அரியகணம்
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 10, 2026
பார்வையிட்டோர்: 91
(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இப்பத்தான் நடந்தது மாதிரி… புத்தம் புதியதாக அப்படியே ஞாபகத்தில் பதிந்திருக்கிறது. புரட்டிய பக்கங்கள் கண்ணில் மோதுகிற மாதிரி… மனசில் நிற்கிற அந்த நாள்.
‘அது நடந்து… பன்னிரெண்டு வருஷமாயிற்று’ என்பதை நினைக்கிறபோது, அவருள் வந்து கனக்கிற ஆயாசம்.
‘தனது வாழ்வும், கடந்த காலமும் அடையாளமற்ற நிலையிலேயே கரைந்து மாயமாகிவிட்டதே’ என்கிற சோர்வுணர்வுக்காளான சுந்தரவதனம். அவர் முகவாட்டத்தில் அவரது மனவோட்டத்தின் நிழலிருட்டு.
யாரிடமும் பேசப் பிரியமில்லை. ‘ஹலோ’ சொல்கிற முகங்களுக்கு, ஒருவித அசட்டுமுகச்சலனமே பதிலாகிறது.
“என்ன நல்லாயிருக்கீங்களா?” என்ற கேள்விக்கு “இருக்கேன்” என்பதுதான் பதில்.
“என்ன டல்லாயிருக்கீக…?” சகபத்திரிகையாளரின் அக்கறையான விசாரிப்புகள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லே. நா நல்லாத்தானேயிருக்கேன்.” யந்திரத்தனமான சொற்களின் சமாளிப்பு.
கூட்டம், ஒன்றும் இரண்டுமாக தலைகள் வருகிறது. அரசாங்க விருது பெற்ற எழுத்தாளருக்குப் பாராட்டு விழா. மேடையலங்காரத்தில் இன்னும் ஈடுபடுகிற ஆட்கள். வருகிற பார்வையாளர்களையும், பத்திரிகையாளர்களையும் உபசரிக்கிற அக்கறை. சகபத்திரிகையாளர்கள் பரஸ்பர விசாரிப்புகளில் உற்சாகம் பெற்றுக் கொள்கிற மாலைப் பொழுது. சுந்தரவதனம் என்கிற பெயர் நிறையப் பேருக்குத் தெரியாது. ஆனால் இவரைத் தெரியாதவர்கள் யாரும் பத்திரிகை உலகில் இருக்க மாட்டார்கள். அவர்கள் அனைவரும் அறிந்திருக்கிற பெயர், ஆர்.எஸ்.வி. ஏகப்பட்ட வருஷ அனுபவம், பத்திரிகையில்.
ஆர்.எஸ்.வி. என்றால்… பத்திரிகை உலகம் முழுக்க அறியும். பன்னீர்ப் புகையிலை போடுகிற அறுபது வயதுக்காரரிலிருந்து, யமகாவில் வந்திறங்கி, பில்டர் சிகரெட்டை நசுக்குகிற இருபது வயதுக்காரர் வரைக்கும் அத்துபடி.
ரொம்ப ரொம்ப பிரபலமான, பாரம்பர்ய பெருமைகள் நிறைந்த – வார இதழின் சப்-எடிட்டர். துணை ஆசிரியர்.
‘பிரஸ்’ என்ற அட்டை தொங்க விடப்பட்ட பகுதியில் உட்கார்ந்திருக்கிற ஆர்.எஸ்.வி. விருதுபெற்ற எழுத்தாளர் வருகைக்குக் காத்திருக்கிற கூட்டத்துடன் அவரும் காத்திருக்கிறார். இந்த விழாவின் நிகழ்வுகளைக் கவர்பண்ணுவதாக இவருக்கு அசைன்மெண்ட்.
ஓய்வு பெற்ற நீதிபதி பாராட்டுகிறார். பல விருதுகள் பெற்ற எழுத்தாளர் சிங்கம் பாராட்டுகிறார். திரை உலகப் பிரபலங்கள் நால்வரின் வாழ்த்துரைகள்.
இறைவணக்கம் பாடுவதற்கான தயாரிப்புடனும், முழுநிறை மேக்கப்புடனும், லிஃப்ஸ்டிக்கின் சிவந்த உதடுகளுடன் காத்திருக்கிற நான்கு பெண்கள். மறந்து விடாமலிருப்பதற்காக… பாடல் வரிகளை மனனம் செய்து கொண்டும், விடாமல் முணுமுணுத்துக் கொண்டுமிருக்கிற அவர்கள்.
“ஆர்.எஸ்.வி. நல்லாயிருக்கீங்களா?”
“ஓ! இருக்கேனே…”
“ஃபங்ஷன் ஆரம்பிக்க… இன்னும் டயமாகும் போலிருக்கே வாங்க… வெளியே போய்… டீ சாப்புட்டு வரலாமே.”
“இங்கேயே டீ தர்றாங்களே…”
“சர்க்கரை போட்ட ட்ரம் டீதான். வாங்க… வெளியே காலார நடந்துபோய், வித் அவுட் சுகர் டீ சாப்புட்டுட்டு வரலாம்.”
கூப்பிடுகிறவரும், இவர் வயதுதான். வேறொரு வார இதழில் துணை ஆசிரியர். ஏகப்பட்ட வருஷங்கள் அனுபவம்.
“சரி, வாங்க போவோம்.”
“என்ன… இந்த இஷ்யூவில ‘குசேலன்’ படத்தோட மேட்டரும் வருதா?”
“அது… பழைய செய்தியாகலியா?”
“பழையதுதான்… அதுக்குள்ளேயே புதுத் தகவல்கள், மேக்கப் ரகசியங்கள்…”
“நயன்தாரா மேட்டர் ஏதாச்சும் வருதா?”
“ம்… வருது. அதோட… மர்மயோகி சம்பந்தப்பட்ட மேட்டர்ஸும் வருது.’
கத்தரிக்கப்பட்ட காகிதத்தில் ரெண்டு சமோசா வைத்து நீட்டுகிற டீக்கடைக்காரர்,
ஆர்.எஸ்.வி.தயங்குகிறார்.
“ஏன் சார்?”
“சமோசாவுக்குள்ளே உருளைக்கிழங்கா… பல்லாரியா?”
“பல்லாரி வெங்காயம்தான். சாப்புடுங்க சார். ஒண்ணும் செய்யாது.”
அழைத்துவந்த சபரி சாரின் தைர்யமூட்டல். வாங்கிப் பிய்க்கிற ஆர்.எஸ்.வி.
“ரெண்டு டீ.”
“சுகர்…?”
“வித் அவுட் சுகர்.”
சபரி ஆர்டர் கொடுத்து முடித்துவிட்டு, இவரை நோக்கித் திரும்புகிறார்.
“என்ன சார், முந்தியெல்லாம் உங்க பத்திரிகையிலே அழுத்தமான ஷார்ட் ஸ்டோரிஸ் வரும். இப்பவெல்லாம் ஏனோ தானோன்னு… உப்புச்சப்பில்லாத ஷார்ட் ஸ்டோரியா வருதே…”
“அதுமட்டுமில்லே சபரி சார், முன்னாடியெல்லாம் ஒவ்வொரு இஷ்யூவிலேயும் நாலு ஷார்ட் ஸ்டோரிஸ் வரும், நாலும் நாலு தரத்துலே இருக்கும். அதுலே ஒண்ணு கிளாஸிகலா இருக்கும்…”
“ஆமாமா… இப்ப ஒண்ணே ஒண்ணு வருது. அதுவும் உவர் மண்ணாயிருக்கே.’
“என்ன பண்ணச் சொல்றீக? புது நிர்வாகம். புதுசுபுதுசா ஆர்டர்ஸ். அமெரிக்காவுலே படிச்ச ஜர்னலிஸத்தை… அப்படியே நம்மூர்லே அப்ளை பண்றாங்க. நம்ம நாடு… நம்ம கல்சுரல்… நம்ம மண்ணோட மரபு… நம்ம ரசனை… இதைப்பத்தியெல்லாம் அமெரிக்காவுலே ஜர்னலிசம் படிச்சவருக்கு என்ன தெரியும்?”
“ஒண்ணும் தெரியாதவன் கையிலே ஒலகம் இருக்கு. மண்ணு, மரபு தெரிஞ்ச நம்மகிட்டே என்ன இருக்கு?”
சபரி சாரின் பேச்சும், சலிப்பும், ஆர்.எஸ்.வி.க்குள் நிரம்பியிருந்த ஆயாசத்தை அதிகப்படுத்தியது. கிளறிவிட்டு, கிண்டியெடுத்து, நுரை பெருக்கியது.
நம்ம வாழ்வும், கடந்துபோன நாளும் வீண் விரையமாகவே கரைஞ்சு போச்சோ…? எவ்விதப் பதிவுகளுமில்லாமல், வெறும் பத்திரிகையாளனாகவே இருந்து கழிந்துவிட்டோமோ? மகா பெரிய அச்சு யந்திரத்தின் சிறிய நட்டுமாதிரி… மகா பெரிய பத்திரிகையின் ஒரு சின்னப் புள்ளியாக இருந்து மறைந்து விட்டோமோ?
இண்டர்நெட்டைத் தட்டி, அதில் வருகிற தகவல்களை இறக்கி. உல்டா பண்ணி… பொருளாதார ஆய்வுக் கட்டுரைகளும்… உலக அரசியல் வரலாற்று நூல்களும் எழுதி லட்சம் லட்சமாக சம்பாதிக்கத் தெரிந்த சகபத்திரிகையாளர்கள் போலவும் இல்லாமல்…
மரணத்திற்குப்பிறகும், பேரனின் பேரன் காலத்திலும் பேசப்படத்தக்க இலக்கியம் படைத்து, அரசாங்க விருதுகளும், சலுகைகளும் பெறுகிற எழுத்தாளர்கள் போலவும் வாழாமல்-
வாராந்திர நிகழ்வுகளை செய்திகளாக எழுதுகிற.. சிறுகதை, கவிதைகளைத் தேர்வு செய்து, டி.டி.பி. செக்ஷனுக்கு அனுப்புகிற… வெறும் பத்திரிகையாளனாகவே சம்பளத்துக்கு மாரடித்து ஓய்ந்து விட்டோமோ?…
இந்த ஆயாசம், இன்றைக்குத்தான் இவரை மிகவும் பிடித்தாட்டுகிறது. பீடித்த நோயின் நேரடித்தாக்குதலைப் போல, அவரை அலைக்கழிக்கிறது. அச்சுறுத்துகிறது.
அதுவும்… பனிரெண்டே வருஷங்களில் வளர்ச்சிபெற்று, உச்சம் தொட்டு, அரசு விருதுகள் பெற்று, பாராட்டு பெற இருக்கிற இந்த எழுத்தாளரின் விழா நாளில்… அந்த ஆயாசம், அவரை மிகவும் உக்கிரமமாகப் பீடிக்கிறது.
…பன்னிரண்டு வருஷமாயிற்று. இப்பத்தான் நடந்த மாதிரியிருக்கிறது.
அன்றைக்கு… காலையில் அவரது சேரில் வந்து உட்கார்ந்திருந்த சுந்தரவதனம். டெஸ்பாட்ச் பையன் கற்றையாக வந்து வைத்துவிட்டுப் போகிறான்.
எல்லாமே… கவர்கள், கர்ப்பிணிப் பெண் போன்று வயிறு பெருத்த கவர்கள். சிறுகதைகள் ஏதேதோ நகரங்களிலிருந்தும், தொலைதூர மாநிலங்களிலிருந்தும் வந்திருக்கிற சிறுகதைகள்.
எல்லாவற்றையும் பதிவு செய்தாக வேண்டும். பேரேடு மாதிரியான பெரிய நோட்டை எடுத்து முன் வைத்து விரித்தார். சிறுகதையின் தலைப்பு – சிறுகதையாளர் – அவரது முகவரி என்று கலம் பிரிக்கப்பட்ட நோட்டு.
அஞ்சலில் வந்திருந்த எல்லாச் சிறுகதைகளையும் உடைத்து, விலக மறுத்து அடம்பிடிக்கிற மடிப்புகளை நீவி நேர் செய்து… வருகை நோட்டில் பதிவு செய்து விட்டு… ஃபைலில் போடுகிறார்.
கடைசிக் கவர்… ரொம்ப வித்தியாசமாக – பாமரத் தனமாக இருந்தது. சாதாரண செய்திக் காகிதத்தில் செய்யப்பட்ட கவர். ஒட்டிய பசை, கம்மஞ் சோறு என்பது உலர்ந்த சுரசுரப்பில் தெரிகிறது. செய்திக் காகிதத்தில் துண்டு வெள்ளைக் காகிதம் ஒட்டி, அதில் எழுதப்பட்ட முகவரி.
கவர் வாங்க முடியாத வக்கற்ற ஆள். கவர்கூட வாங்குவதற்கு கிடைக்காத கிராமம். இதை யூகிக்க முடிகிறது.
அலட்சியமும் ஏளனமும், இளக்காரமுமான எண்ணத்துடன் ஓர் ஆர்வக் குறுகுறுப்பு.
‘கற்பனைக்கெட்டாத அளவுக்கு பாமரத்தனமானதாக… கேனைத்தனமானதாக இருக்குமோ? அப்படி என்னதான் இருக்கும்?’
உடைக்கிறார். உள்ளே… கற்றையான காகித மடிப்பு. மேலும் ஆச்சரியம். மூச்சு முட்டுகிற மலைப்பு.
உள்ளே –
வெள்ளைக் காகிதம் கூட இல்லை. அரசியல் கட்சியின் சுவரொட்டித்தாள்களை… கிழித்து, வடிவமைக்கப்பட்டு… அதன் பின்பகுதியில் எழுதப்பட்டிருக்கிற சிறுகதை. சுவரொட்டியின் அச்செழுத்தின் நிழல், மறுபக்கம் கறை நிழலாகத் தெரிகிறது. அதன் மேல் ஓடும் நீலமை யெழுத்துக்கள்.
கவருக்கு வக்கத்தவன் மட்டுமில்லே.. ஒயிட் பேப்பருக்கும் கதியத்தவன் போலிருக்கு…
மடிப்புகளின் பிடிவாதத்தை நீவிவிட்டு, நேர் செய்து, சமனப்படுத்தி…
‘முதல்லே வாசிச்சுப் பார்த்துட்டு… குப்பைக் கூடையிலே டிஸ்போஸ் பண்ணிரலாம்’ என்ற முன் முடிவோடு… வாசிக்க ஆரம்பித்த சுந்தரவதனம்.
“வண்டிக்கார நாயக்கரின் மனசு, அவர் வசத்தில் இல்லை. முள்குமிக்குள் சிக்கிய கல்லெறிப்பட்ட குஞ்சாக திசையற்றலைகிற மனசு.
சுந்தரவதனத்தையே சுழற்றியடிக்கிற வாக்கியங்கள். புதிய மொழி. புதிய வார்த்தைப் பிரயோகிப்பு… புதிய உவமைகள்… புதிய நடை… புதிய கோணம். எல்லாமே ‘புதிய’ மயம்.
வாசித்து முடிக்கிறபோது, அவர், அவராக இல்லை. வண்டிக்கார நாயக்கராகியிருந்தார். வண்டிக்கார நாயக்கரிடமிருந்து மீள்வதற்கே… ஒரு யத்தனிப்பு தேவைப்பட்டது.
அவர் பிரமிப்பின் உச்சத்தில் திகைத்துக் கிடந்தார். ரொம்ப நேரம், அந்த மலைப்பிலிருந்து விடுபட முடியவில்லை…
நேராக…எடிட்டர் அறைக்குள் பாய்ந்தார். லேசாகத் தள்ளினார்.
“சார், வரலாமா?”
“யாரு? ஆர்.எஸ்.வி. யா? வாங்க.’
“சார்… ஓர் அதிசயம்.”
“சொல்லுங்க…”
“காணக்கிடைக்காத மூலிகைமாதிரி… அபூர்வமான ஷார்ட் ஸ்டோரி…சார்.”
“அனுபவப்பட்ட ஆளு, நீங்க… ஏகப்பட்ட வருஷ சர்வீஸ். நீங்களே அபூர்வம்னு சொல்றப்ப… அதுக்கு அப்பீலே கிடையாது… ‘கிளாஸிகலான கதை’ன்னு போட்டுரலாமா?”
“போடலாம் சார்… ஆனா…”
திகைத்து இழுக்கிற ஆர்.எஸ்.வி.
“சொல்லுங்க… என்ன ஆனா?”
“அதைவிடவும் கூடுதலான தகுதியுள்ள சப்ஜெக்ட்.”
சற்றே யோசிக்கிற ஆசிரியர். இவரை தீர்க்கமாகப் பார்க்கிறார். சலனமற்ற உறுதியில் நிலைத்திருக்கிற இவரது மனத்தீவிரம்.
“ம்ம்… அப்போ… நம்ம ‘முத்திரைக் கதை’ ன்னு ஸ்பெஷல் சீல் குத்திருங்க…”
“ஓ.கே… சார்… ரொம்ப தேங்க்ஸ்.”
“எதுக்கு தேங்க்ஸ்?”
“என்னோட தேர்வுக்கு, வாசிச்சுப் பார்க்காமலேயே ஓகே சொன்ன உங்க நம்பிக்கைக்கு.”
“உங்க அனுபவம்… அப்படிப்பட்டது ஆர்.எஸ்.வி.
எழுதிய முதல் சிறுகதையே… தமிழகத்தின் பிரபலமான வார இதழில் – பாரம்பர்யப் பெருமைமிக்க பத்திரிகையில் – முத்திரைப்பரிசுக்குரிய சிறுகதையாகத் தேர்வு செய்து, வாதாடி பிரசுரித்து வெளிச்சம் தந்தவர், ஆர்.எஸ்.வி.
அப்படி வெளிச்சம் பெற்று, வளர்ச்சியின் உச்சம் தொட்டு, அரசு விருதுகள் பெற்று… இன்றைக்குப் பாராட்டு பெற இருக்கிற இந்த எழுத்தாளர்தான்… அந்த எழுத்தாளர்.
அவர், பன்னிரெண்டு வருஷத்தில் நாடறிந்த ஒளிமிக்க எழுத்தாளர். இன்றைக்கும், செய்தி சேகரிக்க வந்து காத்திருக்கிற பத்திரிகையாளராக… ஆர்.எஸ்.வி. இடம் மாறாத… வளராத… அதே இடம். அதே களம்.
‘நாம் விரையமாயிட்டோமா… வாழ்நாளை வீணாக்கிட்டோமோ… அடையாளமற்ற சம்பள மாரடிப்பாக நாட்களைப் பாழடிச்சிட்டோமோ…’
அவருள் அலைக்கழிக்கிற கவலைகள். அரித்தெடுக்கிற ஆயாசம். மனச்சோர்வுக்குள் புதைக்கிற சோகம்.
டீயைக் குடித்து முடித்து விட்டு… பிளாஸ்டிக் கப்பை கூடையில் போடுகிற ஆர்.எஸ்.வி. சபரி சார்… கணக்கு முடித்து விட்டுத் திரும்புகிறார்.
“என்ன சார்… இந்த எழுத்தாளர், உங்களாலே வெளிச்சம் பெற்ற ஆளு. அந்த விசுவாசம்… மிச்சம் மீதியா ஏதாச்சும் இருக்கா?”
அவர் கேட்கிற தோரணையே… ‘இல்லை’ என்ற பதிலை எதிர்பார்ப்பது போலிருந்தது. ஆனால், உண்மையில்…
‘இல்லை’ என்ற பதில் இல்லை. ‘உண்டு’ என்ற பதில்தான். விசுவாசம் குறையாத எழுத்தாளர். எந்த இடத்தில், எந்தச் சூழலில், சந்தித்துக் கொண்டாலும்… பாசத்துடன் கையைப் பற்றிக் கொள்வார்.
அந்நியத்தன்மை துளியுமில்லாமல்… சகஜமான பாச உளத்துடன்… உரிமையான சுமுகத்துடன் – கையைப் பற்றிக் கொண்டு… குலுக்குவார்.
“அன்னிக்குமட்டும்… அந்தக் கணத்துலே… என்னோட காகிதத்தையே அலட்சியமா குப்பைக் கூடையிலே போட்டிருந்தா… நா, இன்னிக்குள்ள நா இல்லே. கிராமத்துக் கூடையிலே குப்பையாகக்கூட அல்ல… வெறும் கந்தல் கூளமாகக் கெடப்பேன். நா இன்னைக்கு… எழுத்தாளன், இலக்கியவாதி… இலக்கியச் சூரியன்… ஞான விளக்கு… எல்லாமே ஆதிகாரணம், நீங்கதான். இது நீங்க தந்த வாழ்வு.”
“எண்ணெய்… திரி… எல்லாம், உங்களுக்குள்ளே இருக்கு. சுடராக நிமிர்றீக…”
“இருந்தாலும்… நீங்க ஏற்றி வைக்கலேன்னா… சுடராகப் பற்ற வைக்கலேன்னா… எண்ணெய், திரியெல்லாம் ஒண்ணுமில்லாமப் போயிரும்லே?”
நெகிழ்ச்சியும் வெளிப்படையுமாகப் பேசுகிற எழுத்தாளர். விசுவாசம் குன்றாத விளக்கு. நன்றியுள்ள ஆத்மா. சந்திக்கும் தருணத்திலெல்லாம்… சுற்றிலும் எத்தனை பெரிய வி.ஐ.பி.கள் நின்றாலும்… ஈகோ இல்லாமல், பந்தா இல்லாமல்… வெளிப்படையாக விசுவாசம் காட்டி நெகிழ்கிற அந்த இதயம்.
இவருக்குள் பத்திரிகைப் பணியில் பெருமிதம் ஏற்படுத்துகிற இனிய கணம், இது. தான் அடையாள மற்றுப்போய் விட்டாலும்… சில நல்ல படைப்பாளிகளுக்கு அடையாளம் தந்தது, தனது பணி. அடையாளம் பெற்றவர்களின் அன்பையும், நன்றியையும் பெற்றுத் தந்திருக்கிற பணி.
“என்ன சார்… நா கேட்டேனே…” சபரிதான் விடாமல் கேட்கிறார். பெருமையிலும் பூரிப்பிலும் மலர்ந்து விரிகிற இவரது முகம்.
“இந்த ரைட்டர் ரொம்ப விசுவாசமான ஆளு. விசுவாசத்தை வெளிக்காட்ட கூச்சப்படாத ஆளு. நாலு பேரு கூடியிருக்குற சமயத்துலேயும், விசுவாசத்தை வெளிப்படையா சொல்ற ஆளு… தங்கமான ஆளு…”
“பரவாலே சார்… இந்தக் காலத்துலே இந்த மாதிரி ரைட்டரா? ஆச்சரியம்தான். பாப்போமே… இன்னைக்கு ஏற்புரையிலே உங்க பேரைச் சொல்றாரான்னு பாக்கத்தானே போறோம்?”
இறை வணக்கத்துடன், துவங்கிய விழாக் கூட்டம். தமிழ் வணக்கத்தை இசைத்தட்டு பாடியது. வாழ்த்துரைகள்… பாராட்டுரைகள்… சால்வையணிவிப்புகள்… நினைவுப் பரிசளிப்புகள்…
‘கூட்டம் கலைவதற்கு முன்பே…’ என்ற முன்னுரையுடன் சொல்லப்பட்ட நன்றியுரைக்குப் பிறகு… எழுத்தாளரின் கம்பீரமான ஏற்புரை.
மேடைக்கேற்ற ராஜதோரணை, கம்பீரமான ஆண்மைக்குரல். இருபுறமும் முகம் காட்டிக் கொள்கிற சமயோசிதம். தமிழைப் புகழ்ந்து… இலக்கியம் பேசி… ஏதோ ஒரு வகையான இலக்கியப் போக்கை நார் நாராகக் கிழித்து தொங்கப் போட்டு விட்டு… எல்லோருக்கும் இனிமைக் குரலில் நன்றி கூறிவிட்டு…
சபரி… இவரைப் பார்க்க… ஆர். எஸ்.வி. தவியாய்த் தவிக்க… தான் உச்சரிக்கப்பட இருக்கிற கணத்தை எதிர்பார்ப்பின் துடிப்பு.
“என்னையீன்ற தாயைப் போன்றதொரு பாசமிகு பேருரு ஒன்று உண்டு. அதற்கு நான் நன்றி சொல்லாமல் போனால்… நான் மனிதனேயல்ல.
“கிராமத்தின் இண்டு இடுக்கின் கீறலுக்குள் சிக்கிக் கிடந்தவன்… நான் அங்கிருந்து… மகாமட்டரகமான காகிதத்தில், கதை எழுதி… மட்டரகமான கவரில் போட்டு அனுப்பி வைத்தேன். அக்கவரையே குப்பைக் கூடையில் போட்டிருந்தால்… யாரையும் குற்றம் சொல்ல முடியாது…’
சபரியை ஓரப்பார்வை பார்க்கிற ஆர்.எஸ்.வி. அவரது விழியோரத்துளிகளில் மனப்பரவசம். தன் பெயர் நாடறிய, விழாப் பெருங்கூட்டத்தில் உச்சரிக்கப்பட இருக்கிற கணம்.
“அப்படித்தரமற்ற காகிதத்தில் வந்த கதையில், வாழ்வின் தகிப்பு இருந்தது. ஆகவே… அந்தக் கதையின் அருமை அறிந்து… உணர்ந்து… எனது முதல் கதையையே முத்திரைக் கதையென…”
ஆர்.எஸ்.வி.யின் பார்வையில் ஒரு கம்பீரம். சபரியைப் பார்த்து கண்சிமிட்டுகிற ஆர்.எஸ்.வி… “பிரசுரித்து என்னை வெளிச்சப்படுத்திய பாரம்பர்யப் பெருமை மிகு அந்த வார இதழின் ஆசிரியரைப்பற்றி நன்றியோடு இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
அவர்தான், இந்த ஞான விளக்கை ஏற்றி வைத்தவர். அவர்தான் இலக்கியச் சுடரை நிமிர வைத்தவர். அவருக்கு எனது நன்றிகள்…”
ஒட்டுமொத்த சபையே கைதட்டி ஆரவாரிக்க… அந்த மண்டபமே அதிர்வலைகளில் நடுங்கியது. சுழற்றி யெறியப்பட்ட ஆர்.எஸ்.வி.யின் முகக் கறுப்பு. அவமான அவஸ்தை.
சபரி, ஆர்.எஸ்.வி.யைப் பார்க்க… அவர் வேறு எங்கோ பார்க்கிறார். அவருள் ஏமாற்றக் கற்றையின் தாக்குதல்கள். முகம் கறுத்துப் போயிற்று.
ஆயாசம், அவரை நிலைகுலைய வைக்கிறது. அவர், அவராக இல்லை. மனசளவில் பிரேதமாகி உயிரற்ற நடையில் வெளியேறுகிற ஆர்.எஸ்.வி. எனும் சுந்தரவதனம் என்கிற அச்சுயந்திரம்.
– 2008, கலைமகள் தீபாவளி மலர்.
– அக்னி வாசம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2009,கங்கை புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஒளிரும் பிறை
மா.வீ.தியாகராசன்
September 24, 2026
தெய்வச்செயல்!
ஜெ.ஜெயகுமார்
September 24, 2026
மரம்
மேலாண்மை பொன்னுச்சாமி
September 21, 2026
