அன்பும் ஆசையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 13, 2025
பார்வையிட்டோர்: 223 
 
 

(1949ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘சுள்’ என்று வெயில் அடித்துக் கொண்டிருந்தது. வீட்டில் அயர்ந்து நாங்கவும் இந்தப் பொல்லாக் குழந்தைகள் விடுவதில்லை. வெளியே யாவது போகலாம் என்று துண்டை உதறிப் போட்டுக் கொண்டு கிளம்பினேன். 

நண்பன் அனந்தராமனைப் பார்த்து நீண்ட நாளாகியிருந்தது. ‘வா வா’ என்று வருந்தியழைப்பவர் வீடுகளுக்கு எங்கு அடிக்கடி போக முடிகிறது? திருவல்லிக்கேணி சென்று நண்பன் வீட்டுக் கதவைத் தட்டினேன். 

அனந்தராமன் கதவைத் திறந்தான். “வா அப்பா… அத்தி பூத்தது போல்…” என்று புன்முறுவலுடன் வரவேற்றான். இருவரும் கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்தோம். அனல் போன்ற அந்த வெயிலில் வந்து ‘குளுகுளு’ என்ற கூடத்து நிழலில் உட்கார்ந்தவுடன்தான் நிழலின் ‘அருமை’ தெரிந்தது. 

“சந்துரு” என்று கூப்பிட்டான் அனந்து. “ஏம்பா…” என்று குதித்தோடி வந்தான் ஐந்து வயதுச் சிறுவன் ஒருவன். குறுகுறுப்பான முகமும், தெளிவான பேச்சும் என் மனத்தைக் கவர்ந்தன. ‘அப்பா’ என்று அனந்துவைக் கூப்பிட்டதும், ‘அனந்துவுக்கு என்ன உறவு இந்தப் பையன்? அனந்துவைப் பார்த்து நீண்ட நாளாகிறது. ஒருவேளை அவன் மகனாகவே இருக்கலாமோ?’ என்று கூட எண்ணினேன். 

“சந்துரு… அம்மாவைத் தயாரித்துத் தரச் சொல்லி, மாமாவுக்கு சர்பத் கொண்டு வா பார்க்கலாம்” என்றான் அனந்து. அவனும் குதித்தோடி னான் உள்ளே. 

அனந்துவைத் திரும்பிப் பார்த்தேன் நான். “அனந்து… பையன் ரொம்பச் சுட்டியாக இருக்கிறான்… உனக்குக் குழந்தை பிறந்து ஐந்து வருடம் சொல்லாமே இருக்கியே… பையன் கல்யாணத்துக்குத்தான் சொல்லுவியோ?” என்றான். 

அனந்து இடி இடியென்று சிரித்தான்.

“என் மகனா? என் மகன்தான் ராஜு. இவன் எங்கள் வயிற்றில் பிறக்காவிடினும் எங்கள் மகனாகவேதான் இவனைப் பாவிக்கிறோம். மனைவியும் பெற்ற பிள்ளையாகவே அன்பு பாராட்டுகிறாள்… குழந்தை இல்லாக் குறைக்குக் குழந்தையாகவும்… அன்பின் ஆட்சிக்கு அன்புக் குரியவனாகவும் இருக்கிறான்… இவன்” என்றான் அனந்து. 

நான் மௌனமாக இருந்தேன். பெற்ற பிள்ளைகள் கடமையை மறக்கும் இக்காலத்தில், பெற்றோர் மகன் என வாஞ்சை காட்டாத இக்காலத்தில் இப்படியும் இருக்கிறதே என ஆச்சர்யப்பட்டுக் கொண்டே சிறிது நேரம் மௌனமாக இருந்தேன். 

அதற்குள் சர்பத் வந்தது. இருவரும் குடிதோம். குடித்த டம்ளரை உடனே உள்ளே கொண்டு வைக்கச் சென்றான். 

“பையன் ரொம்ப கெட்டிக்காரனா இருப்பான் போலிருக்கிறது” என்று மறுபடியும் பேச்சைத் தொடங்கினேன் நான். 

ஹும் என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு அனந்து, “கெட்டிக் காரனாகத்தான் விளங்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. அவன் நல்ல காலம்தான் இங்கு கொண்டு சேர்த்திருக்கிறது. உலகத்தில் ஆசையால் ஒரு பொருளை விரும்புபவர்களும் உண்டு. அன்பால் ஒரு பொருளை விரும்புபவர்களும் உண்டு” என்றான். 

“என்னப்பாபுதிர் போடுவதுபோல் பேசுகிறாயே… அப்படியென்றால் இந்தப் பையன் உன்னிடம் வந்தடைந்தது அவனுடைய நன்மைக்கு என்று சொல்லு” என்றேன். 

“என்னைப் பத்தி நானே பெருமையாகச் சொல்லிக் கொள்ளக் கூடாது. இந்தப் பையன் மூலம் தனக்கு நன்மை தேடிக் கொள்ள எண்ணிச் சிலர் முயன்றார்கள். ஆசை அவர்களை உந்தியது. பலன் கிடைக்காது எனத் தோன்ற ஆரம்பித்ததும் இவனைச் சந்தியில் விட்டு விட்டனர். இவன் உயிர் பிழைத்து வாழ்கிறானே, அந்த ஒரு நன்மை தான் இவன் என்னிடம் வந்தது” என்றான் அனந்து. 

மேற்கொண்டு இது பற்றிக் கேட்க விரும்புபவன் போல் நிமிர்ந்து உட்கார்ந்தேன். “ராஜு! ஆறு வருடன் பின்னாலே நினைவுபடுத்திக் கொள். பர்மாவிலிருந்து உயிருக்கு அஞ்சி ஓடி வந்தார்களே அது நினைவு இருக்கிறதா?” 


“சந்துருவின் அப்பா சபேசன் என் மனைவிக்கு எட்டிய உறவு, உறவோ -நட்போ மனத்துக்குப் பிடித்தவர்களோடு நாம் கலந்துபழக வேண்டும். ஆனால், சபேசன் இங்கு இருக்கும் வரையில் யாரிடமும் முட்டி’க் கொள்வது கிடையாது. நிறைய சம்பாதிக்கிறோம் என்ற பெருமையோ, அல்லது எல்லாருடனும் பழகினால் ஒட்டிக் கொண்டு விடுவார்கள் என்ற பயமோ – அவர் எந்ந உறவினருடனும் பழகாமல் இருந்தார். 

ரங்கூனிலே இன்னும் அதிகச் சம்பளத்திலே உத்தியோகம் கிடைத்தது. குடும்பத்துடன் அங்கு போய் விட்டார். அவரை நான் பார்த்தது கூடக் கிடையாது. எப்போதாவது மனைவி போய் வருவாள். ரங்கூன் போன பிறகு அவரைப் பற்றி எங்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், அவர்களுடன் அவரது நெருங்கிய சொந்தக்காரப் பையன் ஒருவன் இருந்து வந்தான். 

ஈபேசய்யருக்கு ரொம்ப நாள் குழந்தையே பிறக்காமல் இருந்தது. இந்தப் பையனும் அங்கு ஒட்டிக் கொண்டு இருந்தான். அவனையே ஸ்வீகாரம் எடுத்துக் கொள்ளப் போவதாகப் பேச்சும் இருந்ததாம். 

‘மாமா சொத்துக்கு மருமான் கர்த்தா’ என்று அவன் பிற்பாடு சொத்து முழுதும் தனக்குத்தானே என்பதற்காக மிகவும் நெருங்கி அந்தக் குடும்ப உயிராகவே பழகி வந்தான். 

குறைந்தது ஐம்பதாயிரமாவது தேறும் என்ற எண்ணத்தின்மீது இன்பக் கோட்டைகள் கட்டி வந்தான் அவன். 

ஜப்பான் படையெடுப்புப் பயமுறுத்தல் கீழ்நாட்டுத் தீவுகளில் ஏற்படும் சமயம். சபேசய்யருடைய மனைவி, கருவுற்று இந்தச் சந்துருவைப் பெற்றெடுத்தாள். 

என்னதான வெளிக்குச் சந்தோஷத்தைக் காட்டினாலும் உள்ளுக்குள் அவனுக்குத் ‘தனக்குப் போட்டி’யாகப் பிறந்த இவனைக் தாண வெறுப்புணர்ச்சி ஏற்படாதிருக்குமா? 

குழந்தையைப் பிரசவித்து அவர் மனைவி காலமானாள். பிறந்த குழந்தையை வைத்துக் கொண்டு பாவம் சபேசன் என்ன கஷ்டப் பட்டிருப்பாரோ? குழந்தை சந்துரு வளர்வதற்குள் ஜப்பான் தாக்குதல் நெருங்கி வந்து விட்டது. ஆயிரக்கணக்கான சோகக் கதைகளைச் சிருஷ்டித்த அந்தத் தாக்குதலால் பிரிக்கப்பட்ட குடும்பங்கள், அழிந்து குடும்பங்கள் ஏராளம். 

சபேசனும், அந்தப் பையன் (பையனென்ன! இருபத்தெட்டு வயதாகியிருக்கும் அப்போ), குழந்தை மூவருமாகக் கடைசியில் நடந்தே இந்தியாவுக்குக் கிளம்பினார்கள். 

ஐம்பதினாயிரம் – அறுபதினாயிரம் பணம் இருக்குமென்று எதிர்பார்த்தானே அவன்… கடைசியில் சபேசய்யர் இரண்டாயிரம் ரூபாயையும், குழந்தை சந்துருவையும் இவனிடம் ஒப்படைத்தாராம். ஆனால், அதுவும் எவ்வளவு தூரம் உண்மையென்பது யாருக்குத் தெரியும்? 

அவன் – சேஷாத்ரி – சொல்லித்தான். ஒரு மைலா இரண்டு மைலர் ஆயிரத்துக்கு அதிகமான தொலைவு நடந்து வந்து சேர்வதென்றால் வழியிலே எவ்வளவு பயங்கரங்கள். திக்கற்று விழுந்த பிணங்கள் சொந்த மனைவி செத்து விழுவாளாம். 

கணவன் பிணத்துடன் அங்கேயே பிரலாபித்துக் கொண்டிருந்தால் முடியுமா? தன் ஆசை மனைவியைக் கைவிட்டு மேற்கொண்டு முன்னேது வேண்டியதுதான். 

இப்படியெல்லாம் துன்பச் சுழல்களைத் தாண்டி சபேசனும் சந்துருவும், சேஷாத்ரியும் கல்கத்தா வந்து சேர்ந்தனர். 

கல்கத்தா வந்தவுடன் இருவரையும் – அப்பாவையும் மகனையும் விஷ சுரம் பிடித்தது. சேஷாத்ரி அவர்களை விட்டுவிட்டுத் தன் ஊரான மாயவரத்துக்கு வந்துவிட்டான். 

என்ன கல்நெஞ்சம்! ஆனால், அதற்கு அவன் சொல்லும் காரணம் சமாதானம் ஒருவிதமாக இருக்கிறது. 

ஒருநாள் என் பெயருக்கு கல்கத்தா ஜெனரல் ஆஸ்பத்திரியினின்று தந்தி ஒன்று வந்தது. 

‘உடனே வரவும்’ இதுதான் வாசகம். நான் ஏன் போக வேண்டும் என யோசனை செய்யாமல் உடனே விரைந்தேன். சபேசன் இறந்து மூன்று நாளாகி விட்டன. 

சந்துரு – இந்தப் பையனுக்கு – உடம்பு குணமாகிவிட்டது. இவளை உடனே டிஸ்சார்ஜ் செய்து அழைத்துப் போகும்படி கூறினார்கள். 

நோயாலும், பலவீனத்தாலும் வாடி வதங்கி இருந்தபோதிலும் சந்துருவின் முகம் என்னைக் கவர்ந்தது. என் விலாசம் யார் கொடுத்தார்கள் என்று ஆஸ்பத்திரியில் கேட்டேன். 

இருவரையும் ஆஸ்பத்திரியில் சேர்க்க ஒருவர் வந்திருந்தார் அவரும் ‘எவாக்குவி’தான். அவர் கொடுத்தார்” என்றார்கள். 

என் கண் கலங்கியது. 

தோளில் இவனைச் சாத்திக்கொண்டு அன்றைய மெயிலில் பறினேன். 

“கமலா! உனக்கு ஒரு குழந்தை” எனக் கூவிக் கொண்டே உள்ளே நுழைந்தேன். என் மனைவிக்கு ஆனந்தம் தாங்கவில்லை. ‘குழந்தை பெறத் தவம் செய்தோம் கிடைத்தது இதோ!’ என்றான் அவன் இதய பூர்வமாக. 

சேஷாத்ரி ஒரு தடவை வந்திருந்தான். தானே திண்டாடுவதாகவும் இந்தச் சிறு குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்பதற்காகவே ஆஸ்பத்திரியில் உங்கள் விலாசம் கொடுத்ததாகவும் கூறினான். 

அவன் எவ்வளவுதான் சமாதானம் சொன்னாலும் பணத்தின் மீது ஆசையால் சந்துருவை விரும்பியவன், பணமில்லை எனத் தெரிந்தவுடன் ஆசை பறந்தோடி விட்டது. 

எங்களுடையது அப்படியன்று; இயற்கையான அன்பு இக்குழந்தை மீது விழுந்துவிட்டது. எங்கள் மகன் போலவே காப்பாற்றி வருகிறோம்” என்று கூறி பேச்சை நிறுத்தினான் அனந்து. 

“அப்பா… காபி கொண்டு வரட்டுமா?” என்று கேட்டு ஓடி வந்தான் சந்துரு. 

அன்பையும், ஆசையையும எண்ணி ஆச்சர்யப்பட ஆரம்பித்தேன் நான். 

– 1949

– செவ்வந்திப்பூ சிங்காரி, கலைமாமணி விக்கிரமன் எழுதிய சமூகச் சிறுகதைகள், தொகுதி-1, முதல் பதிப்பு: 2010, யாழினி பதிப்பகம், சென்னை.

விக்கிரமன் கலைமாமணி விக்கிரமன் (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து "அமுதசுரபி" மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார். ஆக்கங்கள் உதயசந்திரன்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *