கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 2, 2025
பார்வையிட்டோர்: 3,576 
 
 

திருமணமாகி இரண்டு வருடத்தில் ஒரு குழந்தைக்கு தாயானதில் மகிழ்ந்திருக்க சுகியால் முடியவில்லை. தனக்கு திருமணம் நடப்பதற்கு நான்கு வருடங்களுக்கு முன் திருமணமான மூத்த சகோதரி மகிக்கு குழந்தை இல்லை என அவளது மாமியார் போகாத கோவிலில்லை, இருக்காத விரதமில்லை, பார்க்காத மருத்துவரில்லை.

அந்தக்குடும்பத்தினர் ஆணோ, பெண்ணோ ஒரு குழந்தை பிறந்தாலே போதும் என ஏங்குகின்றனர். அவளை தாங்கு, தாங்கு எனத்தாங்குகின்றனர்.

“ஆண் வாரிசு வரும்னு நெனைச்சேன். பொட்டப்புள்ளைய பெத்துப்போட்டிருக்கா. அத வளத்தி படிக்க வெச்சு நகை, நட்டு போட்டு, மண்டபச்செலவு பண்ணி கண்ணாலத்தப் பண்ணி கண்டவனுக்குத் தானே கட்டிக் கொடுக்கோணும்? பெத்தவங்க செத்தா மொட்டையடிக்க வாரிசு வேண்டாமா? ஒன்னே போது மாமா ஒன்னு. அதுக்காவா உன்னைய கட்டீட்டு வந்தோம்? ஒன்னொன்ன பெத்துக்குடு, ஆம்பளப்பையனா பெத்துக்குடு…” மாமியார் அருக்காணியின் அன்றாட புலம்பலைத் தாங்க முடியாமல் தவித்தாள் சுகி.

‘தனிக்குடித்தனம் போனா நாம ஒன்னா வாழலாம். முடியாதுன்னா எனக்கு டைவர்ஸ் கொடுத்துட்டு ஆம்பளக் கொழந்தையப் பெத்துக் கொடுக்கிற ஒரு பொண்ணா உங்கொம்மாளப் பாக்கச்சொல்லிக் கட்டிக்கோங்க. இதுக்கு மேல இங்கிருந்தன்னா என்ற கொழந்தையுங் கொன்னுட்டு, நானுஞ் சூசைடு தாம் பண்ணோனும். அலுவலகத்திலிருந்து மாலை வரும் கணவன் முகனிடம் இவ்வாறு கூறி விட வேண்டும், அதுவும் ஏனோ தானோ என்றில்லாமல் உறுதியாகக்கூறி விட வேண்டும்’ என நினைத்த போதே கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது.

‘அந்தக் காலத்தில் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொண்டாலும் ஆண் குழந்தைகளை பணம் சம்பாதிக்கும் வேலைக்கும், பெண் குழந்தைகளை வீட்டு வேலைக்கும் உதவியாக வைத்துக் கொள்வார்கள். படிக்க வைக்க செலவில்லாமல் அரசு பள்ளியில் விட்டு விடுவார்கள். ஆனால் தற்போதைய நிலையே வேறாக இருக்கிறது. பள்ளியில் டொனேஷன் கொடுத்து சேர்த்துவது முதல் ஸ்கூல் பீஸ், வேன் பீஸ், டியூஷன் பீஸ், டான்ஸ் கிளாஸ் பீஸ், ஹிந்தி டியூஷன் பீஸ், சுற்றுலா செலவு, ஹோட்டலில் சாப்பிடும் செலவு என ஒன்றுக்கு மேல் பிறக்கும் குழந்தைகளை வளர்ப்பது மிடில் கிளாஸ் பேமிலிக்கு சிரமம் என கணக்குப் போட்டதால் தானே அடுத்த குழந்தை வேண்டாம் என்றேன். இதை கணவனும் கூட புரிந்து கொள்ளாமல் தாயாருக்கு சாதகமாகப்பேசுகிறாரே….? பெண்களுக்கு பெண்களே எதிராக இருக்கிறார்களே….’ என நினைத்து வருந்தினாள்.

அன்றிரவு வேலை முடிந்து அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய கணவனுக்கு உணவு பறிமாறியவள், தான் பேச வேண்டும் என யோசித்ததை படுக்கையில் பேச முயன்ற போது மாமியார் அறையிலிருந்து வித்தியாசமாக ‘படீர்’ என ஒரு சத்தம் வர ஓடிச்சென்று பார்த்தவளுக்கு தலை சுற்றியது.

மாமியார் அருக்காணி கட்டிலிலிருந்து விழுந்ததில் தலையில் அடிபட்டு, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாள்.

கணவனுடன் சேர்ந்து தூக்கிச்சென்று காரில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு சென்ற போது பரிசோதித்த மருத்துவர் கைவிரிக்க, கதறி அழுதாள் சுகி.

ஒரு வருடம் அல்ல, ஒரு மாதம் அல்ல, ஒரு நாள் அல்ல, ஒரு மணி நேரம் கூட அல்ல, ஒரு நொடியில் வாழ்க்கை தலை கீழாக மாறி விட்டதை உணர்ந்தாள். 

‘நம் பிடிவாதமான எண்ணம் மாமியாரைக்கொல்லும் ஆயுதமாக உருமாறி விட்டதோ….?’ வியந்து பயந்தாள்.

‘மாமியார் என்பவள் தன் கணவனைப் பத்து மாதம் கருவில் சுமந்து பெற்று ஈ, எறும்பு படாமல் தூக்கம் விழித்து, பசிக்கும் போது பால் கொடுத்து, பின் உணவு கொடுத்து, உடை கொடுத்து, உறைவிடம் அமைத்து, கல்வி கொடுத்து, கல்யாணம் பார்த்தவள், சிறு வயதிலேயே கணவனை இழந்து குடும்ப பாரம் சுமந்தவள். அப்படிப்பட்டவளின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது எனச் சொல்லி யிருக்கக் கூடாது’ என தூக்கம் தொலைத்து யோசித்ததில் வருந்தினாள்.

நாட்கள் பல கடந்தன. மீண்டும் கருவுற்றாள். கல்விக்கு பணமில்லை என்றாலும் கலைக்க மனமில்லை. ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்க வந்த உறவுகள் பேசின. 

“அப்பத்தா மாதிரியே உறிச்சு வெச்ச மாதர பேரம் பொறந்திருக்கறாம் பாரு” 

இவ்வாறு கூட தான் விரும்புவதை நிறைவேற்றிக் கொள்கிற வாய்ப்பு மனித இனத்துக்கு மட்டுமே உண்டு என்பதை புரிந்த போது சிகிக்கு உடல் சிலிர்த்தது.

கே.ஆர்.வேலுச்சாமி ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *