மனத்தாய்மை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2026
பார்வையிட்டோர்: 67 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொழுதடைந்து இருட்டி விட்டது. இவன் செம்மறிகளை கருங்கல் கிடங்குத் தண்ணீருக்குள் இறங்கி நனைய விட்டு, நீந்த விட்டு குடிக்கவிட்டு… பற்றிக் கொண்டுவந்து திறந்தவெளிப் படலுக்குள் அடைத்து, படல் கதவை இழுத்து மாட்டும்போதே இருட்டிவிட்டது. குட்டிகளை அடைத்து வைக்கிற ஆட்டுக்கூடு. கும்பாவைக் குப்புறக் கவிழ்த்தினமாதிரி, பெரியகூடு. அதைத் தூக்கினான், விடுபட்ட குட்டிகள் “ம்ஏஏங்க… ம்ம்ம்ஏஏஏங்ங்க்” கென்று கத்தலும் கனைப்புமாக வெடித்துச் சிதறினமாதிரி ஆவல் பறப்பில் தெறித்தோடிற்று. அதனதன் தாயாடுகளை நோக்கிப் பாய்ந்தன. பால்குடிக்கிற ஆசைத்துடிப்பு. மடிமுட்டி மோதுகிற பாசத் தவிப்பு. வழியவழிய பால்குடிக்கிற மனப் பசி. 

குட்டிகளுக்கான இளங்கொழை இல்லை. பெரிய கிடாய்களுக்கான கொழையும் இல்லை. வாடிவதங்கின இலை இணுக்குகளைக்கூட கறும்பித் தின்றிருக்கின்றன. துடைத்தெடுத்த மாதிரி சுத்தம். 

“ராப்பாட்டுக்கு கொழை வேணும். யாரு புஞ்சையிலே ‘கை’ வைக்கலாம்” என்று உள் மனயோசனை உதட்டு முணுமுணுப்புகளாக வெளிப்படுகிறது முத்தாண்டிக்குள் ஒவ்வோரு புஞ்சையாக வந்துபோகிறது. அகத்தி கொழை கொப்பும் குலையுமாக யார் புஞ்சையில் ‘மொதப்பாக’க் கிடக்கிறது? 

முத்தாண்டி மனசுக்குள் ராமசுப்பு புஞ்சை நினைவில் சிக்கி நின்றது. இணுக்குக் கொழைகூட ஒடிக்கப் படாமல் அலுங்காமலிருக்கிற செழிப்பு. கொழை மோதிக் கிடக்கிற அடர்த்தி. நல்ல கொழுத்த கொப்புகள். 

நல்ல அகத்திக்கொழை. செழித்த வேட்டையாக இருக்கும். ரொம்பத்தூரம். இடுகாட்டுக்குப் பக்கத்திலிருக்கிற புஞ்சை. இடுகாட்டுப் புதைமேடுகளைத் தாண்டித்தாண்டித்தான் போகணும், அது ஒண்ணும் சிரமமில்லை. 

முத்தாண்டிக்கு பயமில்லை. இடுகாடு எல்லா இடத்தையும்போலவே இதுவும் ஒரு மண்திட்டு. பேய், பூதம், பிசாசு, பற்றிய பயமில்லை. இருட்டுக்குப் பயமில்லை. முள்ளுமுடலுக்குப் பயமில்லை. பாம்பு பூச்சிக்குப் பயமில்லை. செத்த ஆவிக்கு பயமில்லை. சாகாமல் சுற்றுகிற காற்றுக்கருப்புக்கும் பயமில்லை. 

இதுக்கெல்லாம் பயந்தால் ஆடுகுட்டி மேய்க்க முடியாது. வாயில்லா பிராணிகளுக்கு வயிறு நிறைய வைக்க முடியாது. கொழை தழைகள வாங்க முடியாது. முத்தாண்டி படலுக்குள் நின்றுகொண்டும் உலவிக்கொண்டுமிருந்த ஆடுகளை ஒவ்வொன்றாக கண்ணால் மேய்ந்தான். 

“மேய்ச்சத்தளத்துலே ஏதாச்சும் தப்பிருச்சா? எல்லாம் வந்துருச்சா?” என்ற எண்ணத்தோடும் எச்சரிக்கையோடும் சுற்றி மேய்கிற பார்வை. காதுவெள்ளை, கிழிச்சகாது, கண்ணுபுள்ளி, கருப்புக்காது… கருநாக்கு… கோணக்காது, வவுறுவெள்ள, அறுந்தவால், நுனிக்கருப்பு, சளிஒழுகி, ஓட்டைமூக்கு, ஓட்டைக்காது… என்று ஒவ்வொரு ஆடுகளையும் இனம் பார்த்து, இவன் வைத்த பெயர் நினைத்து… தேடித்தேடி சரிபார்த்துக் கொண்டான். 

“ம்… எல்லாம் வந்துருச்சு, ஒண்ணும் தப்பலை” என்று திருப்திப்பட்ட மனத்ததும்பலோடு… ஆட்டுக்கம்பைப் படலில் சாய்த்து விட்டு, கொழைகட்டுகிற நூல்கயிறை எடுத்து மேல்துண்டு மாதிரி தோளில் போட்டுக் கொண்டான். 

‘இன்னிக்கு ராமசுப்பு புஞ்சையிலேதான் வேட்டை என்று மனசுக்குள் குறித்துக் கொண்டான். 

முத்தாண்டி… படலைவிட்டு விலகி கோனார் வீட்டு முற்றத்தில் நின்று… “எம்மா… எம்மா… எம்மா… ங்” என்று கத்தினான். வீட்டம்மா எட்டிப் பார்த்தது. “என்னால வந்துட்டியா?” 

“ஆமாம்மா…” 

“கூட்டை தெறந்து வுட்டுட்டீயா.” 

“வுட்டுட்டேன், கொழையில்லே போவணும்.” 

“இந்தாடா… இங்கேவா. பழையகஞ்சியும், குழம்பும் இருக்கு. குடிச்சிட்டுபோ” 

அவனுக்கும் சாயங்காலமே பசி உயிரைப் பிடுங்கியது. அடி வயிறெல்லாம் காந்தியது. காந்தலெடுத்து பசியே இப்போது மந்தித்துவிட்டது. வாசலுக்கு இருபக்கமுள்ள திண்ணையின் காலடியில் குத்துக்கால் வைத்து உட்கார்கிற முத்தாண்டி. கரைகஞ்சியும் குழம்பும் ருசியாக இருந்தது. வயிறுமுட்டக் குடித்துவிட்டு, ஏப்பம் போட்டான். மனசும், நாவும் வயிறும் நிறைந்துவிட்ட மனத்ததும்பல். வீட்டம்மா உலவுகிற திசையை மனநிறைவோடு பார்க்கிற முத்தாண்டி. தாய்ப்பறவையை நோக்குகிற குஞ்சின் மனக்குழைவு. 

“அப்ப… நா போவட்டா…ம்மா?” 

“இருலே… இந்தா வாரேன்.” குரலாக மட்டும் வருகிற மாய அன்பு. காற்றென வந்து மோதுகிற கருணை. 

“இந்தாடா… மடியைப் பிடி” 

என்று அலுமினியத் தட்டு நிறைய காரச்சேவும் தேங்காய்ச்சில்லும் கொண்டு வந்து இவனிடம் நீட்டினாள். மேல் துண்டை ஏந்தி வாங்கிக் கொண்டான். வாயில் போட்டு ‘நெறு,நெறு, வென்று மெல்லுகிற சேவு. அதன் காரருசி. சேவு இவனுக்கு எப்பவும் பிடிக்கும். ஆசைப்பட்டு ரசனையோடு தின்பான். காரசேவு என்றால், குடியிருந்து, மாட்டி வளையப்பன். 

“பாவம்… தாய்தகப்பனத்த புள்ளே… நாதியத்து ஏதுமத்து அத்தலைஞ்சு திரியுத புள்ளே… வாய்க்கு ருசியா திங்கட்டும்,” என்று நடந்துபோகிற அவனின் முதுகை பாசமும் பரிவுமாக பார்க்கிற வீட்டம்மா. 

தாழ்வாரத்துக்கு முன்னாலுள்ள முற்றத்தில் வந்து உட்கார்ந்து தின்று முடித்தான். 

“தண்ணி வேணுமாடா?” 

“சேவுதுன்னுட்டு தண்ணி குடிக்காம இருக்க முடியுமா?”

“இந்தாடா… தண்ணி” என்று செம்பை நீட்டுகிறாள்.

“போயிராதே. இரு. காப்பிதண்ணி இருக்கு. குடிச்சுட்டுபோ.” 

வீட்டம்மாவின் குரலில் தாயைத் தேடுவான், முத்தாண்டி. வீட்டம்மாவின் பார்வையில் பரிவுக்குழைவில் – அம்மாவின் நிழல் தெரியும். அம்மா கோனார் வீட்டில் பதிவாக கூலி வேலை பார்த்தவள். இவன் ஆறுவயதாகிற போது அம்மா நோயில் விழுந்து மாண்டுவிட்டாள். இவன் ஒரு வயதாகிற போதே அப்பனை விழுங்கியவன். 

படலில்தான் கிடப்பான். ஒரு சின்ன சாய்ப்பு இருக்கிறது. 

அதில்தான் படுத்திருப்பான். வீட்டம்மா கஞ்சியில்தான் வயிறு குளிர்ந்தது. எட்டுவயசிலேயே கம்பு தூக்கிவிட்டான், ஆடுமேய்க்க. 

ஆட்டுவாசம்… அதன் மூத்திரவாசம்… அதன் சளிவாசம்… ஆட்டுரோம நெறு நெறுப்பு எல்லாமே இவனுக்குப் பிடிக்கும். ஆட்டுவாலின் துடிப்பே அவனது தலையெழுத்தின் திசையாயிற்று. 

இதோ… இப்பவும் வயது பதினெட்டாயிற்று. கன்னத்தில் சின்ன சின்ன பருக்கள். உதட்டுக்குமேல் பூனை ரோமங்கள். வாலிப வாசலைத் திறக்கிற நெஞ்சுக்குழி ரோமங்கள். 

வெங்கடேசுவரிக்கு இவனது நெஞ்சுக்குழியில் வாய்வைக்க ரொம்பப் பிடிக்கும். அவள் சுவாசச்சூடு நெஞ்சில் பட்டுத்தகிக்க… நெஞ்சுக்குழியில் உதடுகளைப் பதித்து… நாவால் நனைத்து… ரோமத்தைப் பற்களால் பற்றிக்கடிக்கிறபோது… சுகத்தின் உச்சத்தில் திளைத்து… கண் சொருகுவாள். 

“ஏலேய்… சிங்கக்குட்டி… சிங்கக்குட்டி…” என்று முக்கலும் உணர்ச்சித் திணறலுமாக முனங்குவாள். அந்த முனங்கல், இவனுக்குள் வெறியைத் தீயாக மூட்டும். 

வீடு வீட்டுக்கு டி.வி.சத்தம். தெருவெல்லாம் மனிதத் தடமோ, சந்தடியோ அற்ற வெறுமை. வெட்டவெளியில் தெருவிளக்கின் ஒளிப்பரவல். கொசுவின் ரீங்கரிப்பு. 

“இதா…ன்,டயம். இப்பப் போனாத்தான் சீராக இருக்கும்” என்ற முணுமுணுப்போடு புறப்படுகின்ற முத்தாண்டி தெருவைக் கடந்து, ஊரைவிட்டு விலகி… வண்டிப்பாதை இருட்டில் எட்டை எட்டிப்போட்டு… தெருவிளக்கின் எல்லை முடிந்த இடத்திலிருந்து கற்றையாக வந்து சூழ்கிற இருட்டில் பார்வையைத் துளைத்து… 

ஆகாயத்தில் சிதறிய பருக்கைகளாக வெள்ளி பூத்துக் கிடக்கிறது. வளர்பிறை கீற்று நிலா மேகமுதுகுக்குள் ஒளிந்து கொண்டது. 

ஆட்டுகாரனுக்குரிய பயமறியாத துணிச்சல். பாதங்களில் முளைத்த கண்கள். வேலி முள் குத்தாமல், பூச்சிபொட்டில் கால்படாமல் கற்பாறையில் விரல் ஏற்றாமல், இருட்டில் தெளிவாக நடக்கிற முத்தாண்டி. பாதங்களுக்குப் பரிச்சயமான பாதை. இருட்டுக்குப் பழகிய பாதங்கள். சிள்வண்டுகளின் இரைச்சல். பனங்காடையின் வீறிடல். பனைமரத்து மயில்களின் நீட்டிமுழக்கிய கூப்பாடுகளில் அதன் பயம். 

மயானக்கரை முழுக்க பொதுபொதுவென்று மணல்காடு. காய்ந்த வாகைக்குச்சிகள். காலில் தட்டுப்படுகிற மண்டையோடுகள். வெள்ளை எலும்புகள் எதையும் பார்க்காமல் நடையை எட்டிப் போடுகிற முத்தாண்டி. 

ஓடைக்குள் விழுந்து வேலிமுள் கவைகளைக் கடந்து, கரையேறி, ராமசுப்பு புஞ்சைக்குள் கால்வைத்தான். 

பழகப்பழக… இருட்டும் வெளிச்சமாகத் தோன்றுகிறது. வெள்ளி வெளிச்சம், ‘மடக் மடக்’ கென்று கொழைக் கொப்புகளை ஒடித்தான். பதறிப்பதறி வேகமாக ஒடித்தான். கால்தடம் பதியாமலிருக்க பாதத்தில் பாலித்தின் பேப்பர் சுற்றியிருக்கிறான். சடக், சடக் கென்று கொப்பு ஒடிபடுகிற சத்தம். 

வாயில்லாச் சீவனுக்கான களவாக இருந்தாலும், களவு களவுதானே! பிடிபட்டால், ஊர்கூட்டம்தான். அபராதம்தான். 

பதற்றமும் பரபரப்புமாக கொழை ஒடித்தான். மூன்று வாய்க்கால் ஒடிப்பதற்குள் பெருங்கட்டாக ஆகிவிட்டது. ஆமணங்கங்கொழையையும் ஒடித்தான். வியர்த்துக் கொட்டுகிறது, சரம் சரமாக. 

ஊற்றெடுக்கிற வியர்வை, பனியன் சட்டையெல்லாம், ‘சொத சொத’, வென்று நனைந்து திரேகத்துடன் அப்புகிறது. நூல்கயிற்றை விரித்துநீட்டி, கொழைகளை அள்ளிப் போட்டு, இறுகக்கட்டி, தலைப்பாரமாகத் தூக்கிக்கொண்டு மயானத்தைத் தாண்டிய பிறகுதான், 

பயஇறுக்கம் விலகியது. சுவாசம், திணறலற்றிருந்தது. பயப்படபடப்பு சற்று தணிந்தது. பொதுவான வண்டிப் பாதைக்கு வந்தாயிற்று. இனி யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. 

தலைச்சுமை கனத்தது, கழுத்து நரம்பு விறைத் துரணமெடுக்கிறது. நெஞ்செலும்பு நெருக்கப்பட்டதுபோல மூச்சுத் திணறுகிறது. 

ஆனாலும் மெதுநடையாக நடக்கிறான். 

ஏனோ… அவனுக்குள் வெங்கேடஸ்வரியின் வெற்றுடம்பும் வியர்வைப் பெருக்குமாக ஒருவாசம். ஒதுங்கிக் கிடக்கிற சேலையில் பாதம்பட்டு ஒரு நெறுநெறுப்பு தட்டுப்படும். 

அவளது ஆடுகள் மூன்று இவன் ஆடுகளோடு சேர்ந்து மேயும். ஒருநாள் “இங்க வா முத்தாண்டி” என்று கூப்பிட்டாள். 

“என்னம்மா?” 

“எங்கிட்டே ரெண்டு வெள்ளாடு ஒரு கிடா நிக்குதுக; எங்களாலே இரைபார்த்து சமாளிக்க முடியலே, நீ ஆட்டோட ஆடா பத்தி மேய்ச்சிட்டுவா, மாசம் மாசம் ஒரு சம்பளம் போட்டுத்தாரேன்.” 

அவனுக்குள் சம்பளம் என்றவுடன் ஒரு சலனம். ஒரு சபலம், வவுத்துக்கு கஞ்சிக்கு ஆடுமேய்க்கிறவன். வருமானம் என்று சல்லித்தம்படி கூட கையில் பார்த்தறியாதவன், ஆனாலும். 

