அம்மிச்சியம்மா!






சிறுவன் மணிக்கு ‘எப்போது வெள்ளிக்கிழமை சாயங்காலம் வரும்? அப்புச்சி வீட்டிற்குப்போகலாம். அம்மிச்சி செய்யும் பலகாரங்களை ஒரு பிடி வயிறு முட்டப்பிடிக்கலாம்’ எனும் சிந்தனை திங்கட்கிழமை துவங்கி தினமும் ஓடிக்கொண்டே இருக்கும்.
அதிலும் வெள்ளிக்கிழமை காலை முதல் அந்த சிந்தனை ஆயிரம் கிலோ மீட்டர் வேகமெடுக்க ஆரம்பித்து விடும். அந்த நாளில் படிப்பில் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்த இயலுவதில்லை.
‘வயிறு வலிக்கிறது என ஆசிரியரிடம் பொய் சொல்லி விட்டு மதியமே ஊருக்கு போய்விடலாம்’ எனும் யோசனை வர அடுத்த வகுப்பில் படிக்கும் அக்கா மங்கையிடம் கேட்பான். ‘வேண்டாம்’ என்றவுடன் சோர்ந்து போவான்.
மாலை நான்கு மணிக்கு அரசு பள்ளியில் உள்ள திண்ணையில் நின்று நண்பன் குமரன் பெல் அடித்தவுடன், மணி முதல் மாணவனாக அணையில் தேக்கி வைக்கப்பட்டு, திறந்து விடப்படும் போது சீறிப்பாயும் வெள்ளம் போல் பள்ளியிலிருந்து ஓட்டம் பிடித்து, நாலாவது வீதியிலுள்ள தன் வீட்டிற்கு சென்றதும் புத்தகப்பையை திண்ணையிலேயே போட்டு விட்டு ஆடை கூட மாற்றாமல் பக்கத்து ஊரிலிருக்கும் அம்மாவின் அப்பா வீடானா அப்புச்சி வீட்டிற்கு சென்று அங்கே தாவாரத்தில் கட்டப்பட்டுள்ள தூரியில் உட்கார்ந்து மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்குவான்.
மணியின் செயல்தான் இப்படியென்றால் அம்மாவின் அம்மா அம்மிச்சி செயலோ அதை விட பல மடங்கு….. மணி வீட்டிற்குள் நுழைந்த மறு நொடி பால் பாயாசத்தில் ஆரம்பித்து, ஒப்புட்டு, லட்டு, அதிரசம், தேங்காய் பறிப்பி, நெய் முறுக்கு என அவனது வாயில் அம்மிச்சி திணித்துக்கொண்டேயிருக்க ஒரு மணி நேரத்தில் உண்ட மயக்கத்தில் உறங்கிப்போவான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் இரவு உணவு தயாராகி விடும். பத்து வயது பேரனை இடுப்பில் சுமந்தபடி நடந்து கொண்டே ஊட்டி விடுவாள் அறுபது வயதை முழுங்கி விட்ட அம்மிச்சி மங்களம்.
“ஏம்மா ஒரு நாளாச்சும் எனக்கு இப்படி நீ ஊட்டி விட்டிருப்பியா? உன்ற பொண்ணு, என்ற மேல இல்லாத பிரியம், நாம்பெத்த பையன் மேல எப்புடி வந்துச்சு… ?” மகளும் மணியின் தாயுமான சாந்தி தனது தாய் மங்களத்திடம் கேட்ட போது சிரிப்பே பதிலாகி விடும்.
குழந்தைகளுக்கும் சரி, வயதானவர்களுக்கும் சரி பசி தீர உணவும், மனம் மகிழ அன்பும் எங்கு கிடைக்கிறதோ அங்கே தான் அதிக நாட்டம் வரும் என்பது அவனது தாயிற்கு நன்றாகப்புரிந்தது.
மணிக்கு, தான் பிறந்த வீட்டில் எல்லாமே மாற்றாகவே நடந்தது. “பழைய சோறு தான் இருக்கு. குடிச்சாக்குடி. இல்லேன்னா பசியோடயே ஸ்கூலுக்கு போ….” கூலி வேலைக்கு சென்று குடும்பத்தைக்காப்பாற்றும் தாய் சாந்தி.
“நானெல்லாம் செருப்பில்லாம பத்து மைல் முள்ளுக்காட்டு வழியா நடந்தே ஸ்கூலுக்கு போனவன். நாலு வீதி தள்ளி இருக்குற ஸ்கூலுக்குப்போற உனக்கெதுக்கு செருப்பு…?” வேலைக்கு போகாமல் மனைவியின் வருமானத்தை மிரட்டி, அடித்து வாங்கி மது குடிக்கும் தந்தை மாறன்.
பெற்றோரின் அரவணைப்பு சரியில்லையென்றால், மற்றோரின் அரவணைப்பு தேவைப்படுகிறது. ஒருவர் மீது மற்றவருக்கான காதல் என்பது கூட உடல் ஈர்ப்பு தவிர, மனம் இணக்கம் ஏற்படுவதோடு பொருளாதார ஆதரவு அடிப்படையிலும் சேர்த்தே அந்த நம்பிக்கையின் அடிப்படையில் உருவாவதாக நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
ஒரு நாள் மாலை வேளை பள்ளியிலிருந்து தன் வீட்டிற்கு வருகிறான். வீடு பூட்டப்பட்டிருப்பதைக்கண்டவுடன் நேராக அவனது கால்கள் அம்மிச்சி வீட்டை நோக்கி நடக்கின்றன.
வீட்டின் முன் பெரிய கூட்டம். உள்ளே சென்று பார்த்தால் தூரி அவிழ்த்து ஓரமாக வைக்கப்பட்டிருந்தது. தூரி இருந்த இடத்தில் அம்மிச்சி உயிரற்ற உடலாய் படுக்க வைக்கப்பட்டிருப்பது புரியாமல் பார்த்தவன், ஓடிச்சென்று தூங்குவதாக நினைத்து எழுப்புகிறான்.
“அம்மிச்சி நான் மணி வந்திருக்கறேன். இங்க ஏன் படுத்து இருக்கறே…? பசிக்குது போய் பணியாரம் கொண்டு வந்து ஊட்டியுடு. தூறி எடுத்து இங்க கட்டி உடு. நான் தூரியாடீட்டு தான் சாப்பிடுவேன்….” என கூறி அம்மிச்சி கையை பிடித்து இழுக்கிறான். கண்களை கைகளால் திறக்க முயல்கிறான். அவன் இது வரை இதுபோன்ற இறப்பைக்கண்டதில்லை. இங்கு நடப்பது எதுவும் அவனுக்குப்புரியவில்லை. அவனது அறியாமையின் செயல்களை யாரும் தடுக்கவும் இல்லை.
சற்று நேரத்துக்குப்பின்பு தான் தனது தாய் சாந்தியும், மற்றவர்களும் அழுவதைப் பார்த்து அம்மிச்சிக்கு எழ முடியாத நோய் வந்து விட்டதாகப் புரிந்து கொள்கிறான். தற்போது அவனது கவலையெல்லாம் அம்மிச்சிக்கு பின் தனக்கு யார் பலகாரங்களை செய்து பாசமாக ஊட்டி விடப்போகிறார்கள்…? என்பது மட்டும் தான். அந்த நினைவினால் உருவான வெளிப்பாட்டின் ஏக்கத்தாலேயே கண்ணீர் பெருக்கெடுத்து அவனது கண்களிலிருந்து ஓடியது!
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |