அபியும் நானும்

2011 சென்னையில் ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு இருந்த சமயம். ஒரு புதிய நிறுவனத்தில் சேரும் எவரும் குறுகிய காலத்திலேயே சக ஊழியர்களுடன் நட்புடன் பழகுவது இயல்பு தானே. அப்படி எனக்கும் சில சக ஊழியர்கள் நெருக்கமான நண்பர்கள் ஆனார்கள்.
அந்த நிறுவனத்திற்கு வெளியே அமைந்திருந்த ஒரு சிறிய பெட்டிக்கடையில் டீ, வடை சாப்பிட செல்வதும். அவர்கள் சிகரெட் இடைவெளிக்காக செல்லும்பொழுது உடன் செல்வதுமாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக இந்த நட்பு வலுப்பெற்று கொண்டே இருந்தது. இப்படி சக ஊழியர் சந்திப்பில் பல விடயங்கள் விவாதிக்கப்படும். அதில் ஒன்று ரியல் எஸ்டேட் .
அந்த சமயத்தில் அதில் இரண்டு நண்பர்கள் எப்பொழுதும் அவர்கள் செய்த ரியல் எஸ்டேட் முதலீட்டை பற்றியும் எப்படி அவர்கள் முதலீடு செய்த இடத்தின் மதிப்பு அரசின் ஒரு சாலை விரிவாக்கத் திட்டத்தால் பல மடங்கு உயர்ந்தது என்றும் அவ்வப்போது கூறிக் கொண்டே இருப்பார்கள். இப்படியாக அந்த சமயத்தில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள்ளும் சென்றது.
அவர்களிடம் எந்த நிறுவனத்தின் மூலமாக முதலீடு செய்தார்கள் என்று கேட்ட பொழுது அவர்கள் கூறிய ஒரு நிறுவனத்தின் பெயர் தான் அபி எஸ்டேட். சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனம். அவர்களுடைய விளம்பரங்களில் இண்டகரேட்டட் வித் இன்டகிரிடி (integrated with integrity) என்று எழுதி இருப்பார்கள். அதை அப்படியே நம்பி விடக்கூடாது என்பது எனக்கு அன்று தெரியவில்லை.
என்னுடைய மனக்குரங்கு தினமும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய செய் என்று கூறிக் கொண்டே இருந்ததால், ஒருநாள் தொலைபேசியை எடுத்து அபி எஸ்டேட்டை அழைத்தேன்.
அவர்களுடைய சேல்ஸ் டீம் சென்னையை சுற்றி அவர்களுடைய பல திட்டங்களை பற்றியும், என்னுடைய பட்ஜெட் பற்றியும் தெரிந்து கொண்டார்கள். அந்த வார இறுதியில் எங்களுக்கு ஒரு மனை திட்டத்தை காண்பிப்பதற்காக ஒரு சந்திப்பை நிர்ணயித்தார்கள்.
அந்த நாளும் வந்தது நான், என் மனைவி, என்னுடைய ஒரு வயது நிரம்பிய குழந்தை மூவரும் அவர்கள் அனுப்பிய காரில் சென்னை போரூரில் இருந்து பயணப்பட்டோம். வெகு நீண்ட பயணம், கார் செங்கல்பட்டை கடந்து, செம்பரம்பாக்கம் ஏரியையும் கடந்து சென்றது. கடைசியாக அந்த மனை திட்டத்தை அடைந்தோம்.
ஸ்ரீவாரி ரெசிடென்சி என்று ஒரு மனை பிரிவு திட்டத்தை வைத்திருந்தார்கள். அழகாக மனை பிரிவுகள் பிரிக்கப்பட்டு தார் சாலைகள் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு மனை பிரிவின் முன்பகுதியிலும் அழகிய பூச்செடிகளை நட்டிருந்தார்கள். சாலையின் இருமருங்கில் பல வகையான பூ மரங்கள் மற்றும் பழ மரங்கள். அந்த மனை திட்டம் முழுவதுமாக சொட்டுநீர் பாசனம் மூலமாக இந்த மரங்கள் எல்லாம் வளர்க்கப்படும் என்றும் கூறினார்கள். பல விளம்பரங்களில் காணுவதைப் போல சென்னைக்கு மிக அருகில், ஐந்தடியில் சுவையான குடிநீர், என்பது போன்ற விளம்பர பலகைகளை பல இடங்களில் காண முடிந்தது. அந்த மனை பிரிவின் அருகிலேயே ஒரு அழகிய குன்று ஒன்றும், அதற்கு மேல் ஒரு விஷ்ணு கோவிலும் இருந்தது. இங்குதான் சனி பகவான் என் கழுத்தில் வந்த அமர்ந்தார்.
அந்தக் குன்றையும், விஷ்ணு கோவிலையும் கண்ட பொழுது அந்த மகாவிஷ்ணுவையே தரிசித்ததை போன்ற உணர்வுடன் ஆகா இதுவல்லவா என் மனைக்கான இடம் என்றேன். சிறிது சுற்றி திரிந்து பல மனைகளை பார்வையிட்டு இறுதியில் ஒரு மனையை தேர்ந்தெடுத்தேன்.
ஒரு செக்யூரிட்டி, சில தோட்டக்காரர்கள், தூய்மை பணியாளர்கள் என்று பலர் அன்று அங்கு பணிபுரிந்து கொண்டு இருந்ததை என்னால் காண முடிந்தது. எங்களுடன் வந்த சேல்ஸ்மேன் அவர்களை பெயர் சொல்லி அழைப்பதும் அவர்கள் மிகப் பணிவுடன் ஓடி வந்து இவர்கள் சொல்லும் வேலையை கேட்டு அதை முடிப்பதற்காக ஓடுவதுமாக இருந்தார்கள். என் குழந்தையைக் கண்ட ஒரு தோட்டக்காரர் ஓடிச் சென்று அங்கிருந்த ஒரு சிறிய கொய்யா மரத்திலிருந்து ஒரு கொய்யாப்பழத்தை பிடுங்கி குழந்தையின் கையில் திணித்தார். சனிபகவானின் கருணையால் அன்று அவர் கொடுத்த கொய்யா அல்வா என்று நான் அறிந்திருக்கவில்லை. மனைகளை பார்த்து முடித்த கையோடு அவர்கள் அந்த விஷ்ணு கோவிலுக்கு எங்களை அழைத்து சென்றார்கள். அந்த கோவில் மிக அழகாக இருந்தது.
சில வாரங்களில் பத்திரப்பதிவு முடிந்தாகிவிட்டது. பத்திரப்பதிவு நாள் அன்று அந்த இட உரிமையாளரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறிது நேரம் பேசி பழகிய பின் அவர் கூறியது இன்றும் என் நினைவில் இருக்கிறது, சார் இவ்வளவு விலை அதிகமாக விற்பார்கள் என்று நான் நினைக்கவே இல்லை என்றார். அப்பொழுதாவது நான் விழித்திருக்க வேண்டும். என்ன செய்ய சனி பகவான் கழுத்தில். சில வாரங்களில் அந்த மனைக்கான பத்திரங்கள் எங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன. ஒரு கிராமில் தங்க நாணயம் கொடுத்தார்கள். 2011 இல் அந்த மனையின் மதிப்பு எட்டரை லட்சம். 2000 சதுர அடி நிலம். பணம் சேமித்து சில காலங்களில் இங்கு ஒரு சிறிய வீடு கட்டி அந்த வீட்டில் இருந்து தினமும் அருகில் இருந்த குன்றில் வீற்றிருந்த விஷ்ணு தரிசனம் இதுதான் என் வாழ்க்கையின் பாக்கியம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டேன்.
அந்த மனை திட்டத்தை பல வருடங்களுக்கு அபி எஸ்டேட் நிறுவனமே பராமரிக்கும் என்றும் கூறினார்கள்.
சில வருடங்கள் ஓடின 2015இல் என்னுடைய வாழ்க்கையில் முதல் காரை வாங்கிய பின் ஒரு நாள் நாம் வாங்கிய இடம் எப்படி இருக்கிறது என்று பார்த்து வரலாம் என்று செம்பரம்பாக்கம் நோக்கி புறப்பட்டோம். பல மணி நேரம் தேடியும் எங்களால் அந்த இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. முடிவில் பலரிடம் விசாரித்து, ஒரு வழியாக அந்த மனை திட்டம் இருந்த அந்த இடத்தை கண்டுபிடித்தோம். எவ்வித பராமரிப்பும் இன்றி, புதர்கள் மண்டி, காட்டுச் செடிகளும், களை செடிகளும் நிறைந்து இருந்தது அந்த நிலம். அருகில் வசிப்பவர்களின் குழந்தைகள் அந்த நிலத்தை இயற்கை உபாதைக்கு பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். குண்டும் குழியுமான சாலைகள், ஒன்று இரண்டு மரங்கள் மீதம் எல்லாம் முட்செடிகள். என்னுடைய இதயம் கனத்தது, கஷ்டப்பட்டு சேமித்த என்னுடைய பணத்தை குப்பைத் தொட்டியில் வீசியது போன்ற ஒரு உணர்வு. அருகில் குன்றும் கோவிலும் அப்படியே இருந்தன. குன்றின் மேல் கல்லாகி வீட்டில் இருந்த வரதனிடம் முறையிடுவதற்காகவே அன்று அந்த கோவிலுக்கு சென்றேன். என்னை இந்த கயவர்களிடம் சிக்காமல் தடுத்து இருக்க வேண்டாமா என்று முறையிட்டேன்.
ஆனால் முறையிட்டு என்ன பயன். மிகுந்த மன வருத்தத்துடனும், ஏமாற்றத்துடனும், கோபத்துடனும் அந்த நிறுவனத்திற்கே சென்று முறையிட்டேன். அவர்கள் ஒன்றுமே தெரியாததை போல் பேசினார்கள். அப்பொழுதுதான் நான் முற்றிலும் ஏமாந்தது தெரிந்தது.
அன்று தான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. ரியல் எஸ்டேட் முதலீடு எல்லாருக்கும் உகந்தது அல்ல. அதில் முதலீடு செய்ய வேண்டுமானால் மிகுந்த சாமர்த்தியம் வேண்டும். என்னுடைய சக ஊழியர்களின் நேரம், அதிர்ஷ்டம், விதி என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அவர்களுடைய முதலீட்டின் மதிப்பு உயர்ந்ததை நம்பி நானும் அதே நிறுவனத்தின் மூலமாகவே முதலீடு செய்ய வேண்டும் என்று நினைத்தது மகா தவறு. அதேபோல ஒரு மனை திட்டத்தை பார்வையிட்ட அன்றே முடிவு செய்யக்கூடாது. ஆண்டுகள் பல கடந்து விட்டன. இப்பொழுதும் எந்த மனைப்பிரிவு திட்டங்களை பார்த்தாலும் என் மனம் அபி எஸ்டேட் நிறுவனத்திடம் ஏமாந்ததை நினைவுபடுத்த தவறியதே இல்லை.
இன்றும் அந்த நிலத்தின் பத்திரத்தை எப்பொழுதாவது பார்க்கும் பொழுது நான் 2011 இல் கண்ட சேல்ஸ்மேன், தோட்டக்காரர், தூய்மை பணியாளர் என்று எல்லோரும் ஞாபகத்துக்கு வருகிறார்கள். அன்று அவர்கள் அரங்கேற்றியது ஒரு பெரிய நாடகம். என்னை போன்ற ஏமாந்தவர்கள் பார்வையாளர்கள். அவர்கள் மிகப்பெரிய நாடகக் கலைஞர்கள். என்ன செய்ய integrated with integrity என்று கூறும் ஒரு நிறுவனம் இப்படி தான் இருக்கும் போல.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 31, 2026
பார்வையிட்டோர்: 117