“எங்கே கோனாரய்யாகிட்டே சொல்லுங்க. அவருசொன்னா… பத்திட்டுப் போறேன்.” 

கோனாரிடம் வந்து கெஞ்சிய வெங்கடேஸ்வரி. 

“ஏலேய், இவுக ஆடுகளை பத்திட்டுப்போ, வர்றப்ப அவுக வூட்லே வுட்டுட்டு வந்துரு, தர்ற சம்பளத்தை நீ ஒங் கைச் செலவுக்கு வைச்சுக்கோ.” 

இவனுக்குள் ஊற்றெடுக்கிற அருஞ்சுனைப் பெருக்கு, சந்தோஷக் கும்மாளம், சம்பளம் எம்புட்டுச் சிறிதாக இருந்தாலும் இவனது வருமானம். இவனது உழைப்புக்கான சன்மானம். 

இந்த நாதியத்த ஏதுமத்த பயலும் எதற்கோ தேவைப்படுகிறான் என்ற நினைப்பே, அவன்மேல் அவனுக்கு மரியாதை தருகிறது. மதிப்பு வருகிறது. 

இவன் சந்தோஷ உற்சாகத்துடன் ஆடு பத்தப்போனான். முதல் நாளே தோசையும் சட்னியும் கிடைத்தது. ஆடுகளை விடப் போகிறபோது ஏதாச்சும் பலகாரம் கிடைக்கும். பணியாரம், அதிரசம், உளுந்து வடை என்று ஏதாச்சும் பலகாரம். 

இவன் வாழ்வில் பார்த்தறியாத பலகாரங்கள், ருசித்தறியாத இனிப்பு மணங்கள். விதம் விதமான தின்பண்டங்கள். மாப்பிள்ளை விருந்துமாதிரி அனுபவித்தறியாத தடபுடல் உபச்சாரம். 

பண்டிகைக் கொண்டாட்டமாக நாட்கள் வாசமும் ருசியுமாக – மகிழ்ச்சியும், கூத்தாட்டமுமாக… “நாளைக்கு வந்து சம்பளம் வாங்கிக்க.” 

“எப்பவர?” 

“ராத்திரி ஒம்பது மணிக்கு வா.” 

‘ஆட்டும்…” 

குழந்தையில்லாத வீடு. பெரிய வீடு. அரண்மனை மாதிரி அகலமும் நீளமும். தானிய மூட்டைகளும் தளவாடச் சாமான்களுமாக பணச்செழிப்பு. உயிர்ப்பில்லாத செழிப்பு. அவளுக்கு ஏழெட்டு வருசமாயிற்று, கல்யாணமாகி இன்னும் குழந்தையில்லை. 

‘மலடி, மலடி’ என்று வேல்கம்பு வார்த்தைகள். யார் மலடு என்று கேட்க முடியுமா? குத்துப்பட்ட ரணத்தில் துடித்தலறுகிற மௌனப் புண்கள். புண்ணின் சீழ் வழிகிற நாற்றம். 

சம்பளம் வாங்கவந்த முத்தாண்டி, “யம்மா…” கூப்பிட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான். ஒவ்வொரு இடமாகத் தேடிப் பார்த்தான். யாருமில்லாத வெறுமை. ஆளில்லாத வெறும் வீடு. 

“யம்மோ… யம்மோவ்… யம்மோவ்.” 

உள்ளே உள்ளே கடந்துபோக… 

கடைசி அறையிலிருந்து, “இங்கே வா” என்கிற குரல். 

உள்ளே போனால்- 

வெங்கடேஸ்வரி வெறும் ஈஸ்வரியாக… சம்பளம் வாங்கப் போனவன், ஈஸ்வரிதரிசனத்தில், திகைக்க… அவனுக்கு அவள் பலகாரமாக… அவளுக்கு அவன் தின்பண்டமாக… அவன் ருசியை அவளும், அவள் வாசத்தை அவனும்… 

இழந்தானா… அடைந்தானா? ரெண்டுமா? 

பறித்தானா… பறிகொடுத்தானா? ரெண்டும்தான். 

அப்புறம், சம்பளம் வாங்கும் நாளில் மட்டுமல்ல… மற்ற நாட்களிலும் அவள் சிக்னல் தரும் போதெல்லாம் போய் வந்தான். 

சுவரிலிருக்கிற பெரிய போட்டோவில் அவளும், ராம சுப்பும். 

அன்றைக்கு அப்படித்தான்- 

வியர்வையும் மூச்சிரைப்புமாக விம்மி விம்மித்தணிகிற இவனது நெஞ்சுக்குழியில் முகம்பதித்து-ரோமத்தைக் கடித்து இழுக்கிற வெங்கடேஸ்வரியின் அடங்காத்தாபம். குமுறிக் கொந்தளிக்கிற அவளது திரேக முறுக்கு. 

“என்னடா சிங்கக்குட்டி… என்னடா தங்கக்கட்டி” என்று மிழற்றுகிற அவளது சிணுங்கல்கள். அவன்மேல் சரிந்து படர்ந்துபடிந்து இழைகிற அவள்… 

மறுபடியும் அவளைக் கட்டி இறுக்கி… முத்தமிட்டு… அவளைமடியில் கிடத்தி… அவளை அவன் விரல்களால் மீட்டி அவளை அதிரவைத்து… குளிரவைத்து… 

“இது தப்பில்லியா?” 

துவண்டு சரிகிற முத்தாண்டி கேட்டான். பூனைக்குட்டி மாதிரி அவனை உரசிக்கொண்டு ஒண்டிக்கிடக்கிற வெங்கடேஸ்வரி. 

“தப்புத்தான்….!” 

“பெறவு?” 

“மலடி மலடின்னு சொல்லுறப்ப… வேல்கம்பாலே குத்திப்புடுங்குறமாதிரி… இருக்கு. நாலுபொம்பளைக கூடற எடத்துலே, மலடுன்னு அவமானப்படுறப்ப, சாகலாம் போலிருக்குது…” 

“நாம இப்படி இருக்கிறது அவருக்குத் தெரிஞ்சிட்டா?…”

“சாமிசத்தியமா… நா நாண்டுக்கிட்டு மாண்டுருவேண்டா…” 

அவன் ஆணிவேர்வரை அதிர்ந்து நடுங்கிப் போய் விட்டான். அவன் அதற்குப்பிறகு அவள் வீட்டுக்குள் போகவில்லை. அவளும் அவனை எதிர் பார்க்கவுமில்லை. 

‘அவா சங்காத்தமே வேண்டாம்டா சாமி’ என்று இவன் ஒதுக்கினமாதிரியே… அவளும், ‘அவன் சங்காத்தம் போதும்,’ என்று மனசளவில் வைராக்கியமாகி விட்டாள். 

எப்போதாவது… ஆடுகளை அவிழ்க்கப்போகிறபோது இலேசாக நிமிர்ந்து பார்ப்பான். அவள் வேற்றாளைப் போல வெட்டென பார்வையைத் திருப்பிவிடுவாள். 

ராமசுப்பு… எங்காவது பார்க்கிறபோது… ஒரு தினுசாகப் பார்ப்பான். பார்வையில் புதுத்தினுசு இருப்பதாக இவன் நினைப்பான். மிரள்வான். நடுங்குவான். 

வீட்டுக்குள் போய் வந்த தகவல் தெரிந்து விட்டதோ…? கூப்பிட்டுக் கேட்பானோ…? கட்டி வைத்து அடிப்பானோ? அவனுக்குள் குற்ற உணர்ச்சியின் முள்குத்தல்கள். பயப்படபடப்பு. உள் பதற்ற நடுக்க அதிர்வுகள். 

கொழைக்கட்டை சுமந்து கொண்டு ஓடையைக் கடந்து விட்டான். இன்றைக்கு ராமசுப்பு புஞ்சை. தினம் ஒரு புண்ணியாளன் புஞ்சை. வாயில்லாச் சீவன்களைப் பட்டினி போடலாமா? 

பாவமில்லையா? யார் புஞ்சையாவது ஒரு புஞ்சை. தினம் ஒரு புஞ்சை. ராமசுப்புக்கு இன்னும் மூன்று திசையில் புஞ்சைகள் உண்டு. அங்கும் கை வைப்பது உண்டு. 

வாயில்லாச் சீவன்கள் வயிற்றுக்கு இரை பார்த்தாகணுமே… அதைப் பட்டினி போட்டுப் பார்க்கலாமா? அதுகள் பசிப்பொறுக்காமல் கதறுவதை சகிக்கலாமா? 

இப்ப… இப்ப… ராமசுப்பு பார்வையே சரியில்லை. கடுத்த பார்வை. இறுகலான பார்வை. முறைப்பான பார்வை. வன்மப் பார்வை. 

‘பலகாரச் சங்கிலி தெரிஞ்சு போச்சோ…’ 

பயத்தில் வெலவெலக்கிற முத்தாண்டி. 

கூப்பிட்டுக் கேட்டால், அரட்டிமிரட்டி விசாரித்தால்…?’ 

ஆயிரம் உருட்டல் உருட்டினாலும் அவளைக்காட்டிக் கொடுத்துரக் கூடாது. பாவம் வவுத்துப் புள்ளைக்காரி. 

“சாமி சத்தியமா… நா… நாண்டுக்கிட்டு மாண்டுரு வேண்டா,” 

அவளது வைரக்குரல். மானத்துக்கஞ்சிய பெண் குரல், குடும்பம் என்ற தேன்கூடாக வாழுகிற ஒரு பெண்குரல். புண்பட்டு, குத்துண்ட பறவையாகத் துடித்தலறிய ஒரு மானக்குரல். 

ஆயிரந்தான் ராமசுப்பு அதட்டிக் கேட்டாலும்… “நாந்தான்.நப்பாசைப் பட்டேன்… அந்தம்மா. தங்கமான அம்மா… வௌக்க மாத்துட்டு அடிச்சி என்னை வெரட்டிருச்சு”ன்னு ஒரேயடியாக சாதிச்சிரனும், நாதியத்தபய நா. ஏதுமத்தவ நா. எனக்குப் பறிகுடுக்க என்ன இருக்கு? ஒரு மண்ணுமில்லே. 

அதுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு. எதிர்காலம் இருக்கு. ஒரு குடும்பம் இருக்கு. மானமரியாதை இருக்கு. 

மலடிங்குற பழி நீங்கி… தாயா புள்ளையா காலகாலத்துக்கும் நல்லாயிருக்கட்டும்… 

கொழைக்கட்டைப் படலில் கொண்டு வந்து போட்டான், முத்தாண்டி. 

மறுநாள்- 

ஆடுகளைப் பத்திக் கொண்டு காட்டுக்குப் புறப்படுகிற போது- 

ராமசுப்பு, அதே கடுத்த பார்வை. இறுகலான பார்வை. முறைப்பான பார்வை. வன்மப் பார்வை. 

“ஏலேய்… நில்லுடா…” 

“என்ன…?” இவனுக்குள் வியர்த்துக் கொட்டுகிறது. பதற்றம். நடுக்கும் குரலின் அதிர்வு. உளறும் வார்த்தை. 

“எங்க புஞ்சையிலே கொழை ஒடிச்சுக் கெடக்கு. நீதானா?” 

அவனுள் ஓர் ஆசுவாசம். அப்பாடா… என்றிருந்தது. மனசின் இறுக்கம் தளர்ந்தது. சுவாசம் இயல்பாக ஆனது. என்னவோ, ஏதோ என்று பயந்தமாதிரியாக எதுவுமில்லை… அதைக் கேட்டு விடவில்லை. 

“என்னடா….நீதானா…?” 

“நா இல்லே…” 

“நீ இல்லாம… வேற யாரு?” 

“நா ஒருத்தன்தான் இந்த ஊர்லே ஆடுமேய்க்கேனா? நா ஒடிக்கவேயில்லை. சாமக்காட்டுலே மயானக்கரை தாண்டி மனுசன் எவனாச்சும் போவானா? நாசத்தியமா… போகவே இல்லே” என்று பாயிண்டாகப் பேசிவிட்டு ஆடுகளைப்பத்திச் செல்கிற முத்தாண்டிக்குள் ஒரு நிம்மதி. 

ஒரு அப்புராணியைக் காட்டிக்குடுக்கற பாவம் செய்யலே என்ற நிம்மதி… 

– செப்டம்பர் 2009, தாமரை.

– அக்னி வாசம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2009,கங்கை புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *