அலைகள் தந்த பாடம்
கதையாசிரியர்: எஸ்.உதயசெல்வன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2025
பார்வையிட்டோர்: 211
(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுனாமி அலைகள், கண்மூடித்திறப்பதற்குள் கரையை ஆக்கிரமித்து மீண்டும் கடலுக்கு திரும்பி விடுவதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டிருந்தன.
பவித்ராவின் தலையில் ஏதோ ஒன்று அடிபட்டு தலை ‘விண் விண்’ என்று வலிப்பது ஒரு புறமிருக்க… மீண்டும் பெரிய அலைகள் அடித்து கை, கால்கள் சோர்ந்து… உப்புத்தண்ணீரை தவிர்க்க முடியாமல் குடித்தாள்.
என்ன நடக்கின்றது என்று தெரிவதற்குள் எல்லாம் நடந்து கொண்டிருந்தன.
உடல் முழுவதும் பலமிழந்து தண்ணீருக்குள் மூழ்கி, அரைமயக்கத்துக்கு போய்க்கொண்டிருந்தவள் தலைமுடியை யாரோ இழுப்பதை உணர்ந்தாள்.
கண்கள் நம்பிக்கையுடன் மெல்ல தடுமாறி விழித்துப் பார்க்க…
‘சற்குணம்….!’
அவன்தான் அவளைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றான். அந்த இயலாத நிலையிலும் அவள் கண்கள், அவனை நன்றியுடன் பார்த்தன. அவர்கள் ஒதுங்கிக் கொண்டிருந்த கரை, ஒதுக்குப் புறமாகவே இருந்தது. முன்பு அடிக்கடி பார்த்து பரிச்சயமான இடம், இப்போ தலைகீழாக மாறியிருக்கிறது.
சற்குணம், அவளுக்கு தேவையான சில முதலுவிகளை செய்து கொண்டான்.
அவள் மனம், இப்போ தன் மேலேயே கோபம் கெண்டு வெட்கி தலை குனியத் தொடங்கியிருந்தது.
முன்பு அவனை எவ்வளவு மட்டமாக எண்ணியிருந்தாள். அவள் கல்லூரிக்கு நடந்து சென்று கடக்கும் சந்தியில், பயனில்தாத தன் நண்பர் களுடன் சேர்ந்து கிண்டல் வார்த்தைகளை அள்ளி வீசி அவளை வெறுப்பேற்றியவனை எத்தனை முறை தாறுமாறாக பேசி அவனை அவமானப் படுத்தியிருப்பாள்.
ஆனால் இப்போ… தன் உயிரை காப்பாற்றி…!
அந்த ஒருவித நன்றி கலந்த திருப்தி, அந்த நிமிடம் வரையே தொடர்ந்தது.
திடீரென்று அவன், அவளை ஒருவித குரூர பார்வையுடன் கிட்டே நெருங்கி… அவள் கழுத்துக்கு தன் விரல்களை வைத்து, அப்படியே கீழே இறக்க… அவள் உடலும் உள்ளமும் நெருப்பாய் கொதித்து எரிந்தது. “உன்னை காப்பாற்றியதுக்கு எடுக்கும் ஊதியம்…” என்று சொல்லாமல் சொல்லும் அவன் பார்வையால் அவள் உடல் பயத்தால் வெலுவெலுத்தது.
அவனின் பிடியை நிராகரித்து தள்ளி விடமுடியாத பலவீனம் அவளுடலை ஆக்கிரமித்து கைகள் செயலிழந்து நிற்க…
“டமால்…” திடீரென்று அவன் மண்டையில் பலமாக ஏதோ இறங்கியது. பின்னால் ஒரு மரக்கட்டையுடன்… அவளுடன் கல்லூரியில் கூட படிக்கும் நூர்ஜகானின் அப்பா மைதீன் கண்கள் சிவக்க நின்று கொண்டிருந்தார்.
“கேவலம் கெட்ட நாயி…! இந்த அவலமான நேரத்திலும் இந்த கேவலமா…?” என்றார் ஆத்திரத்தோடு. சற்குணம் அப்படியே அரை மயக்கத்துக்கு போய்க் கொண்டிருந்ததை அசட்டை செய்து விட்டு. பவித்ராவை மெல்ல ஆதரவுடன் தூக்கி நிறுத்தினார்.
அவளின் ஈரம் சொட்டிக் கொண்டிருந்த உடை மீது, தான் வைத்திருந்த துண்டை போர்த்தியபடி சொன்னர்.
“வா மவளே! உன்னைத்தான் காணலன்னு எல்லோரும் தேடிக்கிட்டிருக்காங்க…”
“அ… அங்கிள்…!” அழுதாள்
“அழாதே மவளே! வா… !” அவர் மெல்ல அழைத்துச் சென்றார். தடுமாறியபடியே நடந்து கொண்டிருந்தவளை தாங்கிப்பிடித்துக் கொண்டு, தூரத்துக்கு கைகாட்டினார். அவளை நாலாபக்கமும் அங்கலாய்ப்புடன் தேடிக் கொண்டிருந்தவர்கள், அவர்களை நோக்கி ஓடி வந்தனர்.
அவளின் அப்பா சந்திரன், அவளைக் கண்டதும் அழுகையுடன் ஓடோடி வந்தார். “என்னடா மகளே…! உனக்கு ஒண்டும் ஆகலைதானே…?” இதயம் துடித்தபடி அவளைத்தாங்கி பிடித்துக் கொண்டார்.
வீதிக்கு வந்தனர். தெரிந்த ஆட்டோக்காரன் அவர்களை ஏற்றிக் கொண்டான்.
“அந்தோனியர் கோயிலுக்கு விடுங்க…!” என்றார் மைதீன்.
அந்தோனியர் கோயில் வாசலில் எல்லோரும் இறங்கிக் கொண்டனர். சுனாமியின் அகதிகள் கோயில் வளவுக்குள் நிறைந்திருந்தனர். அவர்களைக் கண்டதும் இரு குடும்பத்தினரும் ஓடி வந்தனர்.
“ஓ… கடவுளே! உன்னை இழந்திட்டோமோ என்று துடிச்சுப் போய்ட்டோமே…” பவித்ராவின் அம்மா அழுதாள். நூர்ஜகான், தேவாலயத்தின் ஒதுக்குப்புறத்துக்கு அழைத்துச் சென்று உடைகள் மாற்ற உதவி செய்தாள்.
கடற்பாறைகளும், தடிகளும் ஏற்படுத்திய கீறல் காயங்கள் இப்போதுதான் எரிவைத் தரத் தொடங்கியிருந்தன.
உடை மாற்றியபின், நூர்ஜகான் அவளை அவ்விரு குடும்பங்களும் அமர்ந்திருந்த மர நிழலுக்கு அழைத்து சென்றாள். மெல்ல அமர்ந்தாள் பவித்ரா எல்லோரையும் பார்த்தாள். இரு குடும்பத்தினரின் எல்லா அங்கத்தவரை ஒன்றாக பார்த்த திருப்தியுடன்… விம்மி அழுதாள். அவளுக்கு நடந்த சம்பவத்தையிட்டு நூர்ஜகானின் அம்மா, அவளை ஆதரவுடன் அணைத்து ஆறுதல் சொன்னாள்.
“அழாதே பவி! நல்ல காலம்! விபரீதமாய் நடக்கல. அதையே யோசிச்சிக்கிட்டிருக்காதே கண்ணு…!”
பவித்ரா தனக்கு நடக்கவிருந்த விபரீதத்திலிருந்து தப்பியது ஒரு புறமிருக்க, பூனையும் எலியுமாக பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்த இரு குடும்பத்தாரும் இப்போ… ஒன்று சேர்ந்ததைப் பார்த்து உள்ளம் ஒரு வகை உவகை கொண்டதால் கண்கள் மேலும் கலங்கின.
பவித்ராவும் நூர்ஜகானும் ஒரே கல்லூரியில் மட்டுமல்ல, ஒரே வகுப்பில் படிக்கும் தோழிகளும் கூட. ஆனால் அவர்களின் பெற்றோர் களோ எலியும் பூனையுமாகவே வாழந்து வந்திருந்தனர்.
ஆனால் இப்போ இந்த சுனாமி வந்து, இவர்களின் மனவேற்று மையையும், மத வேற்றுமையையும் உடைத் தெறிந்ததை நினைத்து இரு தோழிகளும் மனம் நிறைந்து கரங்களை இறுகப் பற்றிக் கொண்டனர்.
வீட்டிலிருந்து கல்லூரிக்கு புறப்படும்போது இரு தோழிகளுக்கும் ஒன்றும் தெரியாதவர் போல் பிரிந்து புறப்பட்டு, இடைவழியில் உற்சாகமாய் ஒன்று சேர்ந்து நடந்து… பின் கல்லூரியிலிருந்து திரும்பி வரும் போதும் பிரிந்தே வீடு வந்து சேர்ந்து தம் நட்பை மறைக்கும் அவர்களுக்கு, இனி மறைக்க வேண்டிய அவசியம் இன்றுடன் முற்றுப் பெறுவதை நினைத்து, மனதிற்குள் இருவரும் திருப்திப்பட்டுக் கொண்டனர்.
ஆயினும் சுனாமி குடித்த உயிர்களின் பெறுமதி…?
தோல்வியிலும் ஒரு வெற்றி! இழப்பிலும் ஒரு படிப்பினை! மனம் கவலையில் துடித்தது. தேவாலய அருட்தந்தை அவர்களருகே வந்தார். “பிள்ளைகளே…! வீட்டின் செல்வங்கள் அழிந்து போனதை விட, உங்கள் உயிர்கள் அழிந்து போகாமல் இருந்ததற்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவோம்…! இந்தாருங்கள்… உங்களுக்குரிய உணவுப் பார்சல்கள்!” என்று கருணையுடன் நீட்டினார்.
அவலமான சூழ்நிலையானாலும் ஒன்றாகச் சேர்ந்த மத ஒற்றுமை, நூர்ஜகானை சிலிர்க்க வைத்தது. சந்திரனின் கைத்தொலைபேசி கிணுகிணுத்தது.
“ஹலோ…” என்றார் சந்திரன்
மறுமுனையில் அவரின் சிங்கள நண்பன் சிறிசேனா பேசினார். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டார். அரைமணிநேரத்தில் சிறிசேனா வந்தார்.
“என்ன மச்சான்? ஏன் என்ர வூட்டுக்கு வரலை? தங்கைச்சி யையும் பிள்ளைகளையும் உடனே கூட்டிட்டு என்ரவூட்டுக்கு நேரே வந்திடவேண்டியதுதானே…?” என்றார் சிறு கோபத்துடன்,
“இல்.இ..இல்லை மச்சான். இங்கு நாம் தனியாக எண்டு இல்லை. எங்க வீட்டுக்கு பக்கத்தில இருக்கும் மைதீனின் குடும்பமும் எங்களுடன்தான் இருக்காங்க. அவங்களை விட்டுட்டு தனியாக வர்ரது சரியில்லைதானே… அதனாலே…” சங்கடத்துடன் இழுத்தார் சந்திரன்.
“என்ன மச்சான் பேசுறே நீ? அவங்க உனக்கு நண்பர்க ளென்றால் எனக்கும் நண்பர்கள்தானே…! எல்லோரும் என்ரவூட்டுக்கு வாங்க..! இந்த நேரத்தில நாம ஒன்றாக சமாளிச்சு இருக்காட்டி பின்னே என்ன…?” என்றபடி அவர்களின் பதிலை எதிர்பாரமலே அவர்கள் பைகளை ஆட்டோவில் ஏற்றினார் சிறிசோனா.
சந்திரனும் மைதீனும் கண்கலங்கியபடி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
“கடவுளே…! சுனாமியால் ஏற்பட்ட பெரும் அழிவைக் கண்டு கலங்குவதா..? இந்த பேரழிவால் உற்பத்தியாகிக் கொண்டிருக்கும் ஒற்றுமையைக் கண்டு மகிழ்ச்சியடைவதா…? தேவாலயத்தின் கோபுரத்தைப் பார்த்தாள் பவித்ரா.
சிலுவை ஜேசுவுடன் சிவனும், அல்லாவும், புத்தரும் கூட காட்சியளிப்பது போலிந்தது அவளுக்கு.
நூர்ஜகான் அவளை புரிந்து கொண்டது போல…. அவளின் கைகளை அன்புடன் இறுக பற்றிக்கொள்ள, இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
(பரிசுச் சான்றிதழ் பெறும் சிறுகதை )
ஈழத்து இலக்கியத்துறையில் தடம்பதித்து எழுதிவரும் எஸ். உதயசெல்வன் சிறுகதை, நாவல் ஆகியவற்றை எழுதிவருகின்றார். நீர்கொழும்பில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர் “நினைவெல்லாம் நீயே” என்னும் நாவலை எழுதி வெயிட்டுள்ளார். ஞானம் சஞ்சிகையில் இந்நூலின் மதிப்புரை வெளிவந்துள்ளது. மேலும் “அப்பாவைத்தோடி” என்னும் இவரது சிறுகதைத்தொகுப்பு மணிமேகலைப்பிரகரமாக வெளிவந்துள்ளது. அத்துடன் வீரகேசரி வார வெளியீட்டில் “காதல் பூட்டு” எனும் காதல் நவீனம் தொடர்ச்சியாக வெளிவந்ததை வாசகர்கள் நன்கறிவர். வெகுவிரைவில் “காதல் பூட்டு” நாவல் நூலுருவில் வெளிவரும் என எதிர்பார்க்கலாம். இலக்கிய ஆர்வலராகத் தன்னை இனங்காட்டியுள்ள எஸ். உதயசெல்வன் பல தரமான படைப்புகளை தொடந்தும் வெளிக்கொணர்வாரென ஈழத்துவாசகர்கள் எதிர்பார்த்திருக்கின்றார்கள்.
– கொக்கிளாய் மாமி (சிறுகதைகள்), தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன், முதற்பதிப்பு: செப்டெம்பர் 2005, ஞானம் பதிப்பகம், கொழும்பு.