கதையாசிரியர்:
தின/வார இதழ்: ராணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2026
பார்வையிட்டோர்: 96 
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அம்மா காட்டு வேலைக்குக் கிளம்புகிற பரபரப்பில் இருந்தாள். மெலிந்த கூன் விழுந்த உடம்பின் துரிதச் செயல்பாட்டில், முதுமைத் தளர்வின் அயற்சி. 

கூலி வேலைக்கு அம்மா கிளம்புவதற்குள், அவசரம் அவசரமாகக் கஞ்சி குடிக்கிற பார்வதி. வெறும் ஊறுகாயும், பழைய கஞ்சியும். வெறுப்பும் முகச்சுளிப்புமாக சிடுசிடுக்கிற அவளுள் கடுப்பு. 

‘வக்கத்தவ வவுத்துலே வந்து பெறந்து, வவுத்துக் கஞ்சிக்கும் ‘லோலோ’ன்னு அலைய வேண்டியிருக்கு.’ 

ஊறுகாய்க்குப் பதிலாக துவையல் இருந்தாலாவது நாவுக்கு ருசியாக இருக்கும். பொறிகடலையும், தேங்காய்ச் சில்லும் வைத்து – ரெண்டு இணுக்கு பூண்டும், உப்பும், அரை மிளகாயும் சேர்த்து- அம்மியில் சேர்த்து அரைத்தால்… வாசம் நாசியைத் துளைக்கும், மனசுக்குள் ஒரு மகிழ்ச்சி பரவும். துவையலை முன்னே வைத்து சுட்டு விரலால் தொட்டு நாக்கில் வைத்தால்… கஞ்சியை ‘கொண்டா கொண்டா என்று இழுக்கும். வயிறு நிறைவதோடு மனசும், நாவும் நிறைந்து ததும்பும். 

இது என்னடாவென்றால்… ரெண்டும் புளிப்பு. ‘உள்ளே போவேனா?’ என்று அடம்பிடிக்கிறது. மல்லுக்கட்டி, தெல்லு தெறித்துதான் உள்ளே இறக்க வேண்டியிருக்கிறது. 

பார்வதி மனசு கிடந்து கசந்தது. ‘இல்லாத வீட்லே பொறந்து… காட்டுவாசல்லே, அத்துவானத் தனிமையிலே ஆடு மேய்ச்சு… வேனாக் கொதிக்கிற வெயில்லே வெந்து கருகுனாலும்… வவுத்துக் கஞ்சிக்கு அல்லாடிச் சாக வேண்டியிருக்கு… ச்சேய்… என்ன பய பொழைப்பு இது?’ 

கோணல் எழுத்தாகிவிடுகிற ஏழைகளின் தலையெழுத்தை எண்ணி மனசு வெறுத்து சலிக்கிறது. 

“தூக்குவாளியிலே சோறு வைச்சுட்டீயா?” 

“ம்… வைச்சிருக்கேன் பார்வதி.” 

“சுடுசோறும், தயிருமட்டுந்தானா?” 

“பெறவென்ன? பதினாலு வகைக் கூட்டோட பந்திச் சோறு கேக்குதோ?” 

“தொட்டுக்கிட… கடிச்சிக்கிட என்ன வைச்சிருக்கே?” 

“தனியா ஒண்ணும் வைக்கலே. வாய்க்கு வகைவகையா ருசி கேக்குதா…? வாக்கப்பட்டுப் போற வூட்டுலே, ஒன்னோட ராஜ்ஜியந்தானே? ஆசைப்பட்டபடியெல்லாம் ஆக்கி அவிச்சு வாய்லே கொட்டிக்க…” 

“வாக்கப்பட்டுப் போற’ என்ற வார்த்தை, பார்வதியின் நெஞ்சுக்குள் நரம்புகளை அறுத்தது. சொருகிக்கிடக்கிற முள்ளை அசைக்கிற மாதிரி. மனசெல்லாம் ரண அதிர்வுகள். 

அம்மாவை ஏறிட்டுப் பார்க்கிறாள். அந்த முதுமை முகமெல்லாம் சிரிப்பின் வெளிச்சம். மனமகிழ்ச்சியின் மலர்ச்சியில், தோல் சுருக்கங்களே மறைந்த மாதிரியொரு மினுமினுப்பு. 

ரொம்ப நாளாக ஏதும் செய்ய முடியாமல், பெத்த மகளுக்கு ஒரு ‘நல்லது’ பண்ணிப் பார்த்து, கன்னி கழிக்க முடியாமல்… அந்தக் கிழவி தவித்த தவிப்புகள், பட்ட கவலைகள், விட்ட ஏக்க பெருமூச்சுகள் எக்கச்சக்கம். 

“இப்பவாவது பொழுது விடிந்ததே… மாலைபூத்து கல்யாணம் கைகூடிவந்ததே’ என்ற மனநிறைவின் ததும்பல். சிறுபிள்ளைமாதிரி மகிழ்ச்சியை மறைக்காமல் துறுதுறுத்து அலைகிற அம்மா. குட்டி எலியாக குடுகுடுவென ஓடித் திரிகிற அம்மாவை ஒரு முகவாட்டத்துடன் பார்க்கிற பார்வதி. மனசை அழுத்துகிற நினைவுப்பாரம். கொட்டியழ முடியாத ஊமை மனக்குமைச்சல். திணறடிக்கிற மனப்பாரம். 

“தீம்பண்டம் என்னமாச்சும் வைச்சிருக்கீயா?” 

“சோளப் பணியாரமும், காரச்சேவும் வைச்சிருக்கேன். சாயங்கால நேரப் பசிக்கு தின்னுக்கோ…” 

தரையில் அறைப்பட்டிருக்கிற சிறுசிறு குச்சிகளில் கட்டப்பட்டுக்கிடந்த வெள்ளாடுகளையும் வெள்ளாட்டங் கிடாய்களையும், தொழுவத்தில் நின்ற மூணுமாசச் சினைப்பசுவையும் அவிழ்த்துவிட்டாள். ஆட்டுக் கம்பையும் எடுத்துக் கொண்டாள். தின்பண்டங்களை சேலையின் அடிமடிக்குள் வைத்துக் கொண்டாள். தூக்குச்சட்டியையும், ரெண்டு லிட்டர் பாட்டில் தண்ணீரையும் இடது கையில் தொங்கவிட்டிருக்கிறாள். வெப்பமில்லாத காலை வெயில். ஊரைக் கடந்து வண்டிப் பாதையில் நடக்கிற ஆடுகளும், கிடாய்களும் நின்று நிதானித்து மூத்திரம் பெய்கிற காட்சிகள். ஆடுகள் போடுகிற சாணிகள். 

தலையில் எண்ணெய் தேய்த்து இழுத்துக் கட்டி இருக்கிறாள். வயது இருபத்தேழு இருக்கும் பார்வதிக்கு. வாளிப்பான திரேகக்கட்டு. 

இப்பத்தான்… நிச்சயமாகியிருக்கிறது. இதுவரைக்கும் மாலை பூக்கும் என்ற நம்பிக்கையே வரவில்லை. வெறும் வீடு. வறுமையில்லாத வறுமைப் பெருக்கு. 

கம்மல், மூக்குத்தியைக் கனவில்கூட பார்க்க இயலாத குடும்பம். கல்யாணத்துக்கு எங்க போக? காசு பணமில்லாமல், கல்யாணத்தை நினைத்துக்கூடப் பார்க்க முடியுமா? 

கரிசல்காடுகளை நோக்கிப் போகிற ஆடுகள். செவலை நிறப் பசுவும் நிதான நடைபோடுகிறது. அதன் வால்நுனி முழுவதும் சாணி – மூத்திரக் கரைசல். ஒட்டுகிற ஈக்களைத் துரத்துவதற்கு வாலைச் சுழற்றுகிறபோது, இவள்மீது தெறிக்கிற மூத்திரத் துளிகள். சாணியும் கரைந்திருப்பதால், சந்தனக் கரைசல்போல கெட்டித் திரவமாக இருக்கிறது. ஆடுகளும்,கிடாய்களும் கரிசல் தரிசுகளில் சுதந்திரமாக மேய்கின்றன. 

‘முத்தன் வர்றதுக்கு இன்னும் ரொம்ப நேரம் கெடக்கு.’

செம்மறியாடுகளை எழுப்புவதற்கே பத்து மணிக்கு மேலாகிவிடும். அவன் பக்கத்து ஊர்க்காரன். சின்னப்பையன், பதினேழு வயது. 

அத்துவானக் காட்டில்,  வாய்த்துணைக்குக்கூட ஆளில்லாமல்… வெட்டவெளியில் மேய்கிற ஆடுகளையும், காய்கிற அனல் அலைகளையும் பார்த்துக் கொண்டே கால்கடுக்க நின்றாக வேண்டும். இடுப்பெலும்பு வலித்தாலும், ‘உஸ்ஸ்’ ஸென்று உட்கார்ந்துவிட முடியாது. 

கள்ள மேய்ச்சலுக்கு நழுவத் துடிக்கிற ஆடுகளைக் கண்ணும் கருத்துமாகக் கண்காணிக்க வேண்டும். நழுவுகிற ஆடுகளை நோக்கிக் கல்லெறிந்து, வசவுச் சொல்லெறிந்து அதட்ட வேண்டும். மடக்கி நிறுத்த வேண்டும். கெட்ட வார்த்தைகள், மூச்சுக்காற்றுமாதிரி சர்வசகஜமாகத் தெறிக்கும். 

‘சின்னப் பயல்தானே… துணைக்குத் துணையாக கூட இருக்கட்டுமே’ என்ற நினப்பில், அவனோடு சேர்ந்து கால் நடைகளை மேய்க்க ஆரம்பித்தது, அவனுக்கும் அதே மாதிரியான மனத்துணை தேவைப்பட்டது. இரு பக்கத் தேவையில்தானே, ஓர் உறவு பூக்கிறது. ஏழு மைல் சைக்கிள் மிதித்து, திருவேங்கடம் ‘டூரிங் டாக்கீஸுக்கு புறப்பட்டு விடுவான். ஆண்பிள்ளை. அடிக்கொரு தடவை சினிமாவுக்குப் போவான், முத்தன். 

‘கதை சொல்றா… கதை சொல்றா” என்று கெஞ்சி மன்றாடுவாள் அவள். அவனும் ‘எழுத்து (டைட்டில்) போடுறதுலேர்ந்து’ கதையை ஆரம்பித்து… அணுஅணுவாக… அச்சு அசலாக விவரிப்பதில் முத்தன் சமர்த்தன். பார்வதிக்கு சினிமாப் பார்க்கிற மாதிரியே இருக்கும். காட்சிகள் மனசுக்குள் விரியும். படரும். நடித்துக் காட்டுவான். ரஜினி ஸ்டைல்களை அப்படியே செய்து காட்டுவான். காதல் காட்சிகளை லயிப்போடு நடித்துக் காட்டுவான். ரசிப்போடு… அவனுக்கே ஓர் ஆர்வக் கிளர்ச்சியோடு கதை சொல்வான். ரசிக்கிற மாதிரி ரசனையோடு சொல்வான். 

முத்தன் கதைசொல்லும் கலைக்கு இவள் தீவிர ரசிகை. திண்பண்டமெல்லாம் கொடுப்பாள். 

காட்டுவாயிலில் கரையும் பொழுது. அத்துவானத் தனிமை. ஆடுகளைக் கெட்ட வார்த்தைகளால் திட்டிதிட்டி மரத்துப் போன மனசு. தனிமை நீட்சியில் தாறுமாறாக நினைவு வக்கிரம். திரேகப் பாதையில் சறுக்கி விழுகிற மனத்தினவுகள். 

சினிமா பார்த்து… சினிமா பார்த்து… உருவாயிருக்கிற அவனது ரசனை. மன ருசி, விடலை வயசாக மாறிக்கொண்டிருக்கிற பாலகன். உதட்டுக்கு மேல் பூனை ரோமங்கள். 

ஏதோ ஓர் ஆபாசப் படம். மாற்று மொழிப்படம். வழக்கம்போல கதைகேட்டு நச்சரித்த பார்வதி. வழக்கம்போல பாவனையோடு நடிப்போடும் செய்துகாட்டி கதைசொன்ன முத்தன். 

“பாத்ரூம்லே நனைஞ்சுக்கிட்டே சீலையை வெலக்குறா. ஜாக்கெட் ஊக்கை கழத்துறா…” 

இவளது தோள் சீலையை விலக்கி… ஜாக்கெட் ஊக்கை அவன் கழற்றியபோது… அனுமதித்து விட்டுவிட்டாள்… விடலைப் பையனாகிவிட்ட அந்தச் சின்னவனின் மேய்ச்சல் நிலமாகிவிட்ட அவள். 

கறுத்தூரணிக் காட்டுக்கு வந்துவிட்டாள். பார்வதி சுற்றிலும் சமுத்திரம்போல் கரிசல்காட்டு மக்காச்சோள வெள்ளாமை, ஆளுயரத்துக்கு வளர்ந்த பயிர்கள்… கிள நிற பச்சை சமுத்திரமாய். 

கறுத்தூரணித் தரிசு நிலம் நாலைந்து ஏக்கர். அங்குதான் ஆடுகளை நிறுத்தி… மடக்கி… மேயவிட்டாள். பசுவின் மூக்கணாங் கயிறோடு சேர்த்துக் கட்டிய நீளமான கயிறை ஓர் ஆதாளையில் கட்டிப் போட்டாள். கயிறு நீள்கிறவரை சுற்றிலும் பசு மேயும். 

இங்கேதான்… முத்தனும் செம்மறிகளை பத்திக் கொண்டு வந்து சேருவான். தரிசுகள் முழுக்க செழித்த புல். 

‘சின்னப்பயல் சகவாசம், குட்டிநாய் சகவாசம்’ என்று சொலவடை சொல்வார்கள். அது வாஸ்தவம்தான். 

காலநேரம் தெரியாமல், இடம் பொருள் பார்க்காமல், அவன் பாட்டுக்கு மேலே கைபோடுவான். கண்டகண்ட இடத்தில் கைமேய்ச்சல், மனச் சில்மிஷம். காமக்கிடாய் மாதிரி, நிதானமில்லாத பரபரப்பு. 

இலந்தை முள் புதர் மறைப்புக்கு “வா… வா… வா…” என்று ஒரே நச்சரிப்பு. விடாமல் இச்சிலாத்திப்படுத்துவான். 

அப்படித்தான் அன்றைக்கு… 

பதினோரு மணி இருக்கும். இலந்தை முள் புதர் மறைப்பிலிருந்து… சேலை துணிமணியை சரிபண்ணி, இழுத்து ஒழுங்குபடுத்திக் கொண்டு மீண்டு வருகிறாள். 

வெயிலில்… வெட்டவெளியில் – இவளைத் தேடிக்கொண்டு, அங்கிட்டும் இங்கிட்டுமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒருவர். இவளைத்தான் தேடுகிறார். 

வெள்ளை வேட்டி. சந்தன நிற சட்டை. காலில் செருப்பு. கையில் கடிகாரம், விரலில் மோதிரம், கைக்குள் மடித்து வைக்கிற மஞ்சள் பை. முப்பதையடுத்து வயது இருக்கும். ஆள் நல்ல லட்சணம். 

இவளுக்குள் பதற்றமும், பதைப்பும். பின்னந் தலையில் ஒட்டியிருந்த கரிசல் மண்ணை உதறித் தட்டிவிட்டாள். திகைப்பும், திகிலுமாகக் கேட்டாள். 

“யாரு நீங்க…? என்ன வேணும்?” 

“சும்மாதான்… ஆடு பாக்க வந்தேன்.” 

“பாக்குறதுக்கா?” 

“பாத்து, வாங்குறதுக்குத்தான்.” 

“அதெல்லாம் வீட்லே அம்மாகிட்டேதான் பேசணும்!”

“அவுககிட்ட பேசுனேன். அவுகதான் ஆடுக இங்க மேயுது… போய்ப் பாருங்க’ன்னு அனுப்பி வைச்சாக.” 

“எத்தினி ஆடுக வேணும்?” 

“ஒண்ணே ஒண்ணுதான்.” 

அவன் ஆடுகளை சிறு பார்வையாகவும், இவளைப் பெரும் பார்வையாகவும் பார்த்தான். இவளையே மாறி மாறிப் பார்க்கிறான். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை… பாதத்திலிருந்து தலைமுடி வரை மேலும் கீழுமாய்ப் பார்க்கிறான். இவளுக்கே பதறி வந்தது. மனநடுக்கம். 

“அம்மாகிட்டே போய்… வீட்லே பேசிக்கோங்க…” 

இலந்தைப் புதருக்குள் எட்டிப் பார்த்திருந்தால், கேவலப்பட்ட பாடாகி இருக்கும். வெட்கக் கூத்தாகிப் போயிருக்கும். எட்டு ஊர்க் கேவலம். 

அன்றைக்கு… ராத்திரி. 

குளித்துவிட்டு – மாற்றுச் சேலையைக் கட்டிக்கொண்டு – சாப்பாட்டில் உட்கார்ந்து கைவைக்கிற பார்வதி. 

அம்மா… குழைவும், கனிவுமாகக் கேட்டாள். 

“ஆடு பாக்க ஒருத்தரு வந்தாரே…?” 

“ஆமா.” 

“அவரை ஒனக்குப் புடிச்சிருக்கா?” அம்மாவின் குரல் குழைவும், தணிவும் இவளுக்குள் அதிர்வாக இருந்தன. விக்கிய மாதிரி துணுக்குற்றாள். பதற்றமாக நிமிர்கிறாள். 

“என்னம்மா… சொல்லுதே?” 

“அவரு… ஆடு பாக்க வரல்லே. ஒன்னைப் பொண்ணு பாக்க வந்துருந்தாரு. ஒன்னைப் புடிச்சிருக்குன்னு சொன்னாரு…” 

அவள் மறுபடியும் அந்த ஆளை மனசுக்குள் கொண்டுவந்தாள். ஆள்… நல்ல லட்சணம்தான். எடுப்பான தோற்றம்தான். முகக்களையான மாப்பிள்ளைதான். கையில் வாட்சும், மோதிரமும் அவரது செழிப்பைக் காட்டின. 

“ஆளு… வசதியோ?” 

“நல்ல வசதி. சொந்த ஏழெட்டு குறுக்கம் (ஏக்கர்) புஞ்சை. பம்புசெட் மோட்டாரு. மெத்த வச்ச (மாடி) வீடு. அம்மா இல்லே. வயசான அய்யா மட்டும்தான். ஒத்தைப்புள்ளே. நீ வாக்கப்பட்டுப் போனீன்னா… அந்த ராஜ்ஜியத்துக்கு நீதான் ராணிப் பட்டம்.” 

“நகை நட்டுக்கு எங்க போறது?” 

“ஆடுக, கிடாங்க, பசுவை வித்து வர்றதுலே செய்ய முடியுற நகை போட்டாப் போதும்னுட்டாரு… தங்கமான மனுஷராத் தெரியுது…” 

அவளுக்கு முதன்முதலாகத் திறக்கிற வாசல். கனாவில்கூட கம்மல் – மூக்குத்தி பார்க்க முடியாத இவளுக்குத் தெரிகிற ஒற்றைப் பாதை. ஒரே ஒரு ஒளித்தடம். அரிதாக கண்ணில் தென்பட்டிருக்கிற அருஞ்சுனை. இதில் இவள் நனையாவிட்டால்… வாழ்க்கை முழுவதும் பாலைவனம்தான். 

“என்னம்மா… ஒனக்கு அவரைப் புடிச்சிருக்கா?” 

அடிவயிற்றிலிருந்து வந்த நீளமான பெருமூச்சை இரைச்சலுடன் வெளிவிட்டாள். நாணமோ… பாவனையோ இல்லாமல், காடே கதியென்று ஒற்றையில் திரிகிற பெண்ணுக்கேயுரிய துணிச்சலுடன் சொன்னாள். 

“புடிச்சாலும், புடிக்காட்டாலும்… வர்ற வாய்ப்புக்கு கழுத்தை நீட்டித்தானே ஆகணும்…” 

இரவின் விரலைப் பற்றிக்கொண்டு பகலும், பகலின் காலடி தொட்டு இரவுமாக… நாட்கள், மாயமென நகர்ந்து மறைய… 

‘கல்யாணச் செலவில் காசைக் கரியாக்க வேண்டாமே’ என்ற யோசனைப்படியே அம்மன் கோவிலில் மாலை மாற்றிக்கொண்டு, திருநீறு பூசி… நாலைந்து உறவுக் காரர்களுக்கு மட்டுமே சோறு போட்டு எளிமையாக நடந்தேறியது. 

அவளுக்குள் சொருகப்பட்ட முள்ளாக முத்தன். சின்னப்பயல் சகவாசம். சிறுபிள்ளை விளையாட்டுபோல, கல்மிஷமில்லாத காட்டுவெளி விளையாட்டு. 

இந்த அப்புராணி மாப்பிள்ளையிடம் அதை மறைப்பதா? கபடமில்லையா? தவறல்லவா? சொன்னால்… 

ஏற்றுக்கொள்வாரா? புரிந்துகொள்வாரா? முகம் சுளிக்காமல் ஒப்புக்கொள்வாரா? 

அவளுக்குள் ஊசலாட்டம். மாலை பாறையாகக் கனக்கிற மாதிரியோர் பிரமை. திருநீறு, நெற்றியை சுட்டுத் தகிப்பது போன்ற உணர்வு. அவள் முகவாட்டம், மனத்தத்தளிப்பு. 

சொன்னால் என்ன ஆகும்? 

‘தாலியைக் கழற்று’ என்பாரோ…? நெஞ்சுக்குள் கட்டையாக நின்றழுத்துகிறது. மனசாட்சியின் அலைபாய்வு. மனசுக்குள் இருள் திட்டுகள். 

அன்றைக்கு இரவில்… 

தோளைத் தொட வந்த அவனிடம் ஒரு தாகம் – தவிப்பு. 

இவளுக்குள் ஏதோ ஒரு தடுமாற்றம். மனத்தத்தளிப்பு. உள்மனம் கிடந்து கூசியது. 

தயக்கத்துடன் – “நாளைக்குப் பார்ப்பமே” என்றாள்.

சட்டென்று கையெடுத்துவிட்டான். ‘ஏன் எதுக்கு?’ என்று குடையாதது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. 

ரொம்ப நேரம் பேசினர்-பேசிக்கொண்டிருந்தனர். அவனும் பேசினான். அவளும் பேசினாள். நாக்கு நுனிவரை வந்துவிட்டு உள்ளே போயிற்று அந்த முள். 

உறங்குகிற அவன் முகத்தில் நிலவுகிற நிம்மதி. இந்த வெள்ளையான மனுசரை ஏமாற்றுவதா? அப்புராணி மனுசரிடம் கபடமாக மறைப்பதா? 

அவளுக்குள் மனஉளைச்சல், சஞ்சலம். 

மறுநாள்… 

மாப்பிள்ளையின் ஊர்க்கிழவி வந்திருந்தாள். பார்வதியைப் பார்த்து முகமலர்ச்சியோடு வாழ்த்தினாள். அவளது முகத்தை இரு கையாலும் வருடி, தடவி, தன் கைகளை முத்தமிட்டு ஆசீர்வதித்தாள். 

“வயசு முத்துன கழுதைகளோட சகவாசம் வைச்சு கெட்டழிஞ்ச பய. மாட்டேன்னு திரிஞ்ச பயலை, கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்குறதுக்குள்ளே, அவுக அய்யாவுக்கு திண்டாடிப் போச்சு. மகராசி, புண்ணியவதி… நீதான் சாமர்த்தியமா அவனோடு குடும்பம் நடத்தி, அவனை நல்ல வழிக்குக் கொண்டாரணும் தாயி…” என்று கனிவும், குழைவுமாக புத்திமதி சொன்ன அந்தக் கிழவி நம்பிக்கை மிகுந்த குரலில் கூறினாள். 

“ஒன்னாலே முடியும் தாயி… திருத்திக் கொண்ணாந்துருவே. இம்புட்டு ஆடு… குட்டிகளை வசக்கி, அதட்டி மேய்க்க முடிஞ்சவளுக்கு… இவனை வசக்குறது பெரிய மலையா?” 

போய்விட்டாள் அந்தக் கிழவி. அவள் முதுகையே பார்க்கிற பார்வதி. அவளுள் கசப்பும், வியப்புமாக யதார்த்த வாழ்க்கை தோன்றுகிறது. 

‘இந்த வெள்ளை மனுசருக்கும் ஒரு முதுகு இருக்கு. அப்புராணி மனுசருக்குள்ளேயும் ஆயிரத்தெட்டு விஷயமிருக்கு. இவருக்குள்ளும் இம்புட்டு இருட்டா?’ 

அன்றைக்கு ராத்திரி… 

அவன் தோளைத் தொட்டான். 

சுத்தமான மனசோடு – மனைவியாகிய உணர்வோடும், இசைவோடும் அவள் ஆசையாய் குழைந்தாள். ‘இந்த ஆளைத் திருத்தி சரி பண்ணணும்’ என்ற பொறுப்பும், கவலையும் மனப்பாரமாக ஏறிக்கொள்ள… அந்தப் பெருமூச்சோடு அவனது உயிருடன் கலக்கிறது அவளது உயிர். 

– மார்ச் 2009, ராணி.

– அக்னி வாசம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2009,கங்கை புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *