அப்பா என்கிற உழைப்பாளி





திரு.உஷாதீபன் அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 100வது சிறுகதை. வாழ்த்துக்கள்.

அப்பாவை வீட்டுக்குக் கூட்டி வந்தாயிற்று. எப்படிச் சென்றாரோ அப்படியே திரும்பியிருந்தார். இப்படித்தான் தோன்றியது எங்களுக்கு. உடல் நிலையில் அத்தனை தேர்ச்சியில்லை.
“ஆளை எழுப்பி உட்கார்த்தியாச்சு. அவ்வளவு தான். தொடர்ந்த பயிற்சி தான் இனி பலன் கொடுக்கும்”. டாக்டரே இப்படித் தான் சொல்லியிருந்தார்.
இரண்டு வீடு தள்ளியிருந்த தியாகி பதஞ்சலி தான் உடனே வந்து பார்த்து விட்டுப் போனார். ஒரு மாதம் முன்பு ஒரு நாள் பொழுது சாய்ந்த வேளையில் பிரஷர் அதிகமாகி திடீரென்று அப்பா தடுமாறி விழுந்த போது வந்து உதவியவர் அவர் தான். இவன் ஓடிப் போய் டாக்ஸியை அழைத்து வர அவர் உதவியுடன் தான் அப்பாவைத் தூக்கி வண்டியில் போட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்தது.
தன் வாழ்நாளில் அம்மாதிரி ஒரு உபசரணையை அப்பா பார்த்திருக்கவே மாட்டார். மூன்று பெண்கள். மூன்று பையன்கள். ஆள் மாற்றி ஆள் விடாமல் தாங்கினார்கள். வேளை தவறாமல் மருந்து, மாத்திரை, ஹார்லிக்ஸ், காம்ப்ளான் என்று தடபுடலாய் இருந்தார் அப்பா. பக்கத்து பெட் பேஷண்ட்களெல்லாம் கூடக் கண்பட்டிருப்பார்கள். அத்தனைக் கவனிப்பு.
ஏதோ ஓய்வெடுக்க வந்தவர் போல் தென்பட்டார் அப்பா. வந்து அட்மிட் ஆகி, நாலு பாட்டில் சலைன் ஏறியவுடன் பழையபடி ஆகி விட்டார். உடலின் ஒரு பக்கம் சற்றே பாதிப்பு.
முயன்று, முயன்று தோற்றுப் போய், “அடே! என்னடாது, என்று தனக்குத் தானே ஆச்சரியப்பட்டவராய் மறுநாளே எழுந்து உட்கார முயன்றார் அப்பா. டாக்டர் அவரது மன உறுதியையும் விடாமுயற்சியையும் கண்டு திகைத்துப் போனார். சிகிச்சையளிப்பதில் அவருக்கொன்றும் சிரமம் இருந்ததாகவே தெரியவில்லை . ஊசியும், மருந்தும் விடாமல் போய்க் கொண்டிருந்தன உள்ளே. அப்பா சளைக்கவில்லை.
தினசரி ஃபிஸியோதெராபிஸ்ட் வந்து எக்ஸ்சர்சைஸ் செய்து விட்டார். அப்பா அவருக்கு நன்றாக ஒத்துழைத்தார். கையை மடக்கி நீட்டுகையில் அப்பா அவரை ஓங்கிக் குத்திவிடுவார் போல் இருந்தது அவரது பயிற்சியின் வேகம். அந்த அளவுக்கான முனைப்பு. பயிற்சியாளர் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டியிருந்தது.
அப்பாவைக் கவனித்துக் கொள்வதில் அம்மாதான் சோர்ந்து போனாள். இருந்த இடத்தில்தான் எல்லாம் என்பதால் இரவு நேரங்களில் அப்பாவின் உபாதைக்கு அம்மாவே துணை நிற்க வேண்டியிருந்தது. அதனால் அவளின் தூக்கம் பாழானது. பகலில் நாங்கள் இருந்ததனால் ஒரு மாதிரிப் பொழுதுகள் கழிந்தன. இடையிடையில் தங்கைமார்கள், வீட்டுச் சமையல் வேலைகளை முடித்து ஒருவர் பின் ஒருவராய் வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
எல்லோருமே நிறைவாக, நெறி தவறாமல் அக்காரியத்தைச் செய்து கொண்டிருப்பதாய்த் தோன்றியது. வீட்டில் அதுநாள்வரை யாருமே படுக்கையில் விழுந்ததில்லை. அம்மாவும்கூட எனலாம். வயசாகிவிட்டாலும், தலைவலி என்றுதான் விழுந்து துடிப்பாள். சுட்ட செங்கல்லையும், வேப்பிலையையும் தலைக்கு வைத்துப் படுத்துத் தானே போக்கிக்கொள்வாள்.
வேறு எந்த வியாதியும், வெக்கையும் அவளை அண்டியதே இல்லை. அப்பாவும் இந்த எழுபத்தேழாம் வயது வரை ஓடியாடிக்கொண்டிருந்தவர் தான், அவரை நிறுத்த யாரால் முடியும்?
அண்ணனுக்கு வேலை கிடைத்து மதுரைக்கு வந்து குடியேறி, வீட்டோடு இருக்கலாம் என்று சொன்ன பின்னாலும் அப்பா கேட்டால் தானே? கோயில் தரிசனத்திற்கு என்று போயிருந்த வேளையில் தனது பால்ய கால நண்பர் ஒருவரைத் தற்செயலாகச் சந்திக்கப் போக, அவரது சிபாரிசின் பேரில் எலக்ட்ரிசிட்டி கான்டீனுக்கள் நுழைந்து விட்டார் அப்பா. அது நாள் வரை அத்தனை சின்சியராக ஒருவரை அவர்கள் சந்தித்ததில்லையோ என்னவோ. அல்லது அவ்வளவு வாய்க்கு ருசியாகப் பண்டங்களை அனுபவித்ததில்லையோ என்னவோ. அப்பா ரொம்பவும் மதிக்கப்பட்டார் அங்கே.
“நம்ம சாமி இருக்காருல்ல. வேறே யார் வேணும்?” என்று சொல்லிக் கொண்டு தங்கள் வீட்டு விசேடங்களுக் கெல்லாம் அப்பாவையே நம்பிக்கையாய் அழைத்து, போதுமான அளவில் கௌரவித்து அனுப்பினார்கள்.
திறமையுள்ளவன் எங்கிருந்தாலும் உண்மையோடும், நேர்மையோடும் இருந்தால் பரிணமிக்க முடியும் என்பதற்கு அப்பா ஒரு உதாரணமாகத் திகழ்ந்தார். காலம்தான் சோதனை செய்தது. ஒரு கட்டத்தில் நஷ்டமென்று சொல்லி கேன்டீனைத் திடீரென்று மூடினார்கள். அப்பாவுக்கு வேலை போனது.
“இத்தனை வருஷமா ஊர்ல ஹோட்டல் உத்தியோகத்துல நெருப்பு முன்னாடிக் கிடந்தது பத்தாதா? நான்தான் வேலைக்கு வந்தாச்சே? போதும். வீட்டோட இருங்கோ. இனிமேல் வேலைக்குப் போக வேண்டாம்’ என்றான் அண்ணா. அப்பா கேட்கவில்லை.
“ஓடி ஓடி உழைச்ச சரீரம்டா இது. சும்மா உட்கார முடியாதுப்பா” என்று கூறிக் கொண்டார்.
அப்பா, சும்மா இருந்த அந்த நாற்பது நாட்கள் ரொம்பவும் கொடுமையானவை. ஏதோ குற்றவுணர்வில் தவிப்பது போல் தென்பட்டார் அப்பா.
வீட்டில் தண்டச்சோறாக உட்கார்ந்து தின்று பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பதை நரக வேதனையாய் உணர்ந்திருப்பார் போலும். அம்மா சொல்லித் தான் தெரிய வந்தது எங்களுக்கு.
“உங்க அப்பாவை எங்கேயாவது வேலைக்குச் சேர்த்து விட்டிடுப்பா. இல்லைன்னா ரொம்பச் சங்கடம்” என்று மெதுவாகக் கூறினாள் அம்மா.
தினசரி காலையில் நாங்களெல்லாம் வெளியே போன பின்பு ஆரம்பிப்பாராம் அப்பா. சும்மா உட்கார்ந்திருப்பதையும், வேலைக்குப் போகவிடாமல் தடுத்து வைத்திருப்பதையும் கையையும், காலையும் கட்டிப் போட்டு விட்டதாகவும் புலம்புவாராம். சதா முனங்கிக் கொண்டேயிருப்பதும், வேளைக்குச் சாப்பிடாமல் சங்கடப்பட்டுக் கொண்டு தண்டச் சோறு என்று தனக்குத்தானே புழுங்கிக் கொண்டிருப்பதும் அம்மாவை ரொம்பவும் சங்கடப் படுத்தியுள்ளது. சரியாகவே சாப்பிடமாட்டேனென்கிறார் என்று வருத்தப்பட்டாள் அம்மா.
அப்பா எந்த வகையிலும் சங்கடம் கொள்ளக்கூடாது என்று அண்ணா சில வேலைகள் செய்திருந்தான். தினசரி தவறாமல் நாளிதழ் வரவழைத்தான். ஆபீஸிலிருந்து வார இதழ்களைக் கொண்டு வந்து போட்டான். அப்பாவின் பொடி போடும் குறைந்தபட்சத் தேவையைக் கூட அவர் நிறுத்தி விடக் கூடும் என்று கருதி ஒரு முழு டப்பாவாய் வாங்கிக் கொண்டு வந்து ஸ்டாக் வைத்தான்.
“எனக்கெதுக்குடா இதெல்லாம்” என்று சலித்தவாறே வாங்கிக் கொண்ட அப்பா தன்வாழ்நாளில் முதன் முதலாக ஒரு டப்பா மூக்குப் பொடியைக் கண்ணாரக் கண்டது அப்போதுதான். எல்லாம் செய்தும் கூடத் திருப்தியாக நாட்கள் நகர்ந்தபாடில்லை. “காபிக்கொட்டை அரைக்கணுமா?” “ரைஸ் மில் போகணுமா?” “ரேஷன் கடை?” என்று வலியக்கேட்டு வாங்கிக் கொண்டு (இல்லை, பிடுங்கிக் கொண்டு) போக ஆரம்பித்தார் அப்பா. பிடுங்கல் விட்டால் சரி என்று அம்மா தள்ளி விட்டாள். காப்பிக்கொட்டை அரைக்கும் கடையில் அப்பா வயதொத்த ஒருவர் அமைந்தார். தினசரி அங்கே சென்று பொழுதைக் கழிக்க ஆரம்பித்தார் அப்பா.
அப்பாவுக்கு எப்போதுமே அரசியல் கூட்டங்கள் கேட்கும் பழக்கமுண்டு. இரண்டு ரூபாய்க்கு வேர்க்கடலையை வாங்கி மடியில் கட்டிக் கொண்டு கூட்டத்திற்கு நட்ட நடுவில் போய் அமர்ந்து விடுவார். மேலமாசி வீதி, வடக்கு வீதி சந்திப்பில் நடக்கும் முக்கிய அரசியல் கூட்டங்கள் வரை ஆஜராகி விடுவது என்பது அப்பா தன் கால் நடைக்கு நிர்ணயித்திருக்கும் தூரம். அவர் போக்குப்படி இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டாயிற்று.
பின் எது வந்து அப்பாவைச் சுணங்க வைத்தது? “பாரு! என் வயசுதான் இருக்கும் அந்த சிகாமணிக்கும், செல்லூர்லேர்ந்து ரெண்டு பஸ் மாறி வர்றாராம் தினமும். விடாம உழைக்கிறார் இந்த வயசுலேயும். எனக்குப் பொழுது போகவில்லைன்னு போய் அவர் பிழைப்பைக் கெடுக்கலாமா? கண் முன்னாடி அவர் உழைப்பைப் பார்த்துண்டு காலத்தை வீணா கழிக்கலாமா? என்னைப் பற்றி என்ன நினைப்பான் அந்த ஆளு? என்னைக்காச்சும் மனம் கசந்து ரெண்டு பேச்சு பேசினா? ஆயிரந்தான் சொல்லு. மனுஷன் உழைக்கிறதுலதான் இருக்கு அவனோட பெருமை..” என்றார் ஒருநாள். பிறகுதான் அம்மாவை நச்சரிக்க ஆரம்பித்தார் அம்மா, அண்ணனிடம் புலம்பினாள்.
அண்ணா ஒப்புதல் தராமலே இருந்தான். அவன் சம்பாத்தியத்திலேயே குடும்பம் பிரதானமாக நின்றது அப்போது. அப்பாவை மீண்டும் போகச் சொல்லத் துளியும் விருப்பமில்லை அவனுக்கு. நாட்கள் கழிந்த பொழுதில் அப்பாவிடம் ஒரு யோசனை சொன்னான் அண்ணா. அதைக் கேட்டு மகிழ்ச்சிதாளவில்லை அவருக்கு. அண்ணாவை உச்சி முகராத குறைதான். ஆனால் அம்மாவுக்கு தான் அதில் திருப்தியில்லை. அரைகுறை மனத்தோடு சம்மதித்தாள்.
மறுநாள் காலையில் ஊருக்குக் கிளம்பிப்போனார் அப்பா. முன்பு வேலை பார்த்த கடை முதலாளியிடம் சென்று கேட்டு நான்கு அடுக்குகள் கொண்ட இரண்டு கண்ணாடிப் பெட்டிகளை வாங்கி வந்தார். ஒரு நல்ல நாள் பார்த்து அரசரடியில் கடைபோட்டார் அப்பா. பத்துக்குப் பத்து அளவு கொண்ட சிறிய இடம் ஏற்றாற்போல் அமைந்தது. அந்த ஏரியாவில் டிகாக்ஷன் காப்பி தருபவர்கள் எவரும் அப்போது இல்லை. அதனால் அது ஒன்றுக்காகவே கடை சட்டென்று பிக்-அப் ஆனது. பால் வாங்கி மாளவில்லை . வியாபாரம் தூள் பறந்தது. அப்பாவின் கைபாகம் எப்போதும் சிறப்பானது. அதனால் மிக்சர், சேவு போனற எண்ணெய்ப் பலகாரங்களும் சட்டென்று தீர்ந்து போயின. அன்றாடச் சரக்கு அன்றன்றே. தினசரி புத்தம் புதிதாயும் சூடாயும், மணக்க மணக்கவும் கிடைக்கும் போது, வாடிக்கையாளர்கள் சர்வ சாதாரணமாய்ப் பெருகினார்கள்.
“டேய்.. சாமியை ஏமாத்தக்கூடாதுடா. ஒழுங்கா காசை எடுத்து நீட்டு…” என்று மாமூல்வாங்கும் ஏரியா பிஸ்தாக்கள் கூட அடக்கமாய் நடந்து கொண்டார்கள். அப்பாவின் தேஜஸ் அப்படி என்று நாங்கள் நினைத்துக் கொண்டோம். தலைமுடியைத் தூக்கிப் படிய வாரி விட்டு, அகன்ற நெற்றியில் விபூதிப்பட்டையோடு பளிச்சென்ற குங்குமம் துலங்க, அவர் கடையில் அமர்ந்திருக்கும் காட்சி காண்போர் மனத்தில் ஒரு பக்தி கலந்த மரியாதையைத் தோற்றுவிக்கும். மனிதர்கள் எல்லோரும் அடிப்படையில் நல்லவர்கள்தான் என்பதற்கு அவர்கள் கூட அப்பாவிடம் மரியாதையாய் நடந்து கொண்ட முறையே சாட்சி.
இப்படியொரு காலம் வரும் என்று கனவிலும் நினைக்கவில்லை அப்பா. பத்து வயது குறைந்தவர் போல் காணப்பட்டார். வாழ்நாளெல்லாம் மற்றவனுக்கு உழைத்து சாய்ந்து, ஓய்ந்ததற்கு இப்போது தான் கடவுள் கண்ணைத் திறந்திருக்கிறார் என்று நினைத்துப் பெருமிதம் கொண்டார். அதிலேயும் சோதனை வரத்தான் செய்தது.
இடத்துச் சொந்தக்காரர் தன் பெண்ணுக்குக் கல்யாணம் என்று சொல்லிக் கட்டடத்தை விலை பேசி கை நீட்டி அட்வான்சும் வாங்கியிருந்தார். ஒரு மாத இடைவெளியில் காலி செய்யவும் என்று திடீரென்று வந்து சொன்ன போது ஐந்தாறு கடைகள் கொண்ட அந்த காம்ப்ளெக்ஸே அதிர்ந்தது. சண்டைக்குக் கிளம்பினர் சிலர். எதற்கு வம்பு என்று, சொன்ன தேதிக்குக் காலி பண்ணிக்கொடுத்தவர் அப்பா ஒருவர் தான்.
“அவசரப் பட்டுட்டீங்களே சாமி, கொஞ்சம் பொறுத்திருந்தீங்கன்னா பகடியா ஒரு தொகை வாங்கிக் கொடுத்திருப்போமில்லை?” என்றனர்.
பிறகு வீட்டுத் திண்ணையில் கடை போட்டார் அப்பா. அது எடுபடவில்லை . பலகாரங்கள் மிஞ்ச ஆரம்பித்தன. பால் மிச்சமாயிற்று. வியாபாரம் படுத்தது. போட்ட முதலை எடுப்பதே பெரும் பாடாயிற்று. வானவில் போல் தோன்றி மறைந்த, வியாபாரம் கோலோச்சிய கடை நாட்களை நினைத்து வருந்தலானார் அப்பா.
“நம்ப ராசிதான் தெரிஞ்சதாச்சே. ஜாண் ஏறினா முழம் சறுக்கும். உழைச்சதெல்லாம் போதும். பேசாம அடங்கிக் கிடங்கோ’ என்றாள் அம்மா.
அப்பா அடங்கவில்லை. அவர் மனசும் அடங்கவில்லை . அவரை அடக்கவேண்டும் என்று தான் இந்த உபாதை வந்து அவரை அமர்த்தியதோ என்னவோ?
இதோ.. கூடத்தில் கட்டிலில் அமர்ந்திருக்கிறார் அப்பா. உலர்ந்த துணிகளைக் கொண்டு வந்து அவர் முன்னே போட்டிருக்கிறாள் அம்மா. இயக்கமுள்ள வலது கையினால் ஒவ்வொன்றாய் எடுத்து இயக்கம் குறைந்த இடது கையை மெது மெதுவாகப்பயன் படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார் அப்பா. எதிரே ஒரு பையில் போட்டுக்கட்டிய சிறிய மணல் மூட்டை. அதனோடு இணைந்த கயிறு மேல் உத்திரத்தின் வளையத்தினுள் புகுத்தப்பட்டு மறு நுனி அப்பாவின் முன்னே தொங்கிக் கொண்டிருக்கிறது. முயற்சி தொடர்கிறது அங்கே. துணி மடித்து முடிந்ததும் வலது கையால் அந்தக் கயிற்றைப் பிடித்து இடது கைக்குக் கொடுத்து மறுபடியும் தொங்கி கொண்டிருக்கும் அந்த மணல் மூட்டையை இழுத்து இழுத்து விடுவார். இது அவரது அன்றாடப் பயிற்சி. விடாமுயற்சி.
“உங்க மனோபலத்துக்கு முன்னாடி இதெல்லாம் ரொம்ப சாதாரணம் சாமி” என்று சொல்லிக் கொண்டு ஃபிஸியோதெராபிஸ்ட் படிப்படியாகத் தன் வருகையை நிறுத்திக் கொண்டார். மனிதனின் தன்னம்பிக்கையைப் போன்ற வலுவான ஆயுதம் ஏதுமில்லை . அப்பா அதற்கு ஓர் உதாரணம்.
நாட்கள் அப்படியே நகருமா? உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டபோது அப்பாவுக்கு மீண்டும் ஒரு நேரம் வரத்தான் செய்தது.
“என்ன வெங்கடேஸ்வரன், எப்படியிருக்கிறீர்?” என்று கேட்டுக் கொண்டே பழைய கடை முதலாளி ஒரு நாள் விசாரித்துக் கொண்டு வந்து நின்றார் திடீரென்று.
“ஆயிரந்தான் சொல்லுமையா, உம்மை மாதிரி ஒரு நம்பிக்கையான மனுஷனை என்னுடைய இந்த நாற்பத்தஞ்சு வருஷ வியாபார அனுபவத்தில் நான் சந்திச்சதேயில்லை. அதனால் தான் இப்போ தேடி வந்திருக்கேன். உம்முடைய உழைப்புக்கும், நேர்மைக்கும் கிரீடம் வச்சாப்போல நான் இதை முடிவு பண்ணியிருக்கேன். நீர் மறுக்கக் கூடாது. இது என்னுடைய ஆப்த நண்பருக்கு அன்பு வேண்டுகோள்” சொல்லிக் கொண்டே போனார் அவர். அப்பா பதில் எதுவும் சொல்லாமல் இருந்தார். அதுவே ஒப்புதலுக்கு அறிகுறியானது.
இதோ – வாசலில் ரிக் ஷா வந்து நிற்கிறது. மூன்றாவது கால் ஊன்றி மெல்ல நடந்து சென்று அப்பா அதில் ஏறுகிறார்.
‘வரேன்’ என்று அம்மாவைப் பார்த்துச் சொல்லி விட்டுப் பயணிக்கிறார்.
அப்பாவின் முகத்தில் அந்த முதலாளிக்களை எப்படி வந்தது.?” என்று பெருமிதத்தோடு பார்க்கிறோம் நாங்கள். இதே மதுரையில் சந்தைக்குப் பக்கத்தில் தமிழ்ச் சங்கம் சாலையில் ஸ்ரீ வெங்கடேஷ் கபே’ என்கிற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறதே ஒரு ஹோட்டல்! அந்த வழி போனீர்களென்றால் தவறாமல் அங்கே நுழையுங்கள்.
*வாங்கோ . வாங்கோ . என்றும், நமஸ்காரம். வரணும் என்றும் வாய் மணக்க, கல்லாவில் அமர்ந்து கொண்டு உங்களை வரவேற்கும் ஓர் உருவம்.
அது எங்கள் பெருமைக்குரிய அப்பா தான். ‘குறையிருந்தால் எங்களிடம் முறையிடுங்கள். நிறையிருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.”
கல்லாப்பெட்டியின் கண்ணாடி மேஜையில் பளபளக்கிறது இந்தப் பொன்மொழி.அப்பாவின் உயர்வுக்கு ஆணிவேரே இதில் தானே அடங்கியிருக்கிறது?!
– தினமணி கதிர், 1999.
![]() |
1987 முதல் உஷாதீபன் என்கிற புனை பெயரில் எழுத ஆரம்பித்த இவர் தனது எழுத்துப் பணியை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். வார, மாத இதழ்களிலும் இலக்கியச் சிறு பத்திரிகைகளிலும் இவரது கதைகள் வெளி வந்துள்ளன. அச்சு மற்றும்இணைய இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார். இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரைச் சொந்த ஊராகக் கொண்டவர். 1951 ல் பிறந்த இவர், தமிழ்நாடு அரசு வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பாளராகப்…மேலும் படிக்க... |