அன்புள்ள அத்தான்

வசன கவிதை நடையில் விரியும் சிறுகதைகள்
பல்லவர்களின் கலை நகராம் வங்க கடல் அலைகள் ஸ்பரிசிக்கும் மாமல்லபுரத்தின் பழம்பெரும் பெருமாள் கோயிலில் பெருமாள் தரிசனத்தை
முடித்த பைங்களியாள் செண்பகம் , திருக்கோயிலின்
வாசலில் காத்திருந்தாள் நெஞ்சம் நிறைய
எதிர்பார்ப்புகளுடன்.
சற்று நேரத்தில் திருக்கோயிலின் அருகில் உள்ள
முகப்பில் பெரும் உந்து வண்டி வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கினார் பெரும்புள்ளி மதிவாணன்
செண்பகம் அவர் அருகில் சென்று வணக்கம் தெரிவித்தாள்.
மதிவாணன் பேசலானார் –
“விடுதியில் பலர் புடை சூழ இருப்பேன் என்பதால் தான்
நீ இங்கு இருக்கிறாய் என்று சொன்னதால் நானே இங்கு வந்தேன்
எதற்காக என்னிடம் நேரம் கேட்டாய் சொல்லம்மா…”
செண்பகம் , கிளி மொழி போன்ற குரலில் மிழற்றினாள்
“மிக்க நன்றி மாமா அவர்களே… நான் தேர்தலில் போட்டியிட
நமது கட்சியில் விண்ணப்பம் அளித்துள்ளேன்..தாங்கள் பரிந்துரைத்தால்..”
மதிவாணன் இடை மறித்தார் –
“பரிந்துரைத்தால் உன் எண்ணம் ஈடேறும் என்று
நினைக்கிறாயா?”
“பொது வாழ்வில் அடுத்த கட்டத்தில் புக நினைப்பது தவறா மாமா?”
செண்பகம் வினவினாள்.
“நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்று
சொல்வார்கள் அல்லவா அம்மா” மதிவாணன் கூறினார்.
“அதனால்தான் தெய்வத்தின் சந்நிதிக்கு அருகில்
தங்களிடம் தெய்வம் உரையாட வைத்திருக்கிறது” செண்பகம் உரைத்தாள்
மதிவாணன் பதிலிறுத்தார் –
“நானும் உன்னுடைய தந்தையாரும் தான் மனுக்களைப் பார்க்கிறோம்.
உன் பொது வாழ்வில் மக்கள் மன்றப் பிரவேசத்திற்கு உன் தந்தை ஒரு நிபந்தனை
விதித்துள்ளார். நீ நாடி வந்தால் உன்னிடம் தெரிவிக்க வேண்டும்
என்று கூறியுள்ளார் . உனக்கும் தந்தைக்கும்
என்னதான் பிணக்கோ?”
“நான் என் அத்தை மகனை அத்தானை மணம் முடித்தேன்
அதில் அவருக்கு மன வருத்தம் அது போகட்டும் தனிப்பட்ட கதை எதற்கு?
எந்தையாரின் நிபந்தனையைக் கூறிடுங்கள் மாமா..”
“அதுதான் கண்ணே… உன் கணவன் கதை, கவிதை, நாடகம், ஆராய்ச்சி, இலக்கியம் என்று பயனில்லாத பணிகளில் ஈடுபடுவதால் , கற்பனை உலகில் சஞ்சரிப்பவனாக இருப்பதால்.. செல்வம் சேர்க்கத் தெரியாதவனாக இருப்பதால்”
“என் கணவர் பொறுப்பானவரா இல்லையா என்பது எனக்குத் தெரியும்..
அதனால் என்னவோ..தயக்கம் வேண்டாம் உடைத்துச் சொல்லுங்கள் மாமா..”
“எப்படி சொல்ல…? ஆனது ஆச்சு போனது போச்சு என்று நீ உன் கணவனுடன் மணமுறிவுக்காக விண்ணப்பம் அளித்தால்…”
“புரிகிறது… என் பாட்டனார் ஒரு பழைய தமிழ்த் திரைப்பாடலின் வரிகளைப் பாடுவார்-
கண் அவன் என்றே கணவன் என்றார் கன்னித்தமிழினிலே என்பதுதான் அது கண்ணை விற்று சித்திரம் வாங்குவதோ என்றும் என் தாத்தா கூறுவார் .
நான் என் அத்தானைப் பதின் பருவத்திலிருந்தே என் நெஞ்சில் பதித்தேன்.
அதனால்தான் அவரைக் கரம் பிடித்தேன்
என் கணவனைப் பலியிட்டு அதனால் மட்டுமே என் பொது வாழ்வு அடுத்த கட்டத்தை எய்தும் என்றால் அது எனக்கு என்றும் வேண்டாம் மாமா அவர்களே. எல்லாம் நன்மைக்கே என்பார்கள் அல்லவா? அதை நான் எண்ணிக் கொள்கிறேன். தாங்கள் தங்கள் நண்பரின் புதல்வியான அடியாளை நாடி வந்து நேரம் செலவிட்டு தகவல் அளித்தமைக்கு நன்றி விடை தாருங்கள்…”
கை கூப்பிய செண்பகம் விடுவிடுவென தான் வந்த வாடகை உந்துவண்டியை நோக்கி விரைந்தாள். மதிவாணன் அவளையே வியப்பு விரிய பார்த்து நின்றார்.
– கூண்டை விட்டு வெளியே வந்த பறவை, வசன கவிதை நடையில் விரியும் சிறுகதைகள்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |