அவனும் சில வருடங்களும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 12, 2025
பார்வையிட்டோர்: 91 
 
 

(2000ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

அத்தியாயம் – 19

அக்டோபர் ஆறாம் திகதி 1987 இங்கிலாந்து கண்டிராத சூறாவளியடித்தது. 

டெவீனா வீட்டில் அவர்கள் இருவரையும் தவிர யாரும் இல்லை. டெலிபோனில் ஓர்டர் பண்ணி சாப்பாடு எடுத்துக் கொண்டார்கள். 

வீட்டுக்குப் போனால் அம்மாவின் முணுமுணுப்பு தாங்க முடியாது என்று அவனுக்குத் தெரியும். 

அன்று பின்னேரம் இந்திரா புறப்பட்டுப் போன பின் அம்மா விடாமல் ஏதோவெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள். 

வெளியில் இடி மின்னல், காற்று, மழை; இரவு பண்ணி ரண்டு மணியிருக்கும். “உலகமே அழியப் போகிறதோ” அவனின் அணைப்பில் டெவீனா முனகினாள். 

“அழிந்து தொலைய கட்டும் இந்த நிமிடமே? சந்தோஷத்துடன் இறந்து விட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்” அவளுக்குள் தன்னைப் பிணைத்துக் கொண்டு அவன் முனகினான். 

அந்த நேரம் றெக்கோர்ட் சட்டென்று நின்றது. லைட் போய் விட்டது. ஜன்னலுக்கப்பால் உலகத்தில் இயற்கையின் மின் கீற்றுத் தவிர எந்த வெளிச்சமும் இல்லை. 

அவனை இறுக அணைத்துக் கொண்டாள் டெவீனா. 

“எனக்குப் பயமாக இருக்கிறது. பார்த்தாயா உலகத்தில் மின்னல் தவிர எந்த லைட்டும் இல்லை. மனித சக்தியை ஒரு நிமிடத்தில் அழித்தொழித்து விட்டதே இந்த இயற்கை ஆவேசம்” 

அவள் பயத்தில் முனகினாள். நீண்டநேரம் லண்டனும் லண்டனைச் சுற்றிய பல நகரங்களும் இருளில் ஆழ்ந்தன. உலகத்தின் நாகரீக தலைநகரான லண்டன் ஆதரவற்ற குழந்தை யாய் இயற்கையன்னையின் இருள் மடியிற் கிடந்தாள். 

“இவ்வளவுதானே வாழ்க்கை, ஒரு கொஞ்ச நேரச் சூறாவ ளியைத் தாங்க முடியாத நாகரீகம், விஞ்ஞானம், பணவலிமை, தொழில்வளம்” டெவீனா இருளில் பெருமூச்சு விட்டாள். 

“நாளைக்கு ஸ்காட்லாந்துக்கு ரெயின் இருக்கும் என்று நினைக்கிறாயா” ராகவன் சந்தேகத்துடன் கேட்டான். 

“தாமதமானாலும் ரெயின் போகும். ரெயின் போகாவிட்டாலும் பிளேனில் போய்க் கொள்கிறேன்.” 

“போய்ச் சேர்ந்ததும் போன் பண்ணு” 

“என் நலனில் இவ்வளவு அக்கறையாய் இருக்கிறாயே”

“இது மனிதாபிமானம் இல்லையா” இப்படிச் சொன்ன போது இந்திராவைப் பற்றிய நினைவு எங்கோ தைத்தது? இந்தச் சூறாவளியால் கடற் பிரயாணத்தில் ஏதும் பிரச்சினை வந்திருக்குமா? அல்லது புயல் தொடங்க முதல் கப்பல் பிரான்சியக் கரையை கண்டிருக்குமா? 

“என்ன யோசிக்கிறீர்கள்” 

“இந்திராவைப் பற்றி யோசிக்கிறேன்” உண்மையைச் சொன்னான். 

இருளில் அவள் முகம் தெரியவில்லை. அவளின் மௌ னம் என்ன காரணத்தினால் என்று புரியவில்லை.

”இந்திராவிற்குக் கல்யாணம், குழந்தை என்றெல்லாம் ஆசையிருக்குமில்லையா” அவள் இவனின் மார்பில் முகத்தைப் பதித்தப்படி கேட்டாள். 

“பெரும்பாலான பெண்களின் ஆசைகள் அது”. 

“நான் பெரும்பாலான பெண்கள் போலில்லை என்பது உனக்கு ஆச்சரியமாயில்லையா”. 

“இல்லை” 

“ஏன்” 

“புவனாவும் பெரும்பாலான பெண்கள் போலில்லை. நகை நட்டு என்று ஆசைப்படாத தமிழ்ப்பெண் புவனா. தாய் தகப்பன் சொல்வதைக் கேட்காமல் றிச்சார்டுடன் ஒன்றாக வாழ்கிறாள், அது மிகவும் துணிவான விடயம் என்று நினைக் கிறேன். புவனாவிடம் எனக்கு மரியாதை, அன்பு, பாசம், அவள் மிகவும் வித்தியாசமான பெண் ஒரு விதத்தில்.” 

“இந்திராவைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி அம்மா கேட்கவில்லையா” 

“எனக்கு இப்போது இருபத்தியாறு வயது முடிந்து விட்ட து” அவன் சிரித்தான். 

“அப்படி என்றால்” 

”எனக்கு என்ன வேண்டும் என்று தெரியும்.” 

“என்ன வேண்டும்” அவளின் கிசுகிசுப்பு இன்னொரு தரம் அவனை கிறங்கப் பண்ணியது. நீண்ட இருண்ட இரவின் மடியில் அவர்கள் இணைந்து உலகை மறந்தார்கள். 

ஸ்காட்லாந்து போனதும் அழுகையும் கண்ணீருமாகப் போன் பண்ணினாள். “அம்மாவின் கடைசி நேரம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறேன். எப்போது உனக்குப் போன் பண்ணுவேன் என்று எனக்குத் தெரியாது” அவள் அழுகையி னூடே போன் வைத்தாள். 

இலங்கையில் இந்திய அமைதிப் படையினருக்கும் தமிழ் விடுதலைப் போராட்டத்துக்குமிடையில் சுமுகமாக நிலை என்று செய்தி பரவிக் கொண்டிருந்தது. 

ஒரு பின்னேரம் ராகவன் வெளியில் போயிருந்த நேரம் பாரிசிலிருந்து டெலிபோன் கோல் வந்தது. 

மைதிலிதான் டெலிபோனை யெடுத்தவள். பிரமை பிடித் தவள்போல் நின்றாள். “என்ன மரம் மாதிரி நிற்கிறாய்”அம்மா போனைப் பிடுங்கி எடுத்தாள். 

பொன்னம்பலம் மாமா அழுகையினுடே கடந்த சில நாட்களாக நடக்கும் விஷயங்களை விவரித்தார். கடைசியில் அவர் சொன்ன விஷயம் தாயை வீரிடப் பண்ணியது. 

கீதா, குழ்தைகள், மகாலிங்கம் என்போர்இந்திய அமை திப் படையினரால் கொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களில் கீதா குடும்பமும் ஒன்று. 

எட்டு வயதுத் தமிழ்ப் பெண்குழந்தை தொடக்கம் எழு பது வயதுத் தமிழ்ப் பாட்டி வரை தமிழ்ப் பெண்கள் இந்திய அமைதிப் படையின் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள் என்பது போன்ற செய்தி புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியது. 

சிங்களப் படையினரின் கொடுமைக்கு இரவும் பகலும் பட்ட துயர், உயிரழிவு, பொருள் அழிவு, நகர், நாகரீக அழிவு என்று பட்ட துயர் துடைக்க கடல் கடந்து வந்த இந்திய அமைதிப் படையினரின் செய்கை மனித நேயத்தைப் போற்று வோரால் புரிந்து கொள்ள முடியாதிருந்தது. 

அம்மா வாயிலும் மார்பிலும் தலையிலும் அடித்துத் துடித்தாள். கீதா என்ற பொறுமையின் சின்னம் இந்தியப் படைக்கு என்ன செய்தது? அம்மா பைத்தியம் போல் அலறியழுதாள். 

மைதிலி தாயைக் கட்டியழுதாள். ராகவன் வீடு வந்த போது உறவினர்களால் நிறைந்து வழிந்தது. 

அதன் பிறகு சில நாட்கள் வீடே சவக்களை கட்டியது. வருவோர் துயருடன் இந்திய அமைதிப் படைக்குச் சாபம் போட்டார்கள். 

கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஸ்ரீலங்காப் படையினர் செய்த கொடுமையைக் கடந்த இரண்டு கிழமைக ளாக இந்திய அமைதிப் படை என்ற பெயரில் வந்த ராணுவம் மூர்க்கத் தனமாகச் செய்து முடித்தது என்று செய்திகள் சொல் லப்பட்டன. 

இந்திய அமைதிப் படையினரால் கொல்லப்பட்ட இளம் தமிழர்களில் லண்டனிலிருந்து சொந்தக்காரனைப் பார்க்கச் சென்ற ஆனந்தனும் ஒருத்தன் என்று தெரிய வந்தபோது ராகவனின் துயர் இன்னும் கூடியது. 

“ஏழைத் தமிழர்கள் இங்கு அழிகிறார்கள். வசதி படைத்தவர்கள் நாட்டை விட்டோடி விட்டார்கள். வால் பிடிக்கத் தெரிந்தோர் வாழப் பழகி விட்டனர். ஏழைகள் என்ன செய்ய முடியும்?” 

இப்படி அடிக்கடி சொன்ன ஆனந்தன், சமாதானம் வந் தால் எனது தாய் நாட்டுக்குச் சென்று என்றால் முடிந்ததைச் செய்வேன் என்று சொன்னவனை ‘அமைதி’ப் போர்வையில் வந்தோர் அழித்து விட்டார்கள் என்ற செய்தி துன்பம் தந்தது. 

மழலை ததும்பும் கண்ணனின் இனிய முகம், இன்றும் மனதில் நிற்கிறது. மருமகள் சந்தியாவின் குறும்புப் பார்வை இரவில் கனவாக எழுப்புகிறது. 

ஏதோ இயந்திரம் போல் இயங்கினான் ராகவன். 

83ம் ஆண்டு கலவரத்தில் தாய் தகப்பனைக் கொழும்பில் இழந்த ஆனந்தன் நான்கு வருடங்களின்பின் இந்திய ராணுவத்தால் அழிக்கப் பட்டான். 

எத்தனையோ நாட்களுக்குப் பின் கல்லூரி சென்ற வேறு பலர் அனுதாபம் தெரிவித்தார்கள் யாரிடமும் அதிகம் பேச மனம் பிடிக்கவில்லை. 

அதிபர் இவனையணைத்து தனது மனத்துயரைப் பகிர்ந்து கொண்டார். 

டெவீனா கல்லூரியிலில்லை என்று தெரிந்ததும் அவளி டம் ஓட வேண்டும் போலிருந்தது. 

தாயைப் பார்க்கப்போய் இரண்டு கிழமைகள் ஆகிவிட்டன. அவளிடமிருந்து ஒரு தகவலுமில்லை. 

தான் லண்டனிலிருந்து ஸ்காட்லாந்து போய்ச் சேர்ந்தது பற்றிப் போன் பண்ணியபின் அவள் போன் பண்ணவில்லை. 

ஸ்காட்லாந்தில் அவள் பெரிய தாயுடன் தங்கியிருப்பாள் என்று தெரியும். அவளின் ஸ்காட்லாந்து டெலிபோன் நம்பர் அவனுக்குத் தெரியாது. பீட்டருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனா லும் அவனைக் கூடக் கல்லூரியில் காணவில்லை. 

மைக்கல் நீண்ட நாட்களுக்குப்பின் தெருவிற் சந்தித்தான். கஞ்சா விடயமாகப் போலீசாரால் பிடிபட்டபின் ஏற்பட்ட பிரச்சினையால் அவன் கல்லூரிக்கு வருவதை நிறுத்தி விட்டான். 

தனது துயர் தீர்க்கப் புவனாவிடம் போனில் பேசினான். அவன் மனம் டெவீனாவிடம் ஓடிக் கொண்டிருந்தது. 

அதிவிரைவில் டெவீனா தனது அடுத்த வருட இறுதி வருடப் படத் தயாரிப்பு விடயமாக நைரோபி போவதாகப் பேசிக் கொண்டிருந்தாள். அதே நேரம் தாயின் உடல் நிலை என்னவாயிருக்கும் என்று அவனுக்குத் தெரியாது. 

தன்னுடைய இந்தத் துயரான நேரத்தில் அவள் துணை இன்றியமையாததாக இருந்தது. 

அவளுக்குப் போன் பண்ணிப் பார்க்க பாக்கட்டில் கைவிட்டபோது அவள் தந்த சாவி கையிற் பட்டது. 

அவனிடம் அந்தச் சாவி கொடுத்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் அவன் ஒரு நாளும் அவள் வீட்டுக்குத் தானாகப் போகவில்லை. ஹாம்ஸ் ரெட்டுக்குத் திரும்பி வந்திருப் பாளோ இல்லையோ என்ற யோசனையுடன் நடந்தான். டெவீனா லண்டன் திரும்பியிருந்தால் தனக்கு ஏன் போன் பண்ணவில்லை என்று யோசித்தான். 

இரண்டு கிழமைக்கு மேலாக ஏன் ஒரு தொடர்பும் கொள்ளாமல் இருக்கிறாள் என்று அவனால் புரியாமலிருந்தது. 

தாய்க்கு ஏதும் நடந்தால் என்றால் அதைத்தாங்க முடியாது என்று விம்மியவள், இவன் துணை தனக்குத் தேவை என்று கெஞ்சியவள் எங்கே போய் விட்டாள்? 

“எனது தமக்கை, அருமை மருமகள், மருமகன், மைத்து னன், அருமை நண்பன் எல்லோரையும் கொடுமை பிடித்தோர் கையால் அழிக்கப்பட்ட வேதனையை உன்னிடம் சொல்லி அழ வேண்டும் டெவீனா” அவன் தன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டான். 

இந்திரா எத்தனையோ தரம் போன் பண்ணி ஆறுதல் சொன்னாள், பொன்னம்பல மாமா கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் போன் பண்ணுகிறார். 

கணேசனும் அவனது வருங்கால மனைவியும் அம்மாவுடனேயே இருக்கிறார்கள். 

அம்மா மைதிலியைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டே யிருக்கிறாள். ஒரே தரத்தில் நான்கு உயிர்களைப் பறி கொடுத்த துயரை அந்தத் தாயால் தாங்க முடியவில்லை என்பது அவளது உலராத கண்களிலிருந்து தெரிந்தது. 

ஏதேதோ சிந்தித்துக் கொண்டு டெவீனாவின் வீடு போய்ச் சேர்ந்தான். 

வீட்டில் லைட் தெரிந்தது. கடைசியாக அவளைச் சந்தித்த போது இருளில் மூழ்கிக் கிடந்தது ஞாபகம் வந்தது. 

அந்தப் பெரிய வீட்டின் சாவியை அவன் கையில் வைத்திருப்பதே நம்பிக்கையற்ற விடயமாக இருந்தது. 

தயங்கியபடி கதவைத் திறந்தான். இரவு பத்து மணிக்கு மேலானபடியால் தெருவிலும் அதிக சத்தம் இல்லை. எப்போதிருந்தோ ஒரு கார் போய்க் கொண்டிருந்தது. 

கதவைத் திறந்ததும் தெரிந்த அமைதி அவன் மனத்தை ஏதோ செய்தது. 

அந்தப் பெரிய வீட்டின் அலங்காரப் பொருட்களான சிலைகளும் சிற்பங்களும் இவன் தேடலை வியப்புடன் பார்ப்பது போலிருந்தது. 

டெவீனாவின் படுக்கையறை சாடையாகத் திறந்திருப்பது தெரிந்தது. அந்த அறையில் அவளுடன் அனுபவித்த இன்பம் நினைவில் குதித்தது. இப்போது அவள் தாயின் நோய் காரணமாகத் துயரத்துடன் படத்திருப்பாளா? 

அவளைத் தொட்டு, அணைத்து முத்தமிட்டு, காதல் புரிந்து இரண்டு கிழமைகளாகி விட்டன. ஏதோ இருநூறு வருடங்கள் போல் இருக்கின்றன. அவளுக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டு தன் துயர் தீர்த்து அலற வேண்டும் போலிருக்கிறது. 

கதவைத் திறந்தான். 

திறந்த சத்தத்தில் பிலிப் எழுந்தான், அதே நிமிடம் அவனின் அணைப்பில் கிடந்திருந்த டெவீனாவும் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்திருந்தாள். 

அவன் சட்டென்றுத் திரும்பினான். நெஞ்சில் ஏதோ அடைத்தது. கண்கள் இருண்டன. உதிரம் கொதிப்பது போலிருந்தது. கால்கள் நகர மறுத்தாலும் ஏதோ ஒரு அசுர வேகத்தில் அவன் திரும்பினான். 

”ராகவன்” பிலிப்பின் அவசரக் குரல் அவனைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. 

நடக்கிறானா ஓடுகிறானா என்று தெரியாமல் தனது கார் தேடி ஓடினான். தலை இடித்தது. அவனைக் கடைசியாக கண்டபோது நடந்த புயலும் சூறாவளியும் இப்போது அவன் மனதில் பிரளயம் நடத்தியது. 

அவள் வீட்டு ஹாலின் சிலைகள் அவனைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது. ஊழித் தாண்டவமாடும் நடராசர் அவன் சிரத்தைப் பிடுங்க வருவது போலிருந்தது. 

அவன் நடையை “ராகவன், என்னுடன் கொஞ்சம் தயவு செய்து பேசு” என்ற டெவீனாவின் அலறல் தடை செய்ய முடியவில்லை. 

அத்தியாயம் – 20

அவன் கல்லூரிக்குப் போய் எத்தனையோ வாரங்களாகி விட்டன. நவம்பர் மாதமும் முடியப் போகிறது. அவன் கல்லூரிக்குப் போகவில்லை. 

ஸ்ரீவனின் போன்கோல் வந்தது. வீட்டிற்போய்ச் சந்தித் தான். “இந்தக் கடைசி வருடம் மிகவும் கஷ்டமாகப் போகி றது. பாவம் உன்னைப் பார். ஒரு குடும்பத்தையே இழந்து விட்டு நிற்கிறாய். டெவீனாவும் தாயை இழந்து விட்டாள்” 

டெவீனா தாய் இழந்த விடயம் தெரியாது. இவனுக்கு அனுதாபம் சொல்லும்போது அவளின் தாய் இறந்த விடயத்தைச் சொல்ல மறந்து விட்டார்களா? 

ஆனாலும் பிலிப்புடன் அவளைக் கட்டிலிற் கண்ட காட்சியை அவனால் மறக்க முடியவில்லை. 

அதை மறந்து விட்டு “உன் தாய் இறந்ததற்கு எனது அனுதாபங்கள்” என்று வெறும் வார்த்தைகளைச் சொல்ல முடியவில்லை. 

”ஏன் கல்லூரிக்குப் போகவில்லை” மைதிலி கேட்டாள். 

“அம்மா பாவம்” அவன் பொய் சொன்னான். மைதிலி அதை நம்பினாள். கணேஸ் வேல்ஸ் நாட்டுக்குப் போய் விட்டான். 

ராகவன் குடும்பம் லண்டனுக்கு வந்தபோது மைதிலிக் குப் பதின்மூன்று வயது. தகப்பன் அடுத்த வருடமே மாரடைப் பால் இறந்தபோது தமயன் குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டது, அவனில் மதிப்பையுண்டாக்கியது. 

இருபத்தைந்து வயது வரைக்கும் தங்களின் நல்வாழ்வுக்கு உழைத்தவன் என்ற மரியாதை ராகவனில் மைதிலிக்கு இருந்தது. 

அம்மாவைத் தேற்றுவதற்குப் பதில் ஏன் அவன் இப்படி நொந்து போனான் என்று அவளால் புரியும். அவன் வீட்டில் இல்லாத நேரம் டெவீனா ஒருநாள் போன் பண்ணினாள். அந்த நேரம் அம்மா கண்ட பாட்டுக்குப் பேசினாள். அதனால் டெவீனா தமயனுடன் தொடர்பைத் துண்டித்துக் கொண் டாளோ என்று ஒரு கணம் யோசித்தாள். இதுபற்றி அண்ணாவி டம் கேட்கலாமா என்று கூட யோசித்தாள். 

ஆனால் முடியவில்லை. அவனின் சொந்த விடயத்தில் தலையிட்டால் அவன் தனது சொந்த விடயத்தில் தலையிடு வானோ என்ற பயம். தமயன் தன் அறையைப் பூட்டிக் கொண்டு மெளனம் சாதிப்பதை சோகத்துடன் சகித்தாள் மைதிலி. 

“கண்டறியாத படிப்பு, அக்காவின் கடையை எடுத்து நடத்து” அம்மா விரக்தியுடன் சொன்னார். 

மகாலிங்கத்தின் தமயன் ஒருத்தர் கடையை நடத்திக் கொண்டிருந்தார். திரைப்படப் பட்டதாரியாகும் என்ற தமயனின் இலட்சியத்தை எதுவும் தடைப்படுத்தக் கூடாது என்று பிரார்த்தித்தாள் மைதிலி. யாரிடம் இதைப் பற்றிப் பேசலாம் என்று யோசித்த போது புவனா போன் பண்ணினாள். 

“தேடிய தெய்வம் காலடிக்கு வந்த மாதிரி” மைதிலி சொன்னாள். 

“உங்கள் குடும்பத்திற்கு நடந்த இழப்பையிட்டு மிகவும் துக்கப் படுகிறேன்” புவனா சொன்னாள். 

மைதிலி யாழ்ப்பாணத்தில் நடந்த ‘அமைதிப்படை’யின ரின் அட்டூழியங்களில் தனக்குக் கிடைத்த தகவல்களைச் சொன்னாள். 

“அரசியல் பயங்கரமானது. யார் சினேகிதர் யார் எதிரி என்று சொல்ல முடியாத வியாபாரம். அது சரி உனது அண்ணா என்ன சன்னியாசம் வாங்கப் போகிறாரா? கல்லூ ரிக்கே வரவில்லை என்று சொன்னார்கள். இந்த வருடத்திற் கான படத் தயாரிப்பு விடயங்களைச் சமர்ப்பிக்கா விட்டால் அடுத்த வருடம் அவர் கல்லூரிக்குப் போகமுடியாது. அவர் என்ன கனவு காண்கிறாரா” 

புவனாவின் குரலில் ஒரு தமக்கையின் குரலிலுள்ள பாசம். ”அக்காவின் கடையை எடுத்து நடத்தப் போகிறேன் என்று சொல்கிறான்” 

“என்ன முட்டாள் இவன். திரைப்படக் கல்லூரிக்கு அட்மிஷன் கிடைக்காமல் எத்தனைபேர் அழுகிறார்கள். இவன் என்னவென்றால்…” புவனா ஆத்திரப்பட்டாள். 

அம்மா மகளின் நினைவான சாமான்களை அடுக்கி வைத்து விட்டு அழுதாள். குழந்தைகளின் துணிமணிகளைக் கண்டு அவள் கதறியது கல் மனத்தையும் கரைத்து. தனது அறையில் ராகவனும் டெவீனா கொடுத்த ஜாஸ் ரேப்ஸ், புக்ஸ், சேர்ட்ஸ் என்பவற்றை மூட்டையாகக் கட்டினான். 

கையாற் தொடமுடிந்தவற்றை மூட்டை கட்டலாம், கருத் திற் பதிந்தவற்றை என்ன செய்வது. 

நியூ ஹேவன் கடற்கரையில் நடு இரவில் அவள் தந்த முத்தங்கள் இவனின் ஆத்மாவுடன் கரைந்து விட்டதே. அவளிடம் நேரடியாகப் பேசி என்னை ஏன் இப்படித் துடிக்க வைத்தாய் என்று கேட்க மனம் எண்ணியது. அம்மா கதறியழுகிறாள். இவன் ஆண்பிள்ளை அழ முடியவில்லை. 

ஒருநாள் அன்ரோனியோ வீட்டுக்குப் போனான். அரைப் பைத்தியம்போல் அலட்டிக் கொண்டிருந்தான். அன்ரோ னியோ. எப்படியும் இந்த இறுதி வருடத்தை முடித்து விட வேண்டும் என்றான். 

“எனது பாட்டன் முசோலியின் பாஸிஸத்தை எதிர்த்து இறந்து போன சோஸலிஸ்ட் எனது தகப்பன் மார்பியாக்களை எதிர்த்து இறந்த நல்ல மனிதன். என்னையிழந்த ஜுலியட் அழித்து விட்டாளே” 

அன்ரோனியோ அழுதான். 

”இலங்கையின் இனவாதத்தைத் தாங்கமுடியாமல் எனது தந்தை லண்டன் வந்து இந்த வாழ்க்கைக்குத் தாக்குப் பிடிக்கா மல் இறந்து போனார். டெவீனா என்னையழிக்க இடம் கொடுக்க விடலாமா” தன்னைத் தானே கேட்டுக் கொண்டான் ராகவன். 

“பார் ஸ்ரீவனை, எப்படியும் தனது படிப்பை முடித்து ஒரு திரைப்படப் பட்டதாரியாக வேண்டும் என்று இவ்வளவு வருத்ததுடனும் முயற்சி செய்கிறான் பார்த்தாயா” அன்ரோனியோ நம்பிக்கையுடன் சொன்னான். 

”பாவம் மைக்கல், தேவையில்லாத பிரச்சினைகளுக்குள் அகப்பட்டுக் தன்னை தானேயழித்துக் கொண்டான்” முனகிக் கொண்டான் ராகவன். 

“எப்படி டெவீனா” அன்ரோனியோ சட்டென்று கேட்டான்.  

ராகவனுக்கு நெஞ்சில் ஏதோ அடைத்தது. இந்த இடத்தில் தானே முதலில் காதல் புரிந்தார்கள். ‘நான் வேர்ஜின் தயவு செய்து மென்மையாய் நடந்து கொள்’ என்று இந்த அறையில் வைத்துத்தானே சொன்னாள்? தலையைப் பிடித்துக் கொண்டு கதற வேண்டும் போலிருந்தது. அவனுக்கு நெஞ்சையடைத்தது. 

அன்ரோனியோ கொடுத்த விஸ்கியைக் குடித்துக் கொண்டான். வேதனையை மறக்க வேறொன்றும் தெரியவில்லை. விஸ்கி உணர்வை மழுக்கியது. ‘குடித்துப் போட்டு என்ன வென்று ட்ரைவ் பண்ணுவாய்” அன்ரோனியோ துக்கப்பட் டான். டெவீனாவை பிலிப்பின் அணைப்பில் கண்டது நினைவில் எரிந்தது. நெஞ்சம் கனத்தது. வாழ்க்கை கசந்தது. 

கண்ணை மூடினால், திறந்தால், அவள் வந்தாள். நவம்பர் மாதம் உலகை நிர்வாணமாக்கியது. பெரிய காற்றால் மரங்கள் துயிலுரிந்தன. மேகங்கள் இருள் படலத்தில் நட்சத்திரங்களைப் பறி கொடுத்தன. பூமித்தாயின் பசுந்தரை கொட்டிவிழும் பழுத்த இலைகளால் பாயாக விரிக்கப்பட்டது. மக்கள் ஓவர் கோர்ட்டுக்குள் ஒளிந்து கொண்டார்கள். 

குளிருக்குப் பயந்த குழந்தைகள் விளையாட்டு இடங் களை அனாதையாக்கி விட்டு சூடான வீடுகளில் டி.வி.க்கு முன்னால் உட்கார்ந்து கொண்டார்கள். 

இந்தியச் சமுதாயம் தீபாவளி கொண்டாடியது. இங்கிலிஸ் சமுதாயம் கொடியவனுக்கு தீயிட்டுக் (Guy Fawkes Night) கொளுத்திக் கொண்டாடினார்கள். முஸ்லீம்கள் றமலான் நோன்புற்குத் தயார் செய்தார்கள். பெரிய கொண்டாட்டமான கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதம்தான் இருக்கி றது. கடைகள் பரபரத்தன. 1988ம் ஆண்டு பிறக்க ஐந்து கிழமைகள் இருக்கின்றன. 

ராகவனின் வகுப்பார் தங்களின் இறுதி வருடப் பட்டப் படிப்புக்கான தயாரிப்புக்களின் குறிப்புக்களை அதிபரிடம் சமர்ப்பித்துக் கொண்டார்கள். ‘என் மனத்தை என்னையறியாமல் இவ்வளவு தூரம் கொடுத்து விட்டேனே’. அவன் தன்னைத்தானே திட்டிக் கொண்டான். 

இவனது குழுவிற்கு இறுதி வருட மேற்பார்வையாளராக மிஸ் வேர்ஜினியா பாமஸ்ரன் நியமிக்கப் பட்டிருந்தாள். 

ராகவனின் ஸ்கிரிப்ட், ஒலி, ஒளி, காமராவிடம் லோக்கேஷன் பற்றிய விபரமெல்லாவற்றையும் சமர்பிக்கச் சொல்லிக் கடிதம் எழுதியிருந்தாள். 

‘அருமையான மாணவன் ஒருத்தன் இப்படி அநியாயமாக லாமா’ மிஸ் பாமஸ்ரன் புழுங்கிக் கொண்டிருந்தாள். 

டெவீனாவும் பிலிப்பும் சேர்ந்து தங்கள் இறுதி வருடத் தயாரிப்பு விடயமாகத் திட்டமிடுகிறார்கள் என்று அன்ரோ னியோ சொல்லியிருந்தான். 

ஜேன் கிழக்கு லண்டன் ஏழைமக்கள் பற்றிய தயாரிப்பு ஒன்றைச் செய்வதாகக் கேள்விப்பட்டான். அலான் கிழக்கு ஐரோப்பிய கொம்யூனிசத்தை எதிர்த்து டாக்கிமென்டரியை ‘கனவு’ என்ற பெயரில் எடுப்பதாகச் சொன்னார்கள். வீட்டுக்கு வந்தபோது பெரிய கடிதம் ஒன்று வந்திருந்தது. கையெழுத்தில் தெரிந்தது, டெவீனாவிடமிருந்து வந்திருக்கிறது என்று. 

ஆத்திரம், வியப்பு, அழுகை, அலறல் எல்லாம் ஒன்றாக வந்தது. கடிதத்தை உடனடியாகக் கிழித்து எறியவேண்டும் போலிருந்தது.ஆனாலும் முடியவில்லை. கடிதத்தை எடுத்துக் கொண்டு காரை ஓட்டினான். என்ன எழுதியிருப்பாள் என்று கூட யோசிக்க மனம் இடம் கொடுக்கவில்லை. கடிதம் அவன் மடியில் அவளாகக் கிடந்தது. காரை எங்கேயெல்லாமோ ஓட்டினான். கடைசியில் முதற்தரம் அவளுடன் இரவில் வந்த வெஸ்ட்மினிஸ்டர் பாலத்தில் நிறுத்தினான். 

ஸ்ரீவனை வீட்டில் சேர்த்துவிட்டு வரும்போது அவளு டன் நடுச்சாமத்தில் இந்தப் பாலத்தில் நின்றது ஞாபகம் வந்தது. எத்தனை விசித்திரமாக உறவுகள் ஆரம்பிக்கின்றன. தொடர்கின்றன. முடிகின்றன? மனம் அழுதது. காரை நிறுத்தி விட்டு நடந்தான். நாஷனல் பிலிம் தியேட்டருக்கு சியாம் பெனகாலின் ‘நிஷான்’ படம் பார்த்துவிட்டு இந்தப் படிகளில் நடுச் சாமத்தில் அமர்ந்திருந்து இந்தியாவின் பெண் அடிமைத்தனத்தைப் பேசியது ஞாபகம் வந்தது. 

அவளையணைத்த கைகள் கனத்தன. அவள் தலை பதிந்த மார்பு எரிந்தது. அவள் இட்ட முத்தங்கள் எரிச்சல் தந்து. நினைவு எரிந்தது. கடிதத்தை அப்படியே துண்டு துண்டாகக் கிழித்து ஓடும் தேம்ஸ் நதியில் எறிந்தான். லண்டன் நகர ‘ வெளிச்சத்தில் அவன் நினைவுகளும் துண்டுகளாகப் போய்க் கொண்டிருந்தன. அவள் என்ன எழுதியிருப்பாள் என்று அவ னுக்கு அக்கறையிருக்கவில்லை. 

இப்போது அன்ரோனியோவின் துயரத்தின் தாக்கம் புரிந்தது. நெஞ்சம் கனத்தது. வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தபோது மைதிலி விழித்திருந்தாள். புவனா போன் பண்ணியதாகச் சொன்னாள். 

தன் அறைக்குப் போய் வாங்கிக் கொண்டு வந்த விஸ்கியை ஊற்றினான். தன் கையாலேயே தன் வாழ்க்கையை அழிப்பதை அவன் மனச்சாட்சி உறுத்தியது. கீழே டெலிபோன் மணியடித்தது. “அண்ணா புவனா பேசிறாள்” மைதிலி கீழேயிருந்து குரல் கொடுத்தாள். 

“என்ன அஞ்நாத வாசம்” புவனாவின் குரலில் கோபம். மைதிலி இன்றும் பக்கத்தில் நின்றிருந்தாள். 

அவன் மறு மொழி சொல்லவில்லை. மைதிலி போன பின் ‘என்ன வேணும்’ ராகவனின் குரலில் சோகம். 

“இதோ பார் ராகவன், அக்காவின் குடும்பம் அழிந்தது எனக்கும்தான் துக்கம். உலகத்தில் ஒவ்வொரு நாளும் அநியாய மாக எத்தனையோ உயிர்கள் அழிந்துதான் முடிகிறது. அதற்காக உலகம் நின்று விடப் போவதில்லை. உனக்கு வந்த நல்ல சந்தர்ப்பம் பல பேருக்குக் கிடைக்காதது. தயவு செய்து பல்லைக் கடித்துக் கொண்டு இன்னும் ஒரு வருடத்தை எப்படியும் முடிக்கப் பார். ஒரு விடயத்தை ஆரம்பிப்பது இலகு. முடித்துக் காட்டுவது மிகக் கடினம்” அவன் மறு மொழி சொல்லவில்லை. 

“ராகவன், நீ இரக்கமான மனமுள்ளவன். மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறாய் என்று நினைக்கிறேன். தம்பி, என் சொல்லைக் கேள்’ 

அவள் குரலில் பாசம் அவனைக் கரைத்தது. அவனையறியாமல் நீர் வழிந்தது. புவனாவுக்குக் கூட அவன் டெவீனாவின் தொடர்பு அறுந்ததைச் சொல்லவில்லை. 

“உனது தமக்கை கீதாவாக என்னை எடுத்துக் கொள். உன் முன்னேற்றத்திலும் சந்தோசத்திலும் மிகவும் அக்கறையுள்ளவள் என்பதைப் புரிந்து கொள்” அவளின் அன்பு அவனைத் தொட்டது. 

அன்றிரவு அவன் தூங்கவில்லை. 

அம்மா சரியாகத் தூங்கியே எத்தனையோ வாரங்களாகி விட்டன. இரவில் எழும்பி தன் பேரக் குழந்தைகளைத் தேடுகிறாள். அவன் நித்திரை எங்கே மறைந்து விட்டதோ அவளுக்குத் தெரியாது. 

“அண்ணா அம்மாவைக் கூட்டிக் கொண்டு எங்காவது போங்கள், ” மைதிலி பயத்துடன் சொன்னாள். 

டொக்டரும் அதையேதான் சொன்னார். அம்மாவுக்கு நேர்வஸ் பிரேக்டவுண் வரலாம் என்று சொன்னாள். 

”என் மகள் என்ன பெரிதாக எதிர்பார்த்தாள். ஒரு நல்ல தாயாய், ஒரு நல்ல மனைவியாய் வாழ்ந்தாளே அது பாவமா? தாய்மையைத் தலை வணங்கும் இந்தியப் படை ஏன் இந்தக் கொடுமை செய்தார்கள்” அம்மா கடைக்குப் போன வெள் ளைக்காரப் பெண்களை வழிமறித்து இந்தக் கேள்வியைக் கேட்டாள். 

அவளின் மனநிலை மிகவும் குழம்பியிருந்தது. அவளால் இந்தத் துயரைத் தாங்க முடியவில்லை. மனம் மிகவும் பேதலித்து விட்டது. 

ராகவனுக்கு இதயம் மரத்து விட்டது போலிருந்தது. சில வேளைகளில் டெலிவிஷனில் நியூஸ் வாசிக்கும் பெண் டெவீ னாவை ஞாபகப் படுத்தினாள். சந்திகளில் ஒட்டப்பட்டிருக் கும் போஸ்டர்களில் டெவீனா சிரிக்கிறாள். அவள் ஞாபகம் அவனைச் சித்திரவதைப் படுத்தியது. அவளைத் தவிர்ப்பதற் காக கல்லூரிக்கே முழுக்குப் போட்டு விட்டாலும் அவள் நினைவு துரத்தியது. 

“மோகத்தைக் கொன்று விடு
அல்லாலென்றன் மூச்சை நிறுத்திவிடு
தேகத்தைச் சாய்த்திவிடு – அல்லாலதில்
சிந்தனை மாய்த்து விடு 
யோகத்திருத்திவிடு, அல்லாவென்றன் ஊனைச் சிதைத்து விடு 
ஏகத்திருந்துலகம் – இங்குள்ளன யாவையும் செய்பவளே பந்தத்தை நீக்கிவிடு,
சிந்தையை தெளிவாக்கு அல்லாலுயிர்ப் பாரத்தை போக்கிவிடு
அல்லாலிதைச் செத்த உடலாக்கு.'” 

இந்த மோகநிலையின் தவிப்பு அநுபவிக்கா விட்டால் தெரியாத உணர்வு. ஓரிரு வருடங்களுக்கு முன் இப்படியும் ஒரு சித்திரவதை காதலுணர்வால் உண்டாகும் என்று யாரும் சொல்லியிருந்தால் அவன் நம்பியிருக்க மாட்டான். இதெல் லாம் கற்பனையூற்றுகளின் வசனக் கோர்வைகள் என்று சிரித்திருப்பான் -இன்று அவன் மௌனமாக அழுதான். 

“தானும் தன் பாடும் என்று கல்லூரியை முடித்து விட்டு வெளியேறியிருக்கலாம். ஏன் எனக்கு இந்த சோதனைகள்?” 

இவன் மனம் தாயின் துயரிலும் தனது துயரிலும் தனது தமக்கை குடும்பத்தின் அழிவால் நடந்த துயரிலும் நன்கு பின்னப் பட்டிருந்தது. தெருவால் போய்க் கொண்டிருந்த சீக்கிய மனிதன் ஒருத்தனை அம்மா ஓடிப் போய்க் கண்ட பாட்டுக்குப் பேசினாள். 

“ஏன் என் குழந்தையைக் கொன்றாய்” அம்மா தன் மார்பிலும் வயிற்றிலும் அடித்துச் சத்தம் போட்டாள். அடுத்த நிமிடம் ஆவேசம் தாங்காமல் சீக்கிய இளைஞனை அடிக்கத் தொடங்கி விட்டாள். 

“பாரத மாதாவே உங்கள் தயவை நாடுகிறோம் என்று அழுத எங்களுக்கு இப்படியா கொடுமை செய்வது” 

அம்மாவின் அலறலால் தெருவில் போன கூட்டம் அதிச யத்துடன் திகைத்தது. பைத்தியம் போல் இந்த வயது போன தாய் ஏன் இப்படிக் கத்துகிறாள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

ராகவன் ஒடிப் போய்த் தாயை அழைத்து வந்தான். இந்திய சீக்கியன் “பைத்தியம் என்றால் அடைத்து வைப்பது தானே” என்று பேசி விட்டுப் போனான். 

“உங்களைப் போன்ற இந்தியர்களால்தான் என் தாய் இந்த நிலைக்கு வந்தாள்” அவன் ஒலமிட்டு அழவேண்டிய இந்த வார்த்தைகளை மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். 

“அம்மாவை எப்படிப் பார்ப்பது” மைதிலி விம்மினாள்.

“கணேஷ் வீட்டுக்குக் கொஞ்ச நாள் கொண்டு போய் விடுவம், கமலாவும் கணேசும், புதிய இடமும் அம்மாவின் மனக் குழப்பதைக் கொஞ்சம் சீர்ப்படுத்தலாம்” அவன் தங் கைக்கு ஆறுதல் சொன்னான். 

“அம்மா எங்கள் இருவரிலும் கோபமாய் இருந்தாள். அந்த மனவேதனையுடன் அக்காவின் சேதியும் அம்மாவை இப்படியாக்கி விட்டது.” 

மைதிலி அம்மாவின் நிலைக்குக் காரணங்கள் தேடினாள்.

“மைதிலி நாங்கள் அம்மாவைத் திட்டம் போட்டு இப்ப டியாக்கி விட்டோம் என்று யோசித்து உன்னைத் துன்பப் படுத்த வேண்டாம்”. 

தங்கையின் தலையைத் தடவி விட்டான். அவனுடைய கடைசித் தங்கை, குடும்பத்தின் செல்லம் கடந்த இரு வருடங்களாக வேண்டாத விருந்தாளிபோல் நடத்தப்படுவதை அவன் வெறுத்தான். 

அம்மாவுக்காக அவனும் மைதிலியுடன் பெரிதாகப் பேச்சு வார்த்தைகள் வைத்துக் கொள்ளவில்லை. 

“ஏன் அண்ணா எங்களுக்கு இவ்வளவு கஷ்டம்?” மைதிலி மனம் விட்டு அழுதாள். 

தாய் ஏதோ பிரமை பிடித்ததுபோல் இவர்கள் இருவரையும் அன்னியர்கள்போல் பார்த்துக் கொண்டிருந்தாள். 

இலங்கை அரசியல் கொடுமையால் எத்தனை தாய்மார் இப்படி சுயநிலையிழந்து அல்லற்படுகிறார்கள்? 

அவன் பெருமூச்சு விட்டான். எப்போது இலங்கைத் தமிழருக்குச் சுதந்திரம் வரும்? எப்போது எங்கள் தாய்மார் கண்ணீர் துடைப்பார்கள்? என்று எங்கள் பெண்கள் பாதுகாப் பாக இருப்பார்கள்? என்று எங்கள் இனம் நிம்மதி பெறும்? 

அவனுக்கு நித்திரை வரவில்லை. ஆனந்தனை நினைத்துக் கொண்டான். இலங்கை அரசாங்கம் வேட்டையாடிய இளை ஞர்களை இன்று இந்திய அமைதிப்படை வேட்டையாடுகிறதே? 

அம்மாவின் பிதற்றல் அடுத்த அறையிற் கேட்டது. மைதிலியின் விம்மல் பக்கத்து அறையிற் கேட்டது. 

இலங்கைத் தமிழனாய்ப் பிறந்ததைப் போல் பாவம் வேறொன்றும் இந்த உலகில் இல்லை; அவன் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான். ஒரு இனத்தின் விடுதலைக்காக அழியும் இளம் உயிர்கள், பறிபோகும் பெண்மைகள், அனா தைகளாகும் குழந்தைகள், ஆதரவற்ற முதியோர் எத்தனை பேர்? நீண்ட நேரம் நித்திரை வரவில்லை. ஏதோ ஒரு ‘ரேப்’ எடுத்துப் போட்டான். டெவீனா கொடுத்த பேத்ஹோவதின் பியானோ கொன்சேர்ட்டோ. அவள் கொடுத்தவற்றை மூட்டை கட்டிய போது எஞ்சிய ரேப். 

மனம் அம்மாவை விட்டு அவளிடம் ஒடியது? அவள் இல்லாத போதுதான் அவள் எவ்வளவு தூரம் அவன் மனதிற் பதிந்து விட்டாள் என்று புரிந்தது. ஞாபகங்கள் நெருப்பாய் எரிந்தன. அவள் இட்ட முத்தங்களின் ஞாபகம் முள்ளாய்த்தைத்தது. அவளின் அணைப்புகள் அரவத்தை நினைவூட்டியது. 

அடுத்த நாள் அதிபரின் டெலிபோன் கோல் வந்தது. “அம்மாவின் நிலை பற்றி மிகவும் வருந்துகிறேன். உனது தமக்கையின் குடும்பத்தின் அழிவுக்கு எப்படி என் துக்கதைச் சொல்வது என்று தெரியாது” அதிபர் உண்மையான சோகத்துடன் சொன்னார். 

இவன் ஏன் கல்லூரிக்கு வரவில்லை என்று அவர் கேட்க வில்லை.எப்போது வருகிறாய் என்பது போலிருந்தது அவரது தொனி. 

“என்ன செய்வது உலகத்தில் நடக்கும் போர்களால் அப் பாவி மக்கள்தான் பெரும்பாலும் கொல்லப்படுகிறார்கள். எழுபத்தி ஒன்பதாம் ஆண்டில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க வந்த ரஷ்ஷியர்களை எதிர்க்க ஆப்கான் மக்கள் போராடுகிறார். கள். கிட்டத் தட்ட ஒரு கோடி மக்கள் இறந்து விட்டதாகவும் அதை விடக் கூட மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு ஓடிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. போர்களால் நன்மைய டைவோர் அரசியல்வாதிகளும் ஆயுதம் விற்பவர்களுமே. உங்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினையால் அழியும் தமிழர்களுக்கு மிகவும் மனம் வருந்துகிறேன்” அவர் இவனைத் தேற்ற ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தார். 

அவர் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி ஏழாம் ஆண் டில் ரோமாபுரி அகதி முகாமில், ஜெர்மனியிலிருந்து ஓடிவந்த யூத அகதித் தம்பதிகளின் புதல்வர். அறுபத்தி ஏழாம் ஆண்டு இஸ்ரேல் எகிப்துக்கு எதிராகத் தொடங்கிய யுத்தத்தில் ஒரு கொமாண்டராகப் பணிபுரிந்தவர். 

மேலிடத்து உத்தரவால் அனாதரவான எகிப்தியத் தாய்க ளையும் குழந்தைகளையும் இஸ்ரேல் ராணுவத்தின் கொமாண் டர் என்ற பதவிக்காகக் கொலை செய்ததை மிகவும் மனம் வெறுத்து ராணுவத்திலிருந்து விலகி லண்டனுக்கு வந்தவர். 

இரக்கமும், மனித நேயமும் நிறைந்த கலைஞன் அந்த அதிபர். அவரின் கனிவான மொழிகள் அவன் மனத்தையுருக்கி யது. அவரின் ஆதரவில்லாவிட்டால் மைக்கல், அன்ரோனியோ, ஸ்ரீவன், ராகவன் போன்றோர் நின்று பிடிக்க மாட்டார்கள். அவர் நீண்ட நேரம் பேசி இவன் மனத்தை மாற்றப் பார்த்தார். 

“யாரும் மளிகைக் கடை போடலாம். கமரா பிடிக்கக் கலைக் கண்கள் தேவை, புதுமைகளை ரசிக்கவும் பழையவற்றை ஆராயவும், மாற்றங்களை மற்றக் கோணங்களிற் பார்ப்பதற்கும் மன முதிர்ச்சி தேவை.” 

அவன் அதிபரின் அறிவுரை கேட்டு முடிய மனம் தாங்க முடியாத வேதனையடைந்தது. 

டேவிட் என்ற சினேகிதனின் உதவியால் திரைப்படக் கல்லூரிக்குப் போனதற்கு இந்த அதிபர் எவ்வளவு முக்கிய காரணம் என்பது அவனுக்குத் தெரியும். 

தமக்கையின் குடும்பத்தின் அழிவு, தாயின் மனமுடைந்த நிலை மட்டுமா, அவன் கல்லூரிக்குப் போகாமல் விட்டதற்குக் காரணம்? 

மைதிலி தாய்க்கு ஏதோ மருந்து வாங்கச் சொன்னாள். இயந்திரம் போல் செய்து விட்டு அறைக்குள் முடங்கிக் கிடந்தான். 

நவம்பர் மாதம் முடியப் போகிறது. புகார் இருள் உல கைக் கவிழத் தொடங்கிவிட்டது. புகார் நடுவில் அவள் முகம் தெரிவது போலிருந்தது. மீண்டும் மீண்டும் அவள் நினைவு உயிரை வதைத்தது. 

கால் போன போக்கில் நடந்தான். வீடு இருக்குமிடம் ஹரிங்கேய். கால்போன போக்கில் நடந்துபோய் அலெக் ஸாண்ட்ரா மாளிகையின் பக்கம் போய்விட்டான். 

இந்த மாளிகை விக்டோரியா மகாராணியின் மகன் எட்வேர்ட்டின் மனைவி அலெக்ஸாண்ட்ரா கட்டினாள். 

எட்வேர்ட் இளவரசன் வைப்பாட்டிகள் வைத்திருப்பதில் பிரபலமானவன். பிரமாண்டமாய் நிமிர்ந்து நிற்கும் மாளிகை யைப் பார்த்தான். 

கணவனை யாரிடமோ பறிகொடுத்த தாழ்மையுணர்ச்சி யிலா இந்த உயர்ந்த மாளிகையை அலெக்ஸ்ஸாண்ட்ரா இளவரசி கட்டினாள்? 

என்னுடையவள், அல்லது என்னுடையவன் என்ற நிம்ம தியில் வளர்ந்த உறவுகள் சட்டென்று யாரிடமோ தொலைத்த பின் என்னவென்று தாங்கிக் கொள்ளும்? அவன் புகார் மறைத்த மேகத்தைப் பார்த்தான். 

அத்தியாயம் – 21

ராகவன் மனம் விட்டு அழுதான். யாருக்காக அழகிறான் என்று தெரியவில்லை. மருமகள் சத்தியாவின் குழந்தைச் சிரிப்பை குழித் தோண்டிப் புதைத்த இந்திய ராணுவத்தின் கொடுமையை நினைத்து அழுதானா? 

எப்போதும் பாசத்தோடு தன்னை நேசித்த தமக்கையை நினைத்தழுதானா? 

பால் முகம் மாறாத மழலைக் கண்ணனை நினைத்துக் கண்ணீர் பெருகியதா? 

அன்பு தரவேண்டிய தாய்மை தான் யாரென்று கூடத் தெரியாமல் பித்தம் பிடித்திருக்கிறாளே, அவளுக்காக அழுதானா? 

அலெக்ஸ்ஸாண்ட்ரா மாளிகையின் படிக்கட்டுகளிலிருந்து நேரே பார்த்தால் சமவெளியில் கண்ணடிக்கும் மின்னலென லண்டன் மாநகரின் வெளிச்சங்கள் தெரிந்தன. 

அவள் நினைவு நெஞ்சில் குத்தியது. இறந்து கொண்டிருக்கும் போதும் யாரோ எழுப்பி ‘இவளை நீ மறக்க முடியாது’ என்று கட்டளையிடுவது போலிருந்தது. 

வீட்டுக்குப் போனபோது மைதிலியின் அறையிலிருந்து பாலச்சந்தரின் வீணையொலி கேட்டது. மைதிலிக்கு அப்பா வின் ரசனையிருக்கிறது. பாலச்சந்தரின் வீணை, சுப்புலட்சுமியின் பாடல்கள். அப்பாவின் ரசனையின் சின்னங்கள்; மைதிலி யின் காதலன் நாசர் எதை ரசிப்பான். பாரசீகக் கவிஞன் உமார் கயாமின் கவிதைகளை இவள் காதில் கிசுகிசுப்பானா? 

சங்கீதங்களை நினைக்கும் போது இந்திராவின் பெரிய மான்விழிகள் கதவடியில் நிற்பது போலிருந்தது. அவள் சில மாதங்கள் இந்த வீட்டில் இருந்தாள் என்பதே அவனுக்கு நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது. 

அவன் தன் முன்னாலிருந்தால் பாடச் சொல்ல வேண்டும் போலிருந்தது? 

”துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா” இந்திராவை அம்மா மிகவும் விரும்பினாள். இவனுடன் இந்திராவை இணைப்பது அவள் கனவாக இருந் தது என்பது அவள் கொஞ்சக் காலத்திற்குமுன் சொல்லிய விடயங்களிலிருந்து புரிந்தது. 

நெஞ்சத்தின் ஏதோ ஒரு மூலையில் இந்திராவை நான் காதலித்தோனா என்று தேடிப்பார்த்தான். தட்டிய கதவிடுக்குக ளில் டெவீனாவின் நீல விழிகள் நர்த்தனமாடின். 

இந்திராவின் சோகப் பார்வைக்குத் தான் காரணம் என்று நினைத்தபோது குற்ற உணர்வு வாட்டி எடுத்தது. 

நினைவுகள் எங்கேயோ போய்க் கொண்டிருந்ததை டெலி போன் அழைப்பு முறித்தது. 

“ஹலோ ராகவன் எப்படி” ஸ்ரீவனின் குரல். ”நீ எப்படி யிருக்கிறாய்” ராகவன் எழுந்து உட்கார்ந்தான். நோயோடு போராடும் ஸ்ரீவனின் குரல் நெஞ்சை எங்கோ தொட்டது. 

செத்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு முதல் ஏதாவது சந்தோசமாகச் செய்து விட யோசிக்கிறேன்” பாதி சிரிப்பும் பாதி வேதனையுமாகச் சொன்னான் ஸ்ரீவன். 

“அப்படி எல்லாம் பேசாதே, மனத்தை திடப்படுத்திக் கொள்” ஸ்ரீவனின் சோகச் சிரிப்பு அடுத்த முனையிற் கேட்டது. 

“ராகவன் அடுத்த வருடம் இதே நேரம் நான் இருப் பேனோ தெரியாது. இன்றைக்கு எனக்கு விஷ் பண்ணு. இன்டைக்கு எனக்கு பேர்த்டே”

“விஷ யு ஆல் த பெஸ்ட், குட் லக் போர் யுவர் பைனல் இயர் வோர்க்” 

“டேய் மடையா, என்ன எனது பைனல் இயர் தயாரிப்புக்கு வாழ்த்துச் சொல்கிறாய். நீதானே கமரா வேலை செய்வதாகச் சொன்னாய்” 

ஸ்ரீவன் சீறினான். 

ராகவன் உறைந்து போனான். ஸ்ரீவனின் தயாரிப்புக்குத் தான் கமரா வேலை செய்வதாக உறுதி கொடுத்திருந்தான். அந்த உறுதியைப் பாழடிக்கலாமா? இறந்து கொண்டிருக்கும் நண்பனின் லட்சியத்தை அவமதிக்கலாமா? “எப்போது கொலிச்சுக்கு வருகிறாய்” ராகவன் மறுமொழி சொல்ல வில்லை. 

“கிறிஸ்மஸ் ஹொலிடே முடிய வருவாய்தானே” ராகவன் ஏதோ முணு முணுத்தான். 

“இறந்து கொண்டிருப்பவன் பேர்த்டே கொண்டாடுகி றேன். எதிர்காலம் பற்றி யோசிக்கிறேன். நீ என்னடாவென்றால்….” ஸ்ரீவன் அலுத்துக் கொண்டான். 

“உனது பேர்த்டேய்க்கு என்ன பண்ணப் போகிறாய்?” ராகவன் ஸ்ரீவனின் ஞாபகச் சக்தியை மெச்சினான். ராகவன் நவம்பர் கடைசியில் பிறந்தவன். 

“அம்மாவை வேல்சுக்குக் கூட்டிக் கொண்டு போகிறேன்” 

ஸ்ரீவனுக்குச் சொன்னதுபோல் அம்மாவை அழைத்துக் கொண்டு வேல்ஸ் நாட்டுக்குச் சொன்றான். 

காரில் இங்கிலாந்தைக் கடந்து வேல்ஸ் நாட்டில் போய்க் கொண்டிருந்தபோது வேல்ஸ் நாட்டின் ரம்மியமான காட்சி மனதுக்கு இதமாக இருந்தது. வானுயர்ந்த மலைத்தொடர்கள், வளைந்தோடும் சிறு நதிகள், கைவண்ணத்தில் தீட்டப்பட்டது போன்ற வயல் வெளிகள். இந்த அழகிய கமவெளியில் தோய்ந்தோடும் ஓடைகளின் கரையில் டெவீனாவுடன் கைகோர்த்து நடக்க ஆசையாக இருந்தது. வான் முகட்டில் ஏறி நின்று ‘ஐ லவ் யு டெவீனா’ என்று அலற வேண்டும் போலிருந்தது. அவனது ஆத்மீக ஏக்கங்களில் பல அவளிடம் சொல்லாமலே தடைப்பட்டுவிட்டது. அவளையழைத்துக் கொண்டு அழகிய திருகோணமலைக் கடற்கரையில் நடக்க ஆசைப்பட்டான். அவன் நடந்த வன்னிவெளியில் அவளோடு நடக்க வேண்டும். பண்ணைக் கடற்கரையில் சூரிய அஸ்தம னத்தின் அபூர்வ கோலத்தை ரசிக்க வேண்டும். கன்னியாகுமரியின் கோடியில் அவன் மடியில் படுத்திருந்து சூரியனின் விடிவையும் முடிவையும் ரசிக்க வேண்டும். இப்படி எத்தனை எத்தனை? மகாபலிக் கடற்கரையின் மணல் புதைய அவளை ஓடப் பண்ணிப் பார்க்க ‘வேண்டும். “சத்தியா கணேஷ் வீட்டில் குழப்படி செய்யாமல் இருப்பாளா” அம்மா திடீரென்று கேட்டாள். அவன் நினைவு அறுந்தது. 

சத்தியாவோ மற்றவர்களோ அம்மாவைப் பொறுத்த வரையில் இன்றும் இறக்கவில்லை. தனது மகளைப் பார்க்க வன்னி நகர் போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறாள். கமலா அம்மாவை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டாள். 

கணேசும் கமலாவும் கார்டிவ் நகரில் வேலை செய்கிறார்கள். ஒன்றாய் வேலை செய்கிறார்கள். கல்யாணம் செய்யாமல் ஒன்றாய் வாழ்கிறார்கள். 

சுய உணர்வுடனிருந்தால் அம்மா ‘ஒழுக்கம்’ பற்றி ஒப்பாரி வைத்திருப்பாள். இப்போது தான் வன்னி நகர் வந்திருப்பதாக நினைத்துக் கொண்டு அடுப்படிக்குப் போனாள். வாழை மரங்களை யார் பிடுங்கினார்கள் என்று வியந்தாள். 

அம்மியும் குழவியும் எங்கே என்று கேட்டாள். வேலைக் காரப் பெட்டை ஏன் இன்னும் வரவில்லை என்று வீட்டைச் சுற்றி வந்தாள். கிணற்றடியில் யாரையும் காணவில்லை என்று விழித்தாள். பார்க்கப் பரிதாபமாகவிருந்தது. 

“கொஞ்ச நாளில் அம்மா சரிவந்து விடுவாள்” கணேஸ் ஆறுதல் சொன்னான். 

”நான் அம்மாவுடன் நிற்கிறேன். நீங்கள் லண்டனுக்குப் போங்கள்” மைதிலி தமயனை வேண்டினாள். 

“தனியாக இருந்து யோசிக்காமல் கொலிஜ் வேலையைச் செய்யுங்கோ” மைதிலி கட்டளையிட்டாள். 

வேல்ஸ் நாட்டிலிருந்து லண்டனுக்கு வந்த போது வெறு மையான வீடு வேதனையைக் கூட்டியது. சூனியத்தில் நடமா டும் பிரமை அவனுக்கு வந்தது. அன்ரோனியோ போன் பண்ணினான்; ராகவன் தனியாக இருக்கப் பிடிக்காவிட்டால் தன்னுடன் வந்து நிற்கச் சொன்னான். 

ராகவனுக்குப் புவனாவிடமிருந்து கடிதம் வந்திருந்தது. 

‘போன் பண்ணிக் கொண்டிருக்கிறேன். எங்கே தொலைந்து விட்டாய்’ என்று கேட்டெழுதியிருந்தாள். 

அலான் பார்டோவும் ஜேனும் கிழக்கு யூரோப்பிய சோசலிஸ்ட் கூட்டங்களுக்குப் போவதாகச் சொல்லிப் போன் பண்ணினார்கள். 

கிழக்கு பேர்லினையும் மேற்கு பேர்லினையும் இணைக்கும் வேலையில் லண்டனைச் சேர்ந்தே அகில உலக சோசலிஸ்ட் கட்சியிலுள்ளோர் வேலை செய்வதை ராகவன் அறிவான். தங்களுடன் பேர்ளின் வரச் சொல்லிக் கேட்டார்கள். 

மைதிலியும் அம்மாவுமில்லாமல் வீடு வெறுமையாக ருந்தது. மகாலிங்கத்தின் தமயன் கடையைப் பார்ப்பவர் வந்து ராகவனைக் கடையின் பொறுப்பை எடுக்கச் சொன்னார். 

அம்மாவின் நிலை சரிவரும் வரைக்கும் தான் எந்தப் பொறுப்பும் எடுக்கப் போவதில்லை என்று சொன்னான் ராகவன். 

அவர் மகாலிங்கம் போல் ராகவனைக் கிண்டலடிக்காமல் 

“படிப்பில் கவனம் செலுத்துவது என்று முடிவு கட்டினால் அதைக் கவனமாகச் செய்யுங்கோ, அம்மாவின் சுகவீனத்திற்காக நிறைய லீவு எடுத்து விட்டீர்கள்” 

அவரின் கரிசனம் உண்மையான பாசத்துடன் தொனித்தது. இவனைக் கடைக்காரனாகப் பார்க்காமல் கமராக்காரனாகப் பார்க்கும் கரிசனம் அது. இப்படியான தங்கமான மனிதர்களால் தான் தமிழ் இனம் வாழ்கிறது. ”அம்மா பாவம், மிகவும் ஆடிப் போய் விட்டாள்” வந்தவர் பெருமூச்சுடன் சொல்லி விட்டுச் சென்றார். 

லண்டன் மாநகரம் நத்தார்ப்பண்டிகைக்கு ஊர்க்கோலம் போட்டது. உலகின் பல பாகங்களிலுமிருந்து லண்டனுக்கு நத்தார் அன்பளிப்புக்கள் வாங்க வருவோர் தொகை ஒக்ஸ் போர்ட் ஸிரீட்டை நினைத்தது. 

எண்பத்தி ஐந்தாம் ஆண்டு நத்தார்ப் பண்டிகைக்கு முன் டெவீனாவுடன் பாரிஸ் போனது ஞாபகத்தில் வராமலில்லை. 

இந்திரா பாரிஸிலிருந்து போன் பண்ணினாள். அவள் குரலின் கனிவு; அவன் இருதயத்தை வருடியது. அம்மாவைப் பற்றி விசாரித்தாள். மைதிலியைப் பற்றி விசாரித்தாள். 

மைதிலியின் காதலுக்கு உதவி செய்யச் சொன்னாள். அவன் அவள் சொன்னவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தான். டெவீனா பற்றி இவளிடம் சொல்லியழ வேண்டும் போலிருந்தது. தன் அவமானத்தை யாரிடம் பகிர்வது? “என்ன மௌனம்” அவள் விசாரித்தாள். ஏனோ அவள் குரல் இவனை மிகவும் நையப் பண்ணி விட்டது. உடம்பில் ஒவ்வொரு அணுவும் எதற்காகவோ ஓலம் வைப்பதற்குத் தயாராய் இருப் பது போலிருந்தது. ‘இந்திரா என்ற பெண்ணைக் கடந்து என்னவென்று டெவீனா என்னை ஆட்கொண்டாள்? “அம்மா வின் சுகவீனம் அக்காவின் குடும்பத்தின் அழிவெல்லாம் உங்களை எப்படித் துக்கப் படுத்தியிருக்கும் என்று எனக்குத் தெரியும்.ஆனாலும் எப்படியும் படிப்பை முடிக்கப் பாருங்கள்” 

எல்லோரையும்போல அவளும் சொன்னாள். ஆனாலும் அந்தக் குரலின் பரிவு நெஞ்சை நெகிழப் பண்ணியது. ‘வாழ்க் கையின் நினையாப் பிரகாரமாய் நடக்கும் மாற்றங்களை எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு கதவு மூடப்பட்டால் இன்னொரு கதவு திறக்கப்படும் என்று தெரியும்தானே” 

அவள் தத்துவம் பேசினாள். 

இனிமையான கனவு, பயங்கர அனுபவமாய்ப் போனதை அவள் அறியாள்! “ஒரு கதவு பூட்டப்பட போனதை எந்தக் கதவும் திறக்க வேண்டாம்.” அவன் முணுமுணுத்தான். 

“அப்பா சொல்ல முதல் நான் இந்த விடயத்தைச் சொல்லிவிட லாம் என்று நினைக்கிறேன்” அவள் குரலில் சட்டென்று ஒரு மாற்றம். 

“என்ன விடயம்” அவன் ஏனோ தானோ என்று கேட்கா மல் அக்கறையுடன் கேட்டான். ”எனக்குக் கல்யாணம் கெதி யில் நடக்கப் போகுது” நினைவு சிலிர்த்தது. இந்திரா தூரம் போய்விட்ட உணர்ச்சி. வன்னிக் குளக்கட்டில் ஓடிவிளையாடி இந்திராக் குட்டிக்குக் கல்யாணமா? பரதத்தையும், இசையை யும் இரு கண்களால் போற்றும் இந்தக் கன்னிக்கா கல்யாணம்? தீர்த்தக் கரையினிலே கண்ணம்மா செண்பகத் தோட்டத்திலே காத்திருந்தால் வருவேன் என்று பாடியவள் கல்யாணம் செய் யப் போகிறாள்? வருபவன் இவள் அருமை தெரிந்தவனாக இருப்பானா? 

“என்ன பேசாமலிருக்கிறாயே” அவள் அதட்டினாள். குரல் கரகரத்திருந்தது. இவனிடமிருந்து எதை எதிர்ப்பார்க்கி றாள்? “வாழ்த்துக்கள்” அவன் ஒரு வார்த்தையில் சொன்னான் பெரிதாய்ப் பேச வெளிக்கிட்டால் நிலை தடுமாறுவான் என்ற பயம் “அவ்வளவுதானா” அவன் பெருமூச்சு விட்டாள். 

“வேறென்ன” அவன் தயக்கத்துடன் கேட்டான். கல்யா ணம் செய்யாதே என்று சொல் என்று மனம் சொன்னது. “யார் மாப்பிள்ளை, எப்படி மாப்பிள்ளை என்றெல்லாம் கேட்க மாட்டாயா” அவள் குரலில் ஏக்கம். என்னைப் புரிந்து கொள் என்ற தாபம். 

“சொன்னால் கேட்கிறேன்” அவன் டெலிபோனை இறுக் கிப் பிடித்தான். அடுத்த பக்கம் மௌனம். அவளின் கலங்கும் விழிகள் அவன் கற்பனையைத் தட்டியது. ‘எனக்குப் பேசியி ருக்கும் மாப்பிள்ளையின் தகப்பன் மிகவும் சுகவீனமாக இருக்கிறார்.தான் இறக்கமுதல் மகனைத் திருமணக் கோலத் தில் பார்க்க வேண்டும் என்றாராம்.” 

“தான் ஒரு பலியாடு என்று சொல்கிறாளா?” அவனுக்குப் புரியவில்லை. அவளில் மிக மிகப் பரிதாபம் வந்தது. 

“நீ விரும்பியவனைச் செய்ய உனக்குக் கொடுத்து வைக்க வில்லை. உன்னை விரும்புவனைச் செய் என்று அம்மா கெஞ்சினாள்” இந்திராவின் குரல் அடைத்துக் கொண்டது. 

டெலிபோனைப் பிடித்திருந்த அவன் கைகள் நடுங்கின. அவள் தொடர்ந்து பேசினால் அவனால் அதைச் சகிக்க முடியாது என்று தெரிந்தது. தர்ம சங்கடத்துடன் தடுமாறினான். டெவீனா மாயையாகவும் இந்திரா நிஜமாகவும் தெரிந்தது. 

“இரண்டு வருடத்துக்கு முதல் நீங்கள் பரிசுக்கு வந்த போதே….” அவள் மேலே சொல்லாமல் டெலிபோன் வைத்து விட்டாள். 

என்ன சொல்ல வந்தாள் என்று தெரியவில்லை. ஆனா லும் அவளின் அழுகைக்குள் காரணம் அவனுக்குத் தெரியாம லில்லை. இவனையிழந்த துயர் அவள் குரலில் வெளிப்பட் டதை அவனால் தாங்க முடியாதிருந்தது. மனம் மிகவும் தர்ம சங்கடப் பட்டது. 

நத்தார் அன்று தனியாக வீட்டிலிருந்தான். ஒரு விதத்தில் புதிய அனுபவமாக இருந்தது. இரண்டு பெண்களின் நினை வும் உலகை மறக்கப் பண்ணியது. இரண்டு வருடங்களுக்கு முன் நத்தார் இரவன்று பாரிசில் வைத்து டெவீனா “என்னை முத்தமிடத் தோணலயா” என்றாளே. டெவீனாவின் அந்த ஞாபகம் அடிக்கடி வந்து அமைதியைக் கெடுத்தது. ஜனவரி எண்பத்தி எட்டாம் ஆண்டு வந்தது. இரண்டாம் திகதி டெவீ னாவின் பிறந்த நாள். 

அன்று முழுக்க முழுக்க அவள் தந்த ரேப்பில் எறியப்படாமற் கிடந்த பேத்ஹோவனின் பியானோ கொன்சேர்டோவைத் திருப்பித் திருப்பிப் போட்டுக் கொண்டான். 

அம்மாவின் நிலையில் மாற்றமில்லாத படியால் கணேஸ் அம்மாவைத் தன்னுடன் வைத்துக் கொண்டான். மைதிலி லண்டனுக்குத் திரும்பி வந்தாள். மிகவும் மாறியிருந்தாள். முகத்தில் ஒரு முதிர்ச்சி தெரிந்தது. இவனைக் கண்டால் தயங்கிப் பார்க்கும் பாவனை மறைந்திருந்தது. அன்று இரவு தங்கையை அழைத்துக் கொண்டு சாப்பிடப் போனான். 

மைதிலி தாயைப் பற்றிச் சொல்லியழுதாள். பின்னர் தமக்கையைப் பற்றிச் சொல்லியழுதாள். இந்தியப் படையின ரால் எப்படிக் கொல்லப்பட்டாள். என்ன விபரம் தியாகராஜா மாமாவுக்கு வந்திருந்தது. 

மகாலிங்கத்தின் சொந்தக்காரப் பையன் விடுதலைப் புலி களுடன் சம்பந்தப்பட்டவன். அவனைத் தேடி வந்த அமைதிப் படையினர் வந்தனர். 

மைதிலியால் மேலே சொல்ல முடியவில்லை. விம்மி விம்மியழுதாள். 

கட்டிய கணவன், தகப்பனுக்குச் சமமான மாமா பெற்ற குழந்தைகள் முன்னால் பெண்மையின் சிறப்புக்கு முன் உதார ணமாக கீதா இந்திய அமைதிப் படையினரின் காம வெறிக்கு இரையாகிக் கொலைச் செய்யப்பட்டாள். குடும்பத்திலுள்ள அத்தனை பேரையும் கொலை செய்து வீட்டையும் தீ வைத்து அழித்தார்களாம். 

மைதிலி இதயம் பிழக்க அழுதாள். தமக்கையின் பெண் மையைப் பறித்த மிருகங்களைச் சாபம் போட்டாள். 

எனது தமக்கை போன்ற தமிழ்ப் பெண்மையைச் சிதைத்த இந்த நாய்களை கடவுள் தண்டிப்பார் என மைதிலி சாபமிட் டாள். தங்கை வாயால் தமக்கையின் பெண்மை பறிக்கப்பட்ட செய்தியைக் கேட்கும் அனுபவம் எந்த மனிதனுக்கும் வர வேண்டாம். அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். 

“மைதிலி எங்கள் குடும்பத்திற்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதம்மா’ 

தங்கையின் கரங்களைப் பற்றிக் கொண்டான். இந்தத் தங்கையாவது சந்தோசமாக இருக்கட்டும் என்று மனம் வேண்டியது. “மைதிலி நாசர் விடயம் எனக்குத் தெரியும் எப்படியும் உன்னை அவனிடம் சேர்த்து விடுகிறேன்”. 

திடீரென்று தமயனிடமிருந்து வந்த இந்தத் தகவல் அவ ளைத் திடுக்கிடப் பண்ணியிருக்க வேண்டும். 

அவனின் குரலில் ஒலித்த அவசரம் கீதாவின் மரணத்தை மறக்க எடுத்த தவிர்க்க முடியாத ஆவேசத்தின் பிரதிபலிப்பா என்று அவனுக்குத் தெரியவில்லை. 

தமயனை ஏற இறங்கப் பார்த்தாள். தமயன் என்ற ஸ்தா னத்தில் அவன் தன் சந்தோஷத்தை எவ்வளவு தூரம் ஆழமாக யோசிக்கிறான் என்று அவனுக்குப் புரிந்தது. 

கணவன், மாமன் போன்றோராலேயே தமக்கை கீதாவின் துயரைத் தடுக்க முடியவில்லை, இவன் உலகத்து மாயா ஜாலம் போன்ற நிகழ்ச்சிகளின் நடுவில் தன்னைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சி அவளை நெகிழப் பண்ணியது. நாசரைப் பற்றிய உண்மையான செய்தியைச் சொன்னால் எவ்வளவு துக்கப் படுவான் என்பது அவனுக்குத் தெரியாது. 

– தொடரும்…

– அவனும் சில வருடங்களும் (நாவல்), முதல் பதிப்பு: ஜூலை 2000, குமரன் பப்பிளிஷர்ஸ், சென்னை.

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம் (எம்.ஏ) திரைப்படத்துறையில் பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் எழுத்துக்கள்: 7 நாவல்கள், 6 சிறுகதைத் தொகுப்புக்கள், 2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *