அவளுக்கு அவனழகு





(2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அலுவலகத்தில் பாரதி நுழைந்ததுமே அவளின் சக நண்பர்கள் தோழிகள் அவளை ஒரு மாதிரியாகப் பார்க்கத் தொடங்கினார்கள்.
இத்தனைக்கும் அவள் எப்போதும் போல்தான் வந்திருந்தாள். உடையிலோ முக அலங்காரத்திலோ எவ்வித மாற்றமும் இல்லை. இருந்தாலும் சுற்றுச் சூழலில் மட்டும் திடீர் மாற்றம்.
“ஏண்டி கவிதா இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துட்டு, இப்படி ஒரேயடியா நம்மை எல்லாம் திணற அடிச்சிட்டாளே இவ இவளை நம்மால ஏன் புரிஞ்சுக்கவே முடியாமப் போவுது…”
ரோஸ்லின் தான் தனது பக்கத்து மேசை கவிதாவை இடித்தாள். ஏற்கெனவே பாரதியின் செய்கையால் மூச்சுவிட மறந்து போயிருந்த கவிதா, தோழியின் இடி தாங்காமல் தன் இருக்கையில் சரிந்தாள். ரோஸ்லினுக்கு எரிச்சல் கிளம்பியது.
“என்னடி இது.. என்னமோ கப்பலே கவிழ்ந்து போன மாதிரி… அப்செட் ஆயிட்டே.. என்னடி ஆச்சு உனக்கு? மறுபடியும் உலுக்கினாள்.
“ஒண்ணுமில்லே ரோஸி… வானத்து நிலா மண்ணுல நடக்கிற மாதரி நம்ம ஆபிஸ்ல இந்தப் பாரதிதான் பார்க்க பொண்ணா லட்சணமா இருந்தா, அவ அழகுல நாமே மயங்கிக் கிடந்தோம். இங்கே வேலை பார்க்கிற இருபதிலேர்ந்து அறுபதுவரைக்கும் அவ பார்வைக்குத் தவம் கிடக்கும்.’
இங்கே இருக்கிற கமலஹாசன், சரத்குமார், பிரசாந்த், அனில்கபூர், சல்மான்கானை எல்லாம் விட்டுபுட்டு எங்கிருந்தோ வந்த வடிவேலு மாதிரி ஒரு சாவுக்கிராக்கியை லவ் பண்ணிட்டாளே…
என்னாலே நம்பவே முடியலியே ரோஸி…
நிஜமாகவே கவிதா அழ ஆரம்பித்துவிட்டாள். அவளுக்குப் பக்கத்து மேசை பாலசுப்ரமணியன், அவளது சிணுங்கலில் மெய்சிலிர்த்துப் போய்…
“கவிதா… கவிதா…” என்று விசாரித்த ரோஸ்லின் இடை மறித்து தோழியை வெளியே அழைத்துப் போய்விட்டாள்.
கேன்டினில் ஒரு வட்டமேசை மாநாடு ஆரம்ப மாகியது. பாரதியால் ஒதுக்கப்பட்ட ரோமியோக்களில் சிலர் இவர்களுடன் உட்கார்ந்து கொண்டு நடந்து முடிந்துவிட்ட அந்தச் சர்வதேச சர்வதேச பிரச்சினை மீது ஆய்வு நடத்த ஆரம்பித்தனர்.
பாரதி அனைவரின் வாயிலும் “சூயிங்கம்”மாக மாறிப் போனாள். சரியான முட்டாள் என்றான் ஒருவன்.
வடிகட்டின மூடம் மூடம் என்றான் இன்னொருவன், கண்ணிருந்தும் கபோதி என்றாள் ஒருத்தி, அறிவில்லாதவள் என்றாள் இன்னொருத்தி.
இத்தனைக்கும் ஆளாகி, தூரத்தே ஒரு மேசையில் தனது தினசரி நாட்குறிப்பு நோட்டுப் புத்தகத்துடன் அமர்ந்து அதில் எதையோ ஆழ்ந்து ரசித்துக் கொண்டிருந்தாள் பாரதி.
பாரதி ஓர் அழகிய பெண்ணின் முழு அம்சம். இறைவன் அவளுக்கு அளித்த அழகோடு, அறிவையும் வஞ்சனையின்றி வாரி வழங்கியிருந்தான்.
சரஸ்வதி அவளுடன் ஐக்கியமாகி இருந்தாள். திருமகள் அவளைத்தான் அன்பில் சீராட்டினாள்.
அழகும் அறிவும் திருவும் ஒருங்கே அமைந்த அந்த மங்கையின் கைப்பிடிக்கக் காத்துக் கிடந்தவர்கள் பலர்.
படித்தவர்கள், பட்டதாரிகள், பணக்காரர்கள், சமுதாய மேல்மட்டப் புள்ளிகள் என்று அவள்மீது பலரின் கண்கள் படாமலில்லை.
பார்த்தவர்கள் மறுமுறையும் பார்க்கத் துடிக்கும் பேரழகு. அந்த அழகின் ஈர்ப்பில் தங்களை இழந்த பலர் வெட்கத்தை விட்டு அவளிடம் நேராகவே தங்களின் காதலை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
தங்களது செல்வாக்கை வைத்து அவளது பெற்றோரி டம் தூதுவிட்டவர்கள் பலர். பாரதிக்காகத் தாரைவார்க்கத் தயாராக இருந்தவர்கள் பலர். ஆனால் இதில் யாருமே அவள் கண்ணில் படவேயில்லை.
மிகப் பெரிய சுற்றுலா நிறுவனத்தின் பொது உறவு அதிகாரியாக வேலைபார்த்து வந்த அவளின் கண்ணில் அந்தக் கறுப்பும் குள்ளமுமான புகைப்படக் கலைஞன் எதிர்பாராத விதமாய் வந்து விழுந்தான். விழுந்தவனால் வெளியேற முடியாத நிலை.
அவளது அழகிய பாதங்களின் அசைவைக்கூடத் தன் கேமிராவுக்குள் அடக்கிவிடும் திறமை பெற்றவனாக அவன் இருந்தான். இரண்டு மூன்று சந்திப்புகளுக்குப் பின் அவள் அவனிடம் சில மணித்துளிகள் பேசினாள்.
மனித நேயமும் மனிதாபிமானமும் அன்புள்ளமும் அவனுக்கு முழுச் சொத்துகளாய் இருப்பதை உணர்ந்தாள். “உலகின் மூலை முடுக்குகளில் எங்கே இருந்தாலும் துயரத்தால் வாழும் மக்களுக்காக நான் எவ்வளவு என்னை அர்ப்பணித்துவிட்டேன்”
என் ஆயுளை அவர்களுக்காகக் காப்பாற்றி வருகிறேன்… என் உழைப்பு வருமானம் எல்லாமே துன்பத்தில் வாடும் என் மக்களுக்கே என்றேன்”
அதிர்ந்து போனாள். இப்படியும் ஒரு மனிதரா என்று நெடுநேரம் யோசித்தாள்.
அவனிடமே கேட்டாள். “உங்களுக்கென்று குடும்பம்… உற்றார்,உறவினர்” அவன் சிரித்துக் கொண்டான்.
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்றான். வாழப்போவது ஒரு தடவை… ஆண்டவன் வழங்கியிருக்கும் இந்த வாய்ப்பை நான் ஏன் வீணாக்க வேண்டும்… என்னால் முடிந்ததைச் செய்வதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வேன்” என்றான்.
நெகிழ்ந்து போனாள். நினைத்து நினைத்துப் பார்த்தாள். தன் அழகுக்காகப் பலர் போட்டி போட்டுக் கொண்டு இருப்பதும், கல்யாணம் செய்து கொண்டு காதல் வாழ்க்கை வாழக் காத்துக் கிடப்பதும் எதற்காக என்றும் யோசித்தாள்.
எல்லாம் தங்களின் ஆசைக்காகச் சுயநலத்துக்காக மட்டுமே…என்பது தெளிவாய்த் தெரிந்தபோது அவளாக ஒரு முடிவுக்கு வந்தாள். அடுத்த நாள் அவனைப் பார்த்தபோது…
“நானும் உங்களோடு சேர்ந்து கொள்வதில் உங்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லையே” என்றாள்.
அவன் தடுமாறிப் போனான். பேச நா எழவில்லை. “என்ன சொல்கிறீர்கள்!” என்றான் திணறலுடன்.
“உங்களோட லட்சியத்திலே எனக்கும் பங்கு தரணும்னு கேட்கிறேன். நமக்குன்னு வாழற வாழ்க்கையை விட பிறருக்காக வாழற வாழ்க்கையே பேரின்பம்னு நீங்க சொன்னதுக்கப்புறம் எனக்கும் அப்படி ஒரு வாழ்க்கை தான் வேணும்னு நான் முடிவுக்கு வந்துட்டேன்.”
‘ஆனால் அதுக்கு நீங்க எனக்கு வேணும்… உங்களோட துணை எனக்கும் என்னோட துணை உங்களுக்கும் இருந்தால் நம்முடைய இலட்சியம் இன்னும் சிறப்பான முறையில் வெற்றியடையும் என நான் நினைக்கிறேன்’ என்றாள்.
“துணை என்றால்.. அதன் பொருள்…?”
தயக்கத்தில் கொஞ்சம் குறும்பும் கொஞ்சம் ஆண் மையும் மிடுக்கும் சேர்ந்திருந்தது.
பாரதி கண்ட புதுமைப் பெண்ணான இந்தப் பாரதி நிமிர்ந்தாள். புன்னகையுடன் அவனைப் பார்த்தாள்.
மெல்லத் தனது இடது கை சுட்டுவிரலால் அவனின் வலக்கை விரலைப் பற்றினாள். அவன் புரிந்து கொண்டான். புன்முறுவலுடன் நெஞ்சில் சேர்த்துக் கொண்டான்.
காதல் என்பது வெளி அழகில்… வெறும் கவர்ச்சி வேஷத்தில் இல்லை என்பதும்… அது பணத்தில், பதவியில் பிறந்து வராது என்பதும் அங்கே உறுதிப்பட்டுப் போனது.
அவர்களின் அந்தப் பிணைப்பே இப்போது இங்கே வட்டமேசையில் கருப்பொருள் ஆனது.
பாரதி தன் நாட்குறிப்பில் அழகாய் எழுதுகிறாள்.
“தாமரைப் பூவினில்
வண்டு வந்து தேனருந்த
மலர் மூடிக் கொள்ள
உள்ளிருந்தே வண்டு
ஆடுதல் போல்
உள்ளத்தில் நீ இன்று
ஆடுகின்றாய்.”
என்றோ கேட்ட கண்ணதாசன் பாடல் வரிகள். இந்த இளநங்கையின் காதல் கீதமாய் இதழ்களில் படர்ந்து கொண்டிருந்தது.
– தமிழ் முரசு
– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.
![]() |
நூலாசிரியர் பற்றி... - மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005 இலக்கிய வடிவங்களில் சிறுகதை. புதினம், கட்டுரை, உரைவீச்சு போன்ற அனைத்து நிலைகளிலும் சிந்தனையை வெளிப்படுத்துகின்ற ஆற்றல் மிக்கவராக மதிக்கப்படுகின்ற சிங்கை. தமிழ்ச்செல்வம் அவர்களை 1995-ம் ஆண்டு முதல் நான் நன்கு அறிந்து வைத்து உள்ளேன். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் உறுப்பியம் பெற்றுத் தொண்டாற்றினார். துணைச் செயலாளர் பொறுப்பேற்றுத் துணை நின்றார். கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராய்த் தொடர்ந்து…மேலும் படிக்க... |