்வான்.நீர் துக்கத்தி லாழவேண்டாம். இக்ஷ்வாகு குலோத்தம, இவ் வுலகத்தில் விதியை வெல்ல ஒருவராலும் முடியாது. நீர் இப்போதே இங்கே யிருந்து புறப்பட்டு விரைந்து சென்று மகாபலவானாகிய சுக்கிரீவனோடு நட்புச் செய்துகொள்ளும்.” என்றனன். 

சீதையை அடைதற்கேற்ற வழியை இராமருக்கு நன் றாக எடுத்துக்கூறியபின் கவந்தன் மறுபடியும் அவரை நோக்கிப் பொருள்பொதிந்த சொற்களால் “இதோ மேற் குத்திக்கை அலங்காரம் செய்துகொண்டு மரங்கள் நிற் கின்றனவே, இதுதான் ரிசியமூக பர்வதத்திற்குப் போகும் வழி; வீரர்காள், காடுகளையும் மலைகளையும் சிறு குன்றுகளையும் ஒவ்வொன்றாகக் கடந்து சென்றால் நீங்கள் பம்பை என்னும் பெரிய ஏரிக்கரையைச் சேருவீர்கள். அப்பம்பாசரசிற்கு எதிரே பூத்த மரங்களையுடையதும் ஏறுவதற்கரியதும் சிறு பாம்புகளால் நான்கு பக்கத்தும் காக்கப்படுவதுமாகிய ரிசியமூக பருவத மிருக்கின்றது. நான்கு பக்கங்களிலும் கருங்கற் பாறைகளால் சூழப்பட்டு உட்புக வரியதாய் வாயிலில் பழந்தருமரங்கள் சூழ்ந்ததும் குளிர்ந்த ஜலமுடையதுமாகிய அழகிய தடஞ்சுனை யொன்று பொருந்திய பெருங் குகையொன்று அந்த மலை யிலிருக்கிறது. அக்குகையிலேதான் சுக்கிரீவன் தனது வானரத் துணைவர்களோடு வசிக்கிறான். அவன் சில சம யங்களில் அந்த மலையின் உச்சியிலும் இருப்பான். நீங்கள் உங்கள் காரியத்தை முடிக்கப்போங்கள் என்று சொல்லி சந்தோஷமடைந்த இராமலக்ஷ்மணர்களிடத்தில் விடை பெற்றுக்கொண்டு போயினான்.  

தருமாத்துமாவாகிய இராமர் தம்மனத்துள் சிந்தித்து லக்ஷ்மணரைப் பார்த்து “தம்பி,வா, அழகிய பம்பாசர சிற்குப் போவோம். அதோ சமீபமாகவே ரிசியமூகபரு வதம் தோன்றுகின்றது. அவ்விடத்தில்தான் சூரிய குமார னானீ சுக்கிரீவன் வசித்துக்கொண்டிருக்கிறான்” என்றார். பின்னர், இராமர் தமது தம்பியுடன் அநேக மரங்களையும், நீர் நிலைகளையும், நான்கு பக்கத்தும் பெரிய மரங்களடர்ந் ததும், புஷ்பங்கள் பொலிந்ததும், மயில் குயில் முதலிய பறவைகளொலிப்பதும், மூங்கில்கள் சடசடப்பதுமாகிய பெரிய வனங்களையுங் கடந்து பம்பையை பார்த்து லக்ஷ்ம ணரோடு ‘கவந்தன் சொன்னபடி இதன் கரையில் பல தாதுக்களையுடையதும் பல்வகை வர்ணங்களையுடைய பூ மரங்கள் சூழ்ந்ததுமாகிய ரிசியமூக பருவதம் அதோ நிற்கிறது. மகாத்துமாவான ரிக்ஷரஜசின் குமாரனாகிய சுக்கிரீ வனென்னும் புகழ் பெற்ற வானரத்தலைவன் அங்கேதான் வசிக்கின்றான். புருஷோத்தம், நீ அவனிடம் போய் வா” என்று சொன்னார்.

– தொடரும்…

– வால்மீகி ராமாயணச் சுருக்கம் (நாவல்), முதற் பதிப்பு: 1900, கே.மகாதேவன், பிரசுரகர்த்தர், விஜயதசமி, 17-10-1953.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *