அன்புள்ள ஸ்நேகிதிக்கு…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: February 6, 2025
பார்வையிட்டோர்: 5,737 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அமலி, ஐ லவ் யு .உனக்குத் தெரியாது. ஐ ஹேவ் ஆல்வேஸ் லவ்ட் யு. 

ஸுனோ இதை என் தோளில் பின்னாலிருந்து படிக்கிற தென்றால் படிக்கட்டும். ஐ டோன்ட் கேர். அவளும் ரகளை மாதிரி ஜூல் காட்டுவாளே ஒழிய, ஷி ஆல்ஸோ டஸின்ட் கேர். எனக்குத் தெரியும் வி டோன்ட் கேர். ஏதோ சின்டாக்ஸ் படிப்பதுபோல் தமாஷா இல்லை? 

அன்புள்ள ஸ்நேகிதிக்கு, நீ எனக்கு வெறும் ஸ்நேகிதி தானா? ஆனால் வேறு எப்படி ஆரம்பிப்பது? ‘மை டியர்லவ் என்றே தொடங்கலாம். ஆனால் நம்மிடையில் சாரங்களை முழுக்கத்தட்டியாகவில்லை. தவிர இந்தத் தலைப்பில் கதிரில் ஒரு கதை படித்தேன். ஆகவே ஆரம்பம் சம்பிரதாயமாகவே இருக்கட்டும். 

அன்று ஆஸ்பத்திரியில் கண் ஆப்பரேஷன் ஆகியிருந்த என் சிநேகிதனைப் பார்க்கச் சென்ற இடத்தில் நர்ஸ் யூனிபாரத்தில் உன்னைக் கண்டபோது அதிர்ச்சி அடைந் தேன் என்று சொல்லவும் வேண்டுமா? உன் கருவிழியுள் சிறுவிழி சட்டென கண்ட சுருக்கத்தில், உன் கன்னங்களில் ஏறிய முலாமில் நீயும் என்னை அடையாளம் கண்டுகொண் டாய் என்று கண்டேன். ஆனால் அதை நீ வெளியே காட்டிக் கொள்ள விருப்பப்படவில்லை. 

‘ஆ! ஸிஸ், ஹியர் ஈஸ் தி என்வலப் ஃபார் யு. என் சிநேகிதன் கப்போர்ட் மேல் கண்ணாடி தம்ளர் அடியில் சுட்டிக்காட்டினான். 

‘ஓ.தேங்க்யு’.அதை எடுத்து உன் யூனிஃபாரம் பையில் திணித்துக்கொண்டு. விர்ரென்று போய்விட்டாய். 

‘ஏய், இவள் க்ளீனா டிப்ஸ கேக்கறாடா! கொடுத்தால் நானாக அல்லவா கொடுக்க வேண்டும்?” 

‘ஹவ் ஸோ?’ 

நாளைக்கு மத்தியானம் 11 மணிக்கு உங்களை டிஸ்சார்ஜ் செய்துடுவாங்க. ஆனால் நைட் டியூட்டி முடிஞ்சு காலை 8 மணிக்கே நான் போயிடுவேன். தேங்க் யு. அப்படின்ன வரிகளுக்கிடையே நான் படித்துக்கொள்ள வேண்டிய அர்த்தம் என்ன நீயே சொல்லு! 

முட்டையை உடைப்பதுபோல் என் கையிலிருந்த டார்ச் – ஆல் அவன் மண்டையில் ரெண்டு மொத்தலாம் போல் ஆத்திரம் வந்தது. நீ வாழ்ந்த வாழ்வு என்ன? நீ வாயில் தங்க ஸ்பூனுடன் பிறந்தவள் என்பதை அந்த சோமாரி கண்டானா? ஆனால் கேட்க எனக்கு உரிமை என்ன இருக்கிறது? அவன் கொடுக்கிறான். பேசுகிறான். நீ வாங்கிக் கொள்கிறாய், குறுக்கே நான் யார் குமுறுவதோடு சரி. 

அமலி, மூத்திர பாட்டிலும், பெட்பேனும் தூக்கும் கதி உனக்கு ஏன்? சமூகசேவை செய்கிறாயா? ராட்! காதில் பூ சுத்தாதே. சமூக சேவை செய்பவளுக்கு டிப்ஸ் ஏன்? எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்கு என்பதுதான் உண்மை. ஆனால் ஏன்? ஏன்? 

குந்தித் தின்னால் குன்றும் குந்துமணி ஆகும் என்கிற பழமொழியா? 

தாயோடு அறுசுவைபோம் 

தந்தையோடு கல்விபோம் 

மக்களோடு செல்வம்போம் 

எனக்கு வயசாயிடுத்தோன்னோ? கொஞ்சம் பழமொழி யில் பேசுவேன். உன் விஷயத்தில் மக்களுக்கு வழியில்லை. அன்லெஸ் – அன்லெஸ்… நோ . மனம் ஒரு சாக்கடை எது எப்படி இருந்தாலும் அதைக் கேட்கவும் எனக்கு என்ன உரிமை. நல்லதையே நான் காணவேண்டும். பிகாஸ் ஐ லவ்யு உன் விஷயத்தில் தந்தையோடு செல்வம்போம் என்று கொள்கிறேன். 

நாலைந்து வருடங்களுக்கு முன். 

உன் தகப்பனார் காலமான செய்தி பேப்பரில் வந்தது. மெப்புக்கு உனக்காக இத்தனை நாள் வளைய வந்திருக்கிறார். ஆனால் அவர் மரணத்துக்குக் காரணம் நமக்கல்லவா தெரியும்! இதய விரிசல் – 

அம்மா முன்னாலேயே போனாளோ பிழைத்தாள் என்று நீயே பேச்சுவாக்கில் என்னிடம் சொல்லியிருக்கிறாய். அஸைலம் கேஸ். பாவம் ஒரே பெண். யாருக்குத்தான் தாங்கச் சக்தியிருக்கும்? என்னென்ன ஆசையெல்லாம் வைத்திருப்பாள்? 

இருந்திருந்து ஒரே மகவு அதுவும் பெண். அதை மீனாக்ஷி கல்யாணம் பண்ணி – பட்டணமே திரண்டது. பெண்ணையும் பிள்ளையையும் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்த அடுத்த மாசமே பெண் பாக் அண்ட் பாகேஜ். பீரோ கட்டில், பர்னிச்சர் உள்பட திரும்பிவிட்டால் எல்லோ ருக்குமே தாங்கற சக்தி இருக்குமா? காதோடு காது வைத்த மாதிரி திரும்பினாலும் ‘புசுக்’கை எத்தனை நாள் அமுக்கி வைக்க முடியும்? அங்கு என்ன நடந்தது? தாய். தகப்பன் தவிர மற்றவரெல்லாம் அவருக்குத் தோன்றியபடி வரிகளி டையே படித்துக்கொள்ள வேண்டியதுதான். இஷ்டப்படி தான் படித்துக்கொண்டார்கள். படித்துக் கொண்டோம். முதலில் தாய்க்கும் தகப்பனுக்குமே எந்த அளவுக்குத் தெரியப்படுத்தினாயோ? உனக்கு இங்கேயே கொஞ்சம் இஷ்டராஜாங்கி என்றுதான் பெயர். ஒரு மகவு அதுவும் பெண், செல்லப் பெண் அல்லவா? உன் அப்பா பெரிய டாக்டர். லயன்ஸ் கிளப் ரோடரி சேர்மன் எல்லாவிதங் களிலும் பிரமுகர். ஆனால் அவர் கதியே பிஸிஷியன் ஹீல் தைஸெல்ஃப் என்று ஆகிவிட்டதே! 

உண்மை எப்பவுமே காயுள் விதை, மனிதனுள் விந்து போல் ஒளிந்து கொண்டுதான் இருக்கும். அதன் முழுத்தன்மை கண்டுபிடிக்கவே முடியாது. கண்டுபிடிப் யதற்கும் இல்லை அது. 

ஃபர்னிச்சரை விற்பதாக பேப்பரில் விளம்பரம் கண்டு நான் உங்கள் வீட்டுக்கு வந்த சமயத்தில்தான் நேருக்கு நேர் முகம் பார்த்துக்கொண்டோம். அதை நான் மறக்கவே மாட்டேன். இதோபார் அமலி. நம்மிடையே நடந்த எதையுமே நான் மறக்கவில்லை. என் நினைப்பெல்வாம் ஒன்வே டிராபிக்தான். ஆனால் புதையல்போல அவைகளை நான் பூதம் காக்கிறேன். இது வெறும் கடிதம் அல்ல. த்தனை வருடங்களில் என் நினைப்பின் முனைப்பு. நுனியில் பட்டாசுத் திரி பற்றிக் கொண்டுவிட்டது. எப்போ டுமீல்’ எனக்கே பயம். நான் காலிங்பெல்லை அழுத்தி கதவு திறந்ததும் நான் பார்த்த முகம் அரைத்தூக்கம் கலைந்த முகமா? அழுத முகமா? அறியேன். நெற்றிப் பொட்டில் மயிர்பிரி பெரியதாக ஒன்று கலைந்து உள்ளே மின்விசிறிக் காற்றில் அலைந்தது. ‘யெஸ்?’ 

‘மிஸஸ்-?” 

‘நான் மிஸ்ஸுக்குத் திரும்பியாச்சு.’ 

மிஸ் அமிர்தவல்லி. 

அமிர்தவல்லியின் குறுகல் அமலி அமளி என்றிருந்தால் இன்னும் பொருத்தமாயிருக்கும். 

‘…?’

‘நெவர் மைண்ட் 

“மிஸ் அமிர்தவல்லி.” 

“கால் மி அமலி.” 

”மிஸ் அமலி! உங்களிடம் கட்டில் விற்பனைக்கு இருப்பதாக அறிகிறேன். அதை நான் பார்க்கலாம்.” 

“ஓ.பார்க்கலாமே.” 

”விலை?” என்று இழுத்தேன். 

“டோன்ட் பாதர். ஏதேனும் குடுத்தால் போச்சு. விலை நாம் கேவாஸ். ஒரு பாட்டுக்கு உங்களுக்கு அது கிடைக்கும். உங்களுக்குப் பாட வராவிட்டால் ஒரு கழுதை யின் கத்தலுக்கே அது கிடைக்கும். 

இவள் என்ன பேசுகிறாள்? 

“ஆனால் கட்டில் காத்திருக்கலாம்.” 

“காத்திருப்பதா? எனக்கு இன்னும் ஒரு வாரத்தில் கல்யாணம்”. என் கன்னங்களில் வெட்க ரத்தம் குறுகுறுத்தது. 

“ஓ! கங்கிராட்ஸ். காத்திருக்கலாமென்றால் காப்பி குடிக்கும் நேரம் வரையில்.” 

நம் இருவரின் சிரிப்பு ஒன்றோடொன்று கலந்தது. 

“நீங்கள் பெல்லை அழுத்துகையில் நான் காப்பி தயார் பண்ணிக்கொண்டிருந்தேன். உள்ளே வாருங்கள்” சொல்லிக் கொண்டே நீ மேலாக்கை சரிப்படுத்திக் கொண்டாய். தற்செயலா அல்லது அதில் நான் சைகை படிக்கவா? அதற் கெல்லாம் அப்போது நான் குருடு. ஏனெனில் நெஞ்சு வர்ணம் பூராஸுனோ-ஸனிதா ஃபார்யு வியாபித்திருந்தாள். 

விரிந்தன. சட்டென உன் கைக்குட்டையைக் கிழித்து தரை யில் மண்டியிட்டு நீ கட்டை விரலில் மேல் துணியைச் சுற்றிக் கொண்டிருந்தபோது- 

சோபாவில் நான் உட்கார்ந்தேன். 

கிச்சனிலிருந்து நீ வெளிவருகையில் உன் இருகைகளிலும் நீ ஏந்திய இரண்டு பீங்கான் கோப்பையை சாசர்களில் கம்மென்று ஆவி பறந்தது. என் கோப்பையை நான் எடுத்துக் கொள்கையில், சூடோ, இசைகேடோ கோப்பை தவறி தரையில் கீழே விழுந்து உடைந்த சுக்கல்களை பித்துக் கொள்ளி மாதிரி நான் பொறுக்க முயன்றபோது எப்படியோ என் கட்டைவிரல் ரேகையில் சிவப்பு புஷ்பித்து இதழ்கள் 

அமலி காதல் பிறக்க நேரம். இடம், காரணம் என்றே கிடையாதா? என் பார்வைக்கு நேராக உன் முகம்கூட ல்லை. அது. காயத்தின் மீது குனிந்திருந்தது.விர்ரென்று நடுவகிடு தன் பாதையை வகுத்துக்கொண்டு உச்சி மண்டையின் அடரில் மறைந்த அழகில் நான் என்னை இழந்தேன். நீ என்ன தைலம் உபயோகிக்கிறாய் அமலி? காமினி ஹேர் ஆயிலா? அதன் மயக்கா? இல்லை இல்லை. உன் இளமையின் மணம். இல்லை அதுகூட இல்லை. உன் மணமே. அமலி முதலில் காதல் என்பதே என்ன? இந்த வார்த்தை இதிகாச காலத்தினின்று இன்று வரை காவியங் களிலும் கதைகளிலும், கவிதைகளிலும், வசனத்திலும், வாய் வார்த்தையிலும் வாங்கியிருக்கும் அடியும் பட்டிருக்கும் எச்சிலும் கொஞ்ச நஞ்சமல்ல. ஆயினும் அதற்கு இன்னும் ஏன் விவஸ்தை இல்லை? 

“மிஸ்டர் இந்தக் கட்டிலை நான் உங்களுக்கு விற்கப் போவதில்லை.” 

“ஏன்?” 

“எனக்கு இஷ்டமில்லை.” 

“ஏனாம்” 

“சகுனம் சரியில்லை.” 

“இதற்கெல்லாம் சகுனம் பார்க்கவேண்டியவன் நான் அல்லவா?” 

“மிஸ்டர்”-இன்றுகூட உனக்கு என் பெயர் தெரியாது அல்லவா? “நாலு காசு மலிவுக்கு ஆசைப்படாதீர்கள். சனியன் பிடித்த கட்டில் நான் ஏதேனும் ஆஸ்பத்ரிக்கு-” 

“ஓ ப்ளீஸ் ப்ளீஸ்.’ 

“நோ உங்களுக்கு கட்டில் கிடையாது.” 

“ஓ ப்ளீஸ்.’ 

“என் நேரத்தை வீணாக்காதீர்கள். குட்பை.” 

வாசற்கதவை சாற்றக்கூட கவலைப்படாமல் விர்ரென்று மாடியேறிப் போய்விட்டாய். 

டீப்பாயில் இன்னொரு காபி ஏடு புடைக்க ஆரம்பித்து விட்டது. 

காதல் என்பது சாம்பலா? அல்லது அதனுள் மறைந்து கொண்டிருக்கும் தணலா? 

அறியாமல் சாம்பலை அள்ளிவிட்டு உள்ளங்கையில் சுறீல்! 

அல்லது இரண்டுமேயா? 

அல்லது பூமிக்குள் புதைத்து வைத்த ஸ்புடமா? 

என் உள்ளேயே நீ புகுந்துவிட்டாய் என்று எனக்கு 

அப்போது நிச்சயமாய்த் தெரியாது. 

தகி தகி தகி – 

அடுத்தபடியாக நாம் சந்தித்தபோது ஏழெட்டு மாதங் கள் ஏன் ஒரு வருடமே ஆகியிருக்குமோ?| 

தாஸ பிரகாஷ் ஐஸ்கிரீம் பார் உள்ளே நுழைந்த நான் ஐஸ்ட் காஃபி ஒரு மேஜையில் உட்கார்ந்து கொண்டேன். என்கிறார்களே எப்படி இருக்கும்? அசடு வழியுமா? மரியா தையாக ஹாட் காஃபியே சாப்பிட்டு விடலாமா? 

‘ஓ கட்டில் வாங்கும் என் சிநேகிதரா?” என் யோசனை வெடுக்கென்று கலைந்து தலை நிமிர்ந்தால் நீ! என் அழைப் பிற்குக் காத்திராமலே எதிரேயும் உட்கார்ந்துவிட்டாய் உனக்கு முகத்தில் தனிச் சிவப்பு. கட்டில் வாங்கியாச்சா?’ 

‘ஏன் உலகத்திலேயே உன் ஒரு கட்டில்தானா?’ 

‘கொயட் ரைட், எத்தனை எத்தனையோ கட்டில்கள் ட்ரபிளும் அதுதான்.’ 

“இல்லை கீழே பாயில் படுத்தால் ஆகாதா?” 

“உண்மை, உண்மை இதைக் கட்டில் வாங்கு முன்பே தெரிந்துகொண்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. வாங்கிய பின் உணர நேர்ந்தால் பரிதாபத்திற்குரியவர்.” 

“டாம் யு!” 

உனக்கு எப்படித் தெரிந்தது? எனக்குத் தொண்டை ஐடியில் கசந்தது. ஏனெனில் அப்பொழுதுதான் எனக்கும் ஸுனோவுக்கும் இடையில் வேஷங்கள் ஒவ்வொன்றாய் படிப் படியாய்க் கலைந்து கொண்டிருந்தன. 

எங்களுக்கு எத்தனை எத்தனை முகங்கள்! முகத்தினடி யில் அதனடியில் இன்னொரு முகம். 

‘என்ன சாப்பிடுகிறீர்கள்?’ 

“நீ வாங்கிக் கொடுத்து நான் சாப்பிடும் நிலை இன்னும் விரவில்லை. நீ என்ன சாப்பிடுகிறாய்?” 

நான் எப்பொழுது நீக்கு நழுவினேன்.நீ கண்டுகொண்ட தாகவே தெரியவில்லை. 

‘அப்படியானால் வி வில் ஹேவ்…’ நீ ஒரு பேர் சொன்னாய்.  சர்வர் உனக்கு தனிப்புன்னகை காட்டி ஸ்பெஷல் சலாம் போட்டு பரபரப்புடன் சென்றான். 

உன் விழிக்குறும்பில் லேசாக உன் முகம் என் பக்கம் சாய்ந்த குனிவில் குப்! 

ஓ ! விஷயம் இந்த அளவிற்கு முற்றிவிட்டதா? ஆந்திரா வில் ஸ்த்ரீகள் சுருட்டுப் பிடிக்கக் கண்டிருக்கிறேன். இங்கேயே சில நாகரீக மணிகள் சிகரெட்! ஆனால் அமலி நீ..நீ…. 

நீ வெறுமன சாப்பிடவா வந்தாய். எனக்கு ஏதோ எதிர் சவால் விடுகிறாய். நானும் மாட்டிக்கொண்டு விட்டேன் என் பர்ஸில் அன்றைய பில் பொசுங்கின பொசுங்கலிலிருந்து தேற ஒரு மாதம் பிடித்தது. 

“மிஸ்டர் கட்டில் துரோகம் என்று ஒன்று இருக்கிறது. முதலில் பிறவி எடுக்கிறோமே அம்மா வயிற்றிலிருந்து விழும் குழந்தை அது உயிருக்கு உலகம் இழைக்கும் துரோகம். அதிலிருந்து தேறிக்கொண்டே வந்தால் அடுத்து கட்டில் துரோகம். ஒவ்வொன்றாய் தெளியத் தெளிய ஞானம் என்கி றோம். ஆனால் ஞானம் ஐந்துபைசாவுக்குக்கூட பிரயோசன மில்லை. 

நீதான் பேசினாயா? உனக்கு இவ்வளவு புத்திசாலித் தனம் உண்டா? 

உன்னில் புகுந்துகொண்டிருக்கும் ஏதோ ஒன்றா? நீ போய் பார்த்து வந்த அமெரிக்கவா? அல்லது தீர்த்தமா? சங்கு தீர்த்தம்,சர்வ தீர்த்தம், பாட்டில் தீர்த்தம் – 

இதுபோல இன்னும் எதையுமே விட்டுக்கொடுக்காமல் சின்னதும் பெரிதும் சம்பந்தமும் அற்றதுமாய் தத்துவங்கள், அழகுகள், பேத்தல்கள் – 

ஒன்று சந்தேகமில்லை. நீ அசடு இல்லை. நாம் பாரில் இருந்து வெளிவந்த பொழுது இரவே வந்துவிட்டது. முற்றிய இரவு. 

பூந்தமல்லி ரோடில் கார்கள் பறந்தன. 

வெளிச்சங்கள் பிறந்தன. சிரித்தன. 

உன் வீடு அங்கே பக்கம்தான் வீட்டுக் கதவு பூட்டை சாவி போட்டுத் திறந்தாய். ஏன் வீட்டில் ஒருவருமில்லையா? நீ ஒண்டிதானா ராஜாங்கி. உள்ளே ஏற்கனவே விளக்கு எரிந்துகொண்டிருந்தது. நீ என் பக்கம் திரும்பினாய். உன் விழிகள் கருந் திராட்ஷைகளாய்ப் பளபளத்தன. என் தோள் மேல் கை வைத்தாய். 

தோள் குமிழியை உன் விரல்கள் பிசைந்தன. 

“மாடிக்குப் போவோமா?”” உன் குரல் மூச்சாய் அடங்கிய செவியில் மோதிற்று. 

“கட்டிலைப் பார்க்கிறீர்களா?” 

“நான்… நான்…” 

மூச்சுத் திணறிற்று. “நான் இது வரை ஸுனோவிற்கு துரோகம் செய்ததில்லை” சிரித்தாய் “ஆஹா! ஸோ நோ கட்ஸ், உங்கள் ஸுனோவை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்”. என் மார்மேல் கை வைத்து என்னை வெளியே தள்ளினாய். கதவு படீரென்று என்மேல் மூடிற்று. 


காதல் என்பது புற்றுநோயா? புற்று மண்ணா? உள்ளே பாம்பு பழமை ஆக ஆக குழல் வீட்டுக்கொண்டு படரும் உயரும் புற்று அல்லது பாம்பு அதைவிட்டுப் போன பின்னர் அதன் மேலிட்ட மஞ்சளிலும் குங்குமத்திலும் ஆளை மிரட்டிக்கொண்டிருக்கும் ஐதீகமா? 

ஸு-னோவிற்கும் எனக்கும் இடையே எங்கள் உண்மை ஒவ்வொரு தோலாய் உரிய உரிய உன் இடம் என்னிடம் வலுவாகிக்கொண்டே வந்துவிட்டது. 

ஓரொரு சமயத்தில் நீ வீணை வாசிப்பதுபோலவும், ஒரு ரோஜாப் பூவினை முகர்ந்துகொண்டு என்னைப் பார்த்துச் சிரிப்பதுபோலவும் இதுபோல ஏதேதோ பாவனைகள் மனம் அதன் பேதமையில் ஜோடனை செய்து பார்த்து மகிழ்ந்து அல்லது வேதனையுறும் அலங்காரங்கள். ஆனால் உன்னை நான் பார்க்கும் ஃபேவரட் போஸ் இதுதான். எதுகுல காம் போதியில் முசிறி ரிக்கார்ட். 

கடைசியாக அதில் ஒரு அடி வருகிறது. 

ராஜராஜ ராகவ பிரபோ 
தியாகராஜ அச்சிதப் பிரபோ 

இரு கைகளையும் சிரம்மேல் குவித்து உன்னை மறந்து ஒரு காலில் நிற்கிறாய். 

அம்பாள் தபஸ் இருக்கிறாள். 

ஹே. இதயக்கமலவாசா! கவுரவர் சபையில் துச்சாதனன் துகிலுரிய கண்ணை மூடிவிட்ட த்ரௌபதி! 

சமுதாயத்தைச் சீறும் அபினக் காளி! அமலி ஸரிமபநிஸா. 


மறுபடி எப்போ அமலி? இரண்டு மாதங்களுக்குப் பிறகு வுட்லாண்ட்ஸ் கார்டன் ரெஸ்டாரண்ட். 

நான் வெளியே வந்துகொண்டிருந்தேன். நீ உள்ளே நுழைந்துகொண்டிருந்தாய். இரண்டு வாலிபர்களிடையே அவர்கள் தோள்மேல் தொங்கிக்கொண்டு என்னவோ பேசிச் சிரித்துக்கொண்டு. நீ என்னைப் பார்க்கவில்லை. எனக்கு உன்மேல் நெஞ்சு குமுறவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. என்னென்ன விதமாய் அமெரிக்காவைப் பழி வாங்க முயன்றுகொண்டிருக்கிறாய் அமலி? 

காதல் பாலூட்டி வளர்த்த பாம்பு. சமீபத்தில் காதல் எனும் துரோக நதி’ என்று ஒரு சிறுகதையைப் படித்தேன். ரெட்ஸீ, ப்ளாக்ஸீ, டெட்ஸீ, நச்சுப்பொய்கை, தி கோல்டன் ரிவர் என்கிறார்போல் துரோக நதி. அசரீரி வாக்குப் போன்ற தலைப்பு. அப்படியும் இருக்குமோ அமலி? 

நாளைக்கு. நாளைக்கு – நாளை போகாமல் இருப் பேனோ நான் அந்தத் தில்லை நடராஜனைக் காணாமல் இருப்பேனோ, கிட்டப்பா குரல் கணீர்!- 

கட்டுக்கழி படர்ந்த கருமுகில் காட்டுக்குள்ளே உன்னை விட்டுப் பிரிந்தேனடி கிளியே -வேதனைதான் பொறுக்கு தில்லை. மறுபடியும் கிட்டப்பா. 

எலும்பெல்லாம் மெழுகாகத் தளர்கிறது. நாளை நாளை என்று 25 30 வருடங்கள் இன்னும் கூடவோ என்னவோ! 

வேலையில் எட்டு முறை இடம் மாற்றலாகிவிட்டது. இது தவிர ‘கேம்ப் இடம் இடமாய் சுற்றல் – இடையே 

ஸ்ரீகண்ட் 

ஸ்ரீதர் 

ஸ்ரீபால் 

வெறும் ஸ்ரீயில் ஒரு பாலா. 

ஒன்றிரண்டு பிரசவங்களுக்கு நான் பக்கத்தில் கூடஇல்லை. கேம்ப். 

விசுவாமித்திரர் மேனகை ரவிவிர்மா படமொன்று பார்த்திருக்கிறாயா? ரிஷி ஒரு கையால் முகத்தை மூடிக் கொண்டு மறுகையால் ஒதுக்குகிறார். மேனகை எதிரே குழந்தையை நீட்டியவண்ணம் கேலி சிரிக்கிறாள். வேலைப் பாட்டில் என் கதி அப்படியிருந்தால் ஸீனோவுக்குத்தான் எப்படி இருக்கும்? யாரையும் குற்றம் சொல்லிப் பயனில்லை. ஏற்கனவே எங்களுக்குள் இனம் இல்லை. எந்த மண வாழ்க்கையிலும் இதுதான் படிப்படியாகத் தெளியம் யதார்த்தம். இனம் இல்லை. 

குழந்தைகளும் பெரிதாகிவிட்டன. எல்லோரும் அம்மா வாடை அம்மா கட்சி. தன் கட்சியில் சேர்த்துக்கொண்டு விட்டாள். ஸுனோவுக்குத் தெரியும். சப்பாத்தியில் எந்தப் பக்கம் நெய் தடவி இருக்கிறது என்று. பெண்கள் எப்பவுமே ஆண்களைவிட நாள் ஏற ஏற யதார்த்திகள். 

நான் நாயும் சீந்தாத காய்ந்த ரொட்டித் துண்டு. ஆனால் யார் மேலும் தப்பில்லை. பிறகு அன்று ஆஸ்பத்திரி யில் உன்னைப் பார்த்ததுதான். அடுத்த முறை. ஆனால் இப்பொழுது குங்கிலியம் குபீரிட்டுவிட்டது. எரிகிறேன். நெஞ்சு மணக்கிறது. உடலெல்லாம் உள்ளே பரிமளம் புகைகிறது. 

அமலி எங்கிருந்து எனக்குள் திடீரென்று இத்தனை ஈரம்? எண்ணை? உண்மையில் நான் காயவில்லையா? ஆனால் ஒன்று. உடலுறவினால் நமக்கினிப் பயனில்லை. ரிஷிபஞ்சமி முழிக்காவிட்டாலும் நீ தாண்டியிருப்பாய், அன்று இழந்த சந்தர்ப்பத்தை இன்று மீட்க முடியும் என்று நம்பிக்கை என்னுள்ளே திரி வைத்துவிட்டது. இந்த நம்பிக்கையில் கட்டில் கிடையாது பாயும் கிடையாது. தரை யில் விரிக்கத் துண்டும் கிடையாது. வெறும் தரை. கட்டாந் தரை. கீழே பூமி. மேலே ஆகாசம். வேறென்ன வேண்டும் இனி நமக்கு? 

காதல் என்பது இதயத்தில் தானே ஏற்றிக்கொண்ட அகல் சுடரோ? 

ஒரு முடிவுக்கு வந்துதான் இதை எழுதுகிறேன். இன்று என்ன கிழமை? இன்று எட்டாம் நாள் வருகிற வியாழன் மாலை ஐந்திலிருந்து பழவந்தாங்கல் ஸ்டேஷனில் தாம்பரம் திக்கில் உனக்காகக் காத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பேன். நீ ஒரு பெட்டிகூட எடுத்து வரவேண்டாம். உன் நர்ஸ் யூனிபாரம் போதும். சட்டென்று உன்னை அடையாளம் கண்டுபிடித்துக்கொள்ள. 

‘தோ பார் அமலி உன்னோடு வாழ்க்கையில் உடனே சொர்க்கத்தின் கதவுகள் திறந்து காத்திருக்கும் என்று நான் நினைக்கலில்லை. நினைக்கமாட்டேன். வேஷங்கள் இல் லாமல் உண்மையேனும் சற்று தலை தூக்குமல்லவா? தாம்பரம் போய் அங்கு ஏதேனும் ஒரு தூரப் பிரயாண வண்டியைப் பிடித்துவிடுவோம். எங்கேனும் ஒரு காட்டுப் பிரதேசத்தில் யாருக்கும் காணாமல் மறைந்து விடுவோம். நம் இருவருக்கும் தவிர. 

ஆம். உனக்கு நான் எனக்கு நீ துணை என்று கடைசி யாகத் தெளியும் தோழமைதான் காதலின் உண்மை ஸ்வரூபமோ? 

இந்தத் தப்பியோடும் பிஸினஸில் பைத்தியக்காரத்தனம் இருக்கிறது எனக்குத் தெரியும். ஆனால் கூடவே கொஞ்சம் ரொமான்சும் இருக்கிறது. இருந்தால் ஆகாதா? 

நீ அப்படி பழவந்தாங்கல் ஸ்டேஷனில் இறங்காவிட்டால் வராவிட்டால் என் கடிதம் உன்னிடம் சேரவில்லை. மற் றொரு முறை நாளைக்கு இதே இடத்தில், என்றெல்லாம் என்னை ஏமாற்றிக்கொள்ள மாட்டேன். இதற்கெல்லாம் மறு சான்ஸ் கிடையாது. எனக்குத் தெரியும். 

காதல் மிக மிக ரோஷமுள்ளது. சிகரெட் துண்டை குதி காலில் தேய்த்து நசுக்குவதுபோல் உன் நினைவை அறவே ஒழித்துவிட வேண்டியதுதான். இருக்கவே இருக்கிறாள். மீண்டும் ஸுனோ. 

ஆனால் அப்படி முடியுமோ அமலி? 

நான் காத்திருப்பேன். 

ஐ லவ் யு அமலி. உனக்குத் தெரியும் ஐ ஹேவ் ஆல்வேஸ் லவ்ட்யு.

– நேசம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1989, வானதி பதிப்பகம், சென்னை.

லா.ச.ரா லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் (30 அக்டோபர் 1916 – 30 அக்டோபர் 2007) தமிழ் எழுத்தாளர். இவருடைய முன்னோர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தன்னுடைய பெயரை லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் என்பதன் சுருக்கமாக ல.ச.ரா என்ற பெயரில் எழுதிவந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள் உள்பட பல நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார். இவர் மணிக்கொடி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *