அரை மனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 23, 2025
பார்வையிட்டோர்: 1,190 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“எவ்வளவுதான் மேற்கத்தி மோஸ்தருக்குள் உடம்பைத்திணித்துக் கொண்டாலும் அசல் மேற்கத் தியானுக்கு உள்ள கம்பீரமோ நேர்த்தியோ உண்டாகப் போவதில்லை… 

“ஆனால் பிறந்துவிட்டோம். இப்படி, இந்த நிறத்துடன் இந்த நாட்டில் எப்படியாவது வாழ்ந்து முடிக்க வேண்டியதுதான். குறைந்த பட்சம் மேற்கு முறையில் எங்களை உயர்த்திக்கொள்ள முயற்சி யாவது செய்யவேண்டியது பொறுப்பு, கடன்… 

இந்தச் சிறுமைப் பித்து அவன் ஒருவனுக்கு மட்டுந்தானா? நம் நெஞ்சில் நாமும் கைவைத்துப் பார்க்க வேண்டாமா? 

மிதமான குடியால் உண்டான மிதமிஞ்சிய உற்சாகத்துடன் வெளிவந்தபோது, மழை முரட்டுத்தனமாய்க் கொட்டிக் கொண்டிருந்தது. நனையாமல் காத்துக் கொள்ள நான் மழைக்கோட்டும் கொண்டுவரவில்லை. எங்காவது தங்கி இரவைக் கழிக்கலாம் என்றால், துணை யில்லாத் தூக்கத்தில் இனிமை ஏது? உடலையும் மூளையை யும் ஒட்டிக்கொண்டிருந்த உற்சாகத்தைச் சேதமாக்காமல் அழகாக நனைந்துகொண்டே ரயில்வே ஷ்டேஷனுக்குச் சென்றுவிடுவதே நலம் என்று நிச்சயித்து, கால் சட்டையை முழங்கால்கள் வரை மடித்துவிட்டுக்கொண்டு புறப்பட்டேன். 

மழையில் நனைந்துகொண்டே இரவில் தனியாக நடந்து செல்லுவதிலும் இன்பம் இருக்கிறதல்லவா? அந்த இன்பத்தை சீட்டி அடித்து அனுபவித்துக்கொண்டே ஸ்டேஷனுக்கு விரைந்தேன், பிளாட்பாரத்தில் நின்றது ரயில்; புறப்படுவதற்கு இன்னும் ஒன்றிரண்டு நிமிஷங்கள் தான் பாக்கி அவசர அவரமாய் செகன்ட்கிளாஸ்’ டிக்கட் ஒன்று வாங்கிக்கொண்டு சேற்றை வாரி இறைக் கும் பூட்கள் கால்வாரிவிடாதபடி ஓடி. 

ஒரு செகன்ட்கிளாஸ்’ வண்டி – நாலுபேர் படுக்கலாம் ஒரே ஒரு வெள்ளைக்காரனைத் தவிர காலியாகக் கிடந்தது; அவனும் தூங்கிக்கொண்டிருந்தான். கதவைத் தள்ளினேன்; உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. திறந்து கிடந்த ஜன்னல் வழியாக நாள் உள்ளே ஏறிக் குதிக்கவும், ரயில் ஊதவும் சரியாக இருந்தது. 

முதலில் என்னைக் கவனித்துக்கொண்டேன். ஈர் உடைகளைப் பிழிந்தும், தொப்பியை உதறிக்கொண்டும். ‘அப்பாடா,’ என்று அலுத்துக்கொண்டே படுத்திருந்த ஆளைக் கவனித்தேன். அவன் அசல் வெள்ளைக்காரன்; அசல் என்றால் அசல்தான், கருப்பு மனைவிக்கும் வெள்ளைக் கணவனுக்கும் பிறக்கும் ‘அரை ஜாதி’ அல்ல, நேராக எங்கோ மேற்கு நாட்டிலிருந்து வந்தவன் நல்ல வெள்ளை நிறத்தை நீளமாய்ப் பரப்பி நன்றாய் உறங்கிக் கொண்டிருந்தான். வெண்மை படுக்கையில்கூட அழ காகவே இருந்தது. அதிலும் ஆச்சரியம் என்னவெனில் அவன் தன் உடுப்பைக் கழற்றவே இல்லை. கால் சட்டை (பாண்ட்); கோட், பூட்கள், நெக்டை: ஏன், மூக்குக் கண் ணாடியைக்கூட அவன் கழற்றவே இல்லை. லேசாக மேலும் கீழும் போய்வரும் மார்பு – ரயிலின் ஆட்டத்தினால் அசையும் உடம்பு- அவனைப் பார்த்தால் ஒரு அழகான பொம்மையைப் படுக்கவைத்திருப்பது போலத் தோன்றியது. 

நான் வருத்தத்துடன் நினைத்தேன்: ‘எவ்வளவுதான் நாங்கள் – அதாவது, பனிக்கட்டி போன்ற நிறம் படைத்த அல்லது நிறத்துடன் படைக்கப்பட்ட நாங்கள் – எவ்வளவுதான் மேற்கு மோஸ்தருக்குள் உடம்பைத் திணித்துக்கொண்டாலும் அசல் மேற்கத்தியானுக்கு உள்ள கம்பீரமோ நேர்த்தியோ உண்டாகப் போவதில்லை. பிறவியுடன் வருபவை அவை; அவைகளை அடைபவர்கள் பாக்கியசாலிகள்! 

“ஆனால், பிறந்துவிட்டோம் இப்படி, இந்த நிறத் துடன், இந்த நாட்டில்.எப்படியாவது வாழ்ந்து முடிக்க வேண்டியதுதான், குறைந்த பட்சம் மேற்கு முறையில் எங்களை உயர்த்திக்கொள்ள முயற்சியாவது செய்ய வேண்டியது பொறுப்பு.கடன்…”

நான் உட்காரவேண்டும். முடிந்தால் ஈரவுடை யுடனேயே கொஞ்சம் கைகால்களை நீட்டிக்கொண்டு படுக்கவாவது வேண்டும். அவன் – கண் அயரும் என் மேற்கத்தித் தோழன் – ஒரு பெர்த்தில்’ தூங்கிக் கொண் டிருந்தான்; கீழுள்ள மற்றொரு ‘பெர்த்திலாவது படுக்கலாமா என்று பார்த்தேன்; அங்கே பார்த்தேன்; அங்கே உடைக்காத பிராந்தி பாட்டில் ஒன்று, ஒரு காலி பாட்டில், சிகரெட் பெட்டி ஒன்று, ஒரு தீப்பெட்டி, ஒரு வாக்கிங் ஸ்டிக், எல்லாவற்றையும்விட பயப்படும்படியாக ஒரு கைத் துப்பாக்கி கிடந்தன. எல்லாவற்றையும் கீழே எடுத்து வைத்து விட்டுப் படுப்பதற்கு எனக்கு உரிமை இல்லை. 

“ஒருவேளை இந்த கம்பார்ட்மென்ட் முழுவதும் இவன் ரிஸர்வ் செய்திருப்பானோ?” என்று நினைத் தேன். அப்படியாயின் இந்த வண்டியில் ஏறியதே தப்பு. என் தூங்கும் தோழன் விழிப்பில் சாதுவாக இருந்தால் மன்னிப்பு கோரித் தப்பிவிடலாம். அதுவும் அவனுடைய உயர்ந்த பண்பாட்டிற்கு சிஷ்யனாகத் தோற்றம் அளிக் கும் நான் மன்னிப்பு கோரினால் அவன் அளித்துக் கொஞ்சநேரம் பேசவும் செய்யலாம். ஆனால் அவன் சாதுவாக இராமல் முரடனாக இருந்தால்? கைத் துப்பாக்கி… 

அதைப் பார்த்தேன்; ‘சட்டம் என்றால் சட்டம்தான் என்று நினைத்து, சொல்லி செய்யும் வெள்ளைக்காரனின் முன் கோபத்திற்குப் பாத்திரம். ஆகிவிட்டால் அவன் என்னை நாயைப்போல் சுட்டுக் கூட தள்ளலாம். 

நான் அதற்காகப் பயந்து விடவில்லை. இன்னும் நான்கு மணி நேரத்திற்கு மேலாகும் ரயில் புனாவை அடைய. அதுவரையில் மேல் பர்த்தில் சந்தடி செய்யாமல் படுத்திருக்கலாம் என்று முடிவு கட்டி, மற்றொரு முறை அந்த அழகான வெள்ளைப் பொம் மையைப் பார்த்து பெருமூச்சு விடுத்து, மேலே ஏறி, ஈாவுடலைத் தளர்த்தினேன். 

ஈர நாய் உதறிக்கொள்வதுபோல் ரயில் இடமும் வலமும் புரண்டு நின்றது. கீழே படுத்துள்ள தோழன் விழித்துக்கொண்டு என்னைப் பார்த்துவிடக் கூடாது. என்பதற்காக மூக்கைக் கையால் பிடித்துக்கொண்டு மூச்சை வெளியில் விட்டேன். வீண் கலாட்டா எதற்கு, அதுவும் ஒரு வெள்ளைக்காரனுடன் என்பதுதான் என் அடக்கத்திற்குக் காரணம்; பயம் அல்ல, இல்லவே இல்லை. 

கீழே ஜன்னலிலிருந்து யாரோ யாரோ கூப்பிட்டார்கள்: “ஜான்!”

படுத்திருந்தவன் பதில் அளித்தான்: “ஓ, இருக்கிறேன்” 

பிறகு கீழிருந்த ஆள் ஜன்னலுக்கு நடந்து செல்வது தெளிவாய்க் கேட்டது, சாதாரணமாகவே வெள்ளையர் நடக்கும்போது,நல்ல குதிரை மலைமீது ஓடுவதுபோல் சத்தம் கேட்கும். 

கீழே குரல்கள் பேசின; மறந்துவிட்டேன்,படுத்திருந்த ஆளின் குரல் கிளாரிநெட் வாசிப்பதுபோல் ‘நொய்ங்’ என்றிருந்தது. 

வெளிக்குரல்: “உடம்பு எப்படி இருக்கிறது?” 

உள்குரல்: “நல்ல தூக்கம்.” 

“மார்வலி இல்லையே? அந்த டோஸ் எடுத்துக் கொண்டாயா?” 

“ஓ! மார்வலி இல்லை?”

”பிராந்தி இருக்கிறதா?” 

“இருக்கிறது….ஆனால் உடம்புதான் ரொம்ப கனக்கிறது; புனாவுக்குப் போக இன்னும் நாலுமணி நேரமாவது ஆகும். நான் உடம்பை லேசாக்கிக் கொள்ளட்டுமா?”

“செய். ஆனால் ஜன்னலை நன்றாக மூடிவிடு, வெளியிலிருந்து யாரும் பார்க்க முடியாதபடி.” 

”ஓகே” 

ரயிலின் குரல் அவர்களைப் பிரித்தது; வெளிக்குரல், “அடுத்த ஸ்டேஷனில் பார்க்கிறேன்”, என்று விட்டு ஓடியது. 

அந்த சம்பாஷணை எனக்கு அதிசயமாக இருந்தது. உடல் கனத்தைக் குறைக்க நண்பனின் அனுமதியை ஏன் கேட்கவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை; ஆடை களைக் கழற்றுவதனால் யாரும் பார்க்காதபடியாய் ஜன்னலைக் கெட்டியாக மூடும்படி நண்பன் ஏன் யோசனை கூறவேண்டும்? ஒருவேளை – ஒருவேளை முழுக்க முழுக்க உடையின் கனத்தைக் குறைக்க… 

சே, வெள்ளையர் காட்டு மிராண்டிகள் அல்ல. சூரியன் எப்படிக் கொதித்தாலும் அவர்கள் உடை குறைக்கமாட்டார்களே… 

அவர்கள் பேசியதன் பொருள் என்னவென்று புரிய வில்லை… 

ஜன்னலை – கண்ணாடி உள்பட – இறுக மூடிவிட்டு பிறகு கடபுட’ வென்று சிறிது நேரம் கீழே ஏதேதோ சப்தம் கேட்டுக் கொண்டே யிருந்தது. நான் அசையவே இல்லை. இன்னும் சிறிது கழிந்து, கீழே மௌனம் நிலவியது. 

அவன் என்ன தான் செய்கிறான் என்று பார்க்கத் தோன்றியது; ஒருபுறம் கூச்சமாகவும் இருந்தது. தலையை மட்டும் மெதுவாய்க் கீழே நீட்டிப் பார்த்தேன்: 

மறு நிமிஷம் ‘ஐயோ’ என்று வாய் தொண்டைக்குள் தானாகக் கதற, கைகள் தாமாக ஊன்ற, கால்கள் பாய் மார்பு படபடக்க எழுந்து உட்கார்ந்தேன். 

அழகாய்ப் படுத்திருந்த வெள்ளைக்காரன் அங்கே இல்லை; அவனுக்குப் பதிலாக தாறுமாறாகவும் கோர மாகவும் வெட்டுண்டது போன்று ஓர் அரை உடல் அங்கே கிடந்தது! 

நான் எதற்கும் பயந்ததில்லை; ஆனால் இப்போது பயந்துவிட்டேன். உன்னால் பயப்படாமல் இருக்க முடியுமா,கேட்கிறேன். கொஞ்ச நேரத்திற்கு முன்னால் ஓர் ஆளைத் தனியாகப் பார்க்கிறாய்; ஆனால் திடீரென்று அவன் இருக்கும் இடத்தில் பார்வைக்கே பயங்கரமான அரை உடல் கிடந்தால் பயப்படாமல் இருக்க முடியுமா உன்னால்? கண்கட்டு வித்தை நடக்கும் இடம் அல்ல என்பதையும் மறந்துவிடாதே. 

நீ எப்படி பயந்திருப்பாயோ, நானும் பயந்து விட்டேன். கீழே பர்க்கவும் எனக்குப் பயமாக இருந்தது. சிரித்து பயத்தை விரட்டலாம் என்று நினைத்தால் சிரிப்பும் வாயை இளித்துவிட்டது. ரயிலிலிருந்து இறங்கிவிடலாம் என்றால் அது தலை கிறுகிறுக்கும்படி ஓடிக்கொண்டிருந்தது. அபாயச் சங்கிலியை இழுக்கலாமே என்று நீ சொல்லலாம். ஆனால் அபாய காலத்தில் அந்த நினைப்பே உண்டாவதுதில்லையே! 

பயம் ஐந்து நிமிஷங்களைச் சாப்பிட்டபின் என்னைத் தட்டிக்கொடுத்து சமாளித்து கொண்டேன் உயிராசை ஒருபுறம் இழுக்க, பயம் மறுபுறம் இழுக்க இறுதியில் பயம் சிறிது பின் வாங்கியது. பேய் பிசாசு களைப்பற்றி நான் எப்போதும் நம்பியதில்லை; ‘எப்போ தும்,’ என்று சொல்லுவதில் பொய்க்கலப்பு இருக்கிறது; சிறு வயதில் இருட்டில் கூட போகமாட்டேன். விவரம் அறிந்தபின் நான் பேய் பிசாசுகளை நம்பியதில்லை. அவை ரயில் பிரயாணம் செய்ததாய்,– அதுவும் மனித- நண்பர்களுடன் – நான் கதையில்கூட – படிக்கவில்லை. ஆகவே கீழே கிடப்பவன், – அல்ல, – கிடப்பது பேயோ பிசாசோ அல்ல. 

பின்? 

அவன் தன்னைத்தானே வெட்டிக்கொண்டிருப்பானா? 

இது பைத்தியக்கார எண்ணம். வெட்டிக்கொள்ளும் போது ஒருத்தன் கூச்சல்கூட போடமாட்டானா? வெள்ளைக்காரனுக்கு ரத்தம் கூட உண்டு; இல்லையா? 

என்ன யோசித்தும் எனக்கு சமாதானப்படவில்லை. யோசனையால் அச்சம் மங்கலுற்றுவிட்டது. குனிந்து நன்றாய்ப் பார்த்தேன். 

‘பாண்ட், கோட்’ இல்லாமல் ஒரு ட்ரௌஸர் மட்டும் அணிந்து கொண்டு அந்த உருவம் கிடந்தது. வலது கையும், வலது காலும் இருக்கவேண்டிய இடங்கள் காலி; மார்பின் வலப்பாகம் சரிந்திருந்தது. எல்லாவற்றிலும் கோரம் அந்த உருவத்திற்கு மூக்கே இல்லை! 

நான் முதலில் பார்த்த பொம்மை அழகுக்குப் பதிலாகப் பயங்கரமான — அல்ல; அசிங்கம், சே, அசிங்க மான உருவம்… 

நினைப்பில் தடுமாறி என் கால் ஒன்று கீழே சாய்ந்து சப்தம் எழுந்தது. 

”யாரது?” என்றது உருவம், குயிலொத்த குரல். 

நிர்ப்பந்தத்தால் கீழே இறங்கினேன். உருவம் கண் களையும் திறந்துவிட்டது, வலது கண் இருக்கவேண்டிய ஸ்தானத்திலிருந்து ஒரு பள்ளம் முறைத்தது; அங்கே கருவிழி, ஒன்றுமே இல்லை? மொத்தத்தில் அந்த உருவம், மனிதவுடலில் இடது பாதியாகத் தோன்றியது.. 

”யார் நீ?’ அதுவும் பயந்துள்ளது என்று அதன் குரலும், இடது கண்ணும் சாட்சி சொல்லின. 

“நானா?…நான்..” என்று குழறினேன். 

“நீ எப்படி இந்த வண்டியில் வந்தாய்?” அந்த வெள்ளை அரை உடல் தன் இடது கையை ஊன் எழுந்திருக்க முயன்றது; முடி யாமல், கீழே தொப்பென்று சாய்ந்தது; மீண்டும் சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்து விட்டது. 

“இது ரிஸர்வ் வண்டி என்று உனக்குத் தெரியாதா; கறுப்பு நாயே, உனக்கு புத்தி இல்லையா?” 

கடவுளே! உனக்கு (கடவுளுக்கு அல்ல, உனக்கு) இந்தமாதிரி அனுபவம் ஏற்படவே கூடாது. எமனுக்கும் பதில் சொல்லிவிடலாம்; அரை உடலுடன் பேசுவது என்றால்… 

“தெரியாமல்…” 

“உடம்பு கறுப்பு என்றால் புத்தியுமா கறுப்பு உனக்கு?” 

இருமியது; மறுபடி மெத்தைமீது விழுந்து இடது கையால் சரிந்திருந்த மார்பின் வலப்பாகத்தைத் தடவிக் கொடுத்தது. அதனுடைய முணுமுணுப்பின் அர்த்தம் நான் நாசமாய்ப் போக வேண்டும் என்பதுதான்.நான் ஏன் பேசுகிறேன்? 

“ஏய், அந்த பெர்த் மீது, பாட்டிலுக்குப் பக்கத்தில் கிடக்கிறதே சின்ன சீசாவிலிருந்து இரண்டு துளி வாயில் ஊற்று.” 

அப்படியே செய்தேன், உலகத்தை ஆட்டும் மகா சக்தியின் கட்டளைக்குப் பணிவது போல். 

சிறிதுநேரம் அந்த உருவம் துடிதுடித்தது. கழுத்து அறுபட்டதும்; கோழி துடிக்குமே, அதுபோல. 

கடவுளே, புனாவைக் கொஞ்சம் முன்னாலாவது அனுப்பக்கூடாதா? என்று என் நெஞ்சு துடிதுடித்தது. 

கொஞ்ச நேரத்தில் அந்த உருவம் நிதானமுற்றது இடது விழியையும் வலது பள்ளத்தையும் விழித்த அந்த பார்வை? 

மறுபடியும் அது கஷ்டப்பட்டு எழுந்து அமர்ந்தது. 

“நீ எப்போது இங்கே வந்தாய்?” அதன் குரலில் அதிகாரமோ ஆத்திரமோ இல்லை; சாதா உணர்ச்சி ஒலித்தது.நான் உண்மையைக் கூறினேன். 

“அப்படியானால் நீ என்னை உடையுடன் பார்த்திருக்கிறாய்!” நான் ஒப்புக்கொண்டேன். 

“உட்காரேன்.” என்ற குரலில் சாமானியத்தன்மை மட்டும் அல்ல, ஒருவிதப் பணிவும் இருந்தது. உட்கார்ந்தேன். 

”பிராந்தி கொஞ்சம் சாப்பிடுகிறாயா? எடு…”

எடுத்துக்கொடுத்தேன்; நான் சாப்பிடவில்லை. இடது கையில் கிளாஸைப் பிடித்து குடித்துக்கொண்டே அந்த அரை உடல் கேட்டது : “என்னை இப்படிப் பார்க்க உனக்குப் பயமாக இல்லையா?” 

நான் இப்போது பயப்படவில்லை. இந்த உருவம் பேய்பிசாசு அல்ல என்று எனக்கு நிச்சயமாகிவிட்ட சாதாரண மனித ஜன்மம்; ஆனாப் வெள்ளைப் பிறப்பு.

“நீ கொடுத்தாயே, சின்ன சீசாவிலிருந்து மருந்து. அது மார் வலிக்கு-” 

அதற்கு சிகரெட் பற்றவைத்துக் கொடுத்தேன். 

“ஆடை எல்லாம் அணிந்திருந்தபோது நான் எப்படி இருந்தேன்?’ 

”உம்,” என்ற முனகலில் பொருள்வைத்துப் பதில் சொன்னேன். “இப்போது?” 

பதிலைவேண்டுகிற கேள்வி அல்ல அது; பதில் அந்த உருவிலேயே இருந்தது,இடது கண்ணில் நீர் பிறந்தது; வலது பள்ளத்தின் அடியில் நீர் ஊற்று இருக்கலாம். தென்படவில்லை. அந்த உருவம்- பாவம், மனிதன் என்று சொல்ல முடியாவிட்டாலும். அரைமனிதன் என்பதால் என்ன நஷ்டம்? அரைமனிதன் வருந்தினான். 

”நான் பிறவிலேயே இப்படி இருந்தேன் என்று நினைக்கிறாயா?”

அவனை அறியவேண்டும் என்று ஆவல் எனக்கும் அதிகமாய் இருந்தது. 

“நான் குழந்தையாக இருக்கும்போது ரொம்ப அழகாய் இருந்தேன். என் தாயாரின் குழந்தைகளில் நான் தான் ரொம்ப அழகு என்று பெருமைப்படுவாள் இப்போது அவள் என்னைப்பார்த்தால் … நல்லவேளை அவள் போய்விட்டாள். அவள் ஆன்மா சாந்தி அடைவதாக!” 

அரைமனிதன் பெரிய மூச்சு ஒன்றைச் சீறினான் அதாவது, மூக்கு இருக்கவேண்டிய இடத்திலிருந்த துவாரத்திலிலிருந்து ‘புஸ்ஸ்’ என்று சத்தம் வந்தது 

“எத்தனை பெண்கள் என் காதலைவேண்டி என் பின்னால் அலைந்தார்கள்? எத்தனை பெண்களுடன் நான் காதல் நாடகம் – சட்டத்திற்கு விரோதமாக நடத்தினேன்!இப்போது மேரிகூட என்னைப்பார்க்கப் பயப்படுவாள்…” 

“மேரி யார்?” என்றேன்; என் ஆத்திரம் எனக்கு அவனுடைய இடது கண் ஒரு முழு சூரியனைப் போல பிரகாசித்தது. 

“மேரி என் கண்மணி என் காதலி. என் உயர்வான பாதி! லண்டனிலுள்ள ஒரு பெரிய ஹோட்டலில் நடன விருந்து நடக்கும்போது அவளைச் சந்தித்தேன். கன்னியர் கும்பலில் அவளிடம் என் மனம் ஏனோ சென்றது. டான்ஸுக்கு அவளை அழைத்தேன் … அந்த டான்ஸை நினைத்தாலே — ஆஹா! எவ்வளவோ பெண்களுடன் ஆடியிருக்கிறேன்; ஆனால் அவள் எவ்வளவு ஹிதமாக இருந்தாள்! மறுநாள் விருந்தாளியாக அவளால் அழைக்கப்பட்டேன்.. 

“தனியாகவா இருந்தாள்?” 

“இல்லை. தகப்பனாருடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தாள். விருந்தின்போது அவளுடைய தகப்பனாரிடம் என் நிலைமையைச் சொல்லி, அவளை மணக்க விரும்புவதையும் ஜாடையாகிச் சொன்னேன், நல்ல மனுஷர், ஒப்புக்கொண்டார். பிறகு அவளிடம் தனிமை யில் என் காதலை விவரித்து விவாகத்தைப் பிரேரேபித் தேன்… அப்போது அவளுடைய முகம் எப்படி சிவந்தது! ரோஜா, ரோஜா!” 

புனா நெருங்கிக்கொண்டிருந்தது. அரை மனிதனின் காதல் காப்பியத்தைக் கேட்டுக்கொண்டிருக்க எனக்கு நேரம் இல்லை. கதையின் முடிவுக்கு அவனைத் துரத்தினேன். 

“நீ எப்படி இப்படி மாறினாய்?” 

அரை மனிதன் பரிதாபமாய்ச் சொன்னான்! “மேரி என்னை இனி திரும்பியும் பார்க்கமாட்டாள். நான் எந்தப் பெண்ணுடனும் டான்ஸ்கூட செய்யமுடியாது! ஐயோ, நான் செத்திருக்கக் கூடாதா?…” 

“மனைவியின் காதல் உனக்கு ஆறுதல் அளிக்கும்….” 

“யார் கண்டார்? அவளுக்கோ இளம்பருவம் நான் என்னை மனிதன் என்று யாரும்கூற முடியாது… எனக்கு யாணமாகி மூன்று வருஷங்கள்தான் ஆகின்றன. என்னால் அவளுக்கு இரண்டுமாதங்கூட சுகம் இல்லை… அந்த பாழும் ஜெர்மன் எருமைகள் எதற்காகவோ சண்டை ஆரம்பித்து விட்டார்கள்; அவர்கள் நாசமாய்ப் போக! எனக்கு யுத்தத்தில் சேருவதற்கு இஷ்டமில்லை; ஆனால் சர்க்காரின் கட்டளையை யாரால் மீறமுடியும்? ஜெர்மானியனோடு சண்டைபோட்டு உயிர்விட்டாலும் கௌரவமுண்டு. இந்த மஞ்சள் பேய்களுடன், குள்ள ஜப்பானியர்களுடன் சண்டைபோட என்னை அனுப்பி விட்டார்கள், அஸ்ஸாமில் ஜாப்கள் குண்டுபோட்டார் கள் அல்லவா? அப்போதுதான் எனக்கு உடம்பெல்லாம் காயம் ஒரு கையும், ஒருகாலும் போச்சு ஒரு கண்ணில் கண்ணடி புகுந்தது; மூக்கு காணாமல் போய்விட்டது. 

இதோ இந்த மார்றைப்பார், ஒருபக்கம் சரிந்துள்ள தல்லவா? அடிக்கடி சகிக்க முடியாதபடி வலி எடுக்கிறது அதற்கு மருந்து என் மருண்டையைப் பார்…? 

பார்த்தேன். ஒட்டு போட்டாற்போலத் தோன்றி யது, இரு பிளவாக. 

“என் மூளைகூட சரியாக வேலை செய்வதில்லை அதற்காகவும் அடிக்கடி மருந்து சாப்பிடுகிறேன்… இவ்வளவும் போனபிறகு உயிர்மாத்திரம் ஏன் தப்பியதோ தெரியவில்லை. ஆஸ்பத்திரியில் ஒருவருஷம் கிடந்தேன்; என்னைக் கொன்றுவிடும்படி டாக்டர்களைக் கஞ்சி னேன். என் மூளை மிகவும் உயர்ந்ததாம்; கைகால், எதுபோனாலும் அது நாட்டுக்கு உபயோகப்படுமாம். அதற்காக என் உயிரை உடலுடன் ஒட்டிவைத்துவிட்டார். கள். பாவிகள்! ஆனால் மூளை சரியாக இல்லையே!” 

அரைமனிதன் புலம்பல் எனக்கு இரக்கம் உண்டாக்கி யது. சிறிது கழித்து கேட்டேன்: நான் முதலில் பார்க் கும்போது நீ முழுமனிதன்போல இருந்தாயே!” 

“அந்த கண் ராவியைப் பார்க்கிறாயா? இதோ, இந்த கோட்டையும் பான்டையும் எடுத்துப்பார்…” 

அந்த இரண்டிற்கும் கீழே கட்டையால் செய்யப்பட்ட ஒரு கை, ஒரு கால் பூட்டுடன்! -, ஒரு போலி மூக்கு மூக்குக்கண்ணாடி, சின்ன மருந்து சீசா… இவ்வளவையும் தரித்துக்கொண்டால் அவன் முழுமனிதன்போலக் காட்சி அளிப்பான்! 

எனக்கு ஒரே திகைப்பு : நீடிக்கவிட அவன் விரும்ப வில்லை. போலும், 

“பத்து நிமிஷத்தில் புனா வந்துவிடும். நீ கொஞ்சம் ஜன்னலுக்கு வெளியில் பார்த்துக்கொண்டு இரேன்”

என் தலையை வெளியே அனுப்பினேன். சுமார் பத்து நிமிஷங்கள் நான் உள்ளே பார்க்கவே இல்லை. 

”சரி!” என்றான் அவன். திரும்பினேன். கைகால் மூக்கு எல்லாவற்றையும் கோர்த்துத்தொண்டு, முன் போலவே முழுமையாகத் தோற்றம் அளித்தான் அவன். அந்தப் போலி மூக்குதான் எவ்வளவு அழகாய் பொருந்தி யிருந்தது! ‘பொம்மைபோல்’ அல்ல, பொம்மைதான் பாவம், அவன் உடல் இப்போது கனமாய்த்தான் இருக்கும்! 

அவனுடைய இடது கையில் கைத்துப்பாக்கியிருந்தது: அதை என்னிடம் காட்டிக்கூறினான்: “சகிக்க முடிந்த வரையில் சகித்துப் பார்ப்பேன்; கடைசியில் இந்த கைத் துப்பாக்கி இருக்கவே இருக்கிறது. மாய்த்துக்கொண்டு விடுவேன்!” 

அவனுடைய பேச்சில் வீரத்தன்மை பீறிட்டது. 

புனா ஸ்டேஷனில் ரயில் நின்றது. அவன் தொப்பி யைத் தலைமீது வைத்துக்கொண்டான். போலியான வலது கரத்தை கால் சட்டையில் புகுத்தினான். இடது கையில் ‘வாக்கிங் ஸ்டிக்கை’ எடுத்துக்கொண்டு கம்பீர மாக, ஆனால் சற்று சிரமத்துடன் கதவருகில் சென்றான். பக்கத்து வண்டியில் உட்கார்ந்திருந்த நண்பன் கைலாகு கொடுத்து கீழே இறக்க இருவரும் புறப்பட்டனர் 

என் நண்பனே, நான் வருகிறேன்” என்று என்னி டம் விடை பெற்றுக்கொண்டு டக்டக்’ என்று அவன் நடந்ததைப் பார்த்தால், அவன் அரை மனிதன் என்று எவனாலும் கண்டு கொள்ள முடியாது. 

அவன் நடந்து செல்வதை பிளந்த வாயுடன் பார்த் துக்கொண்டிருந்தேன். வெள்ளைக்காரர்கள் கெட்டிக் காரர்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அரைமனிதனை முழுமனிதனாகத் தோன்றச் செய்யும் சாமர்த்தியமும், அறிவும் உனக்கு உண்டா? வெள்ளைக்காரன், வெள்ளைக் காரன்தான். 

ஆகையால், வெள்ளையரின் ஈடும் இணையும் அற்ற அறிவுக்கு என் வணக்கம் செலுத்துகிறேன். 

– முல்லை கதைகள், 1945ல் முல்லை இதழில் வெளிவந்த கதைகள், தொகுத்தவர்: முல்லை பி.எல்.முத்தையா, முதற் பதிப்பு: செப்டம்பர் 1998, முல்லை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *