கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 19, 2025
பார்வையிட்டோர்: 5,443 
 
 

அருந்ததி அபார்ட்மெண்ட் செக்யூரிட்டி தூங்கிவழிந்து கொண்டிருந்தான். நான் மெனக்கெட்டு காலை வெயிலில் நனைவதற்காகவே அதன் வழியாக நடைப் பயிற்சியில் கை வீசுவேன். அன்றைக்கும் வழமைபோலவே. நான் ஒத்தை ஆள். வெள்ளையும் சொள்ளையுமாக ஒரு முதியவர் என்னைக் கவனிக்காமலே கடந்து போய்க் கொண்டிருந்தார். எனக்கு அவர் மேல் அவ்வளவு ஆர்வமில்லை. வெயில் கடுகடுக்க ஆரம்பித்தது. அடுத்து ஓர் இளம்பெண் வந்தாள்.

மஞ்சள் நிற சுடிதார் . மேலே துப்பட்டா இல்லை.

இடது கையில் ஒரு சிறிய டவல். கைபேசிக்காக. அது எப்படித் தெரிந்தது என்றால், மூன்றாவது ரவுண்டு வரும்போது சிரித்துச் சிரித்துப்பேசிக்கொண்டே நடந்ததால். அவளுக்காக எக்ஸ்ட்றா ரெண்டு ரவுண்டு போனோம்.. நாங்கள்தான் அவளும் எனக்காக ரெண்டு ரவுண்டு வந்திருக்கவேண்டும்.

நாளைக்கும் இதே காட்சி ரம்மியமாய் உதித்தால்….? ஆனால் இவள் வரவேண்டும். எது எப்படியோ அவள் பெயர்
கார்த்திகாவாக இருக்கக்கூடாது. ஏனென்றால் கார்த்திகா என் முன்னால் ஒருபோதும் வரவே மாட்டாள்!
அவள் போய்விட்டாள். எந்த அபார்ட்மெண்டில் இருக்கிறாள் என்று தெரியவில்லை. நான் செக்யூரிட்டி பக்கம் நின்றேன்.

அவனைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. முகத்தில் வெண்தாடி.நீலக்கலர் பேண்டும், சட்டையும். மேல் பட்டனைத் திறந்து விட்டிருந்தான்.

பெல்ட் இலேசாக அவிழ்ந்திருந்தது. சூரியன் முகத்தில் அறைந்து கொண்டிருந்தது. பாவம்.

“வாட்ச்மேன்…… வாட்ச்மேன்..!”

பதிலில்லை. அருகே தண்ணீர்பாட்டில் காலியாக இருந்தது. கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருந்த நீரை வழித்து கன்னத்தில் அப்பினேன்.

“சார் ….சார்!”

அவன் தடாலென்று விழித்துக்கொண்டான்.

“யாரு சார்? என்ன வேணும்?”

கூசிய விழிகளை சுருக்கியவாறு அண்ணாந்து பார்த்தான்.

“என்னைத் தெரிதா… இப்படித்தானே வாக்கிங் போவேன்”

‘சரி … இப்ப அதுக்கென்னவாம்’ என்பதுபோல் என்னைப் பார்க்கிறானோ என்றிருந்தது எனக்கு. “எதுக்கு இப்படி எதிர் வெயில்லே நீச்சல் அடிக்கிறீங்க… இந்தாங்க முக்குக் கடையிலே போய் டீயும் பன்னும் சாப்பிட்டிட்டு வாங்க… உங்களைப் பார்த்தாப் பாவமா இருக்கு” – அவர் கையில் ஐம்பது ரூபாயைத் திணித்தேன். “பரவாயில்லே சார்… இப்பக் கொஞ்ச நேரத்திலே எம்பொண்ணு சாப்பாடு எடுத்துட்டு வந்திருவா..காலைலே வெள்ளென எந்திருச்சு ஒரு டீ சாப்பிட்டிட்டு வந்தவன் அப்படியே கண்ணசந்துட்டேன்”

“இருக்கட்டும் வச்சுக்குங்க.. எனக்கு ஒரு விபரம் தெரிஞ்சாகணும்”

“சொல்லுங்க சார்.. வீடு ஏதாச்சும் வேணுமா?”

“சேச்சே… நான் பக்கத்திலேதான் இருக்கேன், அது இல்லேப்பா.. இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு வாக்கிங் போய்ட்டிருந்திச்சு…திரும்பிப் பார்த்தா எங்கே போச்சுன்னே தெரில… அது யாருன்னு தெரிஞ்சிக்கலாமுன்னுதான்..”

அவன் உதட்டைப் பிதுக்கினான். கழுத்தைப் பக்கவாட்டில் சைடு ஸ்டாண்ட் போட்டான்.

“என்ன சார் இது… நிறையப் பேர் நடக்கிறாங்க..”.

“நான் கேட்கறது இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே போனது..”

“என்ன டிரஸ் ஏதாச்சும் அடையாளம்?”

மனுஷன் பிடிச்சுட்டாரு போலிருக்கு

“மஞ்சள் கலர் சுடிதார்…”

அந்த ஆள் புறா மாதிரி அனத்திக்கொண்டே பற்கள் வெளியே தெரியாமல் சிரித்தார்.

“செக்யூரிட்டி… ஏன் சிரிக்குறிங்க உங்களுக்குத் தெரிஞ்சவுங்களா?”

“எம் பொண்ணு கார்த்திகா சார்!”

நான் ஒரு மிடறு எச்சிலை விழுங்கினேன். நெஞ்சில் இனம் புரியாத உணர்வு. ஒரு நொடிதான். வெளிக்காட்டாமல் இயல்பாக இருந்திருக்கலாம்.

என்னால் முடியவில்லை.

“சார்.. என்னாச்சு.. ரூம்லே உட்காருங்க … வெயில் ஏறுனபொறகு ஏன் சார் நடக்குறீங்க.. அடடே.. நெற்றியெல்லாம் வேர்த்துக் கொட்டுதே… போய் காஃபி வாங்கிட்டு வரட்டுமா.. சாருக்கு வீடு எந்தப் பக்கம்… இப்ப எம்பொண்ணு வந்துருவா உங்களை வண்டிலே விடச் சொல்றேன்..”

எனக்கு தர்மசங்கடமாகப் போயிற்று.

“அதெல்லாம் வேண்டாங்க.. வீடு பக்கந்தான்.. போய்டறேன்..”

“சார்… உங்களப் பார்த்தா நல்ல மனுஷனாத் தெரீது…. உள்ள இருங்க புஸ்தகம் , பேப்பர் எல்லாம் இருக்கு அஞ்சு நிமிஷத்துலே காஃபியோட வர்றேன்.. “

அவன் போனதுக்கப்புறம் என் மனதில் இந்த கார்த்திகா வந்தாள்.

அவளை நினைத்துக்கொண்டே உள்ளே கிடந்த ஸ்டூலில் அமர…. சில புத்தகங்கள் இறைந்து கிடந்தது என் பார்வையில் பட்டது.

என்ன ஆச்சரியம்! இதையெல்லாமா இந்த செக்யூரிட்டி படிக்கிறான்?

பாரதிதாசன், ஆண்டன் செகாவ், புதுமைப்பித்தன், கதே, காண்டேகர்,அசோகமித்திரன், தாகூர்… என்று அந்த துளியூண்டு ஹாலோ பிளாக் குடோனுக்குள் இரைந்து கிடந்தார்கள்.

எனக்குள் ஆச்சரியம் பூத்தது.

வந்தால் கேட்டுவிட வேண்டியதுதான். அதோ, வந்துவிட்டான்.

“சார்… காஃபீ !” பிளாஸ்கில் இருந்ததை ஒரு டம்ளரில் ஊற்றப் போனான்.

“கொஞ்சமா… நீயும் குடி” என்றேன்.

“இந்த புஸ்தகமெல்லாம்….”

“ஓ…. அதுவா சார்… எம்பொண்ணுது… அவ இங்கே வந்து ரொம்ப நேரம் படிச்சிட்டு இருப்பா .. அவளே இப்ப வந்துருவா பாருங்க…விபரமா நீங்களே கேட்டுக்குங்க… அத வந்துட்டா!”

அபார்ட்மென்டுக்கு வெளியே பார்த்தேன்.

இப்ப மஞ்சள் இல்லை. கிளிப்பச்சையில் சுடிதார். வெளிர் நிறத்தில் லெக்கின்ஸ் . மெரூன் கலரில் துப்பட்டா. குளித்து முடித்த தலையில் கேசம் அடங்கியிருந்தது. கையில் ஒரு பை.

“நான் சற்று தள்ளி நின்றிருந்ததால் அவள் என்னை கவனிக்கவில்லை.

“அப்பா!,, நீங்க சாப்பிடுங்க..”

“இன்னைக்கு என்னம்மா கொண்டாந்தே ?”

“தோசையும், புதினா சட்னியும்… அப்புறம் நேத்து கொஞ்சம் சோறுமீந்திருச்சு.. மோரு போட்டு கரைச்சிட்டு வந்திருக்கேன்.. கடைசீலே குடிச்சுக்கோங்க என்றவாறு ஒரு புத்தகத்தை எடுக்கப் போனாள் .

“சார் … இங்கே வாங்க.. இவதான் எம்பொண்ணு கார்த்திகா..”

அவள் இலேசாக முறுவலித்தாள்.

“இவ எதுக்கோ படிச்சிட்டே இருக்கா . சார்…. என்ன அது.. ஜன்னல்”

“ஜன்னல்..?”

அவள் “கலீர்” என்று சிரித்தாள்.

“ஜன்னல் இல்லேப்பா..ஜர்னலிசம்!”

“என்னமோ அம்மா.. நான் சாப்பிட்றேன்..நீங்க அங்க போய் ஷெட்டிலே உட் கார்ந்துக்குங்க.. போம்மா சார் ரொம்ப நல்லவரு பேசிட்டு வா!”

நான் தயங்கினேன். ஆனால் எடுப்பும் இளமையுமுள்ள அவளிடம் உரையாட வேண்டும் போலிருந்தது.
அவளும் என்னை ஓரக்கண்ணால் பார்த்தவாறு “வாங்க அங்கிள்…” என்றாள்.

இருவரும் ஏற்கனவே அங்கு கிடந்த பாலிமர் சேரில் அமர்ந்தோம். அவள் சின்னப் பெண். ஆனாலும், என்ன பேசுவது…. எப்படி ஆரம்பிப்பது என்று புலப்படவில்லை.

“ஏம்மா… இந்த வீடு யாருது? உங்க அப்பா இங்கே”

“சார்…. இது இன்னும் கட்டி முடிக்கலே… கீழே ரெண்டு வீடு… மேலே நாலு வீடு.. ஓனர் பெங்களூர்லே இருக்காரு.. எல்லாமே அரைகொறையா நிக்குது… அவங்க ஃபேமிலிலே ஒரு டெத்… எல்லாமே தற்காலிகமா நிறுத்தி வச்சிருக்காங்க..அப்பா ஒரு பாங்க் ஏ.டி.எம் லே இருந்தாரு.. அது பிடிக்கலேன்னு வந்துட்டாரு… இது வீட்டுக்குப் பக்கம்… ஒத்தாசையா நானும் இருக்கேன், சார்”

“ஓ… வெரி குட்… நீங்க?”

“அங்கிள்… நான் சின்னப் பொண்ணு…. பேரு கார்த்திகா… அப்படியே கூப்பிடுங்க!”

“அது பரவாயில்லை…. வீட்லே எத்தனை பேரு?”

அதற்குள் செக்யூரிட்டி அழைத்தான். “ஏம்மா… கார்த்திகா. . போன் வந்திருக்கு யாருன்னு பாரு”

“அங்கிள் ….ஒரு நிமிஷம் …”

அவள் சிட்டாகப் பறந்தாள் .

“நானும் போயிட்டு நாளைக்கு வர்றேன்…அப்பாகிட்டே சொல்லிரும்மா.”

பதிலுக்குக் காத்திராமல் கடந்துபோனேன்.

வீட்டில் பல அலுவல்கள் இருந்தும் ஈடுபாடில்லை. மனசு ஏனோ அடங்கியே கிடந்தது.

அதற்கு “கார்த்திகா …. கார்த்திகா” என்று ரெக்கை முளைத்தது.

அன்று இரவு பூரா உறக்கம் என்னைவிட்டு விலகியே இருந்தது. காதிபவனில் வாங்கிய இறுகிப்போன மெத்தையில் மூட்டையாய்க் கிடந்தேன்.

வழக்கம்போல் ஒரு கப் ப்ரு காஃபிக்குப் பின்னர் தான் வாக்கிங் போவேன். அன்று போவதற்கு மனமில்லை. போர்டிகோவில் அமர்ந்து பேப்பரில் மூழ்கினேன். அப்போது –

காலிங் பெல் அழைத்தது. தலையைத் துலுக்கி, மேலே எம்பிப்பார்த்தேன்.

அங்கே –

“குட்மார்னிங் அங்கிள்… உள்ளே வரலாமா?”

கார்த்திகா!

“அடே… வாம்மா.. ப்ளீஸ்..”

எனக்குள் கொஞ்சம் தடுமாற்றம். வரக்கூடாதவள் வந்துவிட்டாள். எப்படியாவது சமாளிக்கவேண்டும்..
ஹாலில் கிடக்கிற நாற்காலியை எடுக்க யத்தனித்தார்.

“அங்கிள்… இருங்க …” — அவளே உள்ளேசென்று எடுத்து வந்தாள்.

அமர்ந்தவாறே உள்ளே எட்டி ,எட்டிப் பார்த்தாள்.

“அங்கிள் .. யாருமே இல்லையா…ஆர் யூ லோன்லி…?”

“அப்புறம் … என்ன விஷயமா வந்தே?”

“நான் ஒரு ஜர்னலிஸ்ட்.. ஃபிரீலான்சர்… உங்ககிட்டேப் பேசணும் “

“எங்கிட்டே என்ன இருக்கு..”

“அங்கிள்… முதல்லே ஒரு கேள்வி கேட்டேன்.. அதுக்கு பதிலில்லை “

“ஓ.. சாரி. ஐ ஆம் யெ லோனர்” – நான் வறட்சியாய்ச் சிரித்தேன்.

“அங்கிள்… நீங்க என்னவா இருக்கறீங்க?”

“நான் பாங்க் சர்வீஸிலிருந்து ரிடயர்டு… எனக்கு ஸ்போர்ட்ஸ் இன்ட்ரெஸ்ட்.. இப்ப ஸ்போர்ட்ஸ் ரைட்டர் ! சில மாக்லே எழுதிட்டு.. காலத்தைப் போக்கிட்டு”

“கங்கிராட்ஸ் அங்கிள் ! நான் உங்களைப் போல ஆர்ட்டிஸ்ட் கிட்டே பேட்டி எடுத்திட்டு இருக்கேன்… ஒரு பத்திரிகைக்காக… எப்ப ரெடியா இருப்பீங்க..?”

நான் யோசிக்கிற மாதிரி பாவ்லா பண்ணினேன். எனக்கு உடன்பாடில்லைதான். ஆனாலும் இந்தச் சிறு பெண் எப்படியோ என் மனதை ஈர்த்துவிட்டாளே…

“இன்னும் ஒரு வாரம் போகட்டும்… மூணு நாளைக்கு வெளிலே போறேன்… வந்ததும், உன் அப்பாகிட்டே சொல்றேன்.. அப்புறம் வந்தால் போதும்… சரியா?”

“ஓகே.. அப்புறம் உங்கள் ஃபேமிலியைப் பற்றி….”

நான் வறட்சியாய்ச் சிரித்தேன். மடிமீது கிடந்த பேப்பர் மேல் தலைகுத்தினேன்.

“கார்த்திகா!..இது நீ இல்லே,. அது அவ! கார்த்திகா… அவ என்னை “ரிஜெக்ட்” பண்ணி இப்ப நாற்பது வருஷமாயிருச்சு!”

“அங்கிள்….! — அவள் வியப்புடன் என்னையே பார்த்தாள்.

“அதிலிருந்து நான் தனியாவே வாழ்ந்துட்டேன்… கார்த்திகான்னு பேரைக் கேட்டாலே என் நெஞ்சுக்குள்ளே அப்படியொரு வலி..ஆனா…என்னமோ தெரில உன்னைப் பார்த்த மாத்திரத்தில் எனக்குப் பிடிச்சுப் போச்சு..ப்ளீஸ்..அப்புறம் எதுவும் என்னைக் கேட்காதே.. ப்ளீஸ்..”

கட்டுப்பாடில்லாமல் காம்பவுண்ட் சுவர் மீது ஓடித்திரியும் அணிலைப்பார்த்து விம்மினேன்.

அவள் வதனத்தில் இதுகாறும் ஒட்டிக்கொண்டிருந்த ஒயில் எங்கே?

‘நீ போ’ என்பதுபோல் என் வலது கையால் சைகை காட்டினேன்.

“வர்றேன் அங்கிள்”. –அவள் திரும்பிப்பார்த்தவாறே என்னையும், என் வீட்டையும் கடந்துபோனாள்.

அன்று மாலை கார்த்திகா மொட்டைமாடியில் தண்ணீர்த் தொட்டியருகே நின்றுக்கொண்டிருந்தாள். இதமான காற்று. அவள் உள்ளம்பூரா அந்த மனிதர் ஆக்கிரமித்துக் கிடந்தார். அவளுக்கு ஏனோ அவர்பேரில் ஓர் ஈர்ப்பு. நினைத்துப் பார்த்தாள்.

‘ஒருவேளை, அப்பா, அவரிடம் என்னைப் பற்றிச் சொல்லியிருப்பாரோ..’

அவரைப் பொறுத்தவரையில் நான் சின்னப் பெண்!

என்னைக் கைப்பிடித்தவன் இப்பொழுது எங்கே இருக்கிறானோ, பாவி!

…ஐ ஆம் டெஸெர்டட் நௌ..! அப்பா அவரிடத்தில் ஒருவேளை என்னைப் பற்றி சொல்லியிருப்பாரோ… இருக்கலாம்…இல்லாமலும் இருக்கலாம் … அம்மா இல்லாத பிள்ளைன்னு அப்பா அவசரப்பட்டுட்டாரோன்னு இப்ப நினைக்கத் தோணுது… எது எப்படியோ அப்பாவுக்காக…. உம் …..

ஏறக்குறைய பத்து நாட்களாகிவிட்டது. கார்த்திகாவுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. தினமும் வாக்கிங் போவது, அந்த மனிதருக்காகவே என்பது போலிருந்தது. என்னாயிற்று என்றுதெரியவில்லை. அப்பாவும் கை விரித்தார்.

இனி….காத்திருக்க முடியாது.

அன்று வழக்கம்போல் நடைப்பயிற்சி முடிந்ததும் அவர் வீட்டை நோக்கிப் புறப்பட்டுவிட்டாள். பக்கம்தான். இரண்டு குறுக்கு வழிச்சாலைகளைக் கடக்க வேண்டும். கார்பொரேஷன் தண்ணீர் தொட்டிக்கு எதிர்புறம் வீடு. காம்பௌண்ட் சுவருக்கு ஓரமாக ஒரு பாதாம் மரங்கூட இருக்கும். அருகே மணம் பரப்பும் மருதாணிச்செடிகள். இரண்டாவதுகுறுக்கு வழிச்சாலைக்குள் அடியெடுத்து வைத்ததுமே, அவர் வீடு தெரியும். இளம் வெயிலில், கிரே கலர் பெயிண்டில் வீடு தெரிந்தது. குறுக்கே தள்ளு வண்டியில் பழக்காரன் வந்தான்.

“மேடம்… மாம்பழம்… குண்டு இருக்கு… நீலம் இருக்கு..”

“வாங்கிக்குங்க மேடம்… கொறைச்சுத் தர்றேன்”

“சரி… போடு.. நல்லதா இருக்கட்டும்.”

“எவ்வளவு?”

“ஐம்பது…. பத்து கொறைச்சு நாப்பது கொடுங்க..”

“பரவாயில்லே .. இந்தா ஐம்பதே வைச்சுக்க”

ஒரு கும்பிடு போட்டுவிட்டு அவன் நகர்ந்தான்.

பின்னாலேயே பூக்காரி வந்தாள்.

“அம்மா… மல்லியா, முல்லையா.. ?”

எதுவும் வேண்டாம் என்று சைகை காட்டிவிட்டு நடையைக் கட்டினாள் பின்புறம் வழிந்த சிகையைத் தடவிக்கொண்டாள். பூச்சூடி ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது!. நீண்ட பெருமூச்சு அவளை வீட்டருகே கொண்டுவந்து சேர்த்தது.

வெளியே பூப்போட்ட க்ரில் கேட்டில் பூட்டுத் தொங்கியது.

அவளுக்கு ஆச்சரியம் கலந்த ஏமாற்றம். சுற்றும் முற்றும் பார்த்தாள்.

கேட் அருகே நின்று எம்பிப் பார்த்தாள். ஆள் அரவமில்லை. பக்கத்து வீட்டு வாசலில் ஓர் அம்மா செடிக்கு நீர் வார்த்துக்கொண்டிருந்தாள் இவள் அருகே போனதும், “அம்மா… பக்கத்து வீட்லே ஒருத்தர் இருப்பாரே….” என்று
வார்த்தைகளை விழுங்கினாள்.

“நீ…கார்த்திகாவா?”

“ஆமாம்மா …”

“அவரு…. வீடு காலிபண்ணிட்டுப் போய்ட்டாரு… ஒரு நிமிஷம் இரும்மா..” என்றவாறு வீட்டுக்குள் போனாள்.
கையில் ஒரு கவருடன் வந்தாள். அதை இவளிடம் கொடுத்து, “கார்த்திகான்னு ஒரு பொண்ணு என்னைக் கேட்டுட்டு வரும்..அப்படி வந்தா இந்தக் கவரைக் கொடுத்துருங்க” ன்னு சொல்லிட்டு அந்த மனுஷன் போய்ட்டாரு”

“அப்படியாம்மா … அவரு பேரு… அட்ரஸ்… போன் நம்பர் ஏதாச்சும்..”

“பாப்பா… அதெல்லாம் எனக்குத் தெரியாது… அவரு இங்கிருந்த வரைக்கும் யார்கிட்டேயும் பேச மாட்டாரு.. எங்க போறாருன்னு சொல்லவுமில்லே… பேருகூடத் தெரியாது!”

“எப்ப அம்மா போனாரு ..?”

“ம்ம்….ஒரு வாரம் இருக்கும்… ஒரு டெம்போ வந்துச்சு.. கொஞ்சம் சாமான்களை ஏத்திட்டு கெளம்பிட்டாரு..”
அவள் விதிர் விதிர்த்துப்போய் நின்றாள்.

“சரிங்கம்மா…. தேங்க்ஸ்.” அவள் குரல் கம்மியிருந்தது. அவளால் அடுத்த அடி எடுத்துவைக்கமுடியவில்லை அவள் மீண்டும் அவர் வீட்டுக்கு எதிரே விசிறிக்கொண்டிருந்த வேப்பமரத்துக்குக்கீழே ஒதுங்கினாள்.

அப்பொழுது, கார்பொரேஷன் குப்பை லாரி வந்து நிற்க, ஒரு பெண்இறங்கி வந்து, “மேடம்… இந்த வீட்லே யாருமில்லையா.. ஒரு வாரமாப் பூட்டியே கெடக்குது..” என்று இவளைப் பார்த்துக் கேட்டாள்.

“இல்லேம்மா… அவரு வீடு காலி பண்ணிட்டுப் போய்ட்டாராம்..” என்று சொல்லிவிட்டு, கையில் கனத்துப்போயிருந்த மாம்பழப் பையை அவளிடம்கொடுத்தாள்.

“நானும் இவரைப் பார்க்கலாம்னுதான் வந்தேன்”

“டான்க்ஸ் மேடம்.. நல்ல பசி” என்றவாறு அவள் லாரியில் ஏறினாள்.

வேப்பமரத்து நிழலும் அவளைச் சுட ஆரம்பித்தது. ஓர் ஆசுவாசப் பெருமூச்சு விட்டவளாய் கவரைப் பிரித்தாள் உள்ளே ஒரு கடிதம் –

அன்புள்ள கார்த்திகா,

நான் போகிறேன். எனக்கு இங்கிருக்கப் பிடிக்கவில்லை. உன்னைப்பார்த்ததிலிருந்து, என் உள்ளத்தில் மடிப்பு மடிப்பாய்ப் பொதிந்து கிடந்த பழைய நினைவுகள் என்னை வாட்டியெடுக்கின்றன. அவளில்லாத ஆண்டுகள் எத்தனையோ கடந்து போய் விட்டன. ஆனால் எதிர்பாராமல் உன்னைச் சந்தித்ததும், எனக்கு அவள் ஞாபகம். அவள் நிச்சயம் என்னைத் தேடி வரமாட்டாள்.

ஆனால், எப்படியோ நீ குறுக்கே வந்துவிட்டாய், கடந்து போனவளை நினைவு படுத்துவதற்கு!. உனக்கு காலம் இருக்கிறது. வாழ்க்கை இருக்கிறது. நீ சின்னப்பெண்! நான் வடநாட்டில் இருக்கிற என் உயிர் நண்பனிடத்திற்குப் போகிறேன். நாங்கள் ஏகதேசம் ஒன்றாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்..

இனிமேல் உலகம் சுற்றலாம் என்றிருக்கிறோம். வாழ்க்கையில் எதுவும் மிச்சமில்லை, அனுபவிப்பதைத் தவிர. கடைசியாக உனக்கு என் அன்புப் பரிசு.

ஒரு சொட்டுக் கண்ணீர், இத்துடன்.
உன் அன்புள்ள
…………………..

கார்த்திகா படித்து முடித்ததும் குமுறிக் குமுறி அழுதாள்.

“வாட் யெ பைன் ஜென்ட்ல்மேன்!”

பெயர் தெரியாத அந்த முகத்தின் பிம்பம், அவள் மனதில் பாசிபோல் அப்பிக்கொண்டது.

கார்த்திகா படித்து முடித்ததும் குமுறிக் குமுறி அழுதாள்.

“வாட் யெ பைன் ஜென்ட்ல்மேன்!”

பெயர் தெரியாத அந்த முகத்தின் பிம்பம், அவள் மனதில் பாசிபோல் அப்பிக்கொண்டது.

சந்திரா மனோகரன் சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *