ஆக்கல் அரிது; அறிவுரை எளிது




(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கலைப்பயிற்சிக் கூடமொன்றின் அருகில், ஒரு சிலை எழுப்ப ஏற்பாடாயிற்று. கலையிலக்கணங் கற்ற பயிற்சி மாணவர் பலர் அதனைச் செய்யுங் கலைஞனிடம் சென்று. ‘கண் இப்படி இருத்தலா காது, மூக்கு இப்படி இருத்தல் வேண்டும், என்று பலவாறாகத் தமது அறிவு நலத்தைக் காட்டினர். கலைஞன், அவர்கள் ஓயாத பஞ்சரிப்பைத் தவிர்க் கும் எண்ணத்துடன், “உங்கள் அனைவர் அறி வுரைகளையும் பின்பற்றியே நான் தொழிலாற்றப் போகின்றேன்,” என்று கூறினான்.
அவ்வாறே அவன் ஒவ்வொருவரின் அறி வுரையையும் பொறுமையுடன் எழுதிவாங்கி அவை யாவும் பொருந்துமாறு ஓர் உருவம் அமைத்தான். ஆனால், அதே நேரத்தில், பக்கத்தில் மறைவாக இன்னோர் உருவமும், தனது கலைப்பாங்கு முற்றும் புலப்படும்படி அவன் அமைத்துவைத்தான்.
உருக்களை அரங்கேற்றுகையில் அவன் இரண் டையும் திறந்து மக்கள்முன் காட்டி, “இது கலை இலக்கணப் புலவோர் அறிவுரையின்படி அமைந் தது: இஃது எனது கலைப் பாங்கின்படி அமைந் தது,” என்று கூறினான்.
அறிவுரை தந்த அறிஞர்கள், தம் உரைகளின் பயனாய் அமைந்த அருவருக்கத்தக்க உருவினைக் கண்டு வெட்கினார்கள்.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.